மலை வாழை அல்லவோ கல்வி
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 4, 2026
பார்வையிட்டோர்: 111

ஞாயிற்றுக் கிழமை . பூவனம் கிராமம். மாலை நேரம்.
நகரத்திலிருந்து ஊருக்கு வந்த பேருந்திலிருந்து இறங்கினாள் ஆசிரியை அமுதா . அவளைப் பார்த்ததும் ஒரு பதின் பருவ சிறுவன் அவளருகே ஓடி வந்தான்.
அவனுடைய தலையை அன்புடன் வருடிய அமுதா, “ராமு, கலா வீட்டுக்கு போகணும் காட்டு”
இருவரும் நடந்து சென்றனர்.
மாணவி கலாவின் வீடு. திண்ணையில் அமர்ந்தாள் அமுதா.
கலாவும் அவளுடைய அம்மாவும் வந்து நின்றனர்.
கலாவின் அம்மா வாங்க என்று கூறாமல் நிற்பதைப் பொருட்படுத்தாமல் அமுதா பேசினாள் –
“அம்மா, கலாவை ஏன் ப்ளஸ் ஒன் ல சேர்க்கல ….”
கலாவின் அம்மா மௌனம் காத்தார். கலா பேசினாள் –
“மிஸ் எங்க அக்கா ராணிக்கு இரட்டை குழந்தைங்க பொறந்து இருக்கு ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை… அதுங்கள பார்த்துக்க தான்.. அம்மா என்னை ப்ளஸ் ஒன் ல சேர்க்கல … “
இப்பொழுது கலாவின் அம்மா ஒன்றும் பேசாமல் வீட்டுக்குள் போய் விட்டார்.
அமுதா, ராமுவைப் பார்த்தாள். ஆசிரியையின் குறிப்பை உணர்ந்து கொண்ட ராமு பேசினான்-
“டீச்சர் , ரெட்டைக் குழந்தையா இருந்தாலும் மூணு குழந்தையா இருந்தாலும் அக்காவும் மாமாவும் இவங்க அம்மாவும் பார்த்துக்கப் போறாங்க … இவளுக்கு படிக்க ஆசை இல்ல …. அதான் இப்படி எல்லாம் பேசிகிட்டு இருக்கா…”
கலா உரத்த குரலில் கத்தினாள் “மிஸ். எனக்கு படிப்புல ஆர்வம் இல்லேன்னு இவன் எப்படி சொல்லலாம். என்னை பத்தி உங்களுக்கு தெரியாதா… நாளைக்கே நான் ப்ளஸ் ஒன்ல சேர்றேன் மிஸ்”
“சரி வா ஸ்கூலுக்கு” என்று சொல்லி விட்டு அமுதா எழுந்து நின்று தெருவில் இறங்கி நடந்தாள் . ராமு அவளைப் பின் தொடர்ந்தான்.
(*தந்தை , மகளுக்கு கல்வியின் சிறப்பை எடுத்து இயம்புவதாக பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் படைத்த பாடல் – தலை வாரி பூச்சூட்டி உன்னை என்று தொடங்கும் பாடல் இந்தப் பாடலின் வரிகளில் ஒன்று – மலை வாழை அல்லவோ கல்வி நீ வாயார உண்ணுவாய் போ என் புதல்வி )
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கோழி மொட்டு கம்பெனி…
யுவராஜ் சம்பத்
August 4, 2026
பிணவறைக் கோபுரங்கள்!
மா.சித்திவினாயகம்
August 4, 2026
அகல் விளக்கு
மு.வரதராசன்
August 4, 2026
