மாற்றம் வரும் – ஒரு பக்க கதை






ரேவதி கல்யாணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு வந்து சில நாட்கள்தான் ஆகியிருந்தன. அந்த வீட்டில் கடைப்பிடிக்கும் சில வழக்கங்கள் அவளுக்கு சரியாகப் படவில்லை.
அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள அவள் தயாராக இல்லை. ஈகோ இடித்தது.
கணவன் ரவியிடம் சொல்லி வருத்தப்பட்டாள்.
“அது என்ன ரவி… எழுந்தவுடன் குளிக்கணும், பகலில் நைட்டி போட்டுக்கக்கூடாது, தண்ணீரை தூக்கிக் குடிக்கணும். எனக்கு ஒத்து வரலை. உங்க அப்பா, அம்மாகிட்டே சொல்லி புரியவைங்க. காலம் மாறிக்கிட்டு இருக்கு. இல்லே?
‘யாருக்குப் பரிந்து பேசுவது? ரவி மௌனம் சாதித்தான்.
ரேவதியின் மொபைல் பாடியது. போனில் அவள் தங்கை ராஜி. “எப்படி இருக்க புது கம்பெனி ராஜி?’
“அதையேன் கேட்கறே? கட்டுப்பாடுகள் அதிகம். அரை மணி நேரம்தான் லஞ்ச். மொபைலை வேலை நேரத்தில் ஆப் செய்யணும். வெட்டிப் பேச்சு கூடாது. இப்படி எனக்குப் பழக்கம் இல்லாதவை!’ அலுத்துக் கொண்டாள்.
“அப்புறம்?’ ரேவதியின் கேள்விக்கு,
“நல்ல சம்பளம். நல்ல கம்பெனி! அவங்க கட்டுப்பாட்டுக்கு ஏத்தா மாதிரி என்னை மாத்திக்க வேண்டியதுதான்!’ ராஜி பேசப் பேச தன்னை புகுந்த வீட்டின் வழக்கங்களுக்கு ஏற்றாற்போல மாற்றிக் கொள்ள வேண்டுமெனத் தோன்றியது ரேவதிக்கு.
– மார்ச் 2014