கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 19, 2024
பார்வையிட்டோர்: 3,027 
 
 

(1957ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24

பத்தொன்பதாவது அத்தியாயம்

பூமி சுழன்றது

தேனார்மொழியாளின் வீட்டை விட்டு வெளியேறிய பூதுகன் வீதியில் அதி வேகமாக நடந்தான், அப்பொழுது அவன் எங்கே கிளம்பினான் எங்கே போகிறான் என்பது அவனுக்கே தெரியாதிருந்தது. தேனார்மொழியாளின் மன நிலையை அறிந்த பூதுகன் எப்படியாவது அவளுடைய வீட்டை விட்டு வெளியேறுவதுதான் நலம் என்று கருதினான். அவன் தன்னுடைய வாலிபத்தைப் பற்றியோ கட்டுத் தளராத உடல் அழகைப் பற்றியோ இதுவரை சிந்திக்கவில்லை. அதிலும் அபாயம் இருக்கிறது என்பதை இப்பொழுதுதான் உணர்ந்து கொண்டான். சில நிமிஷ நேரங்கள் பழகுவதற்குள் தேனார்மொழியாளுக்குத் தன் மீது தவறான இச்சை ஏற்பட்டு விடும் என்று அவன் நினைக்கவே யில்லை. ஆரம்பத்தில் அவளுடைய இனிய வார்த்தைகள் அவனுக்கு மிகவும் அனுகூலமுள்ளவை போலத் தென்பட்டன. ஆனால் அவள் கோபங் கொண்டபோது சொல்லிய வார்த்தைகள் அவளால் எப்பொழுதேனும் துன்பம் நேருவதற்குக் காரணமுண்டு என்பதைத்தான் அவனுக்கு எடுத்துக் காட்டின. தேனார்மொழியாள் மிகவும் அழகுடையவள் தான். சொல்லப் போனால் வைகைமாலையை விட வயதில் மூத்தவளாக இருப்பினும் அவளை விட மிகவும் அழகு உடையவள் என்பதை உணர்ந்து கொண்டான். அது மட்டுமல்ல: அவளுடைய இசை மிகவும் சிறந்ததாகத் தான் இருந்தது. ஆனால் அவைகளெல்லாம் அவன் மனத்தைக் கவர்ந்து விடவில்லை. அவன் தன்னுடைய மனத்தைத் திடத்தோடுவைத்துக் கொள்ள நினைத்தான். தன்னை நம்பியிருக்கும் வைகை மாலைக்குத் துரோகம் செய்ய விரும்பவில்லை. நாட்டுப் பற்றுள்ள அவனுடைய லட்சியம் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்துவதாக இருந்தாலும் அதற்காக உள் அந்தரங்கமான துரோகம் செய்ய விரும்ப வில்லை. மறுபடியும் தேனார் மொழியாளின் வீட்டைப் பற்றியே நினைக்கக் கூடாது என்ற திட சங்கற்பத்தோடு அவன் வேகமாக நடந்தான்.

அன்று மாலை அவன் வந்ததிலிருந்து மாலவல்லியைப் பற்றி அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. பூம்புகார் புத்த விஹாரத்தில் ரவிதாசனைக் கொன்றவர்கள் யார் என்ற விவரமும் அவனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. மாலவல்லி எங்கே சென்றிருப்பாள்? அவளாகச் சென்றிருப்பாளா? அல்லது அவளை யாரேனும் கடத்திக் கொண்டு போயிருப்பார்களா? வீர விடங்கன் என்று தன் பெயரை மாற்றி வைத்துக் கொண்ட கங்க நாட்டு இளவரசன் பிரதிவீபதி திடீரென்று எங்கே மறைந்தான்? இவைகளையெல்லாம் தெரிந்து கொள்ளத்தானே அவன் காஞ்சிமா நகர் வந்தான்? இவைகளை யெல்லாம் தெரிந்து கொள்வதற்கு அனுகூலமாகத்தானே தேனார் மொழியாளின் வீட்டைத் தேடியடைந்தான்? அவளும் அவனுக்கு அனுகூலமாகத் தானே இருந்தாள்? திடீரென ஏன் துரதிர்ஷ்டவசமாக அவளுடைய விரோதம் அவனுக்கேற்பட வேண்டும்? இனி மேல் அவன் வீட்டுக்கே போவதில்லை என்று சங்கற்பம் செய்துகொண்ட அவன், இனி மேல் எப்படி யார் மூலமாகத் தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ளப் போகிறான்? இத்தகைய பிரச்னைகளெல்லாம் அவன் மனத்தில் அப்பொழுது எழுந்து ஒரு முடிவுக்கும் வர முடியாத வண்ணம் குழப்பத் துக்குள்ளாக்கியது.

குழப்பமான நிலையிலிருந்த அவன் மனம் திடீர் என்று ஒரு முடிவுக்குவந்தது. காஞ்சி மாநகரில் புத்ததேரித் தெரு என்றொரு தெரு உண்டு. அந்தத் தெருவில் கால நங்கை என்னும் புத்த பிக்ஷுணி ஒரு புத்தப் பள்ளி ஏற்படுத்தியிருந்தாள். தேரிகள் என்று சொல்லப்படும் பிக்ஷணிகளுக்குள்ளேயே குணத்தாலும், கொள்கையாலும், நடத்தையாலும் சிறந்தவளாக அவள் விளங்கினாள். அவள் மிகவும் படித்தவள். தமிழ் நாட்டிலேயே புத்த சமயத்தினரின் பெருமதிப்புக்குப் பாத்திரமானவள், அடக்கமும் சீலமும் கொண்ட அவளிடம் புத்த பிக்ஷுணியாக விளங்க நினைக்கும் அனேக பெண்கள் தர்ம விதிகளைக் கற்றுக் கொண்டிருந்தனர். பூம்புகாரிலிருந்து திடீரென்று மறைந்த மாலவல்லி காலநங்கையிடம் வந்து அடைக்கலம் புகுந்திருக்கலாமோ என்று எண்ணினான் பூதுகன். அதனால் இரவுவேளை யாயினும் புத்ததேரித் தெருவிலுள்ள புத்தப் பள்ளியில் போய்ப் பார்க்கலா மென்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று. உடனே எதிரில் வந்த மனிதரை நெருங்கிப் புத்த தேரித் தெரு எங்கே இருக்கிறதென்று விசாரித்துக் கொண்டு அந்தத் தெருவை நோக்கி வேகமாக நடந்தான்.

பாவம் ! அந்த இரவில் அவனைப் பின்தொடர்ந்து ஒளிந்து ஒளிந்து ஒரு உருவம் வருவதை அவன் கவனிக்க வில்லை. பலவீதிகளைக் கடந்து புத்ததேரித் தெருவை யடைந்தான். அத்தத் தெருவில் சுமார் பத்து பதினைந்து வீடுகள் இருந்தன. அந்த வீடுகளெல்லாம் ஒரே மாதிரி காட்சி யளித்தன. தெருக் கோடியில் ஒரு பெரிய கட்டடம் இருந்தது. அதைப் பார்த்ததுமே அதுதான் புத்தப் பள்ளியாக இருக்க வேண்டும் என்ற தீர்மானம் அவனுக்கு ஏற்பட்டது. அவன் அந்தக் கட்டடத்தை நெருங்கிய போது அந்தக் கட்டடம் மிகுந்த அமைதி நிறைந்த நிலையில் இருந்தது. சிறிது நேரம் அந்தக் கட்டடத்தின் வாசலில் நின்று யோசித்தான். அந்தக் கட்டடத்தின் வாசற் கதவு தாளிடப்பட்டிருந்தது. முற்றிலும் பெண்களே இருக்கும் அந்த புத்தப் பள்ளியில் அந்த வேளையில் கதவை இடிப்பது உசிதமா என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. அவன் எதையோ எண்ணி அங்கு வந்து விட்டான். அங்கிருந்து எதையும் அறிந்து கொள்ளாது திரும்புவது உசிதமாகப் படவில்லை. மெதுவாகப் படிகளிலேறி, கதவைத் தட்டினான். உள்ளிருந்து யாரோ பேசும் குரல் அவனுக்குக் கேட்டது. அது யாரோ ஒருபெண் மற்றொரு பெண்ணிடம் பேசும் குரல்தான் என்பதையும் தெரிந்து கொண்டான். சிறிது நேரத்தில் கதவு திறக்கப் பட்டது. வாசற்படியருகே பிக்ஷுணி நின்று கொண்டிருந்தாள், இரவு நேரத்தில் தாங்கள் இருக்கும் ஆசிரமம் போன்ற அந்த இடத்துக்கு ஒரு ஆண்பிள்ளை வந்தது அந்த பிக்ஷுணிக்குச் சிறிது ஆச்சர்யத்தை யளித்தது போலிருக்கிறது. அவள் வியப்போடு பார்த்து, “தாங்கள் யார் ? இங்கு வந்த காரணம் என்ன?” என்று கேட்டாள்.

அவன் மிக்க மரியாதையோடும் வணக்கத்தோடும். “நான் சோழ நாட்டைச் சேர்ந்தவன். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து வருகிறேன்” என்றான்.’

அந்த வயதான பிக்ஷுணி “அப்படியா? தாங்கள் இங்கு வந்த காரணம்…?” என்று வினவினாள்.

“சமீபத்தில் காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள புத்த சேதியத்தில் ஒரு பிக்ஷு கொலை செய்யப்பட்ட விஷயம் தங்களுக்குத் தெரிந்திருக்கலாம்” என்று தயங்கியபடியே சொல்லி நிறுத்தினான்.

இதைக் கேட்டதும் அந்த பிக்ஷுணி கலக்கமடைந்தவள் போல், “எனக்கு அவ்விவரங்கள் தெரியாது. நீங்கள் சொல்வதிலிருந்து தான் தெரிகிறது. புத்த சேதியத்தில் கொலையா? என்ன அநியாயம்? இத்தகைய தீய காரியம் ஒரு புத்த சேதியத்தில் நடந்ததென்பதைக் கேட்கத்தான் மனம் பொறுக்க வில்லை. அதன் விவரத்தையறிய நான் ஆசைப்படுகிறேன்” என்றாள்.

”அதன் விவரத்தைத் தங்களுக்குச் சொல்ல வேண்டுமென்பதுதான் என் விருப்பம். அதோடு தங்களிடமும் சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலில்தான் இரவு வேளையில் இந்த இடத்துக்கு வரலாமா கூடாதா என்பதையும் ஆலோசிக்காமல் வந்தேன், மன்னிக்கவும். இதைப் பற்றி இங்கு நின்று பேசுவது சிலாக்கிய மில்லை யென்று நினைக்கிறேன். நான் உள்ளே வர அனுமதியுண்டா?” என்று கேட்டான் மெதுவாக.

“தாராளமாக வாருங்கள்” என்றாள் அந்தக் கால நங்கை யென்னும் புத்த பிக்ஷுணி, பூதுகன் அவளைப் பின்தொடர்த்து உள்ளே சென்றான். உள்ளே அகன்ற சதுரமான கூடம். சுற்றிலும் தீபங்கள் எரிந்து கொண்டிருந்தன, புத்தபெருமானின் பூர்வபிறவிக் கதைகளைச் சித்திரிக்கும் அழகான ஓவியங்கள் சுற்றிலும் உள்ள சுவர்களில் எழுதப் பட்டிருந்தன. கூடத்தின் நடுவே ஒரு உயர்ந்த ஆசனம் போடப்பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் போடப்பட்டிருந்த கோரைத் தடுக்குகளில் கையில் ஓலைச்சுவடிகளை ஏந்தியவண்ணம் பல புத்த பிக்ஷுணிகள் அமர்ந்திருந்தனர். பூதுகனோடு உள்ளே வந்த காலநங்கை அவர்களுக்கு ஏதோ சமிக்ஞை காட்ட அவர்களெல்லாம் வணக்கம் செலுத்தி விட்டு மெதுவாக எழுந்து சென்றனர். அந்த இடத்தில் தூய அமைதியும் தெய்வீக மணமும் கமழ்ந்து கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.


கண நேரத்தில் பூதுகன் யாவற்றையும் உணர்ந்து கொண்டான். அந்தப் புத்த பிக்ஷுணிகளுக்குள் வயதிலும் அனுபவத்திலும் சிறந்தவளாக விளங்கும் அந்தக் காலநங்கை மகா தேரியாக இருந்து புத்ததரும உபதேசங்களைக் கற்பித்துக் கொண்டிருந்தாள் என்பதை எளிதாக உணர்ந்து கொண்டான். அதோடு அவனது பார்வை அங்கிருந்து சென்ற புத்த பிக்ஷுணிகளின் முகத்தை ஒரு கணத்தில் பார்த்துத் தெரிந்து கொண்டது. அவனுடைய கவலையெல்லாம் மாலவல்லி அங்கு இருக்கிறாளா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டு மென்பதுதானே? ஆனால் அவள் இங்கு இல்லையென்பதைச் சில வினாடிகளுக்குள்ளேயே உணர்ந்து கொண்டு விட்டான். அவள் அங்கு இருந்தால் அவளும் தருமோபதேசங்களைக் கேட்க அங்கு வந்திருக்க மாட்டாளா? அவள் அங்கு இல்லை என்பதை யூகித்துக் கொண்டதும் அவன் தன் காரியம் முடிந்துவிட்டதாகக் கருதி விடவில்லை. புத்த பிக்ஷுணியாகிய காலநங்கையோடு பேசி அவளுடைய மன நிலையையும் அறிந்து கொள்ள விரும்பினான். காலநங்கை அங்கு போடப் பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்து அவனையும் பக்கத்தில் அமரும்படி கை காட்டினாள். பூதுகன் மிகவும் அடக்கத்தோடு அவள் எதிரில் உட்கார்ந்தான், காலநங்கை ஆழ்ந்த மன வருத்தத் தோடு, “சிறந்த ஞானியாகிய அக்க மகாதேரர் எழுந்தருளி யிருக்கும் பூம்புகார் புத்த சேதியத்தில் இப்படியொரு காரியம் நடந்தேறியதைக் கேட்டதும் மிகுந்த மன வருத்தம் ஏற்படுகிறது. இந்தச் சமயத்தில் மிகுந்த சீலரான அவருடைய மனம் எப்பாடு பட்டிருக்கும் என்பதை நினைத்தால் மனத்தில் சங்கடம் ஏற்படுகிறது. ஒன்று மாத்திரம் உண்மை. ஒரு துறவி தன்னைத்தானே காத்துக் கொள்வதைத் தவிர வெளியார்களின் தூய்மையையும் காக்க முற்பட்டானானால் அவன் உலகச் சுழலில் சிக்கித் தடுமாறத்தான் வேண்டியிருக்கிறது. ஆயினும் இந்தக் கொலையைப் பற்றிச் சிறிது விவரம் அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றாள்.

“பூம்புகார் புத்த சேதியத்தில். இந்தக் காஞ்சிமா நகரிலிருந்து வந்த புத்தபிக்ஷுவான ரவிதாசர் என்பவர் தான் கொல்லப்பட்டார். அவரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்” என்றான் பூதுகன்.

புத்த பிக்ஷுணி ஒரு பெருமூச்சு விட்டாள். “ரவிதாசரா? சீவர ஆடையணிந்து புத்த சங்கத்தில் சேருவது மகா கடினமானதென்று சொல்லுவார்கள். ஆனால் அதுவே சில சமயத்தில் மனிதர்களை உத்தேசித்தும் அதிகாரச் சலுகையினாலும் மிகச் சுலபமாக நிறைவேறி விடுகிறது. ரவிதாசர் ஜைன மதத்தில் இருந்தவர். அவர் புத்த தருமத்தை எவ்வளவு தூரம் சுற்றுத் தெரிந்தவர் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் திடீரென்று புத்த சங்கத்தில் சேர்ந்ததும், சேர்த்துக் கொள்ளப்பட்டதும் ஏதோ அதிகாரச் சலுகையால்தான் என்பதை நான் உணர்ந்தேன். அரசாங்க அதிகாரம் உள்ளவர்களெல்லாம் சில சமயம் சமய நிர்வாகங்களுக்குள்ளும் வந்து புகுந்து ஊழலை ஏற்படுத்துகிறார்கள்….” என்றாள் காலநங்கை.

பூதுகன் அடக்கமான குரலிலேயே, “உண்மை. அதைப்போல சமயப்பணி செய்பவர்களும் அரசியல் அதிகார ஆசைக்குட்பட்டு அதில் புகுந்து அரசியலையும் குழப்புகிறார்கள்” என்றான்.

“எப்படியோ அரசியல் செல்வாக்கின் காரணமாக மதத்தைப் பரப்ப வேண்டு மென்று நான் சொல்லவில்லை. அதனால் மதத்தின் பெருமைக்குத்தான் இழுக்கு ஏற்படும்…” என்றாள்.

பூதுகன் சிரித்தான். “ஒரு உண்மையை நீங்கள் மறுக்க முடியாது. அரசின் தயவை எதிர்பார்க்காமல் இந்த நாட்டில் எந்த மதமும் முன்னேறியதில்லை. புத்த பெருமான் பரி நிர்வாணம் அடைந்த பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் அசோகன் தோன்றிப் பௌத்த தரும சங்கங்களை ஒழுங்கு படுத்தி இம் மதத்தை உலக மெங்கும் பரப்பலானான். போகட்டும். உங்களுக்கு புத்த பிக்ஷுணியாகிய மாலவல்லியைப் பற்றி ஏதேனும் தெரியுமா?” என்று கேட்டான்.

இதைக் கேட்டதும் காலநங்கை பூதுகனை வியப்போடு பார்த்துக்கொண்டே, “மாலவல்லியா… ? நல்லபெண். ஆனால் புத்த சங்கத்தில் சேரும் அருகதை அவளுக்கு இல்லை. அவள் மிகவும் மன்றாடிக் கேட்டுக் கொண்டதன் பேரில் அவளை நான் சங்கத்தில் ஒரு பிக்ஷுணியாகச் சேர்த்துக் கொண்டேன். ஆனால் அவள் பௌத்த தருமத்தை மீறிச் சில காரியங்களில் ஈடுபடுகிறா னென்பதை யறிந்ததும் மனம் வருந்தினேன். அவள் இங்கு இந்தக் காஞ்சியில் இருந்தால் அவளுடைய புனிதமான வாழ்க்கை பாதிக்கப்படும் என்று நான் தான் அவளைப் பூம்புகாருக்கு அனுப்பினேன். அவளைப் பற்றி நீங்கள் கேட்கும்போது எனக்கு அனேக சந்தேகங்கள் எழுகின்றன. அவளைப் பற்றி ஏதேனும் விவரமுண்டா?” என்றாள்.

”அவளுடைய அந்தரங்கமான வாழ்க்கை விவரங்களைத் தெரிந்து கொண்ட உங்களுக்கு நான் என்ன சொல்வது? காஞ்சியிலிருந்து காவிரிப் பூம்பட்டினம் வந்து விட்டால் ஆசை அகன்று விடுமா? இளம் பெண்ணின் வாழ்க்கையில் இது எதிர்பார்க்கக் கூடியதா? இயற்கையாக விளைந்த பேரழகைச் சீவர ஆடையைக் கொண்டு போர்த்தி விட்டால் மறைந்து விடுமா? மன்னித்துக் கொள்ளுங்கள். அழகிய சிறந்த இளம் பெண்கள் சீவர ஆடையை அணிந்து கொண்டால் அதுவும் ஒரு அழகாய்த்தான் இருக்கிறது. மாலவல்லியின் காதலனுக்கு அவள் காஞ்சியிலிருந்தாலும் ஒன்றுதான். காவிரிப் பூம் பட்டினத்தில் இருந்தாலும் ஒன்று தான். கங்கபாடியிலிருந்து குதிரை ஏறிக் காஞ்சிக்கு வந்து கொண்டிருந்த அவன், காவிரிப்பூம் பட்டினம் வந்து கொண்டிருந்தான், அவ்வளவுதான் வித்தியாசம். வாழ்க்கையில் எதைத் தவிர்த்தாலும் இந்த மோகத்தைத் தவிர்ப்பது என்பது சிறிது கடினம் தான்…” என்றான் பூதுகன்.

பிக்ஷுணி காலநங்கை ஒரு பெருமூச்சு விட்டு. மிகவும் வருத்தம் நிறைந்த குரலில், “உண்மையாகவே இந்த உலகத்தில் பெண்களாய்ப் பிறந்தவர்கள் துறவறத்துக்கு அருகதை யற்றவர்கள் என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் அவர்களை ஆபத்து எப்பொழுதும் சூழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ததாகதர் பெண்களைச் சங்கத்தில் சேர்ப்பதை முதலில் விரும்பவில்லை. பகவர் நியக்குரோதி வனத்தில் தங்கியிருந்த போது அவருடைய சிற்றன்னை கௌதமி அவரை யணுகித் தான் தரும் விதியை முறைப்படி யறிந்து, வீட்டைத் துறந்து, பிக்ஷுணியாக வேண்டு மென்று அனுக்கிரகிக்க வேண்டினாள். ‘துறவு மார்க்கத்தில் பெண்கள் ஆசை வைக்க வேண்டாம்’ என்று பகவர் சொல்லி மறுத்து விட்டார். இரண்டு மூன்று முறைகள் கௌதமி மன்றாடிப் பார்த்தும் பயனில்லாமல் போயிற்று. அவள் சோகத்தோடு அழுதுகொண்டே சென்று விட்டாள். பெண்கள் பிக்ஷுணியாவதற்குப் பெருமான் நெடுநாள் வரையில் இசையவில்லை. ஆனால் அவருடைய சிற்றன்னை கௌதமி மனங் கலங்காது உறுதியோடு பல விரதங்களைக் கைக் கொண்டு எப்படியேனும் துறவு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டு வாழ்ந்து வந்தாள். புத்தர் வைசாலியில் இருப்பதை யறிந்து அன்னை கௌதமி தன் கூந்தலை யகற்றிக் காவி உடையணிந்து தன்னைப் பின்பற்றித் துறவு வாழ்க்கையை உறுதிபூண்ட அனேகம் பெண்களுடன் பகவரின் சன்னிதானத்தை யடைந்தாள். தீவிர விரதம் அங்கு பூண்டு அங்கு வந்திருக்கும் கோலத்தைக் கண்டதும்தான் பெருமானின் மனம் சிறிது இளகியது. அவர் பெண்கள் பிக்ஷுணிகளாவதற்கு வேண்டிய எட்டு விதிகளை ஏற்படுத்தி அவர்களையும் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள அனுமதியளித்தார். அன்னை கௌதமியும் அவளைப் போன்ற இன்னும் சில பெண்களும் ததாகதரின் வழியைப் பின்பற்றி நடந்திருக்கலாம். ஆனால் எல்லாப் பெண்களும் அப்படியிருக்க முடியுமா? இதை உத்தேசித்துத்தான் பகவர் பெண்களைச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளும் விஷயத்தில் நெடு நாட்கள் வரையில் யோசித்தாரென்று தெரிகிறது. மாலவல்லி போன்ற பெண்களால் புத்த தருமமே சங்கத்துக்கு இழுக்கு ஏற்படுவதை எண்ணி நான் மிகவும் வருந்துகிறேன். நீங்கள் சொல்வதிலிருந்து மாலவல்லிக்கும் புத்தசேதியத்தில் நடந்த கொக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பது போலல்லவா தோன்றுகிறது?” என்றாள்.

”அவளுக்கும் அந்தக் கொலைக்கும் சம்பந்த மிருக்குமென்று நான் நினைக்க வில்லை. ஆனால் அவள் கொலை நடந்த அன்றே அந்தப் புத்தசேதியத்திலிருந்து மறைந்து விட்டாள். அதனால் அவளுக்கும் அக்கொலைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமோ என்ற வதந்திதான் ஏற்பட் டிருக்கிறது. அவள் எங்கிருக்கிறாள் என்பதை அறியத்தான் நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஒருவேளை இங்கிருப்பாளோ என்று அறிந்துகொள்ளத்தான் இங்கு வந்தேன்.”

“எனக்கொன்றும் அதுபற்றித் தெரியாது. இவ்விஷயம் என் மனத்தை மிகவும் கலக்கத்துக் குள்ளாக்கி யிருக்கிறது. இதைப் பற்றிய பேச்சை இதோடு நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன். இதைப் பற்றி நினைப்பது கூட என்னுடைய துறவு வாழ்க்கைக்கு இழுக்கை ஏற்படுத்து மென்று நினைக்கிறேன். இப்படிப் பட்ட விஷயங்களையெல்லாம் மறந்து, என் மனத்தைத் ததாகதரின் திருவடி நிழலில் ஒதுக்கிக் கொள்ள விரும்புகிறேன். தாங்கள் தயவு செய்து சென்று வருகிறீர்களா?” என்றாள்.

பூதுகன் அதற்கு மேலும் பேசப் பிரியப் படாதவன் போல எழுந்தான். எழுந்து அவளுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு வெளியே வந்தான். அது பின்நிலவுக்காலம். அங்கங்கு தீப ஒளி இருந்தாலும் அந்த வீதிகளில் திட்டுத் திட்டாக இருளும் சூழ்ந்திருந்தது. ஜன நடமாட்டமும் அதிகமாக இல்லை. அப்பொழுது அவன் தான் பகலில் தங்கியிருந்த தரும சாலைக்குச் சென்று சிறிது ஆகாரம் செய்து விட்டுப் படுக்கவேண்டு மென்று நினைத்தான், அவன் வேகமாக தடந்துகொண்டிருந்த போது அவனுக்குப் பின்புறத்தி லிருந்து யாரோ பாய்ந்து தாக்குவதை உணர்ந்தான். அவன் சட்டென்று திரும்பிய போது எதிரில் நின்ற உருவத்தை யார் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. அது வேறு யாருமல்ல. கலங்கமாலரையர் தான், அத்த மகா பாதகன் பழைய பிக்ஷுக் கோலத்திலேயே இருந்தான். ஆனால் அவன் கைகளில் பிஷா பாத்திரம் இருப்பதற்குப் பதிலாக நீண்ட தடியொன்று இருந்தது. பூதுகன் தன்னைத் தாக்கிய கலங்கமாலரையனைத் தாக்க நினைக்கும் சமயம், கலங்கமாலரையன் தன் கைத் தடியினால் பூதுகளின் மண்டையில் ஓங்கி அடித்தாள். அடுத்த கணம் பூதுகன் மூர்ச்சையுற்றுக் கீழே விழுந்தான். அவன் கண்ணெதிரே பூமி சுழன்றது!

இருபதாவது அத்தியாயம்

திருபுவனியின் துறவு

பழையாறை தகருக்குச் சமீபமாக உள்ள நந்திபுர விண்ணகரில் இடங்காக்கப் பிறந்தார் என்ற பட்டப் பெயருள்ளவர்களின் வம்சம் மிகப் பெருமை பொருந்தியது. பூர்வீக சோழ அரசர்களின் ஆதவில் சிறு சிறு ஊர்களைக் காக்கும் நிர்வாகிகளாக இருந்த அவ்வம்சத்தினரின் பெருமை பல்லவர்களின் ஆட்சி காலத்திலும் உன்னத நிலை குறையாதிருந்தது. அப்பொழுது அந்நந்தியுர நகரம் பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தாரின் நிர்வாகத்தில் இருந்தது. அவர் பொழுது பல்லவப் பேரரசின் அபிமானத்துக்கும் தஞ்சையை ஆண்ட முத்தரையரின் அபிமானத்துக்கும் பாத்திரமானவராக இருந்தார். அவர் சைவ மதத்தைச் சேர்த்தவர். தரும சிந்தையுள்ளவர். பழையாறை நகரை ஆண்ட குமாரார் குஜ சோழருக்கும் உற்ற தோழராய் இருந்து பணியாற்றியிருக்கிறார். உன்னத நிலையில் பெருமையோடு வாழிந்து வந்த அவருக்கு அவருடைய குடும்பத்தில் சோகத்தை விளைவிக்கத் கூடிய சம்பவம் ஒன்று ஏற்பட்டிருந்தது. நெடுநாட்களுக்கு முன் குழ்ந்தைப் பருவத்திலிருந்த, அவருடைய ஒரே குமாரியாகிய திருபுவணி என்பவளை கொள்ளை கூட்டத்தார் கடத்திக் கொண்டு போய் விட்டனர். அருமையாக வளர்த்த பெண் குழந்தையாகையால் அவளைக் கண்டு பிடிப்பதற்காக அவர் எவ்வளவோ முயற்சிகளெல்லாம் செய்தார். ஒன்றும் பலிக்கவில்லை. அவருடைய துயரமும் தணிவதாயில்லை. நாளுக்கு நாள் இதே நினைவாகப் பித்துக்கொண்டவர் போலாகிவிட்டார். அவருடைய குமாரனாகிய பொற் கோம இடங்காக்கப் பிறந்தார் தன் தகப்பனார் மனத்தைச் சாந்தியுறச் செய்வதற்காக எவ்வளவோ முயற்சிகள் எடுத்துக் கொண்டும் பலனில்லாமல் போயிற்று.

பதினைந்து வருடங்கள் கழித்த பின்பும் திருபுவணியைப் பல இடங்களிலும் தேடிப் பார்க்கும் முயற்சியை அவர்கள் நிறுத்த வில்லை. அவருடைய குமாரன் எப்படி யாவது திருபுவனியைத் தேடிக்கண்டு பிடித்து விட்டால் தன் தகப்பனாரின் மனம் நேராகி மனச் சாந்தியோடு இறப்பார் என்றெண்ணித் திருபுவனியைத் தேடுவதில் தீவிரமாகவே முயன்றான். அதிரஷ்டவசமாக, காவிரிப் பூம் பட்டணத்தில் அவன் இருப்பதாகப் பொற்கோம இடங்காக்கப் பிறந்தார்க்குத் தகவல் கிடைத்தது. உடனே அவனது ஏவலாட்கள் தாமதிக்காமல் சென்று ஒரே இரவோடு இரவாகத் திருபுவனியை நந்திபுர நகருக்குக் கொண்டு வந்து விட்டனர்.

நெடுநாட்களுக்குப் பின்னால் தன் சகோதரியைக் கண்ட பொற்கோமன் பேரானந்தம் அடைந்து குதித்தான். பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தாகும் பெரு மகிழ்ச்சியில் மூழ்கினார். அன்று இடங்காக்கப் பிறந்தாரின் மாளிகை மாத்திரம் குதூகலத்தில் மூழ்கவில்லை. அந்த ஊரே அந்த அதிசயத்தைப் பேசி வியப்பும் குதூகலமும் அடைந்திருந்தது. பழையாறையிலிருந்தும் தஞ்சையிலிருந்தும் பலர் இந்த மகிழ்ச்சிச் செய்தியைக் கேட்டு இடங்காக்கப் பிறந்தாரைப் பார்க்க வந்தனர்.

மாளிகையில் எப்பொழுதும் குதூகலமும் விருந்தும்தான். தம் ஒரே குமாரி அகப்பட்டபின் அவளுடைய கலியாணத்தைப் பற்றிய பேச்சுக்கள் எழும் அல்லவா? பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தாரும் அவருடைய மகனும் திருபுவனி இவ்வளவு அழகோடு விளங்குவாள் என்று நினைக்கவே இல்லை. அவளுடைய அழகு அவளை ஒரு சாதாரண மனிதனுக்கு மனைவியாக்கக்கூடிய நிலையில் இருப்பதாக அவர்கள் நினைக்க வில்லை. அவளுக்கு ஏதேனும் பெரிய ராஜ வம்சத்தில்தான் கணவனைத் தேட வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்தனர். அவளுடைய அழகில் எந்த அரசகுமாரனும் மயங்கி விழுவான் என்று அவர்கள் பூரணமாக நம்பினர். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். நெடுநாட்களுக்குப் பிறகு தன் வீட்டையடைந்த திருபுவனியின் நிலைமையையும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அந்தப் பெரிய மாளிகையில் உல்லாசமான, ஆடம்பரமான அந்தப்புரத்தில் தான் அவள் இருந்தாள். ஆனால் அந்த அறை எவ்வளவு அலங்கார சாதனைகளோடு விளங்கியதோ அதற்குத் தக்க படி அவள் இல்லை. துறவற நிலையிலிருந்த பெண்ணை ஒரு அழகான மாளிகையின் அந்தப்புரத்தில் கொண்டு போய் விட்டால்? துவராடையோடும், பிரிபிரியாக இருந்த தலைக் கேசத்தைக் கொண்டையிட்ட வண்ணமும் தான் அவள் விளங்கினாள். அவள் மனம் எவ்வித ஆடம்பரக் காட்சியிலும் லயிக்க வில்லை. அவளை வந்து பலர் பார்த்தபோது அவள் ஒருவரோடும் பேசவில்லை. பேசாமடந்தை போல் தான் இருந்தாள்.

அந்த மாளிகையிலுள்ள பலர் அவளோடு பேசிய போதும் அவள் அவர்களோடு பேசவில்லை. அவளுக்காக அவள் அணிந்து கொள்வதற்காகக் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்த ஆடைகளும் ஆபரணங்களும் அப்படி யப்படியே வைக்கப்பட்டிருந்த இடத்தலேயே இருந்தன. இந்த ஆடை ஆபரணங்களை அணித்து கொள்ளும்படி அவளை எவரும் வற்புறுத்தவில்லை. தீவிர துறவறத்திலேயே நிலைத்து நின்ற அவள் புத்தி அந்த மாளிகையில் உள்ள பழக்க வழக்கத்தினால் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடும் என்றும் அவளிடம் பிடிவாதமாக எதையும் சொல்ல வேண்டாமென்றும், பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தாரும், அவருடைய மகனும் யாவருக்கும் கட்டளை இட்டிருந்தனர். அதோடு அவள் அந்த மாளிகையிலிருந்து வெளியேறாத வண்ணம் பலமான கட்டுக் காவலை அதிகப்படுத்தி யிருந்தனர். திருபுவனி சகல வசதிகளும் நிறைந்த அலங்காரமான வீட்டில் இருந்தாலும் ஏதோ சிறையிலிருப்பவள் போல்தான் கட்டுக் காவலோடு இருந்தாள். எப்படி இருந்தால் என்ன? அவளைப் பிறர் ஏதேனும் கேட்டுத் தொந்தரவு செய்யாது இருந்தால் சரிதான் என்று நினைத்தாள். அவளுக்காக வரும் ஆகாரத்தில் பிடித்ததைக் கொஞ்சமாக உண்டு, மற்ற நேரங்களில் ஏதோ ஆழ்ந்த சிந்தனையிலும், குழப்பத்திலும் இருப்பவள் போல்தான் காணப்பட்டாள். அடிக்கடி பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தாரும் அவருடைய மகனும், மனைவியும் வந்து அன்பாக, ‘சாப்பிட்டாயா? தூங்கினாயா? உனக்கென்ன வேண்டும்? ஏது வேண்டும்?’ என்று விசாரித்து விட்டுப் போவார்கள். திருபுவனியும் அவர்களுக்குச் சுருக்கமாக அன்போடு பதில் சொல்லுவாள். அவளுக்குப் பிடிக்காதவைகளை வேண்டாம் என்று கூறி விடுவாள். அதற்குமேல் யாரும் அவளைக் கிளறிக் கேட்பதுமில்லை.


அன்றைய தினம் தஞ்சை நகரிலிருந்து முத்தரையரின் அமைச்சர் புலிப்பள்ளி கொண்டார் விஜயம் செய்திருந்தார், அமைச்சருக்கு உரிய உபசாரங்க ளெல்லாம் இடங்காக்கப் பிறந்தாரின் மாளிகையில் மிகச் சிறப்பாகத்தான் நடைபெற்றன. புவிப்பள்ளி கொண்டாருக்கு நெடுநாட்கள் வரையில் காணாமல் போய்க் கிடைத்த இடங்காக்கப் பிறந்தாரின் அருமை மகளைக் காண வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக இருந்தது. இடங்காக்கப் பிறந்தாரும் விருந்துக்குப் பின் அவரைத் திருபுவனியின் அறைக்கு அழைத்துச் சென்று காட்ட நினைத்தார்.

திருபுவனி தஞ்சையிலிருந்து அமைச்சர் அந்த மாளிகைக்கு விஜயம் செய்திருப்பதையும் தன்னைப் பார்க்க நினைப்பதையும் அறிந்து கொண்டாள். அவள் ஏதோ சட்டென்று முடிவுக்கு வந்தவள் போல் தன் சீவர ஆடைகளைக் களைந்து பட்டாடையையும், ஆபரணங்களையும் அழகுற அணிந்து கொண்டாள். அப்பொழுது அவளுடைய அழகும் உருவமுமே வேறு விதமாக மாறின. அவள் திடீரென்று இப்படி மனம் மாறி அலங்காரங்கள் செய்து கொண்டதைப் பார்த்து அம்மாளிகையிலுள்ள எல்லோரும் பெரு மகிழ்ச்சியடைந்தனர். சீவர ஆடை அணிந்திருந்த போதே அவள் அழகியாக விளங்கினாள். அதிலும் இப்பொழுது பொன்னாடையும் பூஷணமும் அணிந்துகொண்ட பின் அவள் அழகைப் பற்றி விவரித்துச் சொல்ல வேண்டுமா?’


விருந்துக்குப் பின் திருபுவனியைப் பார்க்க வந்த தஞ்சை அமைச்சர், புலிப் பள்ளியார் அப்படியே மதிமயங்கி நின்று விட்டாரென்று தான் சொல்ல வேண்டும். கண நேரத்தில் அவர் மனத்தில் ஏதோ ஆசை எழுந்தது. எல்லோரும் அவ்வறையை விட்டு வெளியே வந்து ஆசனத்தில் அமர்ந்ததும், புலிப்பள்ளி கொண்டார், கனைத்துக் கொண்டே, “இடங்காக்கப் பிறந்தாரே! நீங்கள் மிகவும் பாக்கியசாலி. நான் கூட நினைத்தேன், ஒரு பெண்ணை இழந்த துயரத்தை நெடுநாள் வரையில் இம் மனிதர் பாராட்டிக் கொண்டிருக்கிறாரே என்று. உண்மையில் இவ்வளவு லட்சணமான ஒரு பெண்ணை இழந்த ஒரு மனிதரின் மனம் என்ன பாடுபடும் என்பதை இப்பொழுதுதான் உணர முடிந்தது. உம்முடைய மகள் உமக்குத் திருப்பக் கிடைத்த வரையில் நீங்கள் பெரிய பாக்கியசாலிதான். தக்க பருவத்தில் இருக்கும் இவளுடைய விவாகத்தைப் பற்றிய கவலை உங்களுக்கு ஏற்படாமல் இருக்காது. இது விஷயமாக இனித் தாமதிக்கக் கூடாது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இவளுக்குத் தகுந்த கணவனை நீங்கள் எங்காவது பார்த்து வைத்திருப்பீர்கள்?” என்றார்.

“பார்த்துக் கொண்டிருக்கிறேன். எல்லாம் நம்முடைய நிலைக்குத் தகுந்தாற் போல அகப்பட வேண்டாமா? அதோடு அவளுடைய அழகுக்குத் தகுந்த கணவனாகவும் இருக்க வேண்டும் அல்லவா?” என்றார் இடங்காக்கப் பிறந்தார்.

“என்னுடைய யோசனையை நீங்கள் அங்கீகரிப்பதாயிருந் தால் சொல்லுறேன்” என்றார் புலிப்பள்ளி கொண்டார். சிறிது தயக்கத்தோடு.

“இவ்விஷயத்தில் உங்களைப் போன்றவர்களின் யோசனையைக் கேட்கத்தானே நான் விரும்புகிறேன்? தஞ்சையர் கோனுக்கு அமைச்சராகத் திகழும் தங்களுடைய யோசனைப்படி நான் இக்காரியத்தைச் செய்து முடித்தால் அது சிறந்ததாகத்தானே யிருக்கும்?” என்றார் இடங்காக்கப் பிறந்தார்.

“நான் மனத்தைவிட்டுப்பேசுகிறேன். என் மகன் கோளாந்தகனைத் தங்களுக்குத் தெரியாமல் இருக்காது. அவன் மிகவும் புத்திசாலி. அதோடு அவன் அழகைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டாம். இப்பொழுது கலங்கமாலரையர் சேனாதிபதி பதவியை விட்டு விலகி புத்த பிக்ஷுவானபின் என் மகன் தான் சேனாநாயகன். அவன் சேனாநாயகளுகிய பின் தஞ்சை மன்னரை அலட்சியமாக நினைத்துவந்த கொடும்பாளூரார்களும் நடுங்குகின்ற னர். இதை யெல்லாம் நான் பெருமையாகச் சொல்லிக் கொள்ளக் கூடாது. நானும் அவனுடைய அழகுக்கும் மதிப்புக்கும் தக்கபடி ஒரு பெண்ணை நெடு நாட்களாகப் பார்க்கிறேன் – கிடைக்க வில்லை – நல்ல வேளையாக இங்கு வந்து உமது பெண்ணைப் பார்த்த பிறகு என் மனக்கவலை ஒருவிதமாகத் தீர்ந்தது. இதற்கு மேல் நான் உங்களுக்கு அதிகமாகச் சொல்ல வேண்டாம். உங்களுக்குத் தெரியாத விஷயமல்ல…” என்றார்.

அதைக் கேட்டதும் இடங்காக்கப் பிறந்தார் பேரானந்தம் மேலிட்டவராய், “இதைப் பற்றி இனி யோசிப்பதற்கு இடமே இல்லை. உங்கள் சம்பந்தம் எனக்குக் கிடைப்பது பெரும் பாக்கியம் அல்லவா? தங்கள் புதல்வனைப் பற்றி நான் மிகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். நானே இதுபற்றித் தங்களிடம் பேசலாமா என்று யோசித்து மனம் குழம்பி இருந்தபோது தாங்களே தங்கள் விருப்பத்தைக் காட்டியது ஈசன் அருள் தான். அதோடு இச்சுபகாரியம் சீக்கிரமே முடிவதற்கு அநுகூலமாக என் மகளும் தன் சீவர ஆடைகளை யெல்லாம் களைந்து பொன்னாடை அணிந்து கொண்டாள் போலிருக்கிறது ” என்றார் மிகுந்த மகிழ்ச்சியோடு.

“ஒரு பெரிய சுப காரியம் நடக்க வேண்டுமானால் அதற்கு முன்னால் நடப்பவைகள் எல்லாம் சுபமாகத்தான் முடியும். இனிமேல் தாங்கள் இது விஷயமாக ஒரு நல்ல நாளைப் பார்த்து மங்களகரமாக இக் காரியத்தை முடித்து விட வேண்டியதுதான் ” என்றார் தஞ்சை அமைச்சர் புலிப்பள்ளி கொண்டார்.

இடங்காக்கப் பிறந்தாரும் இதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் சீக்கிரமாகவே செய்வதாகச் சொன்னார்.

புலிப்பள்ளி கொண்டார் இடங்காக்கப் பிறந்தாரிடம் விடைபெற்றுக் கொண்டு தஞ்சைக்குப் பயணமானார்.

தஞ்சையமைச்சர் புலிப்பள்ளிகொண்டார் தன் மகன் கோளாந்தகனுக்குத் திருபுவனியைத் திருமணம் செய்து வைக்க விரும்பியது பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தார்க்கும், அவர் மகனுக்கும் பெருத்த ஆனந்தத்தைக் கொடுத்தது. அவர்கள் எண்ணியபடி தங்கள் தகுதிக்கேற்ற சம்பந்தம் கிடைத்ததில் பெருமை அடைந்தனர். சோதிடரைக் கூப்பிட்டு வந்து திருமண நாளைக் கணிக்க ஏற்பாடு செய்தனர்.

சில நிமிட நேரத்துக்குள் இவ்விவாக விஷயம் இடங்காக்கப் பிறந்தாரின் மாளிகை முழுவதும் பரவியது. இச் செய்தி திரிபுவனியின் செவிகளில் மட்டும் விழாமலிருக்குமா? இதைக் கேட்டதும் ஆச்சர்யமோ திகிலோ அவள் அடைந்து விடவில்லை. அவள் சட்எழுந்து தன் பட்டாடைகளையும் ஆபரணங்களையும் மூலைக்கொன்றாகப் போட்டு விட்டுச் சீவர ஆடையை எடுத்து உடுத்திக் கொண்டாள் என்று அறிந்ததும் குதூகலத்தில் திளைத்துக் கொண்டிருந்த பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தாருடைய மனமும் அவருடைய மகனின் உள்ளமும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கின. யாவரும் திகிலும் குழப்பமும் அடைந்தவர்களாயினர். திடீரென்று அவள் பட்டாடைகளை அணிந்து கொள்ள விரும்புவானேன்? அவைகளைக் களைந்தெறிந்து விட்டு மறுபடியும் சீவர ஆடைகளைப் புனைந்து கொள்வானேன்? அவளுக்கு ஏதேனும் பயித்தியமா? அல்லது வேண்டுமென்றே அப்படிச் செய்திருப்பாளோ? பெருந் தக்க இடங்காக்கப் பிறந்தார் இனி மேலும் பொறுமையாக இருக்க விரும்பவில்லை. அவர் தஞ்சை மந்திரியின் மகனுக்குத் திருபுவனியை மணம் செய்து கொடுப்பதாக வாக்குறுதியளித்து விட்டார். இந்நிலையில் அவள் மறுபடியும் பிக்ஷுணிக் கோலம் பூண்டு நின்றால் அதை என்னென்று சொல்வது? ‘என் மகள் மறுபடியும் பிக்ஷுணியாகி விட்டாள். உங்கள் மகனைக் கலியாணம் செய்து கொள்ள மாட்டாள் என்று சொல்வதா? இடங்காக்கப் பிறந்தார் சொன்ன வாக்குறுதி தவறி விட்டா ரென்று அமைச்சர் புலிப்பள்ளி கொண்டார் நினைக்க மாட்டாரா? இதனால் பெரிய மனிதரின் விரோதத்தை யல்லவா சம்பாதித்துக் கொள்ள நேரும்? இப்படியே அவர் தம் மகளையும் அவள் அபிப்பிராயத்துக்கே விட்டுக் கொடுத்துக் கொண்டே போனால் அதற்கொரு முடிவு வேண்டாமா?

இனிமேல் திருபுவனியின் விருப்பத்துக் கேற்றபடி நடந்து கொண்டே போனால் எல்லாம் விபரீதமாகவேதான் முடியும் என்று அவருக்குத் தோன்றியது. உள்ளபடி அவள் மன நிலையை யறிந்து அதை மாற்றுவதற்குப் பல வழிகளிலும் தீவிர முயற்சி யெடுத்துக் கொள்ள வேண்டுமென்ற முடிவுதான் செய்தார். அவர் பலவிதமாக எண்ணமிட்டு மனம் குழம்பி உட்கார்ந்திருந்த போது ராஜ பரிவாரங்கள் சூழ அவர் வீட்டுக்கெதிரே ஒரு பல்லக்கு வந்து நின்றது. அந்தப் பரிவாரங்களின் உடை அலங்காரங்களிலிருந்து அந்தப் பல்லக்கு பழையாறை நகரிலிருந்துதான் வந்துள்ள தென்பதை அறிந்து கொண்ட அவர் பரபரப்போடு எழுந்து சென்றார்.


பல்லக்கிலிருந்து அரச குமாரிக்குரிய ஆடையாபரணங்கள் அணிந்த யுவதி ஒருத்தி இறங்கிப் புன்முறுவலோடு இடங்காக்கப் பிறந்தாருக்கு வணக்கஞ் செலுத்தினாள். பழையாறை நகர அரச குமாரி அருந்திகைப் பிராட்டி என்றே ஒரு நாள் தம் மாளிகைக்கு வருவாள் என்று இடங்காக்க பிறந்தார் எதிர் பார்த்ததுதான். ஆனால் முன்னறிவிப்பேதுமின்றி அன்று அவள் வந்தது அவருக்குச் சிறிது ஆச்சரியத்தைத்தான் அளித்தது. அவர் மிக்க பணிவோடு சோழ அரசகுமாரி அருந்திகையை உபசரித்து அழைத்துச் சென்றார். அருந்திகை அந்த மாளிகையின் அழகான சபைக் கூடத்திலிருந்த ஆசன மொன்றில் கம்பீரமாக அமர்ந்து, “தங்கள் புதல்வியாரைத் தாங்கள் மறுபடியும் அடைந்தது எங்களுக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் அவள் இன்னும் புத்தபிக்ஷுணிக் கோலத்திலேயே இருக்கிறள் என்று கேள்விப் பட்டதும் என் மனத்துக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. நெடுநாள் வரையில் அனாதை போல் எங்கோ இருந்த அவள் புத்த பிக்ஷுணியாகிவிட்டதில் ஆச்சர்யமில்லை. ஆனால் இங்கு இம்மாளிகைக்கு வந்ததும் அவள் தன் கொள்கைகளை மாற்றிக் கொண்டிருந்தால் மிக நன்மையாக இருக்கும். தாங்கள் அவள் மனத்தை மாற்ற முயற்சி எடுத்துக் கொள்வது நல்லது தான். இளம் பெண்களுக்குத் துறவறம் ஏற்றதில்லை. வயதான உங்களுடைய மனம் சாந்தியடைவதற்காயினும், அவள் தன் கோலத்தை மாற்றிக் கொள்வது தான் சிறந்தது” என்றாள்.

இடங்காக்கப் பிறந்தார் மிகவும் துயரம் நிறைந்த குரலில் பேசினார்: “என்ன செய்வது? என்னால் இயன்ற வரையில் முயற்சி செய்கிறேன். இன்று தஞ்சை மன்னரின் அமைச்சர் புலிப்பள்ளி கொண்டார் இங்கு விஜயம் செய்திருந்தார். அந்தச் சமயத்தில் அவள் திடீரென்று மனம் மாறி நல்லாடை ஆபரணங்களெல்லாம் அணிந்து கொண்டாள். அவளுடைய எல்லையற்ற பேரழகைக் கண்டு அவரே வியந்து விட்டார். அவராகவே தம் மகனுக்கு அவளை மணம் முடித்து வைக்க வேண்டுமென்று என்னை வேண்டிக் கொண்டார். எனக்கும் அது மகிழ்ச்சியாகவும் சம்மதமாகவும் பட்டதால் நானும் அவருடைய விருப்பத்துக் கிணங்கி விவாகத்துக்குரிய நன்னாளை பார்க்கும்படி சோதிடருக்குக் கட்டளையிட்டு விட்டேன்.

“ஆனால் துரதிர்ஷ்டவசமாக மந்திரியார் சென்றவுடனே திருபுவனி தன் ஆடை அலங்காரங்களைக் களைந்து எறிந்து விட்டு மறுபடியும் சீவர ஆடையைப் புனைந்து கொண்டிருக்கிறாள், எல்லாம் எனக்குத் தரும சங்கடமான நிலையாகத் தான் முடிந்திருக்கிறது. அவளுடைய மனோ தருமம் என்ன வென்று எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை அவள் சித்த சுவாதீனமற்றவளோ என்று நினைக்கும்படியாகத் தான் இருக்கிறது. எப்படியும் அவள் மனத்தை மாற்ற நான் தீவிர முயற்சி யெடுத்துக் கொள்வதாகத் தீர்மானித்து விட்டேன். அதிலும் தாங்கள் நல்ல சமயத்தில்தான் வந்தீர்கள். எப்பொழுதுமே பெண்கள் பெண்களின் வார்த்தைகளுக்குத்தான் அதிகமதிப்புக் கொடுப்பார்கள். நீங்கள் அவளோடு பழகி அவளுக்கு நல்உபதேசங்கள் செய்து அவள் மனத்தை மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்'” என்று வேண்டிக்கொண்டார்.

பழையாறை அரசகுமாரி அருந்திகை, “நீங்கள் சொல்வதைக் கேட்டால் எனக்கு விநோதமாக இருக்கிறது. நீங்கள் ஒன்று செய்திருக்கலாம். துறவறத்தில் பற்றுள்ள அவள் மனம் சட்டென்று திரும்புவது சிறிது கடினம். நீங்கள் அதற்குள் அவள் சம்மதத்தைப் பெறாமல் விவாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்ததினால்தான் அவள் மனம் வருத்தம் கொண்டு மறுபடியும் துறவற ஆடையை அணிந்து கொள்ள முற்பட்டிருக்க வேண்டும். போகட்டும். இப்பொழுது நான் அவளைப் பார்க்கப் போகிறேனல்லவா? இந்தச் சமயத்தில் அவள் மனத்தை மாற்ற என்னால் முடிந்ததை யெல்லாம் செய்கிறேன்” என்றாள். இதைக் கேட்டதும் இடங்காக்கப் பிறந்தார் சிறிது மன அமைதியடைந்தவராய் அவளை அழைத்துக்கொண்டு திருபுவனி இருந்த அறைக்குச் சென்றார்.

அந்த அறையிலிருந்த திருபுவனி சாளரத்தின் ஓரமாக நின்று வெளியே பார்த்தவண்ணம் ஆழ்ந்த சிந்தனையோடு நின்றுகொண்டிருந்தாள். இடங்காக்கப் பிறந்தாரோடு அவ்வறையில் நுழைந்த அருந்திகைப் பிராட்டி பிக்ஷுணிக் கோலத்திலிருந்த திருபுவனியின் முகத்தைப் பார்த்ததும் அப்படியே திகைப்படைந்து நின்று விட்டாள். திருபுவனியும் அருந்திகையைப் பார்த்தவுடன் மிகத் திகைப்படைந்தவள் போல் அப்படியே நின்று விட்டாள்.

இருபத்தொன்றாவது அத்தியாயம்

இதென்ன விரதம்?

சோழ இளவரசி அருத்திகைப் பிராட்டி பிக்ஷுணிக் கோலத்திலிருந்த திருபுவனியைக் கண்டு திகைப்படைத்ததையும், திருபுவளியும் அருத்திகையைக் கண்டு திகைப்படைத்தவள் போல் காணப்பட்டதையும் இடங்காக்கப் பிறந்தார் ஒரு விதமாகப் புரிந்து கொண்டார். அருந்திகையின் முகத்தைப் பார்த்தபோது அவரை அவ்விடத்திலிருந்து வெளியே செல்லும் படி அவள் சமிக்ஞை காட்டினாள். இடங்காக்கப் பிறந்தாரும் அதை அறிந்து கொண்டவராக, “நீங்கள் இருவரும் பேசி கொண்டிருங்கள். எனக்குக் கொஞ்சம் வெளியிக்கிறது, உத்தரவு விடுங்கள்” என்று அருந்திகையை நோக்கிக் கேட்கவும், அவளும் தலையசைத்தாள். இடங்காக்கப் பிறந்தார் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

அவர் சென்றபின் அருத்திகைப் பிராட்டி சாளரத்துக்குச் சமீபமாக நின்று கொண்டிருந்த திருபுவனியை நெருங்கி அவளுடைய மெல்லிய தோள் மீது அன்போடு தொட்டு, “உன்னை எங்கோ பார்த்த நினைவாக இருக்கிறது. ஆனால் எங்கே பார்த்தோம் என்றுதான் தெரியவில்லை” என்றாள்.

“எனக்கும் உங்களை எங்கோ பார்த்த நினைவாகத்தான் இருக்கிறது. உங்களைப் போல் எனக்கும் உங்களை எங்கு பார்த்தோம் என்பதுதான் புரியாமலிருந்தது. அப்புறம் புரிந்து விட்டது” என்றாள் தீருபுவனி அன்போடு, அருந்திகை சிரித்துக் கொண்டே, “நாம் ஏதாவது கனவில் சந்தித்திருப் போமோ?” என்று கேட்டாள்.

“இருக்கலாம். நான் வேண்டுமானால் உங்களைக் கனவில் சந்தித்திருக்கலாம். ஆனால் நீங்கள் என்னைச் சந்தித்திருக்க நியாயமில்லையே?” என்றாள் திருபுவனி.

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டாள்.

“ஏன் அப்படிச் சொல்கிறேனா? நான் ஒரு சாதாரணப் பெண். என்னைப் பற்றி உங்களைப் போன்றவர்கள் நினைப்பதற்கு நியாயமில்லை. ஆனால் நீங்கள் ஒரு அரசகுமாரி. அதிலும் புகழ்பெற்ற சோழ பரம்பரையைச் சேர்ந்தவர்கள். உங்களைப் பற்றி இந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் நினைப்பது சகஐம் தானே? உங்களைப் பற்றியும், பெருமை மிகுந்த உங்கள் குலத்தைப் பற்றியும் எத்தனையோ தடவைகள் நான் நினைத்திருக்கிறேன், அந்த நினைவின் காரணமாக எவ்வளவோ தடவைகள் கனவு கண்டிருக்கிறேன். அந்தக் கனவுகளில் நீங்கள் வந்திருக்கலாமல்லவா?”

அருத்திகை ஒரு பெருமூச்சு விட்டாள். பிரகாசம் நிறைந்த அவளுடைய முகம் சிறிது வாட்டமடைந்தது. “எங்கள் குலத்தைப் பற்றியும் எங்களைப் பற்றியும் நினைப்பவர்களும் இன்னும் உலகத்தில் இருக்கிறார்களா? இமயம் போல் தலை நிமிர்ந்து நின்ற சாம்ராஜ்யமே அழிந்து அந்த இடத்தில் சிறிய மணற் குன்று போல், பழையாறை நகர்ச் சோழர்களென்று பெயர் சொல்லிக் கொண்டு நாங்கள் இருந்து வருகிறோம். இந்தச் சிறு மணற்குவியலையும் நாற்புறமும் வெள்ளம் போல் வந்து அழித்துவிட எத்தனையோ பேர்கள் காத்துக் கொண்டிருக்கிறர்கள். இன்றைய தினம் தஞ்சையிலிருந்து வந்த புலிப்பள்ளி கொண்டார் உங்கள் குலத்தின் சம்பந்தத்தை விரும்புவதும் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் சிறு சந்ததியையும் அழித்துவிடச் செய்யும் முயற்சியாகத்தான் நான் நினைக்கிறேன்” என்றாள்.

இதைக்கேட்டதும் திருபுவனியின் முகத்திலும் ஒருவாட்டம் ஏற்பட்டது. அவள் அருந்திகையைச் சமாதானம் செய்கிறவள் போல் அவளைத் தன்னேடு அணைத்துக் கொண்டு, ”உங்களைச் சூழ்ந்த ஆபத்துக்களை நீங்கள் சொல்வதிலிருந்து நான் ஒருவாறு உணர்ந்து கொண்டேன். ஆனால் உங்களை நாடு மறந்து விட்டதாக நீங்கள் நினைத்து ஆயாசம் அடைய வேண்டாம். உங்களுக்கு எதிரிடையாக யார் யார் சூழ்ச்சி செய்கிறார்களோ, அதைப் போல உங்களுக்கு ஆதரவாக எதிரிகளின் சூழ்ச்சிகளைச் கவிழ்க்கவும் சிலர் சூழ்ச்சி செய்து கொண்டு தான் இருப்பார்கள் என்பதைத் தாங்கள் மறக்க வேண்டாம். இன்று இச்சோழ நாடு எப்படியிருக்கிற தென்று நினைத்துப் பாருங்கள். மிகுந்த கலக்கத்துக்கு உள்ளாகியிருக்கிறது. சரியான அரசர்கள் இல்லை. சிறு சிறு அரசர்களாக இருப்பவர்களும் பெருத்து படை படை பலம் கொண்ட பல்லவர்களுக்கும், பாண்டியர்களுக்கும் அடங்கியவர்களாக இருக்கிறார்கள். பாண்டியர்களும் பல்லவர்களும் பகை கொண்டு ஒருவருக்கொருவர் ஈடு இணையின்றி உலகெங்குமே தங்களுடைய அரசாட்சியை நிலை நிறுத்திவிட மாட்டோமா என்ற ஆணவத்தில் இருக்கிறார்கள். இதனால் எந்த நேரத்திலும் போர் முழக்க எச்சரிக்கையாகவே இருக்கிறது. பாண்டிய நாட்டுக்கும் பல்லவ நாட்டுக்கும் இடையே உள்ள பொன் கொழிக்கும் இந்தப் பூமியில்தான் பிணங்களைக் குவிக்கிறர்கள். சோழ வள நாடு ஆக்கிரமிப்பு வெறி கொண்ட மன்னர்கள் மோதிக் கொள்வதற்குரிய சரியான போர்க்களமாகி விட்டது. ஊருக்கு ஊர் தனித்தனியாக இருந்து ஆளும் மன்னர்கள் எல்லாம் சமயம் பார்த்து வலுத்த கையோடு சேர்த்து, போராடித் தங்கள் சிறு நலனைப் பாதுகாத்துக் கொள்ள நினைக்கிறார்களே தவிர, மக்களைப் பற்றி நினைப்பதில்லை. இந்த நிலையில் மக்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி நாம் நினைத்துப் பார்க்கத்தானே வேண்டும்? வறுமையும் துயரும் ஏற்படும் போதுதான் சீரும் சிறப்புமாக இருந்த அக்காலத்தை எண்ணிப் பார்க்கத்தோன்றும், மகோன்னத நிலையில் இச்சோழ மண்டலத்தை ஆண்ட கரிகாலன் மரபினரைப் பற்றி இவர்கள் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது. ஒவ்வொருவரும் தம் உள்ளத்தில் மறுபடியும் இந்நாட்டில் சோழ சாம்ராஜ்யம் ஏற்பட்டுச் செல்வமும் சிறப்பும் கொண்டதாகாதா என்று தான் நினைக்கின்றனர். இதை எண்ணித்தான் மன ஆறுதல் அடைய வேண்டும். தஞ்சை அமைச்சர் உங்களுக்குச் சிறு ஆதரவாக இருக்கும் குடும்பத்தில் சம்பந்தம் செய்து கொண்டால் உங்களுக்குள்ள சிறு ஆதரவை அழித்துவிடலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அவருடைய குமாரரை நான் விவாகம் செய்து கொள்ளச் சம்மதித்தால் அல்லவா அம்மாதிரி நிகழும் என்று எண்ணுவதற்கு? துறவறத்தில் நாட்டம் கொண்ட என்னை அவர் மகனுக்கு மணவாட்டியாக்க நினைப்பது வீண் பிரயாசையாகத்தான் முடியும்!” என்றாள்.

“திருபுவனி! உனக்குத் துறவறத்தில் தீவிரமாகப் பற்று இல்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். உன்னைப் போன்ற இளம் வயதுடைய பெண்கள் உலக இன்ப சுக, மாயைகளிடமிருந்து விலகித் துறவறம் கொள்வது என்பது முடியாத காரியம். அப்படித் துறவறம் பூணுவதும் நியாயமாகாது. உன்னுடைய மனம் தீவிரமாகத் துறவறத்தைப் பற்றிக் கொண்டு நிற்கவில்லை என்பதை இன்று சீவர ஆடைகளை யெல்லாம் களைத்து பட்டாடை ஆபரணங்களை அணிந்து கொண்டதிலிருந்து பிறர் அறிந்து கொண்டிருக்க மாட்டார்களா?” என்றாள் அருந்திகை.

திருபுவனி ஏளனமாகச் சிரித்தாள். “சீவர ஆடையை விட்டுச் சில நிமிட நேரங்கள் பட்டாடையும், பூஷணங்கஞம் அணிந்து கொண்டதினால் என் மனசை மாற்றி.விட்டதாகச் சொல்ல முடியுமா? அவைகளை ஏதோ காரணத்துக்காக அணிந்து கொண்டேன். தஞ்சை அமைச்சர் தன் மகன் கோளாந்தகனுக்கு மணம் முடிக்க ஆசை வைத்ததும், மறுபடியும் சீவர ஆடையை அணிந்து கொள்வதுதான் நல்லதென்று பட்டது. அவைகளை அணிந்து கொண்டேன். உடலை மறைக்கும் ஆடைகளைக் கொண்டு உள்ளத்தின் நிலையைத் தீர்மானம் செய்வது மடமையாரும்” என்றாள் உறுதியான குரலில்.

அருத்திகை சிரித்துக் கொண்டே, “உண்மை, நீ இப்பொழுது சீவர ஆடையைச் சுற்றிக்கொண்டிருக்கிறாய். இதை வைத்துக் கொண்டு உன் உள்ளத்தின் நிலையை நான் நிர்ணயித்துவிட மாட்டேன். இந்த வேஷத்துக்கும் உன் உள்ளத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு என்று நான் கருதிவிட மாட்டேன்” என்றாள்.

“நீங்கள் என்னை எப்படிக் கருதினாலும் சரியே. ஒவ்வொருவரும் நடந்து கொள்வது அவரவர்கள் மனத்தில் கொண்ட லட்சியத்தைப் பொறுத்தது தான். என்னுடைய நிலையைப் பற்றி அதிகமாக என்னைக் கிளறிக் கேட்காதீர்கள். நீங்கள் எனக்கு ஏதேனும் உபகாரம் செய்ய நினைத்தால் என் தகப்பனாரிடம் சென்று, ‘உங்களுடைய குமாரிக்குத் தஞ்சை அமைச்சரின் மகன் கோளாந்தகளை விவாகம் செய்துவைக்க முயலாதீர்கள்’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டுப் போங்கள்!” என்றாள்.

அருந்திகை சிரித்துக் கொண்டே, “நிச்சயம் செய்கிறேன். ஆனால் உன்னை வேறு யாருக்குக் கல்யாணம் செய்து வைப்பது என்று கேட்டால் அதற்கும் நான் யோசனை சொல்லத்தானே வேண்டும்?” என்றாள்.

“சொல்லுகிறேன். ‘உங்கள் மகள் புத்த பெருமானின் அறவழிகளில் சென்று கொண்டிருக்கிறாள். அவளை அவ்வழியிலிருந்து தாங்கள் திருப்ப முடியாது. ததாகதரின் பேரொளியில் கலந்துவிட்ட அவளை மறுபடியும் வாழ்க்கையின் மாய இருளில் சிக்க வைப்பது மிகவும் கடினம்’ என்று சொல்லுங்கள்” என்றாள் திருபுவனி.

விளையாட்டாகப் பேசிக் கொண்டு வந்த அருத்திகை அப்பொழுது திருபுவனி சொன்ன வார்த்தைகளை விளையாட்டாகவே எடுத்துக் கொள்ள முற்பட வில்லை. உண்மையாகவே அவளுக்குத் துறவறத்தில் தீவிரப்பற்று தான் இருந்தது என்பது நன்கு விளங்கியது. அவளுக்குத் துறவறத்தில் இத்தகைய பக்குவம் எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றி நினைக்க அருந்திகைக்குச் சிறிது ஆச்சரியம்தான் ஏற்பட்டது. “உன் வார்த்தைகள் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. துறவறத்தை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு உனக்கு என்ன நேர்ந்தது என்பதுதான் எனக்குத் தெரிய வில்லை. உன்னைப் போன்ற இவ்வளவு அழகான இளம் வயதுடைய பெண்களை யெல்லாம் துறவு மார்க்கத்தில் இழுக்கும் பௌத்த சங்கத்தைக் கண்டாலே எனக்குப் பிடிக்க வில்லை. இது என்ன ஆடை? இது என்ன வேஷம்? இவ்வித ஆடைகளை அணிந்து கொண்டு தலையைச் டெடையாக்கிக் கொண்டை போட்டுக் கொண்டால் உன் யௌவன அழகு குறைந்துவிடுமா? உன்னைப் பார்த்தவர்கள் பக்தியும் அடக்கமும் காட்டுவதை விட உன்னிடம் மோகமும் தாபமும்தான் அதிகமாகக் காட்டுவார்கள். எவரும் இந்தப் பருவத்தில் உன் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டதாகக் கருதுவார்களே தவிர, நேராக்கிக் கொண்டதாகக் கருத மாட்டார்கள். உள்ளம் தூய்மையாக இருந்தாலும் உடலழகு உள்ளத் தூய்மையையும் பாழாக்க வழி வகுத்து விடும் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். திருபுவனி! உனக்கு நான் உற்ற தோழியாகி விட்டேன். உனக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய நான் என்றும் சித்தமாக இருக்கிறேன், என்னிடம் உன் அந்தரங்கத் தைச் சொல்வதில் பிசகு ஒன்றும் இல்லை. உன்னிடமிருந்து விவரமாக எல்லாம் அறித்து கொள்ளப் பிரியப் படுகிறேன்.உனக்கு விருப்பம் இருந்தால் சொல்லு!” என்றாள்.

திருபுவனி அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே ஒரு பெருமூச்சு விட்டாள். “என்னுடைய கதையை அறிந்து கொள்ளுவதினால் உங்களுக்கு எவ்விதமான பலனுமில்லை. அவைகளை யெல்லாம் உங்களிடம் சொல்ல நான் பிரியப்படவில்லை. அதற்காக என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் எனக்கு உற்ற தோழியாகி விட்டதாக உங்கள் திருவாக்கிவிருந்தே வெளியாகி விட்டது. அப்படியே எனக்கு உற்ற தோழியாகத் தாங்கள் இருப்பதை நான் விரும்புகிறேன். என் தகப்பனார் இடங்காக்கப் பிறந்தார் என்பதைத் தவிர வேறு அதிக விவரம் உங்களுக்கு வேண்டாம். பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நான் குழந்தையாக இருந்த போது கள்வர்களால் அபகரிக்கப்பட் டேன். பதினைத்து வருடங்களுக்குப் பிறகு நான் இந்தக் குடும்பத்துக்கு வத்திருக்கிறேன். இதற்குள் எத்தனை மாறுதல்கள் ஏற்பட்டன? எப்படி எப்படி மாறின என்பவையெல்லாம் விவரிக்க எனக்கு விருப்பமில்லை. நீங்கள் எனக்காக ஏதேனும் இப்பொழுது உதவி செய்ய நினைத்தால், அது என் தகப்பனாரிடம் எனக்கு மணம் முடிக்காமலிருக்கும்படி செய்வதுதான். அதைத்தான் எனக்கு நீங்கள் செய்த பேருதவியாக நினைப்பேன். அத்துடன் துறவு வாழ்க்கையில் உள்ள நான் குடும்பச் சூழ்நிலையில் இருக்கப் பிரியப்பட வில்லை. எப்பொழுது நினைக்கிறேனோ அப்பொழுது இங்கிருந்து போய் விடுவேன் என்பதையும் தெளிவாகச் சொல்லுங்கள், என்னைச் சிறையில் அடைப்பது போல் இந்த மாளிகையில் அடைத்திருக்கிறர்கள். அவ்வளவுதானே தவிர, நான் குடும்பத்தாரோடு எவ்வித ஒட்டுதலும் கொள்ளவில்லை. தன்னிச்சையாகப் பறக்கும் என் மனம் எந்தக் கூண்டிலும் அடைபட்டு விடவில்லை, அவர்கள் என் வாழ்க்கை நலனுக்காக ஏதேதோ திட்டம் வருக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.ஆனால் நானும் எனக்காக ஏதேதோ திட்டம் வகுக்கத் தொடங்கியிருக்கிறேன் என்பது பற்றி அவர்களுக்குத் தெரியாது….” என்றாள்.

அருந்திகை சில நிமிட நேரம் பேசாமல் இருந்துவிட்டு, ”உன் மனத்தை என்னால் திருப்ப முடியாது. ஒரு நாள் என் வார்த்தையைக் கேட்டு நடப்பாய் என்றே நம்புகிறேன். இப்பொழுது தான் உன்னிடம் சொல்லியபடியே உன் தகப்பனாரிடம் சொல்லி விட்டுப் போகிறேன். ஆனால் அவருடைய அபிப்பிராயம் எப்படியோ?’ எனக்கும் தஞ்சை அமைச்சரின் மகனுக்கு நீ வாழ்க்கைப் படுவதில் சம்மதமில்லை, ஆனால் விவாகமே செய்து கொள்ளாமல் இப்படி பிக்ஷுணியாகவே இருப்பதிலும் பிரியமில்லை. இதை நன்றாக யோசித்து ஒரு முடிவு செய்ய வேண்டியது உன்னுடைய பொறுப்பு” என்றாள்.

திருபுவனி சிரித்தாள். “ஆகட்டும்! நான் கடைசியாக உங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லுகிறேன். இந்த நாட்டில் என்னுடைய விவாகப் பருவம் கடப்பதற்கு முன் சோழ சாம்ராஜ்யம் ஏற்படுமானால் ஒரு வேளை நான் விவாகம் செய்து கொள்ளலாம்” என்றாள்.

அருத்திகைப் பிராட்டி திகைப்பும் வியப்பும் அடைந்தாள். பிறகு, “நீ அதற்காகத்தான் இந்த பிக்ஷு கோலம் பூண்டிருக்கிறாயா? இது என்ன கனவு? இது என்ன விரதம்? வேடிக்கையாக இருக்கிறது. இன்று உள்ள நிலையில் உன் விருப்பம் நிறைவேறுமா? இதற்காக நீ ஏன் வாழ்க்கையைப் பாழ்பண்ணிக் கொள்கிறாய்?” என்றாள்.

“என்னைப் போன்ற இரண்டொருவருடைய வாழ்வு பாழானால் பாதகமில்லை. அதன் மூலமாக இந்தச் சோழ வள நாடு நன்மை யடையுமானால் அதை விட உயர்ந்தது வேறு எதுவுமில்லை!” என்றாள் திருபுவனி.

அருந்திகை திருபுவனியின் லட்சியத்தையும் தியாக உணர்ச்சியையும் எண்ணி வியந்தாள். தங்கள் குலத்தினர் நாட்டைப் பெருமையுற ஆட்சி செய்ய வேண்டு மென்பதற்காகத் திருபுவனி போன்ற இளம் பெண்கள் வாழ்வைத் துச்சமாக மதிப்பதை பெண்ணி அவள் மனம் நெகிழ்ந்தது. திருபுவனி போன்றவர்களின் தியாகத்துக்காக எப்படி நன்றி செலுத்துவது என்று தான் அவளுக்குத் தெரியவில்லை. அவள் திருபுவனிக்கு எவ்வித பதிலும் சொல்லாமல் அவளை ஆர்வத்தோடு அணைத்துக் கொண்டு, ”உன்னைப் போன்ற தோழி எனக்குக் கிடைத்தது பெரும் பாக்கியம்தான். இருளடைந்த சோழ பாரம்பரியத்தை மறுபடியும் பிரகாசிக்க வைக்க முயலும் உன்னை போன்றவர்களுக்கு தான் எந்த வகையில் நன்றி தெரிவித்தாலும் போதாது. சரி, நான் வருகிறேன், எப்பொழுதும் உன்னுடைய நலனைப் பாதுகாப்பதற்காக நான் எதையும் செய்யச் சித்தமாயிருக்கிறேன் என்பதை நீ நிச்சயம் நம்பலாம். நான் அடிக்கடி உன்னை வந்து சந்திக்காமல் இருக்க மாட்டேன். என் புனால் உனக்கு ஏதேனும் காரியமாக வேண்டுமானால் தாராளமாகக் கேட்கலாம். நான் சென்று வருகிறேன்!” என்று விடைபெற்று வெளியே வந்தாள்.

தம் மகள் திருபுவனியோடு பேசிக் கொண்டிருந்த அருந்திகைப் பிராட்டியின் வரவை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருந்தார் பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தார். அவருடைய மகன் பொற்கோமனும் அங்கே நின்றான்.

அருந்திகை முகத்தில் வருத்தக் குறியுடன் வந்து, “திருபுவனியுடன் இவ்வளவு நேரம் பேசியும் எவ்விதப் பலனும் ஏற்படவில்லை. அவளைப் புரிந்துகொள்வதே கடினமாக இருக்கிறது. அவளுக்கு ஏன் துறவறத்தில் இவ்வளவு பற்றுதல் ஏற்பட்டதோ தெரியவில்லை. இவ்வளவு காலமாகக் குடும்பத்தை விட்டுப் பிரித்திருந்ததால் அவள் மிகவும் அல்லல் பட்டிருக்க வேண்டும். இல்லாவிடில் இந்த வயதில் துறவறத்தில் இவ்வளவு பற்றுதல் ஏற்படக் காரணமில்லை. அவளுக்கு விவாகத்தில் பிரியமே இல்லை. குடும்ப மார்க்கத்தில் பற்றுதலே இல்லை, ஓரளவு உங்களுக்காக – உங்கள் மனச் சாத்திக்காகச் சீவர ஆடைகளைக் களைந்து நல்லாடைகளையும் ஆபரணங்களையும் பூட்டிக் கொண்டாள். தஞ்சை அமைச்சரின் புதல்வருக்கு அவளை கலியாணம் செய்து கொடுத்துவிடப் போவதாகத் தாங்கள் தீர்மானித்திருப்பதை யறிந்ததும். மறுபடியும் துவராடையை யணிந்து கொண்டு விட்டாள். உங்களுடைய பிரயாசை யெல்லாம் வீணான தென்றே நினைக்கிறேன். அவள் நெடு நாட்கள் வரையில் இந்தக் குடும்பத்தில் தரித்திருக்க மாட்டா ளென்று தான் தோன்றுகிறது” என்றாள்.

இதைக் கேட்டதும் பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தாரின் முகம் சுருங்கியது. அவர் மனம் மிகவும் இடித்தவராக ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே, “இவ்வளவு நாட்களுக்குப் பின்னும் எவ்வளவோ சிரமத்தின் பேரில் என் அருமை மகளைத் தேடிக் கண்டு பிடித்தேன். ஆனால் அவள் சித்தம் இப்படி இருக்குமென்று நான் நினைக்கவில்லை. இதுவும் என் துரதிர்ஷ்டம்தான். அவள் மன நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டு மென்பதைப் பற்றி இனி தீவிரமாக யோசிக்க வேண்டியது தான். நான் புலிப்பள்ளிகொண்டாருக்குக் கொடுத்த வாக்குறுதி என்ன ஆவது? அவர் எவ்வளவு ஆவலாக இருக்கிறார் தெரியுமா? அவருடைய விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ளலாமா? அது எவ்வளவு ஆபத்தானது?….” என்றார்.

”அவள் அபிப்பிராயப்படியே நடந்தால் விபரீதமாகத்தான் முடியும். எப்படியாவது நாம் இந்தக் கலியாணத்தை முடித்துவிட வேண்டியதுதான். அவள் பிணிக் கோலத்துடனேயே இருந்தாலும் பாதகமில்லை. பலாத்காரமாகவாவது அவளுக்கு மணம் முடித்து விடவேண்டும். கலியாணத்தைச் செய்து விட்டால் அப்புறம் அவள் மன நிலை தானே திரும்பிவிடும். அவளைப் புலிப்பள்ளியாரின் மகன் கோளாந்தகனுக்குத்தான் மணம் செய்து வைக்க வேண்டும்” என்றன் பொற்கோமன்.

“இவ்வளவு பிடிவாதத்தோடு அவளுக்கு மணம் முடிப்பது பிசகு, பொதுவாக அவள் தஞ்சை அமைச்சரின் புத்திரரை விவாகம் செய்து கொள்ள விரும்பவில்லை. இதை முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டும். ஒருவேளை அவளுக்கு வேறு யாரையேனும் கலியாணம் செய்து வைக்க நீங்கள் முயன்று பார்த்தால் அவள் மனம் மாறினாலும் மாறலாம்” என்றாள் அருந்திகை.

பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தார் மௌனமாக நின்று கொண்டிருந்தார்,

“இவ் விவாக விஷயத்தில் இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்ல முடியாதவளாக இருக்கிறேன். அவளுக்கு விருப்பம் இல்லாத ஒருவருக்கு அவசர விவாகம் செய்து வைப்பது முறையாகாது என்பது தான் என் அபிப்பிராயம், அப்புறம் உங்கள் விருப்பம்” என்று சொல்லி விட்டு விடைபெற்றுக் கொண்டு பல்லக்கில் சென்று அமர்ந்தாள் அருந்திகை. பரிவாரங்கள் சூழப் பல்லக்கும் புறப்பட்டது.

அருந்திகையின் பல்லக்கும் பரிவாரங்களும் கண் மறையும் வரையில் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் பொற்கோம் இடங்காக்கப் பிறந்தார் சிறிது ஆத்திரமும் கோபமும் கொண்டவனாகத் தன் தகப்பனாரைப் பார்த்து, “அருந்திகைப் பிராட்டிக்கு நாம் தஞ்சை அமைச்சரோடு பெண் கொடுத்து உறவு கொள்வதில் பொறாமை. இவளே திருபுவனியின் மனத்தைக் கலைத்திருப்பாள்” என்று கூறினான்.

– தொடரும்…

– மாலவல்லியின் தியாகம் (தொடர்கதை), கல்கி வார இதழில் 1957-01-13 முதல் 1957-12-22 வரை வெளியானது.

– கி.ரா.கோபாலனின் மறைவுக்குப் பின் அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு ‘மாலவல்லியின் தியாகம்’ தொடரின் கடைசி பத்து அத்தியாயங்களையும் எழுதி முடித்தார் கல்கியில் மற்றொரு உதவி ஆசிரியராக இருந்த ஸோமாஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *