இல் – அறம்
(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘அம்மா அம்மா… கதவைத் திறங்கோ… கதவைத் திறங்கோ…’

பின்னால் சமையலறைக் கதவைத் தட்டும் ஓசையுடன் ஒரு பதட்டமான குரல்.
கையிலிருந்த புத்தகத்தில் இருந்த கமலம்மையின் விழிகள் ஜன்னல் வழி இருண்ட புழக்கடையில் துழாவின.
அறைக்குள்ளிருந்த மின் வெளிச்சம் வெளியில் இருளை இன்னும் அதிகமாக்கிக் காட்டியது.
மறுபடியும், ‘அம்மா… நான்தான். கதவைத் திறங்கோ’ என்ற அடக்கமான பரபரப்பின் சத்தம்.
கூர்ந்து பார்த்தபோது…
அது எதிர் வீட்டு பங்கியல்லவா…
இவளுக்கு இங்கே என்ன வேலை…
இவளை வீட்டுக்குள்ளே எப்படி ஏற்றுவது – அதுவும் சமையல றைக்குள் என்றெல்லாம் நினைத்தவாறு கூடத்தைச் சுற்றிக் கொண்டு சமையலறைக்குள் வந்து கதவைத் திறந்தாளோ இல்லையோ, ஒரு சுழல் காற்றைப்போல் உள்ளே வந்தாள் பங்கி. கூடவே வியர்வையின் ஒரு கனத்த நெடியும்…
‘அம்மா லைட்டை அணைச்சுடுங்கோ… அந்தக் காலா மாடன் பின்னால் வந்துக்கிட்டிருக்கான்; என்னை இப்போ கண்டா கொண்ணு போடுவான்’ என்றவாறு கதவை அவளே அடைத்து விட்டு, அங்குமிங்கும் பார்த்து
ஓடிப்போய் ஸ்விட்சை அணைத்து விட்டு பதுங்கிக்கொண்டாள்.
அடுப்படியில்போய்
வெளியில் கொல்லையில் டார்ச் ஒளி முன் செல்ல, பங்கியின் மாப்பிள்ளை வாமன் ஓடிச்செல்வது தெரிந்தது.
‘உம்… என்ன இண்ணைக்கு?’
‘சாந்தியில் அருமையான சினிமா… ‘குடும்பினி’. ஒரு வாரமா அவன்கிட்டே சொல்லிக்கிட்டிருக்கேன். கூட்டிக்கிட்டுப் போண்ணு! மூண்டு கேக்கல்லே… இண்ணைக்கும் சொன்னேன்… ‘சலம்பாம சோலியைப் பார்த்துட்டு கெடடீ, எரப்பாளீண்’ண சொல்லிட்டு வெளியிலே போயிட்டான். சித்த முந்தி தயிர்க்காரி பார்க்கவியக்கன் வந்து சொல்லுதா…. ‘ஏட்டீ பங்கீ… உனக்கு கெட்டியவன் எவளோ ஒருத்தியையும் கூட்டிக்கிட்டு கொட்டகைக்குள்ளே போறான்’ண்ணு. என்னால் பொறுக்க முடியல்லே… இந்த ரெண்டு புள்ளைகளையும் தூக்கிக்கிட்டு ஓடினேன். சும்மா சொல்லப்படாது. அவ என்னைப் போல் இல்லை; நல்ல செகப்பா ஷோக்கா இருக்கா… அவ கழுத்தில் கையப் போட்டுக்கிட்டு அந்த மூளி அலங்காரிக்கு அவன் கலர் வாங்கிக் கொடுப்பதைப் பார்த்தப்போ எனக்கு ஈரக் கொலை பத்தி எரிஞ்சது. சின்னவன் பாலனை மெல்ல அவகிட்டே தள்ளி விட்டேன்.
அவன்போய், ‘அப்பா எனக்கும் கலர் வாங்கித் தா’ண்ணு கேட்டான். அசந்து போனான்…
சினிமா கொட்டகையுண்ணு பார்க்காமெ முதலில் அவனுக்குக் கொடுத்தான். அப்புறம் என் மூஞ்சியிலும் நெஞ்சிலும் எல்லாம் கும்கும்முண்ணு குத்துவிடத் தொடங்கிட்டான். ‘கொல்லு வானோ’ண்ணு கூப்பாடு போட்டுக்கிட்டு அங்கிருந்தே ஓடி வாறேன். கூட அவனும் துரத்திக்கிட்டு வந்தான்…’
‘ஆமா… இது உனக்கு முன்னாலேயே தெரியுமா?’
‘தெரியும். நான் கௌவி ஆயிட்டேன். இனி அவகிட்டயே போய்ச் சேர்ந்துடுண்ணு அவன்கிட்டே எவ்வளவோ தடவை சொல்லிப் பார்த்தாச்சு; கேட்டாத்தானே; அவனுக்குக் கொட்டுவடி பிஸினஸுக்கு நான் இல்லாமெ முடியாதே.’
இன்று காலையிலும் எக்ஸைஸ் வேன் பங்கியின் வீட்டு நடையிலிருந்த பெட்டிக் கடையின்முன் வந்துநின்று தடதடவென்று போலீஸ்காரங்க கடைக்குள் ஏறிப் புட்டிகளை ‘படார் படார்’ என்று வீசியெறிந்து உடைத்ததை கமலம்மையும் கண்டிருந்தாள்.
‘இண்ணைக்கு காலம்பரெயும் போலீஸ் வந்தது போலிருக்கே. ‘
‘ஆமா… எல்லாம் காலிப் புட்டிகள். வீட்டுக்குள் என்னைச் சுற்றி தலையணைக்கு அடியில், சாமி படத்தின் பின்னால் எல்லாம் அம்பது புட்டியில் சரக்கு இருந்தது. எனக்குக் கெதம் கெதமா இருந்தது. நல்லவேளை, வீட்டுக்குள் வரல்லே… உம். இண்ணைக்குப் பரவாயில்லே. போன வருசம் வயித்து வலிண்ணு ஆஸ்பத்திரியில் கிடந்தான் அவன். நான் காலம்பர விஜயன்கிட்ட வாடிக்கைக்காரங்களைக் கவனிக்கச் சொல்லி விட்டு ஆஸ்பத்திரிக்குக் கஞ்சி கொண்டு போயிருந்தேன். அப்போ விஜயன் யாருக்கோ ஊற்றிக் கொடுப்பதை எக்ஸைஸ் போலீஸ்காரன் பார்த்துக்கிட்டுப் போயிருக்கான். நான் வீட்டுக்கு வந்து பாத்திரத்தைக் கொண்டுபோய் வச்சுவிட்டு கடையைத் திறந்து உக்காரல்லை. ஒரு டாக்ஸி வந்து நிண்ணுது. திமு திமுண்ணு அஞ்சாறு பேருங்க வந்து சோதனை போட்டாங்க; நல்லவேளை அப்போ ரெண்டே ரெண்டு புட்டிகள்தான் இருந்தன. என்னைப் போலீஸ் டேசனுக்குப் புடிச்சிக்கிட்டுப் போனாங்க. அந்தக் கேஸ் இப்பவும் நடக்குது. இப்படி எத்தனை தடவை? எனக்குப் பழகிப் போயிடிச்சி… ஆம்புளைங்களைப் புடிச்சிக்கிட்டுப் போனா அடிச்சி நொறுக்கிடுவாங்க. பொட்டச் சிக நாமொ போனா ஒரு நா ராத்திரி லாக்கப்பிலே போட்டுக் கேசு பதிச்சுவிட்டு வெளியே அனுப்பி வைச்சிருவாங்க… அவ்வளவு தான், அப்படி அவனைக் காப்பாத்த நான் எத்தனை தடவை உள்ளே போயிட்டு வந்திருக்கேன் தெரியுமா? அப்படி காசு சம்பாதிக்க நான்; அனுபவிக்க எவளோ ஒருத்தி…’
‘ஆமா… உங்க கல்யாணம் நடந்து எத்தனை வருசம் இருக்கும்?’
‘ஏழு வருசம் இருக்கும்.’
‘ஏழு வருசமா? அப்போ விஜயன்…?’
‘விஜயனுக்குப் பத்து வயசுக்கு மேலிருக்கும் என்ற சங்கதி கமலம்மையின் நெஞ்சை உறுத்தியது.
‘ஒண்ணும் சொல்ல வேண்டாம். விஜயன் இவனுக்குப் பொறந்த வன் இல்லையம்மா?’
‘என்ன?’
‘ஆமா… என் தங்கச்சியின் மாப்பிள்ளை ஒரு போலீஸ்காரன். அடிக்கடி வருவதைப் பார்த்திருப்பீங்களே…’
‘ஆமா!’
‘அவன்தான் என் மொத புருசன். விஜயன் பொறந்த அடுத்த வருசம் ஒருநாள் ராத்திரி, ‘எடி… பங்கி… என் தங்கக் கொடம்… ஒங்கிட்டெ ஒண்ணு சொல்லுவேன். தட்ட மாட்டியே… என் பொன்னே… அப்படீண்ணு என் செவியில் சொன்னான். ‘சும்மா சொல்லு… அதிகம் கொஞ்சாதே ‘ண்ணு சொன்னேன் நான். ‘இல்லை மோளே… உன் தங்கச்சியை நான் கட்டிக்கிடட் டுமா?… அவளுக்குச் சம்மதம்தான்’ண்ணு என்னைக் கட்டிப் புடிச்சுக்கிட்டு சொன்னான். ஆனா எனக்குச் சம்மதம் இல்லேண்ணு சொன்னேன் நான்.
‘ஏண்டீ! அவ வேறெ ஆருமா? உன்கூடப் பிறந்தவதானே’ண்ணு மடக்கினான். ‘அதெல்லாம் சரி… ஆனா உனக்கு அவ இல்லாமெ முடியாதுண்ணா அவளோடு போயிடு… என்னை விட்டு விடு… கக்கத்திலே உள்ளது கீழே விழவும் படாது, உத்தரத்திலெ உள்ளதையும் எடுக்கணுமுண்ணா முடியாது’- அப்படிண்ணு சொன்னேன் நான்.
அவன் எப்படியெல்லாமோ சொல்லிப் பார்த்தான். நான் மசியல்லே. கடைசியில் என் தங்கச்சியைக் கட்டிக்கிட்டு அவளோடு போய்ச்சேர்ந்தான்.
‘எப்படியானாலும் நான் பெத்தவனில்லியா? அதுதான் விஜயன் எங்கிட்டையே ஒட்டிக்கிட்டான்.’
‘அப்போ வாமன்?’
‘ரெண்டு மூணு வருசம் நான் தனியாட்டுத்தான் இருந்தேன். இவன் என்னை வளைச்சுப் பிடிச்சுக்கிட்டான். நாங்க சாதியிலே ஈளவங்க. வாமன், வாணியன். அப்போ சாலையில் சுமை தூக்கிக்கிட்டிருந்தான். ‘கண்ணே?… பொன்னே! உனக்கு நா ஒரு கொறையும் வைக்க மாட்டேன். அப்படி இப்படி எல்லாம் சொல்லி என்னைக் கட்டிக்கிட்டான்.
பொறவுதான் இந்தக் கொட்டுவடி பிஸினெஸ் கள்ளச் சாராய யாவாரம் ஆரம்பிச்சான். கொளுத்த லாபம். இப்போ பூத்த பணம். ஆனா எனக்கென்ன பிரயோசனம்… வீட்டுச் செலவுக்கு உப்பு, மிளகு வாங்க எங்கிட்டே பைசா தருவதோடு சரி! பிள்ளைங்களுக்கும் எனக்கும் ஒரு துண்டு துணி எடுப்பதுகூட வருசத்தில் அந்த ஓணத்துக்கு மட்டும்தான். ஆனா அவன் தங்கச்சிக்குப் போனவாரம்கூட பத்தாயிரம் ரூவா சொளையா கொண்டுபோய் கொடுத்திட்டு வந்தான்.’
‘அவன் தங்கச்சியா? அவ எங்கே இருக்கிறா?’
‘அவனுக்கு ரெண்டு தங்கச்சிக… ரெண்டு பேரும் பாக்கத் தளதளண்ணு இருப்பா… ரெண்டு பேரையும் நம்ம காமாட்சி வீட்டிலே விட்டிருக்கான். அடிக்கடி சினிமா ஸ்டார்போல் அலங்கரிச்சுட்டு டாக்ஸியில் இந்த நடைவெளி, கோவளம் என்னா, நொய்யார் டாம் என்னாண்ண போவதைப் பார்த்திருப் பீங்களே… அவுங்களுக்கும் நல்ல சம்பாத்தியம். ‘ரெண்டு பேரையும் கெட்டிக் கெடுக்க ஒண்ணும் செய்யல்லையா?’
‘மூத்தவளை மட்டும் கெட்டிக் கொடுத்தான். ஒரே ஒரு பிள்ளை. ஒருநாள் மாப்பிள்ளை பெண்டாட்டிக்கு இடையில் என்னவோ சண்டை. கட்டியிருந்த வேட்டியை உத்தரத்தில் போட்டு நாண்டுகிட்டுச் செத்தான் அவன். பிள்ளையை ஆருக்கோ தத்துக் கொடுத்து இவளை இங்கே கொண்டுவந்துவிட்டான்.
‘அடுத்தவ மூத்தவளைவிடச் செக்கச் செவண்ணு சுண்டினா ரத்தம் வந்திடுவதைப் போல் இருப்பா. அவளையும் கொண்டு வந்து விட்டான்; இப்போ சரியான வரும்படி…’
‘ஆமா… நீ எவ்வளவு நேரம் இப்படி ஒளிச்சுக்கிட்டு உட்கார்ந் திருப்பே… அவ அப்பா வருகிற நேரம்.’
‘அவன் இன்னும் கொஞ்ச நேரத்தில் போயிடுவான் அம்மா… பாண்டிக்கென்னவோ போய் கார் வாங்கி டாக்ஸி அடிக்கப் போறானாம். கையிலிருக்கும் காசுக்கு செலவு வேண்டாமா…’
‘இப்போதான் திரும்பிய இடமெல்லாம் கள்ளு ஷாப்பு. சாராயக் கடை எல்லாம் பப்ளிக்கா இருக்கே… அதுக்கெல்லாம் இல்லாத மவுசா இந்தக் கள்ளச் சாராயத்துக்கு…?’
‘ஆமாம்மா… இதைக் குடிக்கப் பழகினவங்க வேறெ எந்த தேவாமிர்தம் கெடைச்சாலும் திரும்பிப் பார்க்க மாட்டாங்க’ என்று அவள் சொல்லும்போது, அடிக்கடி இந்தப் பங்கியும் இந்தத் திரவத்தில் முழுக்க முழுக்க நனைந்து தெருவில் போகிறவங் களைத் தொண்டை திறந்து கனமான வார்த்தைகளால் அபிஷேகம் செய்வது கமலம்மைக்கு ஞாபகம் வந்தது.
ஒரு தடவை அடுத்த வீட்டில் இருக்கும் பங்கிடின் தங்கச்சியின் கூட உக்கிரமாய் மோதி, உடை விலக உதைகளைத் தாராளமாய் இருவரும் பரிமாறிக்கொண்டதும் நினைவில் இருக்கிறது.
‘உம்… முந்தியெல்லாம் எங்கிட்ட அருமையாட்டுத்தான் இருந்தான். கையிலே நாலு காசு வந்தப் பொறவுதான் அவனுக்கு நெலை கொள்ளல்லே. ராத்திரி குடிச்சு மறிஞ்சு விட்டு யாருக்க வீட்டுக் கதவை எல்லாமோ போய்த் தட்டுறான்னு சேதி வந்தது.
போன வருசம் ராத்திரி ரெண்டு மணியிருக்கும். மணக்காடு முக்கில் இவன் குடிச்சுக்கிட்டு ரகளை பண்ணுறாண்ணு நம்ம ஓலைக்கெட்டு மூப்பன் வந்து சொன்னான். அந்த நடுச் சாமத்திலே நா மட்டும் அங்கே எப்படிப் போவேன். குற்றா குற்றி இருட்டு. என் அம்மையையும் கூட்டீட்டு அங்கே போனேனோ இல்லையோ… ‘உங்களை இங்கே ஆரு வரச் சொன்னா…’ அப்படீன்னு சொல்லிட்டு என்னை மட்டும் இல்லே. எங்க அம்மாவையும் அடிச்சு நொறுக்கிட்டான் இந்தப் பாவி…’
கடைசியில் போலீஸ் டேசனுக்குப் போற வளீலே வீட்டுக்கு வந்து, என் பெட்டியைத் திறந்து எனக்க துணியை எல்லாம் அவன் தான் எடுத்துத் தந்தான். இல்லேன்னு சொல்லல்லே – குமிச்சுப் போட்டு, மண்ணெண்ணெய் விட்டுத் தீ வச்சான்… ‘என் பெண்டாட்டி பங்கிக்குத் தகனம் நடந்தாச்சு’ – அப்படீண்ணு சொல்லிட்டு டேசனுக்குப்போனான்.
அப்படியே தொலைஞ்சிருக்க மாட்டானா…! நாலு மாசம் களிஞ்சு ராத்திரி வந்து கதவைப் போட்டுப் ‘படா படா’ண்ணு தட்டுறான்; ஆருண்ணு கேட்டா அம்மா…
‘நான்தான் வாமன்’ண்ணு சொன்னான்.
‘உம்… என்னத்துக்கு?’ண்ணு அம்மா கேட்டாள்.
‘பங்கி இல்லையா?’ண்ணு கேட்டான்.
‘இல்லியே… அவளுக்குத் தகனம்தான் நடந்தாச்சே’ண்ணு அம்மா சொன்னாள். அவன் போனாத்தானே! என்னவெல் லாமோ சொல்லிச் சமாதானப்படுத்தி மறுபடியும் சேர்ந்துட்டான். இப்போ இப்படி…!’
முன் வாசலை யாரோ தட்டும் சத்தம். பங்கி அடுப்படியில் பதுங்கிக்கொண்டாள். கமலம்மை போய்க் கதவைத் திறந்த போது நடையில் விஜயன் நிற்கிறான்.
‘அம்மை இல்லையா…? அப்பா போயாச்சு…’
அந்தச் செய்தியைப் பங்கியிடம் சொல்லி, அவளை வெளியே அனுப்பி வைக்க சமையலறையை நோக்கி நடந்தாள் கமலம்மை.
– 03.03.1975 – ஏடு, 4/1975.
– நாகம்மாவா? (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2014, கிழக்கு பதிப்பகம், சென்னை.
![]() | நீல பத்மநாபன் (பிறப்பு: சூன் 24, 1938, கன்னியாக்குமரி மாவட்டம்), தமிழகத்தின் ஒரு முன்னணி எழுத்தாளர். புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைகளிலும் எழுதுபவர். இலை உதிர் காலம் புதினத்துக்காக 2007ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது விருது பெற்றுள்ள நீல பத்மநாபன், பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். இவரின் படைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாக நவீனத்துவ வடிவ…மேலும் படிக்க... |
