மறைமுகமாய் உதவி




சந்திரசூடனுக்கு பசி வயிற்றை கிள்ளியது, ஆனால் வாய் திறந்து மனைவியிடம் சொல்ல முடியாது, காரணம் அவளே இரண்டு நாளாய் சரியாய் சாப்பிட்டிருக்க மாட்டாள். இந்த லட்சணத்தில் குழந்தை ஒன்று, அவளுக்கு பால்புட்டி வாங்குவதற்கு கூட கையில் பணமில்லை.

அப்படியே ஆகாயத்தை பார்த்து படுத்து கொண்டிருந்தான். பக்கத்தில் உட்கார்ந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளால் என்ன செய்ய முடியும்?. அவளுக்கு பார்வதி என்று பெயர் சூட்டியதே இவன்தானே. அவளின் உண்மையான பெயர் அருக்காணிதானே?
அவளின் கிராமத்தில் கூட இந்த அளவுக்கு கஷ்டங்களை அனுபவித்ததில்லை, கூழோ கஞ்சியோ, யாரோ ஒருவர் தோட்டத்தில் பாடுபட்டால் சம்பாதித்து விடலாம். ஆனால் இந்த பாழும் ‘சினிமா ஆசை’ இவள் மனதில் கொண்டு வந்ததே இவன்தானே!
ஊரை விட்டு ஓடிய சன்னாசி பத்து வருடங்கள் கழித்து சந்திரசூடனாய் ஊருக்குள் வருவான் என்று யார் எதிர்பார்த்தார்கள். அவன் ஊருக்குள் நுழையும் போது அவனின் தோற்றமே வித்தியாசமாய் இருந்த்து. கண்ணில் ஒரு கறுப்பு கண்ணாடி, டீ சர்ட், ஜீன்ஸ் பேண்ட். தோளில் ஒரு லெதர் பேக். அந்த ஊரில நிறைய பேர் இந்த உடையில் இருந்தார்கள். அதனால் ஊர் அவனது உடையை யாரும் லட்சியம் பண்ணவில்லை. ஆனால் தன்னுடைய பெயரை சொன்னவுடன் தான் எல்லோருக்கும் ஆச்சர்யம்.
அங்கிருந்த பெருந்தோட்டக்காரரிடம் வேலை பார்த்த சன்னாசி அங்கிருந்த ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது இருந்தால் பதினைந்துக்குள் தான் இருக்கும். எப்பொழுதும் கனவுலகத்திலேயே இருந்தான். அருக்காமணி அவனுக்கு முறைப்பெண். ஊரில் எல்லோருக்கும் அவள் சாதாரண அருக்காமணிதான், ஆனால் சந்திர சூடனுக்கு சென்னையில் ஆயிரம் பெண்களை பார்த்திருந்தாலும் இவள் மட்டுமே தேவதையாக தெரிந்தாள்.
தோட்டத்திற்கு அன்றாடம் கூலிக்கு சென்று கொண்டிருந்தவளை சினிமாவின் பக்கம் மனதை திருப்பி அவன் அம்மாவிடம் சொல்லி சட்டு புட்டென்று தாலி கட்டி சென்னைக்கு கூட்டி வந்து விட்டான்.
பதினெட்டு வயது வரை கிராமத்துக்குள்ளேயே வாழ்ந்து வந்தவளுக்கு நகரம் என்பது சினிமாவில் பார்த்து இரசித்த உலகம். ஆனால் விதி அவளை அதனுள் வாழவே வைத்து விட்டது. அவளை கூட்டி வந்தவன் நல்லதொரு வீடாய் பார்த்து குடி வைத்தான். தான் இயக்க போகும் படத்துக்கு நீதான் கதாநாயகி என்று குண்டை தூக்கி போட்டான். உன் பெயர் இனிமேல் பார்வதி என்று மாற்றிவிட்டேன் என்றான்.
ஆரம்பத்தில் அவனது செயல்கள் அவளை பயமுறுத்தினாலும், அவனை தேடி வந்தவர்கள் திரைப்படத்தில் நடித்து கொண்டிருப்பவர்களும், அந்த தொழிலில் இருக்கும் பலதரப்பட்டவர்கள். இதனை பார்த்தவள் சந்திரசூடன் திரைப்படத்தில் ஏதோ சாதித்திருக்கிறான் என்று உணர்ந்தாள்.
அவர்கள் சொன்னதுதான் சந்திரசூடன் திரைக்கதை எழுதிக்கொடுத்த பத்து படங்களும் நன்றாக ஓடியிருக்கிறது. நிறைய எழுத்தாளர்களுக்கு வாய்ப்புக்களை வாங்கி கொடுத்திருக்கிறான். அவர்கள் ஏதாவது பாராட்டி சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டான். இந்த சினிமா உலகில் அவனை திருமணம் செய்ய பல பெண்கள் தயாராக இருந்தாலும் உன்னை கல்யாணம் பண்ண ஊருக்கு வந்திருக்கிறான் என்று அவனது நண்பர்கள் சொல்லவும் பார்வதியாகிய அருக்காமணி அவன் என்ன சொன்னாலும் செய்யவேண்டும் என்று முடிவெடுத்தாள்.
அவன் திருமணம் செய்தது சரியான முடிவு என்றாலும் அவளுக்கு பார்வதி என்று பெயர் சூட்டி, அவளையே கதாநாயகி ஆக்கி ஒரு படம் தயாரிக்க எண்ணியது தவறாக போய் விட்ட்து . .
அவன் எழுதி சம்பாதித்த பணம் கரைய கரைய அவனை பார்க்க வருபவர்கள் படிப்படியாக குறைந்து படமும் பாதி அளவிலேயே நின்று எல்லாம் போய் விட்ட நிலையில் இதோ இந்த கட்டிலில் படுத்து ஆகாயத்தை பார்த்துக்கொண்டிருக்கிறான்.
மாமா பேசாம ஊருக்கு போயிடலாம், மெல்லிய குரலில் சொன்னவளை திரும்பி பார்த்தவன் போயி?
நான் காட்டு வேலைக்காச்சும் போறேன், நீ எதுவும் செய்ய வேண்டாம் என் கூட மட்டும் இரு, அவளின் கோரிக்கை அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.
அருக்காமணி என்னால இனிமேல் ஊர்ல போய் இருக்க முடியும்னு நினைக்கிறே?
உங்க நண்பர்கள் கிட்டவாச்சும் போய் ஏதாவது உதவி கேளுங்களேன், பார்வதி கேட்டாள்.
இதுவரைக்கும் எனக்கு உதவி பண்ணுங்கன்னு யார்கிட்டேயும் கேட்டதில்லையே, நான் சினிமாவுக்குள்ள நுழையற போது சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டப்ப கூட யார்கிட்டேயும் சாப்பாட்டுக்கு காசில்லைன்னு கையேந்தலை. சினிமா சான்சுக்காக கையேந்தியிருக்கேன். சொல்ல சொல்ல கண்களில் கண்ணீர் வழிந்தது.
அவனது அழுகையை கண்டவுடன் சட்டென அமைதியானாள் பார்வதி, வேண்டாம் அவனை இனி எதுவும் கேட்க கூடாது, பார்க்கலாம் பெருமூச்சுடன் எழ முயசித்த பொழுது சார்..ஒரு குரல. இருவரும் திரும்பி பார்க்க வெள்ளை வேட்டி சட்டையுடன் ஒருவர் கையில் தோல் பையுடன். பார்த்தவுடன் தெரிந்த்து சினிமா சம்பந்தபட்டவர் என்று. ஆனால் இது வரை இவரை பார்த்ததில்லை.
வாங்க இவன் எழுந்து உட்கார்ந்தான்.. நீங்க?
நான் சினிமா, டிவி புரோகிராம்களுக்கு ப்ரொடியூஸ் பண்ணிகிட்டிருக்கறவன். உட்காருங்க, ஏதாவது சாப்பிடறீங்களா? சம்பிரதாயமாக கேட்டான்.
அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், எனக்கு உங்களால ஒரு உதவி வேணும், குரல் பணிவாய் கேட்டது.
உதவியா என்னாலயா? அதுவும் இந்த சூழ்நிலையிலையா? இவனுக்கே இந்த கேள்விகள் பயமுறுத்த சிரிப்பு வந்தாலும் அடக்கி கொண்டான்.
சொல்லுங்க என்ன உதவி வேணும்?
நான் அடுத்த இரண்டு வாரத்துல ஒரு தெலுங்கு டிவி சீரியல் பண்ணலாமுன்னு இருக்கேன், அதுக்கு கதை எழுதி தரணும். இரண்டு நாள்ல ஒரு வாரத்துக்குண்டான எபிசோட எழுதி கொடுங்க, அதுக்கப்புறம் அடுத்த வாரத்துக்குள்ளதை எழுதி கொடுங்க..
இரண்டு நாள்லயா? யோசித்தவன் பார்வதியை பார்க்க அவள் கண்களால் கெஞ்சினாள் ஏற்றுக்கொள் என்று.
சரிங்க, நாளைக்கு மறு நாள் சாயங்காலம் ஏழு மணிக்கு இதே நேரத்துல வந்து வாங்கிக்குங்க
ரொம்ப நன்றி தம்பி, இந்தாங்க ஒரு கட்டு பணத்தை அவன் கையில் கொடுத்தார். இதுல இருபத்தஞ்சாயிரம் இருக்கு, மேற்கொண்டு அடுத்தடுத்து எழுத எழுத பார்த்துக்கலாம். பணத்தை வாங்கியவன் அப்படியே பார்வதியின் கையில் கொடுத்தான்.
அப்ப நான் வரட்டுங்களா? கையெடுத்து கும்பிட்டு கிளம்பினார் வந்தவர்.
பசியையும் மறந்து கதையை வரியாக்க பேப்பர் பேனாவுடன் உட்கார்ந்தான் சந்திர சூடன். பார்வதி சினிமா ஆசையை மூட்டை கட்டி விட்டு இந்த ஒரு மாத பட்ஜெட்டை இந்த பணத்துக்குள் சமாளிக்க குடும்ப பெண்ணாய் சமையலறைக்குள் சென்றாள்.
அங்கே தயாரிப்பாளராய் வந்தவர் திரைக்கதையாசிரியர் சோமையப்பனிடம் கேட்டுக்கொண்டிருந்தார். ஏன் சார் இந்த வாய்ப்பை சந்திரசூடனுக்கு கொடுக்க சொல்லிட்டீங்க.
எனக்கு அவர்தான் குரு. சாப்பாட்டுக்கே வழியில்லாம வந்தப்ப என்னைய எழுத வச்சு வாய்ப்புகளும் வாங்கி கொடுத்தாரு. அவருக்கு நான் உதவி பண்ணறேன்னு போனா ஒத்துக்க மாட்டாரு, அதுதான் இப்படி மாத்தி விட்டேன். இனி அவர் ரெடியாகிடுவாரு..