கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2026
பார்வையிட்டோர்: 2,733 
 
 
“தொடாதே…” எனது தாய் கமலம் சத்தமிட்டுக்கத்தியதைக்கண்டு மிரண்ட முகத்துடன் அன்று குளிக்கும் முன் நான் அணிந்திருந்த சுடிதாரை குளியலறையிலிருந்து துவைக்க எடுத்து விட்டு, அம்மாவின் சத்தம் கேட்ட பின் அப்படியே கீழே போட்டு விட்டு நகர்ந்து நின்றேன்.
“உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா? முட்டுத்துணிய சட்டுனு கையில எடுக்குறே….? வண்ணாப்புள்ள மாயா வந்து தொவைச்சுப்போடட்டும். அதுக்கப்புறம் ஒரு தடவ வாஷிங்மிசின்ல போட்டு, அதுக்கப்புறம் நீ எடுத்து காயப்போடு” பூப்பெய்தி சடங்குகள் முடிந்து முதல் மாதத்தில் ஏற்பட்ட தீட்டுக்குப்பின் பதிமூன்று வயதில் நான் அதிர்ந்து போனேன்.
நான் எப்போது சாப்பிட வேண்டும், எதை சாப்பிட வேண்டும், எந்த நேரத்துக்கு சாப்பிட வேண்டும், எப்படிப்பட்ட ஆடைகளை அணிய வேண்டும், எப்போது உறங்க வேண்டும், எப்போது எழ வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என அனைத்தையுமே அம்மா தான் தீர்மானித்தாள். நான் தீர்மானிக்க முடியாத வயதில் இருந்ததால் எனது மனதில் தோன்றுவது எதையும் நேரடியாக கூற இயலவில்லை.
மாயா தான் எங்கள் வீட்டில் உள்ள அழுக்குத்துணிகளை வாரத்துக்கு ஒரு முறை வந்து துவைத்துவைத்துப்போடுவாள். மாயா வராத போது அம்மா துவைப்பாள். தீட்டுத்துணிகளை மட்டும் அம்மா துவைப்பதில்லை என தெரிந்தாலும் ‘நமது துணியை எதுவாக இருந்தாலும், எப்படி இருந்தாலும் துவைப்பதில் எதற்கு தயக்கம்?’ என யோசித்து தான் எனது துணியை துவைக்க எடுத்தேன்.
அம்மாவைப்போல் மாயாவும் ஒரு பெண் தானே…. நமது ரத்தக்கரை படிந்த துணியை நாமே தொடக்கூடாது எனும் போது இன்னொருவர் தொடுவது சரியா? அதற்கென்றே தனிப்பிறப்பெடுத்துள்ளார்களா? இதென்ன வழக்கம்? இது கொடுமையில்லையா?’ என மனதில் ஓடுவதை தாயிடம் கேட்க முடியாமல் பல இரவுகள் தூக்கமின்றி தவித்திருக்கிறேன்.
ஒரு முறை மாயாவிற்கு உடல் நிலை சரியில்லாத போது அவளுக்கு பதிலாக என்னுடன் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படிக்கும் அவளது மகள் சகி வந்து துவைத்துப்போட்டு விட்டுச்செல்வதைப்பார்த்து நெஞ்சம் உடைந்து போனேன்.
“அம்மா…. என்ன பழக்கம் இதெல்லாம்? தொவைக்க உனக்கு நேரமில்லாததுனால தானே வேலைக்கு ஆள் போட்டிருக்கே….? அவங்க வராதப்ப நீயும் தொவைச்சுப்போடறே… அது சரி. அதென்ன தீட்டுத்துணிய மட்டும் எத்தன நாள் கெடந்தாலும் மாயாதான் தொவைக்கனம்? அவ வரலேன்னா அவ பொண்ணு வந்து தொவைக்கனம்னு சொல்லறே….? நாம தொவைச்சா கை அழுகிடுமா….” நான் துணிந்து அணையில் தேங்கிய தண்ணீர் அணை உடைந்ததும் சீறுவது போல ஒரு வேகத்தில் பயத்தை மறந்து பேசினாலும் எனது உடல் லேசாக நடுங்கியது.
“கயா….. உனக்கு வயசு வளர வளர அறிவு கொறையுது. இது காலங்காலமா நம்ம முன்னோர்கள் கடைப்புடிச்ச பழக்கம். நாம தொட்டா தெய்வ குத்தமாயிடும். மகாலட்சுமி நம்மள விட்டு விலகிப்போயிரும். ஆராச்சும் சூனியம் வெச்சா அது உடனே புடிச்சுக்கும்… யோகம் போயிரும்…” அம்மாவுக்கு தெரிந்ததை பேசிக்கொண்டே இருந்தாள்.
“அந்த ரத்தம் நமக்குள்ளிருந்து தானே வந்துச்சு….? அதனால நமக்கு நீ சொன்னதெல்லாம் நடக்காதா என்ன….?” மறுபடியும் துணிந்தேன்.
“எச்சில் கூட நமக்குள்ளிருந்துதான் வருது. துப்பின பின்னாடி தொட முடியுமா…?”
அம்மாவின் இந்தப்பேச்சால் மீண்டும் ஒரு முறை அதிர்ந்து போனேன்.
“கரெக்டா சொன்னீங்கம்மா. நாம துப்பின எச்சிலை நாம தொட முடியாது. தொடக்கூடாது. தொட்டா அசிங்கம். நீங்க பேசினது ரொம்ப, ரொம்ப சரி. உங்களோட எச்சிலை நீங்களே தொடக்கூடாதுன்னா மத்தவங்க தொடறது சரியாம்மா….‌?” நான் கேட்ட இந்தக்கேள்வியால் அதிர்ந்து போன அம்மா, உடனே குளியலறையில் இருந்த எனது தீட்டுத்துணியை எடுத்து துவைக்க ஆரம்பித்ததும் எனது மனம் சாந்தமானது.
கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *