கானல்நீர்
அரும்பியும் அரும்பாத இளமைப்பருவம் அது. பள்ளிப்பருவம் முடித்து கல்லூரிப் பருவத்தில் முதுகலைப்படிப்பில் அடியெடுத்து வைக்கும் நிறைமதிக்கு அளவற்ற மகிழ்ச்சியாயிருந்தது. மனம் இன்னவென்று தெரியாத பூரிப்பில் பாடங்களை நடத்தும்போது ஆழ்ந்து கவனித்தாள். பாடத்தை நடத்தவந்த இளம் ஆசிரியர் முகிலனின் பாடம்நடத்தும் திறனும் கருப்பாக இருந்தாலும் களையான முகமும் அவளைக் கவர்ந்தன. மனதில் எழுந்த சஞ்சலத்தை அடக்கிக் கொண்டு பாடத்தில் முழுத்திறனையும் காட்டமுயன்றாள்.
நிறைமதி பள்ளிப்பருவத்திலேயே படிப்பில் முதல்மாணவி இல்லையென்றாலும் பாடத்தை நடத்தும்போது கவனித்தாலே தேர்வில் எழுதிவிடும் ஆற்றல் பெற்றவள். பாடல்களை எல்லாம் எளிதாக ஒப்பிக்கும் திறன்பெற்றவள். கூர்மையான அறிவுடையவள். எளிதாக யாரிடமும் தன்னை வசப்படுத்திக் கொள்ளாதவள். அப்படிப்பட்ட நிறைமதிக்கு தனது மனதில் கொஞ்ச நாளாக இனம்புரியாத மகிழ்ச்சியும் முகிலன் வகுப்பிற்கு வந்தாலே கிடைக்கும் புத்துணர்ச்சியும் ஏனென்றே விளங்கவில்லை.
தன்னால் முடிந்த அளவு தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முனைகிறாள். இருப்பினும் தன்னையும் அறியாமல் முகிலனைப் பார்த்தாலே மலரும் தன் முகத்தின் பொலிவினைக் குறைக்க முடியவில்லை. முகிலனின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பு அவன் நடத்தும் பாடத்தையும் அதிகமாக விரும்பி படிக்கவைத்தது. தேர்வின்போது அவனது பாடத்தில் அதிகமாக மதிப்பெண் எடுத்தால் அவனிடம் பாராட்டு வாங்கும் பூரிப்பில் இரவு முழுவதும் தூங்காமல் மகிழ்ச்சியாய் அந்த நினைவுகளை அசைபோடுவதை வழக்கமாக்கியிருந்தாள். அது மட்டுமல்லாது அவனது வகுப்பில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை நினைத்துப் பார்ப்பதில் ஏற்படும் மகிழ்ச்சி வேறெதிலுமே கிடைப்பதில்லை.
அன்றொரு நாள் அசைன்மெண்ட் நோட்டை வாங்குவதற்காக முகிலனைக் காணச்சென்றவளுக்கு நோட்டில் உள்ள மார்க்கை ஆர்வமாக வாங்கிப் பார்த்தவளுக்கு ‘நன்று’ என்று போட்டிருந்த முகிலனின் கையெழுத்தில் மகிழ்ந்து, தனது தோழிகளிடம் காட்டி முறுவளித்தாள். ஏனென்றால் அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாராட்டாத கண்டிப்பான ஆசிரியராக மிளிர்ந்தவன் முகிலன். சொற்களைக்கூட அளவெடுத்து
வைப்பது போல குறைத்து பேசக்கூடியவன். சில சமயங்களில் மட்டும் அத்திபூத்தாற்போல வகுப்பில் சிரித்துப் பேசுவான்.
தோழி கனிமொழி மட்டும் “அதென்ன சார் உனக்கு மட்டும் நன்றுன்னு போட்டுருக்காரு. வரட்டும் கேட்கிறேன்” என்றாள்.
நிறைமதி பார்ப்பதற்கு எளிமையாகவும் அழகாகவும் இருப்பாள். அதிகமாக மேக்கப் போடமலேயே அழகுடன் விளங்குபவள். பார்ப்பதற்கு நிலவு போன்ற முகத்தினை உடையவள். நிறைமதி என்ற பெயர் கூட அவளுக்குப் பொருத்தமாக இருப்பதாகப் பலர் சொல்வதுண்டு. ஜீனியர் பெண் ஒருத்தி,
“அக்கா நீங்க ஓவியம் போல அழகாய் இருக்கீங்க” என்று பாராட்டியதுண்டு. நிறைமதிக்கு முகிலனாலே படிப்பின்மேல் தணியாத ஆர்வம் ஏற்பட்டு தனது தோழிகளுடன் போட்டி போட்டுப் படித்தாள். இறுதியாண்டு படிக்கும்போது தனது காதலை முகிலனிடம் சொல்வதற்கான தைரியம் வரவில்லை.
இறதியாண்டின் முதல் நாள் தன்னுடன் படிக்கும் வகுப்புத் தோழிகள் சொன்ன ஒரு விசயம் அவள் தலையில் இடிவிழுந்ததுபோல் உணர்ந்தாள். தனது ஜீனியர் பெண் லதாவை முகிலன் காதலிப்பதாகவும் லதாவும் அவனை விரும்புவதாகவும் கேட்டவுடன் மனமுடைந்து போனாள். லதாவைப் பார்த்தாலே தன் வகுப்புத் தோழர்களுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. ஏனென்றால் லதா சரியான ‘அலப்பி’ என்று பெயர் வாங்கியவள். படிப்பில் கெட்டிக்காரிதான். ஆனால் திமிர் பிடித்தவள். தான்தான் எல்லோரையும் விட திறமைசாலி என்ற மிதப்பில் மற்றவர்களை மட்டம் தட்டுபவள். அதனாலே பலருக்கு அவளைக் கண்டாலே ஆகாது. அவளைப் போய் முகிலன் எப்படிக் காதலித்தான் என நிறைமதிக்கு ஆச்சர்யமாக இருந்தது. லதா வாயாடி. தனது திறமையைப் பீற்றிக் கொள்பவள். அதைப் போல நான் வெளிப்படையாக எனது திறமையையும் காதலையும் முகிலனிடம் சொல்லவில்லை. இந்தத் தண்டனை எனக்குத் தேவைதான். குடும்பப் பாரம்பரியத்தை மீறி நடக்கும் வழக்கம் இல்லாதவளுக்கு தனக்கெனத் தனி ஆசை கூடாதுதான் என்று நினைத்துக் கொண்டாள்.
கல்லூரியில் தொடங்கிய நிறைமதியின் காதல் முகிலன் கண்களுக்குத் தெரியாமல் கானல்நீராகிக் கரைந்து போனது. ஆனாலும் அழியாத அதன் நினைவுகள் நெஞ்சில் எழும்போது ஏற்படும் வலி கண்ணின் ஓரங்களில் கண்ணீராய் வழியும் நிறைமதிக்கு.