மெசேஜ் – ஒரு பக்கக் கதை






ஒரு வாரமாக எதற்கெடுத்தாலும் முரண்டு பிடிக்கிறாள் சுகன்யா.
செல்போனை எடுத்து வைத்துக் கொண்டு டெக்ஸ்டிங் என்று மணிக் கணக்காக யார் யாருக்கோ மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கிறாள்.
தன் மனைவிதானா இவள்.சந்தேகமாக இருந்தது ராஜனுக்கு.
கலயாணமாகி வரும்போது எதுவும் தெரியாது அவளுக்கு. தன் ஆபீஸ் நண்பர்களின் மனைவிகள் போல அவளையும் மாடர்னாக மாற்றலாம் என்று பியூட்டி பார்லர். ஃபிட்னஸ் சென்டர் என்று அழைத்துப் போனதெல்லாம் கூட சிக்கல் தரவில்லை. செல் வாங்கிக் கொடுத்ததுதான் படுத்துகிறது.
யாருக்கு அனுப்புகிறாள். புரியாமல் செல்லைப் பிடுங்கினான். அவள் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது.
“எனக்கு நானே எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கறேங்க. அதான் டூயல்சிம் இருக்கில்ல. எனக்கு நானேதான் அனுப்பறேன்.’
“என்னடி சொல்ற?’
“பின்ன என்னங்க. எப்பவும் நீங்க ஆபீஸ் வேலை அது இதுன்னு பிஸி. என்னை மார்டனா மாத்தினா போதுமா. கல்யாணமானப்ப அன்பா, பரிவா பேசின மாதிரி இப்பவும் பேச உங்களுக்கு நேரமில்லை. நான் யார்கிட்ட போய் பேசுவேன்?’
“ஸாரிடா கன்னுக்குட்டி. நான்தான் மடையன்’ என்று மனைவியை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
– மே 6, 2011