கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 17, 2025
பார்வையிட்டோர்: 322 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராமச்சந்திர ஐயரின் வீட்டுப் படியை நனைத்துக் கொண்டிருந்த போக்கு வெய்யிலை மிதித்தவாறு அழைப்பு மணியை நான் அழுத்தும்போது எனக்கு முன்னால் என் நிழல் அவர் வீட்டு வராந்தாவில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து விட்டிருந்தது. 

எப்போதும் காரியாலயத்தில் தென்படும் கால்சராய், முழுக்கைச் சட்டை இத்யாதி வேஷத்திற்கு விபரீதமாக, இடுப்பு வேஷ்டி, சட்டை இல்லாத வெற்றுடம்பில் கிராஸ் பெல்டாகப் பூணூல் இப்படி மஃப்டியில் பிளஷ் டோரைத் திறந்துகொண்டு, ராமச்சந்திர ஐயர் பிரத்யட்சமானபோது, எனக்கு முதலில் அவரிடம் என்ன கேட்பதென்று தெரியவில்லை. 

‘நீயா… ஆபீஸிலிருந்து நேர வர்றியா?’ 

‘ஆமா… அரை மணி நேரமே இறங்கினேன்… இப்போ எப்படியிருக்கு?’ 

‘பரவாயில்லை… பத்து நாள் ஆஸ்பத்திரியில் இருந்துட்டு நேற்றைக்குத்தான் கூட்டிக்கிட்டு வந்தோம்.’ 

ஸெட்டியில் அவர் எதிரில் நானும் உட்கார்ந்தேன். 

‘டாக்டர் கூட்டிக்கிட்டு வரலாமுண்ணு சொன்னாரா?’ 

‘ஆமா… இப்போ யூரின், பிளட், ஷஷுகர் எல்லாம் நார்மல் ஆயாச்சு… ஆனா… மூளை மட்டும் ஆர்டிஃபிஷியல் விவகாரங் களை அவ்வளவு சீக்கிரம் ஏத்துக்குவதில்லை. நாள்பட, தானாகத்தான் சரியாகணும். வீட்டுக்குப்போயும் அதிகமாய் அலட்டிக்க விடக் கூடாது; இந்தத் தடவை எதுக்கும் பரீட்சை எழுத வேண்டாம்; கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் அவளைப் பழைய நினைவு வரச் செய்யலாம்; இனி க்ளூக்கோஸ் கொடுக்க வேண்டாம்; ஒருவேளை வாந்தி தொடங்கி விடும்’ அப்படின்னு எச்சரித்து வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வர அனுமதிச்சார் டாக்டர் ரிஷி.’ 

‘வீட்டுக்கு வந்ததுக்கு எப்படியிருக்கு?’ 

‘டாக்ஸியிலிருந்து இறங்கி இந்த வராந்தாவில் வந்து ஏறினதும், ‘என்னை எதுக்கு இப்படிப் பிடிச்சிருக்கிறீங்க? நானே நடந்துக் குறேன்’ அப்படிண்ணு சொல்லி விட்டு உள்ளே விடுவிடுண்ணு வந்தாள். மேலே மாடியில் அவள் அறைக்கெல்லாம் போய்ப் பார்த்தாள். பிறகு தடதடவென்று இறங்கி வந்து, ‘இது எங்க வீடு அல்ல, வேற யாருடையதோ’ அப்படீண்ணு சொல்றா…’ 

‘இது எப்படி நடந்தது…? நீங்க யாரும் கவனிக்கல்லியா?’ 

‘எல்லாம் தலையெழுத்து… பிறகென்ன… இன்னிக்குத் திங்கட் கிழமையில்லே…? போனதுக்கு முந்திய வெள்ளிக்கிழமை அன்னிக்குக் காலம்பர இவ – காயத்திரி – என்னவோ வயிற்று வலின்னு சொன்னாண்ணு என் அகத்துக்காரி அடுத்த தெரு டாக்டர் ரிஷிகிட்டே கூட்டிக்கிட்டுப் போனாள். அவர் கம்ப்ளீட்டா டெஸ்ட் பண்ணிப் பார்த்துவிட்டு, ‘ஒண்ணும் இல்லே, வெறும் கியாஸ் ட்ரபிள்; ஒரு மாத்திரை எழுதித் தாரேன்; ஒரு தடவைக்கு ரெண்டு வச்சு மூணு நேரம் சாப்பிடணும்; பத்து நாளைக்கு அறுபது மாத்திரை வாங்கிக்குங்க ‘ அப்படீண்ணு சொல்லி மருந்தைப் ப்ரிஸ்க்ரைப் பண்ணிக் கொடுத்தார். 

டாக்டர் வீட்டிலிருந்து இங்கே வர வழியில் இருக்குதில்ல தனராஜ் மெடிக்கல் ஸ்டோர், அங்கிருந்து மருந்தையும் வாங்கிக் கொண்டு வந்தாள்; வந்ததும் ரெண்டு சாப்பிட்டாள். மத்தியானம் ரெண்டு, சாயந்திரம் என் இளைய பையன் மணி அவன் தேர்ட் ஸ்டேன்டர்ட் இங்கிலீஷ் மீடியம், கான்வன்ட் ஸ்கூலில் படிக்கிறான் அன்னிக்கு ஸ்கூல்லே ஏதோ டிராமா, டான்ஸுன்னு சாயந்தரம் கூப்பிட்டான். அவன்கூட நான், பார்வதி, என் ரெண்டாவது மகள் பாலா எல்லோருமா இறங்கினபோது காயத்ரி, ‘எனக்கு என்னமோ அசதியா இருக்கு. ரொம்பப் படிக்கவேண்டி வேறே இருக்கு. நீங்க எல்லோரும் போயிட்டு வாங்க’ அப்படீண்ணு சொன்னாள்… அவ பி.ஏ. கடைசி வருஷம் படிச்சுக்கிட்டிருக்காள். 

ஒரு வேளை மருந்தின் ரியாக்ஷனா இருக்குமோண்ணு, ‘நாலு டேப்ளட்ஸ் சாப்பிட்டாச்சல்லவா… இனி ஒண்ணு வச்சு சாப்பிட்டாப் போதும்’ண்ணு அவளை எச்சரித்து விட்டு நாங்க எல்லோரும் ஸ்கூலுக்கு வந்தோம். ராத்திரி ஒம்பது மணிக்குப் புரோகிராம் எல்லாம் முடிஞ்சு வெளியே காரில் ஒரு லிப்ட் கிடைச்சுது… இங்கே வரும்போது, தூரத்திலிருந்தே கவனிச்சோம். 

வீட்டில் ஒரு லைட் பாக்கியில்லாமல் எல்லா லைட்டும் எரிந்துக் கிட்டிருந்தது. வெளி கேட்டை ரெண்டு மூணு தடவை தட்டியும் உள்ளேயிருந்து எந்தச் சத்தமும் இல்லை. 

இல்லை. மனசுக்குள் சொல்லத் தெரியாத வெப்பிராளம். உள்ளே குனிந்து கேட்டின் தாழைத் திறந்துகொண்டு இங்கே வந்தோம். நல்ல வேளை, பிளஷ்டோர் உள்ளிருந்து தாழிடப்பட்டிருக்கவில்லை. 

நடுக் கூடத்துக்கு வந்தபோது, அங்கே கீழே ஒரு பாயில் குப்புறக் கிடக்கிறாள் காயத்ரி… ரத்தம் முழுவதும் வடிந்து போய் விட்டதைப்போல் அவள் முகமும் உடம்பும் எல்லாம் வெளுத்து வெளிறிப் போய்க்கிடந்தது. கை கால்கள் ஐஸ்போல் விறைத்து விட்டிருந்தது… 

பிறகென்ன, எல்லோரும் ‘ஓ’ண்ணு சத்தம் போடத் தொடங்கிட் டாங்க… எனக்கு ஒண்ணும் புரியல்லே… ‘வெள்ளிக்கிழமையும் அதுவுமா த்ரிசந்தி நேரத்தில் வயசு வந்த பெண்ணைத் தனியாக விட்டு விட்டுப் போயிட்டோம். எதையாவது பார்த்துக் குழந்தை பயந்துட்டாளோ?’ அப்படீண்ணு பார்வதி அழுகையுடன் புலம் பத் தொடங்கிட்டாள். நான் உள்ளுக்குள் குமுறிக்கிட்டிருந்த பயத்தையும், பரிதவிப்பதையும் எல்லாம் அடக்கிக்கொண்டு எல்லோரையும் சும்மா இருங்கோண்ணு சமாதானப்படுத்தி விட்டு அவள் பக்கத்தில் உட்கார்ந்தேன். 

அவள் தலையை என் மடியில் தூக்கி வைத்துக்கொண்டு, ‘காயத்ரீ காயத்ரீ… உனக்கு என்னம்மா செய்யது’ண்ணு கேட்டேன். மெல்ல அவள் விழிகள் அலைவது தெரியுது! கிருஷ்ணமணி மேலே செருகி விட்டதைப்போல் வெள்ளை மட்டும் தெரிந்தது. லேசாக முனகினாள். வாயிலிருந்து எச்சில் வடியுது. நான் மறுபடியும் கேட்டேன். என்னவோ பேச முயற்சிப்பது தெரிந்தது… ஆனா நாக்கு ஒத்துழைக்காமல் பலகீனமாய் சாப்பா… சாப்பா… இப்படி என்னவோ ஒரு ஒலி… அதுவும் அவள் சுதாவான குரல்போல் இல்லை. கரடு முரடான தரையில் கட்டை வண்டி போவதுபோல் ஒலித்தது. 

‘இந்த நிலைமையில் டாக்டர்கிட்டே எப்படிக் கூட்டிக்கிட்டுப் போவது? நானே ஓடிப்போய் டாக்டர் ரிஷியைக் கூட்டி வர்ரேன்’ என்று பாலாவையும் கூட்டிக்கிட்டு பார்வதி இறங்கினாள். ‘டாக்டர் காலம்பர எழுதித் தந்த ப்ரிஸ்க்கிரிப்ஷனையும் கையில் எடுத்துக்கிட்டு ஓடிப்போய்விட்டு வா’ என்று சொல்லி அனுப்பினேன். 

மண்ணிலிருந்து அறுத்தெடுத்த கீரைத் தண்டைப்போல், காயத்ரி துவண்டு என் மடியில் கிடந்தாள்… சித்தே நேரத்தில் பார்வதி வந்து சொன்னாள்… டாக்டர் கிட்டே விஷயத்தைச் சொன்னப்போ, ‘காலம்பர நான் கம்ப்ளீட்டா செக் பண்ணிய கேஸ், அவளுக்கு ஒண்ணும் இல்லே. நீங்க எல்லோருமா டோன்ட் மேக் எ ஃபஸ். பேசாம அவளைத் தூங்க விடுங்கோ… வேணுமுண்ணா கொஞ்சம் பிளாக் காப்பி போட்டுக்கொடுங்கோ… நாளைக்குக் காலம்பர இங்கே கூட்டிக்கிட்டு வாங்க… நான் மெடிக்கல் காலேஜில் வேலை பார்க்கிறவன். சாதாரணமா எந்தப் பேஷண்டையும் அவர்கள் வீட்டில் போய்ப்பார்ப்பதில்லை. அதுவும் இந்த நேரத்தில் நான் அங்கே வந்தா அனாவசியமா புகார் வரும்… எதுக்கும் பொழுது விடியட்டும்’ அப்படீண்ணு சொல்லி விட்டார்,’ என்றாள். பிறகென்ன? 

அன்னிக்கு ராத்திரி மாதிரி இந்த அம்பது வருஷ வாழ்க்கையில் ஒரு சித்திரவதையை நான் அனுபவிச்சதில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் காயத்ரி அவள் அல்லாமலாகிக் கொண்டிருந்ததைக் கொட்டு கொட்டுண்ணு பார்த்தவாறு ராவைக் கழிச்சோம்; நாலு மணி அடிக்கல்லே. காயத்ரியின் உடம்பு ஐஸ் கட்டி மாதிரி மூச்சுக் கூட இல்லாததுபோல்… ‘சரி… பார்த்துக்கோ… இதோ வந்துட்டேண்’ணு பார்வதிகிட்டே சொல்லி விட்டுப் பைத்தியம் பிடிச்சவனைப்போல் தெருவில் இறங்கி ஓடினேன். 

டாக்டர் ரிஷியின் வீட்டு கேட்டைப் படபடவென்று நான் தட்டிய சத்தத்தில் அவர் வீட்டில் எல்லோரும் எழுந்திரிச்சுட்டாங்க. ‘நீங்க உடனேயே வரணும்… எனக்கு ஒண்ணும் சொல்லத் தெரியல்லே… ஆனா… இப்போ நீங்க வராட்டி அப்புறம் நீங்க ரொம்பப் பச்சாதாபப்பட வேண்டியிருக்கும்…’ இப்படி என்னவெல்லாம் அப்போ சொன்னேன்னு இப்போ சரியாக எனக்கு ஞாபகம் இல்லே. நான் நின்ன நிலையைப் பார்த்த டாக்டருக்கு அப்போ எங்கிட்டே ஒண்ணும் தர்க்கிக்கத் தோணவில்லை போலிருக்கு… 

‘சரி… நீங்க முன்னால் போங்க. நான் இதோ வந்துட்டேன்’ அப்படீண்ணு சொல்லி உள்ளே போனார். நான் திரும்பி ஓடி இங்கே வந்ததும் அவர் தன் காரில் வந்து இறங்கினார். ‘நீங்க எல்லோரும் அனாவசியமா பெரிசுபடுத்தறீங்க’ என்று சொன்னவாறே உள்ளே வந்தார். ‘அடீ காயத்ரீ… என்ன சும்மா விளையாடுறியா?’ என்று அவள் தோளில் தட்டியதும் திடுக்கிட்டு அவளைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே திடீரென்று அவர் முகத்தில் நிரம்பி நின்ற சுமூக பாவம் விலகி, ஒரு கலவரம் சூழ்ந்து கொண்டது. 

‘சரி… சரி… உடனேயே ஆஸ்பத்திரிக்குப் போயிடுவோம்… இன்னிக்கு என்.ஓ.பி.டேட் அல்ல. டாக்டர் ஜார்ஜை போனில் கூப்பிட்டுச் சொல்லிக்கிறேன். உம் இறங்குங்கோ…’ என்று விட்டு அவர் விரைந்து போய் காரில் ஏறும்போது, ‘டாக்டர் இந்த பில்ஸைத்தான் கொடுத்தோம்’ என்று பார்வதி மீதியிருந்த பில்ஸ் பாக்கட்டை எடுத்து நீட்டினாள்… அதைக் கையில் வாங்கி, தெரு லைட் வெளிச்சத்தில் பார்த்தாரோ இல்லையோ… இப்போது டாக்டரின் முகத்திலும் காயத்ரியின் முகத்தில் போல் ஒரு பிரேதக் களை… ‘ஐயோ… ஆபத்தாச்சே… இதையா கொடுத்தீங்க? இதில் எத்தனை மாத்திரை சாப்பிட்டாள்’ என்று குரல் நடுங்கக் கேட்டார்… அஞ்சு என்றாள் பார்வதி… ‘சரி… சரி… இனிப் பேசிக்கிட்டு நிற்பதில் அர்த்தம் இல்லை… எல்லாம் கடவுளின் தலையில் பாரத்தைப் போட்டுவிட்டு, உடனேயே ஆஸ்பத்திரிக் குப் போகணும்… இதோ டாக்ஸியை வரச் சொல்லுகிறேன். பிள்ளையார் கோயில்வரை போய்விட்டு உங்க பின்னாலேயே நானும் ஆஸ்பத்திரிக்கு வாறேன்’ என்று விட்டு அவர் காரில் ஏறிப் போனார்… டாக்ஸியில் கட்டையாய் விறைத்துப் போய்க்கிடந்த காயத்ரியைத் தூக்கிப் போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போனோம். 

அங்கே போய்ச்சேரும்போது, ‘எல்லாம் ரெடி… கீழே வைத்து இன்ஜெக்ஷன் கொடுத்து விட்டு, கண்மணி மூவ் பண்ணு கிறதாண்ணு பாருங்க. மூவ் பண்ணுகிறதாய்த் தெரிஞ்சா மேலே கொண்டு வந்தால் போதுமுண்ணு ப்ரொபசர் சொல்லியிருக் கார்’னு டாக்டர் ஜார்ஜ் ரிஷியின் செவியில் கிசுகிசுப்பது என் காதிலும் விழுந்தது… உம்… பிறகென்ன ஒரு தலை மயிர் இழையில் அவள் உடம்பில் ஜீவன் தொங்கிக் கொண்டிருந்தது. மேலே வார்டுக்குக் கொண்டுபோக வேண்டிய தாமதம், ரெண்டு கையிலும் டிரிப் கொடுத்தாங்க. இன்ஜெக்ஷன் போட்டாங்க. வேறு என்னென்னமோ செய்தாங்க. எப்படியோ தெய்வாதீனமா அவ பிழைச்சுட்டாண்ணு மட்டும் சொன்னா போதுமே…’ 

‘டிரக் மாறிப் போச்சு இல்லையா?’ என்றேன். 

‘ஆமாம். கியாஸ் ட்ரபிளுக்கு டைமாஸ் என்ற மருந்து எழுதியிருக்கார். பாவி, அந்த மெடிக்கல் ஷாப்காரன் டயபட்டிக் பேஷண்டுக்குக் கொடுக்கும் டயோனிலைத் தந்து விட்டிருக்கான். இதே ஆஸ்பத்திரியில் இதே மாதிரி ரெண்டு கேஸ் வந்திருக்காம். ரெண்டும் பிழைக்கலை; இவளும் ஒரு மாத்திரைக் கூடச் சாப்பிடவோ, இல்லை ஒரு அஞ்சு நிமிஷ நேரம் தாமதிக்கவோ செஞ்சிருந்தா, பிறகு பார்க்க வேண்டாம்.’ 

‘ஆனாலும் அந்த டாக்டருக்கு, ‘நீங்க கொடுத்த மருந்தை எடுங்கோ’ண்ணு கேட்டு வாங்கிப் பார்க்கத் தோணல்லியோ? நல்லவேளை; தெய்வாதீனமாக உங்க மனைவி அதைக் கொண்டு வந்து காட்டியிருக்கிறார்… ‘ 

‘ஆமா… அதனால்தான் சீக்கிரம் டயக்னோஸ் செஞ்சு சிகிச்சை ஆரம்பிக்க முடிஞ்சுது. இல்லாட்டி, இவுங்க ஒவ்வொரு டெஸ்டா பண்ணிப்பார்த்து டயக்னோஸ் செஞ்சு கண்டு பிடிப்பதுக்குள்ளே எல்லாம் க்ளோஸ் ஆகியிருக்கும். ஆனாலும்… அவர் டாக்டர் ரிஷி அன்னிக்கு நான் போய்க் கூப்பிட்டவுடன் வந்ததோடு, கூடவே ஆஸ்பத்திரிக்கு வந்து வேண்டியதைச் செஞ்சதனாலேதானே காயத்ரி உயிர் பிழைச்சாண்ணு அவர் மேலே நன்றி உள்ளவன்தான் நான்.’ 

இப்போது கேட்டைத் திறந்து கொண்டு குடையும் கையுமாய் ஒருவர் ஏறி வருகிறார். ‘வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்தாச் சுண்ணு கேள்விப்பட்டேன். இப்போ எப்படியிருக்குது?’ 

‘உம் உம்… பரவாயில்லே.’ 

‘சார்… தயவு செஞ்சு நீங்க புகார் எழுதிக் கொடுத்து விடாதீங்க. அப்புறம் என் டிரக் லைஸன்ஸைக் கேன்சல் பண்ணி விடுவாங்கண்ணு மட்டுமல்ல. வழக்கு அது இதுண்ணு அலைய வேண்டி வந்துடும். ‘ 

‘ஆமாமா. உம்ம கவலை உமக்கு… என் பெண் உயிரோடு திரும்பக் கிடைச்சது எங்க பாக்கியம்; இன்னும் மூளை சரியாகல்லே… நீங்களெல்லாம் இப்படி மருந்து வியாபாரம் செஞ்சா, சுகமா இருக்கிறவங்க எல்லோரும் சீக்கிரம் போய்ச் சேர்ந்துடுவாங்க. ‘ 

‘இல்லை சார். என்னவோ தவறு நேர்ந்திடுச்சு. அந்தப் பையன் கடையில் புதுசா சேர்ந்திருக்கான். அவன் செஞ்ச காரியம் இது. அதோடு இந்த டாக்டர்மார்களின் கையெழுத்தைப் படிச்சுப் புரிஞ்சிக்குவது கொஞ்சம் சிரமம். மருந்துகளின் பெயர்களிலும் பெரிய வித்தியாசம் தெரிவதில்லை.’ 

‘அப்படிச் சந்தேகம் இருந்தா என்ன வியாதிக்குண்ணு வாயைத் திறந்து கேட்கலாமே… அதை விட்டுவிட்டு இப்படிக் கையில் கிடைச்சதை எடுத்துக் கொடுப்பதா?’ என்று அவரிடம் சொல்லி என்னை நோக்கி, ‘இந்தச் சம்பவத்துக்குப் பிறகு டாக்டர் ரிஷி காப்பிட்டல் லெட்டரில் கொட்டை கொட்டையாகத்தான் இப்போது மருந்து ப்ரிஸ்க்ரைப் பண்ணுகிறார்’ என்றார் ஐயர். 

பிறகு, ‘சரி சரி… உம்ம கிட்டே இப்போ எதுக்கு வம்பு… எங்களுக்கு எங்க மகள் சுய ஸ்மரணையோடு நல்லபடியாக திரும்பக் கிடைச்சா போதும்’ என்று சொல்லி வந்தவரை அனுப்பி வைத்தார். 

இப்போது உள்ளேயிருந்து அவர் மனைவி, ‘யாரது… மெடிக்கல் ஷாப் ஓனர் பாவியா… போயிட்டானா’ என்று சொல்லிக் கொண்டே வந்தாள். 

‘…உம் தொலைகிறான். இதெல்லாம் நம்ம தலை விதி… இவள் இப்போ இப்படி இருக்கறச்சே, இனி அவன் சாபத்தைக்கூட வாங்கிக் கட்டிக்கணுமா?’ என்று அவர் கேட்டபோது, ‘இவன்களையெல்லாம் இப்படியே விட்டு வச்சா… இனியும் எத்தனை பேருடைய உயிரை வாங்கப் போகிறானோ?’ என்று என்னமோ பொருமியவாறு உள்ளே சென்றாள் அவள். 

– 17.02.1975 – குமுதம் 20.03.1975.

– நாகம்மாவா? (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2014, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *