மறு மகள்




காலில் சக்கரம்தான் கட்டிக்கலை நான், இந்த வீட்டிற்கு மாடாய் உழைச்சு தேய்கிறேனே! யாருக்காவது என் மேலே அக்கறை கொஞ்சமாவது இருக்கா?
அவங்கவங்க வேலை ஆக வேண்டும், அதற்கு நான் உழைக்கனும், என் நல்லது கெட்டது என்று ஒன்றும் கிடையாது, அப்படித்தானே?என்று ஏகமாய் பொரிந்துத் தள்ளினாள் தன் கணவன் சீனிவாசனிடம் ராதா,
பின்னே! மணமாகி வருடங்கள் உருண்டோடி விட்டது, கூட்டுக் குடும்பத்தில் விரும்பி வாழ்க்கைப்பட்டு வந்தவள்,
தன் அப்பாவை இழந்த பின் இந்த ஐந்து வருடத்தில்
அம்மா தனியாக கிராமத்தில் இருக்கின்றாள், இவளுக்கு இருக்கிற அன்றாட தொடர் வேலைகளில் கிராமத்திற்குச் சென்று தாயைப் போய் அவ்வப்போது பார்ப்பதே அரிதாகிப்போயிருந்தது.
குறிப்பாக பெண்கள் திருமணத்திற்குப் பின் என்னவோ, அத்துனை பிறந்த வீட்டு உறவுகளையும் மறந்தும் துறந்தும், அல்லது பிரிந்தும் வருவது தான் என்ன ஒரு கொடுமை?
இந்த ஒரு காரணத்திற்காகவே புகுந்த வீட்டார்கள் நன்றியோடு இருக்க வேண்டாமா?
தற்போது தாயின் உடல் நிலை சரியில்லை எனத் தகவல் வந்துள்ளது, ஒரு எட்டு பார்த்து விட்டு வரலாம் என்றால் மாமியார்,மாமனார் தனது மகனுடன் காசிக்கு யாத்திரையாக நாளை புறப்படவுள்ளனர்,சென்றால் வருவதற்கு இரண்டு வாரங்கள் குறைந்தது ஆகும்,
தன் ஒரே பிள்ளை மதனுக்கு பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடக்க இருப்பதாலும்,கூட இருந்து அவன் படிப்பதற்கு வசதியாக மாமனார், மாமியாரை காசிக்கு இதுதான் சரியான சமயம் என அவர்களை கிளப்பியதே ராதாதான்
ஒரே நாத்தி சுதா, மருத்துவம் இறுதியாண்டு படிக்கின்றாள், அவளும் அவள் படிப்பில் புலி, ஏகத்திற்கும் பிசி.
என்ன ஒரு இக்கட்டான நிலை, தாயைப் பார்ப்பதா?
மகனின் படிப்பைப் பார்ப்பதா? இவர்களின் பயணம் தடைபட நாமே காரணமாகி விடக்கூடாது என்ற தவிப்பில் உறக்கமே வரவில்லை ராதாவிற்கு.
அனைத்து வேலைகளையும் முடித்து, மருந்து மாத்திரை எல்லாம் அத்தைக்கும், மாமாவிற்கும் கொடுத்து , மீதியை ஊருக்கு எடுத்துச் செல்ல என பிரித்துக் கொடுத்து, அவர்களின் பயணத்திற்கு வேண்டிய துணிகளை எடுத்து வைத்து விட்டு, அங்கே ஒரேயடியாக குளிரும் என கம்பளி எடுத்து வைத்து, தனது அம்மாவின் உடல் நிலைப் பற்றி அவர்களிடம் சொன்னபோது,
அச்சோ! அப்படியா! உடம்பை நன்றாகப் பார்த்துக்க சொல்,
நீ வேற இப்போ போக முடியாத சூழ்நிலை, பாவம், என்று பரிதாபம் காட்டி அவர்களின் கவலையை அங்கேயே முடித்துக்கொண்டனர்.
இரவிற்கான உடை மாற்றி, சாப்பிடாமலே, படுக்கை அறை அடைந்து கணவனிடம் சொன்னதற்கு,
ம். இது வேறயா?! நாங்க எங்காவது கிளம்பினாலே பொறுக்காதே உங்க அம்மாவிற்கு? எனக் கேட்டதற்குத்தான் மேலே ராதா ஆரம்பத்தில் புலம்பியவை அனைத்தும்.
நீங்கள் கிளம்புங்கள்,
நான் போய் பார்த்துக்கொள்ள முடியலையே என்ற வருத்தம்தான், அதை கூட நான் உங்களிடம் சொல்லக்கூடாதா? என்று வருத்தமுற்று அவனுடன் ஊடினாள்.
பொழுது நல்ல படியாக விடிந்து,
காலையிலே நாத்தி சுதா தான் கல்லூரியின் மூலமாக வெளியூர் முகாமிற்குச் செல்லவேண்டி இருப்பதாக கூறி புறப்பட்டுப்போய்விட,
தனியாகத்தானே இருக்கோம், கிராமத்திற்கு போய் பார்த்துவிட்டு வந்து விடலாமே என நினைத்து கிளம்பி போய்விடாதே,
மதனின் தேர்வுகள் இருக்கு அவன் படிக்கனும் என அத்தை கூறி கிளம்பிச் சென்றிட,
இவள் மனமோ வீட்டு வேலையில் ஈடுபடவில்லை.
அண்டையர் உதவியுடன் மருத்துவமனைச் சென்று திரும்பி வந்த பின் அம்மாவிடமிருந்து வரும் செய்திக்காக காத்து இருந்தாள், இருதலைக்கொள்ளியாய் தவித்து இருந்தாள்.
மாலை வரை செய்தி எதுவும் வரவில்லை, இவள் அலைபேசியில் அழைத்துப் பார்த்த போது அம்மாவும் எடுக்கவில்லை. கவலை இன்னும் கூடிப்போனது ராதவிற்கு.
ராதவிற்கு வேலைகள் எதுவும் ஓடவில்லை, மனத்திற்கு பிடிக்காமல் கண்ணீருடன் காத்து இருந்தாள் அம்மாவின் அழைப்பிற்காக.
இரவு அம்மாவிடம் இருந்து அழைப்பு வரவே ஆர்வமாய்
ஓடிப்போய் எடுத்துப்பேசினாள்,
தான் நல்லா இருப்பதாகவும், நாத்தி சுதா இங்கே வந்து அவளை மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு சென்று காண்பித்ததாக கூறி மகிழ்ச்சியாகப் பேசினாள்.
ராதவிற்கோ ஆச்சரியம், நாத்தியிடம் அலைபேசியை தருமாறு கூறினாள்,
சுதா, என்னம்மா இது? ஏதோ கேம்ப் என்று சொன்னாயே?
பொய் சொன்னேன் அண்ணி.
இங்கேதான் கேம்ப்,
பூரணமாக அம்மா நலமான பின்தான் நான் அங்கே வருவேன், நீங்க தைரியமாக இருங்கள், என்றாள் சுதா.
எனக்காக ரொம்ப சிரமப்பட்டு இருக்கே நீ ? என சொன்னதற்கு,
இதிலே என்ன சிரமம் அண்ணி? நீங்க எங்க குடும்பத்திற்காக எவ்வளவோ தியாகம் பண்ணியிருக்கீங்க, இவ்வளவு வருடமா எங்களுக்கு வேண்டியதை வேண்டிய நேரத்திலே செய்து இருக்கீங்க, நான் கூட எங்க வீட்டாரை கவனிக்காமல் படிப்பு, படிப்பு என போனப்பிறகு எங்க அப்பா, அம்மாவை, உங்களோட பெற்றோரைப் போல நீங்க கனிவா பார்த்துகிட்டிங்க, அதை விட இது பெரியதா என்ன?
சுதா, நீ மருத்துவம் மட்டும் படிக்கலை, மனிதத்தையும் சேர்த்து படித்து இருக்கின்றாய், நல்லா இருக்கனும் நீ என மனதார வாழ்த்தினாள்.