மேனகை




(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விசாலமான ஹால் பூரா பாளம் பாளமாக வாழை யிலைகள் போட்டிருக்கின்றன. ஹாலின் தென் மூலையில் பெரிய பெரிய கங்காளங்கள். மேல் மூடிய தாம்பாளங்களை ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தால்.சாம்பாரில் மட்டும் எண்ணி ஒன்பது வகைகள் – ரஸமும் ஒன்பது; மிச்சம் புளிக் கூட்டு வகையறாக்கள். சாதம், இதர பதார்த்தங்கள் இல்லை. வாயில் ஊறிய எச்சில், ஒரு கங்காளத்துள் சொட்டிவிட்டது அவசரமாக மூடிவிட்டுச் சுற்றும்முற்றும் பார்த்தார். நல்ல வேளை, யாருமில்லை. வயிற்றில் கோட்டையடுப்பு வெட்டி, கொள்ளிக்கட்டைகளினின்று திடீர்திடீர் பசிக்கொழுந்துகள் கிளம்பின. விழிகள் திறந்துகொண்டன. கண்மேல் துணிக் கட்டின்கீழ். இது கனவா விழித்தபடியே இமையுள் தோற்றமா? நிச்சயம் பண்ணமுடியவில்லை.
“உங்களால் முடியாத காரியத்தை யார் ஏத்துக்கச் சொன்னது? யாருக்குப் புண்ணியம் தேடறேள்?”
அடுத்தாற்போல் இன்னொரு தோற்றம். செங்கல் சிவப்பில் பட்டுப்படுதா மடிகளுக்கிடையே தங்க ஜரிகைக் கட்டுகளினூடே மாறிக்கொண்டேயிருக்கும் பச்சை, வெள்ளை, ஊதா, ஒளி ஓட்டம்; இன்று பூரா பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
கெலிடாஸ்கோப் மாறிற்று.
வெள்ளிக் கவசமிட்ட இரு பாத கமலங்களின் மேலும் சிதறி, அடரச் சிந்திய அர்ச்சனைக் குங்குமம்
விழிகள் துளும்பின.
“ஏன் அழறேள்? உடம்பை என்ன பண்ணறது? வாயைத் திறந்து சொல்லுங்களேன்! சொன்னால்தானே தெரியும்! ஆனால் பேசமாட்டேள், மௌனவிரதம் வேறே!”
எதிர் நாயனம் பிள்ளையாண்டான் குரல்: சூடும்பத் தில் இருந்துகொண்டே, பழக்கப்படாத வயசில், உப்பில்லாப் பட்டினி மௌன வீரதம், இதெல்லாம் என்ன ஊர் மெச்சவா? இப்படியெல்லாம் பண்ணினால், பாதை வகுத்து விடுமா? ராஜாங்கம் நடத்திக்கொண்டே ரிஷிவேஷம்! ராஜரிஷி!”
அவன் தாயின் சிரிப்பு ‘அவுட் வெடித்தது.
“நீ சொல்றது வாஸ்தவந்தாண்டா? நவராத்திரி சமயம், இந்தப் பக்கம் இசைகேடா நாலு மாமிகள் வந்தால், உன் ஆத்துக்காரருக்கு என்ன உடம்பு என்று கேட்கும்படிதானே இருக்கு. பாரேன், வேஷத்தை! கண்ணுக்குக் கட்டு, காதில் பஞ்சு! தாடி வேறே…”
“அதெல்லாம் புலனடக்கம் அம்மா புலனடக்கம். மஹாத்மா காந்தி எப்பவும் தன்னெதிரே மூன்று குரங்குப் பொம்மைகள் வைத்திருந்தாராம் ‘நல்லதல்லது பார்க்க மாட்டோம். நல்லதல்லது பேசமாட்டோம், ‘நல்லது அல்லது கேட்கமாட்டோம், அப்பாவிடம் மூன்றும் ஒருமுக ஆவாஹனம்.”
“உத்தியோகம் பண்ணற மனுஷன் நாலுபேர் தன்னை வெறுங்கையோடு இல்லாமல், பண்டத்தோடு வந்து பார்க்கிற நாளில் மெனக்கெட்டு லீவைப் போட்டுவிட்டு வீட்டில் இதுமாதிரிக் கூத்தடிக்கிறது இவருக்குத்தான் பொருந்தும்.”
ஏற்கெனவே படும் அவஸ்தை போதாதென்று இந்தச் சித்திரவதை வேறே. பாம்புக்கு மணிக்கட்டைக் காட்டிச் சீண்டுவதுபோல, தினமும் ஒருவேளை. இந்தக் கூப்பாட் டைச் சடங்காக நடத்துகிறார்கள். இத்தனைக்கும் தான் தன் இருப்பிடம் மாடி அறையை விட்டு அத்தியாவசத்துக்குத் தவிர அசைவதில்லை. நல்லவேளை, கடைக்குட்டி கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கிறான். காலைக்கடன், குளியல்,சிறுநீர் உபாதை (இதற்கெல்லாம் தனித்தனி அடையாள சமிக்ஞைகள். அவனுடன் முன்னாலேயே ஏற்பாடு பண்ணிக்கொண் டாகிவிட்டது) – கையைப் பிடித்துக்கொண்டுபோய் கொண்டு வந்துவிடுகிறான். காலைக் காப்பியும் அனந்துதான் கொணர் கிறான். மாடியேறி வருவதற்குள் சூடு கொஞ்சம் ஆறித்தான் போகிறது. இருந்தாலும் குழந்தே கொண்டு வருகிகிறானே!
குழந்தைக்கு அடுத்த பிறந்த நாள் பதினான்கு.
பத்து மணி சுமாருக்கு மூணு சப்பாத்தி. கோமதி எதிரே டீப்பாயில் தட்டை ணங்கென்று வைக்கிறாள்.
“வாய்க்கும், கைக்கும் வழி தெரியுமோன்னோ? இல்லை, ஊட்டி விடணுமா? ஏன் இப்படி என்னை மாடிக்கு அலைக்கழித்துத் திணற அடிக்கிறதுலே உங்களுக்கு அலாதி சந்தோஷமோ?”
பிற்பகல் ஒரு கோப்பை டீ.
இரவு இரண்டு பச்சை வாழைப்பழம்.
இடையில், மதியம் ஒரு மணி சுமாருக்கு மூச்சிறைப்பி லிருந்தே அவள்தான் வருகிறாள் என்பது தெரிகிறது. பாவம் தான், உடல் பருத்துவிட்டது. ஆனால் அந்த உடல்வாகுக் காரர்கள் கொஞ்சம் உஷாராய்த்தானிருக்க வேண்டும். வாரத்துக்கு நாலுவேளை உருளைக்கிழங்கை வெட்டக் கூடாது. சர்க்கரைப் பண்டங்களின்மேல் ஆசை வைக்கக் கூடாது. பகல் தூக்கத்தை மட்டுப்படுத்த வேணும். ஆனால் நான் சொல்லி அவள் கேட்டு, அவள் சொல்வதை நான் கேட்டு அதெல்லாம் எப்பவோ மலையேறிப் போச்சு.
“இதோ பாருங்கோ, மொச்சைக் கொட்டை சுண்டல் உங்களுக்குப் பிடிச்ச மாதிரியே, உப்பு மினுக்க, மசாலா அரைச்சுத் தடவி சுண்டியிருக்கேன். வெங்காயம் போட்டால் அமர்க்களமாயிருக்கும். ஆனால் மாளைய பட்சத்திலிருந்தே. வெங்காயம் முருங்கைக்காய் இல்லாமல் வயிற்றில் அடிச்சாச்சு. அதுவும் இந்த சீஸனுக்கு முருங்கைக்காய்ப் பேயாத்தான் காய்க்கறது. மார்க்கெட்டில் போராய்த்தான் வெச்சு விக் கிறான். இதோ பாருங்க, சின்ன ப்ளேட்டில்தான் கொண்டு வந்திருக்கேன். குட்டி ஸ்பூன், இதுவும் அம்பாள் பிரஸாதம் தான், தோஷம் இல்லை. நான் யார்கிட்டே சொல்லப் போறேன்? எனக்காக — நானே வாயில் போட்டுமா?”
அடி நாக்குச் சுரப்பு தாளமுடியவில்லை. ‘போ! போ இங்கே விட்டுப் போய்விடு” என்கிற ஜாடையில் கைகளை உதறினார்.
“வேண்டாம்னா போயிடறேன். எனக்குத்தான் மனசு கேக்கல்லே. அதுக்காக அடிச்சுத் துரத்தணுமா, நாய் கெட்ட கேடா?”
துக்கம் தொண்டையை அடைக்கப் போகிறாள். இந்த நிமிஷத்தில் இறங்கு முன்னரே, எத்தனையோ புத்தியாகவும் எச்சரிக்கையாகவும் சொல்லியாச்சு. ஆனால் சுபாவத்தை மாற்ற முடியாது.
நெற்றி கொப்புளித்தது. சுருட்டி வைத்த படுக்கைமேல் சாய்ந்தார். நியாயமாகத் தலையணை, படுக்கையெல்லாம் கூடாது. அதுவும் பகல் வேளையில். ஆனால் முடியவில்லை. அம்பாளை அதற்கு மன்னிப்பும் அனுமதியும் ஏற்கனவே கேட்டாச்சு.
இதுசாக்கில் சந்தியாவந்தனம்; புஸ்தகத்தைப் பார்த்துத் தான். அதிலும் நிம்மதி கொஞ்சம் தெரியத்தான் செய்கிறது. ஆனால் 108 காயத்ரி முடிப்பதற்குள் இடுப்பு தெறித்து விடுகிறது. இயல்பாகவே இடுப்பொடிந்த மாடு. இந்த நாலு நாளிலேயே இத்தனை சோர்வு. அப்படி கொலைப்பட்டினி யும் இல்லை. இன்னும் ஆறு நாட்கள். ஆறு நாட்களா? அம்மா, நீதான் மானம் போகாமல் காப்பாத்தணும்.
இப்போ ஊரில் கோவிலில் நவராத்திரி அமர்க்களப்படும். கடைத்தெருவில் நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் அத்தனைபேரும், ஒன்பது நாளைக்கும் நீ, நான் என்று உபயத்துக்குப் போட்டி கோவிலுக்குப் பிள்ளையில்லா சொத்துக்கள் வேறே ஏராளமா எழுதி வெச்சிருக்கு. உதய பூஜையிலிருந்து அர்த்தஜாமம் வரை ஒருவேளைக்குப் பத்துப் பன்னிரண்டு ஸஹஸ்ரநாம அர்ச்சனை, ஏற்றபடி அபிஷேகம், அலங்காரம் நைவேத்தியம், ஊதா, பச்சை. மஞ்சள், சிவப்பு, வெண் புதுப் பட்டுப்புடவைகளில் கர்ப்பக் கிரஹத்தின் இருளிலிருந்து அம்பாள் பிதுங்குவாள், அந்த மூக்குத்தியும், மணிக்கிரீடமும், தாடகமும், திண்டு மாலை யும், இதோ கண்ணெதிரே நிற்கிறாள். அம்மா, மயிர்க்கூச் செறிகிறது. சிவராஜ குருக்கள் என்றாலே சிரத்தைக்கு மறு பெயர் அம்பாளுக்கு அவர் கட்டிவிடும் கொசுவத்துக்கும் பெண்கள் வெட்கணும்.
ஒரு சமயம், அலங்காரம் முடிந்து குருக்குள் தலை நிமிர்ந்த அந்தக் கணமே பக்கத்தில் உதவிக்கு நின்ற அவர் தம்பி, கையை மார்மேல் கட்டியவண்ணம், கணீரென்ற சாரீரத்தில் அபிராமி அந்தாதியை அடி எடுத்தவுடன், அந்த டுதிப்பு அப்படியே காலை வாரிவிட்டது இன் மறக்கவில்லை. பாத்திரத்தின் விளிம்பிலிருந்த ஈ தேனுள் விழுந்து தத்தளிக்கும் தவிப்பு.
அம்மா. உன்னை அந்த மாதிரி தரிசனம் காண, என்ன வட்டினியிருந்தாலும் தகும். இந்த உயிரே போய்விட்டால் தான் என்ன? போகிற வயசுதானே! இருந்து கண்டது என்ன? ஒன்று தெரிகிறது. எல்லாம் சமயத்தைப் பொறுத்தது. சமயந்தான் தெய்வம், சமயம்தான் தரிசனம். கண்மூடி கண் திறப்பதற்குள் அது நேர்ந்துவிடுகிறது. ஆனால் நேரத்துக்குப் பொட்டு வைக்கும் அந்த வேளை அதுமட்டும் நமக்குப் பங்கு கிடையாது. அதுமட்டும் அவளுக் குத்தான் சொந்தம். நேர்வதை நாம் பார்க்க முடியாது. ஆனால் நேர்ந்தபின் உணரலாம். கொடுப்பனை அதற்கும் இருந்தால்.
இருந்தாற்போலிருந்து அகில், மட்டிப்பால், கற்பூரம், சந்தனம், பவழமல்லி மணம் சூழ்ந்துகொண்டது. உள்ளங்கையை முகர்ந்துகொண்டார். தாழம்பூ கமகம…உடலிலிருந்தா? பயமாயிருந்தது
கண்ணுக்குக் கட்டுப் போட்டதால மட்டும் முழு இருள் கிட்டிவிடவில்லை. அற்ப சத்தங்களுக்கும் இமை திறந்து கொள்ளும் பழக்கத்தை கண்கட்டுக்குள் கட்டுப்படுத்தலாம்.
செவிக்குப் பஞ்சடைத்ததனால் மட்டும், கேட்காமல் இல்லே. வம்புப் பேச்சை ஓட்டுக் கேட்பதில் இருந்து அவ்வப் போது முடிந்தவரை செவியை மீட்டுக்கொள்ளலாம். அவ்வளவுதான். பிள்ளையாண்டான் ஏசிக் காட்டினாற் போல், இதெல்லாம் புலனடக்கம் ஆகிவிடுமா? என்னவோ இருளில், தடவித் தடவித் தேடுகிறோம், இருளையே தானோ? என்னால் முடிந்தது இவ்வளவுதான். ஜன்மங்கள் தான் இருக்கின்றனவே, இதற்குத்தானா இருக்கின்றன!
“கலியுகத்தில் முழுஆர்வத்துடன் மூணுநாள் தேடி னால் போதும். பகவான் தரிசனமாகக் காத்துக் கொண்டிருக் கிறார்” என்று பரமஹம்சர் உத்தரவாதம் சொல்கிறார்.
“நான் யார்?’ இந்தக் கேள்விக்குப் பதில் கிடைத்த வுடனே விடிவு கண்டுவிட்டாய் என்று ரமண பகவான் சொல்கிறார்.
அவர்கள் மஹான்கள். சாத்தியமாகாததை அவர்கள் செய்யச் சொல்லவில்லை. அவர்களால் செய்ய முடிந்ததை அவர்களுடைய எல்லையற்ற கிருபையால் அருள்கிறார்கள்.
ஆனால் புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்ட கதைதான். இதென்ன விளக்கு அணைந்ததும் 70 எம்.எம்.ஆ? லாட்டரி சீட்டா? ஏ மடையா, நீ உன் விமோசனத்தைத் தேடுகிறாய், ஞாபகமிருக்கட்டும்.
அரை மயக்கம். ஆள்மேலே வந்தது தெரியவில்லை நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டதுதான் தெரிந்தது.
“நான்தாம்பா. கங்கிராஜுலேஷன்ஸ். கிட்டிக்கிட்டி நாளைக்கு சரஸ்வதி பூஜையும் வந்தாச்சு. விஜயதசமி அன்றைக்கு, கிராண்ட்மௌத் ஓபனிங் டு ஸ்பீச் செர்மனி யாக்கும்! வாதமோ, வீம்போ நடந்தவரைக்கும் பெரிசுதான். கொஞ்சநேரம் உங்களோடு பேசணும். பேசத்தான் வந்திருக் கேன். சமயம்தான் தனியாக இதுவரை அமையவில்லை.
அப்பா, மனம்விட்டுப் பேச நீங்கள் சுயேச்சை கொடுத் திருக்கிறீர்கள். நீங்கள் கொஞ்சம் அட்வான்ஸ்ட் டைப்தான். அப்பா, நீங்கள் கொடுத்திருக்கும் சலுகையை நான் மீறியிருக் கலாம், மீறியிருக்கிறேன், எனக்கே தெரியும்.
ஆனால் ப்ராய்ட் சொல்றான், இல்லை சொல்றானாம். அது ப்ராய்டா? ஜங் ஆ, ஹேவ்லக் எல்லிஸ் ஆ? எனக்குத் தெரியாது. எல்லாம் பெயர்கள். ஆனால் இந்தப் பெயர்களைச் சொல்லிக்கொள்ளாவிட்டால் என்னைப் படித்தவனோடு சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். இப்படியெல்லாம் உங்களுக்குத் தோணறதே. இதெல்லாமும் செக்ஸ் தூண்டுதல் தானாம். விந்துவின் தத்தளிப்பு என்ன செய்து என்ன இன்ஸ்பிரிட், மேன் இஸ் ஏ டெரிபில் லோன்லி கரீச்சர், உமன் இஸ் நாட்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் அப்பா. நான் ஒரு சின்னத் தப்புக் காரியம் பண்ணிட்டேன். உங்கள் செக் ரூ 200-க்கு என் கணக்கில் கட்டிண்டிருக்கேன். இன்னிக்கு நாளைக்கு, மறுநாள் பாங்க் விடுமுறை. அதற்கு அடுத்த நான்தான் செக் க்ளியரிங்கில் வரும். வந்தால் உங்களை நிச்சயம் கான்டாக்ட் பண்ணுவாள்.
என்ன சொல்கிறான்? புரியவில்லையே!
“அப்பா, உங்கள் கையெழுத்தில் ‘டி’க்கு நீங்கள் கிராஸிங் கொடுப்பேள், டி இல் விழுந்து வளைந்து உங்கள் கையெழுத்தை அடியில் கிண்ணம் மாதிரி ஏந்தும் ஹைலி இண்டுவிஜ்வல் ஸ்டிரோக் அது. எனக்கு முழுக்க அமைய வில்லை அப்பா!”
மைகாட்! பிடரி விரைந்து கைகள் முஷ்டித்தன.
‘அப்பா, உங்களுக்கு எப்படியிருக்கும் என்று எனக்குப் புரியாமல் இல்லே. ஆனால் இந்த மாஸம் டிமாண்டு ஜாஸ்தி.’
இவன் சம்பாதிக்க ஆரம்பித்து ஆறு மாசம் ஆகிறது. சம்பளத்தில் கால்காசு இன்னும் கண்ணில் காட்டவில்லை அதற்குள் – ‘மைகாட்’
“நான் நேரிலே உங்களைக் கேட்டிருக்கலாம். ஆனால் எனக்கு ‘தில்’ இல்லை. நான் செய்வது சரியென்று சொல்ல வில்லை. ஆனால் நீங்கள் தான் கவர் பண்ணணும். மனுநீதி கண்ட சோழனின் மறுபிறவி நான் என்று ஏதேனும் ஏடா கோடம் பண்ணினேலோ, வந்தது உலை என் வேலைக்கு. கம்பிகூட எண்ணுவேனோ என்னவோ? அப்புறம் உங்கள் என்ன அந்தஸ்து என்ன ஆகிறது? நம் குடும்ப கௌரவம் ஆகிறது? எனக்கு வேறே வரன் வந்துண்டிருக்கு. சிந்தித்துப் பார்க்க வேண்டியவர் இனி நீங்கள்தான்.”
படபடவென்று சொல்லிக்கொண்டே கீழ் இறங்கிப் போய்விட்டான்.
மைகாட்! மைகாட்!
கீழே திமிலோகப்படுகிறது. இன்று கடைசி நாள். கோமதி மாமி சுண்டல் வழங்கு நாள். ஒரு பக்கம் காஸட்டில் லலிதா ஸஹஸ்ரநாமம் அலறுகிறது. பாடுகிறவர்கள் பாடிக் கொண்டிருக்கிறார்கள். பேசுகிறவர்கள் பேசிக்கொண்டிருக் கிறார்கள். நல்ல கூட்டம்தான் போலும்.
ஆனால் இந்த இரைச்சல் இன்று அவ்வளவாகத் தாக்க வில்லை. உடல் கட்டிலில் கிடக்க தான் தனியாக மிதப்பது போலிருந்தது. ஒரு சுகமான லேக குரு கிடைத்து, வழி காட்டினால் எவ்வளவு பாக்கியம்.
அடுத்த நவராத்திரி இங்கு இல்லை. முன்பின் தெரியா குக்கிராமத்தில் அறையெடுத்துக் கொண்டு ஒருவேளை சாப்பாட்டுக்கு யாரேனும் பாட்டியம்மாளிடம் ஏற்பாடு- இது ஏதோ ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒருகால், கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையென்று… ஒரு நல்ல காரியத்துக்கு அடையாளமே அதற்கேற்படும் தடங்கல்கள்தான்.
மாடியேறி வரும் பேச்சு சத்தம் கேட்கிறது! இவர்களுக்கு இங்கு என்ன வேலை? அலுப்பாயிருக்கிறது. விளக்கைப் போட்டதும், கண்கட்டுக்கடியில் இமைகளில் செந்திட்டு-
“இவள் என் ஸ்நேகிதி, நீங்கள் இதுமாதிரி உபவாஸம் இருக்கேன்னு சொன்னதும் உங்களைப் பார்க்க ஆவல் பட்டான். அவளைவிட அவள் நாட்டுப் பெண் இன்னும் ஆவல். அமெரிக்காவிலிருந்து வந்திருக்காள்.”
“ஹல்லோ!”
ஆள் நெருங்கி வரும் உணர்வு லேசாக ரோஜா ஸென்ட்.
“ஹௌடுயுடு? ஹௌடுயு ஃபீல்?”
“நீங்கள் சாப்பிடாமல் இருக்கிறதைக் கூட நான் அவ் வளவு பெரிசா நினைக்கல்லே. வி கேன் மானேஜ் வித் எனர்ஜி பில்ஸ் யு நோ. திஸ் மௌன விரத்…”
‘அட ராமா, ஒரு பாவத்தையும் அறியேனே என்னென்னவோ சொல்கிறாளே!’
“ஸோ, இந்த ஒன்பது நாளும். நாட் ஒன்வேர்ட்,நாட் ஒன் சௌண்ட்ஃபிரம் யுவர் லிப்ஸ்?”
எங்களுக்கு ஒரு பத்து நிமிஷம் பேசாட்டா பயமாயிருக் கும். ஸ்டிரோக் ஏதேனும் ஆச்சோன்னு.
எனிதிங்கேன் ஹேப்பன் யு நோ. யூ ஆர்கொய்ட் ஹேன் ஸம் யு நோ.
கோமதி கைகொட்டிச் சிரித்தாள்.
“அவருக்கு அறுபது நடக்கிறது. இன்னும் மூன்று மாதத்தில் ரிடையர் ஆகப்போகிறார்.”
“எங்களுக்கு அறுபது ஒரு வயசே இல்லை. அப்போது வாழ்க்கைக்கு ஒரு புது வேகம். எங்கள் கணிப்புகள்படி மாமா ஒரு ஹேன்ஸம்மேன் முகத்தில் அந்த போன் ஸ்ட்ரக்சர்”.
“வாஸந்தி நாம் போகலாம் வா, மாமாவை இன்னமும் டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்” இது அவள் மாமியார் போலும்.
“யெஸ்யெஸ், திஸ் ஈஸ் இண்டியா தட் ஈஸ் அமெரிக்கா”
“போயிட்டு வரோம் டேக் குட் கேர் ஆஃப் யு.ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்கோ.”
கீழே இறங்கிப் போகிறார்கள். கோமதிக்குப் பரம திருப்தி. என்னைக் குரங்காட்டி காட்டியாச்சு. கதவை சரி யாக மூடிக்கொண்டு போகமாட்டாள். மறதிக்கரசிவிளக்கை அணைத்ததே பெரிசு.
ஆனால் இப்போது கண்கட்டுக்குள் இமையுள் இருளில் மை கூடியிருக்கிறது. இது சுகம்தான். கர்ப்ப இருளைச் சிசு தான் அறியும். ஆனால் அது சொல்ல முடியுமோ? புத்ரவில் ஒரு அத்தியாயம் கர்ப்பத்துள் இருந்தே குழந்தை பேசுகிற மாதிரி குழந்தையாகவா பேசுகிறது? நூற்றுக் கிழவனாக பேசறது! கற்பனையைக் கண்டதாகக் கொள்ள முடியுமா? அப்படி அல்ல என்றும் சொல்ல முடியுமோ? ஜீவனின் வேட்கையே கர்ப்பத்துக்கு மீள்வதுதான். அந்த வேட்கை வேகத்தின் நாளடைவான விளைவுதான் சாவு என்று ஒரு கட்சி இந்த இருள். அந்த இருளில் ஒரு பங்கு மேலும் இருக்குமெனில் யமன், தர்மராஜன்தான்-
தலைமயிரை ஒரு அசுரப்பிடி இறுகப்பற்றி அப்படி இப்படி அசைய வொட்டாமல் தலையணையில் இருத்தியது. அந்த அதிர்ச்சி தெளியுமுன் கூச்சலுக்கு வழியில்லாமல் வாய் மேல் இரு அதரங்கள் பதிந்தன. மூச்சு திணறிற்று. எவ் வளவோ திமிற முயன்றும் வாயைக் கவ்வல் விடவில்லை. மேலும் மேலும் இறுகத் தழுவலில் மார்மேல் மார்பு அழுந் திற்று. எலும்பையே உருக்கிட உடலைத் திப்பியாக்கி உயிரையே உறிஞ்சும், உறிஞ்சிக்கொண்டிருக்கும், உறிஞ்சிக் கொண்டேயிருக்கும் –
ஸ்மரணையே தப்பிவிடும் நிலையில் ஆலிங்கனம் – சட் டென விட்டது! அறையினின்று ஓடி மாடியிறங்கும் திடுதிடு தாழ்ந்து அடங்கிய சிரிப்பு –
கண் கட்டைப் பிய்த்து எறிந்தார். இருள் தவிர வேறு தெரியவில்லை. யார்? என்ன? எங்கே? சூலம் மார்பில் விண்விண் உள்ளே ஏற்கனவே இற்றுப் பொய்க்கொண்டிருந்த ஏதோ ஒன்று பொட்டென அறுந்தது. கீழே இறங்கி ஓடினார்.
கூடத்து வெளிச்சம் கண்ணை மின்னலாகப் பறித்தது. கூட்டம் அவர்களிடையில் மறித்துத் தள்ளிக்கொண்டு நேரே சமையலறைக்கு ஓடினார்.
அங்கிருந்து அவர் வெளிப்பட்டபோது, அவர் கையில் உப்பு ஜாடி.
”என்னன்னா?” கூட்டத்தினின்று பிரிந்து கோமதி அவரை நோக்கி ஓடிவந்தாள். அவள் விழிகள் திகிலில் சுழன்றன.
“திருப்திதானே? திருப்திதானே?” அள்ளி அள்ளி வாயில் போட்டுக்கொண்டார்.
எல்லோரும் வாயைடைத்து நின்றனர்.
காதில் பஞ்சு. எண்ணெய் காணாத பரட்டை வரட்டு மயிர், தாடி மீசை. கழுத்தில் மாலை தொங்கிய அந்தக் கண் கட்டும் துணியும். இளைத்துப் போன அந்த உடல், பஞ்ச டைந்த கண்களில் தனி வெறி, பைத்யம் போல் –
அவரைப் பார்க்க பயமாயிருந்தது.
– நேசம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1989, வானதி பதிப்பகம், சென்னை.