அமாவாசி விரதம்
கதையாசிரியர்: வீ.அய்யனார்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: August 9, 2026
பார்வையிட்டோர்: 45
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – ஒருத்த, அமாவாசி வெரதம் புடிக்கணும்ண்டு வெகுநாளா நெனச்சுக்கிட்டிருந்தா. அவனுக்கு, அதே கிறுக்காப் போச்சு. எப்பப் பாத்தாலும் அமாவாசி வெரதம் புடிக்கணும்- அமாவாசி வெரதம் புடிக்கணும் அமாவாசி வெரதம் புடிக்கணும்ண்டு சொல்லிக்கிட்டே இருப்பா.
எங்கயோ ஊருக்குப் போனவ், சும்மா போகமாட்டாம், அமாவாசி வெரதம் புடிக்கணும் அமாவாசி வெரதம் புடிக்கணும்ண்டு சொல்ற வேகத்ல, அமாவாசியப் புடிக்கணும் – அமாவாசியப் புடிக்கணும் – அமாவாசியப் புடிக்கணும்ண்டு சொல்லிக்கிட்டே வழில போயிக்கிட்டிருக்கா.
போயிக்கிட்டிருக்கயில, அந்தச் சமயத்ல, அமாவாசிங்கற் ஒருத்தி, கவர்மண்டுல குத்தவாளியாகி, கவர்மண்டுக்குப் பயந்து, காட்டு வெளில ஒழிஞ்சுகிட்டு இருக்கா. அவ், ஒழிஞ்சு கிட்டிருக்கயில, இவ, அமாவாசியப் புடிக்கணும் – அமாவாசியப் புடிக்கணும்ண்டு சொல்லிக்கிட்டே போறா.
இவ சொல்றதக் கேட்டு, யார்றா இவ, நம்மளப் புடிக்கிறவண்டு, பாதக்கி வந்தா. வந்து பாக்கயில, இவ பொலம்பிக்கிட்டே போயிக்கிட்டிருக்கா.
போயிக்கிட்டிருந்தவனப் புடிச்சு, ஏண்டா ராஸ்கோல்! என்னயப் புடிக்கிறது நிய்தானடாண்டு செவுட்ல ரெண்டு போடு போட்டா. போடவும், இல்லங்க. நா ஒங்களப் புடிக்கணும்ண்டு சொல்லல. அமாவாசி வெரதம் புடிக்கணும்ங்கறதத்தா, அவசரத்ல, அமாவாசியப் புடிக்கணும்ண்டு சொல்லிட்டேண்டு சொன்னா.
சொல்லவும், படுவா! இனிமே எதுவும் புடிக்கப்படாது- எதுவும் புடிக்கப்படாதுண்டு சொல்லிகிட்டுப் போடாண்டு சொல்லி, வெரட்டி விட்டா. இவ், சொல்லச் சொன்னது மாதிரி, எதுவும் புடிக்கப்டாது எதுவும் புடிக்கப்படாதுண்டு சொல்லிக்கிட்டே போறா.
போகயில, அங்கிட்டொரு கொசவன், சட்டி பானைகளச் செஞ்சு, சுள்ளயில போட்டுத் திய்யி மூட்டிக்கிட்டிருக்கா. திய்யி, சாரவாடக்கிப் புடிக்க மாட்டேங்குது. அவ், கஸ்டப்பட்டு ஊதிக்கிட்டிருக்கயில, இவ், எதுவும் புடிக்கப்படாது – எதுவும் புடிக்கப்டாதுண்டு சொல்லிக்கிட்டுப் போறா.
போகவும், ஏண்டா படுவா! இங்க வாடா! திய்யிப் புடிக்காம நா என்னா பாடுபடுறே. எதுவும் புடிக்கப்டாதுண்டு எவ்வவளவு திமுறு இருந்தா சொல்வேண்டு, ரெண்டு அப்பு அப்பி, நல்லாப் புடிக்கணும் நல்லாப் புடிக்கணும்ண்டு சொல்லிக்கிட்டுப் போடாண்டு சொன்னா.
சரிண்டு, நல்லாப் புடிக்கணும் – நல்லாப் புடிக்கணும் – நல்லாப் புடிக்கணும்ண்டு சொல்லிக்கிட்டே போறா.
அங்கிட்டுப் போகயில, ஒரு ஊர்ல, திய்யிப் புடுச்சு, வீடுக வேகுது. வேகவும், அந்த ஊரு ஆளுக, தண்ணி – தடிக்கம்புகளக் கொண்டு அமத்திக்கிட்டிருக்காங்க. அங்கன போனவ், சும்மா போக மாட்டாம, நல்லா புடிக்கணும் – நல்லாப் புடிக்கணும் நல்லாப் புடிக்கணும்ண்டு சொல்லிக்கிட்டுப் போனா.
அவங்க, ஏண்டா! நம்ம என்னா பாடுபட்டுக் கிட்டிருக்கோம். வீதியில போறவ் பேச்சப் பாத்தயா. நல்லாப் புடிக்கணுமாம்ல. அவனப் புடிங்கடா, திய்யில தூக்கிப் போடுங்கடாண்டு சொல்லிக்கிட்டு வந்து, ஆளுக்கு நாலு மாத்து, மாத்துனாங்க. வாங்கி கெட்டிக்கிட்டுப் போனா. அந்தக் கூட்டத்ல் ஒருத்த், ஏலே! பேசாமப் போகாம,
தண்ணிய ஊத்திக்க
தடியக் கொண்டு போட்டுக்க!
தண்ணிய ஊத்திக்க
தடியக் கொண்டு போட்டுக்க
சொல்லிக்கிட்டுப் போடாண்டு சொன்னா. சொல்லவும், சரிங்கண்ட்டு,
தண்ணிய ஊத்திக்க
தடியக் கொண்டு போட்டுக்க!
தண்ணிய ஊத்திக்க
தடியக் கொண்டு போட்டுக்க
சொல்லிக்கிட்டுப் போறா.
போகயில, அங்கிட்டு ஒரு கொமரிப்பிள்ள, கொடத்ல, தண்ணிய எரச்சு -எரச்சு ஊத்திக் குளிச்சுக்கிட்டிருக்கா. அதுக்கு நேரா, போனவ,
தண்ணிய ஊத்திக்க
தடியக் கொண்டு போட்டுக்க – ண்டு
சொல்லிக்கிட்டுப் போறா, அப்ப, அவ, நம்ம
குளிக்கிறதத்தா கேலி பண்றாண்டு நெனச்சு, அந்தப் பிள்ள, வெளக்க மாத்தக் கொண்டு நாலு கெணாச்சு கெணாச்சுனா.
கெணாச்சவும், இதென்னடா வம்பாப் போச்சுண்டு நெனச்சா. அப்ப, அவ சும்மா போகாத,
ஒண்ணுந் தெரியப்படாது
ஒண்ணுந் தெரியப்டாது – வுண்டு
சொல்லிக்கிட்டுப் போடாண்டு சொல்லிட்டா.
சொல்லவும், இவனும் பெறகென்னா செய்றதுண்ட்டு,
ஒண்ணுந் தெரியப்படாது
ஒண்ணுந் தெரியப்டாது – ண்டு
சொல்லிக்கிட்டுப் போறா.
போகயில, அங்கிட்டிருந்து ஒரு கல்யாணஊர்வலம் வருது. அந்த மாப்பிள்ளக்கி ஒத்தக் கண்ணு. கல்யாணப் பொண்ணு – மாப்பள அங்கிட்டிருந்து வருது. இவ் இங்கிட்டிருந்து போறா. போனவ, சொல்லிக்கிட்டு வந்தத நிறுத்தாம்,
ஒண்ணுந் தெரியப்படாது
ஒண்ணுந் தெரியப்டாது – ண்டு
சொன்னா. சொல்லவும், அவங்க, நம்ம மாப்பளக்கி ஒத்தக் கண்ணு, அதயும் தெரியப்படாதுண்டு சொல்றானே, இவனப் புடிங்கடா – அடிங்கடாண்டு, அடி. அடிண்டு அடிச்சு,
நல்லாத் தெரியணும்
நல்லாத் தெரியணும் – ண்டு
சொல்லிக்கிட்டுப் போடாண்டு வெரட்டி சரியப்பா! பொழுது விழுகங்குள்ள வீடு போயிச் சேரணுமண வேகமா நடக்குறா.
நடக்கவும், அதுல ஒருத்தி என்னாடா, சொல்லாமப் போற, சொல்லிக்கிட்டுப் போடாண்டு சொன்னா. சரிண்ணேண்ட்டு,
நல்லாத் தெரியணும்
நல்லாத் தெரியணும் – ண்டு
சொல்லிக்கிட்டு வேகமா நடந்தா.
நடந்து போகயில, எடயில ஒரு ஆறு. ஆத்ல, நெறயா தண்ணி போகுது. அஞ்சாறு வயசுப் பிள்ளைக, ஆத்துக்குள்ள, தலையில் புல்லுக்கட்ட வச்சுக்கிட்டு, அங்கிட்டிருந்து வருதுக. இவ், இங்கிட்டிருந்து போனவ, எதுக்க வந்த வயசுப்பிள்ளைக, தண்ணி ஏற, ஏற, சீலயத் தெறச்சு – தெறச்சு மேல தூக்கிப் புடிச்சுக்கிட்டு வாராங்க. பொம்பளப் பிள்ளைக, சீலயத் தெறச்சுக்கிட்டு வாராங்களேண்டு தெரிய வேணாம். தெரியாம்.
நல்லாத் தெரியணும்
நல்லாத் தெரியணும்
நல்லாத் தெரியணும் – ண்டு
சும்மா சொல்லிக்கிட்டு போனா. போகவும், அதுல ஒருத்தி, குசும்புக்காரி, எனத்தடா நல்லாத் தெரியச் சொல்றண்டு புடிச்சு, ஆளுக்கு நாலு நொத்து நொத்தி, எதுவுஞ் சொல்லாம ஒழுங்கா வீடு போயிச் சேருடாண்டு சொல்லி வெரட்டி விட்டாங்க.
வெரட்டவும் ஒண்ணுஞ் சொல்லாம, நல்லா அமாவாசி வெரதம் புடிச்சம்டா! அமாவாசி வெரதமும் வேணாம், ஒண்ணும் வேணாம்ண்டு நெனச்சுக்கிட்டு, வீட்டுக்கு வந்து சேந்தானாம்.
அண்ணக்கிருந்து, அமாவாசி வெரதம்ங்ற பேச்சயே பேசமாட்டானாம்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நகைசுவைக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசா பல்கலைக் கழகம், மதுரை.
தொடர்புள்ள சிறுகதைகள்
லார்ட் பெட்லிங்டனும் அப்புசாமியும்
ஜ.ரா.சுந்தரேசன்
August 19, 2026
வக்கணை
வீ.அய்யனார்
August 9, 2026
பங்கு – பாகம்
வீ.அய்யனார்
August 9, 2026