ரத்த உறவில் நஞ்சு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 18, 2023
பார்வையிட்டோர்: 5,192 
 
 

தமிழகத்திலேயே, வருணபகவான் எட்டிப் பார்க்க மறுக்கும் பூமி அது. எத்தனை அடி பிளந்து பார்த்தாலும், கண்ணீர் மாதிரிக்கூட, கசியாத தண்ணீர். இதுதான் பூமாதேவியின் விழியோ என வியப்பை உருவாக்கும் வறட்சி. தண்ணீரைப் பார்க்காத மண்குடங்கள், குறிப்பிட்ட நாட்களுக்குப் பின், இதயத்தை பிளந்து ஜீவசமாதி அடையும் அளவுக்கு, வெடிக்க வைக்கும் வெப்பம்.

வருண, குபேரனால், பூட்டுப் போட்டுவிட்ட, குக்கிராமத்தில் பிறந்தவர் சுந்தரராஜ். எப்போதோ அளித்து விட்டுப்போன, குபேர சம்பத்து களை, சேமித்த அழகம்மாள், அதனை இரு மகள்களிடம் ஒப்படைத்து விட்டு, வருண, குபேர அரண்மனையைத் தட்டித் திறப்பதற்காக, இயறகை எய்துவதாக எண்ணி, காலமாகி விட்டார்.

தத்தெடுத்து வளர்த்த, கோட்டை ஆளும் பெருமாள் பெயரில், ஒரு வீடு கட்ட வேண்டும் என்ற, தன் தாயாரின் சொல், பெண் குழந்தைகள் இரண்டு பேருக்கும் அசரீரியாக கேட்டது. இரவும் பகலும் தூங்க விடவில்லை. அந்த நினைப்பு. பெண்கள் என்பதால், நிர்வாகப் பொறுப்பை, ஆண்குழந்தைகளிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். பெற்ற ஆறு ஆண் பிள்ளைகளில், அவர்களை ஈர்த்தது சுந்தரராஜ்தான். மூத்த குழந்தைக்கு பெயர், பெருமைப்படும் வண்ணம் இருந்தாலும், படிப்பை துச்சமாக மதித்து, சினிமா கொட்டகைகளி்ல் பொழுதைக் கழிப்பவனாக இருந்தான். இரண்டாவது மகன், அடிக்கடி அவனது நாமதேயத்தை மாற்றினானே தவிர, மயிர் பிடுங்க கூட லாயகற்றவனாக இருந்தான்.

வீடு கட்டும் பொறுப்பை சுந்தரராஜிடம் ஒப்படைத்தனர். அடிக்கல் நாட்டுவதற்கு ஏற்பாடுகள் தொடங்கின. எதிர்ப்பு. எப்படியும் நிறுத்தி விட வேண்டும் என்ற பொச்சரிப்பு. கொம்புள்ள மாட்டைப் பார்த்தாலே, ஒண்ணுக்குப் போகும் எதிர்த் தரப்பினர், கோட்டைச்சாமி என்பவரைத் துணைக்கு கொண்டு வந்தனர். பஞ்சாயத்து கூடியது. இவர்கள், தங்கள் பெரிய தாயார் மகன், தத்துப்பிள்ளையைக் கூட்டி வந்தார்கள். பிரதிவாதி தரப்புக்கு வந்த கோட்டைச்சாமியின், வாயிலிருந்து வந்த வீராவேசத்தில், வியர்வைதான் வெளியேறியது.வியர்வைநாற்றம் பஞ்சாயத்தை நாறடித்தது. பிரதிபலன்..? துர்நாற்றம்தான்.. முடிவு கோய்ந்தா கோய்ந்தாவாகவே முடிவுக்கு வந்தது.

“இங்கே தட்சை செஞ்சா, வெட்டுன குழியிலெ, உங்க தலைதான் விழும். நா என்ன சொல்றேனோ, ஏத்துக்கிட்டு போங்க, முடிவா என்ன சொல்றீங்க..?

“நீ சொல்றது கரெக்டுதாண்டா கோட்டை, நா சொல்ல வர்றதை நீயும் ஏத்துக்கிறீயா, நாளைக்கு இதே எடத்திலதான் தட்சை செய்யப் போறேன். விழப்போறது என்னோட தலையில்லை, உன்னோட தலைதான். ஸ்பார்ட்லெ எந்த சல்லிவாரிப்பய தடுத்தாலும், அவனோட தலையும் விழும். வசதி எப்புடி, யோசிச்சுக்கோ..?

சொல்லிமுடித்த தத்துப்பிள்ளை, உட்கார்ந்து கொண்டே, தோளில் கிடந்த துண்டை இரண்டு கைகளாலும் இழுத்து, விறைப்பாக்கி கொண்டார். ஒரு கருப்பசாமி, மதுரைவீரனைப் போல காட்சியளிக்க, துண்டை உதறிக் கொண்டு எழுந்த கோட்டைச்சாமி, ” பிச்சைக்காரப் பயலுகளுக்காக வந்தேன்ல, எனக்கு வேணும்டா” என்று நடையைக் கட்டினார். சமரசத்திற்காக பின்னால் ஓடியக கிராமத்தின் தறுதலைகளை , வாயக்கு வந்தபடி திட்டிக் கொண்டே நடந்தார்.

“அவ்வளவு வேகமாக பேசுறாரே யார்டா அந்த ஆளு” என்று கேட்டது, கோட்டைச்சாமியுடன் பக்கவாத்தியம் வாசிக்க வந்த ஒரு பெயரில்லாப் பூச்சி.

“அவரு கள்ளிக்குடி பிரஸிடெண்டு, நம்மல்லாம் போட்டி போட்டுத்தான் அந்த எடத்துக்கு வரணும், அவருக்கு போட்டியில்லை, அண்ணபோஸ்டாவே ஜெயிக்கிறவரு”

“அப்டியா, அவரைப்பத்தி வேற ஏதாவது இருக்கா..?

“பக்கத்து ஊர்லே வீட்டுக்கும், ஊருக்கும் அடங்காதவங்கெ இருக்காங்கெ, ஆனா அவங்கெளைக் கூட, புளிய மரத்துலெ கட்டி வச்சு அடிப்பாருண்ணா பாருங்களே, நல்லவேளை யாரு செஞ்ச புண்ணியமோ, நாம ஆஸ்பத்தி்ரிக்குப் போகாமெ வீட்டுக்குப் போறோம்”

“சரி வாடா, நம்மளைக் கூட்டிப்போன, மொள்ளமாரிப் பயலுக நாளைக்கு வரட்டும், குடுத்துக் கழட்டுனாத்தான் புரியும்”

திட்டமிட்டபடி தொடங்கிய கட்டிட வேலைகள் , தீவிரமாக நடந்தன. பல்வேறு குறுக்கீடுகள். தடைகள், அனைத்தையும் சுந்தரராஜே சமாளித்தார். காலப்போக்கில், மறைமுகமாகத் தூபம் போட்டவர்களுக்கு உதையும் விழுந்தது.

வருடங்கள் முயல்வேகத்தில் உருண்டன. மகளின் திருமண ஏற்பாட்டைத் தொடங்கினார் சுந்தர ராஜூ. ” மாப்பிள்ளை கொடுக்க மறுத்து, அவரின் உறவை அறுத்துக் கொண்டது பிறந்த வீடு. .

மனமுடைதலுக்கான மருந்து, குமரையா மெடிக்கலில் இல்லாததால், மனைவி ஊரில் உள்ள, தன் வீட்டுக்கு குடி பெயர்ந்தார். அங்கேயும் மனைவிக்காக வீடு கட்டியவர், மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இதற்கு காரணம், ரத்த உறவுகளே ஒதுக்கி விட்டதால் ஏற்பட்ட சித்த பிரமை. மற்றொன்று உடல் பலவீனம். ஏமாற்றத்தை மட்டுமே, லாபமாக. பெற்ற சுந்தரராஜூ, பிறந்த வீட்டுக்கு பரிசாக அளித்தார் தனது மரணச் செய்தியை.. அங்கேயும் போய் வெட்கமின்றி, கண்ணீர் சிந்தி பாசாங்கு செய்தது, அவரை முடித்து வைக்க காரணமான ரத்த உறவுகள்..

அவர் காலமானதைப் போல, பிறந்த வீட்டிற்கு இருந்த பெருமையும் மறைந்து வருகிறது. எந்தெந்த இடத்திற்காகவெல்லாம் போராடினாரோ, அத்தனை இடங்களையும் தாரை வார்க்கும் நிலை இப்போது. ரத்த உறவுக்கு வாக்கப்பட்டு வந்தவரால், தொடர்கிறது துயரம். அவர் கண்ணைக் குத்திய அதே ரத்த உறவுகள்தான், ரத்த உறவான பங்காளிகள் கண்ணையும் குறிபார்த்துக் காத்துக் கிடக்கிறது.

அவர் கட்டிச் சென்ற வீட்டை வைத்து, பெருமை பீற்றிக் கொள்ளும் நபரால் வேதனை. அவர் கட்டினார் என்றால், கட்டியதை அழித்தே தீருவேன் என்பது சுந்தரராஜின் ரத்த உறவுக்குப் பெருமை போலும். அறுத்து விட வேண்டும் என்ற நனைப்பில் உள்ளவர்களுக்கு, ஒருபுறம் கொண்டாடம் என்றால், மறுபுறம் பங்காளிகள் பாடுதான் பெரும்பாடு. பயங்கரத் திண்டாட்டம்.

“என்னாச்சு வீட்டுக்குள்ளே பாதை கேக்குறாங்கெளாமே, அவங்க வீட்லெ யாருமில்லையா..?

“இருக்காங்கே, இருக்கோங்க சாவு வரலை அப்டிங்கிற மாதிரி இருக்காங்கே” அப்ப ஒண்ட வந்த பிடாரி, ஊர்ப்பிடாரிய வெரட்டிடுச்சா”

” இதான் உன்னோட ஆசையா, நடந்தாலும் நடக்கலாம், வேண்டிக்க சாமிய, உனக்குத் துணையா ரெண்டு பேரு வருவாங்கெ, ஒருத்தன் பென்சன் வாங்குற வாத்திப்பய, இன்னொருத்தன் போலீஸ்காரன். அவங்களையும் வேண்ணா சேத்துக்கடா”

“நீங்க சொல்றது புரியிற மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு, கொஞ்சம் தெளிவாச் சொன்னாத்தான் என்ன..?

“உனக்கு எந்தளவுக்கு தெளிவாச் சொல்லணும், எழுதியே தர்றேண்டா, போட்டோ வேணாலும் தர்றேன்”

அன்னதானம் பண்ணா புண்ணிங்கிறாங்கெ, நாட்டிலாம நடக்கும், சோத்தையே நம்பக்கூடாது போலையே, அடி ஆத்தி என்று சொல்லிக் கொண்டே புறப்பட்டான் மாசிலாமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *