கதையாசிரியர்: , ,
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 8, 2025
பார்வையிட்டோர்: 2,083 
 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சரண கமலங்களை ஸ்மரித்து அடியாள் எழுதிக் கொள்வது:- 

இன்று பதினைந்து வருஷங்கள் ஆகின்றன, நமக்கு விவாகமாகி. இதுவரையில் உங்களுக்கு நான் கடிதம் எழுதியதில்லை. நீண்டநாள் அருகிலேயே இருந்தேன். எவ்வளவோ விஷயங்களைப் பற்றி உங்களிடம் பேசியும் இருக்கிறேன்; நீங்களும் என்னுடன் கலந்து பேசியிருக் கிறீர்கள் ; ஒருவருக்கொருவர் கடிதம் எழுதிக்கொள்வ தற்கான சந்தர்ப்பம் மட்டும் நமக்கு ஏற்படவில்லை. 

இங்கே நான் ஸ்ரீ க்ஷேத்திரத்தை வந்தடைந்தேன். நீங்களோ சொந்த அலுவலில் ஆழ்ந்திருப்பீர்கள். நத்தை எங்காவது அதன் மேலோட்டிலிருந்து பிரிந்து வாழுமா?’ அதே போல் கல்கத்தாவை வீட்டு அரைக்கணம் நீங்கினால் உங்களுக்கு உயிர் போய்விடுமே! உங்கள் வாழ்க்கை அதோடு ஒட்டிக்கொண்டு விட்டது. 

ஆபீஸில் லீவ் என்றைக்காவது வாங்கிக்கொண் டிருக் கிறீர்களா? பகவானுக்கு அந்தமா திரி நேரவேண்டு மென்ற அபிப்பிராயமே இல்லைபோலும்! நான் இத்தனை நாள் அவரிடம் யாசித்த பிறகு அவர் என் விடுதலையின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு வீட்டார். 

நான் உங்கள் குடும்பத்தில் வாழ்க்கைப்பட வந்த நடு நாட்டுப்பெண். இந்தப் பதினைந்து வருஷகாலம் சென்ற பின்பே, இந்தக் கடற்கரையில் நிற்கும் பொழுது, ஒரு பேருண்மையைக் காண்கிறேன்; எனக்கும் இந்த உலகத் தைப் படைத்த கடவுளுக்கும் உள்ள ஸம்பந்தம் முற்றும் வேறானது. அதனாலேயே இன்று இந்தக் கடிதத்தை எழுதத் துணிந்தேன். இது உங்கள் வீட்டு நடு நாட்டுப் பெண்ணின் கடிதமன்று. 

உங்களுடன் நான் வாழ்க்கை நடத்த நேரிடுமென்று என் தலையில் எழுதிவைத்தவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத காலத்தில் – அதாவது சிறு வயசில் – – நானும், என் தம்பியும் ஒரே சமயத்தில் ஸந்நிபாத ஜுரம் கண்டு படுக்கையாகக் கிடந்தோம். என் தம்பி இறந்துபோய் வீட்டான்; நான் – பின்னர் இதையெல்லாம் அநுபவீக்க வேண்டுமே ! – பிழைத்து எழுந்தேன். எங்கள் அண்டை அயலாரெல்லாம், ‘மிருணாளினி பொண்ணோ இல்லையோ, அதுதான் பீழச்சா ! பிள்ளையாயிருந்தால் வீடுவானா யமன் -” என்று சொல்லிக் கொண்டார்கள். களவாடுவதில் யமன் கை தேர்ந்தவன்; உயர்ந்த பொருளின் மீதே அவன் நாட்டமெல்லாம். 

எனக்குச் சாவே வராது. இதைத் தெளிவாக உங்களுக்கு அறிவீக்க வேண்டியே இந்தக் கடிதத்தை எழுத முற்பட்டேன்: 

அன்று உங்கள் மாமாவும், நண்பர் நீரதரும் பெண்ணைப் பார்க்க எங்கள் வீட்டிற்கு வந்திருந்த சமயம், எனக்கு வயசு பன்னீரண்டு. மிகவும் அசௌகரிய முள்ள உள் நாட்டிலே ஒரு குக் கிராமத்தில் எங்கள் வீடு. அந்த ஊரில் பகல் வேளையிலேயே நரி ஊளையிடும். ரெயிலடியிலிருந்து ஏழு காததூரம் கட்டை வண்டியில் வந்து, அப்பால் மூன்று மையில் புழுதி நிறைந்த வழியில் பல்லக்கில் ஏறி எங்கள் ஊருக்கு வரவேண்டும். அன்று உங்களைச் சேர்ந்தவர்களுக்கு எவ்வளவோ கஷ்டம் பாவம்!” போதாக் குறைக்கு நாட்டுப்புற ரீதியில் அன்று வந்தவர் களுக்கு விருந்து நடந்தது. உங்கள் மாமா சாப்பிட்டு விட்டு, அந்தச் சமையலின் ருசியைப் புகழ்வதுபோல் இகழ்ந்ததை இன்னும் அவர் மறக்கவில்லை என்று எண்ணுகிறேன். 

உங்கள் வீட்டுப் பெரிய நாட்டுப் பெண்ணுக்கு அழகு. இல்லாக் குறையை நடு நாட்டுப் பெண்ணின் மூலமாக அகற்றவேண்டுமென்று பெருமுயற்சி எடுத்துக் கொண் டாள், உங்கள் தாய். இல்லாவிட்டால் இவ்வளவு கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு, அந்தப் பட்டிக் காட்டில் என்னைத் தேடிப்பிடிக்க வருவீர்களா? வங்காளத்தில், மகோதரம், மலேரியா, பித்தபாண்டு, விவாகமாகாத பெண்கள், இவைகளுக்காகத் தேடி அலையவேண்டிய அவசியமே இல்லை. தாமாகவே அவை எதிர்ப்படும்; பிடித்துக்கொண்டால் வீடவே விடா ! 

அப்பாவின் இருதயம் திக் திக்கென்று அடித்துக் கொண்டது; அம்மா, துர்க்கையின் நாமங்களை உச்சரித்துக் கொண்டே இருந்தாள். நகரத்திலிருந்து வந்திருக்கும் தெய்வத்தைப் பட்டிக்காட்டுப் பூசாரி எந்த மாதிரித் திருப்தி செய்வது? எங்களைச் சேர்ந்தவர்களுக்கு இருந்த நம்பிக்கை யெல்லாம், நான் நல்ல அழகியென்ற ஒரு விஷயமே. இந்த அழகை மட்டும் படைத்திருக்காத பக்ஷத்தில், பெண்ணைப் பார்க்க வந்தவர்கள் 

இடும். மதிப்பே முடிவானதாகிவிடும். ஆகவே, அழகும் குண மும் ஆயிரம் இருந்தாலும், ‘பீள்ளை வீட்டார் என்ன நினைப்பார்களோ’ என்ற பெண்டுகளுக்கு இயல்பான கவலை மட்டும் எளிதில் போகாது. 

எங்கள் வீட்டாருக்கு இருந்த ஒரு திகில் ஏன், ஊர் முழுவதுமே திகில் கொண்டிருந்தது – என் உள்ளத்தை யும் பெரும் பாறைபோல் அழுத்தியது. அன்று ஆகாயத்திலிருந்த வெளிச்சமனைத்தும், உலகில் திகழும் சக்திகள் யாவும் பன்னிரண்டு வயசுடைய ஒரு நாட்டுப் புறப் பாவையைப் பரீக்ஷகர்கள் இருவர் கண்ணெதிரே ஈவு இரக்கமின்றி கொண்டு நிறுத்தியதுபோல் இருந்தது. ஓடி ஒளிந்து கொள்வதற்கு எனக்கு இடமே அகப்படவில்லை. 

வீடும் வெளியும் புலம்ப மேளம் கொட்டியது. விவாகம் முடிந்ததும் புக்ககம் வந்து சேர்ந்தேன். எனக்கு எங்கேயாவது சொட்டையா சொள்ளையாவென்று ஆய்ந்து பெரியவர்களெல்லாரும் முடிவில் நான் அழகியென்றே தேர்ந்தனர். அதைக் கேட்டதுமே என் ஓரகத்தியின் முகம் திமுதிமுவென்றாகிவிட்டது. எதற்கு உபயோகம் இந்த அழகு என்பதைத்தான் யோசிக்கிறேன் ! அழகென்ற பொருளை, பழையகாலத்து அறிஞர் யாராவது கங்கை மண்ணைக் கொண்டு உருவாக்கி யிருந்தால், அதற்கு எவ்வளவோ ஆதரவு ஏற்பட்டிருக்கும்; ஆனால், அழகென்பதைப் பிரம்மா, தாம் பார்த்து இன்புறுவதற் காகவே படைத்தார் அல்லவா? நீங்கள் பின்பற்றும் ஓர் உலக தர்மத்தில் அதற்கு ஒரு மதிப்பாவது, விலையாவது இல்லை. 

நான் ரூபவதி யென்பதை நீங்கள் அறவே மறந்து போக நெடுநாட்கள் ஆகவில்லை ; ஆனால் எனக்கு இருந்த புத்திமட்டும், அடிக்கடி என்னைப்பற்றி உங்களுக்கெல்லாம் கவனப்படுத்திக்கொண் டிருந்தது. என்னுடன் பிறந்த அந்தப் புத்தி உங்கள் குடும்பத் தொல்லையில் இத்தனை நாட்கள் உழன்றும், இன்றைவரையில் குலையாமல் நிற்கிறது. என் தாய் எனக்குள்ள இந்தப் புத்தியின் பொருட்டே கவலை கொள்வாள். ‘மாமியார் வீட்டாருக்கும் இவளுக்கும் ஒத்துப் போகுமா?’ என்பதே அவள் அஞ்சிய தெல்லாம்.ஓர் இடத்தில் அடங்கி ஒடுங்கி நடந்துகொள்ள வேண்டியவள் தன் புத்தி ஏவியபடியே சென்றால், அடிக்கு. அடி தடுக்கி வீழ வேண்டியதுதான். ஆனால் என்ன செய்வேன் நான்? உங்கள் வீட்டு நாட்டுப் பெண்ணாய் வருபவளுக்கு அறிவு, இருக்க வேண்டிய அளவுக்கு அதிகமாகவே ஈசுவரன் கவனப் பிசகாகக் கொடுத்துவீட்டான். அதை இப்போது திருப்புவது எவ்வாறு? நீங்களெல்லாரும் என்னை அடங்காப் பீடாரி யென்று நித்தியம் இரண்டுதரமாவது ஸ்மரிக்காமல் இருக்கமாட்டீர்கள். கையாலாகா தவர்களுக்கே பிறர் மனம் வாடும்படிக் கடுத்துப் பேசுவதில் ஒருவீதத் தென்பு. அதையெல்லாம் மன்னித்துவிட்டேன். 

வீட்டுக்காரியங்களின் தொல்லைகளை மீறித் தனீயாக என்னிடம் ஒன்று வளர்ந்து வந்தது. அதை நீங்கள் ஒரு வருமே அறியவில்லை. நான் மறைவில் கவிதை இயற்றி வந்தேன். நான் எழுதியது குப்பையோ கூளமோ, உங்கள் கட்டுக்காய்தா அந்த இடத்தில் பலிக்கவில்லை. என் முழு உரிமையையும் அங்கேதான் பெற்றேன். அவ் விடத்தில் அனைத்தும் நானே. நடு நாட்டுப்பெண்ணிடம் இருக்கவேண்டிய அளவுக்குமேலாக என்னிடம் இருந்த சில அதிசய குணம் உங்களுக்குப் பிடிக்கவும் பிடிக்காது. அவ்வாறு இருப்பதாக நினைக்கவும் மாட்டீர்கள். பதினைந்து வருஷங்கள் பழகியும், நான் கவி என்பதை உங்களிடம் காட்டிக் கொள்ளவில்லை, பாருங்கள் ! 

உங்கள் வீட்டைப்பற்றி நினைக்கும்போது, எல்லா இடத்தையும் வீட எனக்குப் பளிச்சென மனத்துள் தோன்றுவது அந்த மாட்டுத்தொழுவமே. பீன் கட்டிற்குப் போகும் வழியிலுள்ள அறையொன்றில் பசுமாடு களைக் கட்டிவைப்பார்கள். எதிரே சிறு முற்றத்தைத் தவிர்த்து அவை காலாற உலவ வேறு இடமே இல்லை. அந்த முற்றத்தின் ஒரு மூலையில் மாடுகளுக்காகக் கழுநீர் கொட்டிவைக்கும் மரத்தொட்டி உண்டு. காலையில் ஆள் காரன் ஏதாவது வேலையைக் கவனிக்கப் போய்விடுவான். வயிறு சுண்டி வாடும் பசுக்கள், காலித்தொட்டியின் விளிம்பை ‘வர் வர்’ என்று நக்கிச் சுரண்டும். அப்போது என் மனசு துடிக்கும். நான் நாட்டுப் புறமல்லவா? உங்கள் வீட்டிற்கு வந்த புதிதில் அவ்விரண்டு பசுக்களும் அவற்றின் கன்றுகளுமே எனக்கு மிகவும் அறிமுகமான நண்பர்களாக இருந்தன. புது நாட்டுப் பெண்ணாக உங்கள் வீட்டில் இருந்தவரை நான் என் பசியைக்கூடக் கவனியா மல் யாருக்கும் தெரியாதபடி மறைவாகப் பசுக்களுக்கு வயிறாறத் தீனி போட்டுத் தண்ணீர் காட்டுவேன். வீட்டாருக்கு நான் பழைய மனுஷியாக மாறியபின், மாடு கன்றுகளிட்த்தில் எனக்குள்ள பற்றைக் கண்டு கேலி செய்வதே காரியமாகக் கொண்ட உங்களைச் சேர்ந்தவர்கள் என் குலம் கோத்திரத்தைப் பற்றிக்கூடச் சந்தேகப் பட்டார்கள். எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து உடனேயே இறந்துவிட்டது. என்னையும் யமன் அந்தச் சிசுவுடன் கொண்டு போவதாக இருந்தான். அதுமட்டும் உயிருடன் இருந்திருந்தால் என் வாழ்க்கையில் நான் எதைச் சிறந்ததெனப் போற்றி வந்தேனோ, எதை உண்மையெனக் கருதினேனோ அதையெல்லாம் அக் குழந்தை பின்பற்றி இருக்கும். அந்தமாதிரி நேரிடுமானால் நான் அற்பமான ஒரு நாட்டுப் பெண்ணிலிருந்து ஓர் அன்னையின் கௌரவத்தை அல்லவோ பெற்றிருப்பேன்! தன் சிறு இல்லறத்தின் நடுவே இருந்தாலும், தாய் உலகமென்னும் பேரில்லறத்திற்கும் ஒப்பற்ற அன்னையாவள். ஒரு குழந்தைக்குத் தாயாகும் துன்பத்தை அடைந்தேனே ஒழிய அன்னையாகும் வீடுதலையையும் பெற்றிலேனே ! 

ஆங்கில டாக்டர் ஒருவன் வந்து, உங்கள் வீட்டில் பெண்கள் இருக்கும் விடுதியின் அழகைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனான். பிரசவ அறை இருக்கும் ஆபா சத்தை இகழ்ந்து கூறிச் சென்றான். பார்வைக்கு, வீட் டிற்கு வெளிப்புறம் தோட்டமென்ன, உள்ளே பெரிய அறைகளில் நாகரிகமான சாமான்களென்ன, அங்கே செய் திருக்கும் ஆடம்பரங்கள் என்ன ! ஆனால் பின்கட்டோ, பகட்டான ஜரிகைச் சேலையின் மறுபக்கம்போல் இருந்தது. அந்த இடத்தைச் சீர்படுத்த யாருக்கு அக்கறை ? பாழடைந்து, அலங்காரமற்று இருந்தது. விளக்கொன்று மினுக் மினுக்கென்று எரியும். காற்று, தாராளமாக. உள்ளே வீசாமல், திருடனைப்போல் பதுங்கி எப்போதா வது நுழையும். எந்த மூலையைப் பார்த்தாலும், எத்தனை நாளைக் குப்பையோ மலையளவு சேர்ந்திருக்கும். சுவரி லும் தரையிலும் அழுக்குக் கறை ஏறியிருக்கும். அந்த வெள்ளைக்காரன், இவைதாம் எங்களையெல்லாம் இரவும் பகலும் துன்புறுத்துவன என்று தவறாக நினைத்துக் கொண்டான். ஆனால் நேர்மாறானதே அதற்குக் காரணம்! ஆதரவு இன்மையே நீறெனப் பூத்திருந்தது. அதனுள்ளே கனிந்துகொண் டிருந்தது நெருப்பு. வெளியி லிருந்து பார்த்தால் அதன் வெம்மையை எவ்வாறு உணரக்கூடும் ? தன் இடத்தில் மதிப்பு ஒருவனுக்குக் குறைவாக ஆக வீட்டில் உள்ளோர் காட்டும் இந்த அலக்ஷ்யம் அநீதமாகவே படாது. அதனால் வேதனையும் இராது. இந்தப் பெண் பிறவி துயர்கொள்ளவும் நாணு கின்றது. அதனால்தான் சொல்லுகிறேன், பெண்பாலார் துன்பத்தை அநுபவிக்க வேண்டுமென்று உங்களுக்கு இருந்தால் அதற்குத் தடை ஒன்றும் அவர்கள் சொல்ல வில்லை, ஆனால் கூடியவரையில் அவர்களுக்கு ஆதரவு காட்டவேண்டாம்; ஏனென்றால் அந்த ஆதரவே துயரின் வேதனையைப் பன்மடங்காக ஆக்கிவிடுகிறது. 

எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்; துக்கம் உண்டென்பதை நினைக்க ஒரு நாளாவது என் மனம் தூண்டவில்லை. பிரசவ அறையில் தலைமாட்டண்டை யமன் வந்து நின்றபோதுகூட மனத்தில் பயமே தோன்ற வில்லை. வாழ்வு நிலையுள்ளதா என்ன, மரணத்தைக் கண்டு அஞ்சுவதற்கு? ஆதரவைப் பெற்றவர்களுக்குத் தான் பிரிவு கஷ்டமாக இருக்கும். அன்று யமன் மட்டும். என்னைக் கொண்டுபோவதாக இருந்தால் நான் எளிதாகவே, தரையில் படர்ந்திருக்கும் புல்லைப்போல், வேருடன் பெயர்ந்து வந்திருப்பேன். வங்காள தேசத்துப் பெண்களே ஒவ்வொரு வார்த்தைக்கும் ‘சாவு வராதா?” என்கிறார்கள். ‘ஆனால் இந்த மாதிரி மரிப்பதில் என்ன இன்பமோ! உயிர் விடுவதென்றால் வெட்கமா யில்லையா?’ என்றால் எங்களால் எளிதில் ஆகக்கூடிய காரியம் அதுதான்! 

என் வயிற்றில் பிறந்த சிசு அந்தி வானில் ஒரு தாரகைபோல் தோன்றி மறைந்து விட்டது. அப்புறம் என்றும்போல் வீட்டு வேலையிலும் மாடு கன்றுகள் பேரிலும் கவனம் செலுத்தலானேன். என் வாழ்நாள் இவ்வாறே முடிவடைவதாக இருந்தால் உங்களுக்கு இந்தக் கடிதத்தை வரையவேண்டிய அவசியமே ஏற்பட் டிராது. ஆனால் காற்று கண்ணுக்குத் தெரியாமல் ஒரு சிறு வீதையைக் கெட்டித் தரையில் எப்படியோ ஊன்றி விடுகிறது. ஓர் அரசங்கன்று சிறிது நாளைக்கெல்லாம். தலை காட்டுகிறது. முடிவில், செங்கற் சுவரையும் பிளந்து கொண்டு கட்டிடத்தையே அழித்துவிடுகிறது. என் வாழ்விலும் பலமான கட்டுத் திட்டங்களுக்கிடையே சுதந்திரத்தின் பொறியொன்று எங்கிருந்தோ பறந்து வந்தது. அதற்குப் பிறகே ஆரம்பித்தது இந்தச் சிதைவு. 

என் ஓரகத்தியின் தங்கை பீந்து ; அவளுடைய விதவைத்தாய் இறந்த பின்பு, சிறிய தகப்பனார் வீட்டில் சிலகாலம் இருந்தாள். அங்கே உள்ளவர் செய்யும் துன்பங்களைத் தாளமுடியாமல் தமக்கையிடம் வந்த டையும்போது நீங்களெல்லாரும், ‘இதென்ன ஸங்கடம் என்று எண்ணிக் கொண்டீர்கள். என் பாழும் சுபாவம் வெறுமே இருக்கவில்லை. நீங்களெல்லாரும் வெறுப்படைந் திருப்பதைப் பார்த்து, அந்தத் திக்கற்ற பெண்ணின் பக்கம் என் மனம் கச்சை கட்டிக்கொண்டு எழுந்தது. பிறர் அகத்தில் அவர்களது விருப்பமின்றி அடைக்கலம் புகுவது பெரிய மானக்கேடான காரியம் அல்லவா ! வேறு வழியில்லாமல் தமக்கையின் ஆதரவை நம்பி வந்தவளை உதைத்துத் தள்ளிவிடுவதா தர்மம் ? 

அப்புறம் என் ஓரகத்தியின் நிலையைக் கவனிக்கலா னேன். அவளும், தன் தங்கையை வேறு வழியில்லாமல் தன்னிடம் அழைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் அவளுடைய கணவனுக்கு அது இஷ்டமில்லை யென்பது தெரிந்தவுடன் அவளும் பெருத்த சங்கடத்துள் ஆழ்ந்தாள்; தங்கையை அப்புறப்படுத்தினால் போதும் என்றாகிவீட்டது அவளுக்கு. திக்கற்ற தன் தங்கையை மனமார்ந்த அன்புடன் ஏற்றுக்கொள்ளும் துணிவு அவ ளிடத்தில் இல்லையே! பாவம், அவள் அகமுடையானுக்கு அடங்கியவள் அல்லவா, பதிவிரதை! 

ஓரகத்தி படும் அல்லலைப் பார்த்து என் மனம் கேட்கவில்லை. அவள் வீட்டில் எல்லோரையும் சற்று அதிகமாக உபசரிக்கத் தொடங்கினாள். தன் தங்கைக்குத் தின்பதற்கு மிகுந்த சோற்றையும், உடுப்பதற்கு மட்டரகச் சேலையையும் கொடுத்து, வீட்டில் வேலைக்காரி செய்யும் வேலைகளை யெல்லாம் அவளுக்கே இட்டாள். இதையெல் லாம் பார்த்த எனக்குத் துக்கம் மட்டும் அல்ல, அவமானமும் உண்டாயிற்று. இந்த மாதிரிச் செய்தாவது தன் தங்கையின் சுமையை வீட்டார் உணராமல் மழுப் பலாமென்று நினைத்தாள், பாவம் ! தாராளமாக அக்கா வேலையிடுவாள். அந்தப் பெண்ணின் பாடு நாய் உழைப் புத்தான். அவள் பதிலுக்குப் பெறுவதென்னவோ மிகவும் அற்பமானது : சோறு, துணி. அன்புக்கு எங்கே போவது? 

என் பெரிய ஓரகத்தி நல்ல வம்சத்தில் வந்தவளென் பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. பரம ஏழை; அழகி லும் உயர்வல்ல. என் மாமனாரின் காலைக் கீலைப் பிடித்துக் கொண்டதன்பேரில், உங்கள் வீட்டில் ஒரு நாட்டுப் பெண்ணாக அவள் வரமுடிந்தது. அவளுக்கும் தெரியும். அது. இந்தப் பெரிய இடத்தில் தனக்கு விவாகமானதே. விலக்கமுடியாத பெருங்குற்றமென அவளே நெடுநாட் களாக எண்ணிக்கொண் டிருக்கிறாள். அதனாலேயே வீட்டு விஷயங்களில் மேலாக ஓங்கி நிற்காமல் ஒடுங்கியிருக்கிறாள். 

ஆனால் அவள் இப்படி இந்த ஸாத்வீகமாக நடந்து கொள்வது எங்களுக்கெல்லாம் பெருந் துன்பத்தை விளைவித்தது. எந்த விஷயத்திலும் என்னை இழிவு படுத்திக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. நல்ல தென்று தோன்றியதை வேறு யாருக்காவது பயந்து அது நல்லதல்ல என்று சொல்வது என் சுபாவத்திலேயே இல்லை. இதற்கான அத்தாட்சியை எவ்வளவோமுறை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 

பீந்துவை – அந்த அநாதைப் பெண்ணை – நான் அழைத்துக்கொண்டேன். அப்போது நாத்தனார், “பாவம், இவளுக்கு அந்த ஏழை வீட்டுப்பெண்மேல் ஆசைசொட்டி வழிகிறது!” என்றாள். நான் என்னவோ வீட்டிற்குப் பெரிய ஆபத்தைக் கொண்டுவைத்துவிட்ட மாதிரி அவள் எல்லாரிடமும் இந்த ஸமாசாரத்தை வீதைக்க ஆரம்பித்து விட்டாள். 

இப்போது தப்பெல்லாம் என் ஒருத்தி தலையில் வடிந்தது. தன் சொந்தத் தங்கைமேல் பகிரங்கமாக அன்பு செலுத்தாத என் ஓரகத்தி என் மூலமாக அந்த ஏக்கத்தைக் கொண்டவுடன் அவள் மனம் லேசாகியது. என் ஓரகத்தி பிந்துவின் வயசை இரண்டு மூன்று வருஷங்கள் குறைத்தே சொல்லுவாள். ஆனால் அந்தப் பெண்ணுக்கு என்னவோ பதினாலுக்கு மேலே இருக்குமே ஒழியக் குறைவீல்லை. அதைச் சில காரணம்பற்றி அவள் ஒளித்துக் கூறுவதிலும் தப்பில்லை. பார்வைக்கு அப்படிக் கோரமில்லை அந்தப்பெண். உங்களுக்கும் தெரியும். ஆனால் அவள் தவறிக் கீழே வீழுந்து தலையை உடைத்துக் கொண்டால், “ஐயோ, பட்டான தரை பிளந்து போய் விட்டதே” என்று வீட்டு மனிதர்களுக்கெல்லாம் ஆத்திரம் வரும். ஓர் இடத்தில் கட்டிக் கொடுத்து விடலாமென்றால், அப்பாவோ, வேறு யாருமோ இல்லை அவளுக்கு. தானே வலியவந்து அவளை மணந்து கொள்பவன் யார்? 

பீந்து, அதிகக் கூச்சத்துடனேயே என்னிடம் வந்தாள். தன் உடம்பு என்மேல் பட்டால் நான் சகிப் பேனோ மாட்டேனோ என்ற தயக்கம் அவளுக்கு. இந்த விசாலமான உலகில் பிறக்கக்கூடத் தனக்கு யாதோர் அதிகாரமும் இல்லையோ வென்று அவள் தன் நிழல் எவர் மீதும் படாமல் கண் மறைவாகவே இருந்து வந்தாள். வீட்டின் ஒரு மூலை குப்பை நாள்கணக்காகக் குவிந்து இருந்தால் அதை யாரும் கவனிப்பதில்லை; ஆனால் அந்தத் திக்கற்றபெண் யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் ஒரு பக்கமாக விழுந்து கிடப்பதுதான் எல்லாருடைய கண்களையும் உறுத்தியது. குப்பைக்கு இருந்த இடங்கூட அவளுக்கு இல்லையே ! அவள் சிற்றப்பா பிள்ளைகளான ஒன்றுவீட்ட சகோதரர்கள் மட்டும் உலகத்தில் என்ன சாதித்துவிடப் போகிறார்களோ தெரியவில்லை? அவர்களுக்கு ஒரு கேடும் இல்லை; பச்சென்றுதான் இருக்கிறார்கள். 

பீந்துவை என் நிழலில் அழைத்துக்கொண்டபோது, அவளுடைய மார்பு படபட வென்று அடித்துக் கொண்டது. அவ்வளவு பீதி, பாவம்! அதைப் பார்த்து எனக்குத் துக்கம் பொங்கி எழுந்தது. “அம்மா, நிற்பதற்கு உனக்கு எங்கேயும் துளி நிழல் இராது போனாலும் நான் இருக்கும் வரையில் உனக்கு ஒரு குறைவும் இல்லை. என் இடத்தில் இரு” என்று ஆறுதல் கூறினேன். 

ஆனால் என் வீடு என் ஒருத்திக்குச் சொந்தமில்லையே! இதனால் நான் துணிந்து செய்வது சற்றுக் கடினமாகவே இருந்தது. நாலைந்து நாட்கள் என் அருகிலேயே இருக்கும்போது பிந்துவின் கன்னங்களில் தழும்புபோல் செக்கச் செவேலென என்னவோ தோன்றியது. ஏதாவது கட்டி வெடிப்பாக இருக்கும். உங்கள் வீட்டாரெல்லாம், அதைப் பெரியம்மையென்றே வைத்துவீட்டார்கள். கற்றுக்குட்டி வைத்தியனொருவனை அழைத்து வந்து காண்பித்தீர்கள். இன்னும் இரண்டொரு நாட்கள் போனால்தான் தெரியுமென்று அவன் சொல்லிவிட்டான். 

அந்த இரண்டு நாட்கள் தாம் ஏன் பொறுத்துக்கொண்டு இருக்கப் போகிறீர்கள்? தனக்கு நோய்வந்து வீட்டதே என்று பிந்து மானக்குறைவினால் வெந்து போனாள். “பெரியம்மை வந்தால்தான் என்ன, நான் அவளைப் பிரசவ அறையில் தனியாக வைத்துக்கொள்ளுகிறேன். அவளால் உங்கள் யாருக்குமே தொந்தரவு வேண்டாம்” என்று அவள் பக்கமாக நான் பேசியபோது என்னை எல்லாரும் மூஞ்சியால் அடித்தீர்கள்; பீந்துவீன் தமக்கை கூட மிகவும் வெறுப்புற்றவள்போல், “இந்தச் சனியனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் தொலைத்து விடுகி றேன்” என்றாள். இப்படி இருக்கும்போது பிந்துவின் கன்னங்களில் இருந்த சிவப்புத் தழும்பு திடீரென்று மறைந்து போய்விட்டது. அதைப் பார்த்ததும் நீங்கள் பின்னும் முணு முணுத்தீர்கள். “நிச்சயமாக, அம்மை தான் வந்து அப்புறம் இறங்கிவிட்டது !” என்றீர்கள். அவள் பிந்து அல்லவா? ஏழைக்குத் தெய்வமே துணை ! 

ஆதரவின்மையின் நடுவில் வளர்வது ஒரு விசேஷ குணமென்றே சொல்லவேண்டும். அந்நிலையில் உள்ள வரின் சரீரம் எதையும் சகித்துச் சகித்து வயிரமாகி வீடு கிறது. அவர்களை நோய்நொடி அண்டுவதில்லை. யம லோகத்திற்குப் போகும் வாசல்கூட அவர்கள் வரையில் அடைபட்டு விடுகிறது. பிந்துவுக்கு நோய் மேலாக வந்து. பயமுறுத்திவிட்டுப் போய்விட்டது. இதிலிருந்து எனக் குப் புதிய ஞானம் உதயமாயிற்று. உலகத்தவர்கள் கிள்ளுக் கீரையாக நினைக்கும் ஓர் ஆத்மாவைக் காப்பது எவ்வளவு கடினமான காரியம், அப்பா ! இடங் கொடுத்து ஆதரிக்க நாம் எவ்வளவு முயற்சிகள் செய்கிறோமோ அவ்வளவு பிரதிகூலங்கள் இழைப்பாரும் இருக்கிறார்கள், இந்தப் புண்ணிய பூமியில். 

என்னிடத்தில் பிந்துவுக்குப் பயம் தெளிந்துவிட்டது. என்மேல் அவள் அதிகப் பற்றுதல் கொள்வதைப் பார்த்து எனக்குத் திகில் மூண்டது. அம்மாதிரி ஓர் ஆசையின் உருவை நான் இதுவரையில் கண்டதேயில்லை. புஸ்தகங்களில் படித்திருக்கிறேன், கணவன் மனைவீ யரிடையே தான் அவ்வாறு தோன்றும் என்று. என் அழகைக் கண்டு நானே மயல்கொள்வதற்கு அவகாசமே ஏற்படவில்லை. என் சுந்தர வடிவமே, இந்தக் குரூபியின் மனத்தைக் கவர்ந்துவிட்டது. ‘அக்கா, உன் முகத்தை என்னைத் தவிர வேறு யாராவது கண்டு இன்புற்று இருக் கிறார்களா?” என்பாள் அவள். என் கூந்தலை நானே வாரி முடிந்து கொள்ளும்போது அவளுக்கு என்மேல் ஊடல் உண்டாகி விடும். என் கூந்தலின் சுருளை இரண்டொரு தரம் தொட்டுத் தடவீப் பார்த்த பிறகுதான் அவ ளுடைய மனம் சமாதானம் அடையும். எங்காவது போவதாயிருந்தால்தான் நான் அலங்காரம் செய்துகொள் வது வழக்கம். ஆனால் பீந்து ஒருநாள் வீடாமல் என்னைப் பலவிதமாகச் சிங்காரித்து அழகு பார்ப்பாள். வெறி பிடித்தவள்போல் என்னை நேசித்தாள் அந்தப் பேதை. 

உங்கள் வீட்டின் பின்கட்டில் பேருக்கு ஒரு துண்டு மண் தரைகூட இல்லை. சுவர் ஓரமாகச் செல்லும் சாக் கடையின் பக்கத்தில் தப்பித் தவறிப் புல்லாந்திச்செடி ஒன்று வளர்ந்திருந்தது. அது செந்தளிர் விட்டுப் பூமியில் வஸந்த காலத்தின் வருகையை அறிவித்தது. என் வீட்டு வேலைக்கிடையில் எல்லோருடைய இகழ்ச்சிக்கும் இலக் கான அந்தப் பேதை, பிந்துவின் மனத்துள்ளும் இள வேனிலின் சாயல் படிந்தது. புற உலகைத் தவிர்த்து அக உலகிலும் இளந்தென்றல் உலவுமென்பதை அன்றுதான் அறிந்தேன். எந்த ஸ்வர்க்கத்திலிருந்து அந்தப் புளகம் மெல்ல வருமோ? எங்கள் வீட்டுச் சாக்கடைச்சந்து வழியாக வரவில்லை; அது மட்டும் நிச்சயம். பீந்து காட்டிய அன்பின் வேகம் என்னைச் சஞ்சலத்திற்கு உள் ளாக்கியது. சிற்சில சமயம் அவள் மீது எரிச்சல்கூட வரும் எனக்கு ; அதை மறைப்பானேன்? ஆனால் அந்தப் பேரன்பின் மூலமாக என் வாஸ்தவமான உருவத்தை நான் கண்டறிந்தேன்: என் வாழ்வீல் ஒருநாளும் தோன்றாத ஓர் உருவம் – என் விடுதலையின் உருவம்! 

இந்தப் பக்கம், பீந்துவைப் போன்ற ஓர் அநாதைப் பெண்ணுக்கு நான் பரிவது உங்களுக்கெல்லாம் வீரஸமாக இருந்தது. இதற்காகப் புருவத்தைச் சுளித்துக் கொள்ளு வது, வெடுக்கெனப் பேசுவது, இன்னும் எவ்வளவோ கூத்து! என் வங்கி களவு போனபோது, பிந்துவுக்குத் தான் கை நீளமென்று அவள் மேல் அடாப்பழி சுமத்தி னீர்கள் ! தேசீய இயக்கத்தின்போது உங்கள் வீட்டைப் போலீஸார் சோதனை போட வருகிறார்களென்று வைத் துக் கொள்வோம். பிந்துவை அவர்கள் ஏவிய வேவுகாரி யென்றுகூட வாய்கூசாமல் சொல்லியிருப்பீர்களே ! அதற்கு அத்தாட்சி வேண்டியதே இல்லை; பிந்து அநாதை அல்லவா? அவள் எந்தப் பழியையும் ஏந்திக் கொள்ளக் கூடியவள்! 

பிந்து ஏதாவது காரியம் செய்யச் சொன்னால் உங்கள் வீட்டு வேலைக்காரிகள் உடனே மறுத்து விடுவார்கள். அவள் அதற்குமேல் அவர்களுக்கு வேலையிடத் துணிய மாட்டாள். இந்தக் காரணங்களினால் அவள் பொருட்டு எனக்குச் செலவு சிறிது அதிகரித்தது. தனியாக ஒரு பணிப்பெண்ணை அமர்த்திக் கொண்டேன். அது உங்க ளுக்கு ஸம்மதப் படவில்லை. பிந்துவுக்கு இரண்டு துணி மணி வாங்கித் தருவதைக் கவனித்ததும், நீங்கள் எனக்குக் கைச் செலவுக்காகக் கொடுக்கும் பணத்தையும் நிறுத்தி வீட்டீர்கள். இதற்கு அடுத்த நாளே நான் வீலை குறை வுள்ள மோட்டாப் புடைவையையே உடுத்த ஆரம்பீத்து விட்டேன். என் எச்சில் இலையை நானே எடுத்து வெளியே கொண்டுவந்து பசு மாட்டுக்குப் போடுவேன். குழாயின் பக்கம் போய் என் பாத்திரங்களை நானே துலக்கிக் கொள்வேன். ஒரு நாள் தற்செயலாக நீங்கள் என்னிடத்தில் இந்தப் புது மாறுதலைக் கண்டு சந்தோஷம் கொள்ளவில்லை. என்னைப் பார்த்து நீங்கள் சந்தோஷம் அடையாது போனாற் போகிறீர்கள் – உங்களை மகிழ்விக்க வேண்டுமென்ற நற்புத்தி இதுவரையில் எனக்குத் தோன்றவில்லையே ! என்ன செய்வேன் ? 

உங்களுக்கெல்லாம் கோபம் என்மேல் மிகுதியாக ஆக, பிந்துவுக்கு வயசும் வளர்ந்துகொண்டே வந் தது. இயற்கையின் செயலைப் பார்த்து மானிட இயல்பீற்கு மாறான துவேஷம் கொண்டீர்கள். பிந்துவை நீங்கள் பலவந்தமாக வீட்டைவீட்டு அப்புறப்படுத்தியிருக்கலாம்; ஆனால் ஏனோ அவ்வாறு செய்யவில்லை? அதுதான் இன்றளவும் எனக்கு அதிசயமாயிருக்கிறது. என்னிடத் தில் உங்களுக்கெல்லாம் உள்ளுற அச்சமென்பதை அறிவேன். பிரம்மா எனக்குப் புத்தியும் தந்திருக்கிறார்; மனசினுள்ளாவது அதை நீங்கள் பாராட்டாது போனால் மண்டை வெடித்து வீட்டிருக்குமே ! 

கடைசியில், பீந்துவை உங்கள் சொந்தச் சக்தியினால் கிளப்ப முடியாமல் போகவே, வீவாகதேவதையிடம் சரண் புகுந்தீர்கள். பிந்துவுக்கு வரன் நிச்சயமாகி விட்டது. பெரிய ஓரகத்தி ஆறுதலுடன் பெரு மூச்செறிந்து, “பிழைத்தேன் ! அந்த ஈசுவரிதான் எங்கள் வம்சத்தின் மானத்தைக் காப்பாற்றினாள்” என்றாள். 

மணமகன் பார்வைக்கு எப்படி இருப்பானோ, எனக்குத் தெரியாது. நல்ல ஸம்பந்தமென்று சொல்லிக் கொண்டீர்கள். பிந்து என் கால்களைப் பிடித்துக்கொண்டு விக்கி வீக்கி அழத் தொடங்கினாள்; “அக்கா, எனக்கு எதற்காக, இந்தக் கல்யாணம்?” என்றாள். 

“பிந்து! பயப்படாதே, அம்மா. உனக்கு வாய்க்கும் புருஷன் நன்றாக இருப்பானாம்” என்று அவளுக்கு நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். 

“அவர் நன்றாக இருந்தால் என்ன? அவர் கண் களுக்குப் பிடித்திருக்கும்படி என்னிடத்தில் என்ன இருக்கிறது ?” என்று கூறியதும் அவள் மார்பு விம்மியது. 

பிள்ளைவீட்டார் ஒப்புக்காவது பெண்ணைப் பார்க்க- வரவேண்டாமா ? வரவே இல்லை! இதனால் அவளுடைய அக்காவுக்கு நிம்மதி ஏற்பட்டது. பிந்துவைப் பார்த்து விட்டு அவர்கள் சம்மதிக்காது போனால் என்ன செய்வ தென்ற திகிலே ! 

பீந்து இரவு பகலாய்க் கண்ணீர் பெருக்கியவாறே இருந்தாள். அவளை வருத்திய கஷ்டம் என்னவென்பது எனக்குத் தெரியும். பிந்துவின் பொருட்டு நான் உங்கள் வீட்டாருடன் எவ்வளவோ சச்சரவு இட்டிருக்கிறேன். அவளுடைய விவாகத்தை நிறுத்தி வைக்க எனக்குத் துணிவு உண்டாகவில்லை. எந்த அதிகாரத்தைக் கொண்டு. நான் இதைச் செய்வது ? நான் இறந்து போனபின் அவளுடைய நிலை என்னவாகும்? 

அவளோ பெண் – அதனுடன் குரூபி; நிறம் கறுப்பு- எந்த இடத்தில் வாழ்க்கைப்படுகிறாளோ? அவள் கதி என்ன ஆகுமோ? – இதையெல்லாம் நினைத்து என்ன பயனென்று சும்மா இருந்தேன். ஆனால் என் இருதயம் மட்டும் அநுதாபத்தால் அடித்துக்கொண்டது. 

“அக்கா, கல்யாணத்துக்கு இன்னும் ஐந்தே நாள் இருக்கிறது; அதற்குள் எனக்குச் சாவு வராதா?” என்பாள் பீந்து. பாவம்! அவளை நான் கோபித்துக் கொண்டேன். ஆனால் என் நெஞ்சில் நிறைந்தவனுக்குத் தான் இது தெரியும்; பிந்துவுக்கு அதற்குள் சுகமரணம் ஏற்பட்டிருக்கும் பக்ஷத்தில் கட்டாயம் பரம திருப்தியையே அடைந்திருக்கும் என் மனம். 

விவாகத்திற்கு முந்தினநாள் பிந்து தன் சகோ தரி யிடம், “அக்கா, உன் வீட்டில் மாட்டுத் தொழுவத்தி லாவது, விழுந்து கிடக்கிறேனே ! எந்த ஈன வேலை இட்டாலும் செய்கிறேனே ! காலில் விழுந்து கேட்கிறேன்; இப்படி என்னைத் தள்ளிவிடாதேயேன்” என்று வேண்டிக் கொண்டாள். 

சில நாட்களாகவே தமக்கையும் மறைவாகக் கண்ணீர்விட்டு அழுதுகொண் டிருந்தாள். அன்றும் அவ் வாறே கண்ணீர் பெருக்கினாள். உள்ளம் என்பதைத் தவிர, சாஸ்திரம் என்று ஒன்று இருக்கிறதே ! என்ன செய்வாள் பாவம், என் ஓரகத்தி ? 

“அம்மா பீந்து, கணவனால்தானே பெண்களுக்குக் கதிமோக்ஷம் – தலை எழுத்து, துக்கம் அனுபவிக்கவேண்டு மென்று இருந்தால் யாரால் தடுக்கமுடியும், அம்மா !” என்று புத்தி புகட்டினாள். இதன் முடிவென்ன? பிந்து மீள்வதற்கு ஒரு வழியும் இல்லை ; பிந்து விவாக பந்தத்துள் சிக்கித்தான் ஆகவேண்டும். அதற்குமேல் வீதிப்படி எல்லாம் நடக்கும். 

என்னால், முடிந்தவரையில் அவளுடைய கல்யாணத்தை நம் வீட்டிலேயே நடத்தப் பாடுபட்டேன். “அது சரியல்ல; பீள்ளையின் வீட்டிலேதான் நடக்கவேண்டும்” என்று நீங்களெல்லாரும் முரணாகப் பேசினீர்கள். 

பிந்துவின் விவாக நிமித்தம் நீங்கள் பணம் செலவழித் திருந்தால், கட்டாயம் உங்கள் குலதெய்வம் கோபித்துக் கொண்டு மலையேறிவிட்டிருக்கும். நல்ல காலம், அப்படி ஒன்றும் நிகழவில்லை. என் ஓரகத்திக்குத் தெரிவித் திருந்தால் அவள் நடுங்கிப் போய்விட்டிருப்பாள்; என் நகைகளில் சிலவற்றைப் பிந்துவுக்கு அணிவீத்தேன். அவள் கண்ணில் அவை படாது போயிருக்குமா? கவனித் தாலும் கவனியாததுபோல் இருந்துவிட்டிருப்பாள். உங்கள் சநாதன தர்மத்தின்மீது ஆணையிட்டுச் சொல்லு கிறேன்! அந்தக் குற்றத்திற்காக அவளை மன்னித்து விடுங்கள். 

போகும்போது பிந்து என்னை அணைத்துக்கொண்டு, “அக்கா, என்னை என்றென்றும் துறந்து விடுவாயா ?” என்றாள். 

“அப்படி ஒன்றும் இல்லை, என் பிந்து ! உனக்கு. எந்தக் கஷ்டம் வந்தாலும் உன்னைக் காட்டிக்கொடுப் பேனா ?” என்றேன். 

மூன்று நாட்களாயின. உங்கள் ஜமீன் குடிமக்கள் சிலர் யஜமானர்களைப் பேட்டி காண வந்திருந்த சமயம் . காணிக்கையாக ஓர் ஆட்டுக்கடாவை ஸமர்ப்பித்தார்கள். அகாதமான உங்கள் வயிற்றுப் பசியைப் போக்கவந்த அந்த ஜீவனைக் காப்பாற்றிக் கட்டை, கரி நிரப்பிவைக்கும் அறையில் மறைத்துவீட்டேன். காலையில் எழுந்ததுமே . முதல் காரியம் அதற்குத் தழை கொண்டு போடுவேன். இரண்டொருநாள் உங்கள் வேலைக்காரர்களை நம்பியிருந்தேன். அவர்களோ தீனி போடுவதைவிட அதைத் தின்றுவிடுவதிலேயே கருத்தாய் இருந்தனர். 

ஒருநாள் அதிகாலையில் அவ்வறையில் நுழையும் போது பீந்து, ஒரு மூலையில் சுருட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டேன். என்னைப் பார்த்த மாத்திரம் கால்களை இறுகப் பீடித்துக்கொண்டே எதுவும். பேசாமல் தேம்பித் தேம்பி அழுதாள். 

பிந்துவின் கணவன் பைத்தியம்!

“நிஜமாகச் சொல்லு, பீந்து ?” என்றேன். 

“நான் உன்னிடத்தில் பொய் சொல்லுவேனா, அக்கா? அவருக்குப் பைத்தியந்தான்! மாமனாருக்கு இந்த விவாகத்தில் துளிக்கூட இஷ்டமில்லை ; ஆனால் என்ன செய்வார்? யம கா தகியான என் மாமியாரிடத்தில் அவ ருக்குப் பயம். கல்யாணத்திற்கு முன்பே காசிக்குப் போய். விட்டார். தன் பிடிவாதத்தைச் சாதிக்க மாமியார் பிள்ளைக்கு விவாகம் செய்தே முடித்தாள்” என்றாள். 

நான் கரிக்குவியல்மீது உட்கார்ந்துவிட்டேன். பெண் களுக்குத் தம் இனத்தாரிடத்திலேயே கருணை இல்லை. கேட்டால், ஸ்திரீ ஜன்மந்தானே என்கிறார்கள். தன் பீள்ளை பைத்தியமா யிருந்தாலும் ஆண் மகன் அல்லவா? 

பீந்துவின் கணவன் எப்போதுமே பைத்தியம் பிடித்து அலைகிறானென்று சொல்வதற்கில்லை. ஒவ்வொரு நாள் யாருக்குமே அடங்காமல் வெறி மூளும். அப்போது அவனை ஓர் அறையில் தள்ளிப் பூட்டிவிடுவார்கள். விவாக தினத்தன்று இரவு அவன் தன் ஸ்வாதீனத்தில் தான் இருந்தான். இரவு கண் வீழித்ததன் பயனாக மறுநாள் மூளை கலங்கிவிட்டது. பிந்து மத்தியான்னம் சாப்பிட உட்கார்ந்த சமயம் அவன் வெறிகொண்டு அவள் புசிக்க இருந்த சோற்றை அது வைத்திருந்த பித்தளைத் தட்டோடு வெளியே வீசி எறிந்துவிட்டான். திடீ ரென்று, பீந்து பெரிய ராணியென்றும் அவள் தங்கத் தட்டைப் பரிசாரகன் திருடிக்கொண்டு வேறு ஏதோ ஒன்றை அவளுக்கு வைத்துவிட்டானென்றும் தோன்றி விட்டது அவன் மனசில்; அதனால்தான் அவ்வளவு “கோபம். பிந்து அதைக் கண்டு நடுநடுங்கிப் போனாள். மூன்றாவது நாள், மாமியார் அவளைக் கணவனுடைய அறையில் படுத்துக் கொள்ளும்படி உத்தரவிட்டதைக் கேட்டதும் உயிரே ஒடுங்கியது போல் ஆயிற்று. மாமி யாரோ காளி! கோபம் வந்துவிட்டால் தன்னையே மறந்து விடுவாள். அவளும் பைத்தியந்தான்; அரைகுறை ஆனதால் பின்னும் பயங்கரமானது; பிந்து அறையில் நுழைய வேண்டியதாயிற்று. அன்று அவள் கணவன் சற்றுத் தணிந்தே இருந்தான். ஆனால் திகிலினால் பிந்துவின் சரீரம் கட்டையைப்போல் உணர்வை இழந்தது. கணவன் நன்றாகத் தூங்கும் சமயமாகப் பார்த்து அவள் வெகு சாமர்த்தியமாக ஓடி வந்து .விட்டாள். அதை விவரிப்பது இங்கே அநாவசியம். 

அசூயையும் கோபமும் கலந்து வரவே என் உடல் கொதிக்கத் தொடங்கியது ; “உன்னை ஏமாற்றி நடத்திய இந்த விவாகம் விவாகமே அல்ல. பிந்து, நீ முன்பு எப்படி இருந்தாயோ அதே மாதிரி என்னிடமே இரு. உன்னை அழைத்துப்போக எவனுக்கு அவ்வளவு மண்டை உறுதி  இருக்கிறதோ பார்க்கலாம்!” என்றேன். 

“பீந்து சொல்வது அவ்வளவும் பொய்” என்று நீங்கள் எல்லாரும் சேர்ந்துகொண்டு சொன்னீர்கள். 

“அவள் பொய் சொல்லுவாளென்றால் நான் நம்பவே மாட்டேன்” என்றேன். 

“எப்படி உனக்குத் தெரியும் ?” என்று குறுக்குக் கேள்வி கேட்டீர்கள். 

“எனக்குத் தெரியும்; அதுவே போதும்” என்றேன் உறுதியை வீடாமல். 

அப்புறம் பிந்துவின் கணவன் வீட்டார் போலீஸ் கேஸ் தொடுப்பார்கள் என்று பயமுறுத்திப் பார்த்தீர்கள். “ஏமாற்றி, ஒரு பைத்தியக்காரனுக்கு அவளைக் கொண்டு மடுத்தார்களே, அது நியாயமா? கோர்ட்டு அவர்களுக்கு மாத்திரமா இருக்கிறது?” என்றேன். 

“இதற்காகக் கோர்ட்டுக்குப் போய் நாலு பேர் சிரிக்க வேண்டுமா? அவளைப்பற்றி நாம் தலைைைய உடைத்துக் கொள்வானேன்?” என்றெல்லாம் வாது செய்தீர்கள். 

“என் சொந்த நகைகளை விற்றுச் செலவு செய்து, இது நியாயமா, அநியாயமா என்பதைப் பார்த்து வீடுகிறேன்” என்றேன். 

“வக்கீல் வீட்டுக்குப் பத்துத் தடவை நீ நடந்து எங்கள் மானத்தை வாங்க வேண்டுமா ?” என்று கூறினீர்கள். 

இதற்குப் பதில் தரவில்லை நான். நெற்றியில் படீர் படீரென அறைந்து கொள்வதைவிட வேறு எதைச் செய்வது ? பிந்துவின் புக்ககத்திலிருந்து அவளுடைய பெரிய மைத்துனர் வந்து வெளிப்பக்கம் பலத்த கூச்சல் போட்டுக்கொண் டிருந்தார். “இதோ பார், போலீஸாரை அழைத்து வருகிறேன்” என்று மிரட்டினார். 

அப்போது எனக்கு எங்கிருந்துதான் அப்பேர்ப்பட்ட தைரியம் வந்ததோ ? கசாப்புக்கடைக் கத்திக்கு உயிர் தப்பி என்னை அடைந்த ஒரு ஜீவனை, மிரட்டல் உருட் டலுக்குப் பயந்து மறுபடியும் கசாப்புக்காரனிடமே கொடுத்துவிடுவேனா? எதற்கும் சளைக்காமல் நான், “உங்கள் சாமர்த்தியத்தைத்தான் பார்க்கிறேனே ! போய்ப் போலீஸாரை அழைத்து வாருங்கள்” என்றேன். இதைக் கூறிவீட்டு, பிந்துவை என் அறையிலேயே பாது காப்புடன் வைக்க யோசனை செய்துகொண்டு அவளைத் தேடப்போனேன். ஆனால் அவள் காணவில்லை. உங்களுடன் நான் விவாதித்துக்கொண் டிருந்த சமயம் பார்த்து, அவள் தானாகவே வெளியே வந்து மைத்துனரிடம் அகப் பட்டுக் கொண்டாள். இந்த வீட்டில், தான் இருந்தால் எல்லாருக்கும் கஷ்டம் விளையுமென்று அறிந்தாள். நடுவில் ஓடிவந்து பீந்து தன் துன்பத்தைப் பின்னும் பெருக்கிக் கொண்டாள். “என் பிள்ளை ராக்ஷஸனா என்ன, அப்படி. அவளைக் கடித்துத் தின்றுவீட? உலகத்தில் எவ்வளவோ குடும்பங்களில் கெட்ட பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர் களுக்கு என் பிள்ளை மாணிக்கமென்று சொல்ல வேண்டும்.”-இது அவளுடைய மாமியாரின் வாதம். 

“அவளுடைய அதிருஷ்டம் சப்பை. அதற்காக. வருந்தி என்ன பலன் ? பைத்தியமோ பீசாசோ, அவன் எப்படியிருந்தாலும் கணவனல்லவா?” என்று தன் கருத்தை வெளியிட்டாள் என் பெரிய ஓரகத்தி. 

குஷ்டரோகியான தன் கணவனை ஒருத்தி வேசி வீட்டிற்குத் தானே அழைத்துச் சென்றாளாம். பெண்க. ளெல்லாரும் அந்தமாதிரி ஸதீமணிகளாக இருக்க வேண்டும் என்பதுதானே உங்கள் கொள்கை. உலகத்தி லேயே இதைவிடப் பேராண்மை என்ன இருக்கிறது? இந்தப் புண்ணிய கதையைப் பரவச்செய்யும் இந்த ஆடவர் களுக்குத்தான் வெட்கம், மானம் இல்லையோ ? மிக உயர் வான மனிதப்பிறவி எடுத்த உங்களுக்குப் பிந்துவின் விஷயத்தைப் பார்த்துக் கோபந்தானே வருகிறது; வெட்கத்தால் தலை தரையோடு கவீழ்ந்து போகவில்லையே? பிந்துவுக்காக என் இருதயம் பிளந்தே போயிற்று. உங்க ளுக்காக நான் பட்ட லஜ்ஜைக்கு ஓர் எல்லையே இல்லை. அசல் நாட்டுப்புறத்துப் பெண் நான்; உங்கள் வீட்டில் புகுந்தேன். பகவான் கவனப் பிசகாக எனக்குச் சிறிது மூளையை வைத்துவிட்டார். நீங்கள் ஓதின தர்ம நீதிகள் எனக்குச் சிறிதும் சகிக்கவில்லையே! 

பீந்து செத்தாலும் இந்த வீட்டு வழி வரமாட்டா ளென்று எனக்கு நன்றாகத் தெரியும். நான் அவளுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை எப்படி மறப்பேன் ? அவளைத்துறப்பதில்லை ; கடைசி வரையில் பார்த்து விடுவது என்ற உறுதிக்கு வந்தேன். என் சிறிய தம்பீ சரத் கல்கத்தாவில் படித்துக்கொண் டிருந்தான்; உங்களுக்கும் தெரியுமே அவன் விஷயமெல்லாம். தொண்டர் படையில் சேர்ந்து தேச சேவையில் ஈடுபடுவது, காலரா கண்ட இடத்திற்குச் சென்று உதவிசெய்வது, வெள்ளச்சேதம் ஏற்பட்ட காலத்தில் ஜனங்களுக்கு உழைப்பது இந்த மாதிரி ஸேவைகளில் வெகு உத்ஸாகத்தோடு உழைத்ததால் பரீக்ஷையில் எத்தனையோ தரம் தவறி யிருக்கிறான். அவனைக் கூப்பிட்டு நான், “பிந்துவைப்பற்றி எனக்கு அடிக்கடி சமாசாரம் எட்டும் படியான வழியைத் தேடவேண்டும்; சரத்! எனக்குக் கடிதம் எழுதக்கூடிய துணிவு அவளிடத்தில் இல்லை. எழுதினாலும் என் கைக்கு வந்து சேராது” என்று பொறுப்பை அவன்மேல் போட்டுவிட்டேன். 

ஆனால் இதைவிடப் பீந்துவைக் களவாடிக்கொண்டு வந்துவிடு அல்லது அவளுடைய பைத்தியக்காரக் கண வனின் குரல்வளையை அழுத்திவிடு என்றால் அவன் வெகு உத்ஸாகத்துடன் சட்பட்டென்று முடித்துவிட்டிருப்பான். 

சரத்துடன் நான் இதைப்பற்றி யெல்லாம் யோசனை செய்துகொண் டிருக்கையில் நீங்கள் என் அறைப் பக்கமாக வந்து, “மறுபடியும் எந்த விபரீதத்தைச் செய்யச் சதி செய்கிறீர்கள்?” என்று சொன்னது கவனம் இருக்கும் என்று எண்ணுகிறேன். 

“பிந்துவை எங்கேயாவது ஒளித்து வைத்து விட்டீர்களா என்ன?” என்று வினவீனீர்கள். அதற்கு நான், “அவள் வருவதாக இருந்தால் கட்டாயம் மறைத்து வைக்கவே உத்தேசம்; ஆனால், அவள் வரமாட்டாளே. நீங்கள் திகிலடைந்து போவதற்கு ஒன்றும் இல்லை” என்றேன். 

சரத் என்னோடு இருப்பதைக் கண்டு உங்களுக்குச் சந்தேகம் தட்டியதுபோலிருக்கிறது. மேலும் சரத் அடிக்கடி வந்து என்னைக் கண்டு பேசிப் போவதே உங்கள் வீட்டாருக்கு ஆகவில்லை. போலீஸார் அவன்மேல் கவனமாயிருந்ததே இதற்குக் காரணம். ஏதாவது அரசியல் வழக்கில் மாட்டிவிடப் போகிறானே என்ற பயந்தானே! இதற்காகவே சுபதினங்களில் சகோதரனுக்கு நான் இடவேண்டிய மங்கள திலகத்தைக்கூட யார் மூலமாவது அனுப்பி வைப்பேன். உங்கள் வீட்டுக்குள் அழைக்கும் வழக்கமே இல்லை! 

பீந்து மீண்டும் ஓடிவிட்ட செய்தி உங்கள் மூலமாகத் தெரியவந்தது; அதனால் அவர்கள் உங்கள் வீட்டில் அவளைத் தேடிப்பிடிக்க வந்தார்கள். இதைக் கேட்டதும் என் மார்பில் அம்பு பாய்ந்த மாதிரி இருந்தது. அந்த நிர்ப்பாக்கியவதிக்குப் பொறுக்கமுடியாத கஷ்டம் என்ன வெல்லாம் ஏற்படுகிறது! இது தெரிந்தும் அவளுக்கு உதவி செய்ய ஒரு வழியும் தென்படவில்லையே? 

சமாசாரத்தை அறிந்துவர, சரத் ஓடினான். அன்று சாயந்தரமே என்னிடம் வந்து விஷயத்தை அவீழ்த்தான்: 

“பீந்து அவள் சிற்றப்பா வீட்டுக்குப் போனாளாம்; அவள் வந்ததைப் பார்த்து அவர்கள் ஆத்திரம் மூண்டவர் களாய்ப் பழையபடி அவளது புக்ககத்திலேயே கொண்டு போய் விட்டார்களாம்; அவளால் ஏற்பட்ட வண்டிச் சத்தம் போன்ற தண்டச் செலவுகளை நினைத்துக்கொண்டு இன்னும் உறுமிக்கொண் டிருக்கிறார்கள்.” 

உங்கள் சித்தியம்மா ஸ்ரீ க்ஷேத்திரத்திற்குத் தீர்த்த யாத்திரையாகப் போக வேண்டி அகத்தில் வந்து இறங்கினாள்; “நானும் போகட்டுமா?” என்று உங்கள் உத்தரவைக் கேட்டேன். திடீரென எனக்குத் தர்மத்தில் இவ்வளவு பற்றுதல் உண்டானதைக் கண்டு வீட்டாரெல் லாம் ஆனந்தத்தில் ஆழ்ந்தனர். குறுக்கே ஒன்றுமே பேசவில்லை. நான் கல்கத்தாவில் இருந்தால் திரும்பவும் இந்தப் பீந்துவின் விஷயத்தில் தலையிடக் கூடுமென்ற எண்ணத்தாலும் என்னை வேறு இடத்தில் சில நாட்கள் அனுப்பி வைக்க உத்தேசித்தீர்கள் ; அதுவும் தெரியாமல் போகவில்லை. 

நான் உங்களுக்கெல்லாம் பெரிய முள்ளாக உறுத்திக் கொண் டிருந்தேன். புதன்கிழமை நான் புறப்பட வேண்டிய நாள். ஞாயிற்றுக் கிழமை தொடங்கியே. மூட்டை முடிச்செல்லாம் கட்டிச் சித்தமாகிவிட்டது. சரத்தை வரவழைத்து, “எப்படியாவது பிந்துவை புதன் கிழமையன்று, புரிக்குப் போகும் வண்டியில் ஏற்றிவிடு” என்று கூறினேன். 

சரத்தின் முகம் இந்த யுக்தியைக் கேட்டதும் மலர்ந்து விளங்கியது; “அக்கா, உனக்குக் கவலையே வேண்டாம்; அவளை வண்டியில் ஏற்றுவதோடு, கூடவே புரி வரைக்கும் கொண்டு வீடுவதும் என் பொறுப்பாகும்” என்றான். 

அன்று விளக்கு வைக்கும் சமயம். சரத் மறுமுறை என்னைக் காணவந்தான். அவன் முகத்தில் பொலிவே இல்லாததைக் கண்டு சாம்பியது என் உள்ளம். 

“என்னடா சரத், சௌகரியப்படவில்லையா?” என்று பரபரப்புடன் வினவினேன். 

“இல்லை” என்றான். 

“அவள் இதற்கு இணங்கவில்லையா?” என்றேன்.

“அதற்கு அவசியமே இல்லை ; நேற்று இரவே அவள் தன் புடைவையைக் கொளுத்திக்கொண்டு தற்கொலை பண்ணிக் கொண்டாள். அவர்கள் வீட்டில் ஒரு பையனைத் தட்டிக் கொடுத்துக் கேட்டதில் உன் பேருக்கு அவள் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றாளாம்; ஆனால் அந்தக் கடிதத்தை அவர்கள் சாம்பராக்கி வீட்டிருப்பார்கள்” என்றான். 

போகட்டும்! — என் மனம் அமைதியுற்றது. 

“இந்தக் காலத்திலேயே புடைவையைக் கொளுத்திக் கொண்டு பிராணனை விடுவது ஒரு ‘பாஷன்’ ஆகிவிட்டது” என்று ஊரெங்கும் வம்பளந்தார்கள். நீங்களெல்லாரும் 66 ‘இதெல்லாம் வெறும் நாடகம்” என்று இழிவாகக் கூறினீர்கள். இந்த நாடகம் வங்காளிப் பெண்களின் புடைவையை மட்டுமா பிடித்துக் கொள்ள வேண்டும்! ஆடவர்களின் வேஷ்டிக் கொசுவத்தைப் பற்றாதது ஏனோ? இதன் உண்மையை ஆராய்வது உசிதம். 

பீந்து நிர்ப்பாக்கியவதியே ! உயிருடன் இருந்த வரையில் ரூபத்தாலோ குணத்தாலோ யாதொரு புகழை யும் அடையவில்லை. சாவதற்குத் துணிந்தாளே, அதை யாவது ஆடவர்களெல்லாரும் வியந்து போற்றும் படிப் புதுவீதமாக நடத்தியிருக்கக்கூடாதா? இறந்தும் உலகத் தவரின் இகழ்ச்சிக்கு ஆளாகிவிட்டாளே! 

அவள் தமக்கை தன் அறையிலேயே புலம்பலானாள். அந்த அழுகையில் ஓர் ஆறுதல் இருந்தது. எப்படியோ அவள் குலத்தின் பெயர் கெடவில்லை; அவள் இறந்ததால் ஒழிந்தது ஒரு துக்கம். உயிரோடு இருந்திருந்தால் என்ன அவதூறெல்லாம் விளையுமோ? 

புண்ணிய ஸ்தலத்தை அடைந்தேன். அங்கே பிந்து வரவேண்டிய பிரயோஜனமே இல்லை; எனக்கு மட்டும் இருந்தது. 

துக்கமென்று உலகத்தவர் சொல்லுகிறார்களே, உங்க ளுடைய குடும்பத்தில் அது எனக்குச் சிறிதாகிலும் ஏற் படவில்லை. உங்கள் வீட்டில் சோற்றுக்கும் துணிக்கும் என்றுமே பஞ்சமில்லை. உங்கள் அண்ணாவின் நடத்தை எப்படியோ தெரியாது. உங்களிடத்தில் கோளாறு எதுவும் இல்லாததைப்பற்றி நான் தெய்வத்தைத்தான் தூஷிக்கவேண்டும். அப்படி உங்கள் சுபாவமும் பெரிய வருடையது போலவே இருந்திருக்குமானால் என் வாழ் நாளும் அதன் வழியே சென்றிருக்கும். சதியான பெரிய என் ஓரகத்தியைப் போல நான் கணவனென்னும் தெய் வத்தைத் தூற்றாமல், உலகத்தின் கர்த்தாவைத்தான் திட்டியிருப்பேன். ஆகையால் உங்களைப்பற்றிக் கடவு ளிடம் நான் முறையிடுவதற்கு ஒன்றுமில்லை. நான் எழுதும் இந்தக் கடிதம் அதைச் சொல்வதற்கல்ல. 

நான் மாகன் படால் சந்தில், 27 – ஆம் எண் உடைய உங்கள் இல்லத்திற்கு இனித் திரும்பமாட்டேன். பிந்துவைப் பார்த்தாகிவிட்டது. இல்லறத்தில் சில நாள் பழகியதில் பெண்கள் எத்தன்மையோர் என்பது தெளி வாகிவிட்டது. இனி என்னைப்பற்றி உங்களுக்கு அக்கரை இல்லை. 

இதையும் உணர்ந்தேன்; பீந்து ஈனமான பெண் ஜன்மம் எடுத்தாலும் அவளைப் பகவான் மட்டும் துறக்க வில்லை. 

அவள் மீது நீங்கள் தொடுத்த சமூக பாணம் சிறிது ஆழமே அவளைப் பாதித்தது. மழுங்கிப் போகும் நிலை அதற்கும் ஒரு நாள் ஏற்படாதா ? இந்தப் பாழும் மனித வர்க்கத்தவரின் கைக்கு எட்டாத உயர்ந்த இடத்தில் இருக்கிறாள் பிந்து. அவளை என்றென்றும் காலின் கீழே நசுக்கி விட உங்களால் முடியாதே. மறலி உங்களைக் காட்டிலும் கெட்டிக்காரன்! துர்மரணமானாலும் அவள் செய்த காரியம் மகத்தான தியாக மென்றே கூறுவேன். இந்த இடத்தில் பீந்து, வங்க தேசத்தில் தோன்றிய ஒரு பெண் மட்டுமல்ல; அவளை நிராகரித்த சிறிய தந்தை வீட்டுப் பிள்ளைகளின் தங்கையாக இருந்ததோடு அவள் நிற்க வில்லை; ஒரு பைத்தியக்காரனுக்கு வாழ்க்கைப்பட்ட மனைவீ மாத்திரமா? அவள் உலகின் உறவை ஒழித்து முக்தி பெற்ற ஒரு பெரிய ஆத்மா. 

மறலியின் குழலிசை பிந்துவின் உடைந்த உள்ளத் தின் மூலம் என் இருண்ட வாழ்வின் யமுனைக் கரையில் ஒலித்தபோது என் நெஞ்சத்தில் வேல் பாய்ந்தது. உலகத்தில் மிகவும் அற்பமான விஷயம், ஏன் எல்லா வற்றையும் விடக் கடினமாக இருக்கிறதென்று கடவுளை வினவினேன். 

ஒரு சந்திலே சுவர் மறைவில் நிரானந்தமே குடி கொண்ட ஓர் அற்பமான நீர்க்குமிழிக்கு ஏனோ இந்த இடையூறுகளெல்லாம்? பருவ காலங்கள் தம் நிறை கலசங்களிலிருந்து இன்னமுதைப் பொழியும்போது, ஏனோ என்னால் அதை உட்கொள்ள முடியாமல் போய் வீட்டது? கடவுள் படைத்த இவ்வழகிய மேதினியில், என்னைப் போன்ற ஜீவன் கூட்டில் அடைபட்ட பறவை போல் துளித் துளியாக ஏன் வெம்பிச் சாகவேண்டும் ? நான் நடத்திய ஓர் இல்லறம் எவ்வளவு அற்பமானது ! இவ்வுலகத்தவர் வீதிக்கின்ற கட்டுத் திட்டம் எவ்வளவு இழிவானது; முடிவில், இழிவான இந்த நாகபாசத்தி லிருந்து மீண்டு வெற்றிபெறவேண்டும்; இல்லாவிட்டால் உயிரைப் போக்கிக்கொண்டு அழியா ஆனந்த உலகிற்குப் போவதே உத்தமம். 

மறலியின் குழலிசை இன்னும் என் செவியுள் ஒலித்துக்கொண் டிருக்கிறது. எந்தப் பாபத்தைச் செய்தோமென்று எங்களை நீங்கள் இவ்வாறு கடுமையான வாழ்க்கையில் அடைத்து வைக்கிறீர்கள் ? அதோ மரண தேவதையின் கரங்களில் விடுதலையின் வெற்றிக்கொடி பறக்கிறது! அடி பேதாய்! இனிப் பயமில்லை. உன் துக்கம் ஒழிந்துவிட்டது, நாட்டுப் பெண்ணென்ற இந்தச் சடலத்தைப் பிளந்துகொண்டு வெளிக் கிளம்புவதற்கு. உனக்கு அரைக்கணங்கூட ஆகாதே! 

உங்கள் வீட்டிற்கு ஒரு நமஸ்காரம்; அதன் அச்சம் அறவே நீங்கியது, என் மனத்தைவிட்டு. என்னெதிரே அலைக்கிற நீலக்கடல், என் தலைக்குமேல் வெண்முகில் உலவும் ஆகாயம்! 

உங்களுடைய பழக்க வழக்கம் என்ற அந்தகாரம் என்னை இதுவரையில் மறைத்துக்கொண் டிருந்தது. நொடிப்பொழுது பீந்து என் வாழ்வில் தோன்றி அந்தத் திரையைச் சிறிதே விலக்கிச் சென்றாள். அவளுடைய மரணத்துடன் அந்தத் திரை முழுவதுமே கிழிந்து விட்டது. இன்று வெளியே வந்ததும் பார்க்கிறேன்; என் கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஓர் இடமும் இல்லையே? எனக்கு அழகு இருந்தும் அலக்ஷ்யம் செய் தீர்கள். எந்தப் பொருளுக்கு என்னைப் பிடித்திருந்ததோ அதன் திவ்ய நேத்திரம் இந்நீல ஆகாயத்தின் மூலமாக என்னை அழைக்கிறது. 

நான் சாகத் துணிந்து விட்டேன் என்று எண்ண வேண்டாம் நீங்கள்; அந்தப் பயம் இல்லை. மீராபாய் என்னைப்போல் ஒரு பெண்தான். அவளைப் பிணைத்த பாசமும் அற்பமானதல்ல. அவள் உயிரைப் போக்கிக் கொள்ளவில்லையே! ஒரு பாட்டில் அவள் சொல்லுகிறாள்: 

“பாபே சாடே, மாயே சாடே, சாடே ஸஹாஸஹீ
மீரா ப்ரபு லகனலகீ ஜோ ந ஹோயே ஹோயி.”*

*தந்தை, தாய், நண்பர்கள் யாவரும் விட்டொழித் தாலும் பிரபுவை மீரா அடைய முற்பட்டு விட்டாள்; இனி நடக்கிறது நடக்கட்டும்.

இந்தப் பெருமுயற்சி இருந்தால் போதும்; உயிர் வாழலாம். நானும் அவளைப்போல் உயிரை வைத்துக் கொள்ள விரும்புகிறேன்; பிழைத்துப் போனேன் ! 

உங்கள் திருவடியிலிருந்து விலகிய 
மிருணாள். 

– காரும் கதிரும் (சிறுகதைகள்), ஆசிரியர்: ரவீந்திரநாத் தாகூர், மொழிபெயர்த்தோர்: த.நா.குமாரசுவாமி, த.நா.சேனாதிபதி, முதற் பதிப்பு: 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *