உயிர் உனதானதே!
கதையாசிரியர்: லாவண்யா ஸ்ரீராம்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 4, 2026
பார்வையிட்டோர்: 36
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-16
அத்தியாயம் – 10

வசந்தி சொன்னது போல் உறவினர்கள், நண்பர்கள் என்று சில நாட்கள் வீட்டில் புது ஆட்கள் இருந்தனர். பிறகு வீட்டில் எல்லாம் இயல்பானது. திவ்யாதான் கொஞ்சம் தாமதமாக எழுந்தாள். திவ்யாவுக்கு ஆறு மணிக்கு முன் எழ வேண்டும் என்றால் யாராவது அவளை எழுப்பிவிட வேண்டும். ஆனால் இங்கே எல்லோரும் ஐந்து மணிக்கு எழுந்து விடுகிறார்கள். அன்னையின் அறிவுரையை நினைத்தபோது, அவள் அதைச் சரியாகச் செய்யவில்லையோ என்று தோன்றியது. பின் தூங்கி முன் எழுவது, வீட்டில் எல்லோருக்கும் எப்படி பணிவிடை செய்வது என்றெல்லாம் மகளுக்குச் சொல்லியிருந்தாள் உமா. இரண்டாம் விஷயத்தை ஓரளவு சரியாய் செய்தாலும், மூன்று நாட்கள் கிருபாகரன் கிளம்பி சென்றபிறகு தான் எழுந்தாள்.
திருமணம் நிச்சயமாகிவிட்டது என்று அதன் பின் கிருபாகரனை அதிகம் வெளியே அனுப்பவில்லை வசந்தி. அதனாலேயே நிறைய வேலைகள் திருமணம் முடிந்த கையுடன் முடிக்க வேண்டி இருந்தது.
“நீ வரவில்லை என்று வேறு ஒருவனை அழைத்தேன்! கோளாறை சரி செய்ய மோட்டார் வைக்கச் செல்கிறான் அவன். சீக்கிரம் கொஞ்சம் பார் கிருபா!” என்றார் பக்கத்து தோட்டத்தின் உரிமையாளர்.
அருகில் இருக்கும் ஊர்களிலும் டிராக்டரில் உழ வேண்டிய நிலங்கள் இருந்தது. தாமதமாக திரும்பும் கணவனுக்காக காத்திராமல் உறங்கிவிட திவ்யாவால் முடியவில்லை. அவன் வந்ததும் அவனுக்கு உணவு பரிமாறி, அவன் சாப்பிட்டதும் பாத்திரங்களை சுத்தம் செய்து படுக்க மிகவும் தாமதமாகிவிடும். அதனாலும் திவ்யாவால் எழுந்திருக்க முடியவில்லை.
வசந்திக்கு இதனால் கோபம் வந்து விடுமோ என்று எண்ணினாள். அதனாலேயே வசந்தி எத்தனை மணிக்கு விழிப்பாள் என்று கேட்டுக்கொண்டு, அதற்கு முன்னதாக அலாரம் வைத்துக் கொண்டு தான் படுத்தாள். அலாரம் அடித்ததும் பதறி எழுந்து அமர்ந்தாள். அருகில் கிருபாகரன் கண் விழித்துப் பார்த்து, “அலாரம் யார் வைத்தது?” என்றான்.
“நான் தான்! நீங்கள் படுத்துக் கொள்ளுங்கள்” என்று கட்டிலிலிருந்து எழுந்தவளை இழுத்து அவன் மேல் சாய்த்துக்கொண்டான்.
“இன்னும் பொழுது கூட விடியவில்லை. இப்போது எழுந்து என்ன செய்யப்போகிறாய்? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு!”
“அத்தை எழுந்துவிடுவார்கள். நானும் அத்தைக்கு உதவுகிறேன்!” என்றாள்.
“அம்மாவுக்கெல்லாம் ஒன்றும் உதவி வேண்டாம்! நீ படு.”
“தினமும் நான் தான் தாமதமாக எழுந்திருக்கிறேன். நான் சோம்பேறி என்று நினைத்து விடுவார்கள்” என்று திவ்யா சொன்னதும், அவன் உடல் லேசாகக் குலுங்குவது தெரிந்தது. அவன் சிரிக்கிறான் என்பதை அறிந்ததும், “ஏன் சிரிக்கிறீர்கள்?”
“அம்மாவிடம் உனக்கு இவ்வளவு பயமா? இந்த வீட்டில் நீ அதிகம் பயப்பட வேண்டும் என்றால் அது எனக்குத்தான். அம்மா உன்னை ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.”
“உங்களிடமும் எனக்குப் பயம் இல்லை. அத்தையிடமும் பயம் இல்லை. பெரியவர்கள் வேலை செய்யும்போது நான் தூங்கிக்கொண்டு இருந்தால் நன்றாக இருக்காது. விடுங்கள் என்னை!” என்று எழுந்து சென்றாள்.
அவள் அறையை விட்டு வெளியே வரவும், வசந்தியும் எழுந்து வந்தாள். “திவ்யா! எதற்குச் சீக்கிரம் எழுந்தாய்?” என்று கேட்க,
“உன்னைப் பார்த்துப் பயம் அவளுக்கு. மருமகளை சோம்பேறி என்று நினைத்துவிட்டால்? அலாரம் வைத்து எழுந்திருக்கிறாள்.” என்று கிருபாகரன் சொன்னபடி பின்கட்டிற்குச் சென்றான்.
“நான் அப்படி எல்லாம் நினைக்கமாட்டேன். இரவும் கிருபா வந்த பின் தானே நீ தூங்கச் சென்றாய்! நீ போய்த் தூங்கு” என்று சொன்னதோடு திவ்யாவின் தோள்களைப் பற்றி அறையின் பக்கம் திருப்பினாள் வசந்தி.
“இல்லை அத்தை! எனக்குத் தூக்கம் வரவில்லை. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பார்த்துக் கற்றுக்கொள்கிறேன்.”
“கற்றுக்கொள்ள இன்னும் வயதிருக்கிறது. இப்போதுதான் நன்றாகத் தூங்க முடியும். குழந்தை என்று வந்துவிட்டால் தூக்கம், ஓய்வு எல்லாம் கிடைக்காது. இதுதான் சந்தர்ப்பம்.”
“இப்படியே பேசிக்கொண்டே நாம் இருவரும் வேலையைத் தொடங்கலாம்.” என்று வசந்தியின் பின் நடக்கத் தொடங்கினாள்.
“சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறாய்!” என்று அன்றாட வேலைகளைச் செய்யத் தொடங்கினார்கள். திவ்யாவுக்கு வசந்தியுடன் வேலை செய்வது வெகு இயல்பாக இருந்தது. பாட்டியிடம் வேலை செய்யும்போது அப்படித்தான் இருக்கும். அம்மாவிடம் கூட இத்தனை எளிமையாக இருந்ததில்லை. ஒரு மாத காலம் அம்மாவுடன் சேர்ந்து வேலை செய்தாள்தான். ஆனால் இப்போது இருப்பதுபோல் இல்லை. எப்படி ஒரே வாரத்தில் வசந்தியிடம் இப்படிப் பழக முடிகிறது. கிருபாகரனிடம் கூட அப்படித்தான். இதுவரை தந்தையிடமோ, சங்கரிடமோ கூட இவ்வளவு பேசியிருப்பாளா என்பது சந்தேகம் தான். இந்த ஒரு வாரத்தில் அத்தனை கதைகள் பேசினார்கள்.
வசந்தி என்ன சமைக்க வேண்டும் என்று சொன்னால் ஒரு பணிப்பெண் செய்துவிடுவாள். அன்றைய அளவு மட்டும் சொல்லிப் பொருட்களை எடுத்துத்தர வேண்டும். பின்தோட்டத்தில் இருக்கும் காய்கறிகளைப் பறித்து வர வேண்டும். பல காய்கறிகள் அங்கேயே இருந்தன. சமையல் கொஞ்சம் அதிகப்படியாகவே செய்ய வேண்டியிருக்கும். பண்ணை ஆட்கள் திடீரென்று சிலர் உணவு உண்ண வருவார்கள். தொழுவத்தில் மாடுகளைப் பராமரிக்க, தோட்டத்தில் வேலை செய்ய என்று ஆட்கள் எப்போதும் வீட்டைச் சுற்றி இருந்துகொண்டே இருப்பார்கள். பின்னால் இருக்கும் தென்னந்தோப்புக்கு நீர் பாய்ச்சுவது, அறுவடை செய்த விளைச்சலைக் களத்தில் கொட்டி காயப்போடுவது, காய்ந்த பிறகு மூட்டை கட்டுவது என்று ஏதாவது வேலை இருந்துகொண்டே இருக்கும். கிருபாகரனோ, தங்கவேலுவோ அவ்வப்போது ஆட்கள் வருவது பற்றி முன்னறிவிப்பு கொடுத்துவிடுவார்கள். சில சமயம் அறிவிப்பு இல்லாமல் கூட ஆட்கள் வருவதுண்டு. முன்னறிவிப்பு இருக்கும் நாட்களில் எல்லோருக்கும் எல்லா உணவுகளும் இருக்கும். சில நாட்களில் வெறும் குழம்பு ரசம் என்று முடிந்துவிடும். சில நாட்களில் திவ்யாவுக்கு ஓரளவு வசந்தியின் முறைகள் எல்லாம் பழகிவிட்டது. வசந்தி என்ன கேட்பாள் என்று தெரிந்துகொண்டு செய்யத் தொடங்கினாள்.
இருப்பினும் தோட்ட வேலைக்கு வரும் ஆட்கள் வீட்டு வேலைகளையும் சேர்த்து செய்வார்களா? ஒருவேளை இந்த ஊரில்
இது சாதாரணமாகக் கூட இருக்கலாம். உணவுகூடப் பலர் இங்கேயே சாப்பிடுகிறார்கள். அதற்கெல்லாம் சம்பளத்தில் பிடிப்பார்களா? ஆனால் இதுபோல் கணக்குகளைப் பற்றிக் கேட்கத் திவ்யாவுக்குத் தயக்கமாக இருந்தது. யாரேனும், திவ்யாவுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று சொன்னால் சொல்லட்டும் என்று எண்ணிக்கொண்டாள்.
பகலில் கிருபாகரனும், தங்கவேலும் வெளியே சென்றுவிடுவார்கள். அறுவடை முடிந்து, அடுத்த பயிரிட வேலைகள் நிறைய இருந்தன. வீட்டைச் சுற்றி இருக்கும் நிலம் தவிர, சற்றுத் தொலைவிலும் ஒரு விவசாய நிலம் அவர்களுக்கு இருந்தது. ஏதோ ஒன்றில் வேலை இருந்துகொண்டே தான் இருக்கும். அவ்வப்போது கீர்த்தியும் வந்து விடுவாள். மூன்று பெண்களும் சேர்ந்துவிட்டால் திவ்யாவுக்குப் பகல் பொழுது நகர்வதே தெரியாது.
தங்கை வீட்டுக்கு மட்டும் அழைத்துச் சென்றான் கிருபாகரன். பிறகு அதிகம் எங்கும் செல்லவில்லை எனலாம். வசந்தியாகக் கிருபாகரனிடம் சொல்வாள். “திவ்யாவை எங்காவது அழைத்துச்செல். வீட்டிலேயே இருக்க அவளுக்கும் சலிப்பாக இருக்கும்.”
“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அத்தை.”
“திவ்யா! நீ இப்படிச் சொன்னால், சந்தோஷம் என்று அவன் வேலையைப் பார்க்கச் சென்று விடுவான். இந்த வயதில் தான் வெளியே சுற்ற முடியும். ஏதாவது திரைப்படத்திற்குச் சென்று வாருங்கள். இல்லை கடைக்குக் கூட்டிச்சென்று உடைகள் எடுத்து வாருங்கள்.”
“இப்போது எதுவும் வேண்டாம் அத்தை! திரையரங்கின் சத்தத்தில் படம் பார்ப்பது எனக்குப் பெரிய விருப்பமில்லை. இப்போதைக்கு உடைகள் கூட வேண்டாம்.”
“சரியா போச்சு! ஏதோ என் வயதில் இருப்பது போல் எதுவும் வேண்டாம் என்கிறாய்?”
“அவளை அப்படியே நம் தோட்டம், வயல் எல்லாம் காட்டிவிட்டு அழைத்து வருகிறேன்! அவளுக்கு எங்காவது செல்ல வேண்டும் எனும்போது அழைத்துச் செல்கிறேன்.”
கிருபாகரனுடன் வெளியே சென்றாள். கிருபாகரன் ஒவ்வொன்றாகச் சுற்றிக் காட்டினான். பெரும்பாலும் ஆற்றுப் பாசனம் என்பதால் எங்குப் பார்த்தாலும் பசுமையாகவே இருந்தது. வீட்டின் அருகில் பல வகை மரங்கள் இருந்தன. தென்னை, வாழை, மா, கொய்யா, மாதுளை, சப்போட்டா போன்றவை வீட்டுப் பயன்பாட்டுக்கு மட்டும். மீதம் இருப்பதை பண்ணையில் வேலை செய்பவர்கள் எடுத்துச்செல்வார்கள். அதன் அருகிலேயே விளை நிலம் இருந்தது. அப்போது அது காலியாக இருந்தது.
“இங்கே ஏன் ஒன்றுமில்லை!”
“இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அறுவடை முடிந்தது. இன்னும் சில நாட்களில் பயிரிட வேண்டும்.”
“இங்கே என்னவெல்லாம் பயிரிடுவீர்கள்?”
“பெரும்பாலும் கரும்பு, மஞ்சள், வாழை பயிரிடுவோம்.”
“நம் ஊர் மஞ்சளுக்கு ஜி.ஐ. (புவிசார் குறியீடு) பெற்றிருக்கிறது தானே?”
“ஆமாம்! இங்கே ஜமக்காளம் கூட மிகவும் பிரபலம்.”
“ம்! தாத்தா சொல்வார்.”
“ஆனால் இப்போதெல்லாம் ஜமக்காளத்துக்கு வரவேற்பு அதிகம் இல்லை. நிறைய நெசவாளர்கள் தொழிலை விட்டுவிட்டார்கள். காலத்தின் மாற்றத்துக்கு நாமும் மாற வேண்டி இருக்கிறது. அதுபோல் மாற்றங்கள் எல்லா தொழில்களிலும் தேவை இருக்கிறது.”
“இங்கே நடக்கும் வேலைகளைப் பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியுமா?”
“ஓரளவுக்குத் தெரியும்!”
“ஆட்கள் இல்லையென்றாலும் நீங்களே எல்லாம் செய்வீர்களா?”
“எல்லாம் நானே செய்வதா? இயந்திரங்கள் இருந்தால் எல்லா வேலைகளையும் செய்யலாம். இன்னும் நம் நாட்டில் அந்த அளவு இயந்திர பயன்பாடு இல்லை. ஆனால் அந்த நிலைமை நம் நாட்டிலும் சீக்கிரம் வரத்தான் போகிறது. இப்போதைக்கு ஆட்கள் கிடைப்பதில் பிரச்சனை இருந்ததில்லை. நான் மேற்பார்வை மட்டும்தான் செய்வேன்.”
“உங்களுக்கு விவசாயம் செய்வதெல்லாம் எப்படித் தெரியும்?”
“தோட்டம், விவசாயம் எல்லாம் அப்பா செய்வதைப் பார்த்து வந்த ஆர்வம்.”
“உங்களுக்கு வேறு எதில் ஆர்வம்?”
“ஒவ்வொரு வயதில் ஒவ்வொன்று! பள்ளி வயதில் விளையாட்டு. கபடி, கிரிக்கெட். கல்லூரியில் இருசக்கர வாகனம், நண்பர்கள். வருடத்திற்கு இரண்டு முறை மாற்றிவிடுவேன்.”
“வருடத்திற்கு இரண்டு முறையா?”
“அப்போதெல்லாம் எதற்கும் கணக்கு பார்த்ததில்லை. கார்கள், பைக்குகள் எல்லாம் மாற்றுவது ஒரே நாளில் நடந்துவிடும். பிறகு எல்லாவற்றிலும் நிதானம் வந்துவிட்டது. உனக்கு எப்படி?”
“என்ன?”
“விருப்பு வெறுப்பு!”
“அப்படி எல்லாம் பெரிதாக ஒன்றும் இருந்ததில்லை. பாட்டி செய்யும் உணவு, தாத்தாவுடன் நடக்கும்போது பேசும் கதைகள், அவருடைய புத்தகங்கள். இதைத் தவிர வேறொன்றும் இல்லை.”
“ஏன், நண்பர்கள், விளையாட்டு, திரைப்படங்கள் என்று எதிலும் ஆர்வம் இல்லையா?”
“நண்பர்கள் அதிகம் இல்லை. கல்லூரித் தோழிகள் சிலர் இருக்கிறார்கள். எல்லோரும் அவரவர் வாழ்க்கையில் பிஸியாக இருக்கிறார்கள். எல்லாம் பாட்டி தாத்தா தான். விளையாட்டு கூட அதிகம் இல்லை. பள்ளிக்குச் சைக்கிளில் செல்லும் பொது விழுந்துவிட்டேன் என்று பாட்டி என்னைச் சைக்கிள் ஓட்டக் கூட விடமாட்டார்கள். விளையாட்டும் அப்படித்தான். ஆனால் பாட்டிக்குத் தெரியாமல் விளையாடச் சென்றுவிடுவேன். நான் படித்த பள்ளியிலும், பெண்களுக்கு விளையாட்டை அதிகம் ஊக்குவிக்கமாட்டார்கள்.”
“நீ அதிகம் பாட்டி தாத்தாவிடம் தான் இருந்ததாகச் சொன்னார்கள். உன் அம்மா அப்பாவுடன் விடுமுறையை மட்டும் கழிப்பாயா?”
“அவர்களுடன் நான் அதிகம் இருந்ததில்லை. மூன்று பேரை வளர்க்க முடியாது என்று பாட்டி தாத்தாவிடம் கொடுத்துவிட்டார்கள்.”
“விடுமுறையில் கூடவா அவர்களுடன் இருக்கவில்லை?”
“அம்மா அப்பா இருவரும் வேலைக்குச் செல்வதால், காவ்யா சங்கரை ஊரில் தான் விடுவார்கள்.” மனதில் இருப்பதை காட்டிவிடாமல் சாதரணமாகப் பேசத்தான் திவ்யா முயன்றாள். கிருபாகரனின் பார்வையில் ஒரு கனிவு தெரிந்தது.
“உனக்கு அவர்களுடன் இருக்க முடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறதா?”
“முன்பு இருந்தது. பிறகு பழகி விட்டது. பாட்டியும் இறந்த பிறகுதான் ஒரு பயம். இனி நான் எங்கே இருப்பது என்று! பிறகு இங்கே வந்துவிட்டேன்.” என்று கண்சிமிட்டினாள். கண்களில் லேசாகத் தெரிந்த பளபளப்பை அவன் கவனிக்க தவறவில்லை, அவளுக்கு எதுவும் வருத்தம் இல்லை என்று தோள்களைக் குலுக்கினாள். ஆனால் கிருபாகரனுக்கு திவ்யாவின் மனம் புரிந்துதான் இருந்தது. மீண்டும் இதைப் பற்றி அதிகம் கேட்டு அவளைக் கலங்க வைக்கக் கூடாது என்று எண்ணிக்கொண்டு மெல்ல அவள் தலையை வருடிக்கொடுத்தான்.
அவளை தோளோடு அணைத்துக்கொண்டு “இந்த ஊர் எப்படி? உனக்குப் வீடெல்லாம் பிடித்திருக்கிறதா? வசதி எல்லாம் பரவாயில்லையா?”
“இந்த வீட்டில் வசதிக்கு என்ன குறை.”
“நமக்கு ஒரு பெரிய வீடு இருக்கிறது என்றேனே. இப்போது அது அடமானத்தில் இருக்கிறது. வீட்டிற்குள் போக முடியாது. ஆனால் வெளியே இருந்து பார்க்கலாம்.” என்றவன் அங்கே அழைத்து சென்றான்.
அந்த வீடு ஒரு அரண்மனை போலவே இருந்தது. வெளியே இருந்து அதிகம் பார்க்க முடியாதவாறு பெரிய மதில் சுவர். இரும்பு வாயிலின் இடுக்குகளில் வீடு தெரிந்தது. ஏதோ திரைப்படத்தில் பார்த்த வீடுபோல் இருந்தது.
“இந்த வீடு படத்தில் வருவது போல் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் புதர் மண்டி பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது.”
“அதனால் தான் அம்மா அப்பா இந்தப் பக்கம் வரமாட்டார்கள்.” கணவன் முகம் வாடுவதைப் பார்த்துத் திவ்யாவுக்கு அங்கே நிற்கப் பிடிக்கவில்லை. “போகலாம்! உங்களுக்கும் கஷ்டமாகத்தானே இருக்கும்.” என்றாள்.
“வீட்டை அவ்வப்போது கண்காணிக்க வேண்டுமே! அதற்காக அடிக்கடி வருவேன்.”
அதுவரை கணவனுடன் உற்சாகமாக நடந்தவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. திரும்பச் செல்கையில் அவளுக்குக் கால்கள் வலிக்கத் தொடங்கின. அவனிடம் சொல்லலாமா வேண்டாமா? என்று யோசித்துக்கொண்டிருந்தாள். திவ்யாவின் வேகம் குறைவதைக் கண்டு, “என்ன? களைத்துவிட்டாய் போல் இருக்கிறது.”
“ஹ்ம்ம்”.
அப்போது எதிரில் யாரோ பைக்கில் வந்தார்கள்.
சட்டென்று அந்த வண்டியை நிறுத்தினான். யார் என்று கூடத் திவ்யாவுக்குத் தெரியாது.
“வண்டியை என்னிடம் கொடு. வீடு வரை சென்று, திரும்ப உன் வீட்டில் விட்டு விடுகிறேன்.” என்றான் கிருபா.
“பிறகு நானே வந்து எடுத்துக்கொள்கிறேன் கிருபா! இத்தனை தூரம் ஏன் நடந்து வந்தீர்கள்?” என்று பைக்கைக் கொடுத்தான் புதியவன்.
“வா போகலாம்!” என்றான் திவ்யாவைப் பார்த்து.
திவ்யா தயங்க, “நீங்கள் கிளம்புங்கள்!” என்றான் புதியவன்.
“நீங்கள் கூட நடக்க வேண்டுமே!” என்று திவ்யா சொல்லும் முன், “அவன் வீடு இங்கே தான். அவன் போய்க் கொள்வான். நீ வா” என்ற கிருபா திவ்யாவின் கையைப் பற்றி வண்டியின் அருகே இழுத்தான்.
“நன்றி அண்ணா!” என்று புதியவனைப் பார்க்க, “நன்றியெல்லாம் வேண்டாம். இதெல்லாம் எங்களுக்குள் பழக்கம்தான். நீங்கள் புறப்படுங்கள். பொழுது சாய்கிற நேரம். நாளை நானே வந்து வண்டியை எடுத்துக்கொள்வேன். நீ இதற்காக வர வேண்டாம்.” என்று சொல்லியபடி புதியவன் நடக்கத் தொடங்கினான்.
“பாவம்! அவர் நமக்காக நடந்து செல்கிறார்!” என்றாள் திவ்யா.
“பத்தடி நடப்பதில் அவன் ஒன்றும் குறைந்துவிட மாட்டான்.” என்றான் கிருபாகரன்.
“உங்களுக்கு அவர் நல்ல பழக்கமா? கேட்டவுடன் வண்டியைக் கொடுத்துவிட்டார்.”
“இதில் என்ன இருக்கிறது? ஊருக்குள் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் உதவுவதுதான்.”
“ச..சிட்டியில் வண்டியை வீட்டில் இருப்பவர்களிடம் கூடக் கொடுக்க மாட்டார்கள்.” சங்கர் என்று சொல்ல வந்ததை மாற்றினாள்.
“அங்கெல்லாம் மனிதர்களைவிடப் பொருட்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். இங்கே மனிதர்கள் தான் முக்கியம்.”
திவ்யாவுக்கு அது சரி என்றே தோன்றியது. தந்தைக்கே கூடச் சங்கர் வண்டியைத் தருவதில்லை. அதை வாங்கி கொடுத்ததே தந்தை என்றபோதும், “உங்களுக்கு இது சரி வராது அப்பா!” என்பான்.
வீட்டிற்கு வந்ததும், கொல்லைப்புறத்தில் ஒரு பெரிய வாளியில் வெந்நீரை எடுத்து வந்தான். “கொஞ்ச நேரம் இதில் காலை வைத்திரு. வலி குறைந்துவிடும்.” என்றான்.
திவ்யா வேண்டாம் என்றாலும் கேட்காமல், அருகில் இருக்கும் சலவைக் கல்மேல் அமரவைத்து, அவனாக, அவள் கால்களை வாளிக்குள் வைத்தான். சூடு கொஞ்சம் பொறுக்க முடியாமல் இருக்க, காலை வெளியே எடுக்க நினைத்தாள் திவ்யா.
“கொஞ்ச நேரம் அப்படித்தான் இருக்கும். அப்படி இருந்தால் தான் வலி குறையும்.”
வீட்டின் சமையல் அறையின் பின்பக்கம் குளியல் அறை. அதன் அருகே பெரிய தொட்டி, சலவைக் கல் எல்லாம் இருக்கும். அந்தப் பகுதியும் நான்குப்பக்கம் சுவருடன் கூரை இல்லாமல் இருக்கும். அங்கிருந்து பின்புறம் செல்ல ஒரு தகரக்கதவு. அங்கே காய்கறி மற்றும் பூச்செடிகள். அந்தப் பகுதியிலிருந்து காய்களைப் பறித்துக்கொண்டு உள்ளே வந்த வசந்தி, மகன் மருமகளைப் பார்த்தாள்.
“வெளியே அழைத்துச் செல்லச் சொன்னால், இப்படியா முகம் கன்றி, சோர்ந்துபோகும் அளவுக்குச் சுற்றுவாய்? எங்கெல்லாம் கூட்டிச் சென்றாய்!” என்று கையிலிருந்த கூடையை அங்கேயே வைத்துவிட்டு, காய்ந்துகொண்டிருந்த ஒரு துவாலையை
அங்கிருந்த குளிர் நீரில் நனைத்து, முகத்தைத் துடைக்கக் கொடுத்தாள்.
வசந்தி நீட்டியதை பெற்றுக்கொண்டு, “அப்படியே அவரோடு நடந்ததில் தூரம் தெரியவில்லை அத்தை.”
“தெரியாதுதான்! உன் அவரோடு செல்லும் போது தெரியாது தான்!” என்று ஒரு கேலிப் பார்வையை பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டு உள்ளே சென்றாள் வசந்தி.
வசந்தி வெகுசாதாரணமாகக் கேலி செய்துவிட்டுச் சென்றுவிட்டாள். இவர்கள் இருவருக்கும் தான் ஒருமாதிரி இருந்தது. அன்னை உள்ளே செல்லும் வரை அமைதியாக இருந்த கிருபா,
“பேசும்போது கொஞ்சம் யோசித்துப் பேச வேண்டும்!” என்று கன்னத்தைக் கிள்ளினான்.
“சட்டென்று வந்துவிட்டது. அத்தை இப்படி கேலி செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.”
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, மனைவியின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு
“கொஞ்சம் வேலை இருக்கிறது! சீக்கிரம் வந்துவிடுகிறேன்!” என்று செல்ல, கணவன் கன்னத்தில் இதழ் பதித்தாள். அதன் பின் அவன் எங்கே செல்வது?
ஒரு பெண்ணைப் பார்த்ததும் பிடித்துவிட அவள் முகப் பொலிவும், தோற்றமும் போதும். ஆனால் மேலும் மேலும் அவளை நேசிக்க வைப்பது அவளின் மற்ற செயல்கள்தான். வசந்தி ஆசைப்பட்ட படி மருமகள் எந்நேரமும் அவளைச் சுற்றி வருகிறாள். கீர்த்தியிடம் கூட நல்ல இணக்கம். தங்கவேலுவின் உடல் நிலையைப் பற்றி தெரிந்து அவருக்கென்று பார்த்துப் பார்த்து தனியே சமைக்கவும் செய்தாள் திவ்யா. திருமணம் நடந்து சில நாட்களே ஆன போதும் கணவன் வேலை என்று அவளுடன் நேரம் செலவழிக்கவில்லை என்று முகம் சுளிக்காமல், கிருபாகரனைப் புரிந்து
நடந்துகொண்டாள். தேன் நிலவு, சுற்றுலா, சினிமா, நகர் உலா என்று எதுவும் கேட்கவில்லை. அவன் எங்கே இருந்தாலும் நேரத்துக்கு கணவன் உணவருந்த வைத்துவிட உணவை அவன் இருக்கும் இடத்துக்கே சென்று விடுவாள். உண்ணும் வேளையில் கணவன் வரவில்லை என்றால் வீட்டில் இருக்கும் ஒரு மிதிவண்டியை எடுத்துக்கொண்டு கணவனை நாடி சென்றுவிடுவாள். வீட்டில் எல்லோரின் தேவைகள் அறிந்து செய்வாள்.
புகுந்த வீட்டில் எல்லோர் மனதிலும் இடம்பிடித்த திவ்யாவின் மனதிலும் அவள் கணவன் வீட்டார் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருந்தார்கள்.
“திவ்யா, உனக்கு பிடிக்கும் என்று வாங்கி வந்தேன்.” என்று நகரத்துக்கு செல்லும் போதெல்லாம் இனிப்பு வகைகளை வாங்கிவர தங்கவேலு மறந்ததே இல்லை.
“கையில் மருதாணி மங்கிவிட்டது. இரு பறித்து அரைத்து வருகிறேன்!” என்று அவள் நினைக்குமுன் வசந்தியாக செய்வாள்.
இரண்டு கையில் மருதாணி வைத்துக்கொண்டு இருந்தால், கிருபாகரன் திவ்யாவுக்கு ஊட்டி விடுவான். அதை பார்த்து மகிழும் வீட்டு பெரியவர்கள். கழிந்தது சில மாதங்கள்தான் என்ற போதும் பல வருடம் அங்கேயே இருந்த நெருக்கம் திவ்யாவுக்கு தோன்றத் தொடங்கியது.
கீர்த்தியும் திவ்யாவும் சேர்த்து தோட்டத்திற்குள் சுற்றுவார்கள். பூப்பறித்துச் சரம் தொடுப்பார்கள். மாட்டுச் சாணம் கொண்டு மெழுகிவிட்ட வாசலில் கோலமிட்டு நேரத்தைக் கடத்துவார்கள். அரட்டை எல்லா வேலைகளின் இடையிலும் இருக்கும்.
“ஏன் அண்ணி! உங்கள் அக்கா எப்படி?” கீர்த்தி கேட்கவும் முதலில் திவ்யாவுக்குப் புரியவில்லை.
“எப்படி என்றால்?”
“நீங்கள் இருவரும் எப்படிப் பழகுவீர்கள்? பிரியம் அதிகமா? இல்லை சண்டை போடுவீர்களா?”
“சிறிய வயதில் நிறைய சண்டைகள். பிறகு எதுவும் இல்லை. இருவரும் வேறுவேறு இடத்தில் வளர்ந்தோம். வருடத்திற்கு இரு முறை சந்திப்போம். கோடை விடுமுறையிலும் தீபாவளிக்கும். அதனால் இருவருக்கும் இடைவெளி கூட அதிகம் தான்.”
“உங்கள் தம்பியா அண்ணனா? அவரிடமும் அப்படித்தானா!”
“ஹ்ம்ம். ஏன் கேட்கிறீர்கள் கீர்த்தி?”
“ஒன்றும் இல்லை. கேட்கத் தோன்றியது. நான் பார்த்த வரையில் நீங்கள் பேசுவது கூடக் குறைவு. அதனால் கேட்டேன். உங்கள் அக்கா நன்றாகப் படிப்பார்கள் போல!”
“ஹ்ம்ம்.”
“உங்களுக்கு மேலே படிக்க ஆசை இல்லையா?”
“பெரிதாக இருந்ததில்லை. ஒரு பட்டம் பெற்றதும் எப்படியாவது ஒரு வேலை மட்டும் பிடித்துவிட வேண்டும் என்று எண்ணினேன். அப்போதுதான் தாத்தா பாட்டியை நன்றாகப் பார்த்துக்கொள்ள முடியும் என்று எண்ணினேன். ஆனால் அதற்குள் இருவரும் என்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்.” லேசாகக் குரல் தழுதழுத்தது.
பிறந்த வீட்டில் இருந்து அவள் வீட்டுக்கு கீர்த்தி கிளம்ப, அவள் வீட்டில் விடக் கிருபாகரன் சென்றிருந்தான். வெளித் திண்ணையில் அமர்ந்து வசந்தியும் திவ்யாவும் பேசிக்கொண்டிருந்தபோது தொலைப்பேசி மணி அடித்தது. திவ்யா தான் எடுத்தாள்.
“ஹலோ”
“ஈரோடு கமிஷனர் ஆபீஸில் இருந்து பேசுகிறோம். கிருபாகரன் இருக்கிறாரா?”
திவ்யாவுக்குக் கொஞ்சம் உதறியது. “அவர் வீட்டில் இல்லை! என்ன விஷயம் சார்?”
“நீங்கள் யார்?”
“அவர் மனைவி!”
“அப்படியா? மாலைக்குள் ஈரோடு கமிஷனர் ஆபீசுக்கு வரச் சொல்லுங்கள்.”
“ஏதும் பிரச்சனையா சார்?”
“வழக்கில் சில விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும். அவர் செல்லுக்குத் தொடர்பு கிடைக்கவில்லை. சீக்கிரம் வரச்சொல்லுங்கள்.” என்று இணைப்பு துண்டிக்கப்பட்டது.
கைகள் நடுங்குவதைத் தாண்டி, கிருபாகரன் எண்ணுக்கு அழைத்தாள். தொடர்பில் இல்லை என்று வந்தது. இன்னும் பதற்றம் அதிகமானது. ஓடிச்சென்று வசந்தியிடம் விஷயத்தைச் சொன்னாள்.
“அத்தை, கமிஷனர் ஆபீஸில் இருந்து போன். அவரை வரச்சொல்கிறார்கள். அவர் எண்ணுக்குத் தொடர்புகொண்டால் கிடைக்கவில்லை.”
“என்ன விஷயம் என்று சொன்னார்களா?”
“ஏதோ வழக்கு என்றார்கள். பயமாக இருக்கிறது அத்தை.”
“ஒன்றும் இருக்காது. நீ கீர்த்தி எண்ணுக்கு அல்லது அவள் வீட்டுக்கு அழைத்துப்பார். இல்லை மாமாவுக்குக் கூப்பிடு.”
திவ்யா மீண்டும் வேகமாகத் தொலைப்பேசியிடம் செல்கையில் வழியிலிருந்த ஏதோ சாமானில் கால் விரல்களை இடித்துக்கொண்டாள். இப்போது அதைப் பார்க்க அவளுக்குத் தோன்றவில்லை. முதலில் கீர்த்தி எண்ணுக்கு அழைத்தாள். இணைப்பு கிடைக்கவில்லை. வீட்டு எண்ணுக்கு அழைத்தபோது
கிருபாகரன் கிளம்பி விட்டதாகச் சொன்னார்கள். சரியாக அவனும் வீட்டுக்குள் நுழைந்தான்.
பதற்றத்துடன் திவ்யா தகவல் சொல்ல, மனைவியின் குரலிலிருந்த நடுக்கத்தைக் கவனித்து, “பயப்பட ஒன்றும் இல்லை. நான் பேசுகிறேன். ஏதாவது தகவல் சொல்ல அழைத்திருப்பார்கள்.” என்று மனைவியிடம் நெருங்க, காலில் ஏதோ பிசுபிசுத்தது. பாதங்களில் சிவப்பாக இருக்க, “யாருக்கு அடிப் பட்டது.” என்று திவ்யாவைப் பார்த்தான். அவளின் காலின் கட்டை விரலில் ரத்தம் கசிந்திருந்தது.
“உன் காலில் தான்.” என்று பார்த்தவன், விரலின் நகம் கொஞ்சம் பெயர்ந்திருந்தது. “அடிபட்டது கூடவா தெரியவில்லை.” என்று மனைவியைக் கண்டித்துவிட்டு அருகில் கிடந்த நாற்காலியில் அமர வைத்தான்.
“நீ போய் மருந்து டப்பாவை எடுத்து வா” என்று மகனுக்குச் சொல்லிவிட்டு, “என்ன கண்ணு, மெதுவாகப் பார்த்து நடக்க வேண்டாமா?” என்றாள் வசந்தி.
“எனக்கு ஒன்றும் இல்லை அத்தை!” என்று கணவனைப் பார்த்து, “நீங்கள் முதலில் போலீசுக்குப் பேசுங்கள்.” என்றாள்.
அவள் சொன்னதைக் காதில் வாங்காமல், கட்டு போடும் வரை கருமமே கண்ணாக இருந்தான். “எப்போது டி.டி போட்டுக்கொண்டாய்?” என்றான்.
“இரண்டு வருடம் இருக்கும். உங்கள் செல் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.”
“தண்ணீரில் விழுந்துவிட்டது.” என்று மனைவியைக் கோபமாகப் பார்த்துவிட்டு, மருந்து வைத்து கட்டிவிட்டு, “ரொம்ப வலித்தால் சொல் டாக்டரிடம் போகலாம்!” என்று தொலைப்பேசியை எடுத்துப் பேசினான்.
“ஏதோ தகவல் கிடைத்திருக்கிறதாம். வரச் சொல்கிறார்கள். நான் சென்று வருகிறேன். அப்பாவையும் அழைத்துக் கொண்டு செல்கிறேன்.” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
திவ்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் மற்றவர்கள் எல்லாம் நிதானமாகவே இருக்க, பெரிதாகப் பிரச்சினை ஒன்றும் இல்லை என்று தோன்றியது.
“இப்போது என்னவோ?” என்று வசந்தி சோர்வாக அமர்ந்தாள்.
திவ்யா “என்ன பிரச்சினை அத்தை?” என்று மெதுவாகக் கேட்டாள்.
“எல்லாம் நம் நேரம். கூட்டு தொழில் செய்யப் போய் நம் வீட்டையே எடுத்துக் கொண்டார்கள். அதை மீட்கத்தான் மாமாவும், கிருபாவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.” என்று சுருக்கமாகச் சொன்னாள்.
கிருபாகரன் தந்தையை அழைத்துக்கொண்டு கமிஷனர் அலுவலகம் சென்றான். செல்லும் முன் அவன் வக்கீலுக்கு மட்டும் தகவல் சொல்லிவிட்டுச் சென்றான். விஷயம் வேறு விதமாக மாறி இருப்பதாகச் சொன்னார்கள்.
அத்தியாயம் – 11
தங்கவேலு கிருபாகரனுக்காகப் பெண்கள் இருவரும் காத்திருந்தார்கள். இரவு தாமதமாக வீட்டினுள் நுழைந்ததும், “என்ன? என்ன சொன்னார்கள்?” என்று கேட்டபடி வசந்தி வந்தாள்.
“சொல்கிறேன் அம்மா. அப்பா எதுவும் சாப்பிடவில்லை! முதலில் சாப்பிட எடுத்து வையுங்கள்.” கிருபாகரன் சொல்லிவிட்டு கையிலிருந்த கோப்புகளைப் பத்திரப்படுத்திவிட்டு வந்தான்.
உணவு உண்டு முடிக்கும் வரை யாரும் பேசவில்லை. சாப்பிடும்போது பேசக் கூடாது என்று சட்டம் எல்லாம் வீட்டில் கடைப்பிடிப்பதில்லை தான். ஆனால் வீடு, வழக்கு என்று விஷயம் வரும்போது, எல்லோர் மனதிலும் பாரமும், கவலையும் நிறைந்திருக்க உண்பதே கொஞ்சம் கஷ்டம். அப்போது மேலும் விஷயத்தைக் கிளற வேண்டாம் என்று உண்டு முடிக்கும் வரை யாரும் பேசிக்கொள்ளவில்லை.
“வழக்கில் கொஞ்சம் முன்னேற்றம் வந்திருக்கிறது. ஏமாற்றியவர்கள் பிடிபட்டு விட்டார்களாம்.” என்றார் தங்கவேலு.
“அப்படியானால் வீட்டை நமக்குக் கொடுத்துவிடுவார்களா?” என்றாள் வசந்தி.
“வீட்டை அவர்களா வைத்திருக்கிறார்கள்? இப்போதுதான் போலீஸ் அவர்களைக் கைது செய்திருக்கிறார்கள். அவர்களின் வாக்குமூலத்தை வைத்து வழக்கை நமக்குச் சாதகமாக முடிக்கலாம். ஆனால் நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை நாம் ஒன்றும் செய்ய முடியாது.”
வசந்தி சோர்வதைப் பார்த்து, “சீக்கிரம் நமக்குச் சாதகமாக எல்லாம் நடக்கும் அம்மா! கவலைப்படாதீர்கள். நம் வழக்கறிஞரிடம் பேசிவிட்டேன். அந்தக் கூட்டாளிகளைச் சென்னையில் பிடித்திருக்கிறார்களாம். ஒருமுறை சென்னை சென்று வந்தால் நிலைமை தெளிவாகத் தெரிந்துவிடும் என்கிறார். இன்னும் இரண்டு நாளில் சென்னை செல்லலாம் என்று சொல்லி இருக்கிறார்.” என்றான் கிருபாகரன்.
அன்னைக்குச் சமாதானம் சொல்லிவிட்டு வந்தவன் முகம் சோர்வாகவே இருந்தது.
“அத்தைக்குத் தைரியம் சொல்லிவிட்டு, நீங்கள் ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்?” திவ்யா கேட்டாள்.
“ஒவ்வொரு முறையும் ஏதாவது நல்லது நடக்கும் என்று நம்பி சென்றால், வழக்கில் ஒரு முன்னேற்றமும் இல்லை.”
“அதுதான் குற்றவாளிகள் பிடிபட்டு விட்டார்களே!”
“அதனால் மட்டும் நமக்கு நியாயம் கிடைத்துவிடுமா?”
“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?”
“விஷயம் ரொம்ப பெரியது!”
“இப்போது நமக்கு என்ன இல்லை? வீடு நம்மை விட்டுப் போய் விட்டது. அதையே நினைத்து எல்லோரும் கலங்கிக்கொண்டு இருப்பது, ஆரோக்கியத்தைக் கூடக் குறைத்துவிடும். உண்ண உணவு இல்லாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒப்பிட்டால் நாம் பாக்கியசாலிகள். அப்படியே வேறு வீடு வேண்டும் என்றால் நாம் சம்பாதித்துக்கொள்ளலாம்.”
கிருபாகரன் சில தினங்கள் முன் கதிரிடம் பேசியது போலவே பேசவும், மனைவியை ஆராய்ந்தான்.
“தவறாக எண்ண வேண்டாம்! இங்கே வந்த சில நாட்களில் இன்று போல் எல்லோரும் கலங்கி நான் பார்த்ததே இல்லை. வீடு நமக்குக் கிடைக்குமா என்று வெகுவாகக் கலங்கினார்கள். உடல் ஆரோக்கியத்தை விட எதுவும் முக்கியமில்லை. வீடு, வசதி எதுவும்.”
“உன் அப்பா எங்களைப் பற்றி எதுவும் உன்னிடம் சொல்லவில்லையா?”
“எல்லோரும் நல்லவர்கள் என்று சொன்னார்!”
“வீடு, வசதி பற்றி?”
“இல்லை! அத்தை இன்று தான் நம் வீடு பிரச்சனையில் இருக்கிறது என்றார்கள்.”
“எந்த அளவு சொன்னார்கள் என்று தெரியவில்லை. அம்மாவுக்கு அந்த வீடு அவ்வளவு முக்கியம். மற்றவர்கள், வறட்டு கௌரவம் என்று கூடச் சொல்வார்கள். நம் குடும்பம் ரொம்ப பெரியது. தாத்தா தலைமுறைக்கு முன் வீட்டில் எப்போதும் இருபது முப்பது பேர் இருப்பார்கள். தாத்தா உடன் பிறந்தவர்கள் நகர்ப்புறம் செல்ல வேண்டும் என்று சொத்துக்களை எல்லாம் பிரித்துக்கொண்டு சென்றார்கள். அந்தப் பாகப்பிரிவினையில் நமக்குக் கிடைத்தது அந்த வீடும் அதன் அருகே இருந்த தோட்டமும் தான். இப்போது இந்த வீடும் நிலமும் தாத்தா காலத்தில் சேர்த்தது. ஆனால் எல்லாவற்றுக்கும் மூலதனம் அந்தப் பூர்வீக வீடும் நிலமும் தான். இப்போது அது நம்மிடம் இல்லை என்பதை அப்பாவாலும்
அம்மாவாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அம்மா பரவாயில்லை அவ்வப்போது அழுது கூடத் தீர்த்துவிடுகிறார்கள். ஆனால் அப்பா மனதில் எல்லாவற்றையும் மறைத்துக்கொண்டு இருக்கிறார். அதை எல்லாம் எண்ணி தான் அப்பாவுக்கு இப்போது இருக்கும் இதயக்கோளாறு, சர்க்கரை வியாதி எல்லாம். நான் கல்லூரி செல்லும்போது அப்பா எப்படி இருப்பார் தெரியுமா? அந்த கம்பீரம், முகத்தில் தெளிவு!”
“அந்த வீட்டில் இத்தனை பிரியம் இருக்கும்போது, அதை ஏன் மாமா பிணையாகக் கொடுத்தார்?”
“நேரம் என்று தான் சொல்ல வேண்டும். விவசாயம், அதை சார்ந்த எந்திரங்கள் எல்லாம் வைத்து வாடகைக்கு விடுவது என்று வாழ்க்கை ரொம்ப நன்றாகவே சென்றது. விவசாயம், அதில் வரும் வருமானம் என்று மட்டும் இருந்த அப்பாவுக்குப் புதிதாகத் தொழில் செய்ய எண்ணம் தோன்றியது. நகர்ப்புறத்தை ஒட்டிய ஒரு நிலத்தை வாங்கி மனை போட்டு விற்பனை செய்யும் திட்டம். துரை மாமா இரு கூட்டாளிகளை அழைத்து வந்தார். அப்பாவும் துரை மாமாவும் நிலத்தை வாங்குவது மற்றும் மனை பிரிக்க ஆகும் செலவுகள் எல்லாம் ஏற்றுக்கொண்டார்கள். அரசாங்க வேலைகளை எல்லாம் அந்த கூட்டாளிகள் கவனித்து கொண்டார்கள். அரசாங்க அலுவலகத்தில் எங்கே என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு யாருக்கும் இல்லை. சில மாதங்களில் எல்லாம் நல்லபடியே முடிந்தது என்று மனைகளை விற்பனை செய்ய தொடங்கினோம். கூட்டாளிகளும் சில லட்சங்கள் மட்டும் தான் அவர்களுக்கு வேண்டியது என்று சொல்லி பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்கள். அதன் பின் தான் பிரச்சனை தொடங்கியது. அரசாங்கத்தில் இருந்து சரியான சான்றுகள் வாங்கவில்லை என்று சிலர் வந்து நின்றார்கள். அது விலை நிலம். அதை வீட்டுமனைகளாக மாற்றக் கூடாது என்று ஸ்டே வாங்கினார்கள். நிலம் வாங்கியவர்கள் எல்லாம் பிரச்சனை செய்ய, வேறு வழியில்லாமல் பெரிய வீட்டையும் அதை ஒட்டிய நிலத்தையும் அடமானம் வைத்து பணத்தை அவர்களுக்கு திரும்ப கொடுத்தோம்.”
“ஆனால், மனைகளை விற்ற பணம் இருந்திருக்குமே!” என்று குறுக்கிட்டாள் திவ்யா.
“சில மனைகள் விற்ற பணம், அந்த கூட்டாளிகள் எடுத்து கொண்டார்கள். மீதம் இருந்தது சரியாக வாங்காத சான்றுகளை வாங்க சில அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதாயிற்று. உண்மையில் கையில் இருந்த நிறைய பணத்தை அந்த தொழிலில் ஏற்கனவே முதலீடு செய்துவிட்டோம். துரை மாமாவிடமும் பெரிய சொத்து இல்லை. அதனால் நம் வீட்டை தான் பிணை வைக்க வேண்டிய நிலை. எப்படியாவது மீண்டும் மனை விற்பனையை செய்துவிடலாம் என்று மேலும் கொஞ்சம் பணம் இழந்துவிட்டோம். இதில் வீட்டையும் நிலத்தையும் எப்படி மீட்பது? அதன் பின் அப்பா மருத்துவ செலவு, கீர்த்தி கல்யாணம். ஆனால் வீட்டை மீட்கும் வரை பழைய நிம்மதி, சந்தோசம் திரும்பாது.” பெரிய மூச்சை வெளியிட்டான்.
திவ்யாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கிருபாகரன் குடும்பத்தில், குறிப்பாகத் திவ்யாவைத் தவிர மற்ற எல்லோருக்கும் மனதில் ஒரு விஷயம் இருந்துகொண்டே இருந்தது. ஊருக்கே பெரிய மனிதராக அவன் தாத்தா இருந்தார்.
வீட்டு மனிதர்கள் மட்டும் இல்லை. யாராக இருந்தாலும் அவர் முன் மிகவும் பவ்யமாகவே நடந்துகொள்வார்கள். அவர் உயர்ந்தவர் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தது. ஒருவகை ஆளுமையை அவர் செலுத்திக்கொண்டே இருப்பார், குடும்ப உறுப்பினர்களிடம் கூட. தங்கவேலு அப்படி இருக்க எண்ணியதில்லை என்றாலும், அவருக்கும் அவர் தந்தைக்குக் கிடைத்த மரியாதையும் கௌரவமும் இருந்தது. குடும்ப பாரம்பரியம் அல்லது பண வசதியால் மட்டும் கிடைத்த மரியாதை இல்லை, அவை அவர் குணத்திற்காகக் கிடைத்தவை. இப்போது அந்த மரியாதை குறைந்துவிட்டது என்று சொல்ல முடியாது. ஆனால், நொடிந்துபோன மனிதரைத் தொல்லை செய்யக் கூடாது என்று சிலர் விலகி நிற்க, சிலர் அறிவுரை கூறுகிறேன் என்று அவர் மனதைத் தெரிந்தே காயப்படுத்தினர். பட்ட காயங்களுக்கெல்லாம் ஒரே மருந்து பழைய வாழ்க்கையைத் திரும்ப அடைந்துவிட
வேண்டும். அதற்குப் பூர்வீக வீட்டை விட்டுக்கொடுக்காமல் காப்பாற்ற வேண்டும்.
கிருபாகரன் அடிக்கடி சென்னை சென்று வந்தான். ஒருமுறை மிகவும் நம்பிக்கையுடன் பேசுவான், ஒருமுறை கொஞ்சம் சோர்வாக நம்பிக்கையின்றி பேசுவான்.
கிருபாகரன் சென்னை சென்றுவிட்டால், திவ்யா எப்போதும் வசந்தியுடன் தான் ஒட்டிக்கொண்டு சுற்றுவாள். கிருபாகரன், கீர்த்தி இருவரில் பிள்ளைப் பருவம் பற்றிய கதைகள்தான் அதிகம் பேசுவார்கள். திவ்யாவுக்கு அவள் உடன் பிறந்தோருடன் எதுவும் சுவாரசியமான கதைகள் இல்லையே என்று வருத்தம் தோன்றினாலும், கணவனின் குறும்புகளைப் பற்றிக் கேட்பதில் மற்றதெல்லாம் மறந்துபோகும். வசந்தி பேசும்போதெல்லாம் வீட்டைப் பற்றிய கதைகளும் வரும். மகன் மகள் பற்றிப் பெருமை பேசும்போது மருமகள் கதையைப் பற்றிக் கேட்கவும் வசந்தி தவறியதில்லை.
“உன் அம்மா, ‘என் மகள் சமத்து, இருக்கும் இடமே தெரியாது’ என்று சொன்னார்கள். மாமியார் தவறாக எடுத்துவிடக் கூடாது என்று சொல்லிவிட்டார்களோ! நீ உண்மையைச் சொல்.” கலகலப்பாகப் பழகும் வசந்தி மருமகளிடம் சாதாரணமாகக் கேட்டது தான். குறை தேடிப் பேசும் வழக்கமும் வசந்தியிடம் இருப்பதாகத் திவ்யாவுக்குத் தோன்றவில்லை. திவ்யா அவள் கதையைச் சொல்வாள்.
“அம்மா சொல்வது நிஜம் அத்தை. கொஞ்சம் வளர்ந்த பிறகு அதிகம் சேட்டை செய்யவில்லை.”
“அப்படியானால், அதற்கு முன்பு?”
“எனக்கு அதிகம் நினைவில் இல்லை. ஆனால் பாட்டி சொல்வார்கள், ‘வீட்டில் எல்லோரும் எனக்குப் பிடித்த நிறத்தில் தான் உடை அணிய வேண்டுமாம். வெளிர் நிறம் எல்லாம் பிடிக்காதாம். அடர் சிவப்பு, பச்சை, நீளம் இப்படி தான் அணிய வேண்டுமாம். அதுவும் தாத்தா பெரும்பாலும் வெளியே செல்லும்போது வெள்ளை சட்டை, வேஷ்டிதான். அதனால்
வெளியே செல்லும்போது என் கண்ணில் படாதவாறு தான் கிளம்பிச் செல்ல வேண்டுமாம். மாமாவுக்கும் அதே நிலைமை தான். கருப்பு பேன்ட்டுக்கு வெள்ளை சட்டை அணிந்தால் கூட மாற்றிக்கொண்டு போகச் சொல்வேனாம்.””
“பாவம் உன் தாத்தாவும் மாமாவும். பிறகு?”
“வீட்டில் கூட எனக்குப் பிடித்த உணவு தான் எப்போதும் செய்ய வேண்டும். தினமும் தலையில் வைத்துக்கொள்ளப் பூ வேண்டும். கையில் மருதாணி என்னைவிட யாருக்கும் அதிகம் சிவந்துவிடக் கூடாது. இப்படி பலதும். மருதாணி விஷயம் மட்டும் எனக்கே நினைவிருக்கிறது.”
“அது எல்லா பெண்களுக்கும் தோன்றுவது தான். ஏன்! கீர்த்தி கூட என்னிடம் போட்டிப் போடுவாள், இப்போது கூட!”
திவ்யா சொல்லும் எல்லா கதைகளிலும் பாட்டி தாத்தா தான் அதிகம் நிறைந்திருந்தார்கள். ஆங்காங்கே மாமாவும். அன்னை தந்தை பற்றியோ, தன் உடன் பிறந்தோர் பற்றியோ அதிகம் சொல்லவில்லை.
“எல்லா வீடுகளிலும் பிள்ளைகள் ஒன்றுக்கொன்று சண்டை போட்டு வீட்டையே ரெண்டாக்கிவிடும். ஆனால் கிருபாவும், கீர்த்தியும் அப்படி இல்லை. இருவருக்கும் அப்படியொரு ஒற்றுமை சிறு பிள்ளைகளாக இருந்தபோதே. பார்ப்போர் எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள். ஆனால் நீ அப்படி இல்லை என்று தோன்றுகிறது. உன் அக்காவும் தம்பியும் கூட உன்னிடம் இணக்கமாக இல்லை என்று தோன்றுகிறது. நீ இங்கே வந்து சில மாதங்களில் ஒரு முறை கூட உன்னிடம் பேசவில்லை.”
அதுவரை இயல்பாகப் பேசிக்கொண்டிருந்த மாமியார், திவ்யாவிடம் ஏதேனும் குறை தேடுகிறார்களா? மகனும் மகளும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று சொல்லிவிட்டு, நீ அப்படி இல்லையே என்று சொன்னால் வேறு எப்படி அர்த்தம் கொள்வது. அதுவும் அவளிடம் அவள் உடன் பிறந்தோர் பேசவில்லை என்பதையும் கவனித்திருக்கிறாள்.
திவ்யா இங்கே வந்து சில மாதங்கள் ஆகின்றன. அவள் அம்மா மட்டும் அவ்வப்போது அழைத்துப் பேசுவதோடு சரி. சில முறை தந்தையும். வழக்கமாகப் பெண் புகுந்த வீட்டிற்குச் சென்ற பிறகு அம்மாக்கள் கேட்கும் கேள்விகள்.
எல்லோரும் உன்னை எப்படிக் கவனித்துக்கொள்கிறார்கள்?
உனக்கு ஏதும் வேண்டுமா?
கணவர் உன்னை எப்படிப் பார்த்துக்கொள்கிறார்?
ஊருக்கு எப்போது வருகிறாய்? ஆனால் கடைசி கேள்வியை ஒரு முறை கூட அன்னை திவ்யாவிடம் இதுவரை கேட்கவில்லை. காவ்யாவும், சங்கரும் பேசாதது திவ்யாவுக்குப் பெரிய குறையாகத் தெரியவில்லை. எப்போது பேசினார்கள்? இன்று பேசுவதற்கு!
அத்தியாயம் – 12
உமாவும் கணபதியும் தீபாவளிக்கு மாப்பிள்ளை பெண்ணை அழைக்க வருவதாக முதிலேயே தகவல் சொன்னார்கள். திருமணம் முடிந்து முதல் முறை பெண்ணைப் பார்க்க வந்தார்கள். முற்பகலில் அவரவர் வேலையில் மூழ்கி இருக்க, திவ்யாவும் உமாவும் சமையல் கூடத்தில் மதிய உணவைச் செய்தவாறு பேசிக்கொண்டிருந்தனர். வயலிலும், தோட்டத்திலும் ஆட்கள் வேலை செய்யும் நாட்களில் வசந்தியும் தங்கவேலும் மேற்பார்வைக்குச் சென்று விடுவதுண்டு. இன்றும் அதுபோல் வேலை இருக்க, கணபதியும் அவர்களுடன் இணைந்து கொண்டார்.
“இந்த வீட்டுச் சமையல் எல்லாம் கற்றுக்கொண்டாயா? நீ சமைப்பது எல்லோருக்கும் பிடித்திருக்கிறதா?” உமா கேட்டாள்.
“ஹ்ம்ம்”
“காவ்யாவும் சங்கரும் கூட வருவதாகச் சொன்னார்கள். கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்கவில்லை.”
“ஹ்ம்ம்”
“காவ்யா கல்லூரியில் முதல் இடம் பெற்றிருக்கிறாள். டெல்லியில் சிறப்புப் பயிற்சிக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சங்கருக்கும் கூட மேல்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துவிடும். எல்லாம் சரியாக நடந்தால் அடுத்த வருடம் அவன் வெளிநாட்டுக்குச் சென்றுவிடுவான். நம் வீட்டில் ஒருவர் வெளிநாடு சென்று படிப்பது பெரிய விஷயம் இல்லையா?”
மகள் எதுவும் பேசாதிருக்க, “என்ன திவ்யா? வாய் திறந்து பேசமாட்டேன் என்கிறாயே!”
“என்ன பேச வேண்டும் அம்மா? அவர்களைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். நான் கேட்கிறேன்.” என்று அடுப்பில் இருந்ததை கிளறிவிட்டபடி சொன்னாள், “நான் இங்கே வந்ததிலிருந்து ஒருமுறை கூடப் பேசாதவர்கள், இங்கே வருவதாகச் சொன்னார்களா? எதற்கம்மா இந்தப் பொய். நான் இன்னும் சிறு பிள்ளை இல்லை. அவர்களுக்கு என்மேல் எவ்வளவு வெறுப்பு என்று தெரியும். இனி அது மாறி எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை.”
“நீங்கள் மூவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை. அதற்குத் தான் இப்படி எல்லாம் பேசுகிறேன். தப்பு அவர்கள்மேல் இல்லை திவ்யா. என்மேல்தான். உன்னைப் பாட்டி வீட்டில் விட்டுவிட்டேன் என்று உன்னைப் பற்றியே எப்போதும் பேசியதால், எனக்கு அவர்களை விட உன்மேல் தான் அக்கறை என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு உன்மேல் சிறிது பொறாமை. அது நிச்சயம் மாறிவிடும்.”
“பொறாமையா? என்மேலா? பிறந்ததிலிருந்து அதிகபட்சம் ஒரு வருடம் கூடப் பெற்றவர்கள் கூட இருக்க முடியாத அதிர்ஷ்டசாலி நான். நிச்சயம் பொறாமை வரும்.”
“உன்மேல் எங்களுக்கு நிறைய …” என்று உமா முடிக்கும் முன், “அம்மா! நீங்கள் எனக்குச் சொல்லத் தேவையில்லை. என்மேல் பாசம், அக்கறை எல்லாம் உங்களுக்கு இருக்கிறது. ஆனால் அது காவ்யா சங்கர் மேல் இருப்பதை விடக் குறைவு என்று எனக்குத்
தோன்றுகிறது. ஏதோ அக்கா தங்கைக்குள் இருக்கும் சிறிய போட்டி, பொறாமை என்று சொல்லிச் சமாளிக்க நினைக்காதீர்கள்.”
“நீ யோசிப்பது போல் இல்லை திவ்யா! உனக்கு பாட்டி தாத்தாவின் அன்பும் அரவணைப்பும் அதிகம். நாங்களும் உன்னைப் பற்றி பேசிக்கொண்டே இருப்போம். உனக்கு மட்டும் எல்லாம் அதிகம் கிடைப்பதாக நினைத்துக்கொண்டார்கள். அதுதான் அவர்களுக்கு உன்னிடம் ஒரு சிறிய வருத்தம். உன் நிலை எனக்கு புரிகிறது. நிச்சயம் ஒருநாள் அவர்களும் புரிந்து கொள்வார்கள். உனக்கு அதற்கு ஒரு வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.”
புரியாமல் பார்த்தாள் திவ்யா.
”எல்லா விதத்திலும் உனக்கு அதிக சலுகை என்று அவர்களுக்கு எண்ணம்.”
திவ்யா சிரித்துக்கொண்டே சொன்னாள். “நினைத்துக்கொள்ளட்டும்.”
மகளிடம் பேச வந்த விஷயம் மாறி வேறு திசையில் சென்று விட்டது. சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் உமா அமைதியானாள்.
திவ்யாவிடம் பேசி அவள் நினைத்ததை நடத்த முடியாது என்று உமா உணர்ந்துகொண்டாள். ஊருக்குப் புறப்படும் வரை மீண்டும் திவ்யாவிடம் பேசக்கூட முயற்சிக்க வில்லை. திவ்யாவும் ஒதுங்கியே இருந்து கொண்டாள். பெற்றவர்கள் அழைப்பை ஏற்று பெங்களூரு செல்ல இருந்த திவ்யாவுக்கு அங்கே அவள் வீட்டாரை மேலும் வெறுக்கும்படி நேரும் என்று தெரியாது.
நிறைய வேலைகள் இருப்பதால், தீபாவளி காலை வந்துவிட்டு இரவே திரும்ப வேண்டும் என்று கிருபாகரன் சொல்லியிருக்க, பண்டிகை அன்று அதிகாலைதான் பெங்களூரு வீட்டிற்குச் சென்றார்கள். காலை உணவை முடித்துக்கொண்டு, கிருபாகரன் கணபதியுடன் பேசிக்கொண்டு இருக்க, மதிய உணவு தயாரித்துக்கொண்டு இருந்த உமாவுக்கு உதவ திவ்யாவும் அங்கே சென்றாள். பின்னால் காவ்யாவும் அங்கே வர, உமா அவளுக்கு
ஏதோ ஜாடை செய்தாள். திவ்யா அதை கவனியாதவள் போல் காய்களை நறுக்கிக் கொண்டிருந்தாள்.
“திவ்யா! உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்!” என்றாள் உமா.
திவ்யாவுக்குக் கொஞ்சம் குழப்பமே. அவளுக்கும் அன்னைக்கும் அப்படி ஒன்றும் பெரிய உரையாடல்கள் இருந்ததே இல்லை.
“பாட்டி சொல்வதைக் கேட்டுக்கொண்டு யாருக்கும் தொந்தரவு தராமல் இரு!”
“நன்றாகப் படி. வீட்டுப்பாடம் எல்லாம் சரியாய் செய்துவிடு. அடுத்த முறை ஊருக்குக் கூட்டிச் செல்கிறேன்”
“வெளியே அதிகம் விளையாடச் செல்லாதே!”
இப்படி ஏதாவது அறிவுரைகள் தான் அதிகம் சொல்லி இருக்கிறாள்.
இப்போது எதைப் பற்றிப் பேசப் போகிறார்கள்?
“சங்கர் வெளிநாட்டுப் படிப்பு பற்றிச் சொன்னேனே! இன்னும் ஒரு ஆறு மாதத்தில் நிறைய ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருக்கிறது. அப்பா எல்லாம் சமாளித்து விட்டார். ஆனால் சங்கர் வங்கிக் கணக்கில் ஒரு பெரிய தொகையைக் காட்டினால் தான், அவனால் அந்த ஊர் செலவுகளைச் சமாளிக்க முடியும் விசாவும் கிடைக்கும். அதற்குத்தான் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.”
திவ்யா இன்னும் குழம்பினாள்.
“தாத்தா உன்பேரில் எழுதிவைத்த ஒரு வீடு இருக்கிறதல்லவா! அதை விற்று வரும் பணத்தை அவன் கணக்கில் கட்டிவிட்டால் எல்லாம் சுலபமாக முடியும். அவனும் நீ உதவினாய் என்று தெரிந்தால் மிகவும் சந்தோசப்படுவான்.”
திவ்யாவின் முகம் மாறியதை உமா கவனிக்கவில்லை. மகளுக்கு எப்படி நல்ல பெயர் கிடைக்கும் என்று வர்ணித்துக் கொண்டிருந்தாள்.
காவ்யா இப்படி என்ன செய்தாள் சங்கருக்கு? ஒன்றைச் செய்தால் பாசம் வந்துவிடுமா? அது யாருக்கு வேண்டும். இப்போது சங்கருக்குச் சரி! பிறகு காவ்யாவிடம் அன்பைச் சம்பாதிக்க திவ்யாவிடம் வேறு சொத்து இல்லையே! லேசாக ஒரு ஏளனப் புன்னகையுடன் திவ்யா அன்னையைப் பார்த்தாள்.
மகளின் சிரிப்பு அவளை ஏதோ செய்ய, உமா பேச்சை நிறுத்தினாள்.
“ஏன் அம்மா நிறுத்திவிட்டீர்கள்! சொல்லுங்கள்.” என்றாள்.
“அது வந்து, தாத்தா உனக்கு மட்டும் தான் அதிக இடம் கொடுக்கிறார் என்று காவ்யா சங்கருக்கு வருத்தம். இதைக் கொடுத்தால் எல்லாம் சரியாகி விடும்.”
“நல்ல யோசனைதான் அம்மா! ஆனால் தாத்தா என்மேல் அக்கறையில் கொடுத்தார் என்பதைவிட, அவரைத் தவிர யாருக்கும் என்மேல் அக்கறை இல்லை என்ற எண்ணத்தில் கொடுத்தார். அதுவும் தாத்தா காலத்திற்குப் பிறகு என் தேவைகளைக் கவனித்துக் கொள்ள யாரும் இருக்க மாட்டார்களோ என்று எண்ணிச் செய்தது. அதை கொடுத்துவிடலாம்தான். ஆனால் பிறகு ஒரு நாள் காவ்யா வந்து எனக்கு நீ என்ன கொடுத்தாய் என்றால்? அப்போது நான் என்ன செய்வது?”
“அப்படி இல்லை திவ்யா! இப்போது ஒரு தேவை இருக்கிறது. காவ்யா அப்படி எல்லாம் கேட்கமாட்டாள்.”
“சரி! அவள் கேட்கமாட்டாள்.” சற்று நிறுத்தி, “தாத்தாவின் வீட்டில் மாமாவுக்கும் பங்கு இருக்கிறது. அவர் இப்போது அந்த வீட்டில் தானே இருக்கிறார். எப்படி விற்க முடியும்? அந்த வீட்டிற்கு அப்படியொன்றும் பெரும் தொகை வங்கியில் கொடுக்கமாட்டார்கள். நிறைய சிக்கல்கள் வரும்.”
“மாமாவிடம் நான் பேசிக்கொள்கிறேன். நிச்சயம் அவன் உதவுவான். உன் பங்கை அவனே வைத்துக்கொள்ளட்டும். அதற்காக அவன் மூன்று லட்சம் கொடுத்தால் போதும் என்றால் அவன் நிச்சயம் சம்மதிப்பான். அவனுக்கும் லாபம் தானே!”
திவ்யாவுக்கு அன்னையின் பேச்சில் பெரிய சுயநலம்தான் தெரிந்தது. இப்போது அவள் தேவைக்காக மாமாவிடம் சென்று ‘பணத்தைக் கொடுத்துவிட்டு முழு வீட்டையும் வைத்துக்கொள்’ என்று சொல்வது சரியென்று படவில்லை. மாமாவின் நிலைமையும் ஓரளவுக்கு திவ்யாவுக்குத் தெரியும். ஏற்கனவே அந்த வீட்டில் திவ்யாவுக்கு ஒரு பங்கை தாத்தா கொடுத்தது அத்தைக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இப்போது அந்தப் பாகத்திற்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு நீ எடுத்துக்கொள் என்பது மாமா குடும்பத்தில் இன்னும் அதிக சண்டைதான் வரும். பல வருடம் முன் நடந்த சம்பவங்களுக்கெல்லாம் இன்றும் சொல்லிக்காட்டும் அத்தை இதைச் சும்மா விட்டுவிடுவாளா? அதை தாண்டி திவ்யா கூட ஒரு விஷயத்தை செய்து வைத்திருக்கிறாளே!
அது வெளியே வந்தால் அதுவும் அத்தைக்கும் அம்மாவுக்கும் நிறைய பிரச்சினைகளைத் தானே ஏற்படுத்தும். யோசித்தவள்,
“மாமா சம்மதிப்பது அவர் விருப்பம். ஆனால் இதில் எனக்குச் சம்மதம் இல்லை.”
“அவள் இப்படித்தான் சொல்வாள் என்று எனக்கு முன்பே தெரியும்!” என்று காவ்யா சொன்னாள். “என்னிடம் இவளுக்காக என்ன பேச்சு பேசினீர்கள்! நம் தேவைக்கு உதவி செய்யக்கூட அவள் விரும்பவில்லை.”
“உனக்கு என்னிடம் குறை தேடுவதுதான் ரொம்ப பிடிக்குமே! இதையும் அடுத்த முறை சொல்லிக் காட்டலாம்.” என்று அங்கிருந்து நகர்ந்தாள் திவ்யா.
“அவளுக்கென்று ஒரு வாழ்க்கை அமைந்ததும், நம்மை மறந்து விட்டாள்.” என்று மேலும் காவ்யா சொல்ல, நின்று திரும்பிப் பார்த்த திவ்யா “உங்களைப் பற்றி எல்லாம் நினைத்துக் கொண்டிருக்க எனக்கு என்ன இருக்கிறது. எங்கே தொலைக்கலாம் என்று எப்போதும் யோசித்துக் கொண்டிருந்தவர்கள் தானே! அதையே நினைத்து உங்களை எல்லாம் இன்னும் வெறுக்கவில்லை. அதைத் தாண்டி என்னிடம் எதிர்பார்க்க உங்களுக்கு உரிமை இல்லை. அதைச் செய்ய எனக்கு அவசியமும் இல்லை.” பொரிந்துவிட்டுப் போனாள் திவ்யா.
நல்ல வேளையாக தந்தையும் கணவனும் அங்கே முன்னறையில் இருக்கவில்லை. இருந்திருந்தால் நிச்சயம் பெண்கள் பேசியது கேட்டிருக்கும். வெகு நேரம் இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தவள், காவ்யாவின் பேச்சைக் கேட்டபடி இருந்தாள்.
“பார்த்தீர்களா! அவள் என்ன பேசிவிட்டு செல்கிறாள் என்று. நம்மைப் பற்றி கவலை இல்லையாம்! இவளுக்காகத்தான் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தீர்கள். உங்கள் நகையெல்லாம் கூட அவளுக்குப் போட்டு சிறப்பாக திருமணம் செய்து வைத்தால், ஏன் பேசமாட்டாள்! அந்த நகைகள் இருந்திருந்தால் கூட இப்போதைக்கு சங்கருக்கு உதவியாக இருந்திருக்கும். அதையும் அவளே எடுத்துக்கொண்டாள்!”
வேகமாக அவர்கள் அருகே வந்து, “ஓ! அதுதான் உங்களுக்கு இப்போது பிரச்சினையா? பிறந்ததில் இருந்து எனக்கு நிறைய செய்து உங்களுக்குத்தான் எத்தனை கஷ்டம்! என் அத்தை நீங்கள் கொடுத்த நகைகளை உங்களிடம்தானே கொடுத்தார்கள். அந்த நகைகள் இன்னும் உங்களிடம் தானே இருக்கிறது! அதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு அது வேண்டாம். அதை வைத்து உங்கள் மகனுக்கும் மகளுக்கும் என்ன வேண்டுமோ செய்து கொள்ளுங்கள்.” என்றாள் திவ்யா.
“என்ன ரொம்ப தாராளம் போல் பேசுகிறாயா? திருமணத்திற்குப் பிறகு பெண்ணுக்குப் போட்ட நகைகளைத் திரும்ப அம்மா கேட்க மாட்டார்கள் என்றுதானே இப்படி சொல்கிறாய்! பிறகு உன் வீட்டில் இருப்பவர்கள் அப்பா அம்மாவைத் தவறாக நினைக்கவா?” என்றாள் காவ்யா.
“நான் சொன்னது சொன்னதுதான். எனக்கு உங்களிடம் இருந்து எதுவும் வேண்டாம்! என் வீட்டில் யாரும் உங்களிடம் வந்து எதுவும் கேட்க மாட்டார்கள். அவர்களுக்கு நான் தான் முக்கியம். நீங்கள் கொடுத்த நகைகள் இல்லை. தாத்தா எனக்குக் கொடுத்த வீட்டை நான் தர முடியாது. அது எனக்கு தாத்தா செய்து வைத்துவிட்டுப் போன வாழ்வாதாரம். இனிமேல் இதுபற்றி பேசினால் நான் யாரிடமும் பேச மாட்டேன்.”
திவ்யாவுக்கு வெறுத்துவிட்டது.
அப்படியே படுத்தும் விட்டாள். சிறிது நேரத்தில் வந்த கிருபாகரன் திவ்யா உறங்குகிறாள் என்று எண்ணிக்கொண்டான். மதிய உணவுக்கு எழுப்பிய போதும், ‘பசிக்கவில்லை’ என்றுவிட்டாள்.
அன்று மாலையே கிளம்ப வேண்டும் என்று கிருபாகரன் சொல்லவும் கணபதி சற்று தயங்கினர். ஒரு நாளேனும் பெண்ணும் மாப்பிள்ளையும் அவர்கள் வீட்டில் தங்கி இருக்க வேண்டும் என்று ஆசை அவருக்கு இருந்தது. ஆனால் கிருபாகரனின் காரணமும் அவர்களுக்கு நியாயமாக பட்டது.
“வேலை ஆட்கள் எல்லோரும் பண்டிகை என்று விடுப்பில் இருக்கிறார்கள். மாடுகளை எல்லாம் அம்மா தனியே பார்ப்பது கஷ்டம். தண்ணீர் இறைக்க மோட்டார் போடுவது கூட கொஞ்சம் சிரமம். இன்னொரு முறை தங்கும் படி வருகிறோம். வேண்டுமானால் திவ்யா இங்கே இருக்கட்டும். இரண்டு நாள் கழித்து அனுப்புங்கள்.” என்றான் கிருபாகரன்.
சாதாரணமாக வந்திருந்தால் மகளை தங்க வைப்பதில் ஒன்றும் இல்லை. ஆனால் பண்டிகைக்கு வந்த மகள் மருமகனை உடனே திரும்ப அனுப்ப வேண்டும் என்று கணபதி எண்ணினார். திவ்யாவுக்கு அது பெரும் நிம்மதியாக இருந்தது.
அன்னை சகோதரியிடம் கோபத்தில் பேசிவிட்டு அங்கேயே தங்கி இருக்க அவளுக்கும் விருப்பமில்லை. அதற்கு மேல் அவளின் ஆற்றாமை. அவளுக்கென்று இதுவரை எதுவும் செய்யாத பெற்றோர்கள், இப்போது மீண்டும் இருப்பதை பிடுங்கி காவ்யா, சங்கருக்கு கொடுக்க எண்ணுவது ரொம்பவும் அநியாயமாக பட்டது.
பேருந்து பயணத்தில் திவ்யா அமைதியாக வர, “சீக்கிரம் அழைத்து வந்து விட்டேன் என்ற கோவமா?” என்றான்.
“அதெல்லாம் இல்லை! கொஞ்சம் தலைவலி.” என்றாள்.
“நீ மதியமும் சரியாக சாப்பிடவில்லை. பசியால் கூட தலை வலிக்கும். பையில் பிஸ்கட் இருக்கிறது. எடுத்து தரட்டுமா?” என்றான்.
“எதுவும் வேண்டாம்! சீக்கிரம் வீட்டுக்கு போனால் போதும்!” என்று கணவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“எல்லோரும் அம்மா வீட்டுக்கு சென்றால் திரும்ப கணவன் வீட்டுக்கு வர மனம் வராது என்பார்கள்! இங்கே அப்படி ஒன்றும் தெரியவில்லையே!” என்றான் கேலியாக.
தோளில் படுத்திருந்தவள் லேசாக தலையை தூக்கி அவன் முகத்தை பார்த்தவள், “நான் அப்படித்தான்! ஆனால் என்னை இங்கே விட்டுவிட்டு நீங்கள் ஊரில் பெரிய திட்டம் வைத்திருந்தீர்கள் போல! என் அம்மா அப்பா கேட்கும் முன், ‘திவ்யாவை இங்கே வைத்துக்கொள்ளுங்கள்’ என்றீர்கள்!” என்றாள்.
“சும்மா சொல்லிப் பார்த்தேன்! அவர்கள் அதற்கு சம்மதித்துவிட கூடாது என்று வேண்டிக்கொண்டே தான் சொன்னேன்! நீயில்லாமல் சென்றால் அம்மா என்னை வீட்டுக்குள்ளேயே விடமாட்டார்கள்!” என்றான்.
“அப்போ! அத்தைக்காகத்தான் என்னை கூட்டி செல்கிறீர்களா?” என்று நேராக அமர்ந்தாள்.
அவளை மீண்டும் தோள் மேல் சாய்த்துக்கொண்டவன், அவள் உச்சந்தலையில் முத்தம் வைத்தான். “உனக்கு தெரியாதா? உன்னை விட்டு என்னாலும் இருக்க முடியாது என்று!” அவள் விரல்களில் அவன் விரல்களை கோர்த்துக் கொண்டான்.
அதுவரை இருந்த சோகம் எல்லாம் பறந்து விட்டது போல் இருந்தது திவ்யாவுக்கு!
நெடுஞ்சாலையில் அவர்கள் கிராமத்தின் சாலை இணையும் இடத்தில் இறங்கிக்கொள்ள, நேரம் இரவு பத்தை நெருங்கி இருந்தது. ஏற்கனவே அங்கே இருந்த கடை ஒன்றில் அவன் வண்டியை விட்டு விட்டு தான் சென்றிருந்தான். அதிகபட்சம் ஒரு பத்து நிமிடத்தில் அவர்கள் வீட்டுக்கு சென்று விடலாம். வீட்டுக்கு சென்றால் அங்கே எல்லோரும் அவர்களுக்காக காத்திருந்தார்கள்.
அவர்கள் என்றால் வசந்தி தங்கவேலுவுடன் கீர்த்தியின் மொத்த குடும்பமும் அங்கேயே இருந்தார்கள்.
“என்ன அம்மா! இன்னுமா நீங்கள் எல்லோரும் உறங்கவில்லை!” என்றான் கிருபாகரன்.
“எல்லாம் உன் தங்கை தான்! அவள் அண்ணியிடம் சேர்ந்து பட்டாசு கொளுத்த வேண்டுமாம்!” என்றாள் வசந்தி.
“இந்நேரத்தில் என்னம்மா பட்டாசு! மாடுகள் எல்லாம் மிரண்டுவிடாதா!” என்றான்.
“வெறும் மத்தாப்பும், சங்கு சக்கரமும்தான், அண்ணா! நீங்கள் வாருங்கள்!” என்று உள்ளே நுழைந்த திவ்யாவை கீர்த்தி அழைக்க, “இரு! ஒரு பத்து நிமிஷம்! அவள் எதுவும் சாப்பிடவில்லையாம்! முதலில் சாப்பிடட்டும்!” என்று வசந்தி சமையல் கூடத்தில் நுழைத்து, நான்கு இட்டிலிகளையும் சட்டினியையும் வைத்து கொண்டு வந்தாள்.
மனைவி சரியாக சாப்பிடாதது பற்றி கிருபாகரன் அவன் அன்னையிடம் சொல்லியிருக்க வேண்டும். மாமியாரின் செயல் திவ்யாவை கண்கலங்க வைத்துவிட்டது. சிரமத்துடன் அதை அடக்கிக் கொண்டு, அவள் அருகே செல்ல, “அம்மா! உங்களுக்கே இதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியாக தெரியவில்லை. மருமகளை மட்டும் கவனிக்கிறீர்கள். மகன் என்று ஒருவன் இங்கே நிற்கிறேன்! எனக்கு இட்லி எங்கே?” என்றான். எல்லோரும் சிரிக்க, “இருடா! உனக்கும் எடுத்து வருகிறேன்!” என்று உள்ளே செல்ல, “வேண்டாம்! நானும் இதிலேயே சாப்பிட்டுக்கொள்கிறேன்!” என்று மனைவிக்கு தந்த தட்டில் கை வைக்க, “அவளை சாப்பிட விடு!” என்று மகனுக்கும் உணவை கொடுத்தாள் வசந்தி.
இருவரும் உணவை முடிப்பதற்குள் வாங்கி வைத்திருந்த பட்டாசுகளை முன்புறம் இருந்த திண்ணையில் எடுத்து வைத்தாள் கீர்த்தி.
எல்லோருமாய் பட்டாசுகளை கொளுத்தி போட்டு தீபாவளியை சிறப்பாக கொண்டாடி முடித்து உறங்க சென்றார்கள். எல்லோருமாய் சேர்ந்து கூடத்தில் மெத்தைகளை போட்டு தான்
படுத்து கொண்டார்கள். வெகுநேரம் எல்லோரும் கலகலப்பாக பேசிக்கொண்டு அப்படியே உறங்கி போக, திவ்யாவிற்கு மட்டும் சிறிது நேரம் உறக்கம் வரவில்லை. கவலையினால் அல்ல, மகிழ்ச்சியால்! அவளுக்கு இப்படி ஒரு குடும்பம் கிடைத்திருக்கிறதே! மருமகளின் பசி அறிந்து உணவு சமைக்கும் மாமியார்! மகளுக்கு இணையாக மருமகளை கொண்டாடும் மாமனார்! அண்ணியை தோழியாக நினைக்கும் நாத்தனார்! எல்லாவற்றுக்கும் மேல் அவள் மேல் உயிரை வைத்திருக்கும் கணவன்! இதற்கு மேல் அவளுக்கு என்ன வேண்டும்!
– தொடரும்…
தொடர்புள்ள சிறுகதைகள்
நீதிக்கு தண்டனை
நா.ரங்கராசன்
August 4, 2026
உண்மை சுடும்
என்.ஸ்ரீதரன்
August 4, 2026
கிணறு
ஜே.எம்.சாலி
August 4, 2026