மாற்றத்தை ஏற்ற மனம்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 6, 2026
பார்வையிட்டோர்: 2,018 
 
 
நிகனுக்கு தலை நகரம் சிறிதும் பிடிபடவில்லை. தனது தாய்மொழி தான் அங்கு பேசுகிறார்கள் எனும்போதிலும் பேசும் விதத்தை புரிந்து கொள்வதில் சற்று சிரமம் உண்டாக்கியது.
மரியாதை என்பது துளியுமின்றி பேசுவது தான் மற்றவர்கள் மீது மனதிற்கு வெறுப்பை உண்டாக்கக்காரணமானது என்பது புரிந்த போது மனதில் கவலை கூடியது.
“உன்னை மாதிரியே எல்லாரும் இருக்கனம்னு நெனைக்கிறது உன்னோட கற்பனை நினைப்பு. நீ முதல்ல அந்த மனநிலைல இருந்து வெளில வரனம். அப்படிப்பார்த்தா மனுசனுக்கு மரியாதை கொடுத்து பேசற ஊர்ல இருக்கிறவங்களை விட இங்க இருக்கிறவங்க உயர்ந்த வாழ்க்கைத்தரத்தோட வாழறத கவனிச்சையா?” நண்பன் குகன் சொன்னதும் மன இறுக்கம் சற்று குறைவதை உணர்ந்தான்.
காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச்செல்லும் வரை அவரவர் வேலைகளை அவரவர் செய்து கொண்டிருந்தனர். அதில் இயந்திரத்தனம் தெரிந்தாலும், செய்யும் வேலையை பிடித்து செய்வது போலத்தெரிந்தது.
சக மனிதர்களுக்குள் கூடுதல் உரையாடல்கள் என்பது மனித உழைப்பு இல்லாமல் இயந்திரங்களுடன் செயல்படும் போது சாத்தியமற்றது தான்.
மனிதன் கண்டு பிடித்த நவீன தொழில் நுட்பங்கள், அது சார்ந்த கருவிகள் மனிதர்களுக்குள் இடைவெளி இல்லாவிட்டாலும் மனித மனங்களுக்குள் இடைவெளியை ஏற்படுத்தி விட்டன என்பது உண்மை என்றாலும், வெட்டிப்பேச்சுப்பேசிக்கொண்டு வெறுமனே வாழ்வதோடு ஒப்பிடும் போது இந்த வாழ்வில் தவறேதும் இல்லை என்பது புரிய ஆரம்பித்தது.
அலுவலகம் சென்றவுடன் வாய் பேசாத செய்கை வணக்கத்துடன் தனது கணனியைத்திறந்து அமர்ந்தவன் மதியம் உணவு நேரம் தவிர மற்ற நேரம் அதிலேயே மூழ்கும் நிலையில், வேலை முடிந்து வேலை செய்யும் இடத்திலிருந்து தங்கியிருக்கும் இடத்திற்கு செல்வதற்கு தனது ஊரில் நடந்து செல்லும் நேரத்தை விட கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும் வாகனப்பயணம் நிகனுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. ‘வேலையை விட்டு விட்டு ஊருக்கே சென்று விடலாமா?’ என யோசித்தான்.
“டிராஃபிக்ல உன் கூட ரோட்ல வண்டி ஓட்டறவங்க உன்ன மாதிரி முகத்த தூக்கி உம்முனு வெச்சிட்டு யாராவது ஒருத்தரை உன்னால பார்க்க முடிஞ்சுதா? சந்தோசமாத்தான் கூண்ட விட்டு பறவைகள் கூட்டம், கூட்டமா இரை தேடிப்போகிற மாதிரி போறாங்கங்கிறதை நெனைச்சுப்பாரு. நெருக்கடி எதனால வருது? அந்த ஊர்ல வாழத்தகுந்த வாய்ப்பு நிறைய இருக்குன்னு தானே அர்த்தம்…? மனுசங்களே இல்லாத காட்டுக்குள்ள வேணுமானா டிராஃபிக் இருக்காது. ஆனா வாழறதுக்கு அங்க வழி இருக்காது. இப்படி மாத்தி யோசிச்சம்னாதான் இந்த வாழ்க்கையோட இணங்கி போக முடியும். நம்ம நாமே சரி செஞ்சுக்க முடியும்…”
குழப்பமான மனநிலையில் அனைத்துமே தவறாகப்பட்டது தற்போது சரி என புரிய ஆரம்பித்ததும் முகம் மலர தொடங்கியதை கண்ணாடியில் பார்த்த போது நிம்மதி தனக்குள் மூச்சுக்காற்றுடன் கலந்து செல்வதை உணர்ந்தான் நிகன்.
“நிழல்ல இருந்தவனுக்குத்தான் வெயில்ல போறது சிரமம். வெயில்லயே வாழறவனுக்கு அதுவே பழகிடும். அது மாதிரி தான் அவங்களுக்கும். உனக்கு மாதிரி டென்சன், கவலை, பயம் அவங்களுக்கு இருக்காது. இது மாறுபட்ட வாழ்க்கை முறைதான்னு சொன்னாலும் இங்க வாழ்ந்து பழகினவங்களுக்கு இது தான் பிடிச்சிருக்கு. உங்க ஊர்ல கொண்டு போய் இங்க வாழ்ந்தவங்களை விட்டோம்னா உன்னை மாதிரி தான் அவங்களும் புலம்புவாங்க. சும்மா மரியாதையா வாயில பேசிட்டு மனசால வெறுப்பா இருக்கிறவங்க கிராமத்துல நிறையா பேர் இருக்கறதை நானும் கவனிச்சிருக்கேன். ஏன் நெருங்கின சொந்தக்காரங்களே நல்லா வாழறதப்பார்த்து பொறாமைப்பட்டு நமக்கு இடைஞ்சல் பண்ணுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இங்க அப்படியில்ல. வா போன்னு பேசினாலும் உனக்கு ஏதாச்சும் பிரச்சினைன்னா உடனே வந்து முடிச்சுக்கொடுத்துட்டு போயிடுவாங்க. இவன் நல்லவனா, நாளைக்கு நமக்கோ நம்ம பேரம்பேத்திக்கோ இத நினைச்சுப்பார்த்து உதவுவானா? கைமாறா ஏதாவது செய்வானான்னு பார்க்க மாட்டாங்க. முகத்துல வேசத்தக்காட்டினாலும், மனசுல பாசத்த காட்டுவாங்க. திறமையா இருக்கிறவங்களை பார்த்து பொறாமைப்படாம பதிலா உயரத்துக்கு கொண்டு போய் வெச்சிடுவாங்க” என தனது நகர அனுபவங்களை கல்லூரி நண்பன் குகன் சொல்லச்சொல்ல நிகனுக்கு நகர வாழ்வின் பயம் மனதிலிருந்து விலகி தான் வாழுமிடத்தின் தன்மைக்கேற்ப ஒரு மனிதன் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை தற்போது முதலாகப்புரிந்து கொண்டான்.
கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *