மேற்கோள் முற்றம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: September 21, 2026
பார்வையிட்டோர்: 156 
வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்

(குறிப்பு – இந்த நாடகத்தின் கதைக் களமும் கதை மாந்தரும் முற்றிலும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல)

முதற் காட்சி

(திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன. மேடையில் எஸ்.கே.குரூப் கேன்டீன் என்ற பதாகை பின்னணியில் காணப்படுகிறது.

மேடையின் வலப் பக்கத்திலிருந்து கோட் சூட் அணிந்த வாட்டசாட்டமான உருவம் கொண்ட நடுத்தர வயது பெரிய மீசை நபர் வருகிறார். கேன்டீனை சுற்றும் முற்றும் பார்க்கிறார். மேடையின் நடுப்பகுதியிலிருந்து வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்த , கேசமும் வெள்ளையாக இருக்கிற , மழித்த முகம் கொண்ட நபர் வருகிறார் . அவர்தான் கேன்டீன் உரிமையாளர் சதாசிவம் நாயர்)

சதாசிவம் : வணக்கம் பைனான்ஸ் டைரக்டர் சார்

வந்தவர் : வணக்கம் சதாசிவம் …

சதாசிவம் : என்ன ஐயா சுத்தி சுத்தி பார்க்கறீங்க …

வந்தவர் : சுத்தியல் இருக்கான்னு பார்க்கறேன் … ஒங்க கேன்டீன் ல எப்பவும் நம்ம ஸ்டாப் இருப்பாங்களே இப்படி வெறிச்சோடி இருக்கே என்ன காரணம்ன்னு பார்த்தேன் …

(பதின்பருவ வயது கொண்ட ஒல்லியான சிறுவன் ஒருவன் , துடைப்பத்தால் இடத்தை சுத்தம் செய்து விட்டு மேடைக்கு நடுப் பகுதிக்குள் செல்வதை டைரக்டர் பைனான்ஸ் கவனிக்கிறார். )

டைரக்டர் பைனான்ஸ் : என்னங்க இது சதா .. சைல்ட் லேபர் எல்லாம் இங்க ஒர்க் பண்றாங்களா ?

சதாசிவம் : (சற்றே பதற்றத்துடன்) ஐயா அப்படி எல்லாம் எதுவும் இல்ல … இது என்னோட சன் அச்சுதன் … அடியேனுக்கு புத்திர பாக்கியத்தை என்னோட குருவாயூரப்பன் காலம் தாழ்த்திக் கொடுத்துட்டான். ஸ்கூல் லீவு அதனால இங்க ஒத்தாசைக்கு வந்திருக்கான்.

டைரக்டர் பைனான்ஸ் : அப்ப சரி … சொந்த மகனா இருந்தாலும் இங்க வேலை வாங்கறது தப்பு தான் . ஆமாம் உருவ கேலியா நெனச்சு கேட்கலை …. தலை பஞ்சுத் தலையா இருக்கே .. ஸ்கூல்ல பேரன்ட்ஸ் மீட்டிங்க்கு எப்படி போவீங்க ? ….

சதாசிவம் : அதுக்கு ஒரு வழி வெச்சிருக்கேன் …

டைரக்டர் பைனான்ஸ் : என்ன அன்னிக்கு பார்த்து கேசத்துக்கு கருப்பு சாயம் அடிச்சுப்பீங்களா … ?

சதாசிவம் : இல்லீங்க ஐயா …

டைரக்டர் பைனான்ஸ் : தொப்பி போட்டு மறைச்சுப்பீங்களா?

சதாசிவம் : இல்லீங்க ஐயா … என் மனைவிய அனுப்பி வெச்சிடுவேன் ..

டைரக்டர் பைனான்ஸ் : வடிவேலு ஒரு படத்துல சொல்றா மாதிரி என்ன ஒரு புத்திசாலித்தனம் … சரி எங்க ஆபீஸ்ல எல்லா டிபார்ட்மென்ட்ல யும் ஆளுங்க இல்ல

இங்க கேன்டீன்லயும் ஆளுங்க இல்ல எங்கே போனாங்க கம்பெனி ஸ்டாப் எல்லாம் … ?

சதாசிவம் : கம்பெனி உள் விவகாரத்தை பத்தி தெரிஞ்சாலும் நான் சொல்லக் கூடாது … இல்ல அதோ ஒங்க அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்ட் அருண் வராரு அவர் கிட்ட கேளுங்க ஐயா …

(மேடையின் இடப் பக்கத்திலிருந்து பார்மல் உடை அணிந்த ஒல்லியான , தாடி இளைஞன் வருகிறான். அவன்தான் அருண்.)

அருண் : சதாசிவம் சார் தலைவலிக்குது ஒரு காபி கொடுங்க ….

(சதாசிவம் மேடையின் நடுப்பகுதிக்குள் செல்கிறார்.)

பிரதீப் சார் நீங்க எங்கே இங்கே … ?

பிரதீப் : உன்னோட பாஸ் அசோக் பில்லர் மாதிரி நிக்கறது இப்ப தான் தெரியுதா ?

அருண் : கவனிக்கலை பிரதீப் சார் .. ஏன் நிக்கறிங்க உட்காருங்க

(இருவரும் சிறிய நாற்காலிகளில் அமர்கின்றனர்)

(சதாசிவம் , காபி கோப்பையை அருணிடம் தருகிறார்)

அருண் : சதா சார் கேன்டீனுக்கு வராத பிரதீப் சார் வந்திருக்காரு அவருக்கு ஒரு லெமன் டீ கொடுங்க …

பிரதீப் : அதை முதல்லேயே இல்ல நீ சொல்லி இருக்கணும் … ஆமாம் நம்ம ஸ்டாப் யாரும் அவங்க அவங்க டிபார்ட்மென்ட்ல இல்லையே என்ன ஆச்சு ?

(சதாசிவம் , லெமன் டீ கோப்பையை அருகில் உள்ள தாழ்வு மேசையில் வைக்கிறார். பிரதீப் அதனை எடுத்துப் பருகுகிறார்.)

அருண் : அதுவா பிரதீப் சார் …

பிரதீப் : யோவ் சார்ன்னு சொன்னா போதாதா நொடிக்கு நொடி பேரை சொல்ற ?

அருண் : இப்படி நடுவுல வந்தீங்கன்னா எனக்கு ப்ளோ போயிடும் …

பிரதீப் : சரி நடுவுல பேசலை சொல்லு …

(சதாசிவம் இவர்கள் அருகில் வந்து நிற்கிறார்)

அருண் : நம்ம சிஎம்டி , இங்க்லீஷ்ல ஒரு மேற்கோள் படிச்சாராம் …

அது என்னன்னா …” three things tell a man – his eyes , his friends and his favorite quotes “

பிரதீப் : இதுல என்னய்யா புதுசு ? எங்க தாத்தா பாட்டி காலத்திலிருந்து சொல்வாங்க கண்ணைப் பார்த்தால் தெரியும் … ஒன்னோட நண்பர்களைப் பத்தி சொன்னா ஒன்னப் பத்தி சொல்லலாம்ன்னு …

அருண் : Immanuel Kant ங்கரவரோட கோட் இது . நீங்க சொன்னதோட பேவரேட் கோட் ங்கறது சேர்ந்துடுச்சு இல்ல … ஒங்களுக்கு இல்ல நமக்கு எல்லாம் கோட்ன்னா டெண்டர் கோட் தான் தெரியும் இல்ல …

பிரதீப் : யோவ் … ..

அருண் : இப்ப இதுக்கு என்னன்னு தானே ஒங்க மைண்டல ஓடுது ..இல்ல

சிஎம்டியோட பிஏ ஒரு சர்க்குலர் அனுப்பி இருக்காரு … ஸ்டாப் எல்லாரும் அவங்களுக்கு பிடிச்ச கொடேஷனை ஹெச் ஆர் டிபார்ட்மென்ட்டுக்கு மெயில்ல அனுப்பி வைக்கணும் … சிஎம்டி , நல்லா இருக்கற இருபது கோட்டுக்கு பரிசு கொடுப்பாராம் …. அதுக்கு தான் ஸ்டாப் எல்லாரும்

அவங்க அவங்க வீட்ல இருக்கிற பழைய புத்தகம் , தாத்தாவோட டைரி எல்லாம் தூசி தட்டி , மேற்கோள்கள் தேட போயிருக்காங்க … ..

பிரதீப் : இதுக்கு எதுக்கு வேலையை விட்டுட்டு வீட்ல போய் தாத்தா டைரில எல்லாம் தேடணும் தினமும் தான் வாட்ஸ் அப் ல இன்ஸ்டா ல அவ்வளவு வந்து விழுதே அதுலேந்து எது பிடிக்குதோ அதை அனுப்ப வேண்டியதுதானே செய்தித்தாள் ஞாயிறு இணைப்பு மேகசைன்ல துணுக்குகளாக மேற்கோள் இருக்கும் அதுலேந்து

எடுத்துக்கலாம் …. இல்லேன்னா டேட் ஷீட் கேலண்டர்ல தினமும் ஒரு மேற்கோள் இருக்கும் ஆனா அதை கூட படிக்காம கிழிச்சு போட்டுடுவோம் முன்பெல்லாம் சென்னை சிட்டில ஓட்ற ஆட்டோ பின்னாடி கூட சிந்தனையைத் தூண்டுகிற வரிகள் எழுதி வைப்பாங்க… அதுவும் இல்லேன்னா .. …

நம்ம ஆபீஸ் வைபில தானே சீரியல்லேந்து எல்லா வீடியோவும் பார்க்கறாங்க இருக்கவே இருக்கு கூகுள் கூகுள் ல்ல தேடினா ஏராளமா இருக்குமே … அதை விட்டுட்டு …. . சரி அதுக்காக வேலையை போட்டது போட்ட படி போட்டுட்டு போகணுமா ? நான் இன்னிக்கு எல்லாருக்கும் எல்ஓபி போட சொல்றேன்.

அருண் : அதை போட்டுக்கங்க ஒங்களுக்கு பிடிச்ச கோட் என்னன்னு கேட்டா என்ன சொல்வீங்க … ?

பிரதீப் : ” ரோம் நகர் , தீப்பிடிச்சு எரிஞ்சப்ப நீரோ மன்னன் பிடில் வாசிச்சான்னு சொல்வாங்களே ” … அதுதான் … சிஎம்டியும் அவரோட பிஏயும் அதைத்தானே செஞ்சுகிட்டு இருக்காங்க பிசினஸ்சை தூக்கி நிறுத்தற வேலையை பார்க்காம வெட்டி வேலைய பார்த்துகிட்டு … சரி உனக்கு பிடிச்ச மேற்கோளை நீ சொல்லேன் …

அருண் : இது நானே எழுதியது …

பிரதீப் : நான் கேட்டது தப்பாயிடுச்சு இதெல்லாம் கேட்கும்படி ஆயிடுச்சு சொல்லு … கேட்போம் ..

அருண் : “அந்தப் பெண்மணிக்காக நான் ஒரு பாடல் எழுதினேன் …

அந்தப் பெண்மணிக்காக நான் ஒரு பாடல் எழுதினேன் … “

பிரதீப் : ரெண்டு பாட்டா ? சரி மேல சொல்லு

பிரதீப் : ” அந்தப் பெண்மணிக்காக நான் ஒரு பாடல் எழுதினேன்… அதைக் கேட்பதற்கு அந்தப் பெண்மணி இல்லை …அந்தப் பெண்மணி என் தாய் ….. “

பிரதீப் : அம்மா இருக்கும் போது எரிஞ்சு விழ வேண்டியது மூஞ்சிய காட்ட வேண்டியது யார் மேலயோ இருக்கிற கோபத்தை எல்லாம் அவங்க மேல கொட்ட வேண்டியது அவங்க போனப்புறம் அவங்களுக்காக பாட்டு எழுதி என்ன பிரயோசனம் … சரி வா … நாமளாவது டிபார்ட்மென்ட்டுக்கு போய் வேலையை பார்ப்போம் … நீ இன்னும் அவுட்ஸ்டான்டிங் ஸ்டேட்மென்ட் எனக்கு அனுப்பவே இல்ல … வா …

(இருவரும் எழுந்து நிற்கின்றனர் )

அருண் : நீங்க தான் இன்னிக்கு லாஸ் ஆப் பே ன்னு சொல்லிட்டிங்க இல்ல சார் … நாளைக்கு தரேன் ஸ்டேட்மென்ட் … சதாசிவம் சார் வொரசியஸ் ரீடர் … தமிழ்ல மலையாளத்துல இங்கிலீஷ்ல நிறைய படிச்சுகிட்டே இருக்கிறவரு நான் இவர்கிட்டேந்து ஏதாவது மேற்கோள் வாங்கிட்டு வரேன். பொற்கிழி எனக்கு கிடைக்கணும் இல்ல …

பிரதீப் : ஒங்கள எல்லாம் திருத்தவே முடியாதுய்யா … ஆகாத காரியத்துல நேரத்தை வீண்டிக்கறீங்க … அடுத்த வாரம் மேனேஜ்மென்ட் டீம் மெம்பர்ஸ் மீட்டிங் ல நாக்கைப் பிடுங்கறா மாதிரி கேட்கறேன் எல்லாரையும் … ஸ்டாபோட புரடக்ட்டிவிட்டியை கெடுக்கறதுக்கு பிஏ மாதிரி ஆளுங்க போதும் …

(பிரதீப் , வேகமாக மேடையின் வலப் பக்கமாக வெளியேறுகிறார்.)

( அருண் , நின்று கொண்டிருக்கும் சதாசிவத்தைப் பார்க்கிறான் )

சதாசிவம் : என்ன தம்பி என் கிட்டேந்து மேற்கோள் வேணுமா?

அருண் : ஆமாம் …

சதாசிவம் : இன்னிக்கு கடை சரக்கு தான் போகலை … மண்டைல இருக்கிற சரக்கை சொல்றேன் கேளுங்க ….

அருண் : சொல்லுங்க ஒங்களோட செவி உணவுக்கு காத்திருக்கு என் செவிகள்

சதாசிவம் : இது கலீல் ஜிப்ரான் ங்கற கவிஞரோட கவிதை ….

“உங்கள் குழந்தைகள் உங்கள் மூலம் வருகிறார்களே அன்றி அவர்கள்
உங்கள் குழந்தைகள் அல்ல
அவர்கள் உங்கள் குழந்தைகள் அல்ல அவர்கள் வாழ்வின்
புதல்வர்கள் , புதல்விகள் .. நீங்கள் அவர்கள் மீது அன்பைப்
பொழியலாம் ஆனால் எண்ணங்களை அல்ல
ஏனெனில் அவர்களுக்கு என்று தனியாக எண்ணங்கள் உள்ளன … “

(உள்ளிருந்து குரல் – அச்சா .. … கேன்டீன் கணக்கு எல்லாம் பார்க்காம வெட்டியா பேசிகிட்டு இருக்கீங்களான்னு அம்மை போன்ல கேட்கறாங்க…)

சதாசிவம் : இல்ல அச்சு … கணக்கு தான் பார்க்கறேன்னு சொல்லு… அருண் தம்பி .. நீங்க மீதி கவிதையை தேடிப் பார்த்துக்கங்க .. your children are not your children ன்னு கூகுள் பண்ணா வரும் . அருண் தம்பி … நம்ம பேமென்ட் …

அருண் : அது நான் கணக்கு பார்த்துட்டு பாஸ் பண்றேன் … வரேன் … …

(திரை)

இரண்டாம் காட்சி

( திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன. மேடையின் வலப் பக்கத்தின் ஓரத்தில்

ஆஷா திருமண மண்டபம் என்ற பெயர்ப் பலகை இருக்கிறது. மேடையின் நடுவே பின்னணியில் ரோஜா எப்எம் நேயர்கள் சந்திப்பு என்ற பதாகை இருக்கிறது. மேடையின் வலப் பக்கத்திலிருந்து சூரிதார் அணிந்த பருமனான உடல்வாகு கொண்ட அழகான நடுத்தர வயது பெண்மணி கையில் ஒலி வாங்கியுடன் வருகிறாள். மேடையின் இடப் பக்கத்திலிருந்து நாம் முன்பு சந்தித்த சதாசிவம் நாயர் வருகிறார்.

பெண்மணி : வணக்கம் வாங்க சதாசிவம் சார் … நம்ம நேயர்கள் சந்திப்புக்கு எங்க அழைப்பின் பேர்ல வந்ததற்கு நன்றி …

சதாசிவம் : என்ன மேம் .. நிகழ்ச்சி தொடங்கும் போது சொல்ல வேண்டியதை இப்பவே சொல்றீங்க … ஆமாம் அது என்ன ஒங்க பேரை ஆர்ஜே ஆர் ஆர் கிருஷ்ணா ன்னு சொல்லிக்கறீங்க …. கிருஷ்ணவேணின்ற பேரை சுருக்கிட்டிங்களா ?

பெண்மணி : இது வரைக்கும் நேயர்கள் யாரும் நண்பர்கள் யாரும் கேட்காத கேள்வியை நீங்க கேட்டுட்டிங்க ..

சதாசிவம் : அதனால பேர் ரகசியத்தை சொல்ல மாட்டேங்கறீங்களா ?

பெண்மணி : பெரியவர் நீங்க கேட்டுட்டிங்க அதனால சொல்றேன் ..

சதாசிவம் : பெரியவரா ? நல்ல வேளை தாத்தான்னு சொல்லாம விட்டீங்களே …

பெண்மணி : (புன்னகை பூத்தவாறே ) என்னோட பேரு ராதா … என் கணவர் பேரு ராதாகிருஷ்ணா … அதை தான் ஆர்ஜே ஆர் ஆர் கிருஷ்ணான்னு மாத்திட்டேன்.

சதாசிவம் : இதை நீங்க ஒரு ஆர்ஜேயின் நினைவலைகள் ன்னு புத்தகம் எழுதும் போது கண்டிப்பா குறிப்பிடணும்

( மேடையின் இடப் பக்கத்திலிருந்து நாம் முன்பு பார்த்த அருண் வருகிறான் . ஆனால் , சதாசிவத்தைப் பார்த்தும் பார்க்காதது போல் நிற்கிறான். )

ஆர்.ஆர். கிருஷ்ணா : சதா சார் என்ன பார்க்கறீங்க … ஒங்க கம்பெனி ஸ்டாப் அருண்னு நெனச்சிங்களா .. ? இவரு அச்சு அசலா அருண் மாதிரியே இருக்கிற அவரோட தம்பி வருண் சாப்ட்வேர் எஞ்சினியர் … வருண் .. இவுரு சதாசிவம் சார் ஒங்க அண்ணா கம்பெனியில சாரி ஒங்க அண்ணா பணி புரியற கம்பெனியின் கேன்டீன் கான்ட்ராக்ட்டர் …

வருண் : வணக்கம் சார்

சதாசிவம் : வணக்கம் தம்பி …

ஆர்.ஆர். கிருஷ்ணா : சரி நிகழ்ச்சிக்குப் போகலாமா .. ?

(விளக்குகள் சில நிமிடங்கள் அணைந்து மீண்டும் ஒளிர்கின்றன.)

ஆர்.ஆர். கிருஷ்ணா : இருந்தமிழே உன்னால் இருந்தேன் வானோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.. ரோஜா எப் எம் நேயர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். எங்கள் அழைப்பை ஏற்று இந்த நேரடி நிகழ்ச்சியைக் காண , பொன்னான நேரத்தை ஒதுக்கி வந்துள்ள நமது ரோஜா பண்பலையின் நேயர்களுக்கு நன்றிகள் . இன்று மாலை , உங்கள் செவிகளுக்கும் விழிகளுக்கும் சிந்தனைக்கும் விருந்தாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்.இந்த நிகழ்ச்சியின் தலைப்பு – மேற்கோள் முற்றம் …. ஆம் அன்றாடம் நாம் படிக்கிற , எப்போதோ படித்து நமது நினைவுகளில் நின்று விட்ட , நமக்கு வருகிற மேற்கோள்களில் பிடித்த மேற்கோள்களை அனுப்பி வைக்கும்படி நம்முடைய நேயர்களிடம் கேட்டிருந்தோம். நம்முடைய சமூக வலைதளப் பக்கங்களில் நிறைய நேயர்கள் பல மேற்கோள்களைப் பகிர்ந்து இருந்தார்கள் . கொட்டி விட்டார்கள் என்றே குறிப்பிடலாம் . நமது ரோஜா பண்பலை உடன் தொடக்க காலத்திலிருந்து அதிக அளவில் மடல்கள் வாயிலாக தொடர்பில் இருந்து வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட நேயர்களில் இருவர் இந்த மேடையில் நேயர்கள் தந்த மேற்கோள்களைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் . அந்த வகையில் வந்துள்ள நேயர்கள் இருவர் – திரு சதாசிவம் திரு வருண் … இங்கே என்னுடன் இருக்கிறார்கள் . சதாசிவம் அவர்கள் , நமது சமூக வலைதளப் பக்கத்தில் நமது நேயர்கள் சிலர் பகிர்ந்த ஒன்றிரண்டு மேற்கோள்களை தங்களுக்கு சொல்வார் …

சதாசிவம் : (ஆர்.ஆர்.கிருஷ்ணா , அவரிடம் டேப்லட்டைத் தருகிறாள்)

ரோஜா எம்எம் நேயர்களுக்கு வணக்கம். திருமயிலையிலிருந்து

வாசு என்கிற நமது நேயர் பகிர்ந்த பதிவு –

” விட்டு விடாதீர்கள் . பலமான குத்து விழுந்த போதும்

களத்தை விட்டு வெளியேறி விடாதீர்கள். சற்றே இளைப்பாறுங்கள்

ஆனால் விட்டு விடாதீர்கள் ஒரு போதும்

விட்டு விடுவதால் வெற்றிக் கோப்பையை நழுவ விட்டவர் ஆகி விடுவீர்கள்

நழுவ விடாதீர்கள் . ஆம் . எப்போதும் விட்டு விடாதீர்கள் “

இந்த நேயர் அனுப்பி உள்ளது- நமக்கெல்லாம் ஊக்கம் அளித்திடும் தெம்புரை ஆகும்.

இது டோன்ட் குயிட் என்ற ஆங்கில கவிதையின் மிகவும் சுருக்கமான வடிவம் இதனை எழுதியவர் எட்கர் ஆல்பர்ட் கஸ்ட் . இவரை மக்கள் கவிஞர் என்று அதாவது பீப்பிள்ஸ் பொயட் என்று கொண்டாடுகிறார்கள் . முழு கவிதையையும் இணையத்தில் தேடிப் பிடித்து வாசிக்க வேண்டுகிறேன். நேயர்கள் அனைவரும் துவண்டு விடாமல் , விட்டு விடாமல் வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள்

(கரவொலி )

நெய்வேலியிலிருந்து முத்து என்ற நேயர் அனுப்பி உள்ள பதிவு

“சாரை சாரையாகச் செல்லும் எறும்புகள் , இடிச்சபுளியாக ஒரே
இடத்தில் அமர்ந்து கொண்டிருந்த எனக்கு நகர்ந்து கொண்டே
இருப்பதே நலம் பயக்கும் என்று எடுத்துரைத்தன.“

ஆர். ஆர். கிருஷ்ணா : (மைக்கை மூடிக் கொண்டு ) என்ன சார் .. நகராம கல்லாப் பெட்டிகிட்டயே உட்கார்ந்துகிட்டு இருக்கிற ஒங்கள இடித்துரைக்கிறா மாதிரி இந்த கோட் இருக்கே …

சதாசிவம் : ( மைக்கை மூடிக்கொண்டு ) ஸ்டூடியோல நீங்க எல்லாம் ஸ்டாண்டிங் டெஸ்க்லயா ப்ரொக்ராம் பண்றீங்க ?

ஆர். ஆர்.கிருஷ்ணா : சரி விடுங்க …. விடுங்க

சதாசிவம் : காஞ்சிபுரம் பாஸ்கரன் என்கிற நேயர் அனுப்பி உள்ள பதிவு –

” கட்டித் தங்கம் போல் காலம் நம் கைகளில் இருக்க வெட்டிப் பேச்சு எதற்கு?”

(சதாசிவம் , கிருஷ்ணாவைப் பார்க்கிறார்.)

ஆர்.ஆர். கிருஷ்ணா : எங்க பாட்டி சொல்லுவாங்க …

“வாயைக் கட்டாமல் வம்பில் மாட்டுகிறோம் …
வயிற்றைக் கட்டாமல் நோய்த் தொல்லையில் மாட்டுகிறோம் …”

சதாசிவம் : என்ன ஆச்சரியம் … உங்கள் பாட்டியார் உங்களுக்குச் சொல்லிச் சென்றதை , மேற்கு மாம்பலத்திலிருந்து புஷ்பலதா என்ற நேயர் பகிர்ந்துள்ளார்.

ஆர்.ஆர். கிருஷ்ணா : கிரேட் மென் திங்க் அலைக் தான்னு சொல்லணுமா ? அவங்க பாட்டியும் எங்க பாட்டி மாதிரி …கிரேட் வுமென் திங்க் அலைக் ன்னும் சொல்லலாம்.

(சதாசிவம் , டேப்லட்டை கிருஷ்ணாவிடம் தருகிறார். கிருஷ்ணா , அதனை வருணிடம் தருகிறாள்.)

வருண்: அனைவருக்கும் வணக்கம் . வாய்ப்புக்கு நன்றி. ஆழ்வார்ப்பேட்டை ஜோதி என்கிற பெண்மணி , நமது இளைஞர்களுக்கு எல்லாம் ஏன் அனைவருக்குமே பயன் தரக் கூடிய ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

ஆங்கிலத்தில் சாப்ட் ஸ்கில்ஸ் என்று குறிப்பிடுவார்கள் . அவ்வாறான நான்கு முக்கிய சாப்ட் ஸ்கில்ஸ் அதாவது டாப் சாப்ட் ஸ்கில்ஸ் பற்றி சுருக்கமாக கூறுகிறது இவரது பதிவு –

“முதலாவது – பணியிடங்களில் உணர்ச்சி மேலாண்மை எனப்படுகிற எமாஷனல் இன்ட்டெலிஜன்ஸ்

இரண்டாவது – தொடர்பு கொள்ளுதல் எனப்படும் கம்யூனிகேஷன்

மூன்றாவது – பிரச்சினைக்கு தீர்வு காணுதல் என்னும் ப்ராப்ளம் சால்விங்

நான்காவது – சூழலுக்கு இணக்கமாக நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளுதல் என்கிற அடாப்ட்டபிலிலட்டி .

இத்தகைய சாப்ட்ஸ்கில்ஸ் என்கிற திறமைகளை நாம் கைகொள்வதால் உத்யோக வாழ்வில் , வர்த்தகத்தில் சுயதொழிலில் வெற்றிகளைக் காண இயலும் ” என்கிறார் இந்த நேயர் … ஜோதி அவர்களுடைய பதிவுக்கு நன்றி

(கரவொலி)

வருண் : சைதாப்பேட்டையிலிருந்து பேராசிரியை ரஞ்சனி அனுப்பி உள்ள பதிவு இதோ –

“செயல்திறன் அதிகரிக்க உதவும் பிரெயின் பிரேக் உத்திகள் –

பிரேக் என்ற ஆங்கிலப் பதம் நம் செவிகளில் விழாத நாள்

இருக்க முடியாது. நாம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்

பிரெயின் பிரேக் உத்திகள் , தொழிலதிபர் முதல் அனைத்து

தரப்பினரும் தங்கள் செயல்திறனை அதிகரித்துக் கொள்ள

உதவக் கூடியவை

இயந்திரங்களை தொடர்ந்து இயக்க கூடாது என்பது நாம்

எல்லாம் சிறுவர்களாக இருக்கும்போதே அறிந்து கொண்ட

பாடம். அதுவே மனிதனின் இன்றியமையாத உறுப்பாக

இருக்கும் மூளைக்கும் பொருந்தும் .

ஆம். விளம்பர இடைவேளை என்பது நாம் பார்க்கும்

சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அல்ல. நம்முடைய

தலையில் இருக்கும் தலைமைச் செயலகத்திற்கும் தேவை.

1. Doodling and Colouring

வரைவதும் வண்ணம் அடிப்பதும் சுட்டிகளுக்கு மட்டும்

உரியது அல்ல. பெரியவர்களுக்கும் உரியது. கூகுளை

ஆராய்ந்த வண்ணம் இருப்பவர்களுக்கு டூடூல் என்கிற பதம்

புரிந்திருக்கும். அண்மைக் காலத்தில் ஒரு முறை குழந்தைகள்

தினத்தன்று , கூகுள் , ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன்

வரைந்த டூடூலையே அன்றைய நாளுக்குரிய டூடூல் படமாக

வைத்திருந்தது கூகுள் .

சிறுவர்களு்க்கான வண்ணம் அடிப்பதற்கான நோட்டுப்

புத்தகங்கள் போலவே பெரியவர்கள் வண்ணம் தீட்டி

மகிழ்வதற்கான நோட்டுப் புத்தகங்கள் வந்துள்ளன. இப்படி

வரைவதிலும் வண்ணம் தீட்டுவதிலும் கவனம் செலுத்தும்

போது மூளை புத்துணர்ச்சி பெறுகிறது. ஆம் ஜெம்ஸ் பட்டன்

மிட்டாயை முதியவர்கள் விரும்புவது போல் காட்டப்படுவது

போலவே நமக்கும் குழந்தைப் பருவம் திரும்பத் தான் செய்யும்

அதற்குத் தான் இந்த டூடூலிங் / கலரிங்

2. உடலுக்கு வேலை – மேசை பணி பார்ப்பவர், பொறுப்பு மிக்க

பதவியில் இருந்தால் உட்கார்ந்தபடியே பலவித பணிகளை

செய்வார். பலரை சமாளிப்பார். பலரை ஏவி வேலை வாங்குவார் .

இப்படி ஒரே இடத்தில் அமர்ந்தபடி வேலை செய்தால் மூளை

சோர்வடையத்தான் செய்யும் . அப்போது உடலை ஈடுபடுத்துகிற

பணிகளை மேற்கொள்ள வேண்டும். அலுவலகத்தில் கவனிப்பாரற்றுக்

கிடக்கிற வீண் பொருட்களை சேகரித்து அகற்றுகிற வேலையாக கூட

இந்த உடல் வேலை இருக்கலாம்.

3. வெளி உலகத்துக்கு வாருங்கள் – பணிச்சுமைக்கு நடுவே பணியிடத்தை

விட்டு வாருங்கள் . காலார நடந்து பாருங்கள் . விறுவிறுப்பான

நடையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மெதுவாகவே

நடந்து வெளி உலகத்தைப் பார்த்து விட்டு மீண்டும் பணியைப் பார்க்கச்

சென்றால் மூளை புத்துணர்ச்சி பெறும் .

4. வித்தியாசமான பணியில் சிறிது நேரம் – உங்கள் தொழிலுக்குத் தொடர்பில்லாத பணியில் சற்று நேரம் ஈடுபடலாம். அது உங்களுக்குப்

பணப்பயன் தராததாகவும் இருக்கலாம். அதனால் உங்கள் மூளைக்கு புது சக்தி கிட்டும் “

ஆர்.ஆர்.கிருஷ்ணா : வருண் நிதானமாக வாசித்துத் தந்த ரஞ்சனி அவர்கள் அனுப்பிய மேற்கோள் சற்றே நீளமான

மேற்கோள் தான் . எனினும் பயன் உள்ளதாக இருந்தது அல்லவா ? அவருக்கு நன்றி

(கரவொலி )

வருண் : பாண்டியன் என்ற நேயர் அனுப்பி உள்ள சின்னஞ்சிறு பதிவு

இதோ –

“எதில் இறங்கினாலும் இடர்ப்பாடு இருக்கத்தான் செய்யும்
ஒன்றுமே செய்யாமல் இருத்தலும் இடர்ப்பாடுதான் “

ஆர்.ஆர். கிருஷ்ணா : ரிஸ்க் பற்றிய மேற்கோள் … சிந்தனையைத் தூண்டும் மேற்கோள் இது . பாண்டியன் அவர்களின் மேற்கோளுக்காக நேயர்கள் கரவொலி தரலாமே

(கரவொலி )

வருண் : செண்பகம் என்கிற நம்முடைய நேயர்

நமக்கு அனுப்பி உள்ள அவருக்குப் பிடித்த பதிவு இதோ –

” தேன் கூட்டில் இருப்பது தேன் ..

தேன் என்பது நுகர்பொருள் மட்டுமா ?

அது கடின உழைப்பின் சின்னம் அல்லவா ? “

(கரவொலி)

ஆர்.ஆர். கிருஷ்ணா : அன்பு ராஜேஷ் என்ற நேயர் தாமே எழுதியதாக அனுப்பி உள்ள நறுக்கு பதிவு – நறுக்காகத் தான் எழுதி உள்ளார் . வருண் வாசியுங்கள்

வருண் : யதார்த்தம் என்று தலைப்பிட்டு இருக்கிறார் –

” சீனியர் சிட்டிசன் Hall ல் இருக்கும் போது
கிடைக்காத மதிப்பும் பரிவும் Wall ல் படமாக
இருக்கும் போது கிடைக்கிறது. “

ஆர்.ஆர். கிருஷ்ணா : என்ன மதிப்பு பரிவு மாலை அதுதானே … இது போல் மூத்த குடிமக்களைப் பற்றி அனந்தபுரம் அரங்கன் எழுதியது

வருண் : பெற்றோரை கவனிக்காதவர்களை இது போல் இடித்துரைக்கிறதா ?

ஆர்.ஆர். கிருஷ்ணா : ஆமாம்.

“ தன்னந் தனியாக இருக்கும் சீனியர் சிட்டிசன் தன் மகனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி –

நானும் நானும் நலம் – ஏனெனில் தனக்குத் தானே துணை என்று நினைத்தால் உலகத்தில் ஏது தனிமை என்ற தமிழ்த் திரைப்பாடல் வரி என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது “

வருண் : சரி அந்த டாபிக் லிருந்து வெளியே வரலாம் மேம் …. இப்பொழுது சண்முகம் என்பவர் தாம் படித்ததில் பிடித்தது என்று ஒரு மேற்கோளை

அனுப்பி உள்ளார். அதனைப் பகிர்கிறேன். –

“மிகவும் மதிப்புக்குரியது உங்கள் கையிருப்பு பணமோ செல்வமோ அல்ல குழப்பிக் கொண்டே இருக்கும் இந்த உலகில் உங்கள் மனத்தெளிவு தான் உங்கள் பெருஞ்சொத்து . ஆம் . Mental Clarity என்கிற மனத்தெளிவு தான் உங்கள் பெரும் ஆஸ்தி “

ஆர்.ஆர். கிருஷ்ணா : மனத் தெளிவு பற்றிய தெளிவான சிந்தனை

அடுத்து மருத்துவர் தாமோதரன் அவர்கள் அனுப்பிய பதிவு இதோ

வருண் வாசிக்கிறார் –

வருண் : ” மருந்து என்பது புட்டியிலும் மாத்திரையிலும் மட்டும் இல்லை எனலாம்

உடற்பயிற்சி ஒரு மருந்து

உணவு மறுக்கும் விரதம் ஒரு மருந்து

இயற்கை எழிலைக் கண்டு களிப்பது ஒரு மருந்து

வாய் விட்டு சிரித்தல் ஒரு மருந்து

காய்கறிகள் ஒரு மருந்து

அளவான உறக்கம் ஒரு மருந்து … “

ஆர்.ஆர். கிருஷ்ணா : நோய்க்கு இடங்கொடேல் என்று ஔவைப் பாட்டி நமக்கு சொல்லிக் கொடுத்தார். நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரே நோயைத் தவிர்க்கும் வழிமுறைகளை கூறியுள்ளார். அவருக்கு நன்றி . நகைச்சுவை ஒன்று இல்லவிட்டால் நான் என் வாழ்வையே முடித்துக் கொண்டிருப்பேன் என்று மகாத்மா காந்தியடிகள் கூறினார். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் சிரித்தால் என்ன செலவா ஆகும் என்பது பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற கவிஞர் வாலி அவர்களின் பாடல் பல்லவி

வருண் : தீனதயாளன் என்ற நேயர் அனுப்பி உள்ள பதிவு –

“வடை போச்சே தருணங்களை எண்ணி வருந்தாமல்

கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி முன்னேறுவதே

சாலச் சிறந்தது “

சங்கீதா என்ற நேயர் , அலுவலகத்தில் உடன் பணி புரிபவர் பேசியதில் மனதில் நின்றது என்று ஒரு பதிவை அனுப்பி உள்ளார் அதாவது –

“ பூட்டுகள் தயாரிக்கப்படும் போது அவற்றுக்கான சாவிகளும் தயாரிக்கப்படுகின்றன. பூட்டு உடன் சாவி இணைந்து நிற்கிறது. ஆனால் பிரச்சினைகள் என்னும் பூட்டுகளுக்கு தீர்வு என்னும் திறவுகோல் பெறுவதற்கு படாத பாடு பட வேண்டி உள்ளது. “

என்ன மேம் … இதுக்கு என்னவோ சொல்லணும்னு உங்க மனசு துடிக்கறா மாதிரி தெரியுதே ..

ஆர். ஆர். கிருஷ்ணா : ஆமாம் என் மைண்ட் வாய்ஸ் உனக்கு கேட்டுடுச்சா ? இதுக்கும் வாலி அவர்களோட பாடல் வரி தான் நினைவுக்கு வந்துச்சு … எங்கள் தங்கம் படத்தில் இடம் பெற்ற பாடல் வரிகள் நம்பிக்கை நெஞ்சில் வை தித்திக்கும் வாழ்க்கை …

வருண் : அது சரி பிரச்சினையில் சிக்கி இருக்கறவனுக்குத் தான் தெரியும் பாடு .. சரி அதை விடுங்க … டாக்டர் மாதவ் ராவ் , ஆங்கிலத்தில் ஒரு மேற்கோள் அனுப்பி இருக்காரு …. அதை தமிழ்ல கொடுக்க முயற்சி பண்றேன்.

ஆர்.ஆர். கிருஷ்ணா : ரிஸ்க் ஆச்சே .. முடியுமா ?

வருண் : இப்பதானே சொன்னீங்க … நம்பிக்கை நெஞ்சில் வைன்னு …

சோம்பேறித்தனம் உங்கள் இலட்சியத்தைக் கொன்று விடும்

கோபம் உங்கள் விவேகத்தைக் கொன்று விடும்

அச்சம் உங்கள் கனவுகளைக் கொன்று விடும்

வீம்புக் குணம் உங்கள் வளர்ச்சியைக் கொன்று விடும்

பொறாமை நிம்மதியைக் கொன்று விடும்

சந்தேகம் உங்கள் தன்னம்பிக்கையைக் கொன்று விடும் ….

(கரடி முகமூடி அணிந்த நீல டிசர்ட் பேண்ட் அணிந்த நபர் ஆர்.ஆர்.கிருஷ்ணா அருகில் வந்து நிற்கிறார் )

ஆர்.ஆர்.கிருஷ்ணா : வருண் இந்த கரடி மனுசர் எப்ப வந்தாரு … ?

வருண் : அவர் எப்பவோ வந்துட்டாரு நீங்க நிகழ்ச்சில மூழ்கிப் போய் அவரை கவனிக்கல …

ஆர்.ஆர். கிருஷ்ணா : (மைக்கை மூடிக்கொண்டு) யோவ் யாருய்யா நீ மண்டபத்து வாசல்ல நின்னுகிட்டு இருந்தியா ? ஏன் இங்க வந்துட்டே … கரடி மனுசா …

கரடி உருவம் : நான் மனுசன் இல்ல உன்னைப் போல மனுசி …. நான் காவல் துறை உதவி ஆணையர் பவானி …

ஆர்.ஆர். கிருஷ்ணா : அப்படியா வணக்கம் மேம் … ஒங்க அழகு முகத்தைக் காட்டாம பேசறீங்க … என்ன .. நீங்க இந்த நிகழ்ச்சில பேசணும்னு ஆர்வமா ? உங்களுக்குப் பிடிச்ச மேற்கோள் சொல்லணுமா ? முகமூடியை கழட்டிட்டு பேசுங்க மேம்

பவானி : நான் பேச வரலை நான் சொல்றதை புரிஞ்சுகிட்டு நீதான் ஆடியன்ஸ் கிட்ட பக்குவமா பேசணும் …..

ஆர்.ஆர். கிருஷ்ணா : ரொம்ப உரிமையில ஒருமையில பேசறீங்க சரி சொல்லுங்க

பவானி : நான் இந்த முகமூடி போட்டுகிட்டு மேடைக்கு வந்ததற்கு காரணம் … இந்த மண்டபத்துக்கு பாம் ஸ்கேர் … அதாவது வெடிகுண்டு அச்சுறுத்தல் வதந்தியாக கூட இருக்கலாம் …

செக் பண்றதுக்கு பாம் ஸ்க்வாட் வந்துகிட்டு இருக்காங்க … ஜனங்களுக்கு தெரிஞ்சா பேனிக் ஆயிடுவாங்க வெளியே போறதுல ஸ்டாம்பீட் ஆயிடும் அதனால நீ இந்த காரணத்தை சொல்லக் கூடாது இதை சொல்லாம வேற ஏதாவது சொல்லி நிகழ்ச்சிய முடிச்சுடணும் உடனே …..

உன் கூட இருக்கிற இந்த ரெண்டு பேர் கிட்டயும் இது பத்தி சொல்லக் கூடாது

ஆர்.ஆர். கிருஷ்ணா : நிகழ்ச்சி ஒரு ப்ளோல போய்க்கிட்டு இருந்துச்சு …… நீங்க சொன்னதை சொல்லாம ஜனங்க கிட்ட என்ன சொல்வது ? எப்படி சொல்வது சரி … சமாளிக்கறேன்.

(மைக்கை கையில் வைத்துக் கொண்டு பேசுகிறாள் )

அன்பார்ந்த நேயர்களே எங்கள் ரோஜா பண்பலையின் அபிமானிகளே …. நேரம் போனதே தெரியவில்லை அல்லவா ? கரடி உருவத்தில் மேடைக்கு வந்திருக்கும் அதிகாரி …. அது வந்து மண்டபத்து நிர்வாகி , கனமழை பற்றிய அலர்ட் வந்திருப்பதாக தெரிவிக்கிறார். நீங்களும் பல இடங்களிலிருந்து எல்லாம் வந்திருப்பீர்கள் … அதனால் நிகழ்ச்சியை இந்த அளவில் நிறைவு செய்கிறோம்.

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித் திருநாடு

உலகம் அமைதியின் கரங்களில் தவழட்டும்

அனைவரும் விரைவில் இங்கிருந்து … அதாவது பாதுகாப்பாக தங்கள் இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். மிக்க நன்றி …

(பவானி , முகமூடியைக் கழற்றாமல் மேடையின் வலப் பக்கம் நோக்கிச் செல்கிறார். )

(இப்பொழுது மேடையில் மங்கலான வெளிச்சம் … )

வருண் : என்ன மேம் இப்படி டப்புன்னு முடிச்சிட்டிங்க … என்ன சொல்லிச்சு அந்த கரடி உருவம்?

ஆர்.ஆர். கிருஷ்ணா : பேச நேரம் இல்ல … வாங்க ரெண்டு பேரும் மண்டபத்தை விட்டு வெளியே போவோம் …

வருண் : என்னவோ மண்டபத்துக்கு யாரோ பாம் வைச்சுட்டா மாதிரி பதட்டப்படறீங்க ..

ஆர்.ஆர். கிருஷ்ணா : எப்படியா கரெக்ட்டா சொல்லிட்ட …. வா போவோம் வாங்க சதா சார் …. ( மூவரும் மேடையின் இடப் பக்கத்தை நோக்கி விரைந்து செல்கின்றனர். )

(திரை)

மூன்றாம் காட்சி

(திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன. நடுத்தர குடும்ப வீட்டின் கூடம் போன்ற அமைப்பு. ஒரு மர நாற்காலியில் சூரிதார் உடை அணிந்த ஆர்ஜே ஆர்.ஆர். கிருஷ்ணா அமர்ந்து இருக்கிறாள். சுற்றும் முற்றும் பார்க்கிறாள். மேடையின் வலப் பக்கத்திலிருந்து

பச்சை நிற சேலை முழுக்கை சோளி அணிந்த ஒடிசலான , அழகான ஓர் இளம் பெண் வருகிறாள்.)

ஆர்.ஆர்.கிருஷ்ணா : யாரும்மா நீ … யூட்யூப்ல நேத்து உள்ளத்தை அள்ளித் தா படத்தை பார்த்து என்னை கட்டையால அடிச்சு கடத்திட்டு வந்திருக்கியா?

இளம்பெண் : (நின்றபடியே பேசுகிறாள்) (தண்ணீர் புட்டியை கிருஷ்ணாவிடம் கொடுக்கிறாள்)

அப்பா … கரெக்ட்டா சொல்லிட்டிங்களே … ஒங்க ஷோ எல்லாம் நான் கேட்பேன் .. சமீபத்துல மேற்கோள்கள் பத்தி ஒரு நிகழ்ச்சி நடத்தினீங்களே … சூப்பர் .. மேம் என்னோட பேரு சுபாஷிணி … பையனா பொறந்தா நேதாஜி நினைவா சுபாஷ்ன்னு பேர் வைக்கலாம்னு இருந்தாராம் எங்க அப்பா .. பொண்ணா பொறந்துட்டதால சுபாஷிணி ன்னு பேர் வைச்சுட்டாராம்….

ஆர்.ஆர். கிருஷ்ணா : நீ பார்க்க ரொம்ப அழகா இருக்கே நகைகள் ஏதும் இல்லாம மேக் அப் இல்லாமலே பளபளன்னு ஜொலிக்கறியே ..… ட்ரெஸ் சென்ஸ் , ஹேர் ஸ்டைல் எல்லாம் பைவ் ஸ்டார் ஹோட்டல் ல ரிசப்ஷன்ல இருக்கிற லேடி மாதிரியே இருக்கியே .. கடத்தல் பண்ணி பணம் பார்க்கணும்னு உனக்கு என்ன நெருக்கடி …. என்னை கடத்தினா பணம் கிடைக்கும்னு உனக்கு யார் சொன்னாங்க ?

சுபாஷிணி : தேங்க்ஸ் பார் த காம்ளிமென்ட் … நேரடியா பாயின்டுக்கு வந்துட்டிங்களே …. சுருக்கமா சொலறேன்… எனக்கு இந்த காதல் கத்தரிக்காய்ல எல்லாம் எனக்கு நாட்டமில்லை …

சுத்தி சுத்தி வந்தவன் எல்லாம் சோர்ந்து போய் வேற பொண்ணை தேடி போயிட்டாங்க … எங்க அப்பா அம்மா கண்ண மூடறதுக்குள்ளே எனக்கு திருமணம் பண்ணி வைக்கணும்னு பார்த்தாங்க அவங்க ஆசை நிறைவேறலை .. இதோ இந்த வீடு அவங்க எனக்கு கொடுத்துட்டுப் போனது மாடில ஒரு குடித்தன காரங்க இருக்காங்க … நான் விக்ட்டரி சூப்பர் மார்க்கெட் ல நம்ம ஏரியா பிராஞ்ச்ல சூப்பர்வைசரா இருக்கேன் …. அங்க இருக்கிற சின்ன பொண்ணுங்க எல்லாம் நீ சீரியல்ல நடிக்கலாம் அக்கா ன்னு சொல்லும் ..

ஆர்.ஆர். கிருஷ்ணா : நானும் அதையே தான் சொல்றேன்…

சுபாஷிணி : அப்படியா குறுக்கிடாதீங்க ப்ளோ போயிடும் … நான் பாட்டுக்கு சமைச்சு சாப்பிட்டு வேலைக்கு போய்க்கிட்டு இருந்தேன் …

ஆர்.ஆர். கிருஷ்ணா : இப்ப எல்லாம் சொல்றாங்களே …. முரட்டு சிங்கிள்ன்னு அது மாதிரியா ?

சுபாஷிணி : ஆமாம் … திடீர்ன்னு எனக்கு தேவைகள் அதிகமாயிடுச்சு …

ஆர்.ஆர். கிருஷ்ணா : பழைய படம் எங்க மாமா படத்துல வர்ற சிவாஜி சார் மாதிரி , சொந்த வீட்ல அநாதை ஆசிரமம் ஆரம்பிச்சுட்டியா ? ..

சுபாஷிணி : கிட்டத்தட்ட அப்படித்தான் …

(வாட்டசாட்டமான வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்த மூன்று நடுத்தர வயது ஆடவர்கள் மேடையின் இடப் பக்கத்திலிருந்து வருகிறார்கள் . சுபாஷிணி அருகில் நிற்கிறார்கள்)

சுபாஷிணி : இவங்க மூணு பேரும் என்னை நாடி வந்துட்டாங்க… எனக்கு செலவு அதிகமாயிடுச்சு …

இவர் எங்க தாய் மாமன் முத்துசாமி … இவரோட மனைவி எங்க அத்தை காவேரி ஒரு பெரிய ரியல் எஸ்டேட் கம்பெனில மேனேஜரா இருக்காங்க .. இவரும் தனியார் கம்பெனில வேலைக்கு போயிக்கிட்டு இருந்தாரு.. ஆனா எங்க அத்தை அளவுக்கு சம்பளம் இல்ல .. அத்தை அதெல்லாம் பொருட்படுத்தல … சமீபத்துல இருந்த

வேலையையும் இவர் விட்டுடட்டாரு.. அத்தை அதையும் பெரிசா எடுத்துக்கல .. சரி வீட்டை பார்த்துகிட்டு இருங்கன்னு சொல்லிட்டாங்க …. அத்தைக்கு சேலரி அக்கவுன்ட்டுக்கு ஆபீஸ் கிட்ட இருக்கிற பேங்க்ல ஒரு அக்கவுண்ட் வெச்சு இருக்காங்க … வீடு இருக்கிற ஏரியால இருக்கிற பேங்க்ல கணவர் பேர் சேர்த்து ஒரு ஜாயின்ட் அக்கவுன்ட வெச்சு இருந்தாங்க … அந்த கணக்கிலிருந்து அலர்ட் மெசேஜ் வரலையேன்னு பாஸ் புக் அப்டேட் பண்ண அந்த பேங்க் க்கு ஒரு நாள் அத்தை போனாங்க … அப்பதான் தெரியுது … அதுல இருந்த பணத்தை எல்லாம் இவுரு ஆன்லைன் சூதாட்டத்துல வேட்டு விட்டுட்டாருன்னு ….

அத்தை , ஜாயின்ட் அக்கவுன்ட் லேந்து மாமா பெயரை கழட்டி விட்டாங்க … வீட்டுக்கு வந்து

ஆர். ஆர். கிருஷ்ணா : மாமாவையும் கழட்டி விட்டுட்டாங்க …

சுபாஷிணி : ஆமாம் . கடுப்பு காட்டாமா கடத்திகிட்டு வந்தவங்க கிட்ட இவ்ளோ ஆர்வமா கதை கேட்கறீங்க மேம் … ரெண்டாவதா நிக்கறாரே … இவர் எங்க சித்தப்பா சுரேஷ்

சித்தி சுகுணா இவர் இளைஞரா இருந்தப்ப இவர்கிட்ட மயங்கி காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டாங்க … இவருக்கும் சொல்லிக்கறா மாதிரி வேலை இல்ல .. சித்தி எஞ்சினியரிங் காலேஜ்ல லெக்சரர் … இவரு சித்திய காலேஜ் பஸ் வர்ற ஸ்பாட்ல கொண்டு விட்டுட்டு வருவாரு …. இவரும் சும்மா இல்லாம , இவரோட வீடு தேடி வந்து நெருக்கடி பண முடைன்னு கெஞ்சி அழுத ஒரு ப்ரெண்டுக்காக பீரோலேந்து சித்தியோட நகையை வித்து பணத்தை கொடுத்து அனுப்பிட்டாரு கடன் கொடுக்கறதும் தப்பு வாங்கறதும் தப்புன்னு பாட்ஷா படத்துல வந்த டயலாக் இவருக்கு மறந்து போச்சு பாருங்க … சித்தி , சொந்தக்காரங்க விசேஷத்துக்கு நகையை போட்டுக்கலாம்னு பீரோவை பார்த்தப்ப தான் சித்தப்பா உண்மையை சொன்னாரு… அந்த ப்ரெண்டுக்கு போன் போட்டா நம்பர் நாட் இன் யூஸ்ன்னு வருது … அவன் வீட்டுக்கு போய் பார்த்தா அங்க அவன் இல்லே காலி பண்ணி போய்ட்டான்னு அக்கம்பக்கத்துல சொல்றாங்க …. சித்தப்பாவோட வண்டில ஏறாம சித்தி ஆட்டோ பிடிச்சு ஏறிட்டு இனிமே வீட்டு பக்கம் வராதேன்னு சித்தப்பா கிட்ட சொல்லிட்டு போய்ட்டாங்க …

ஆர்.ஆர். கிருஷ்ணா : அதனால மாமாவோட சித்தப்பாவும் உன் கிட்ட அடைக்கலமா வந்துட்டாரு … நெடுநெடுன்னு வளர்ந்து இருக்காரே இவுரு யாரு ?

சுபாஷிணி : இவரு ராஜா … எங்க அம்மாவோட அக்கா பிள்ளை … பெரியம்மா பிள்ளை அண்ணன் … ராஜாமணி

ஆர்.ஆர். கிருஷ்ணா : இவரையும் மனைவி ஒதுக்கிட்டாங்களா ?

சுபாஷிணி : அப்படித்தான் … அண்ணன் எக்மோர் ஸ்டேஷன்ல ஊர்ல கூட படிச்ச ப்ரெண்டை பார்த்திருக்கு … ஒரு நாள் தானே எங்க வீட்ல தங்குன்னு வீட்டுக்கு அழைச்சுகிட்டு வந்து இருக்கு .. அண்ணி கீதா வேண்டாம் வேற ஏதாவது லாட்ஜ்ல கொண்டு விட்டுட்டு வான்னு சொல்லிருக்கு இது கேட்கல மொட்டை மாடில இருக்கிற ரூம்ல அவனை தங்க வெச்சு இருக்கு …. அவன் ஹிஸ்டரி ஷீட்டர் போல … இவங்க ஏரியால இருக்கிற போலீஸ் இன்பார்மர் யாரோ பார்த்துட்டு போலீசுக்கு தகவல் சொல்லிட்டான் அன்னிக்கு காலைல கோலம் போட வாசற் கதவைத் திறந்த அண்ணி போலீஸ் காரங்க முகத்துல முழிச்சாங்க … .

ஆர்.ஆர். கிருஷ்ணா ; அப்புறம் போலீஸ் அவனை பிடிச்சுட்டு போனதும் ஒங்க அண்ணி இவரை வெளிய தள்ளி கதவை சாத்திட்டாங்க அதானே …. இவங்க மூணு பேருக்கும் நீதான் உணவு உடை ..

சுபாஷிணி : ஒண்டியா இருந்த எனக்கு இவங்க துணை … இவங்களால தொந்தரவு இல்ல வீட்டு வேலை எல்லாம் செய்யறாங்க என்னோட துணிய துவைக்கற வேலைய தவிர .. சமையலும் இவங்க தான் பண்றாங்க …. ஆனா…

ஆர்.ஆர். கிருஷ்ணா : உனக்கு பட்ஜெட்ல இடிக்குது அதானே … அதுக்கு என்னை கடத்தினா பணம் கிடைக்கும்னு ஐடியா கொடுத்தது யாரு … ?

சுபாஷிணி : இதோ இந்த முத்து மாமா தான் … நீங்க மீடியால மாச சம்பளத்துக்கு வேலை செய்யறவங்களா இருந்தாலும் ஒங்க கணவர் ராதா கிருஷ்ணா பிக் ஷாட்டோ பிள்ளையாமே … ஒங்க மாமனார் சந்திரன் பெரிய தொழிலதிபராமே …

ஆர்.ஆர். கிருஷ்ணா : சரியான ஆளும்மா நீ … என்னோட ஹேண்ட் பேக் மொபைல் எல்லாம் கொடு …. என்னை பத்தி இவங்க சொன்ன பர்சனல் டீடெய்ஸ் எல்லாம் சரிதான். ஆனா , என் கணவர் , அவங்க அப்பா சம்மதமில்லா என்னை கல்யாணம் பண்ணிகிட்டதால , அவங்க கம்பெனிலேந்து அவரை அனுப்பிட்டாங்க …. அவர் வேற கம்பெனில தான் வேலை செய்யறாரு … எனக்காக நீ சொன்ன தொழிலதிபர் , ஒரு ஆயிரம் ரூபா கூட கொடுக்க மாட்டாரு ….

இன்ட்டர் டிபண்டன்ஸ்தான் வாழ்க்கை …. இவங்களோட வாழ்க்கைத் துணைவிங்க இவங்கள வி்ட்டுட்டு காலம் முழுக்க இருந்துட முடியமா ? மன்னிச்சு ஏத்துப்பாங்க … மூணு பேரும் அவங்க அவங்க மனைவியோட போயிடுவாங்க அது தப்பு இல்ல .. ஆனா நீ தனிமரமா நிக்கணும் பெரியவங்களா மாமனா சித்தப்பாவா அண்ணனா இவங்க உனக்கு ஒரு நல்லது செஞ்சு வெச்சு இருக்கணும் நீ இருங்கன்னு சொன்னதுனால இங்கேயே காலத்தை ஓட்றாங்க ……. நீ இவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதே …. நீ உனக்குன்னு ஒரு துணையை தேடிக்கோ கணவன் சுமை இல்ல … அவன்தான் பெண்ணுக்கு வாழ்க்கையில் இறுதி வரை துணை …. அதனாலதான் வாழ்க்கைத் துணைன்னு சொன்னாங்க

சுபாஷிணி: நீங்க என்ன மேம் சொல்றீங்க …. மாமா சித்தப்பா … பெரியம்மா பிள்ளை இவங்கள அவங்க ஒய்ப் மாதிரி நான் விரட்டிட முடியுமா ? அந்த பெண்மணிகள் மன்னிப்பு கேட்கறது ஏத்துக்கறது எல்லாம் பழைய பிளாக் அண்ட் ஒயிட் சினிமால தான் நடக்கும் … இப்ப நடக்காது …

(பருமனான உடல்வாகு கொண்ட நடுத்தர வயது சேலை அணிந்த மூன்று பெண்மணிகள் மேடையின் வலப் பக்கத்திலிருந்து வருகிறார்கள் )

ஆர்.ஆர்.கிருஷ்ணா : (எழுந்து நிற்கிறாள். சுபாஷிணி , அவளுடைய கைப்பையையும் கைபேசியையும் அவளிடம் தருகிறாள்.)

ஆர்.ஆர். கிருஷ்ணா : நான் சொன்னேன் இல்ல …. வா அவங்க பேசிக்கட்டும்..

(கிருஷ்ணாவும் சுபாஷிணியும் மேடையின் இடப் பக்கம் நோக்கிச் செல்கிறார்கள்.)

(திரை)

(நிறைந்தது)

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *