முரண்கள்!




‘கடுமையாக உழைத்து, சிக்கனமாக செலவழித்து, சேமித்து வாரிசுகளின் தேவைகளைப்பூர்த்தி செய்தாலும் அவர்களால் திருப்தியடைய முடியவில்லையே….?’ எனும் கவலை சங்கரனின் மனதை வாட்டியது.

பாட்டன், தாத்தா, தந்தை இவர்களெல்லாம் பெரியதாக சிரமப்பட்டு உழைக்காமல், முன்னோர் கட்டி வாழ்ந்த ஓட்டு வீட்டிலேயே வாழ்ந்து, வாரிசுகளையும் படிக்க வைத்தாலும், அரசு பள்ளிகளிலேயே செலவின்றி படிக்க வைத்து அளவான செலவில் வீட்டிலேயே பந்தல் போட்டு திருமணம் முடித்தார்கள்.
அரசு பள்ளியில் படித்து மாவட்ட ஆட்சியரானவர்கள் பலருண்டு எனும் நிலையில், சங்கரனுக்கும் கிராம நிர்வாக அதிகாரி வேலை கிடைத்திருந்தது. தன்னை விட தனது மகள் தனியார் பள்ளியில் படித்து ஆட்சியராக வேண்டும் என விரும்பியவர், கிடைக்கும் மாத சம்பளத்தை அவளுக்காக செலவிட்டு தனது பழைய பைக்கைக்கூட மாற்றாமல் இருந்தார்.
இன்றைய காலகட்டத்தில் கிராமத்து ஓட்டு வீடு மதிப்பிழந்து போக, ‘நகரத்தில் இடமும் விலைக்கு வாங்கி நவீனமாக வீடு கட்டவேண்டும், வாரிசுகளை தனியார் பள்ளி, கல்லூரிகளில் அதிக கட்டணம் கட்டி படிக்கவைக்க வேண்டும், ஆடம்பரமாக வாழ செலவிட வேண்டும், கார், பைக், ஸ்கூட்டர் அவசியம் வேண்டும்’ என நினைத்து வாழ்கின்றனர் .
இத்தனையும் தவிர பெண்ணாக இருந்தால் நகை சேர்க்க வேண்டும், ஆண் வாரிசுக்கு உபரியாக சொத்து சேர்க்க வேண்டும், திருமணத்தை ஆடம்பரமாக நடத்த வேண்டும் எனும் மனநிலை கொண்ட வாரிசுகள், ‘அவரைப்போல நம் அப்பா எதுவும் பெரிதாக செய்து விடவில்லை’ எனக்கூறும்போது பெற்றோருக்கு மனம் உடைந்து விடுகிறது. சங்கரனும் அப்பெற்றோர்களின் நிலையிலேயே இருந்தார்.
“அப்பா… சொன்னா புரியாதா உங்களுக்கு? பிரண்ட்ஸ்ஸோட ட்ரிப்போகனம். ஒன் லேக் ஜிபேல டிரான்ஸ்பர் பண்ணிடுங்க” கல்லூரி விடுதியில் தங்கிப்படிக்கும் மகள் கோபத்துடன் கட்டளையிடுவது போல் கூற, தனது வருமானத்துக்கு அதிக தொகை என்றாலும் தனது வாரிசு மனம் வாடக்கூடாது என்று நினைத்து உடனே பணத்தை அனுப்பி வைத்தார்.
கேட்ட உடனே தந்தை பணம் அனுப்புவதால் ‘தந்தை அதிகமாக சம்பாதிக்கிறார்’ என நினைத்து அடிக்கடி பணம் கேட்க ஆரம்பித்ததோடு, தனது தோழிகளுக்கும் கல்லூரி கட்டணம், விடுதிக்கட்டணம் கட்ட அவர்களது வீட்டினர் பணம் அனுப்பவில்லை யென்றால் தந்தையிடம் கேட்டு வாங்க ஆரம்பித்த பின்பே நிலைமையைப் புரிந்தவர், ‘பணம் இப்ப அனுப்ப முடியாது’ என தைரியமாகக்கூற ஆரம்பித்தார். அதன் பின் பேச அழைத்த போது தனது அலைபேசியை உடனே மகள் எடுக்காதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
“சின்ன வயசுலயே பொண்ணக் கண்டிச்சு வளர்க்கோணும்னு நாஞ்சொன்னதக் கேட்டீங்களா? நேத்து எங்கூட பேசற போது நான் உங்கள நகை கேட்டனா? எதுக்காக நகை, நகைன்னு எடுத்துட்டே இருக்கீங்க. எனக்கு தேவைக்கு அனுப்பாம நகைய எடுத்து பீரோவுல வெச்சு பூட்டி வெச்சா சந்தோசப்பட முடியுமா? அந்தக் காலத்துல படிக்காத முட்டாப் பொண்ணுகளுக்கு நகை தேவையாச்சு. எனக்குத்தா படிப்பு இருக்குதே… படிப்பு முடிச்சா வேலை கெடைக்கப் போகுது…. அப்பா முட்டாளுக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்லி பணம் அனுப்பச் சொல்லு. பணம் இல்லேன்னா எனக்குன்னு எடுத்து வெச்சிருக்கிற நகைய வித்து அனுப்பச் சொல்லு, இல்லீன்னா வீட்ட வித்துப் போடச் சொல்லு. அவரு மாதர அரசாங்க வேலைல இருக்கறவங்க லஞ்சம் வாங்கி சந்தோசமா பணக்கவலையில்லாம வாழறாங்க. அவரு லஞ்சம் வாங்காதவர்னு பாராட்டி விருதா கொடுக்கப்போறாங்க…? ன்னு கூசாம சொல்லறாளே….” சொல்லிக் கண்ணீர் சிந்தினாள் சங்கரனின் மனைவி சுந்தரி.
இதைக் கேட்டு தானும் கண் கலங்கிய சங்கரன் பெண் தன்னிடம் கேட்டிருந்த பணத்தை உடனே அனுப்பி வைத்தார். சம்பளம் தவிர கிம்பளமாக இருவரை முப்பது வருட அனுபவத்தில் பத்து ரூபாய் கூட வாங்கியிருக்கவில்லை. தனக்குப் பிறந்த மகளும் தன்னைப்போலவே வருவாள் என நினைத்து கனவு கண்டவர் தற்போது மனமுடைந்தார்.
ஆன்மீகவாதியான சங்கரன் அசைவ உணவு சாப்பிடும் பழக்கமிருந்தாலும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோசம், திங்கள், வெள்ளி, சனி என சில நாட்களில் சாப்பிடமாட்டார். விடுமுறையில் ஒருநாள், வீட்டிற்கு உடன் படிக்கும் தோழிகளையும் அழைத்துக்கொண்டு வந்திருந்த மகள் அமாவாசை என்றும் பாராமல் வீட்டில் ‘அசைவ உணவுதான் செய்ய வேண்டும்’ என்று பிடிவாதமாகக்கூற, மன இறுக்கத்துடன் மறுக்க முடியாமல் வாங்கிக் கொடுத்து மனைவியை சமைத்துப் போடச்சொன்னார்.
“என்ன சங்கரா….., அமாவாசையும் அதுவுமா நாட்டுக்கோழி அடிச்சு கொழம்பு வெச்ச மணமடிக்குது?” என பக்கத்து வீட்டில் வசிக்கும் நண்பர் பரமன் கேட்க, பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தபடி எதுவும் சாப்பிடும் மனநிலையற்றவராய் பசியுடன் அலுவலகம் சென்றார்.
சங்கரனின் மகள் சங்கவிக்கு படிப்பு முடித்தும் எதிர்பார்த்த வேலை அமையவில்லை. வேலை கிடைக்காததால் திருமணத்திற்கும் வரனும் அமையவில்லை. பெண் படித்திருந்தாலும், பெண்ணைப் பிடித்திருந்தாலும் நகை, கார், ஆடம்பரத் திருமணம் என எதிர்பார்க்கும் மாப்பிள்ளை வீட்டினர் யாரும் பெண் கேட்டு வரவில்லை. கல்லூரி தோழி காம்யாவின் திருமணத்திற்காக ஒரு நாள் சேலத்திலிருந்து கோவைக்கு சென்றிருந்தாள்.
வறுமையிலிருப்பது போல் காட்டிக் கொண்ட தோழியின் திருமணம் மிகவும் ஆடம்பரமாக பெரிய திருமண மண்டபத்தில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தவளாய் மண்டபத்துக்குள் நுழைந்தவளுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.
“வா கண்ணு சங்கவி. நீ கண்ணாலத்துக்கு கண்டிப்பா வருவீன்னு காம்யா சொன்னா. எப்படியோ அவள நாங்க வாயக்கட்டி வயத்தக்கட்டி வளத்து, கஷ்டப்பட்டு கடன, ஒடன வாங்கி படிக்கவெச்சதுக்கு ஏத்தாப்ல பெரிய எடத்துல மாப்பள கிடைச்சிருச்சு. ஒரே பையன், நூரேக்கரா கெடக்குது. நூறு கோடிக்குப் போகும்னு வெச்சுக்குவே…. அப்பறம் நாங்களும் ஒரு பவுனு, ரெண்டு பவுனுன்னு சேத்து எப்புடியோ முன்னூறு பவுனு காம்யாவுக்கு போட்டுப் போட்டம்னு வெச்சுக்குவே…. காடு பத்தேக்கரா அவ பொறந்தப்பவே அவளோட அப்பாறு எங்கள நம்பாம அவ பேருக்கு உயிலு எழுதி வெச்சுப்போட்டாரு. அது டவுனு ஒட்டி இருக்கறதுனால நூறு கோடிக்கு இப்பப்போகும். கஷ்டத்துலியும் உன்ற மாதர நல்ல மனசு உள்ளவங்க காலேஜ் பீஸ் கட்ணங்காட்டிக்கு அவளும் படிச்சுப் போட்டு இன்னைக்கு வேலைக்கு போயி லட்சக்கணக்குல சம்பளம் வாங்கறா…. நீ அத்தன தூரத்துல இருந்து வந்துட்டு சாப்புடாம போயறாத…. விருந்துல நூறு அயிட்டம் போட்டே ஆகோணும்னு மாப்பளப்பையஞ் சொல்லிப் போட்டாரு” என்று தோழி காம்யாவின் தாய் சொன்னதைக்கேட்டு தான் ஆடம்பரமாக வாழ்ந்து ஏமாந்து விட்டதாக முதலாக உணர்ந்தாள்.
தனது மகளின் நிலையை நினைத்து மகிழ்ச்சியுடன் பெருமையில் பேசிய காம்யாவின் தாயுடன், தனது நிலையை நினைத்து கவலையுடன் வறுமையில் பேசிய தனது தாயை ஒப்பிட்டுப்பார்த்த போது பேச்சு மட்டுமில்லை மூச்சே நின்று வந்தது சங்கவிக்கு.