மாலை மயக்கம்






(2002ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4
அத்தியாயம்-1
அஸ்வினி! இந்த இட்லியைக் காக்காவுக்கு வச்சிட்டு வந்திடேன்” செண்பகம் சிறிய தட்டில் ஒரு இட்லியை வைத்து மகளிடம் நீட்டினாள்.
“நான் இன்னும் தலைகூட வாரலே. செல்விகிட்டே கொடுத்தனுப்பேன்!” ஈரக்கூந்தலில் சிக்கெடுத்தபடி சிணுங்கிய அஸ்வினி, செப்புச் சிலை போல் அழகாயிருந்தாள்.
“அவதான் அவசர அவசரமா பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பிட்டிருக்காளே!”
“அப்ப எனக்கு மட்டும் காலேஜுக்கு நேரமாகலையாக்கும்?”

“உனக்கென்ன? அமுதாவோட மொபெட்டுல நோகாம போயிடுவே. செல்வி அப்படியா? உனக்கு அமுதா கிடைச்ச மாதிரி, அவளுக்கு ஒரு குமுதா கிடைக்கலியே! பாவம்… அவ இடிபட்டு, மிதிபட்டு பஸ்லே இல்லே போக வேண்டியிருக்கு!” அங்கலாய்த்தாள், செண்பகம்.
“எங்க மேலே திருஷ்டி விழ யார் கண்ணும் வேண்டாம். உன் கண்ணே போதும், கொடு இப்படி” செல்லமாய்ச் சிணுங்கிக்கொண்டே அம்மாவிடமிருந்து தட்டைப் பிடுங்கி மொட்டை மாடிக்குச் சென்றாள், அஸ்வினி.
“காலையிலே அவளை வம்புக்கு இழுக்கலேன்னா உனக்கு நிம்மதி வராதே!” குளித்து முடித்துவிட்டு உடம்பைத் துடைத்துக்கொண்டே மனைவியிடம் வந்தார். சேதுராமன்.
“உண்மையைத்தானே சொன்னேன்?”
“நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கேன். ஆனா, அஸ்வினி- அமுதா மாதிரி இணைபிரியாத தோழிகளைப் பார்த்ததே இல்லை.”
“நான் இப்பதான் புதுசா இந்த வீட்டுக்கு வந்திருக்கிற மாதிரியில்லே சொல்றீங்க? இதெல்லாம் எனக்குத் தெரியாதா?”
“அப்புறம் ஏன்டி கண்ணுப் போடுறே?”
“ஆமா… இதுலே எனக்கு வருத்தம் பாருங்க… அதனால கண்ணுப் போடுறேன். ரெண்டு குழந்தைகளையும் பார்த்து நான் எவ்ளோ ஆனந்தப்படுறேன்னு எனக்குத்தான் தெரியும். பெத்தவ கண்ணுபட்டுதான் திருஷ்டி விழுந்திடப் போகுதாக்கும்?”
“சரி… சரி… உன்னைப் பேசவிட்டா இன்னைக்கு முழுக்க பேசிக்கிட்டேதான் இருப்பே! எனக்கும் ஆபீசுக்கு நேரமாயிடுச்சு. சாப்பாடு தயாரா?”
“தயாராகாமலா காக்காவுக்குக் கொடுத்தனுப்பினேன்?”
“பதிலுக்குப் பதில் பேசிட்டிருக்காம முதல்ல எடுத்து வை.”
“பேசத் தொடங்கினது நீங்க. பழி என் மேலேயா?”
“மன்னிச்சிடு லோகமாதா… முதல்ல சாப்பாடு எடுத்துவை”
சற்றே எரிச்சலுடன் பேசிவிட்டு அகன்றார், சேதுமாதவன். இவர்கள் பேசுவதைக் கேட்டுச் சிரித்தபடி படியிறங்கினாள், அஸ்வினி.
“என்னடி சிரிப்பு வேண்டிகிடக்கு?”
அம்மா கோபமாய்க் கத்துவது கண்டு அவளின் சிரிப்பு அதிகமானது.
“அப்பாகிட்டே நல்லா வாங்கிக் கட்டினியா?”
“இப்ப என்கிட்டே வம்படிக்க மட்டும் நேரமிருக்கா? போ… போய் துணியை மாத்து”.
“என்ன… பேச்சு திசைமாறுது?” என்றவள், தன்னறைக்குள் நுழைந்தாள்.
“அப்பாவுக்கும், பொண்ணுக்கும் என்னைக் கண்டாலே இளக்காரம்தான்!” முணுமுணுத்தபடி உணவை எடுத்து வைத்தாள், செண்பகம்.
“ஆனா, நான் எப்பவும் உன் கட்சிதாம்மா!” அம்மாவின் தோளில் வந்து தொற்றிக்கொண்ட செல்வி, பள்ளிச் சீருடையில் கண்களை உறுத்தும் வகையில் சிக்கென்றிருந்தாள்.
“வாம்மா!உட்காரு. சாப்பாடு எடுத்து வைக்கிறேன். அதுக்கு முன்னாடி, இந்தா உன்னோட மதியச் சாப்பாடு… முதல்ல பையில வச்சிட்டு வா!”
“சரிம்மா” என்றபடி அம்மா கொடுத்த சாப்பாட்டை வாங்கிக்கொண்டு சென்றாள்.
மேசை முன் வந்தமர்ந்த சேதுராமனுக்கும், செல்விக்கும் சாப்பாடு பரிமாறினாள், செண்பகம்.
“எங்கே அஸ்வினி?”
“வருவா… துணி மாத்திட்டிருக்கா… நீங்க சாப்பிட்டுக் கிளம்புங்க”.
“அப்பா… நானும் வந்தாச்சு” அப்பாவின் பக்கத்தில் வந்தமர்ந்தாள். அஸ்வினி.
செண்பகம் அவளுக்கும் பரிமாற…
உள்ளே நுழைந்தாள் அமுதா. குறையில்லா அழகிற்கு சொந்தக்காரி.
“அஸ்வினி! என்ன சாப்பிடுறே?”
“வழக்கமான இட்லி- சாம்பார்தான்!”
“ஆனா, உனக்கு புட்டுதானே ரொம்ப பிடிக்கும். இந்தா… இதை உனக்காக என் வீட்டு சமையல்காரிகிட்டே சொல்லி எடுத்துட்டு வந்தேன். இதைச் சாப்பிடு!”
அமுதா கட்டளையிட, ஆர்வமாய் அவள் நீட்டியதை வாங்கிக்கொண்டாள்.
ஆனா, எனக்குப் பிடிச்சதென்னவோ மணக்க மணக்க மாமி வைக்கிற இந்த வெங்காய சாம்பாரும், இட்லியும்தான். அது, வீணாப் போயிடக்கூடாது. உன் தட்டை இப்படித் தள்ளு!” உரிமையுடன் அவள் தட்டைத் தன் பக்கம் இழுத்துச் சாப்பிடத் தொடங்கினாள்.
அஸ்வினியைத் தவிர, அங்கிருந்த மற்ற மூவரும் அவள் செய்கையை வியப்புடன் பார்த்தார்கள்.
“என்ன மாமி அப்படிப் பார்க்கிறீங்க?”
“இல்லே… அவ சாப்பிட்ட எச்சிலை எந்த அசூயையும் இல்லாம எடுத்துச் சாப்பிடுறியே… அதான்!” ஆச்சரியம் விலகாமல் கேட்டாள்.
“இதிலே ஆச்சரியப்பட என்ன இருக்கு? நான் வேற, அஸ்வினி வேற இல்லையே?”
“கேக்கவே மகிழ்ச்சியா இருக்கும்மா. ஆனா, ஒருத்தர் மேலே ஒருத்தர் இவ்வளவு நெருக்கமா இருக்கீங்களே. உங்களுக்குள்ளே பிரிவுன்னு ஒண்ணு வந்தா எப்படித் தாங்கிக்கப் போறீங்க?”
“பிரிவா… எங்களுக்குள்ளேயா? என்னம்மா உறுறே?” என்றாள் கோபமாய், அஸ்வினி.
“இதிலே உள்றுறதுக்கு என்ன இருக்கு? நடக்கப்போறதைப் பற்றிதானே பேசுறேன்? ஆண்களோட நட்பாவது கடைசி வரை சாத்தியம். ஆனா, பெண்கள் அப்படியில்லையே! கல்யாணம் பண்ணிக்கிட்டு ஆளுக்கொரு மூலையிலே வாழப்போறீங்க. உனக்குன்னு ஒரு குடும்பம், அவளுக்குன்னு ஒரு குடும்பம்னு ஆகிடும். அதுக்குப்பிறகு கணவனையும், குழந்தைகளையும், வீட்டையும் பார்த்துக்கிறதுக்கே நேரம் போதாது”.
செண்பகம் அப்படி சொன்னதும் அமுதாவும், அஸ்வினி யும் கலக்கத்துடன் ஒருவரையொருவர் பார்த்தனர்.
‘இப்படியெல்லாம் நடக்குமா?’ என்கிற பரிதவிப்பு.
சேதுராமனும், செல்வியும் அங்கு நடக்கும் கூத்தை சுவாரசியத்துடன் பார்த்தபடி சாப்பிட்டார்கள்.
“அது… அதெப்படி? எங்களை யாராலும், எந்த உறவாலும் பிரிக்க முடியாது” என்றாள், அமுதா, குரல் பிசிறடிக்க.
“ஆளுக்கொரு திசையிலே மாப்பிள்ளை அமைஞ்சா?”
“அப்படிப்பட்ட மாப்பிள்ளை எங்களுக்கு வேண்டாம்”.
“நீங்க பிரியாம இருக்கணும்னா ஒரே ஒரு வழிதான் இருக்கு!”
“என்ன வழி மாமி… சொல்லுங்க?” ப்ரபரத்தாள் அமுதா.
“ரெண்டு பேரும் ஒரே மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்குங்க!”
அதைக்கேட்டு சேதுராமனின் முகம் ஜிவுஜிவுத்தது. “செண்பகம்… உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு? என்ன பேசுறோம்னு புரிஞ்சுதான் பேசுறியா?”
“இ… இல்லைங்க… சும்மா விளையாட்டுக்குத்தான்..”.
“விளையாட்டுக்குப் பேசுற பேச்சா இது?’
அரண்டுபோய்விட்டான், செண்பகம்.
“மன்னிச்சிடுங்க!”
“இனியொருமுறை இப்படிப் பேசாதே! பொம்பளைங்க மனசைப் பற்றி உனக்குத் தெரியாதா? எதிலே வேணும்னாலும் பங்கு போட்டுக்குவாங்க. ஆனா, கணவனைப் பங்கு போட்டுக்குவாங்களா?”
“மாமா… விடுங்க. விளையாட்டாசொன்னதை ஏன் பெரிசா எடுத்துக்கிறீங்க? மாமி புத்திசாலித்தனமா ஒரு யோசனை சொல்லுவாங்கன்னு நினைச்சேன். இப்படி உங்ககிட்டே வசமா மாட்டிக்குவாங்கன்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கலே!”
“என்னையும், அமுதாவையும் கல்யாணம்ங்கிற ஒருசடங்கு பிரிக்கும்னா… அப்படிப்பட்ட கல்யாணமே வேண்டாம்’ என்றாள். அஸ்வினி.
பதறிப் போனார், சேதுராமன்.
“சேச்சே… என்ன பேசுறே நீ? இப்ப என்ன, கல்யாணமானாலும் நீங்க ரெண்டு பேரும் பிரியக்கூடாது. அவ்வளவு தானே? பேசாம… உங்க ரெண்டு பேருக்கும் ஒரே வீட்டிலே அண்ணன் – தம்பியா பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சிட்டா போச்சு.”
“நல்ல யோசனைப்பா!” முகம் மலர்ந்தாள், அஸ்வினி.
“மாமான்னா மாமாதான்” என்று பாராட்டினாள்,அமுதா,
சற்று நேரத்தில் தோழிகள் இருவரும் புறப்பட்டுச் சென்றனர்.
“நீங்க சொன்ன யோசனை மட்டும் நடக்கிற காரியமா?” கேட்டாள், செண்பகம்.
“ஏன் அப்படிக் கேட்கிறே?”
“அமுதா யார்? பெரிய பணக்கார வீட்டுப் பெண். அதுவும் ஒரே பெண். அவங்க அந்தஸ்துக்கும், தகுதிக்கும் எந்த மாதிரி பெரிய இடத்துல மாப்பிள்ளை பார்ப்பாங்க. நாம அப்படியா? கணக்குப் போட்டு வாழுறவங்க. நம்ம அஸ்வினிக்கு அப்படிப் பட்ட இடத்துல வரன் பார்த்து வாழவைக்க முடியுமா?”
“இதோ பாரு செண்பகம்! யாருக்கு என்ன விதிச்சிருக்கோ, அதுப்படிதான் நடக்கும். இப்படியும் நடக்கலாம், அப்படியும் நடக்கலாம். சின்னஞ்சிறுசுங்க… அதுங்க மனசை அது இதுன்னு சொல்லிக் கலங்கடிக்க விரும்பலே. அவங்க ஆசைப்படி கடைசிவரை பிரியக்கூடாதுன்னு வேண்டிக்கிறேன் எனக்கு என்னவோ அவங்க ரெண்டு பேரும் பிரியவே மாட்டாங்கன்னுதான் மனசுக்குத் தோணுது” என்றார், நம்பிக்கையாய் சேதுராமன்.
அத்தியாயம்-2
அவர்கள் இருவரும் ஒன்றாகப் பயணித்தது, இரண்டு மயில்களை ஒருசேரப் பார்ப்பது போலிருந்தது.
இளம் காலை வெயில் அவர்கள் முகத்தை மேலும் பொன் நிறமாக்கி, பளபளக்க வைத்தது. வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த அமுதாவின் விழிகள், சூரிய வெளிச்சத்தை எதிர்நோக்க தைரியமற்று சுருங்கின.
“இன்னைக்கு ‘ஹெல்மெட்’ போட்டுட்டு வர மறந்திட்டியா அமுதா?” கண்ணாடியில் தெரிந்த அவளின் முகத்தைப் பார்த்துக் கவலையுடன் கேட்டாள்.
அமுதாவின் எண்ணங்கள் எங்கோ சிறகடித்துப் பறந்தன. அதனால் அஸ்வினியின் குரல் அவள் சிந்தையைத் தொடவில்லை.
“அமுதா…”
“….”
“அமுதா… உன்னைத்தான்!”
“உம்… எ…என்ன?” சட்டென வண்டியை நிறுத்தினாள்.
“என்னாச்சு அமுதா? நல்லாதானே இருக்கே?” மிரட்சி யுடன் கேட்டாள், அஸ்வினி.
“என்னமோ கேட்டியே?”
“நீ சரியில்லே அமுதா. உன் மனசை ஏதோ ஒரு கவலை அழுத்திக்கிட்டிருக்கு. இந்த அழகுல எப்படி வண்டி ஓட்டுறே? முதல்ல இறங்கு.”
“இல்லே… ஒண்ணுமில்லே…”
“இல்ல… இருக்கு. என் அமுதாவோட முகத்தை வச்சே அவ மனசுல என்ன இருக்குங்கிறதை என்னால் கண்டுபிடிக்க முடியும். அதோ அந்த ஓட்டலுக்குப் போகலாம் வா!”
“ஒண்ணுமில்லேடா… நீயா எதையும் கற்பனை பண்ணிக்காதே. காலேஜுக்கு நேரமாயிடுச்சு. வகுப்பு தொடங்கிடும்.”
“அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல உன் மனசுதான் எனக்கு முக்கியம். நீ வா… சொல்றேன்!” அஸ்வினி அவளுக்கு முன்னே நடக்க, வேறு வழியின்றி அவள் பின்னே வண்டியைத் தள்ளிச் சென்றாள், அமுதா.
காலியாய்க் கிடந்த மேசையின் முன் அமர்ந்தனர். காப்பி குடித்தனர்.
ஆருயிர்த் தோழியை ஆழ்ந்து நோக்கினாள், அஸ்வினி. கலக்கத்துடன் அவள் விழிகள் அலைபாய்ந்தன.
“சொல்லு அமுதா… என்ன பிரச்சினை?’
இப்படியொரு கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை. திகைப்புடன் நோக்கினாள்.
“நாம பிரிஞ்சிடுவோமோ?”
“என்ன அமுதா சொல்றே? என்ன இது பைத்தியக்காரத்தனமான கேள்வி?”
“இப்படி இருக்க முடியாது, அப்படியிருக்க முடியாதுன்னு நம்மளைச் சமாதானப்படுத்திக்க நாமளே ஏதேதோ காரணங்களைச் சொல்லிக்கிறோம்னு தோணுது. உங்கம்மா சொல்ற மாதிரி, கல்யாணம் நடந்து கணவன் என்கிற புது உறவு வந்து நம்மைப் பிரிச்சிடுமோன்னு பயமா இருக்கு!”
“ஏன்… எங்கப்பா சொன்ன மாதிரி ஒரே வீட்லே அண்ணன்- தம்பிகளா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டா போச்சு!”
“அதெல்லாம் நடக்குங்கிறது நிச்சயமில்லே. உனக்கே தெரியும். நான் வாழப்போகிற இடத்திலே எந்தப் பிக்கல் பிடுங்கலும் இருக்கக்கூடாதுங்கிறதுக்காக, நிறைய சொத்துடன் ஒரே வாரிசா உள்ள வரனா எங்க வீட்லே தேடிக்கிட்டிருக்காங்க. உனக்கு வெளியூர்லே வரன் அமைஞ்சிட்டா என்னைப் பிரிஞ்சி போயிடுவே இல்லே?”
“நிச்சயம் மாட்டேன் அமுதா! நீ கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், நான் பண்ணிக்கப் போறதில்லே. அப்பதான் உன்னை நினைச்சப்பவெல்லாம் வந்து பார்க்க முடியும்!”
“நடைமுறைக்கு ஒத்துவராத முடிவு! எத்தனை காலத்துக்கு துணையில்லாம வாழ்ந்திட முடியும்? உன் அப்பா. அம்மாதான் விட்டுடுவாங்களா என்ன?”
“அப்ப இதுக்கு என்னதான் முடிவு?”
“நமக்கு வரப்போகிற கணவர்கள் நமக்கு நண்பர்களா இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்?”
“நண்பர்களாய் இல்லாவிட்டாலும் நாம அவர்கள் இருவரையும் நண்பர்களாய் ஆக்கிட வேண்டியதுதான்!”
“அதுமட்டுமில்லே அஸ்வினி. நாம பக்கத்துப் பக்கத்து வீடாய் இருந்தால் இன்னும் நன்றாயிருக்கும். இன்று போல் எப்போதும் பிரியாமல் இருக்கலாம். கவலைப்படாதே… உன் புகுந்த வீட்டுக்குப் பக்கத்திலேயே எனக்கு ஒரு வீடு வாங்கித் தரச்சொல்லிடுறேன். அப்பா கண்டிப்பாய் வாங்கித் தருவார்!”
“நாம பேசிக்கிறது சிறுபிள்ளைத்தனமாய் இருந்தாலும், நாம நினைக்கிறதெல்லாம் நடந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?”
கண்களில் சிறு ஏக்கம் படரக் கூறினாள், அஸ்வினி.
“எல்லாமே நம்ம கையில்தான் இருக்கு. திருமண விசயத்தில் அவசரப்படாம முடிவெடுக்கணும்”.
“சரி… நேரமாகிடுச்சு… கிளம்பலாமா?”
“உம்…”
பணம் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்கள்.
அமுதாவின் மனசு இப்போது கொஞ்சம் தெளிவாய் இருந்தது.
ஒரு பெரிய பிரச்சினைக்குத் தீர்வு கண்டது போல் நிம்மதி படர்ந்திருந்தது.
மொபெட்டில் ஏறி அமர்ந்து புறப்பட்டபோது, அவர்கள் பக்கத்தில் ஒரு உயர்ரக கார் வந்து நின்றது.
கண்ணாடி இறக்கப்பட்டு ஒரு குரல் “அலோ… அமுதா!” என்றது.
வியப்பும், மகிழ்ச்சியுமாய் விழி அகன்றது, அமுதாவுக்கு.
“அலோ பரத்!” உற்சாகமாய் வெளிப்பட்டது அமுதாவின் குரல்.
பரத் என்ற பெயர் காதில் விழுந்ததும்தான் தாமதம், உடல் முழுக்க சிலிர்க்க… சட்டெனத் திரும்பினாள், அஸ்வினி.
“ரெண்டு பேரும் இங்கே என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க?” பரத்தின் கண்கள் அஸ்வினியை அளவெடுத்தன.
“கடைக்கு வந்து எல்லாரும் என்ன பண்ணுவாங்க?”
“காலேஜுக்கு நேரமாகலே?”
“கிளம்பிக்கிட்டே இருந்தோம். அதுக்குள்ளே நீங்க வந்து மடக்கிட்டீங்களே!”
“ஓகோ…. நான் வந்து மடக்கிட்டேனா?” இதழ்க் கடையோரம் அரும்பிய புன்னகையுடன், யதார்த்தமாய் பார்ப்பது போல் அஸ்வினியைப் பார்த்தான்.
அஸ்வினியின் இதயம் படபடவெனத் துடிக்க… தலை கவிழ்ந்தாள்.
“ஆமாம்… மடக்கிட்டீங்க!” என்ற அமுதா, பரத்தின் கம்பீரத்தைக் கண்ணுக்குள் நிரப்பி ஆனந்தப்பட்டாள்.
இளம் நீலநிற சல்வாரில் ஒப்பனையில்லாமல் பளபளத்த முகத்திற்கு எடுப்பாய் சின்ன பொட்டு, கிளிப்பில் அடக்கப்பட்ட அடர்ந்த கூந்தலுடன் பாந்தமாய் நின்றிருந்த அஸ்வினியைப் பார்க்கும்போது பரத்தின் மனசிற்கு இதமாய் இருந்தது.
அவள் தன்னிடம் பேசமாட்டாளா? என்று ஏக்கமாய் இருந்தது.
அஸ்வினியின் நிலையும் அதுதான்.
பரத் பார்க்காதபோது, அவனைப் பார்த்ததில் அவள் நாடித்துடிப்பு கூடியது.
பொதுவாய் பரத், அமுதாவிடம் எதையெதையோ பேசினாலும் அவன் கவனமெல்லாம் அஸ்வினியிடமே இருந்தது.
பரத், வேறு யாருமல்ல. அமுதாவின் மாமா மகன்தான். அமுதாவின் அம்மா தனலட்சுமியின் அண்ணன் மகன்.
சொந்தமாய் குளிர்பானத் தொழிற்சாலை நடத்திவரும் இளம் தொழிலதிபர்.
“மாமாவும், அத்தையும் எப்படியிருக்காங்க அமுதா?”
“உங்க மேலே ரொம்ப கோபமா…”
“கோபமா… ஏன்?”
“பின்னே? ஒரே ஊரில் இருந்துகிட்டு ஆண்டுக்கு ரெண்டு மூணு தடவை எங்க வீட்டுக்கு வந்து தலையைக் காட்டிட்டுப் போனா, கோபம் வராம என்ன செய்யும்? இந்த விசாரிப்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே” என்றாள் செல்லமாய் கோபப்பட்டு.
“என்ன அமுதா? உனக்கு என்னைப் பற்றித் தெரியாதா சிமெண்டு தொழிற்சாலையை நான் கவனிக்கலேன்னு அப்பாவுக்கு கோபம். எனக்கு விருப்பம் இல்லாத தொழில்ல ஈடுபட்டு என்ன சாதிக்க முடியும்? என் வேலைக்கே நேரம் சரியா இருக்கு. அப்புறம் எப்படி நான் உங்க வீட்டுக்கெல்லாம் வந்து தலையையும் வாலையும் காட்டிட்டுப் போக முடியும்?”
அவனின் நையாண்டிக்கு வாய்விட்டுச் சிரித்த அமுதா, “எனக்குத் தெரியாதா பரத்? ஆனா, அதேநேரம் எப்பவும் வியாபாரம், தொழில்னு எந்திரத்தனமா அலைய வேண்டாமேன்னு தோணுது!”
“நாளைக்கே சாதிக்கப் போகிறோம்ங்கிற எண்ணத்தோட உழைச்சாதான் இன்னைக்கே நாம் நினைச்சதை அடைய முடியும். கடந்துபோகிற ஒவ்வொரு நிமிசத்தையும் கடவுளே நினைச்சாக்கூட திருப்பித் தரமுடியாது. நேரத்தை வீணாக்குவது எனக்குப் பிடிக்காத ஒண்ணு. இதுதான் உழைக்கிற, சாதிக்கிற வயசு. பொழுதுபோக்குக்கு இடம் கொடுத்தா…. இதுதான் அனுபவிக்கிற வயசு, நேரத்தை வீணா செலவழிக்காம, காரணமா அலையணும்னு தோணும். “
“இப்ப உங்களை நான் எந்தப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டேன்னு பக்கம் பக்கமா தத்துவம் பேசுறீங்க?”
“உன்னை விட்டா இன்னும் ஒரு மணி நேரத்துக்கு கேள் மேலே கேள்வி கேட்டுத்திணறடிச்சிடுவே ! வரட்டுமா? அடுத்த வாரம் வீட்டுக்கு வர்றேன்னு அத்தைகிட்டே சொல்லிடு. நீயும் ஒரு நாளைக்கு ஆபீசுக்கு வாயேன், உன் தோழியையும் அழைச்சுக்கிட்டு”.
“உம்… வர்றேன்!”
“உன் தோழி ஊமையா? வாயைத் திறந்து பேச மாட்டாங்களா?”
“பேசேன் அஸ்வினி. அப்புறம் செவிடுன்னு சொல்லீடப் போறார்!”
“ஏய்… சும்மாயிரு… வேண்டாம்!” வெட்கத்துடன் அமுதாவின் முதுகின் பின் மறைந்து முணுமுணுத்தாள்.
“என்னடி வெட்கம்? பரத்தை ஏற்கனவே நீ பல தடவை பார்த்திருக்கே. அப்புறமென்ன?”
“அதானே… என்னைப் பார்த்து ஏன் இத்தனை வெட்கப்படுறீங்க, கிராமத்துப் பொண்ணு மாதிரி! சரி… கிளம்புறேன் அமுதா. ஒரு முக்கியமான வேலை இருக்கு. வரேன் அஸ்வினி!” அவளை நோக்கி கையசைத்துவிட்டு காரை கிளப்பினான், பரத்.
அஸ்வினி அந்தக் காரையே ஏக்கத்துடன் பார்த்தாள்.
அமுதாவின் மனசோ வெறுமையானது போலிருந்தது ‘நல்ல பையன்!’ தனக்குத்தானே சிலாகித்துக் கொண்டாள்.
“அஸ்வினி!”
*உம்…”
“நீ பரத்தைப் பற்றி என்ன நினைக்கிறே?”
திடுக்கிட்டு நிமிர்ந்தாள், அஸ்வினி.
“ஏ… ஏன் அப்படிக் கேட்கிறே?”
“ப்ச்… சும்மாதான்… சொல்லேன்!”
“நாகரிகமான இளைஞர்” என்றாள் சிக்கன வார்த்தையில்.
“ஆமாம் அஸ்வினி. பரத் மாதிரி ஆண்கள் இருப்பது அபூர்வம். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. உனக்கும் சரி எனக்கும் சரி, இப்படிப்பட்ட ஆண்தான் கணவனா வாய்க்கணும்!” அமுதாவின் கண்கள் சொல்லும்போதே பளிச்சிட்டன.
அஸ்வினியோ, திகைப்புடன் தோழியைப் பார்த்தாள்.
– தொடரும்…
– மாலை மயக்கம் (நாவல்), முதற் பதிப்பு: நவம்பர் 2002, ராணி முத்து, சென்னை.