டேவிட்டின் பெற்றோர்
கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 21, 2026
பார்வையிட்டோர்: 29

அலுவலகத்தில் தன் ஊழியர்களிடம் ஏதோ விளக்கி சொல்லிக் கொண்டிருந்த பீட்டர் அருகே வந்த அவனது பெண் உதவியாளர், காதருகே உங்களை பார்க்க இரண்டு பேரு வந்திருக்காங்க, ஆனா அவங்களை பார்த்தா எனக்கு சந்தேகமா இருக்கு, தன் அபிப்ராயத்தையும் சேர்த்து சொன்னாள்.
சந்தேகம்? அழுத்தி சொன்னபடி அவளை பார்த்தவன், அவள் மெல்ல தயங்கி பார்த்தா டீசண்டா இல்லை, நாஸ்டியா இருக்காங்க, ஆனா உங்க முதலாளிய பார்க்கணும் அப்படின்னு வாட்ச்மேன்கிட்ட சண்டை போட்டுகிட்டிருந்தாங்க.
அவர்தான் என் கிட்டே வந்து இந்த விஷயத்தை சொன்னார், நானும் அவங்களை பார்த்தேன், எனக்கும் அவங்களை பார்த்தா நல்லவங்களா தோணலை, இருந்தாலும் அவங்களை அனுப்பறதுக்கு முன்னாடி உங்க கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யலாமுன்னு.. சொல்லி முடிப்பதற்குள் அவளது லிப்ஸ்டிக் போட்ட உதடும், சிவந்த முகமும் வேர்த்து விட்டது.
டேவிட் பிரபலமான ஒரு நிறுவனத்தின் முதலாளி. அவனிடம் இந்தளவுக்கு அதிகமாக அவள் பேசியதில்லை. அவனும் தன் ஊழியர்களிடம் அதிகமாக பேச்சும் வைத்து கொள்வதில்லை. வியாபார, அலுவல் விஷயங்களை தவிர. மறைமுகமாக அவனை தலைக்கனம் பிடித்தவன், என்றும் அவர்களுக்குள் பேசிக்கொள்வதையும் உணர்ந்திருக்கிறான்.
ஓ.கே.. நீங்க கொஞ்சம் வெளிய இருங்க, தன் பணியாளர்களை அவரவர் இருப்பிடத்துக்கு அனுப்பி வைத்த டேவிட் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான்.
வாட்ச்மேன் இவனை பார்த்ததும் ஒரு சல்யூட் ஒன்றை வைத்து சற்று தொலைவில் இருந்த காம்பவுண்ட் கேட்டை காட்டினான்.
அங்கு பாமரத்தனத்துடன் ஆணும் பெண்ணுமாய் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவங்களை வரச்சொல்லுங்க, சொன்னவன் தன் அருகில் வந்து நின்ற பெண் உதவியாளரை நீங்க உள்ளே போங்க, நான் இப்படியே விசாரிச்சுக்கறேன். சாவகாசமாய் பார்வையாளர்களுக்காக போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான்.
அதற்குள் அவர்கள் இருவரையும் இவனருகே கூட்டி வந்த வாட்ச்மேனை நீங்க கேட்டுலயே இருங்க, நான் விசாரிச்சு அனுப்பிச்சுடறேன். வாட்ச்மேன் நம்பிக்கை இல்லாமல் அவர்களை திரும்பி திரும்பி பார்த்து சென்றான்.
இருவரும் அருகில் வந்தாலும் டேவிட்டின் தோரனை, அவனது உடைகள், அங்கிருந்த அலங்காரங்கள், இவைகளை பார்த்து பிரமித்து நின்றனர்.
க்கும்..கணைத்த டேவிட், தான் இருப்பதை ஞாபகப்படுத்த, திடுக்கிட்டு விழித்தது போல் இவர்கள், சுய நினைவுக்கு வந்தனர்.
அந்த பெண் அழுக்கானவளாய் இருந்தாள், மாநிறம், முகம் லட்சணமாய் இருந்தது, குளித்து பல நாள் கண்ட தலைமுடி. வறண்டு கிடந்தது.
தம்பி என்னை தெரியுதா? குரலில் நடுக்கம் கூட வந்த ஆணுக்கு ஐம்பது வயது இருக்கலாம், ஆனால் இவனை கொஞ்சம் அலட்சியப் படுத்துவது போல் நின்றிருந்தான்.
ஆச்சர்யமாய் விழிகளை உயர்த்தினான் டேவிட். ஒரு அழுக்கான பெண் அருகில் வந்து என்னை தெரிகிறதா? கேட்கிறாள்..!
நீங்க யாருன்னே தெரியலை, தலையசைக்க, உன்னோட பேரு சங்கோடந்தானே தம்பி.
சங்கோடனா.! யார் இவர்கள்? அப்படிப்பட்ட பேரை கேள்விப்பட்டது போல் இருக்கிறது, ஆனால் எங்கே? எப்பொழுது என்பது ஞாபகமில்லை.
முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க, எதுக்கு என்னை தேடி வந்திருக்கீங்க?
தம்பி நாங்கதான் உன்னை பெத்தவங்க, அவர்கள் சொன்ன செய்தி டேவிட்டுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
என்ன சொல்றீங்க? நீங்கதான் என்னை பெத்தவங்களா? சிரித்தான், யாரு சொல்லி இந்த டிராமா போட வந்திருக்கீங்க. ராபர்ட்டு உங்களை இப்படி சொல்ல அனுப்பிச்சானா?
ராபர்ட் இவனது தொழில் போட்டியாளன், அது மட்டுமல்ல, இவனது வளர்ச்சி பலரது கண்களை உறுத்துவது இவனுக்கு தெரியும். அதனால்தான் இந்த முப்பது வயதிலும் கட்டுப்பாடாய் இருக்கிறான்.
யாரு தம்பி ராபர்ட்டு? அந்த பெண் திருப்பி கேட்கவும் வியந்தான், ஏனெனில் அந்த கேள்வியில் அப்பாவித்தனம் நன்கு தெரிந்தது.
அதுவரை அமைதியாய் நின்றிருந்த ஆண், “தெம்மட்டி”, நான் சொல்லலை, தம்பி நம்மளை எல்லாம் மறந்திருக்கும்னு சொன்னேன், நீதான் கேக்கலை, சரி விடு நாம் இங்கிருந்து போலாம்
தெம்மட்டி நகரவில்லை, நீ சங்கோடந்தான், எனக்கு என் புள்ளைய தெரியாதா?
தர்மசங்கடப்பட்டான், டேவிட். இவர்கள் இன்னும் என்ன சொல்ல வந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் தன்னை பெற்றவர்கள் என்று சொல்கிறார்கள். நான் இவர்களுக்கு பிறந்தவனா? எப்படி நம்புவது.
இவர்களை இங்கிருந்து அனுப்பி வைக்கவும் மனசில்லை. சரி நீங்க எங்க தங்கியிருக்கீங்க?
அந்த ஆள் பக பகவென்று சிரித்தான். தங்கறதா? நாம எல்லாம் ஊர் ஊரா போய் வித்தை காட்டறவங்க. பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல டெண்ட் அடிச்சு தங்கியிருக்கோம்
வித்தை காட்டுபவர்களா? இவர்களா நம்மை பெற்றவர்கள் என்கிறார்கள்.
மெல்ல அலுவலகத்தின் உள்புறம் கண்களை செலுத்தினான். என்னதான் இருந்தாலும் மனிதர்கள்தானே..!
பணியாளர்களில் இரண்டு மூன்று பேர் கண்ணாடி வழியாக இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை ஒட்டு கேட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தான். அவனது
லிப்ஸ்டிக் பெண் உதவியாளர் முதலாவதாக நிற்பது அவளின் விரிந்த கூந்தலில் இருந்த ஒன்றிரண்டு செம்மை நிற முடிகள் வெளியே பறந்து அவள் கதவை ஒட்டி நிற்பதை காட்டி கொடுத்து கொண்டிருந்தன.
சரி இனி இவர்களை இங்கு விசாரிப்பது நல்லதல்ல, அதே நேரத்தில் அவர்கள் சொன்னது உண்மையா, பொய்யா என்று தெரியாமல் அவர்களை அனுப்பி வைப்பதும் நல்லதல்ல. அப்படி இவர்கள் சொல்வது பொய் எனும் பட்சத்தில் யார் இவர்களை அனுப்பி ஏற்பாடு செய்ய சொன்னது என்பதை எப்படி கண்டு பிடிப்பது?
கேட் அருகே நின்றிருந்த வாட்ச் மேனை கை காட்டி அழைத்தான், இவர்களையே உற்று பார்த்து கொண்டிருந்த வாட்ச்மேன் அங்கிருந்து ஓடி வந்தான்.
இவங்களை கூட்டிட்டு போய் நான் சொல்ற ஓட்டல்ல விடு, நான் அந்த ஓட்டல்ல பேசிக்கறேன், என் கார்லயே போ, டிரைவரை கூப்பிட்டுட்டு வா.
அவர்களை தனது காரிலேயே ஏற்றி அனுப்பி வைப்பதை உள்ளிருந்து பார்த்து கொண்டிருந்த பணியாளர்களுக்குள் “கச முச” என்று பேச்சு எழுவதை வெளியில் இருக்கும் இவன் காதுகளிலும் விழத்தான் செய்தது.
கண்ணாடி கதவை திறந்து உள்ளே வந்தான். அவரவர்கள் அமுக்கினியாய் தங்கள் இடத்திலிருந்து உட்கார்ந்து பணி செய்வது போல பாவனையுடன் உட்கார்ந்திருப்பதை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.
அடுத்தவன் விஷயத்தை எட்டி பார்த்து மகிழ்வது என்பது மனித குணத்தின் விட முடியாத குணம், தனது அறைக்கு சென்றவன் சட்டென தனது சொந்த செல்போனை உபயோகித்து அந்த ஓட்டலுக்கு போன் செய்து சில நிமிடங்கள் பேசிவிட்டு போனை அணைத்தான்.
அடுத்த நாற்பது நிமிடத்தில் அந்த ஓட்டலில் அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவை திறந்து உள்ளே சென்றவன் அதிர்ந்தான்.
அவர்கள் அந்த அறைக்குள் தரையில் அமர்ந்து கொண்டிருந்தனர்.
எந்திரிங்க, எந்திரிங்க, இப்படி உட்கார்ங்க, அவர்களை வற்புறுத்தி அழைத்தும் மேலேறி உட்கார மறுத்து விட்டனர்.
இவனுக்கு அவர்களை தரையில் உட்காரவைத்து விசாரிப்பது அவ்வளவு நல்லதாக தோன்றவில்லை, தானும் கால் சராயை சுருட்டி பிடித்து தரையில் உட்கார்ந்தான். அவன் உட்கார்ந்த லாவகமும், வேகத்தையும் கண் கொட்டாமல் பார்த்த தெம்மாட்டி தன் கண்களை விரித்து நீ சங்கோடந்தான், என் புள்ளைதான், மீண்டும் ஆணித்தரமாய் சொன்னாள்.
உட்கார்ந்த நிலையிலேயே நெளிந்தான் டேவிட், சரி நான் உங்க பையன்னு வச்சுக்குவோம், என்னைய எங்க தொலைச்சீங்க?
நாம எல்லாம் கூட்டம் கூட்டமாத்தான் ஒவ்வொரு ஊரா போய் பொழைப்பு நடத்துவோம், அப்படி சேலம் தாண்டி ஒரு ஊர்ல போய் தங்குனோம்.
நீ நடக்கற குழைந்தை, உன் அக்கா அஞ்சு வயசு பொண்ணு, அவ உன்னைய வச்சுகிட்டு நிறைய விளையாட்டு காண்பிச்சு, அதை பார்த்துகிட்டிருக்கறவங்க கிட்ட தட்டுல காசு வாங்கிட்டு வருவா. உங்கப்பா சைக்கிள் ஓட்டறது, ஓட ஓட அது மேல ஏறி குதிக்கறது, இன்னும் நிறை விளையாட்டெல்லாம் செய்வாரு.
நீ “தத்தக்க பித்தக்கா” ன்னு நடந்து போயி சுத்தி இருக்கறவங்க கிட்டே எல்லாம் தட்டுல காசு கேட்டு போவ, உன்னை பார்த்து நிறைய பேரு காசு போட்டுட்டு போவாங்க.
அன்னைக்கு அப்படித்தான், நீ தட்டை தூக்கிட்டு போயிட்டிருக்கறே, கொஞ்ச தூரமா போயிட்டே. திடீருன்னு போலீஸ் வந்து எங்களை யாரோ மந்திரி வாராங்கன்னு விரட்டுனாங்க.
நாங்க அவங்களுக்கு பயந்து கொஞ்ச தூரம் போன பின்னாலதான் நீ வரலை அப்படீங்கறது தெரிஞ்சு உன்னைய தேடி உங்கப்பாவும் நானும் அங்க போனோம். ஆனா உன்னைய கண்டே பிடிக்க முடியலை.
அது சரி இப்ப எப்படி என்னைய கண்டு பிடிச்சீங்க.
நேத்து முத நா நீயும் உன் சம்சாரமும் பிளாசா பக்கம் காரை நிறுத்தி இறங்கும் போது நாங்க ரோட்டுல வித்தை காண்பிச்சுட்டு நின்னுகிட்டிருந்தோம். நீயும் உன் சம்சாரமும் நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தீங்க நான் தட்டை தூக்கிட்டு உங்க கிட்ட வரும்போது நீங்க தட்டுல பத்து ரூபா போட்டுட்டு வேகமா உள்ளே சம்சாரத்தை கூட்டிட்டு நுழைஞ்சிட்டீங்க.
ஆனா நான் நீங்க தட்டுல போடறப்போ, உங்க சுண்டு விரல் வளைஞ்சிருந்ததை பார்த்தேன், அப்ப என் பையன் ஞாபகம் வந்துச்சிருச்சு, அப்புறம் நடந்து போகும் போதும் எனக்கு அவனே நடந்து போன மாதிரியும் இருந்துச்சு, அதனால நீங்க வெளிய வர்ற வரைக்கும் காத்து இருந்தோம். உங்களை தனியா பார்த்து இதை சொல்லனும்னு இரண்டு நாளா உங்க பின்னாடியே வந்து இன்னைக்கு இதோ கண்டு பிடிச்சோம்.
இவர்கள் சொல்வதை அமைதியாக கேட்டு கொண்டிருந்தான் டேவிட். பேச்சில பொய் சொல்வதாக தெரியவில்லை. தனக்கும் எதுவும் ஞாபகமில்லை. எனக்கு தெரிந்ததெல்லாம் “ஜோசப்” மட்டும்தான். அவர் திருமணம் செய்து கொள்ளாமல் “சர்ச்” ஒன்றில் ஊழியம் செய்து வந்து கொண்டிருந்தார். அவர் தான் இவ்வளவு நாளாக தன்னை வளர்த்து, அங்கிருந்த பாதிரியார்கள் உதவியுடன் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்ததும், பெரிய இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்து சமூகத்தில் முக்கியஸ்தனவனாக ஆக்கியதும்.
இப்பொழுது அவரும் இல்லை. பெண் கொடுத்த இடத்தில் இவர்கள்தான் என்னை பெற்று எடுத்தவர்கள் என்று எப்படி அறிமுகப்படுத்துவது?
இதற்காக மருத்துவ பரிசோதனை, அது இது என்று போவதற்கும் இவனுக்கு விருப்பமில்லை.
பத்து நிமிடம் அமைதியாய் உட்கார்ந்திருந்தவன் இன்று இவர்கள் இங்கு தங்கட்டும், நான் வீட்டிற்கு போய் இதை பற்றி யோசித்து அதன் பின் முடிவெடுக்கலாம்.
எழுந்தான், சரி நீங்க இரண்டு பேரும் இங்கேயே இருங்க, உங்களுக்கு சாப்பாடு, எல்லாம் இங்கயே கொண்டு வந்து தர சொல்றேன். நான் வீட்டுக்கு போய்ட்டு நாளைக்கு ஒரு ஏற்பாடு பண்ணிட்டு வந்து உங்களை கூப்பிட்டு போறேன். தயவு செய்து நீங்க எந்திரிச்சு இதா இந்த சோபாவுல உட்காருங்க. அவர்களை வற்புறுத்தி எழுப்பி உட்காரவைத்து விட்டு, ஹோட்டலின் முன் அறைக்கு வந்து மானேஜரிடம் அந்த அறையில் இருப்பவர்களை பத்திரமாய் பார்த்து கொள்ள சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்.
இரவு முழுவதும் ‘யோசனை’, ‘யோசனை’ என்ன செய்யலாம்? இந்த சமூகத்திற்கு தன்னை பெற்றவர்கள் இவர்கள்தான் என்று எப்படி அறிமுகப்படுத்துவது.
அப்படி அறிமுகப்படுத்தினால் தன் மனைவி இதை ஏற்று கொள்வாளா? இல்லை அவர்களின் மிகப்பெரிய பணக்கார குடும்பம்தான் ஏற்று கொள்ளுமா?
அப்படி ஏற்று கொண்டாலும் இவர்கள் இந்த சூழ்நிலையில் தங்கி வாழமுடியுமா?
காலை எந்த முடிவும் எடுக்க முடியாமல் அவர்களை பார்க்க ஹோட்டலுக்குள் புகுந்து அந்த அறையின் கதவை தட்டப்போனவன் கதவு திறந்தே இருப்பதை பார்த்து வியப்புடன் வேகமாய் திறந்து உள்ளே நுழைந்தான்.
யாருமே இல்லாமல் அமைதியாய் இருந்தது.
எங்கே போனார்கள்? சுற்று முற்றும் பார்த்து விட்டு மானேஜரின் அறைக்குள் சென்றான். மானேஜர் இன்னும் வரவில்லை என்று சொன்னார்கள், காத்திருந்தான்.
ஒரு மணி நேரத்தில் அங்கு வந்த மானேஜர், சாரி சார், இப்பத்தான் வந்தேன், எப்படி இருக்காங்க நீங்க சொல்லிட்டு போயிருந்தவங்க?
டேவிட்டிடமே மேனேஜர் கேட்கவும் என்ன சொல்றீங்க? அவங்களை காணோமுன்னுதான் உங்களை பார்க்கறதுக்கு இவ்வளவு நேரமா காத்திருக்கேன்.
நான் இராத்திரி பத்து மணி வரைக்கும் இருந்தேனே, அவங்களை பாத்துட்டுத்தான் வீட்டுக்கு போனேன். அதிர்ச்சியாய் சொன்ன மேனேஜர் அந்த அறைக்கு இன்சார்ஜாய் இருப்பவரை அழைத்து விசாரித்தார்.
சார் விடியற் காலையில அங்கதான் இருந்தாங்க சார், ஆனா அதுக்கப்புறம் எங்க போனாங்கன்னு தெரியலை.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அந்த ஹோட்டலில் காத்திருந்தான். அவர்களை காணவே இல்லை.
மனம் சோர்ந்து வெளியே வந்து காரை எடுத்து கிளம்பினான். கார் ஹோட்டலை விட்டு வெளியே போய்க்கொண்டிருந்ததை மறைவாக நின்று பார்த்து கொண்டிருந்த
தெம்பட்டி தன் கண்களை துடைத்துக்கொண்டு நீ சொல்றது சரிதான், நாம ஏன் அந்த பையனை சிரமப்படுத்தணும், அவன், அவன் வழியில போகட்டும், நாம நம்ம பிழைப்பை பாத்துகிட்டு போலாம், சரி வா, “நம்ம கூட்டம்” நம்மளை காணாம தேடிகிட்டிருப்பாங்க.
டேவிட் மனதளவில் அவர்கள் சத்தமில்லாமல் காணாமல் போனதற்கு நிம்மதியாக இருந்தாலும், எங்காவது இவன் செல்லும் வழியில் யாராவது வித்தை காட்டி கொண்டிருந்தால் காரை நிறுத்தி கையில் இருக்கும் பணத்தை அவர்கள் வைத்திருக்கும் தட்டில் போட்டு விட்டுத்தான் போகிறான்.
அவன் குடும்பமும், நண்பர்களும் அவனை ஆச்சர்யமாய் பார்த்தாலும்…!
![]() |
பிறந்த வருடம் 1966, “கோவை மருத்துவ மையம்” (KMCH) கோயமுத்தூர். துணை மருத்துவமான ‘செவிலியர்’ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். 1. இவரது சிறுகதை “நிலம் விற்பனைக்கு அல்ல” இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 2. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” இவரது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பது. இலக்கிய அங்கீகாரம் 3. “குவிகம்” இலக்கிய…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அதுவரை பொறுத்திரு!
மா.வீ.தியாகராசன்
September 21, 2026
புலம்பலால் வெளிவந்த உண்மை…
ராமன் செல்வராஜ்
September 21, 2026
நல்லதுக்கு காலமில்லை
இரா.கலைச்செல்வி
September 21, 2026
