முழுச் செவிடன்
கதையாசிரியர்: வீ.அய்யனார்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: August 9, 2026
பார்வையிட்டோர்: 51
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – ஆடு மேய்க்கிறவ ஒருத்த. அவ் காச் செகுடன். அந்த ஊர்ல, வண்ணான் ஒருத்த, அவ் அரச் செகுடன். அதே ஊர்ல, வெவசாயி ஒருத்த, அவ் முக்காச் செகுடன், அந்த ஊரு நாட்டமக்காரன், அவனுக்கு முழுசாக் காது கேக்காது. அவன முழுச் செகுடண்டு சொல்வாங்க. இந்த நாலு பேரும் ஒரே ஊர்ல இருக்காங்க.
இருக்கயில, இந்தக் காச் செகுடன், கொளத்ல ஆடுகள மேய விட்டுக்கிட்டிருக்கா. அப்ப, அரச் செகுடன், வண்ணான், அந்தக் கொளத்ல சீலதுணிகளத் தொவச்சுக்கிட்டிருக்கர். தொவச்சுக்கிட்டிருக்கயில, இந்த காச் செகுடன், ஆட்டுக்காரனுக்கு அகோர வகுத்துப்பசி, வண்ணாங்கிட்டப் போயி, அண்ணே! இந்த ஆடுகளப் பாத்துக்க, நா வீட்ல போயி, கஞ்சி குடிச்சிட்டு வந்திருரேண்டு சொன்னா. இவ் சொல்றது அவனுக்குக் கேக்கல. அவ், தலயத் தலய ஆட்டிக்கிட்டு தொவைக்கிறா. தலயத் தலய ஆட்டிக்கிட்டுத் தொவைக்கவும் சரிண்டு சொல்றாண்டு நெனச்சுக்கிட்டு, ஆட்டப் பாத்துக்கிருவாண்ட்டு, இவ், வீட்டுக்குப் போயிட்டா. யாரு? காச் செகுடன்.
போயிட்டு, பொழுதுசாய வந்தா. வந்து பாக்கயில, ஒரு ஆடு காலொடுஞ்சு கெடக்கு. கெடக்கவும், அந்த ஆட்டத் தூக்கிக்கிட்டு வண்ணாங்கிட்ட வந்தா. வந்து, நிய்யி, ஆட்டப் பாத்துக்கிறேண்டு சொன்னதுனாலதான நா வீட்டுக்குப் போனே. இப்ப, நியயி பாக்காம விட்டதுனாலதான இந்த ஆட்டுக்குக் காலு ஒடுஞ்சு போச்சுண்டு சொன்னா.
சொல்லவும், ஆட்டுக்கார் சொல்றது, வண்ணானுக்கு கேக்காம். அவ் என்னா சொல்றா. ஆட்டுக்கால நா ஓடிக்கல. காலைல வந்து, இந்தக் கொளத்துக்குள்ள குனுஞ்சு துணியடிச்சவ், இப்பத்தா நிமுந்து பாக்குறேண்டு சொல்றா.
ஆட்டப் பாத்துக்கிறேண்ட்டு ஏச்சதுமில்லாம, எதுத்துப் பேசுறயாண்டு நெனச்ச ஆட்டுக்காரன், வண்ணாங்கிட்ட சண்டக்குப் போறா. ஒருத்த பேசுறுது ஒருத்தனுக்குக் கேக்காம், ரெண்டுவேரும் ஏடாகூடாமாப் பேசி சண்டக்கி நிக்கிறாங்க. ஆட்டப் பாத்துக்கிறேண்டு சொன்னயில, நிய்யி சொல்லவுந்தான நா வீட்டுக்குப் போனே. நிய்யி தலய ஆட்டலண்டா நா போக மாட்டன்ல்ல – ண்டு ஆட்டுக்காரன் சொல்ல, ரெண்டுவேருக்கும் வாக்குவாதம் முத்திக் கை கலக்குற லெவலுக்கு வந்திட்டாங்க.
அப்ப, அங்கிட்டிருந்து கம்மாய்க்கு கீழ இருக்ற தோட்டக்கார், மாட்டுக்கு வைக்கலப் புடுங்கிக் கெட்டித் தலயில செமந்துகிட்டு, இவங்களுக்கு நேரா வாரா.
வரவும், அண்ணே! இந்த நாயத்தப் பாருண்ணே! நா, வீட்டுக்குப் போயிட்டு வாரே, நா வர வரயில, இந்த ஆடுகளப் பாத்துக்ற யாண்டு கேட்டே. இவரு சரிண்டு தலயாட்டுனாரு. நா வீட்டுக்குப் போயிட்டு வந்து பாக்கயில, ஒரு ஆடு காலொடுஞ்சு கெடக்கு. இதப் பாத்தயாண்டு கேட்டே. கேட்டதுக்கு, இவரு சண்டக்கி வராருண்டு, ஆட்டுக்காரஞ் சொன்னா.
அதுக்கு வண்ணா! இந்த ஆளயும் பாக்கல! இவரு ஆட்டயும் பாக்கல! ஆசுவாண்டு, சீல துணிகள தாவச்சுக்கிட்டிருந்தவன, ஏண்டா ஏ. ஆட்டக் காலொடுச்சேண்டு, சண்டக்கி வாராருண்டு வண்ணான் சொன்னா. இவங்க சொல்றத கேட்டத் தோட்டக்கார், இவங்க நம்மள ஏதோக் குத்தஞ் சொல்றாங்ண்டு நெனச்சு, தோட்டத்ல. எம்மாட்டுக்கு வக்யப்புல்லப் புடுங்கிக் கெட்டித் தூக்கிட்டு வந்தா, ஒங்களுக்கென்னாடாண்டு அவ சத்தம் போடுறா. ஏண்டா! அவ் முக்காச் செகுடன்.
இவங்க மூணு பேரும், ஒருத்தனுக்கொருத்த மொரண்டாப் பேசுறாங்க. பேசிக்கிட்டே நாட்டாமக்காரு வீட்டுக்குப் போறாங்க.
அப்ப, ஆட்டுக்காரன் நாயத்த ஆட்டுக்காரன் சொன்னா. வண்ணான், அவ் நாயத்த, அவ் சொன்னா. தோட்டக்கார வெவசாயி, அவ் நாயத்த, அவ் சொன்னா.
ஆட்டுக்கார், ஆடு காலொடிஞ்சு போச்சுண்டு பொதுவாச் சொன்னா. வண்ணான், நம்மளத்தா காலொடுச்சாண்டு சொல்றாண்டு நெனச்சு, நா ஒடிக்கல, எனக்குத் தெரியாதுண்டு சொன்னா. தோட்டக்காரன், எந்தோட்டத்ல, எம் மாட்டுக்கு வக்யப் புல்லக் கட்டிட்டு வந்தா, இவங்களக்கென்னா, என்னய வழிய மறிச்சு, சண்ட புடிக்கிறாங்கண்டு, தோட்டாக்காரன் சொன்னா.
நாட்டாமக்காரன் முழுச் செகுடன். இவங்க சொல்றத என்னாண்டு தெரிஞ்சுக்கிறாம, எம் பொண்டாட்டிய அடிச்சா ஒங்களுக்கென்னாடா? எங்கூடச் சண்ட புடிச்சா, அடிக்காம என்னா செய்வாங்களாம்? இவங்கள்லாம் பஞ்சாயத்துக்கு வந்துட்டாங்க. போங்கடாண்டு, சவுக்க எடுத்து, ஆளுக்கு ரெண்டு போடு போட்டா. தொடச்சுக்கிட்டு ஓடுனாங்களாம்.
அதுனாலதான் தம்பி, காது செகுடானவங்ககிட்ட, கொஞ்சம் நிதானமாப் பேசணும்ண்டு ஊரு ஒலகத்ல சொல்வாங்க.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நகைசுவைக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசா பல்கலைக் கழகம், மதுரை.
தொடர்புள்ள சிறுகதைகள்
லார்ட் பெட்லிங்டனும் அப்புசாமியும்
ஜ.ரா.சுந்தரேசன்
August 19, 2026
வக்கணை
வீ.அய்யனார்
August 9, 2026
பங்கு – பாகம்
வீ.அய்யனார்
August 9, 2026