சங்கர்லால் வந்துவிட்டார்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 23, 2026
பார்வையிட்டோர்: 89 
வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25

16

அமீது நடந்ததை அப்படியே சொன்னான். அமீதும் மணியரசும் முயல்குட்டி வாங்கப் போனது முதல், சின்னத் துரையிடம் வகையாக அகப்பட்டுக்கொண்டு பிறகு தப்பியது வரை தெளிவாகச் சொன்னான். தீவிலிருந்து மீண்டும் அவர்களை மயிலாப்பூர் இல்லத்திற்கே கொண்டுவந்தது ஏன் என்று புரியவில்லை என்றும், சின்னத்துரையின் போக்கே புது மாதிரியாகவும் மருமமாகவும் இருப்பதாகவும் சொன்னான். 

சங்கர்லால், சின்னதுரையின் மயிலாப்பூர் முகவரியை வாங்கிக்கொண்டு, “இனிமேல் உங்களுக்குக் கவலை வேண்டாம்! தான் கவனித்துக்கொள்கிறேன்” என்றார். 

வகாப் அமீதையும் மணியரசையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார். 

அன்று மாலை ஆறு மணிக்குச் சங்கர்லால் காரில் புறப்பட்டார். மயிலாப்பூரில் சின்னத்துரையின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துக் காரை ஓர் ஓரமாக நிறுத்தினார். 

அப்போது – 

வீட்டின் பின்புறமாக எவரோ பதுங்கி ஓடுவது தெரிந்தது. சங்கர்லால் உற்றுப் பார்த்தார். 

ஓடியலன் – சயரிமுத்து – 

அவன் மறைந்ததும், சங்கர்லால் வீட்டிற்குள் சென்றார். கூடத்தில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. 

ஆனால் – 

எவரும் இல்லை – 

பக்கத்திலிருந்த ஓர் அறையில், கவிழ்ந்து கிடந்தான் ஒரு மனிதன். அவனுக்குப் பக்கத்தில் ஒரு தோல்பை இருந்தது. சங்கர்லால், அசைவற்ற அந்த மனிதனைப் புரட்டினார். அவன் செத்துக் கிடந்தான்! 

அந்த மனிதர் –

சின்னதுரை அல்ல! ஆனால் – 

சின்னத்துரை தேடிக்கொண்டிருந்த மனிதன் அவன்! அமீதிடமிருந்து பார்சலைக் கிளப்பிச் சென்ற அதே மனிதன்! அவனேதான் அவன்! அமீது சொல்லியிருந்த அடையாளங்களிலிருந்து அவனை எளிதில் கண்டுகொண்டுவிட்டார் சங்கர்லால்! 

சங்கர்லால் அந்த அறையைவிட்டு வெளியே வந்தார். சிந்தனை செய்தபடி பக்கத்திலிருந்த அறைகளைக் கவனித்தார். மற்றொரு பெரிய அறையில், சுவர் ஓரமாக இரண்டு சிறிய சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வீட்டின் பின் எவரையும் காணோம்! எவரும் இல்லாத அந்த வீட்டில், அமீதையும் மணியரசையும் ஏமாற்றிப் பார்சலை வாங்கிச் சென்ற மனிதன் கொலையுண்டு கிடக்கிறான்! சற்று நேரத்திற்கு முன், வீட்டின் பின்புற வழியாகச் சவரிமுத்து ஓடியிருக்கிறான். சவரிமுத்து அங்கு ஏன் வந்துவிட்டு ஓடவேண்டும்? அவனுக்கும் இந்தக் கொலைக்கும் என்ன தொடர்பு? 

வீட்டின் எல்லா மூலை முடுக்குகளையும் அலசிப் பார்த்துவிட்டு அங்கே எவரும் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டதும், சங்கர்லால் மீண்டும் உள்ளே சென்றார். செத்துக்கிடந்த மனிதனுக்கு அருகில் சென்று, அவனைப் புரட்டிப் பார்த்தார். அவன் செத்துப்போய் வெகு நேரமாகவில்லை. இன்னும் அவன் உடலில் இலசோசுச் சூடு இருந்தது. அவன் செத்துப்போய் நேரமாகிப்போயிருந்தால், அவன் உடல் பனி மாதிரியாகிவிட்டிருக்கும்! அவனுடைய உடலில் எந்த இடத்திலும் இரத்தம் கசியவில்லை. தலையின் பின் புறம் மட்டும் புடைத்துப்போயிருந்தது. அந்த அறையின் சன்னல் ஓரமாக இருந்த சிறிய குண்டாந்தடியைப் பார்த்தார் சங்கர்லால். அதைக் கை படாமல், கைக்குட்டையால், முனையைப் பிடித்து மெல்லத் தூக்கிப் பார்த்தார். அது கொஞ்சம் கனமாகவே இருந்தது. குண்டாந்தடியை மீண்டும் அங்கேயே வைத்துவிட்டு, மெல்ல வெளியே வந்தார் வீட்டின் தாழ்வாரத்திற்கு வந்து நின்று கவனித்தார். பிறகு – 

வெளிக் கதவைத் திறந்தபடியே விட்டுவிட்டு விரைந்து நடந்தார். 

அவருடைய கார் நின்ற இடத்தைக் கடந்து, சிறிது தொலைவில் தெரிந்த தொலைபேசிப் பெட்டியை அடைந்தார். 

தொலைபேசிப் பெட்டிக்குள் நுழைந்து மூலையில் நின்றபடி, அந்த வீட்டைப் பார்த்துக் கொண்டே தொலைபேசியை எடுத்தார். 

உதவிப் போலீஸ் கமிஷனர் வகாபின் வீட்டிற்கு டயல் செய்தார். சில வினாடிகளில் வகாபின் வீட்டுத் தொலைபேசி மணி அடிக்கும் ஓசையும், அதைத் தொடர்ந்து தொலைபேசி எடுக்கப்படும் ஓசையும் ‘ஹலோ’ என்ற குரலும் கேட்டன. 

“உதவிப் போலீஸ் கமிஷனர் வகாப்தானே?” என்றார் சங்கர்லால், 

“ஆமாம்” 

“சங்கர்லால் பேசுகிறேன். உங்களுக்கு ஓர் அவசரச் செய்தி காத்திருக்கிறது” என்றார் சங்கர்லால், 

“சொல்லுங்கள் சங்கர்லால்” என்றார் வகாப். 

‘உங்கள் மகன் அமீதும் மணியரசும் விட்டுச் சென்ற சைக்கிள்களைக் கண்டுபிடித்து விட்டேன்! அவர்கள் கொடுத்த மயிலாப்பூர் முகவரியிலேயே அவை கிடைத்துவிட்டன!” 

”சங்கரிலால், வெறும் சைக்கிள்களை மட்டும் கண்டுபிடிக்கவா நீங்கள் மயிலாப்பூர் சென்றீர்கள்? என்னால் தம்பமுடியவில்லையே!” என்றார் வகாப்.

“பார்சலைக் கிளப்பிச் சென்ற மனிதனும் அங்கே இருக்கிறான். ஆனால், அவன் உயிரைவிட்டு அரைமணி நேரம் ஆகியிருக்கும் என்று எண்ணுகிறேன்! எதற்கும் உடனே அவன் பிணத்தை வைத்திய சோதனைக்கு அனுப்பி, எத்தனை மணிக்கு அவன் இறந்திருக்க வேண்டும் என்பதைத் தெளிவாகக் கண்டுபிடிக்க வேண்டும். போலீஸ் வேனை எடுத்துக்கொண்டு, நான்கு போலீஸ்காரர்களுடன் உடனே புறப்பட்டு வாருங்கள். மயிலாப்பூர் முகவரிதான் உங்களுக்குத் தெரியுமே!” என்றார் சங்கர்லால், வகாப் – 

வாயடைத்து விட்டவரைப்போல் சிறிது நேரம் பேசவே இல்லை! 

“வகாப். புறப்பட்டீர்களா, இல்லையா?” என்றார் சங்கர்லால். 

“இதோ புறப்பட்டுவிட்டேன் சங்கர்லால்! வியப்பாக இருக்கிறதே! அந்த மனிதனை யார் கொன்றிருப்பார்கள்?” என்று கேட்டார் வகாப் ஆவலுடன். 

“அந்த மனிதனைக் கடைசியாக எவர் உயிருடன் பார்த்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், அந்த வீட்டிலிருந்து கடைசியாகச் சென்றவன் சவரிமுத்து, நான் வீட்டின் முன் சிறிது தொலைவில் காரை நிறுத்தியபோதுதான், வீட்டின் பின்புற வழியாகச் சவரிமுத்து ஓடினான்!” 

“சவரிமுத்தைப் பிடித்து விட்டீர்களா சங்கர்லால்!” 

“இல்லை! அவன் போன பிறகு தானே நான் வீட்டிற்குள் சென்று பிணத்தைப் பார்த்தேன்! சவரிமுத்து, சென்னையின் எல்லையைக் கடந்து போகாமல் பார்த்துக்கொள்ளும்படி போலீஸ் இலாகாவுக்கு எச்சரிக்கை செய்யுங்கள். உடனே நீங்கள் புறப்பட்டு வாருங்கள்” என்று சொல்லிவிட்டு, சங்கர்லால் தொலைபேசியை வைத்தார். 

அவர் ஆழ்ந்த சிந்தனையுடன் வெளியே வந்து மெல்லத் தமது காரை நோக்கி நடந்தார். கதவின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே உட்கார்ந்தார். கை கடிகாரத்தைப் பார்த்தபடி நேரத்தைப் போக்கிக் கொண்டிருந்தார். 

சரியாகப் பத்து நிமிட நேரத்தில் போலீஸ் வேனும், அதற்கு முன் வகாபின் பழைய காரும் அங்கே வந்து நின்றன. வகாப் காரைவிட்டு இறங்கியதும், சங்கர்லாலின் காரைக் கண்டுபிடித்துக் கொண்டு விரைந்து வந்தார். வகாப் நெருங்கி வந்ததும், “செத்துக்கிடப்பவனின் நிலையையும், சுற்றுப்புறத்தில் உள்ள பொருள்களையும் புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே இருக்கும் குண்டாந்தடியில் இரேகை படிந்திருக்கிறதா என்று கண்டுபிடிக்க வேண்டியது மிகத்தேவை அதில். கை இரேகைகள் எதுவும் இருக்காது என்று எண்ணுகிறேன். அதில் கை இரேகைகள் இருந்தால், அது மிகவும் வியக்கத்தக்க செய்திதான்! கொலையைப் பற்றி வெளியே எவருக்கும் தெரிய வேண்டாம். பத்திரிகையில் எந்தவிதமான செய்தியும் இப்போது வரவேண்டாம்!” என்றார் சங்கர்லால். 

“தான் கவனித்துக் கொள்ளுகிறேன் சங்கர்லால்” என்றார் வகாப். 

“நான் புறப்படுகிறேன். இனிமேல் நான் இங்கு இருக்க வேண்டிய தேவை இல்லை. இரண்டு சைக்கிள்களையும் எடுத்துச் சென்று அமீதிடமும் மணியரசிடமும் கொடுத்து விடுங்கள்” என்று சொல்லிவிட்டுக் காரைக் கிளப்பினார். 

வகாப் குனிந்து சங்கர்லாலின் காதருகில், “பார்த்தீர்களா சங்கர்லால், சவரிமுத்து தப்பியதுமே இப்படி ஏதாவது நடக்குமென்று நான் எதிர்பார்த்தேன். நீங்கள் என்னவென்றால், சவரிமுத்து தப்பிப்போசு நாமே உதவ வேண்டும் என்றீர்கள். இப்போது என்ன சொல்லுகிறீர்கள்?” என்றார். 

சங்கர்லால் மெல்லிய சிரிப்புடன், ஒன்றும் பதில் சொல்லாமல் புறப்பட்டுவிட்டார். அவர் ஒன்றும் பதில் சொல்லாமல் போனது வகாபிற்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. 

சங்கர்லாலின் கார் மறையும் வரையில் பார்த்திருந்துவிட்டு, லகாப் திரும்பினார். விரைந்து அந்த வீட்டிற்குள் சென்றார். அவரைத் தொடர்ந்து மூன்று போலீஸ்காரர்களும் புகைப் படம் பிடிப்பவரும் சென்றார்கள். 

வெளியே ஒரு போலீஸ்காரன் துப்பாக்கியுடன் காவலாக நின்றான். 

அடுத்து பத்து நிமிடங்களில் செத்துக் கிடந்த மனிதனையும், இரண்டு சைக்கிள்களையும் தூக்கிப் போட்டுக் கொண்டு போலீஸ் வேன் புறப்பட்டது. அதைத் தொடர்ந்து வகாப் தமது காரில் சென்றார். 

17 

தில்லைநாயகத்தைப் போன்ற பெரும் பணக்காரர்கள் சென்னையில் மிகக் குறைவு. அவரைப்போல் பணம் படைத்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவருடைய அழகான பங்களா ஷெனாய் நகரில் இருந்தது. அவருக்கு என்று ஷெனாய் நகரிலேயே ஏகப்பட்ட பங்களாக்களும் வீடுகளும் இருந்தன. அவருடைய எஸ்டேட்டுகளையும் மற்றத் தொழில் நுணுக்கங்களையும் கவனித்துக் கொள்ள அவருக்கு வலது கையைப்போல் இருந்தார் அண்ணாமலை. தில்லைநாயகத்தின் எஸ்டேட்டுகளுக்கு அண்ணாமலைதான் பொறுப்புடையவர். எதற்கும் தில்லைநாயகம், அண்ணாமலையைத்தான் ஆலோசனை கேட்பார். 

இரண்டு நாட்களுக்குமுன் தில்லைநாயகம் நிர்வாகி அண்ணாமலையை அழைத்து, “பாங்கில் நாம் வைத்திருக்கும் நகைகள் வேண்டும். அவற்றைக் கொண்டுவர ஏற்பாடு செய்யுங்கள். பெங்களூரில் ஒரு நண்பர் வீட்டில் திருமணம். அதற்குக் குடும்பத்துடன் போக வேண்டும்!” என்றார். 

நிர்வாகி அண்ணாமலை சிந்தித்தார். “என்ன சிந்திக்கிறீர்கள்?” என்றார் தில்லைநாயகம். 

அண்ணாமலை சொன்னார் “ஐயா, காலம் கெட்டுப்போயிருக்கிறது! கோயிலில்கூட நகைகள் கொள்ளை போகின்றன என்றால் இதைவிட இழுக்கு வேறு என்ன இருக்கமுடியும்? நம்முடைய நகைகள் விலை உயர்ந்தவை. பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலுங்கூடச் சில வைரங்கள் கிடைப்பது அரிது. இப்படிப்பட்ட நகைகளைக் கொண்டு வருவது. என்றால் மிகவும் அச்சமாக இருக்கிறது!” 

“அச்சப்பட்டுப் பயன் என்ன? திருமணத்திற்குப் போகாமல் இருக்க முடியுமா? எப்படியும் நகைகள் வேண்டும். செல்லையாவை இன்று பாங்குக்கு அனுப்பி நகைகளைக்கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள். நகைகளைக் கொண்டுவரும்போதும், மீண்டும் கொண்டுபோகும்போதும், துணையாக எவரையாவது அழைத்துப் போசுட்டும். பாதுகாப்புக்கு உகந்த மனிதரை நீங்களே நியமித்துக் கொடுங்கள்” என்றார் தில்லைநாயகம். 

அண்ணாமலை தயங்கினார். 

“எதற்காகத் தயங்குகிறீர்கள்? தங்கத்துரையை உங்களுக்குத் தெரியுமா இல்லையா?” என்று கேட்டார் தில்லை நாயகம். 

“தெரியும்” என்றார் அண்ணாமலை. 

“தங்கத்துரையைவிடச் சிறந்த மனிதர் வேறு எவர் இருக்கப்போகிறார்கள்! துப்பறியும் தொழிலில் போலீஸ் இலாகாவிலேயே பாராட்டுப் பெற்றவர் அவர். தொலைபேசியில் அவரை அழைத்து, செல்லையாவுடன் போகச் சொல்லுங்கள். மீண்டும் நகைகளைத் திருப்பி அனுப்பும்போதும், தங்கத் துரையையே போகும்படி சொல்லுங்கள். தங்கத்துரை கேட்கும் பணத்திற்கு ஒரு செக் கொடுத்து விடுங்கள்” என்றார் தில்லைநாயகம். 

அண்ணாமலை “சரி, ஐயா” என்றார். அவர் முகத்தில் மகிழ்ச்சி மிகத் தோன்றியது. 

தில்லைநாயகம் மனத்திற்குள் நிர்வாகியைப் பாராட்டிக் கொண்டார். இவ்வளவு அக்கறையுள்ள ஒரு நிர்வாகி வேறு எவருக்குமே வாய்த்திருக்கமாட்டார் என்பது அவருடைய உறுதியான நம்பிக்கை. 

அண்ணாமலை தொலைபேசியில் தங்கத்துரையை அழைத்தார். “தங்கத்துரை, எங்கள் ஐயா தில்லைநாயகம் அவர்களின் விலை உயர்ந்த நகைகளைப் பாங்கிலிருந்து கொண்டுவரச் செல்லையா என்னும் எங்கள் கணக்குப்பிள்ளையை அனுப்புகிறேன். அவருடன் நீங்கள் சென்று நகைகளை விழிப்புடன் கொண்டுவர வேண்டும். மீண்டும். இரண்டு நாட்கள் கழித்து. அதே தகைகளைப் பாதுகாப்புடன் பாங்கில் வைத்துவிட வேண்டும். இதுதான் உங்கள் வேலை. உடனே புறப்பட்டு வரவேண்டும்” என்றார். 

தங்கத்துரை இலேசாகச் சிரித்தபடி, “இது எளிய வேலை. ஆனாலும் நானே வருவதாக இருந்தால் ஆயிரம் ரூபாய் ஆகும்” என்றார். 

“பணத்தைப் பற்றிக் கவலை வேண்டாம். நீங்கள் வரும்போது செக் தயாராக இருக்கும்! சரிதானே?” என்றார் அண்ணாமலை, 

“இதோ புறப்பட்டுவிட்டேன் என்றார்” தங்கத்துரை. 

நகைகளை மிகவும் பத்திரமாகக் கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பு முழுவதும் தங்கத் துரையின்மீது விழுந்திருந்தது. ஆகையால், அவர் கைத் துப்பாக்கி எப்போதும் வைத்திருந்தார். செல்லையா பாங்கின் இரும்புபெட்டிச் சாவியை எடுத்துச் சென்றார். இருவரும் தில்லைநாயகத்தின் காரில் சென்று பாங்கிலிருந்து நகைகளைக் கொண்டுவந்தார்கள். தில்லைநாயகம் தமது குடும்பத்துடன் பெங்களூருக்குப் போய்த் திருமணம் முடிந்ததும் திரும்பினார். 

மீண்டும் நகைகளைப் பாங்கில் வைக்க ஏற்பாடு செய்யும்படி அண்ணாமலையிடம் தில்லைநாயகம் சொல்லி நகைகளைக் கொடுத்தார். அண்ணாமலை எந்த வேலையையும் மிகவும் கவனத்துடன் செய்பவர். அவர் எல்லா நகைகளும் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்து, தோல் பையில் வைத்து தங்கத்துரையிடம் எடுத்துக்கொடுத்தார். 

“பையைத் திறந்து, எல்லா நகைகளும் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்ளுங்கள். பாங்கில் சேர்க்கும் வரையில் உங்கள் பொறுப்பு!” என்றார் அண்ணாமலை.

தங்கத்துரை சிந்தித்தார். தமது கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஐந்து. 

“என்ன மணியைப் பார்க்கிறீர்கள்? ஐந்து மணியாகிவிட்டதே என்று வியப்பாக இருக்கிறதா? இரவு பத்து மணியானாலும் குற்றம் இல்லை. பாங்கு நிர்வாகியிடம் தொலைபேசியில் சொல்லியிருக்கிறேன். அவர் உங்களுக்காகக் காத்திருப்பார்” என்றார் அண்ணாமலை. 

தங்கத்துரை ஒன்றும் சொல்லாமல் சிரிப்புடன் நடந்தார். கார்- 

வெளியே காத்திருந்தது. காரோட்டி காரை கிளப்பக் காத்திருந்தான். செல்லையா கதவைத் திறந்துகொண்டு காரில் ஏறினார். அவரைத் தொடர்ந்து தங்கத்துரை காரில் ஏற ஒரு காலை எடுத்துவைத்தபோது – 

தங்கத்துரையின் மண்டையிலே தாங்க முடியாத அடி ஒன்று விழுந்தது! தங்கத்துரை, கையிலிருந்த தோல்பையைக் கெட்டியாகப் பிடித்தார். ஆனால் – 

மறுகணமே அவர் ஆகாயத்தில் எழும்பிப் பறப்பதைப் போன்ற ஓர் உணர்ச்சி ஏற்பட்டது! அது, அவர் பல நூறு மைல்கள் மேலே எழும்பிப் பல ஆயிரக்கணக்கான மைல் வேகத்தில் இயற்கைச் சந்திரனைப்போல் உலகத்தைச் சுற்றுவதுபோல் இருந்தது! 

பின்னால் நின்று அவர் மண்டையில் அடித்தவர் –

எவரோ? 

18 

டிக் டிக், டிக் டிக் என்று இடைவிடாத கடிகாரத்தின் ஓசையைக் கேட்டு எழுந்த தங்கத்துரை, பக்கத்தில் எங்கேயாவது டைம்பாம் வைத்திருக்கிறார்களோ என்று பதட்டத்துடன் எழுந்தார். ஆனால் – 

எதிரே சுவரில் மாட்டியிருந்த பெரிய கடிகாரம் அவரை ஏமாற்றி விட்டது! அந்தக் கடிகாரத்தில் மணி – 

6-15 

ஐந்து மணிக்குத் தாக்கப்பட்டு விழுந்த தங்கத்துரை. எழுபத்தைந்து நிமிடங்களுக்குப் பிறகுதான் கண விழித்துப் பார்த்திருக்கிறார்! அவர் இப்போது விழுந்து கிடந்த இடம் முற்றிலும் புதிதாக இருந்தது. அந்த இடத்திற்கு அவர் இதுவரையில் வந்ததே கிடையாது. கீழே தரை முழுவதும் பளபளப்பாக இருந்தது. பக்கத்தில் இருந்த பெரிய மேசையின் விளிம்பைப் பிடித்துக் கொண்டு மெல்ல எழுந்தார். அவரால் நிற்கக்கூட முடியவில்லை! எழுந்து மேசையைப் பிடித்தபடியே சமாளித்துக்கொண்டு, தன்னைச் சுற்றிலும் பார்த்தார். சிறிது தொலைவில், தரையில் – 

தோல்பை விழுந்து கிடந்தது! 

தங்கத்துரை பாய்ந்து சென்று அந்தத் தோல் பையை எடுத்தார். மிக்க அவசரத்துடனும் ஆவலுடன் அதைத் திறந்து பார்த்தார். அப்பையை அவருக்கு – 

வியப்பாக இருந்தது! 

தோல் பையில் அவர் எண்ணிப்போட்ட வைர நகைகள் முழுவதும் அப்படியே இருந்தன! மாற்று நகைகளாக இருக்குமோ என்ற ஐயத்துடன் அவற்றை மேசையின்மீது கொட்டினார். ஒவ்வொன்றாகப் பார்த்தார். அவற்றில் ஒன்றுகூட மாற்று நகை இல்லை! எல்லாமே அசல் வைரங்கள்! 

தங்கத்துரை நகைகளை மீண்டும் பையில் போட்டுக் கையில் எடுத்துக்கொண்டார். அவர் நின்றிருந்த கூடத்தைப் பார்த்தார். அந்தக் கூடத்தில், எல்லாச் சுவர்களிலும் வண்ணம் பூசப்பட்டுப் பார்க்கச் சுவர்கள் கவர்ச்சியாக இருந்தன. 

கூடத்தில் இங்கும் அங்குமாகச் சாய்வு நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. மேசையின்மேல் தொலை பேசியும் வானொலிப் பெட்டியும் இருந்தன. 

தங்கத்துரை தொலைபேசியில் பேச எண்ணி, தொலைபேசியை எடுத்தார். ஆனால் – 

அதில் எந்தவிதமான ஓசையும் கேட்கவில்லை. தொலைபேசியின் தொடர்பு அறுக்கப்பட்டிருந்தது! 

தங்கத்துரை, கூடத்தின் சுவரில் மாட்டப்பட்டிருந்த பெரிய படம் ஒன்றைப் பார்த்தார். அது –

தில்லைநாயகத்தின் புகைப்படம்! 

இப்போது தங்கத்துரை இருப்பது தில்லைநாயகத்தின் மற்றொரு வீடு என்று தெரிந்ததும், அவர் மெல்ல வெளியே எட்டிப் பார்த்தார். அந்த வீட்டின் எல்லாப் பக்கங்களிலும் அழகான பூச்செடிகளும், பின்புறம் நீச்சல் குளம் ஒன்றும் இருந்தன. 

தில்லைநாயகம் வெயில் நேரங்களிலும், ஓய்வு தேவைப்படும் போதும், தனித்திருந்த இந்தப் பங்களாவில் வந்து தங்குவார் போலிருக்கிறது என்று எண்ணினார் தங்கத்துரை. அவர் வெளிக்கதவைத் திறத்தார். அது சும்மா சாத்தப்பட்டிருந்தது. வீட்டின் வெளித் தாழ்வாரத்தில் நின்றபடி கவனித்தார். சுற்றுச் சுவர் வாயிலருகில் எவனோ ஒருவன் – 

நின்றிருந்தான். 

அந்தப் புது மனிதன், வெளியே எவரையோ எதிர்பார்த்து நிற்பதைப் போல் காத்திருந்தான். 

தங்கத்துரை அவனைக் கண்டதும் வீட்டிற்குள் வந்தார். கதவை மூடிவிட்டு, மேசையருகில் சென்றார். வானொலிப் பெட்டியைத் திருப்பினார். எவரோ ஒருவர் பாடிக் கொண்டிருந்தார். திடீரென்று பாட்டு முடிந்துவிட்டது! அதைத் தொடர்ந்து செய்தி ஒன்று வெளியாகியது : “சென்னை ஷெனாய் நகரில் வசித்து வந்த தில்லைநாயகம் என்பவர் சுமார் ஒரு மணி நேரத்திற்குமுன் கொலை செய்யப்பட்டார்! அவருடைய முதுகில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தங்கத்துரை என்னும் துப்பறியும் நிபுணர் ஓடிவிட்டதாகக் கருதப்படுகிறது. தில்லைநாயகத்தின் விலை உயர்ந்த நகைகளுடன் தங்கத்துரை மறைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. போலீசார் தங்கத்துரையைத் தேடிவருகிறார்கள். தில்லைநாயகம் தெய்வ பக்தி மிகக் கொண்டவர். சென்னையில் பெரும் கோயில்கள் பல அவருடைய ஆதரலிலும் கண்காணிப்பிலும் இருக்கின்றன. இவருடைய மறைவு பெரும் இழப்பு என்றுதான் சொல்லவேண்டும்!” 

தங்கத்துரை கொதிப்புடன் வானொலிப் பெட்டியை நிறுத்தினார். அவருக்குப் புரிந்துவிட்டது! தில்லைநாயகத்தைக் கொலை செய்ய எவரோ திட்டமிட்டு வேலை செய்திருக்கிறார்கள். நகைப் பையுடன் தங்கத்துரை மீது ஐயம் எழ ஆதாரமிருக்கிறது அல்லவா? இப்போது, வெளியே காத்திருக்கும் மனிதன், போலீசுக்குத் தகவல் கொடுத்துவிட்டு, போலீஸ் வேன் வருகிறதா என்று பார்த்துக் கொண்டு நிற்கிறான். போலீஸ் வேன் வந்ததும், அந்த மனிதன் ஓடிவிடுவான்! நகைப் பையுடன் தங்கத்துரை அகப்பட்டுக் கொள்ளுவார்! 

தங்கத்துரை மேசை அறைகளைத் திறந்தார். அதிலிருந்த காகிதங்களையும், பைல்களையும், எடுத்து மேசை மேல் போட்டார் சன்னல் திரைகளை இழுத்துவிட்டார். சட்டைப் பையிலிருந்து தீப் பெட்டியை எடுத்து, மேசை மீதிருந்த காகிதங்களையும், திரைகளையும் கொளுத்தினார்! 

ஒரு சில வினாடிகளில் – 

தீ பரவியது! 

தங்கத்துரை சுதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். மீண்டும் கதவை மூடிவிட்டு, பாய்ந்து சென்று பூச்செடிகளின் மறைவில் ஒளிந்துக் கொண்டார். 

திரைகளில் பிடித்த தீ விரைந்து பரவியது. எங்கும் புகை! 

வெளியே நின்றிருந்த புதுமனிதன் விரைந்து ஓடிவந்தான் எப்படி இங்கே தீப்பிடித்தது என்று அவன் வியப்புடன் உள்ளே ஓடினான். அவன் உள்ளே ஓடியதும் – 

தங்கத்துரை பாய்ந்தார். வெளிக்கதவின் தாழ்ப்பாளை இழுத்துப் போட்டுவிட்டு, நீச்சல் குளத்தின் பக்கமாக ஓடினார். சட்டென்று திரும்பிப் பார்த்தார். 

போலீஸ் வேன் விரைந்து வந்து நின்றது. அதிலிருந்து உதவி போலீஸ் கமிஷனர் வகாபும், ஆறு போலீஸ்காரர்களும் குதித்து ஓடி வந்தார்கள்! 

தங்கத்துரை ஓட்டமாக ஓடி எங்கேயோ மறைந்து விட்டார்! 

வகாப் முதலில் ஓடிப்போய்க் கதவைத் திறந்தார். 

புகையில் சிக்கிக் கொண்டு தவித்த மனிதனைப் பிடித்து வெளியே இழுத்து வந்தார். போலீஸ்காரர்களைப் பார்த்து, “தீயை அணையுங்கள்! விரைவில் ஆகட்டும்!” என்றார். 

கனமான நடையன்களுடன் போலீஸ்காரர்கள் இங்கும் அங்கும் ஓடினார்கள். கையில் கிடைத்த பாத்திரங்களையும் வாளிகளையும் ஏந்தி, நீச்சல் குளத்திலிருந்த தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டினார்கள், 

தீயை அணைக்க வெகு நேரம் ஆகிவிட்டது! 

வகாப் அந்தப் புது மனிதனைப் பார்த்து, நீதானே தில்லை நாயகத்தைக் கொலை செய்தது?” என்றார்! 

அந்த மனிதன் மூச்சுத் திணறப் பேச முடியாமல் தவித்தான் சிறிது நேரம் கழித்து – 

“ஐயா! தொலைபேசியில் உங்களுக்குச் சேதி சொன்னவன் நான், தங்கத்துரைதான் இங்கே இருந்தான். அவனைப் போலீசார் தேடுவதை அறிந்ததும், அவனைப் பிடித்துக் கொடுக்கவே உங்களை வரச் சொன்னேன்; திடீரென்று இந்த வீட்டில் தீப் பிடித்துக் கொண்டது! தங்கத்துரை தீ விபத்தில் அகப்பட்டுக் கொள்ளக் கூடாதே என்று எண்ணி, அவனைக் காப்பாற்ற ஓடிவந்தேன். தான் உள்ளே வந்ததும், தங்கத்துரை என்னை அடைத்துவிட்டு. தோல் பையுடன் ஓடிவிட்டான்!” என்றான் அவன். 

வகாப் அவனைச் சிறிது நேரம் உற்று நோக்கினர், பிறகு போலீஸ்காரர்களைப் பார்த்தார் “ஓடுங்கள்! தங்கத்துரை எங்கேயாவது ஒளித்திருக்கிறானா பாருங்கள்!” என்றார். 

போலீஸ்காரர்கள் எல்லோரும் வெவ்வேறு திக்குகளில் ஓடினார்கள். 

சிறிது நேரம் கழித்து எல்லாப் போலீஸ்காரர்களும் திரும்பி வந்து, “தங்கத்துரையைக் காணோம்!” என்றார்கள். 

புது மனிதனின் முகம் – 

பேயறைந்ததைப் போல் ஆகிவிட்டது! 

“இவனை அழைத்துச் செல்லுங்கள்!” என்று சொல்லி லிட்டுப் போலீஸ்காரர்களின் பின்னால் நடந்தார் வகாப். வழியில், அவர் எதைப் பற்றியோ எண்ணியபடி திரும்பிப் பார்த்தார். உண்மையிலேயே தங்கத்துரை இங்கேயிருந்து ஓடியிருப்பாரா என்று எண்ணியது அவர் மனம். அவர் திரும்பி வந்து, நீச்சல் குளத்தின் அருகில் சென்று சிறிது நேரம் இப்படியும் அப்படியும் பார்த்தார். பிறகு திரும்பிவந்து, நீச்சல் குளத்தின் அருகில் சென்று சிறிது நேரம் இப்படியும் அப்படியும் பார்த்தார். பிறகு திரும்பிவந்து வேனில் ஏறிக் கொண்டார். 

சிறிது நேரத்தில் வேன் புறப்பட்டது. தீப்பிடித்த வீட்டைப் பார்த்துக் கொள்ள இரண்டு போலீஸ்காரர்களை நிறுத்திவிட்டுச் சென்றார் வகாப், 

19

இரவு மணி –

பதினொன்று. 

முல்லைவன மலைத் தோட்டத்திற்குச் சென்றார் வகாப், அவருடைய கார் வந்து நின்றதும், பொன்னன் ஓடிவந்து காரின் கதவைத் திறந்தான். வகாப் கீழே இறங்கிப் பங்களாவுக்குள் சென்றார். 

தில்லைநாயகம் கொலையுண்ட செய்தி கிடைத்ததுமே சங்கர்லாலும் வகாபும் தில்லைநாயகத்தின் பங்களாவுக்குச் சென்றிருந்தார்கள். அப்போது தான், போலீஸ் இலாகாவிலிருந்து தங்கத்துரை இருக்குமிடம் தெரிந்துவிட்டதாகவும் உடனே புறப்பட்டுப் போனால் தங்கத்துரையைப் பிடிக்க முடியும் என்னும் செய்தி எட்டியது. வகாப் புறப்பட்டுவிட்டார். சங்கர்லால் பங்களாவுக்குத் திரும்பிவிட்டார். 

இப்போது – 

தங்கத்துரை கிடைக்கவில்லை என்று சங்கர்லாலிடம் சொல்லவே வகாப் வந்திருந்தார். 

மாது இரண்டு கோப்பைகளில் தேநீர் கொண்டு வந்து சங்கர்லாலிடமும் வகாபிடமும் கொடுத்துவிட்டுப் போய் விட்டான். 

சங்கர்லால், தேநீரை உறிஞ்சிக் குடித்துக் கொண்டே வகாபைப் பார்த்தார். 

“தங்கத்துரையைக் கண்டுபிடித்து விட்டீர்களா?” என்று கேட்டார் சங்கர்லால், 

“தங்கத்துரை அகப்படவே இல்லை. தங்கத்துரை அகப்பட்டுவிட்டால் இவ்வளவு தொல்லை இருக்காது. வியக்கத் தக்க முறையில் மறைந்து போயிருக்கிறார். தங்கத்துரை, அவர் ஒளிந்திருந்த வீடு தீப்பிடித்துக் கொண்டது. அதை வேறு நாங்கள் அணைக்க வேண்டியதாகப் போய்விட்டது! தொலைபேசியில் எங்களை அழைத்தவன், நேரடியாகத் தீயணைக்கும் படையை அழைத்திருக்கலாம் என்றே சொல்லத் தோன்றுகிறது சங்கர்லால்!” என்றார் வகாப் மிகவும் சலிப்புடன். 

தன்னுடைய கண் முன்னால் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்துவிட்டதே என்ற கொதிப்பு அவருக்கு! 

“தொலைபேசியில் அழைத்தவன் யார்?” என்று கேட்டார் சங்கர்லால், 

“அதைக் கண்டுபிடிக்கத்தான் இவ்வளவு நேரமாகியது!” என்றார் வகாப். 

“என்ன கண்டுபிடித்தீர்கள்?” என்று கேட்டார் சங்கர்லால் மென்சிரிப்புடன். 

“எவ்வளவு முயன்றும் பயனில்லாமல் போய்விட்டது. சங்கர்லால்! இரும்பையும் உடைத்துவிடலாம். ஆனால், அவனுடைய உள்ளத்தை உடைக்க முடியாது! எதையுமே அவன் பேச மறுத்துவிட்டான். அவனுக்கு எந்தவிதமான தீங்கும் தேரிடாமல் விட்டு விடுவதானால் தன் பெயரை மட்டும் சொல்லுவதாகச் சொன்னான். ஒருவனுடைய பெயரைத் தெரிந்து கொள்ள அவனை விடுதலை செய்ய வேண்டுமா என்ன?” என்றார் வகாப். 

“அப்படியே அவன் பெயரைச் சொன்னாலும், அது உண்மையான பெயர் தானா என்பதை எப்படி உறுதிப்படுத்திக் கொள்வது? அவனை ஒன்றும் செய்ய வேண்டாம். தன்னால் அவனைப் பேசும்படி நான் செய்கிறேன். அதற்கு வழி இருக்கிறது. அவன் ஒரு சுண்டெலி, சுண்டெலியை எவராவது பிரங்கி கொண்டு அடிப்பார்களா? சிறிய கல் ஒன்றே போதும்! ஆனால், கல்லைப் பயன்படுத்தும் போது குறி தவறக் கூடாது? இரண்டு மூன்று நாட்கள் அவன் போலீஸ் பாதுகாப்பிலேயே இருக்கட்டும்” என்றார் சங்கர்லால், 

“தங்கத்துரை உண்மையிலேயே நகைப் பையுடன் ஓடியிருப்பாரா என்று எனக்கு ஐயமாகவே இருக்கிறது” என்றார் வகாப். 

“நீங்கள் போன போது தொலைபேசியில் பேசியவன் எங்கேயிருந்தான்?” என்று கேட்டார் சங்கர்லால். 

“அவன் தில்லைநாயகத்தின் மற்றொரு வீட்டில் அடைபட்டுக் கிடந்தான். வெளியே அவன் வரமுடியாதபடி கதவு தாழிடப்பட்டிருந்தது. வீடு தீப்பிடித்துக் கொண்டது. நாங்கள் கொஞ்சம் தாமதமாகப் போயிருந்தாலும், வீடு முழுவதும் எரிந்து சாம்பலாகிப் போயிருக்கும். தொலைபேசியில் பேசியவனும் தீப்பிடித்து வெந்து போயிருப்பான்!” என்றார் வகாப், 

“தங்கத்துரையைப் பற்றி அவன் என்ன சொல்லுகிறான்?” என்று கேட்டார் சங்கர்லால். 

“தங்கத்துரை வீட்டிற்குள் இருந்தானாம். இந்த மனிதன் வெளியே நின்று போலீசின் வருகைக்காகக் காத்திருந்த போது. எப்படியோ வீடு தீப்பிடித்துக் கொண்டதாம். ஓடிப் போய் வீட்டிற்குள் பார்த்த போது, தங்கத்துரையைக் காணோமாம்! தங்கத்துரை வெளியே வந்து, கதவைத் தாழிட்டு விட்டு ஓடிவிட்டதாகச் சொல்லுகிறான்!” 

“நகைப் பை?” 

“அதைக் காணோம்! தங்கத்துரை எடுத்துச் சென்றதாக, கைதி சொல்லுகிறான். எனக்கு என்னவோ நம்பிக்கை இல்லை”

“ஏன் நம்பிக்கை இல்லை?” என்று கேட்டார் சங்கர்லால்,

“உங்களுக்குத் தெரியாதா சங்கர்லால்? தங்கத்துரை, போலீஸ் இலாகாவில் பாராட்டுகள் பல பெற்றிருக்கிறார். எப்போதுமே அவர் போலீஸ் இலாகாவுடன் தொடர்பு கொண்டு தான் எந்த வழக்கிலும் இறங்குவார். இப்போது, நகைகளைக் கொண்டு செல்ல தில்லைநாயகத்தை அவர் கொலை செய்திருப்பார் என்றால் நம்பவே முடியவில்லை!” என்றார் வகாப். 

சங்கர்லால் சிந்தனையுள் ஆழ்ந்தார். “தங்கத்துரையைப் பற்றி நீங்கள் சொல்லுவது உண்மைதான் வகாப்! ஆனாலும் மனிதன் எப்படியெல்லாம் மாறுகின்றான் என்பது, தெரியாத உண்மையல்ல. தங்கத்துரையை எப்படியும் கண்டுபிடித்தே ஆகவேண்டும். உடனே சென்னையின் எல்லாப் பகுதிகளுக்கும் தகவல் அனுப்புங்கள். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. தங்கத்துரை எந்தக் காரணத்தைக் கொண்டும் சென்னையை விட்டுப் போகமாட்டார்!” என்றார். 

“ஏன்?” என்று ஆவலுடன் கேட்டார் வகாப். 

“சென்னையின் எல்லையைவிட்டுப் போனால், தங்கந்துரையின் கையிலிருக்கும் நகைப் பைக்கும், தங்கத்துரையின் உயிருக்கும் பெரும் தீங்கு ஏற்படக்கூடும்! இதைத் தங்கத்துரை அறியாமல் இருக்க மாட்டார். ஆகையால், அவர் எந்தக் காரணத்தைக் கொண்டும் சென்னையை விட்டு அப்பால் போக மாட்டார்!” 

வகாப் புரியாமல் விழித்தார். 

சங்கர்லால் சொன்னார். “தங்கத் துரை நகைகளுடன் மறைந்துவிட வேண்டும் என்று எண்ணினால், அதற்காக தில்லை நாயகத்தை ஏன் கொலை செய்ய வேண்டும்? தில்லைநாயகத்தைக் கொலை செய்வதால் அவருக்கு என்ன இலாபம்? கொள்ளையடிப்பவன் கூட கொலையைத் தவிர்க்க வேண்டும் என்றே எண்ணுகிறான். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் தான் மற்றவர்களைக் கொலை செய்கிறான். தில்லை நாயகத்தைக் கொலை செய்ததால், தங்கத்துரை தன்னைக் காப்பாற்றிக் கொண்டதாகச் சொல்ல முடியாது! இந்த வழக்கில் பொத்தல்கள் பல கண்ணுக்குத் தெரிகின்றன. இவற்றைத் தங்கத்துரை அறிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. தன்னை விடுவித்துக் கொள்ளத் தங்கத்துரைக்கு வழி தெரியும். ஆகையால், அவர் சென்னையை விட்டுப் போசு மாட்டார்!” 

வகாப், சங்கர்லால் சொன்னதைக் கேட்டுத் தலையை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்தார், பிறகு உடனே செய்ய வேண்டிய பணி ஒன்றும் இல்லை என்று அறிந்து கொண்டதும் புறப்பட்டார். 

சங்கர்லாலுக்கு தூக்கம் வரவில்லை. படிக்கும் அறைக்குச் சென்று மேசையின் மீதிருந்த விளக்கைப் போட்டார். நாற்காலியில் உட்கார்ந்து, மேசையின் மீது இரு கால்களையும் தூக்கிப் போட்டு கொண்டு கனமான புத்தகம் ஒன்றை எடுத்துப் படிக்கத் தொடங்கினார். மாது உள்ளே வந்து தேநீர்க் கோப்பையை ஓசையின்றிச் சங்கர்லாலின் பக்கத்தில் வைத்துவிட்டு நகர்ந்தான். அவன் அந்த அறையைவிட்டு வெளியே சென்ற போது, கதவை மெல்லச் சாத்திவிட்டு நடந்தான். 

20

விடிந்து வெகு நேரமாகி விடவில்லை. சங்கர்லால் இரவு இரண்டு மணி வரையில் படிக்கும் அறையிலேயே படித்திருந்து விட்டு, மூன்று மணி நேரம் தான் படுத்துத் தூங்கியிருந்தார். சரியாக ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கொண்டார். மாது முதல் கோப்பைத் தேநீரைக் கொண்டு போய்க் கொடுத்து விட்டு. மற்றவர்களுக்கும் தேநீர் கொண்டு வரச் சமையல் அறைப் பக்கம் போய் விட்டான். மற்றவர்கள் எவருமே இன்னும் எழுந்திருக்கவில்லை. ஒவ்வொருவரும் எத்தனை மணிக்கு எழுந்திருப்பார்கள் என்று மாதுவுக்குத் தெரியும். ஒவ்வொருவருக்கும் தகுந்தாற் போல் நேரத்தைச் சரிப்படுத்திக் கொண்டு தேநீர் கொண்டு செல்லுவது அவன் வழக்கம். இன்னும் சிறிது நேரத்தில் மாணிக்கம் விழித்துக் கொள்வான். அவனுக்கும் கயல்விழிக்கும் தேனீர் கொண்டு போய்க் கொடுப்பான். இருவரும் தேநீரைக் குடித்து விட்டு, டென்னிஸ் விளையாடப் போய்விடுவார்கள். இந்திரா விழித்துக் கொண்டதும், அவள் தேநீரைக் குடித்துவிட்டு, டென்னிஸ் விளையாடப் போவாள். மாணிக்கம் அத்துடன் அவன் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டு இந்திராவிடம் ராக்கெட்டைக் கொடுத்துவிட்டுக் குளிக்கப் போய்விடுவான். வெகு நேரம் வரையில், உடல் வேர்த்துச் சலிக்கும்வரையில் கயல்விழியும் இந்திராவும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். 

சரியாக ஆறுமணிக்கு, மாது தேநீர் கொண்டு வருவதற்குள் கத்தரிக்காயும் மைனாவும் தேநீரைத் தேடிக் கொண்டு சமையல் அறைக்கே ஓடிவிடுவார்கள்! மாது இருவரிடமும் தினமும் சமையல் அறைக்கு வரவேண்டாம் என்றும், தானே தேநீரைக் கொண்டு வருவதாகவும் சொல்லுவான். “நான் ஒன்றும் வரவில்லை அப்பா! இந்த மைனாதான் வேண்டுமென்றே வா என்று என்னை அழைத்து வந்தாள்!” என்று சொல்லிச் சிரிப்பான். அதற்குள் மைனா அவனுடைய கையைப் பிடித்து நன்றாகக் கிள்ளிவிட்டு, “நீ உண்மையைச் சொன்னால் வலிக்கவே வலிக்காது!” என்பாள். சுத்தரிக்காய் வலி பொறுக்க முடியாமல் குதித்துக் கொண்டே. ‘வலிக்கவில்லையே!” என்று சாதனை செய்வான்! இப்படி ஓர் ஓரங்க நாடகம்! 

சங்கர்லால் காலையில் வந்த செய்திப் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்து விட்டுச் சன்னல் பக்கம் எழுந்து சென்றார். 

தோட்டத்தில், இந்திராவும் கயல்விழியும் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மாணிக்கமும் அப்போது தான் பங்களாவுக்குள் நுழைந்து கொண்டிருந்தான். 

மேசை மீதிருந்த தொலைபேசி அலறியது. 

சங்கர்லால் மெல்ல நடந்து சென்ற தொலைபேசியை எடுத்தார். “ஹலோ” என்றார்.” 

“வணக்கம் சங்கர்லால், வகாப் பேசுகிறேன்” 

‘வணக்கம் வகாப்” 

“நீங்கள் உடனே புறப்பட்டு வரவேண்டும்”

“எங்கே வகாப்?” 

“ஷெனாய் நகருக்கு வியக்கத்தக்க வழக்கு ஒன்று வந்திருக்கிறது. ஷெனாய் நகரில் முதல் தெருவில் பதிமூன்றாம் எண்ணுள்ள பங்களாவுக்கு வாருங்கள். உங்களுக்கு முன் நான் அங்கே இருக்கிறேன்” 

“அந்தப் பங்களா எவருடையது?” 

“தில்லைநாயகத்தின் பங்களாதான்! ஆனால், அதை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அப் பங்களாவில் ஒரு வழக்கறிஞர் குடியிருக்கிறார். அவருடைய பெயர் தாண்டவன். அவருடைய மனைவி பெரும் அச்சத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், உடனே சங்கர்லால் வந்து இந்த வழக்கில் தலையிடாவிட்டால் அவளுக்கு வெறியே பிடித்துவிடும் என்றும் சொல்லுகிறார்! அவர் வீட்டில் பேய் நடமாட்டம் அதிகமாகிவிட்டதாகவும், கண்ட இடத்தில் சுவர் இடிந்து விழுவதாகவும் சொல்லுகிறார்! எந்த ஒரு பொருளையும் வைத்த இடத்தில் திரும்பக் காண முடிவதில்லையாம்!” என்றார் வகாப், 

சங்கர்லால் அமைதியுடன் அனைத்தையும் கேட்டுவிட்டு, “இதோ புறப்பட்டு விட்டேன் வகாப்” என்றார். பிறகு – 

தொலைபேசியை வைத்துவிட்டுத் தமது அறைக்குச் சென்றார். மடிப்புக் கலையாத சட்டையும் கால்சட்டையையும் அணிந்து கொண்டு கழுத்துப் பட்டையை வழக்கம் போல் தளர விட்டார். காலில் சுறுப்பு நிற கிரேப் நடையன்கள். தலை இலேசாகக் கலைந்திருந்தது. அதைப் படியவைக்க அவர் முயலவில்லை. எவ்வளவு முயன்றும் இந்திராவினால் அவருடைய தலையைப் படியவைக்க முடியாத போது, அவரால் மட்டும் எப்படி முடியும்? இயற்கையாகவே அது எப்போதும் கொஞ்சம் சிலிர்த்துக் கொண்டு தானே நிற்கும்! 

சங்கர்லால் பங்களாவின் வெளியே சென்றார். சங்கர்லால் எங்கேயோ வெளியே புறப்படுகிறார் என்பதை அறிந்து கொண்ட மாணிக்கம், குளிக்கும் அறைக்குப் போகாமல் திரும்பிப் போய், அவருடைய காரை ஓட்டிவந்து வாயிலில் பங்களாவின் முன் நிறுத்தினான், சங்கர்லால் சிரித்துக் கொண்டே காரில் ஏறினார். மாணிக்கம் இறங்கி உள்ளே போய் விட்டான். 

சங்கர்லால் காரைக் கிளப்பினார். அவர் திரும்பிப் பார்த்துப் போது, டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்த இந்திரா சிரித்துக் கொண்டே கையை ஆட்டி அவருக்கு விடை கொடுத்தாள். காரை விரைவாகச் செலுத்தினார் மலைப்பாதையில், 

சுமார் இருபது நிமிடங்களில் சங்கர்லால் காரை ஷெனாய் நகரில் நிறுத்தினார். வகாபின் கார், முதல் தெருவில், பதிமூன்றாம் எண்ணுள்ள பங்களாவின் முன் நின்றிருந்தது. சங்கர்லால், வகாபின் காருக்குப் பின்னால் தமது காரை நிறுத்தினார். 

“வாருங்கள் சங்கர்லால்” என்று சொல்லிக் கொண்டே பங்களாவுக்குள்ளிருந்து வகாப் ஓடிவந்து அவரை வரவேற்றார். சங்கர்லால் கீழே இறங்கினார். அப்போது – 

பங்களாவின் வாயிலில் உயரமான ஒரு மனிதர் வந்து நின்றார். அவர் நீண்ட கோட்டும். வெள்ளைக் கால் சட்டையும் அணிந்திருந்தார். அவர் தான் வழக்கறிஞர் தாண்டவன் என்பதைச் சங்கர்லால் பார்த்தவுடனே புரிந்து கொண்ட போதிலும் வகாப் சங்கர்லாலுக்குத் தாண்டவனை அறிமுகப்படுத்தினார் வழக்கமான முறையில், 

தாண்டவன் இ கைகளையும் கூப்பிச் சங்கர்லாலை வரவேற்றார். “உள்ளே வாருங்கள். நீங்கள் வருவீர்களோ இல்லையோ என்று எனக்கு ஐயமாகவே இருந்தது. நீங்கள் வந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஒருவரை எதிர்பார்த்து அவர் வராவிட்டால் ஏமாற்றமாகப் போய்விடும். ஒருவரை எதிர்பாராமல் அவர் வந்துவிட்டால் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுவது இயற்கையானதே! சாதாரண வழக்கு என்று எங்கே நீங்கள் வராமல் இருந்து விடுவீர்களோ என்ற ஐயம் தான், வேறு ஒன்றுமில்லை. உதவி போலீஸ் கமிஷனர் வந்து சங்கர்லால் வருகிறார் என்றதும் என் மனம் அமைதி மிகப் பெற்றது. 

சங்கர்லால் மெல்லிய சிரிப்புடன், பதிலுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு, “உங்களைப் பார்த்தால் மன அமைதியை இழந்து காணப்படுபவரைப் போல் இல்லையே!” என்றார். 

“உண்மைதான் சங்கர்லால்! நான் எப்போதுமே மன அமைதியை இழப்பதில்லை. என் மனைவி மிகவும் அஞ்சி நிற்கிறாள். உடனே இந்தப் பங்களாவைக் காலி செய்து விட்டுப் போக வேண்டும் என்கிறாள். பயத்தாலும் பீதியாலும் என் மனைவியின் உடல் நிலை சீரழிந்து வருவதைக் கண்டதும் என் மனம் தளர்ந்து விட்டது இப்போது!” 

சங்கரிலால் பங்களாவின் தாழ்வாரத்தைக் கடந்து கூடத்தை அடைந்தார். கூடத்தில் வைக்கப்பட்டிருந்த எல்லாப் பொருள்களுமே விலையுயர்ந்த பொருள்களாக இருந்த போதிலும், எல்லாம் தாறுமாறாகக் கிடந்தன! 

சாய்வு நாற்காலிகளும், மேசைகளும் தலை கீழாக அங்குமிங்கும் விழுந்து கிடந்தன. கீழே விரிக்கப்பட்டிருந்த இரத்தினக் கம்பளம் கண்டபடி இழுக்கப்பட்டிருந்தது. சுவரில் மாட்டியிருந்த படங்களில் சில கீழே விழுந்து கிடந்தன. சில படங்கள் அறுந்து விடுவதைப் போல் சாய்ந்து தொங்கிக் கொண்டிருந்தன. 

சங்கர்லால் கூடத்தின் நடுவில் சென்று நின்றார். மனத்தில் புகைப்படம் பிடிப்பதைப் போல் எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்தார். 

சுவரில் – 

இரண்டு இடங்களில் சுமார் இரண்டடி அகலத்திற்கு மூன்று அடி நீளத்திற்கு ஒரே மாதிரியாகப் பெயர்க்கப்பட்டிருந்தன. ஆனால் ஆழமாக அவை பெயர்க்கப்படவில்லை. பெயர்க்கப்பட்ட இடம் சுமார் நான்கு அங்குல ஆழத்திற்கு வாயைப் பிளந்து கொண்டிருந்தது! 

கீழே மின்சார பல்புகள் இரண்டு உருண்டு கிடந்தன. அவற்றைச் சங்கர்லால் எடுத்தார். பார்த்தார். அவை இரண்டுமே நல்ல பல்புகள். கொஞ்சம் கூட உடையவில்லை. 

வழக்கறிஞர் கொஞ்சம் முன்னால் வந்து, “பாருங்கள் சங்கர்லால், இந்த இரண்டு பல்புகளுமே மேலே இருக்கும் விளக்குத் திருகிலிருந்து கழன்று விழுந்திருக்கின்றன. இவை எப்படி விழுந்தன என்பதை எவரும் சுண்ணால் பார்க்கவில்லை. ஆனால் எப்படியோ கீழே விழுந்து கிடக்கின்றன. இதுதான் முதல் தடவையல்ல! பல நாட்களாகவே இப்படி நடக்கிறது! பல்புகள் தன்னால் சுழற்றிக் கொண்டு விழுவது என்பது சாத்தியமில்லை. கனவிலும் கருத முடியாது இதைப் பற்றி! மேசைகளும் சுவர்கள் நாற்காலிகளும் உருண்டு கிடக்கின்றன. பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இப்படி வாருங்கள்” என்று சொல்லி, சங்கர்லால் பக்கத்திலிருந்த ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார். 

வழக்கறிஞரின் படுக்கும் அறை அது! அதில் – 

மேசை அறைகள் திறந்து கிடந்தன. மூலையில் இருந்த அலமாரியின் கதவுகள் இலேசாகத் திறந்து கிடந்தன. வழக்கறிஞர் அலமாரியின் கதவுகளைத் திறந்தார். உள்ளே கொஞ்சம் பணமும், ஒரு சில நகைகளும் கிடந்தன! 

“தினமும் இதே மாதிரி தான் சங்கர்லால்! நானும் என் மனைவியும் மாடி மீது இருந்தால் கீழே இப்படி நடக்கிறது! கீழே இருந்தால், மாடிமேல் இப்படி நடக்கிறது! இருவரும் வெளியே போய்விட்டால் வீடு முழுவதுமே அப்படி ஆகிவிடுகிறது! என் மனைவி இது பேயின் வேலை என்கிறாள். பெண்கள் இப்படிச் சொல்வது சர்வ சாதாரணம்! இரவில் இங்கே இருக்கவே அச்சமாய் இருக்கிறது என்கிறாள். நேற்றிரவு கடைசிக் காட்சி சினிமாவுக்குப் போயிருந்தோம். திரும்பி வந்த போது இரண்டு மணிக்குள் இப்படி நடந்திருக்கிறது! வீடு மட்டும் பூட்டியது பூட்டிய படியேதான் இருக்கிறது. என் மனைவி உடனே பங்களாவைக் காலி செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறாள்!” என்றார் வழக்கறிஞர். 

சங்கர்லால் சிறிது நேரம் சிந்தனையுள் ஆழ்ந்தார். பிறகு – வழக்கறிஞரைப் பார்த்தார். 

“எத்தனை நாட்களாக இப்படி நடக்கிறது?” என்று கேட்டார் சங்கர்லால், 

வழக்கறிஞர் சொன்னார் : “பத்துப் பதினைந்து நாட்களாக இப்படி நடக்கிறது! பேய் பிசாசு என்பதில் எனக்குக் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. நானும் என் மனைவியும் மட்டுமே இந்தப் பங்களாவில் இருக்கிறோம். பணியாட்கள் பகலில் மட்டுமே இருப்பார்கள். பகலில் ஒன்றும் நடப்பதில்லை. நாங்கள் பங்களாவில் இருக்கும் போது ஒன்றும் நடப்பதில்லை. பங்களாவைப் பூட்டிவிட்டுச் சென்றால், திரும்பி வந்ததும் இந்தக் கதிதான்! வெளியே எங்கேயாவது போய்விட்டு வந்தால், உள்ளே வரக்கூட என் மனைவி அஞ்சுகிறாள்! இந்தப் பங்களாவை விட்டுப் போகவும் என் மனம் இடம் தரவில்லை!” 

“ஏன்?” என்று சிரித்துக் கொண்டு கேட்டார் சங்கர்லால்.

“இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன சங்கர்லால்! ஒன்று பங்களாவைக் காலி செய்வதால் கோழையாகி விடுவேன். ஒரு வழக்கறிஞர், படித்த மனிதர் கோழையாக இருக்கலாமா? என் மனைவியின் அச்சத்தையும் எப்படியாவது போக்கி, பேய் என்பது இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன்!” என்று சொன்னார் வழக்கறிஞர். 

அப்போது அந்த அறையின் வாயிலில் வழக்கறிஞரின் மனைவி தோன்றினாள். அழகே உருவெடுத்து வந்ததைப் போல் இருந்த அவளுடைய முகம் அச்சத்தால் வாடிப் போய்க் காணப்பட்டது. 

சங்கர்லால் வழக்கறிஞரின் மனைவியை ஒரு கணம் பார்த்தார். பிறகு திரும்பி வழக்கறிஞரைப் பார்த்து, “இரண்டாவது காரணம் என்ன?” என்றார். 

“இந்தப் பங்களா மிகவும் சமீபத்தில் கட்டப்பட்டது. நான் இங்கே வந்து ஒரு சில மாதங்கள் தாம் ஆகின்றன. ஆனால், இந்த ஒரு சில மாதங்களில் எனக்குக் கிடைக்கும் வருவாய், என் வாழ்நாளில் இது வரையில் கிடைத்ததில்லை! இந்தப் பங்களாவைவிட்டுப் போனால் வருவாய் குறைந்து விடுமோ என்ற அச்சம் என்னை வாட்டுகிறது!” என்றார் வழக்கறிஞர். 

சங்கர்லால் மெல்லச் சிரித்தார். 

வழக்கறிஞரின் மனைவி உரத்த குரலில் சொன்னாள் “வருவாய் மிகுந்து இருக்கிறது என்பதற்காக இந்தப் பங்களாவில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு எத்தனை நாட்களுக்கு இருப்பது? பேய் பிசாசு இல்லை என்று மட்டும் என் கணவர் சொல்லுகிறார். குருட்டு நம்பிக்கைகள் பல இருக்கின்றன அவரிடம். பேய் பிசாசு இல்லை என்று அடித்துச் சொல்லுபவர், வருகிற வருவாய் எங்கிருந்தாலும் வரும் என்று நம்புவதற்கு என்ன?” 

சங்கர்லால் மெல்லிய சிரிப்புடன் வழக்கறிஞரின் மனைவியைப் பார்த்தார். “பேயை எப்போதாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். 

வழக்கறிஞரின் மனைவி சிறிது நேரம் சிந்தித்தாள். பிறகு “பேய் என்பது இல்லை என்று சொல்லுகிறீர்களா?” என்றாள். 

சங்கர்லால் மெல்ல அவள் பக்கத்தில் வந்து, “பேய் இருக்கிறதா இல்லையா என்று நான் இன்னும் சொல்லவில்லையே! பேயைப் பற்றியும், அதன் அட்டகாசங்களைப் பற்றியும் சொல்லுவது நீங்கள், உண்மையைச் சொல்லுங்கள். பேயை நீங்கள் கண்ணால் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். 

வழக்கறிஞரின் மனைவி சிறிது நேரம் சங்கர்லாலை விழித்துப் பார்த்தான். ஆனால் – 

பதில் சொல்லவில்லை. 

சங்கர்லால் மீண்டும் கேட்டார் : “பேயைப் பார்த்திருக்கிறீர்களா?” 

“பேய் கண்ணுக்குத் தெரியாது என்கிறார்களே!”

”கண்ணுக்குத் தெரியாத பேய், மேசைகளையும் நாற்காலிகளையும் உருட்டுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” 

“இல்லை” 

“இங்கே பேய் நடமாடுவதைப் போன்ற உணர்ச்சி உங்களுக்கு எப்போது ஏற்பட்டது?” 

“சன்னல் திரைகள் அசைவதைப் போல் இருக்கும். ஓடிப் போய்ப் பார்த்தால் எவரும் இருக்கமாட்டார்கள்! மாடியில் இருக்கும் போது கீழே ஓசை கேட்கும். ஓடிவந்து பார்த்தால் எவரும் கண்ணுக்குத் தென்படமாட்டார்கள்! ஆனால், மேசைகளும் தாற்காலிகளும் உருண்டு கிடக்கும்! இது பேயின் வேலை அல்லாது வேறு என்னவாம்?” 

“உங்கள் கண் எதிரில், மேசையோ நாற்காலியோ தன்னால் உருளுவதைப் பார்த்திருக்கிறீர்களா?” 

“இல்லை” 

“நீங்கள் வருவதற்குள் மேசையும் நாற்காலியும் உருண்டு விழுந்து அசையாமல் கிடக்கும், இல்லையா?” 

“ஆமாம் ஆனால் ஒன்று” என்றாள் வழக்கறிஞரின் மனைவி.

“சொல்லுங்கள் தயங்காமல்” என்றார் சங்கர்லால். 

“இதுவரையில் பணம் காசு, நகை எதுவுமே காணாமல் போகவில்லை. பொருள்கள் இடம் மாறிக் கிடக்குமே தவிர, எந்த ஒரு பொருளும் மறைந்தது கிடையாது! திருடர்களின் ைேலயாக இருந்தால், பணத்தையும் நகையையும் விட்டுவைப்பார்களா? எந்தத் திருடனும், தான் தினமும் வந்து போவதை இப்படி அறிவிக்க மாட்டான்!” என்றாள் வழக்கறிஞரின் மனைவி. 

சங்கர்லால் மெல்லச் சிரித்தார். 

வகாப்- 

சங்கர்லாலையே பார்த்துக் கொண்டிருந்தார். 

சங்கர்லால் வழக்கறிஞரைப் பார்த்து, “உங்களிடம் தொலைபேசி இருக்கிறது அல்லவா? இன்றிரவு ஏதாவது சிறு ஓசை கேட்டாலும், உடனே தொலைபேசியில் எனக்குச் சொல்லுங்கள். நான் உடனே புறப்பட்டு வருகிறேன். என்ன?’ என்றார். 

“அப்படியே ஆகட்டும் சங்கர்லால்” என்றார் வழக்கறிஞர். 

கீழே விழுந்து கிடக்கும் எல்லாப் பொருள்களையும், அவை இருக்க வேண்டிய இடத்தில் ஒழுங்காக எடுத்து வையுங்கள். சன்னல் கதவுகள் எப்போதும் போல் திறந்தே கிடக்கட்டும். வாயில் கதவை மட்டும் தாழிட்டு வையுங்கள்” என்று சொல்லி விட்டு வகாபைப் பார்த்து, “என்னுடைய தொலைபேசியின் எண்ணைக் குறித்துக் கொடுங்கள் வழக்கறிஞரிடம்” என்றார். 

வகாப் சங்கர்லாலின் தொலைபேசி எண்ணைக் குறித்து வழக்கறிஞரிடம் கொடுத்தார். பிறகு – 

சங்கர்லாலும் வகாபும் அங்கிருந்து புறப்பட்டார்கள். 

– தொடரும்…

– சங்கர்லால் வந்துவிட்டார்! (மர்ம நாவல்), சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *