லார்ட் பெட்லிங்டனும் அப்புசாமியும்
கதையாசிரியர்: ஜ.ரா.சுந்தரேசன்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: August 19, 2026
பார்வையிட்டோர்: 191
(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வருடா வருடம் நடைபெறும் ‘நாய்க் கண்காட்சியில் சில பா.மு. கழக அங்கத்தினர்கள் தங்கள் நாய்களுடன் கம்பீரமாகப் பங்கெடுத்துக் கொள்வதுண்டு. ஆனால் ஒரு தரம்கூடப் பரிசு வந்ததில்லை. கென்னல் கிளப் காரியதரிசி சில தினங்களுக்கு முன், சீதாப்பாட்டியைச் சுருக்கென்று ஒரு கேள்வி கேட்டுவிட்டார் “என்ன, உங்கள் கழக மெம்பர்கள் வளர்க்கும் நாய்களுக்கு ஒரு தடவைகூட பரிசே வந்ததில்லையே?” என்று.
சீதாப்பாட்டிக்கு ரோஷம் வந்துவிட்டது.
டெரியரா, அஃப்கான் ஹௌண்டா, பூடிலா டல் மேஷனா, டாஷண்டா, ஸ்காட்டியா, பீக்கினீஸா, எதை வளர்க்கலாம் என்று நீண்ட நாள் யோசனையிலிருந்து விட்டுக் கடைசியில் ‘பெட்லிங்டன்’ என்று பிரிட்டிஷ் ரகத்தைச் சேர்ந்த ஒரு நாயைத் தேடிப் பிடித்தாள். பிரிட்டிஷ் கான்ஸல் ஆபீஸில் அதிகாரி ஒருத்தரின் மனைவியைக் காக்கா பிடித்து, மேற்படி பெட்லிங்டனை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டாள். அதற்கு, வந்த தினத்திலிருந்து ராஜ உபசாரம்தான்.
அப்புசாமிக்கு அதைக் கண்டாலே அடிவயிற்றி லிருந்து ஆத்திரம் பற்றிக்கொண்டு வரும்.
“முகரையைப் பார் உம்மணா மூஞ்சி மாதிரி.” என்பார்.
சீதாப்பாட்டி அதைக் கொஞ்சியவாறு, “நோட் ஹிஸ் ரோமன் நோஸ்! என்னமாக இருக்கிறது பார்த்தீர்களா!” என்று வியப்பாள்.
பா.மு.கழகத்திக்குக் கூட்டிப் போனால், அங்கிருக்கிறவர்கள் அதை ஏதாவது தட்டித் தடவிக்கொடுத்து உபத்திரவப் படுத்தப் போகிறார்கள் என்று சீதாப்பாட்டி அதை வீட்டிலேயே விட்டுச் செல்லுவாள்.
பெட்லிங்டனுக்கு சீதாப்பாட்டி அதன் இனப் பெயரையே வைத்து ‘லார்ட் பெட்லிங்டன்’ என்று பெயர் சூட்டியிருந்தாள்.
லார்ட் பெட்லிங்டன் அசல் லார்ட் மாதிரியே நடந்து கொள்ளும். அப்புசாமியைச் சாதாரணமாக அது பார்த்தால் கூட, அவருக்கு அது தன்னை மிகவும் இளக்காரமாகப் பார்ப்பது போலிருந்தது. அதனால் சீதாப்பாட்டி இல்லாத வேளைகளில் அதைத் தன் மனத்துக்குத் திருப்தியாகத் திட்டித் தீர்த்து, ஆத்திரத்தைத் தணித்துக் கொள்வார்.
அன்றைய தினமும் அவ்வாறே, “சீ நாயே! எழுந்திரு! என் துண்டுமேலே வந்து படுத்துக்கொண்டு!” என்று அதைக் காதைப் பிடித்துத் தூக்கி, ஒரு புறம் தள்ளி விட்டு, சோபா மேலிருந்த துண்டை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குக் குளிக்கச் சென்றார்.
பாத்ரூம் என்னவோ புது தினுசான வாசனையுடன் கமகமத்துக் கொண்டிருந்தது. அவரது நாசியை நெருடியது. அடுத்த கணம் கண்களை ஓடவிட்டார் வட்டமான பெரிய சோப் அலமாரியில் காட்சி தந்தது; எடுத்து முகர்ந்து பார்த்தார்.
பிரமாதமான வாசனை. “கிழவிக்கு மட்டும் எப்படியோ இத்தனை வாசனையாகச் சோப்பு கிடைத்து விடுகிறதே?” என்று புழுங்கியவராகத் தானும் அதை ஆனந்தமாகத் தேய்த்துத் தேய்த்து ஆசை தீரக் குளித்தார்.
வெய்யில் காலமாதலால், அரைமணி ஆனந்தமாக ஷவரில் குளித்தார். பிறகு, தன் உடம்பில் வாசனை இருக்கிறதா என்று தானே முகர்ந்து பார்த்துக்கொண்டு உள்ளிருந்து வெளியில் வந்தார்.
சீதாப்பாட்டி அப்போதுதான் கழகத்திலிருந்து காரில் வந்து இறங்கினாள்.
வாசற்படி ஏறி உள்ளே வரும்போதே “பெட்லீ!” என்று கூப்பிட்டுக்கொண்டு வந்த சீதாப்பாட்டி, உள்ளிருந்து வந்த வாசனையைப் பார்த்ததும் திடுக்கிட்டாள்.
அப்புசாமி ஈரக் கொக்கு மாதிரி இடுப்புத் துண்டுடன் சீதாப்பாட்டியின் அருகில் வந்து, “சீதே! சோப்பு பிரமாதம்! அரைக் கட்டி தீர்த்துட்டேன்! அட! அட! என்ன வாசனை, என்ன வாசனை.. வெளிநாட்டுச் சோப்போ… ஐயா இனிமேல் குளித்தால், அந்தச் சோப்புப் போட்டுத்தான் குளிப்பேன்… இப்போதே சொல்லிட்டேன்” என்றார்.
அப்புசாமி செய்த கிட்னி தானம் “வாட் ஆர் யூ டாக்கிங்? எந்தச் சோப்பைப் போட்டுக் குளித்தீர்கள்?” என்றாள் சீதாப்பாட்டி புருவத்தை நெறித்தவாறு.
“ஹி ஹி! நீ மறைத்து வைத்திருந்தால், நான் கண்டு பிடிக்க மாட்டேன் என்ற நினைப்பா? பாத்ரூமில் அலமாரியில் உள்ளே தள்ளி வைத்திருந்தாயே, வட்டமான சோப்பு? அதுதான்!”
“என்ன அக்கிரமம்!” என்று சீதாப்பாட்டி வீரிட்டாள். “அந்தச் சோப்பை உங்களை யார் எடுக்கச் சொன்னது?”
“ஏன் எடுத்தால் என்னவாம்? நீ மட்டும் வாசனையாக இருந்தால் போதுமா?”
“நான்ஸென்ஸ்!” என்று சீறினாள் சீதாப்பாட்டி “அந்தச் சோப்பு பெட்லியுடையதாக்கும்!”
“என்னது! அது நாய் சோப்பா?” என்று அப்புசாமி திடுக்கிட்டுப் போனவர். அருவருப்பாக முகத்தைச் சுளித்தார். “அய்யய்யே! நாய்ச் சோப்பைப் போட்டா நான் குளித்துவிட்டு வந்து விட்டேன்! அட, கண்ணராவியே! அதுக்கு என்ன என்ன சொறி சிரங்கு இருந்ததோ?”
“ஸ்டுப்பிட்” என்று சீதாப்பாட்டி சீறினாள். “உங்கள் ஸ்டிங்கிக் உடம்பிலேயிருக்கிற இன்ஃபக்ஷனெல்லாம் பெட்லீக்குப் பிடித்துக் கொண்டுவிடப் போகிறதே என்று நான் இப்போ வொரி பண்ணிக் கொள்கிறேன். அந்த ஸோப் ஸ்பெஷலாக பெட்லீக்கு என்று தருவித்தது. மார்க்கெட்டிலே அந்த ப்ராடக்ட் இப்போ கிடைக்கவும் கிடைக்காது. நீங்க யூஸ் பண்ணினதை அதற்கு யூஸ் பண்ணவும் முடியாது.”
சீதாப்பாட்டி கையை டெட்டால் போட்டுக் கழுவிக் கொண்டு மூக்கைச் சுற்றி ஒரு நாப்கினைக் கட்டிக் கொண்டு பாத்ரூமுக்குள் சென்று அசிங்கமான பொருளை எடுத்து வருவதைப்போல, அந்தச் சோப்புப் பெட்டியின் விளிம்பை ஒரு விரலால் பிடித்துத் தூக்கிவந்து, ஜன்னல் வழியே வீசி எறிந்தாள்.
அப்புசாமிக்கு ரத்தம் கொதித்தது. அவரையே தூக்கி ஜன்னல் வழியாக எறிந்த மாதிரி இருந்தது. அவர் உபயோகப்படுத்தக் கூடாதாம். கையால் தொடக் கூடாதாம்! நாய்க்கு வியாதி வந்து விடுமாம்.
“சீய்தே!” என்று உறுமினார். சோபாவில் படுத்திருந்த லார்ட் பெட்லிங்டன் அப்புசாமியைப் பார்த்து லேசாகச் சிரித்தது.
“டேய்! உன் மூக்கையும், உன் எஜமானி மூக்கையும் ஒன்றாய்ப் பேர்க்கிறேன் இருடா!” என்று அப்புசாமி கறுவிக் கொண்டார்.
நாட்கள் இரண்டு மூன்று சென்றன. அப்புசாமி ஜன்னல் வழியே தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தார். பொழுது போகாத வேளைகளில் தெருவில் போகும் கார் களை எண்ணுவது வழக்கம். ஒரு மணி நேரத்தில் எத்தனை கார்கள் வலது பக்கமிருந்து இடது பக்கம் போனது. எவ்வளவு கார் இடமிருந்து வலம்போனது என்று கணக்குப் போட்டுக்கொண்டிருப்பார்.
தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தவரின் கண்கள் திடுமென்று பிரகாசமாயின.
கார்களும் சைக்கிள்களும் மும்முரமாகச் செல்லும் தெருவை ஓர் அழுக்குப் பிடித்த சொறிநாய் – மூன்றாம் கால் சற்று ஊனம் – கெந்திக் கெந்தி நடந்தவாறு கடப் பதற்கு முயற்சிசெய்து கொண்டிருந்தது, நெடுநேரமாக.
அப்புசாமி அந்த அழுக்கு நாயை ஒரு கணம் பார்த்தார். மறுகணம் சோபாவில் ஒய்யாரமாகப் படுத்திருக்கும் பெட்லிங்டனைப் பார்த்தார். அவர் கண்களில் ஒரு சும்யூனிஸ ஒளி அடுத்த கணம் சுடர்விட்டது.
இதுவும் நாய்! அதுவும் நாய்
இதற்கும் நாலு கால் ஒரு வால். அதற்கும் நாலு கால் – ஒரு வால்
இதுமட்டும் ஏன் சோப்பும் சோபாவும் சோடச் உபசாரங்களுமாக இருக்கவேண்டும்?
அதுமட்டும் ஏன் அழுக்கைச் சுமந்துகொண்டு, மூன்றே முக்கால் காலில் கத்திரி வெய்யிலில் காதை மடித்துக் கொண்டு ஓடவேண்டும்.
மார்க்கிய நோக்குடன் சோபாவை மீண்டுமொரு தரம் பார்த்தார் அப்புசாமி.
“எங்கெங்கே தர்மங்கள் மேடும் பள்ளமுமாக இருக்கின்றனவோ, அங்கெல்லாம் சமதர்மத்தை நிலைநாட்ட நான் வருகிறேன்,” என்று அசரீரி முழங்க வில்லை. அப்புசாமியின் மனச்சாட்சி முழுங்கியது.
வாசல் கதவைத் திறந்துகொண்டு விரைந்தார். அழுக்கு நாயை நோக்கி.
அந்தக் குக்கலுக்கு யார் தன்னை நெருங்கினாலும் வெறுங்கையுடன் நெருங்கமாட்டார்கள் என்பது அனுபவம். ஆகவே அப்புசாமி நெருங்கியதும் ஏதோ ஆபத்து என்று த்ரீ பாயிண்ட் செவன்ஃபைவ் நாய் பவரில் ஓடப் பார்த்தது.
அப்புசாமி நாய் பிடிப்பவனின் திறமையோடு ‘லபக்’ என்று அதை அள்ளி எடுத்துக்கொண்டார்.
“நண்பன்தான், விரோதியல்ல,” என்பதைக் காட்டும் பொருட்டு, நாலைந்து தடவை நாயின் தலையை அழுந்த அழுந்தத் தடவித் தட்டிக் கொடுத்தார். சுமார் ஐம்பது கிராம ரோமங்கள் தலையிலிருந்து உதிர்ந்தன!
“அச்சோ பாவம்! எவ்வளவு அழுக்கு!” என்று கூறிக் கொண்டவருக்குப் பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது.
ஏன் ஜம்மென்று அதைக் குளிப்பாட்டக் கூடாது? இவ்வளவு நேரம் சும்மா சோபாவில் படுத்திருந்த லார்ட் பெட்லிங்டன், இப்போது லேசாக ஓர் உறுமல் உறுமியது.
‘அட சீ! கழுதை! இந்த வீட்டிலே உனக்கு மட்டும் தான் உரிமை என்று நினைத்தாயோ?” என்று வள்ளென்று அதன்மேல் விழுந்துவிட்டு, தன்னுடைய திடீர்த் தத்துப் புதல்வனைக் கையில் எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குச் சென்றார்.
பெட்லிங்டனுடைய சோப்பைத்தான் பாட்டி தூக்கி எறிந்துவிட்டாளே?
அப்புசாமி சிரித்துக் கொண்டார். குரூரமான புன்னகை ‘ஏ கிழவி! நான் உபயோகித்த சோப்பை நாய்க்குப் போடமாட்டேன் என்று விசிறி அடித்தா யல்லவா? இப்போது பார் மகளே பார்.. இந்த அழுக்குப் பிடித்த தெரு நாயை நீ தேய்த்துக்கொள்ளும் சோப்பால் குளிப்பாட்டப் போகிறேன்”
சீதாப்பாட்டியின் சோப்புப் பெட்டியை அப்புசாமி திறந்தார். எடுத்தார் சோப்பை,
கையிலிருந்த அழுக்கு நாயின் மீது தண்ணீரைத் தெளித்தார். பாட்டி தன் தலையைச் சுத்தம் செய்ய வைத்திருந்த பிரத்தியேக பிளாஸ்டிக் பிரஷ்ஷை எடுத்துக் கொண்டார்.
நாயைத் தேய் தேயென்று ஆசை தீர நுரைபொங்கக் குளிப்பாட்டினார்.
மேற்படி தெருநாய் பிறந்தது முதல் வெய்யிலிலேயே சுற்றி வந்ததாகையால், தண்ணீர் ஜில்லென்று பட்டதுமே மிகவும் பயந்துவிட்டது.
அப்புசாமி நாயைக் குளிப்பாட்டியது போதாதென்று, ஜலதோஷம் பிடித்துக்கொள்ளப் போகிறதென்று. கொஞ்சம் சாம்பிராணிப் புகையும் போட்டார்.
அங்கேதான் அவர் மாபெரும் தவறு செய்து விட்டார்.
சாம்பிராணிப் புகையின் நெடி தாங்காமல் நாய் மூச்சுத்திணறி விட்டது. தன்னை ஏதோ புகைபோட்டு ஆசாமி கொல்லப் பார்க்கிறான் என்று அதனுடைய உள்ளத்தில் தோன்றிவிட்டது.
தன்னுடைய மூன்றே முக்கால் கால்களை ஏசு காலத்தில் உதைத்து, நாலுதரம் புரண்டு அவர் கையை லபக் கென்று பலமாக ஒரு கடி கடித்துவிட்டது. பின் ஜன்னல் வழியே குதித்து. ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது.
அப்புசாமி ரத்தம் சொட்டிய கையைப் பிடித்துக் கொண்டார். “அட நன்றிகெட்ட ஜன்மமே! புழுதியில் கிடந்த உன்னைக் கொண்டுவந்து, மணக்க மணக்கக் குளிப்பாட்டியதற்கு இந்த மாதிரியா கைம்மாறு பண்ணி விட்டாய்?” என்று எரிச்சலுடன் நாய் போன திசையைப் பார்த்துக் குமுறினார்.
அதற்குள். நாய் கடித்த இடத்திலிருந்து ஒரு சொட்டு ரத்தம் வடிந்து அவர் காலில் விழுந்தது.
‘ஐயோ! ரத்தம்!’ என்று ரத்தத்தைத் தொட்டுப் பார்த்தவர், அவசர அவசரமாக ஒரு துணியைக் கிழித்துக் சுட்டுப் போட்டுக் கொண்டார்.
பா. மு. கழகத்திலிந்து வந்த சீதாப்பாட்டி அப்பு சாமியின் கையிலிருந்த கட்டைப் பார்த்து, “வாட் இஸ் தட் பாண்டேஜ் ஏதாவது ஜேம்ஸ் பாண்ட் அட்வென்சர் பண்ணினீர்களாக்கும்?” என்று கேட்டாள்.
கட்டுவிஷயமாக உளறினால் நாயைக் குளிப்பாட்டினது தெரிந்துவிடுமே என்று, “ஒன்றுமில்லை… சும்மா ஒரு கட்டி…வேனல் கட்டி…” என்று மழுப்பி விட்டார்.
கையைப் பற்றி அப்புசாமி இரண்டு நாள் அசட்டை யாக இருந்துவிட்டார். மூன்றாம் நாள் கை கொஞ்சம் வீங்கின மாதிரி இருக்கவும் ரசகுண்டுவின் வீட்டுக்கு அவனிடம் ஏதாவது களிம்பு கிளிம்பு இருந்தால் போட்டுக் கொள்வதற்காகப் புறப்பட்டார். நாய் கடித்தது என்ற விஷயம் கேட்டதுமே ரசகுண்டு பதறிப் போய்விட்டான்.
“என்ன தாத்தா? இவ்வளவு சாவகாசமாக இருக்கிறீங்களே? எப்போ கடித்தது? ஏன் கடித்தது? நாயைப் பிடித்து வைத்திருக்கிறீர்களா?” என்று படபடவென்று அடுக்கினான்.
அப்புசாமி அவனைச் சமாதானப்படுத்தி, “ஏண்டா பதறுகிறே? ஒரு நாய் கடித்தது என்றால் இவ்வளவு பதட்டமா?” என்றார்.
“தாத்தா! நாய்க்கடியைப் பற்றித் தெரியாதா உங்களுக்கு? வெறிநாய் கடின்னா உசிருக்கே ஆபத் தாச்சே… ஐயோ தாத்தா.. இவ்வளவு பெரிய ஆபத்தைக் கையிலே வைத்துக் கொண்டு, சிரிச்ச முகத்தோடு வந்து சாவகாசமாக மருந்து கேட்கிறீர்களே..” என்று பெரிதாகப் புலம்பினான்.
“நான் என்னடா செத்தாபோய்விட்டேன்? ஏண்டா அழறே?” என்றார். அவருக்கும் தொண்டை சுமறியது.
“ஐயோ தாத்தா! நாய் கடித்தது என்றால் சும்மா இல்லை தாத்தா சும்மா இல்லை. அதை உடனே கட்டிப்போட்டு வைத்திருக்கணும். பத்து நாளில் நாய் செத்துப்போயிற்று என்றால் உங்கள் உயிருக்கே ஆபத்து…. இதெல்லாம் ஒண்ணுமே உங்களுக்குத் தெரியாதா. சீதாப் பாட்டி ஆயிரம் விஷயம் தெரிந்தவள். அவள்கூட ஒன்றும் சொல்லவில்லையா?” என்றான்.
அப்புசாமி கலங்கிப் போனார்.
“கடிச்சிட்டுப் போன நாய் செத்தால் நானும் சாகணுமா?” என்றார்.
“ஆமாம் தாத்தா! பத்து நாளிலே அது செத்தது என்றால். நீங்களும் க்ளோஸ் என்று அர்த்தம் அதுவும் சும்மா சாகமாட்டீர்கள். வள் வள் என்று நாய் மாதிரியே குரைத்துக்கொண்டு செத்துப் போவீர்கள். நாய் மாதிரியே வாயில் ஜொள்ளு ஊறும் நாய் மாதிரியே கடிப்பீர்கள்.
கேட்கக் கேட்க அப்புசாமிக்கு அப்போதே ‘வள் வள் வள்’ என்று குரைக்க வேண்டும் போலிருந்தது. நாக்கில் எச்சில் ஊறுவது போலிருந்தது. வால் ஒன்று முளைத்துப் பின் பக்கம் தன் பாட்டுக்கு ஆடிக் கொண்டிருப்பது போன்ற பிரமையும் ஏற்பட்டது.
“என்னடா இது.. என்னென்னவோ சொல்லுகிறாய்? அந்த நன்றி கெட்ட நாய் எங்கேயோ ஓடிப்போய்விட்டது. எங்கே என்று போய்த் தேடச் சொல்கிறாய்?” என்றார் கலக்கமான குரலில்,
“தாத்தா!” என்று ரசகுண்டுவின் குரல் கரகரத்தது, “பேசாமல் பதினாலு ஊசிப் போட்டுக் கொண்டுவிடுங்கள்.” அப்புசாமி திடுக்கிட்டார். “என்ன சொன்னே! பதினாலு ஊசியா?”
“ஆமாம் தாத்தா, வயித்திலே சதக் கதக்னு பதினாலு நாள் போடுவார்கள். வலி பிராணன் போனாலும் பைத்தியம் பிடித்துச் சாகாமல் இருப்பீர்கள்.- நீங்களும் மண்டையைப் போட்டுவிட்டால், அப்புறம் எனக்கு யார் தாத்தா சினேகிதர்கள்?” ரசகுண்டுவுக்குக் கண்ணில் ஜலமே வந்துவிட்டது.
“அற்ப நாய் கடித்தது இவ்வளவு பெரிய சமாசாரமா? என்றார் அப்புசாமி.
“ஆமாம் தாத்தா உங்களைக் கடித்ததிலிருந்து பத்து நாளைக்குள்ளே அது சாகாமல் இருந்துவிட்டால் எந்த ஊசியும் அவசியமில்லை. ஆனால் இப்போ நாயைக் கோட்டை விட்டுட்டீங்களே தாத்தா. தேடிப் பிடித்து அதக் கட்டிப்போடஹமே நீங்கு”
பதினாறு ஊசி சதக் சதக் என்று போட்டுக் கொள் வதைவிட நூற்றுப் பதினாலு தெருக்கள் சுற்றியாவது தன்னைக் குடித்த நாயைத் தேடிக் கொண்டு வந்து விடுவது என்று அப்புசாமி தீர்மானித்து விட்டார்.
கவலையுடன், “ரசகுண்டு நீயும் கொஞ்சம் எனக்காக நாயைத் தேடிக் கொடுடா” என்று கேட்டுக் கொண்டு. தன்னைத் தீண்டிய நாயின் சாமுத்திரிகா லட்சணங்களை அவனிடம் விவரிக்க ஆரம்பித்தார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து ரசகுண்டுவின் பாட்டியான சீதாப்பாட்டி தன் தூக்கம் கலைந்து எழுந்த வளாக, யார்கூட ரொம்ப நேரமாகத் தொண தொண வென்று பேசிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டவாறு வெளியே வந்தாள் அப்புசாமியை நாய் கடித்து விட்டது என்றதும், “அடப்பாவமே! உங்களை நாய் கடிச்சப்போ உங்கள் வீட்டுக்காரி என்ன பண்ணிக் கொண்டிருந்தாள்? உலகத்திலே ஓரொரு பொம்மனாட்டி புருஷனைக் கண்ணி மைக்குள் வைத்துக் காப்பாற்றுகிறாள். உங்க சம்சாரம் இப்படி நாய் கடிச்சதுக்கு இவ்வளவு அலட்சியமாக இருக்கிறாளாக்கும். நாய்க்கடிக்கு மருந்து கிருந்து போட்டு டாதீர்கள் மருந்தே தேவையில்லை. நான் சொல்கிறாற் போல் செய்யுங்கள். ஒரு பயமும் இல்லை” என்றாள்.
அப்புசாமிக்குக் காதில் ஐஸ் கட்டியைப் போட்டது மாதிரி இருந்தது. ‘ஒரு வைத்தியமுமே வேண்டாமா?”
“பைத்தியம் ஒன்றும் வேண்டாம். ஆனால் நீங்கள் ஒரு சின்னக் காரியம் பண்ணனும்” என்றாள் சீதாப்பாட்டி.
“ஊசியிலேயிருந்து தப்புகிறதென்றால் என்ன வேணும்னாலும் பண்றேன்” என்றார். அப்புசாமி.
“வேறொன்றுமில்லை. நேரே சுடுகாட்டுக்குப் போங்கள் வெந்து கொண்டிருக்கிறது பாருங்கள் சவம். அதனுடைய புகையை நன்றாக நாலுதரம் உள்ளுக்கு இழுங்கள். முடிந்தால் கடிகாயத்தையும் அந்தப் புகை மேலே கொஞ்சம் காட்டுங்கள் கோடி வெறி நாய் கடித்தால்கூட விஷமில்லை. கிராமத்து வைத்தியம் இதுதான் சாயந்தரம்கூட ஒரு பிணம் இந்தப் பக்கம் போச்சு இப்போவே மசானத்துக்குப் போனீர்களானால் சரியா இருக்கும்”
அப்புசாமிக்குக் கால் கிடுகிடுவென்று நடுங்கியது. “கட்டாயம் போகிறேன் அவசியம் போகிறேன். என்று சொல்லிவிட்டு செத்தேன் பிழைத்தேன் என்று புறப்பட்டு விட்டார்.
எந்தப் பாடுபட்டாவது தன்னைக் கடித்த நாயைக் கண்டு பிடித்துப் பத்து நாள் அதைக் கட்டிக்காத்து அது வெறி நாயா என்று ‘வெரிஃபிகேஷன்’ செய்து கொள்வதைத் தவிர வழியில்லை என்று அப்புசாமி தீர்மானித்து விட்டார்.
வாடகைச் சைக்கின் ஒன்றை எடுத்துக் கொண்டு சீதாப்பாட்டிக்குத் தெரியாமல் நகரின் பற்பல மூலை முடுக்குகளிலும், பீடாக் கடை, சோடாக் கடைப் பலகை களின் அடிவாரங்களிலும் தேடித் துருவி அவர் கருத்துக் காய்ந்து வற்றலாகி, கடைசியில் நம்பிக்கை இழந்து கால் நடையாக வந்து கொண்டிருந்தார் ஒரு சாலை வழியே.
என்னாச்சரியம்! தபால் பெட்டி அருகே மூச்சு இரைக்க, அன்று கண்ட அதே அழுக்குகளுடன் அவர் தேடிய நாய் படுத்திருந்தது.
பசிக் களைப்புப் போலும். அப்புசாமி மிக அருகில் சென்றுகூட அது எழுந்து ஓடவில்லை.
அப்புசாமி, அங்க மச்ச அடையாளங்களைச் சரி பார்த்தார். அதே மூன்றே முக்கால் கால்கள் வலது காதில் மடிப்பு. நெற்றியில் ஒரு வீரத் தழும்பு,
“என் கண்ணுக்குட்டி” – என்று அதைத் தூக்கிக் கொண்டார்.
கையோடு முதல் காரியமாகப் போகிற வழியிலேயே ஒரு சங்கிலியும் வாங்கிக்கொண்டு போய்விட்டார்.
பிஸ்கட், புரை அது இது வாங்கிப் போட்டு தாஜா செய்து அதை ஒரு வழியாக நடத்தி அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார்.
வீட்டில் முதலில் அப்புசாமி தயங்கித் தயங்கி நுழைத்தார்.
அவரைப் பின் தொடர்ந்து நீண்ட சங்கிலி வந்தது.
சீதாப்பாட்டி தன்னுடைய அருமை பெட்லீக்கு அப்போதுதான் ப்ரிக்லி ஹீட் பவுடர் போட்டுக் குளுமைப் படுத்திக் கொண்டிருந்தாள். மூக்குக் கண்ணாடி வழியே அப்புசாமியின் கைச் சங்கிலியைப் பார்த்தாள்.
அதன் முனையில் ஒரு அழுக்கு நாய்க்குட்டி! பீடாக்காது. மூன்றே முக்கால் கால்கள்.
‘உர்ர்ர்’ என்று பெட்லி வேறு அரச உறுமல் உறுமியது.
:பி காம் பேபி காம்” என்று தன் நாயைச் சீதாப் பாட்டி சமாதானப்படுத்திவிட்டு அப்புசாமியை எரித்து விடுபவள் போல் பார்த்து, “வாட் இஸ் திஸ் நான் ஸென்ஸ் ” என்றாள்.
“உஸ்ஸ்ஸ்ஸ்.. – இரையாதே ” என்றார் அப்புசாமி. “நீ ஒரு பெட்லிங்டன் வளர்க்கிற மாதிரி நானும் ஒரு இட்லிங்டன் வளர்க்கலாமென்று இருக்கிறேன் ஒரே மூச்சில் பத்து இட்லி தின்னக்கூடியதாக்கும் இது” என்றார். புன்னகையுடன்.
சீதாப்பாட்டி கோபத்துடன், “சுத்த ஹாரிபிள் சைட்டாக இருக்கிறதே. ஐ வோன்ட் அலௌ திஸ் அக்ளி க்ரீச்சர், சாக்கடையிலிருந்த நாயை என்ன ஒரு ‘கட்ஸ்’ இருந்தால் இங்கே கூட்டி வருவீர்கள்? என்று கூச்சல் போட்டாள்.
“சீதோய் நிறுத்து” என்றார் அப்புசாமி.
இந்த நாஸ்ட்டி நாயை நீங்கள் வளர்க்கப் போறீங்களா? நெவர… நெவர். ஐ வில் கிக் ஹிம் அவுட்”
“எங்கே… கிக்கு பார்க்கலாம்.அப்படி ஏதாவது மட்டும் கிக்கு. அப்புறம் உன் பெட்லிங்டன் சுக்கு. ஆமாம். அம்மியிலே வைத்து அரைத்துக் கஷாயம் போட்டு விடுவேன். கபர்தார்.”
சீதாப்பாட்டியும், அப்புசாமியும் ஒருவரையொருவர் முறைத்துக்கொண்ட அதே சமயம், இட்லிங்டனுக்கும் பெட்லிங்டனுக்கும் மோதல் வந்துவிட்டது.
“கிர்ர்ர் ர்ர்” என்றது பெட்லி.
‘”வள்ள்.வள்ள் ” என்றது இட்லி
“பஃப்” இது பெட்லி,
“ளொழி! ளொழி! ளொம். ” இது இட்லி
“ளொழ். பஃப் வள்.கிரர்” இது இட்லி பெட்லி
சீதாப்பாட்டிக்குப் பயமாகப் போய்விட்டது. “உங்கள் அக்ளி டாக்கைத் தூக்கிக்கொண்டு முதலில் மாடிக்குத் தொலையுங்கள். அதனுடைய மியர் சைட்டிலேயே பெட்லிக்கு நர்வஸ் ப்ரேக்டெளன் வந்துவிடும் போலிருக்கிறது” என்றாள்.
அப்புசாமி காலண்டரில் தேதியைப் பார்த்துப் பார்த்து நாயை வளர்த்து வந்தார்.
ஆறாம் தேதி மூன்று மணிக்கு அவரை நாய் கடித்தது. சரியாகப் பதினாறாம் தேதி மூன்று மணிவரை நாய் உயிரோடு இருந்துவிட்டால். கவலையே இல்லை.
நாய்க் கண்காட்சிக்கான தேதி நெருங்க நெருங்க சீதாப்பாட்டி தன்னுடைய பெட்லிங்டனுக்கு வேளா வேளைக்குச் செய்கிற உபசாரங்களும், அதற்குக் கொடுக்கிற ஆகாரங்களும் பயிற்சிகளும்.
அப்புசாமி அதே மாதிரி உணவு வகைகளைத் தனது இட்லிங்டனுக்கு போராடிப் போராடி வாங்கிப் போட்டு வந்தார்.
இட்லிங்டனுக்கு இட்லிதான் மிகவும் பிடித்ததே தவிர, உயர்ரக பிஸ்கட் வகையறாக்கள் பிடிக்கவில்லை.
அப்புசாமி திருட்டுத்தனமாக காசு அங்குமிங்கும் பிறாண்டித் தினமும் ஆறு இட்லி வாங்கிப் போட்டு நாளை மெதுவே தள்ளி வைத்தார்.
இந்த லட்சணத்தில் இட்லிங்டனுக்குத் திடீர் திடீ ரென்று இரவில் ஏதாவது பயங்கரக் கனவுகள் வந்துவிடும். திடுமென எழுந்து உட்கார்ந்து கொண்டு ஊளையிடத் தொடங்கிவிடும். அவ்வளவுதான். சீதாப்பாட்டி அப்புசாமி மேல் அந்த அர்த்த ராத்திரியில் பாய்வாள் “யூ அண்ட் யுவர் ரெச்சட் டாக்! என்னமாக இப்படி ஹௌல் செய்கிறது! பெட்லீயுடைய ஸ்லீப்பே ஸ்பாயில் ஆகிறது! இனியொரு தரம் சுத்தினால் ஐ வில் ஷாட் ஹிம்!” என்று கர்ஜிப்பாள்.
‘கடன்காரி! இன்னும் இரண்டே நாள் பொறு! அது வரை இது சாகாமலிருக்கட்டும். அப்புறம் நானே இந்த முகரைக் கட்டை நாயை விறகுக் கட்டையால் அடித்து விரட்டிவிடுகிறேன்,” என்று நினைத்துக் கொள்வார் அப்புசாமி.
நாய் கடித்த பத்தாவது நாள் தேதி : பதினாறு மணி: பிற்பகல் இரண்டரை.
அப்புசாமி கடியாரத்தைப் பார்த்தார்.
அடுத்த கணம் அவருடைய இட்லிங்டனைப் பார்த் தார். அது அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது.
“ஏய் இட்லி! எழுந்திரு! மூட்டையைக் கட்டு!” என்றார் அப்புசாமி.
இவ்வளவு சீக்கிரம் அப்புசாமி தனக்குச் சீட்டுக் கிழிப்பார் என்று எதிர்பாராமலிருந்ததால், இட்லிங்டன் தன் ஆழ்ந்த நித்திரையிலேயே சொக்கிப் போயிருந்தது.
“டேய் இட்லி! நீ ஒரு கடிகடித்ததும் போதும், பத்து’ நாள் நான் மனசால் பட்ட கஷ்டமும் போதும். எழுத் திருந்து ஜாகையைக் காலி பண்ணு. இந்தா உனக்கு டீ பார்ட்டி ” என்று ஒரு கப் டீயை ஊற்றி அதன் அருகே வைத்தார்.
“ஆயிற்றா மணி மூன்று!” என்று கடியாரத்தைப் பார்த்தார்.
நாயைப் பார்த்தார்.
தன்னைப் பார்த்துக் கொண்டார்.
யாரும் சாசுவில்லை.
“ஜீம் பூம்பா.” என்று சந்தோஷ மிகுதியோடு கூவிக் கொண்டே நாயைச் சங்கிலியுடன் வாசலுக்கு அழைத்துக் கொண்டு போனார்.
‘விடுதலை! விடுதலை! விடுதலை!” என்று உற்சாக மாகப் பாடிக்கொண்டே சங்கிலியை அவிழ்த்தார்.
இட்லிங்டன் ஓடாமல் நின்றது.
“போ போ! உனக்குத் தினமும் ஆறு இட்லி வாங்கிப் போட இந்த ஏழெட்டு நாளைக்குள்ளே நான் படாத பாடு பட்டுவிட்டேன்!” என்று சொன்னவர், மேல் துண்டினால் விஸுக்கென்று ஒரு சொடுக்குச் சொடுக்கினார்.
இட்லிங்டன் தெருவில் பாய்ந்தது – அரச போகத்தையும் அரண்மனை வாழ்வையும் துறந்தது.
அதே நேரம் சீதாப்பாட்டி நாய்க் கண்காட்சிக்குப் புறப்படுவதற்காகத் தன் பெட்லிங்டனை விசேடமாக அலங்கரித்துக் கொண்டிருந்தாள். தான் பின்னிய உலன் கோட்டை மாட்டிக் கொண்டிருந்தாள்.
அப்புசாமி பத்துநாள் கெடு தாண்டிவிட்ட மகிழ்ச்சியில் விசிலடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தார். வாசற்படியில் காலை வைத்தார்.
‘வள்’ என்று பெட்லிங்டனின் அலறல்,
“ஹா! கால்!” என்று அப்புசாமியின் கத்தல்.
“ஓ! மை டியர் பெட்லி” என்று சீதாப்பாட்டியின் ஓலம்.
அப்புசாமி ரத்தம் சொட்டும் காலைப் பிடித்துக் கொண்டு, “ஆ! ஆ! ஆ!” என்று கூவினார். “இங்கிலீஷ் நாயாம்! எருமைக்கடா! போச்சே என் கால்!” என்று கூவினார்.
சீதாப்பாட்டி, ‘ஐயோ பெட்லி! ஆர் யு ஆல்ரைட்! ஆர் யூ ஆல்ரைட்” என்று கூவியவாறு பெட்லிங்டனை எடுத்து மடி மீது கிடத்தி அதற்கு உபசாரம் பண்ணத் தொடங்கியவள், அப்புசாமியைப் பார்த்து, “உங்க மண் டையிலே கண் இருக்கிறதா, வாட் பிஸினஸ் இந்த ரூமில் வைத்திருக்கிறது உங்களுக்கு” என்று சீறினாள்.
அப்புசாமி, “ஆ! ரத்தம்! ரத்தம்! நாய் என்றார். ஆள்காட்டி விரலில் ரத்தத்தை எடுத்துக் காட்டியவாறு.
‘வாட்’ ரத்தம் வந்துவிட்டதா ஓ மை டியர் பெட்லீ!” என்றவாறு சீதாப்பாட்டி பெட்லிங்டனைப் பரபரப்புடன் கையிலெடுத்து அதன் உடம்பைப் பரிசோதித்தாள் அப்புசாமி மிதித்ததால் அதற்கு அடிபட்டு ரத்தம் வந்து விட்டதா என்று.
அப்புசாமி பல்லைக் கடித்துக்கொண்டு, “உன் நாய்க்கு ஒரு கேடும் இல்லை, எனக்குத்தான் எல்லா இழவும் வந்திருக்கிறது. அந்தப் பாழாய்ப் போன தெரு நாய் கடித்துத் தொலைத்து ஒரு வழியாகத் தப்பினேன் என்று நிம்மதியாக உள்ளே வந்தால் உன் நாய் பிடுங்கி விட்டதே காலை” என்றார்.
சீதாப்பாட்டி அதிர்ச்சியுற்றவளாக, “வாட் ஆர் யூ டாக்கிங். உங்களைத் தெரு நாய் கடித்ததா? படு பாய்ஸன்ஸ் வேர். ஆயிற்றே? வென். எந்தத் தெரு நாய்? எனக்குத் தெரியவே தெரியாதே… ஒய் டின்ட் யு டெல் மீ?” என்று பதறினாள்.
சீதாப்பாட்டியின் பதற்றத்தைப் பார்த்து அப்புசாமிக்கு ஆனந்தமாக இருந்தது. ‘அட! நாய் நம்மைக் கடித்ததற்கு இவ்வளவு பதறுகிறாளே’ என்ற கனிவு ஏற்பட, “ஒன்றுமில்லை. எனக்கு எந்த ஆபத்துமில்லை நாய் கடித்து வெற்றிகரமான பத்து நாள் ஓடிவிட்டது. இவ்வளவு நாளாக இங்கே கட்டி வைத்துக் காப்பாற்றினேனே இட்லிங்டன் என்ற என் நாயை? அந்தப் பீடைதான் என்னைக் கடித்துவிட்டது. பத்து நாளைக்கு அதைக் கட்டிப்போட்டு வைத்துப் பார்க்க வேண்டுமென்றார்கள். நல்லகாலம், அது சாகவில்லை. நாய்ப் பைத்தியத்திலிருந்து தப்பினோம் என்று சந்தோஷமாக உள்ளே வந்தால், உன் சொகுசு நாய் காலைப் பதம் பார்த்துவிட்டது”
இதைக் கேட்டதும் சீதாப்பாட்டி, “ஆல்ரைட்…. புறப்படுங்கள்.. ஹாஸ்பிடலுக்கு,” என்றாள்.
அப்புசாமி திடுக்கிட்டவராக, “ஆஸ்பத்திரிக்கா? என்ன சீதே உளறுகிறே?” என்றார்.
“அச்சோ! ப்ளீஸ் டோன்ட் புட் க்வெஸ்ச்சன்ஸ். ஜிப்பாவை மாட்டிக்கொண்டு புறப்படுங்களேன் சீக்கிரம். உடனடியாக உங்களுக்கு ஆண்ட்டி ரேபிஸ் இன்ஜக்ஷன் போட்டாக வேண்டும்…”
“சீதே!” என்றார் அப்புசாமி, பரிதாபமாக, “எனக்கு எதுக்கு ஊசி? உன்னுடைய இங்கிலீஷ் நாய் கடித்தால் கூடவா எனக்கு ஆபத்து?” என்றார்.
சீதாப்பாட்டி அப்புசாமியை நிமிர்ந்து நோக்கினாள்: “ஒரு நாய்க்கு இரண்டு நாயாக உங்களைக் கடித்திருக்கிறது. கட்டாயமாக நீங்கள் இன்ஜன்ஷன் போட்டுக்கொண்டே தீரவேண்டும். நோ அதர் கோ, ஹரி அப்!” என்றாள். அப்புசாமிக்குத் தலை சுற்றியது. வயிற்றில் பதினாலு முறை சதக் சதக் என்று விதி குத்துவது போலிருந்தது!
– அப்புசாமி செய்த கிட்னி தானம் (நகைச்சுவை சிறுகதைத் தொகுப்பு), பாக்கியம் ராமசாமி, முதற்பதிப்பு: ஆகஸ்ட் 2007, பூம்புகார் பதிப்பகம், சென்னை.
![]() |
ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்னும் ஜ.ரா.சுந்தரேசன் (பி:சூன் 1, 1932) பிரபல தமிழ் எழுத்தாளர் ஆவார். தமது தாயார் மற்றும் தந்தையார் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்னும் புனைபெயரில் நகைச்சுவைக் கதைகள் மற்றும் தொடர் புதினங்களுக்காக மிகவும் புகழ் பெற்றார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தியின் சகோதரன். சேலத்தைச் சேர்ந்த ஜலகண்டாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
காசு மேல காசு வந்து..!
ஜி.மறைமுதல்வன்
July 29, 2026
சிவா வெட்ஸ் ஜெனி
பிரசன்னா சுவாமிநாதன்
June 23, 2026
வேடிக்கை நடத்துனர்கள்
உரு.வளவன்
June 23, 2026
