மனசுக்குள் மாலதி…





அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
அத்தியாயம்-13
‘ பந்த் ‘ மாலதியை கட்டிப் போட்டுவிட்டது.
பேருந்துகள் ஓடாததினால் அலுவலகத்திற்குப் போக வழி இல்லை ஆட்டோ, வாடைக்கார்கள் ஓடாததினால் ராகுலைப் பள்ளிக்கும் அனுப்ப முடியவில்லை.
அலுவலகத்திற்கு ஒன்பது மணிக்கு மேல் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள்.
சுதாகர் எடுத்தான்.

” என்ன விசயம் ..? ” கேட்டான்.
வரமுடியாத காரணத்தைச் சொன்னாள். நாளைக்கு வந்து ‘விடுப்பு ‘எழுதி கொடுப்பதாகவும் சொன்னாள்.
‘ சரி ‘ என்று அவன் சேதியைக் கேட்டுக்கொண்டு வைத்துவிட்டான்.
அலுவலகத்திற்குச் செல்வபவர்களுக்கு வீட்டிலிருந்தால் பொழுது போகாது. ஆகையால் மாலதி வீட்டில் எந்த வேலை செய்வது என்று தெரியாமல் வளைய வளைய வந்ததாள் .
ராகுலுக்குப் பள்ளிக்கூடம் போகாதது பிடித்தமென்றால்,அவனுக்கு அம்மாவுடன் இருப்பது ரொம்ப உற்சாகம். மகிழ்ச்சியாக இருந்தான். பக்கத்து வீட்டில் போய் அங்கு இருக்கும் சின்ன பாப்பாவுடன் விளையாடினான்.
” சன்னி ஸ்கூட்டி ” வண்டி வாங்கிடுங்க மாலதி ! ”…. நேற்று இரவு ஸ்கூட்டரில் வரும்போது சுதாகர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
அதுமட்டுமல்லாமல்…. இதுவரை ‘ வா… போ ‘ என்று மரியாதை குறைவாய் ஒருமையில் பேசிய சுதாகர் இப்போது மரியாதையாய் பேசியது மனத்துக்குப் பிடித்திருந்தது.
இரு சக்கர வாகனம் வாங்கிவிட்டால். .. இப்படி முடங்கிக் கிடைக்க வேண்டிய அவசியமில்லை.
பந்த் இருந்தாலும் இல்லாவிட்டாலும்…. ராகுலைப் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு அலுவலகம் போகலாம், வரலாம். பேருந்திற்காக அது எப்போது வருமென்று கால் கடுக்க காத்துக் கிடைக்க வேண்டிய அவசியமில்லை. கூட்டமாக வருகிறதா, இடித்து, நெருக்கிக்கொண்டு போக வேண்டிய கவலை, கட்டாயமில்லை. பேருந்து வழியில் படுத்துக் கொண்டால்… ஆட்டோ, வாடகை கார்கள் பிடித்து அல்லாடி அலுவலகம் செல்ல வேண்டியதில்லை. எதைப்பற்றியும் யோசிக்காமல், கவலை படாமல் அலுவலகத்திற்குக் காலா காலத்தில் செல்லாம், திரும்பலாம். காயத்ரி வீட்டிற்குப் போகலாம். காய்கறி வாங்கலாம். இப்படி… எதையும் யாரையும் எதிர்பார்க்காமல் நிறைய செய்யலாம்.
கணவன் துணை இல்லாதது ஒரு வகையில் கஷ்டம்தான். எல்லா வேலை, பொறுப்பைகளையும் ஒரே ஆள் சுமந்து அவதிப்படத் தேவை இல்லை.
கணவன்கூட ….. ஒருவகையில் தொல்லை, தொந்தரவு, சுமைதான்.!! அவன் சரியாக இல்லை என்கிறபோது அப்படித்தானே ஆனது. !?
குடும்பத்தைப் பார்க்காமல் குடித்துவிட்டு வந்து ஆட்டம் போடும் ஆணை எத்தனை மனைவிமார்கள் சுமக்கிறார்கள்.!!
பெண்களில் ‘ அடங்காப்பிடாரிகள் ‘ மட்டும்தான் குறை !! அதுவும் சிறுபான்மை. !
குடிகாரன், சூதாடி, கொடுமைக்காரர்களென்று ஆண்களில்தான் அழிச்சாட்டியம் அதிகம். ஏன். ..?
கட்டுப்பாடில்லாமல் கட்டவிழ்த்து கிடக்கிற மனசு எதைப்பார்த்தாலும் ஆசைப்படுகிறது !
சுதாகர் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் ?..
வசந்தா எப்படி. .?? சுதாகருக்கு ஜோடி சேருவாளா.?!
உதவியாய் இருந்தவள் மனதைக் கொட்டி இருப்பாள். கொட்டா விட்டாலும் ‘ எனக்கு உன் மீது அன்பு ‘ என்று காட்டியிருக்கின்றாளா.?!
சுதாகரும் அவள் மனசு தெரிந்து மனம் மாறி இருக்கலாம். அவர்கள் காதல் எந்த மட்டில் இருக்கிறது.?!!
எப்படியோ…சுதாகர் நம்மை விட்டு அவள் பக்கம் சாய்ந்தால் தொல்லை இல்லை.!! – மாலதி இப்படித்தான் நினைத்தாள்.
அன்றைக்கு அலுவலகம் விட்டு வந்த மாலதிக்கு கடைத்தெருவில் வேலை. மளிகை சாமான்கள் வாங்க கடைக்குள் நுழைந்தவள்… முடித்துக் கொண்டு வந்து பேருந்திற்காக காத்திருந்தாள்.
தொலைவில்…. இவளுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு காயத்ரி யாரோ ஒரு ஆணுடன் அவள் பேசிக்கொண்டே சென்றாள்.
அவர்கள் நெருக்கம், நடை, உடை, பழக்கம்…. நிச்சயம் இவர்கள் காதலர்கள் என்பதைக் காட்டிக் கொடுத்தது.
அவர்கள் இருவரும் ஒரே ‘ஹோண்டா’ இரு சக்கர வாகனத்தில் ஏறி புறப்படும்போது…அவன் முகத்தைப் பார்த்த மாலதி உறைந்தாள்.!
‘ இ. .. இவனெப்படி. .??…’ சட்டென்று அவளுக்குள் தவிப்பு தடுமாற்றம் !
‘ இவன் ஏன் இங்கு வந்தான்..?!. இங்குதானிருக்கின்றானா. ?! ‘ – நினைத்துப் பார்க்க… நெஞ்சம் அவளை அறியாமல் ஆடியது.
‘ சத்தியமாய் இவன் காயத்ரியின் காதலனாய் இருக்கக் கூடாது. !’ – வேண்டினாள்.
‘அவன்தானா வேறு யாரோவா. .? ‘ – பார்த்த முகத்தை மீண்டும் கண் முன் கொண்டு வந்தாள்.
சந்தேகமே இல்லாமல் வெங்கடகிருஷ்ணன்.! சத்தியமாக அவனேதான் ! !
‘ பாவி ! ‘ உள்ளுக்குள் பதறினாள், பரிதவித்தாள்.
வீட்டிற்குச் சென்றும் அவளால் வேலை பார்க்க முடியவில்லை. மனம் நிம்மதி இல்லாமல் அலைந்தாள். தூக்கம் வராமல் புரண்டாள்.
‘ இவன் காயத்ரியின் காதலனாய் இருக்கக் கூடாது ! இருக்கக் கூடாது ! ‘ மனம் மீண்டும் மீண்டும் அதையே வேண்டியது.
‘ காயத்ரியும் அவனைக் காதலித்திருக்கக் கூடாது ! காதலிக்க கூடாது ! ‘ இப்படியும் புலம்பியது.
‘ பாவி ! போயும் போயும் சாக்கடையிலா விழவேண்டும் ! கொலைக்காரனிடம் அகப்பட வேண்டும். .? ‘ முணுமுணுத்து….. காயத்ரியைத் திட்டினாள்.
ஒரு வழியாக பொழுது விடிந்தது…
பதற்றமும் படபடப்புமாக ராகுலைப் பள்ளிக்கு அனுப்பினாள்.
” அம்மா ! என் நேரு படத்தைக் கொடுக்கிறதுக்குப் பள்ளிக்கூடத்துல காசு கேட்டாங்க . இருபது ரூபாய். ” கேட்ட மகனை….
” அப்புறம் தர்றேன் போ. ” சொல்லி விரட்டினாள்.
அலுவலகத்தில் நுழைந்தும் வேலை பிடிபடவில்லை.
சுதாகர் இவள் தவிப்பு, தடுமாறலை தன் அறையிலிருந்து பார்த்தான்.
‘ ஏன் ..?’ புரியாமல் விழித்தான்.
மாலதி அலுவலக தொலைபேசிக்கு வந்து எண்களை அழுத்தி ஒலி வாங்கியைக் காதில் வைத்து செந்தமிழ்செல்வி அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டாள்.
” காயத்ரி வேணும் ” கேட்டாள்.
சில வினாடிகளில். …
” நான் காயத்ரி பேசறேன் ”
” நான் மாலதி ”
” சொல்லுடி. .? ”
” நாம ரெண்டு பேரும் இன்னைக்குச் சாயந்தரம். . ஆறு மணிக்கு பாரதி பூங்காவுல சந்திக்கனும்.! .”
” ஏன் என்ன விஷயம். .? ”
” ஒரு முக்கியமான விஷயம். என்ன காரியமா இருந்தாலும் ஒதுக்கி வைச்சுட்டு நீ கண்டிப்பா வா. ”
” அப்படி என்ன தலைப்போகிற முக்கியமான விஷயம்…? ”
” போன்ல சொல்ல முடியாது. நேரே வா. விலாவாரியா பேசலாம். கண்டிப்பா வந்துடு ” சொல்லி வைத்தாள்.
அப்படியும் இவளுக்கு மனசு சரி இல்லை. இருக்கைக்கு வந்தும் நிலைகொள்ளாமல் தவித்தாள். சட்டென்று … எதோ நினைவு வந்தவளாக எழுந்தாள். மீண்டும் வந்து தொலைபேசியைத் தொட்டாள். இவளின் அடுத்த வீட்டு எண்களை அழுத்தினாள்.
எடுத்தவளிடம். …
” பாட்டி ! நான் மாலதி பேசறேன். இன்னைக்கு வெளியில கொஞ்சம் வேலை . எட்டு மணிக்குத்தான் திரும்புவேன். அதுவரைக்கும் ராகுல் உங்க வீட்ல இருக்கட்டும். பத்திரமா பார்த்துக்கோங்க. ” சொல்லி வைத்தாள்.
காயத்ரியிடம் எப்படி ஆரம்பிப்பது எப்படியெல்லாம் பேச வேண்டுமென்று மனதுக்குள் ஒத்திகை பார்த்தாள்.
மாலதிக்கு முன்பே காயத்ரி குழப்பமாக பூங்காவில் அங்கேயும் இங்கேயுமாக உலாத்தினாள்.
அவளை பார்த்ததுமே மாலதி தன் மனதை திடப்படுத்திக்கொண்டாள்.
காயத்ரிக்கு தோழியைப் பார்த்ததும் முகம் கொஞ்சம் மலர்ந்தது.
” என்னடி. .? ” கேட்டு அவள் கைகளை பற்றினாள்.
” சொல்றேன். ” சிமெண்ட் பெஞ்சில் அவளோடு அமர்ந்தாள்.
” என்ன. ??..”
” நான் நேரடியா விசயத்துக்கு வர்றேன். உண்மையை மறைக்காமல் சொல்லு. நேத்திக்கு கடைத்தெருவுல ஒரு ஆளோடு உன்னைப்பார்த்தேன். யார் அவர். ..? ”
” க. . கலியாணம் செய்து கொள்ளப்போகிறவர். .”
” பேரு. .? ”
” வெங்கடகிருஷ்ணன். ”
” அவரைப் பத்தி உனக்குத் தெரியுமா. .? ”
” ஏன் கேட்கிறே. .?! ”
” தயவு செய்து கேட்ட கேள்விக்குப் பதில் சொல்.? ”
” பக்கத்து அலுவலகத்துல வேலை செய்றார். ஆறு மாசமா பழக்கம். ”
” பூர்வீகம். .”
” தெரியாது. .! ”
” அவர் உன்னை உயிருக்கு உயிராய் நேசிக்கிறாரா. .? ”
” ஆமாம் ”
” என்னையும் அப்படித்தான் நேசிச்சார் .”
” மாலதி…ஈஈ ! ” காயத்ரி அதிர்ந்தாள்.
” உண்மை ! அவர்தான் என் முன்னாள் கணவர் ! ”
காயத்ரிக்குள் இடி இறங்கியது.
” நான் என் வாழ்க்கையைப் பத்தி சொல்லலை. நீயும் கேட்கல. இப்போ சொல்றேன் கவனமா கேட்டுக்கோ. அதுக்கப்புறம் அவரை நீ காதலிக்கலாமா, கணவரா ஏத்துக்கலாமான்னு முடிவு பண்ணிக்கோ. ”
காயத்ரி ஆடவில்லை, அசையவில்லை.
வெங்கடகிருஷ்ணனுக்கும் எனக்கும் காதல் திருமணம் காயத்ரி. எனக்கு ஸ்ரீரங்கம். அவருக்குப் பக்கத்து கிராமம். ரெண்டு பேருக்கும் ஒரே இடத்துல பக்கத்து பக்கத்துல அலுவலகம். ரெண்டு பேரும் ஒரே பேருந்துல தான் வேலைக்கு போவோம், வருவோம். ஒரே நிறுத்தத்துல இறங்கித்தான் அலுவலகம் போவோம். இந்த அறிமுகத்தைத் தவிர எங்களுக்குள் வேறு எந்த பேச்சு, பழக்கம் கிடையாது. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்காம கண்ணியமா போய் கண்ணியமாய்த் திரும்பிக் கொண்டிருந்தோம்.
ஒரு நாள் அலுவலகம் விட்டு… நானும் வெங்கடகிஷ்ணனும் முன்னும் பின்னுமா வர்றோம். அப்போ என் தோள் பையை எவனோ ஒருத்தன் பிடுங்கிக்கொண்டு ஓடுறான்.
” ஐயோ. . ! திருடன் ! திருடன் ! ” நான் கத்தறேன்.
பின்னால வந்த வெங்கடகிருஷ்ணன் என் கதறலை கேட்டு…ஓடிப்போய் அவனைத் துரத்துறார். பையைப் பிடுங்குறார். அவன் பையை விட்டு ஆத்திரத்தில் கத்தியை எடுத்து அவரை ஒரே சொருகா சொருகிட்டு தப்பிக்கிறான். இதுக்கு அப்புறம் நானும் அவரும் காதலிக்கிறோம். வீட்ல திருமணத்துக்கு எதிர்ப்பு. பெற்றவர்களை மீறி நாங்க பதிவு திருமணம் முடித்தோம். தனிக்குடித்தனம் வந்தோம். குழந்தை பிறந்தது.
இதுக்கு அப்புறம்தான் இந்த ஆள் தன் சுயமுகத்தைக் காட்டினார். .
” நான் உன்னைக் காதலிச்சு கலியாணம் பண்ணினத்துக்கு காரணமே. .. உன் அழகு, ஆஸ்தி, சம்பளம்.! ” சொல்லி ஒரு நாள் அதிரடிச்சார்.
” என்ன. .? ” நான் பதறினேன்.
” மாலதி. . ! எனக்கு பெரிய ரொம்ப பணக்காரானா வாழனும்ன்னு ஆசை. இது மூணும் உள்ள நீ மனைவியாய் வந்தா நல்ல இருக்கும்ன்னு நெனைச்சேன். அதுக்காக உன்னை வளைக்க நினைச்சேன். உன்னை என் வலையில விழ வைக்க யோசிச்சேன். அதனால ஒருத்தனைப் பிடிச்சு வழிப்பறி நாடகம் நடத்தினேன். நீ கச்சிதமா என் வலையில விழுந்தே. நாம
காதலிச்சோம். திருமணத்துக்கு உன் வீட்டுல எதிர்ப்பு. திருமணம் முடிந்தால் சரியாகும்ன்னு நெனைச்சி தாலி காட்டினேன். உன் பெற்றோர்கள் சரி வரல. சாமாதானத்துக்கும் வரல.
குழந்தை பிறந்தால் கண்டிப்பா எந்த பெற்றோர்களும் பேரன் பேத்திகளைப் பார்த்தால் மனசு மாறுவாங்கன்னு நெனைச்சேன். பிள்ளைக்கு ஒரு வயசாகியும் வரல. இனி வர மாட்டாங்க.! உன் சொத்து எனக்கு கிடைக்காது. அதுக்கு ஏற்பாடு பண்ணு.” சொல்லி தினம் குடிச்சிட்டு வந்து எனக்கு அடி, உதை, உயிரை வச்சு உடல் சித்ரவதை.
பெத்தவங்களை எதிர்த்து வந்த நான் என்ன செய்ய முடியும்…?? . அங்கே போக முடியாம இவன் சித்ரவதையில் புழுவாய் துடிச்சேன். ஒரு கட்டத்துக்கு மேல தாங்க முடியாம. ..இந்த ஆளுக்கு நானே விவாகரத்து கொடுத்துட்டு மகனோட பிரிஞ்சிட்டேன்.
காயத்ரி இதுதான் எங்களுக்குள் நடந்த நிசம்.
நீங்க ரெண்டு பேரும் எப்படி காதலிக்கிறீங்கன்னு எனக்குத் தெரியாது. இன்னைக்கு வெங்கடகிருஷ்ணன் உன்னை எதுக்காக காதலிக்கிறார்ன்னும் எனக்குத் தெரியாது. என் ஊகம். .. உன்னிடம் உள்ள உன் புருஷன் சொத்து, உன் அம்மா அப்பா சொத்து, உன் சம்பாதிப்பு எல்லாத்தையும் என்னைக் கணக்குப் பண்ணி காதலிச்ச மாதிரிதான் உன்னை காதலிக்கிறார்ன்னு தோணுது. தோணுது என்ன ? அது அப்படித்தான்.!! அதில் மாற்றமில்லே. அவனுக்குப் பணம் மேல் குறி. பணக்காரானா வாழணும்ன்னு வெறி. ஏற்கனவே நீ வாழ்க்கையை இழந்தவள். நீ திரும்ப ஒரு வக்ர புத்தி உள்ள ஆளிடம் வாழ்க்கையை ஒப்படைச்சு கஷ்ட பட வேணாம். இதைச் சொல்லத்தான் உன்னை இங்கே அழைச்சேன். !”சொல்லி முடித்தாள்.
காயத்ரி வியர்வையில் தொப்பலாக நனைந்து கற்சிலையானாள்.
அத்தியாயம்-14
நடை பிணமாக வீட்டில் வந்து விழுந்த காயத்ரிக்கு. ..
வெங்கடகிருஷ்ணனை எப்போது காதலித்தோம், எப்படி அறிமுகம். ..? ” -யோசனை ஓடியது.
ஒரு நாள் அலுவலகம் விட்டு வரும்போது. ..
” மேடம் ! ” பின்னால் குரல்.
” என்ன ..? ” திடுக்கிட்டுக் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.
” என்னை உங்களுக்குத் தெரியுமா. .? ” கேட்டுக் கொண்டே அவன் இவளை நெருங்கி வந்தான்.
” தெரியாது ! ”
” நான் உங்கள் அலுவலகத்துக்கும் பக்கத்து அலுவலகத்துல வேலை செய்யறேன். பேர். வெங்கடகிருஷ்ணன். ” அறிமுகப்படுத்திக் கொண்டான்.
” சரி. என்ன வேணும். .? ”
” நாம் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும். .”
” சொல்லுங்க. ..? ”
” சின்ன வயசுல நீங்க இப்படி விதவையாய் இருக்கிறதை நினைச்சா வருத்தமா இருக்கு. ” நேரடியாகவே விசயத்திற்கு வந்தான்.
இவள் எதிர்பார்க்கவில்லை.
”…ம்ம். … ”
” உங்களுக்கு ஆட்சபணை இல்லேன்னா நான் திருமணம் முடிக்க சம்மதம். ! ”
”………….”
” கிட்டத்தட்ட நானும் உங்களை மாதிரிதான். ஆண் விதவை.! மனைவி , குழந்தை உண்டு. விவாகரத்தாகிப் போய்ட்டாங்க. பழங்கதை வேணாம். உங்க பழங்கதையும் எனக்கு வேணாம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் நாம திருமணம் முடித்து பழசை மறந்து புதுசாய் வாழலாம். ”
”………………”
” வாழ்க்கையில் தனியே வாழறது கொடுமை. நான் அனுபவிக்கிறேன். நீங்களும் அனுபவிக்கிறீங்க. எதுக்கு இப்படி வாழனும். .? இப்படி வாழ்ந்து என்ன சாதிக்கப் போறோம். .? !
எனக்கு ரொம்ப இளகிய மனசு. மத்தவங்க கஷ்டம் எனக்குப் பொறுக்காது. அதனால… திருமணத்தை ஆதரவற்ற அநாதை, ஊனம், விதவை, விவாகரத்தானப் பெண்களை முடிக்கனும்ன்னு முடிவுல இருந்தேன்.
எதிர்பாராத விதமாய் என் மனைவி வந்து அந்த முடிவை உடைச்சிட்டாள். அம்மா, அப்பாவோட இருந்தவளைக் கலியாணம் பண்ணினேன்.
மனுசன் நினைக்கிறது நடக்கும் என்பது உறுதி. நான் நினைச்சது நடக்கனும் என்கிறதுக்காத்தான் அந்த வாழ்க்கை விவாகரத்தாய் ஆகிப்போச்சு.!!
இப்போ நான் என் மனசுல உள்ள விருப்பப்பட்ட பெண்ணைத் தேடுறேன். என் கண்ணுல நீங்க பட்டிருக்கீங்க.
உங்க அழகு, அடக்கம். ..எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால மனசுல உள்ளதை மறைக்காம சொல்லி என் மனசை உங்களிடம் திறந்து காட்றேன். உங்களை பார்த்த நாளிலிருந்து இப்படி பேசனும்ன்னு ஆசை. என்ன சொல்வீங்களோன்னு பயம், தயக்கம். அதான் இத்தனை நாட்கள் இழுப்பு.
நான் இப்படி என் மனசைத் திறந்து சொல்லிட்டதால நீங்க என்னைக் காதலிக்கனும், கலியாணம் முடிக்கனுன்னு கட்டாயமில்லே. என்னை உங்களுக்குத் பிடித்திருந்தால் மட்டுமே அந்த முடிவுக்கு நீங்க வரலாம், துணியலாம். உங்க முடிவை, நீங்க…. இங்கே. இப்போ சொல்லனும்ன்னு அவசியம், கட்டாயமில்லே. நல்லா யோசிச்சு, நிதானமா முடிவெடுக்கலாம். அதை பொறுமையாய் ரெண்டு மூணு நாள் கழிச்சி சொல்லாம். முடிவு சாதகமாய் இருந்தால் மகிழ்ச்சி. நான் அடுத்தது தேடி அலைய வேண்டியதில்லே. பாதகமானாலும் வருத்தமில்லே. மனசொப்பினால்தான் வாழ்க்கை. மத்தபடி எந்த கட்டாயமுமில்லே. ” நிறுத்தி நிதானமாக சொல்லி திரும்பி பார்க்காமல் சென்றான்.
அன்று இரவு இவள் தூங்கவில்லை.
வெங்கடகிருஷ்ணன் முகம் மனக் கண் முன் வந்து நின்றது.
கண்களை மூடிக்கொண்டு அவன் பேச்சை ஆராய்ந்தாள்.
காயத்ரிக்குக் கணவனைப் பற்றிய கவலை இல்லை. இறந்தவன் எழுந்து வரமாட்டன் என்கிறபோது எதற்காக வருத்தப் படவேண்டும். ?? அவனுடன் வாழ்ந்த நாட்கள்… ஒரு இனிமையான நடப்பு, கனவு. நடப்பு, கனவுகளை அசைபோட்டு தனிமையில் வாழ்ந்து இறப்பதென்பது முட்டாள்தனம். அவைகளை ஒதுக்கி, நகர்த்திவிட்டு நடைமுறை வாழ்க்கைக்கு வருவது புத்திசாலித்தனம். அன்றைய அழுகை என்பது இறப்பின் பாதிப்பு. வலியின் துடிப்பு.
நடைமுறை. .? நிறைய சிக்கல், பயங்கரம். ! !
எவ்வளவு நன்றாகப் பேசினான் வெங்கடகிருஷ்ணன். ! எத்தனைப் பொய்கள் சொல்லி இருக்கிறான்!!. உண்மையையும் பொய்யையும் சரிவிகிதத்தில் கலந்து ரொம்ப யோக்கியன் போல் பேசி இருக்கிறான். மனிதர்கள் சூட்சமக்காரர்கள். ஒன்றை அடைய… உண்மையையும் வலைக்கின்றார்கள்.பொய்யை மெய்யாக்கி சாதகமாக்கிக் கொள்கிறார்கள். மனிதர்களுக்குத்தான் இத்தகைய குணம். வேறு உயிரினங்களுக்குக் கிடையாது.
ஒருவேளை மாலதி பொய் சொல்கிறாளா. .? !
அறுத்துப் போனவள் அறுத்துப்போனவளாகவே இருக்கட்டும். வாழக் கூடாது !! – என்கிற எண்ணத்தில் அப்படி சொன்னாளா. .? – மனம் புரண்டு யோசித்தது.
சொல்லமாட்டாள். மாலதி இன்றைக்கு நேற்றைக்குப் பழக்கமில்லை. கல்லூரி நாட்களிலிருந்தே பழக்கம். உயிராகப் பழகியவன். உயிரை நெருங்கியவள். தோழி நன்றாக வாழ வேண்டுமென்கிற எண்ணமுடையவள். பொய் சொல்லி நம் வாழ்க்கையைக் கெடுக்க வேண்டிய அவசியம் அவளுக்கில்லை.
உண்மையில் வெங்கடகிருஷ்ணன் மாலதி கணவனா. .? அச்சு அடையாளமாக சொல்கிறாள். அப்படித்தானிருக்கவேண்டும் . !!
அவளுக்கு தோழியின் வாழ்க்கை மீண்டும் பாழ் பட கூடாது என்கிற எண்ணம். அதனால்தான் பதறி துடித்து சொல்கிறாள்.
இவன் சரிப்பட மாட்டான். !
நமக்கு வாழ்க்கையில் ஏன் எல்லாம் தப்பு தப்பாக கிடக்கிறது. ? ! – சிந்தனையுடன் எழுந்து அறையில் அப்படியும் இப்படியும் நடந்தாள்.
வெகு நேர சிந்தனைக்குப் பின் ஒரு முடிவிற்கு வந்தாள். !
அத்தியாயம்-15
வெங்கடகிருஷ்ணன் அதிர்ச்சியின் உச்சத்துக்கு வந்தான். தன் பழைய வாழ்க்கை பூதாகரமாக இப்படியொரு புதுப்பிறவி எடுக்குமென்று இவன் கனவிலும் நினைக்கவில்லை.!!
” வெங்கடகிருஷ்ணன்! இன்றைக்கு நான் உங்களைக் கண்டிப்பா சந்திச்சே ஆகனும். ” தொலைபேசியில் தொடர்பு கொண்டு காயத்ரி பேசினாள்.
மாலை சந்திப்பில். ..
” நான் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் சரியான பதிலைச் சொல்லனும். உண்மையைப் பேசனும். ”
” எ. .. என்ன. .? ”
” உங்க மனைவி பேர் என்ன. .? ”
முதல் உதை !
” எ. .. எதுக்கு. ..? ” திக்கித் திணறினான்.
” மாலதி ! ” காயத்ரி அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.
” காயத்ரி. . ! ” துணுக்குற்றான்.
” நீங்க அவளைக் காதலிச்சிருக்கீங்க. கலியாணம் பண்ணி இருக்கீங்க. ராகுல் என்கிற பையனுக்குத் தகப்பனாகி இருக்கீங்க. அவளைக் கொடுமை படுத்தி இருக்கீங்க . அவளாய் உங்களிடமிருந்து விவாகரத்தாகிப் போனாள். ஏன். .. ஏன். .. இப்படி ? எதனால். ..? ” நிறுத்தி நிதானமாக விளாசினாள்.
உண்மை இவளுக்குப் பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிட்டது ! – இவனுக்குப் புரிய. .. உடலுக்குள் வியர்வை சுரப்பிகள் வேகமெடுத்தது.
” யார் சொன்னா. . ..? ” வியர்வையை துடைத்தான்.
” உங்க முன்னாள் மனைவி என் தோழி ! கல்லூரி நட்பு. உயிருக்குயிர் சிநேகிதம். !”
உறைந்தான்.
” நீங்க சொத்துக்கு ஆசைப்பட்டு அவளைக் காதலிச்சு கலியாணம் பண்ணி இருக்கீங்க. கிடைக்காத பட்சத்தில் கொடுமை செய்து இருக்கீங்க. உங்களுக்குப் பொன், பொருள். வேணும். பணத்தாசை.!! அப்படித்தான் என் விஷயத்திலும் நீங்க நடந்திருக்கீங்க. ஏன் இப்படி. .? ”
” காயத்ரி. .! ”
” கலியாணம் முடிந்த பிறகு எனக்கும் அந்த நிலையா. .? ”
” காயத்ரி ! மாலதி இப்போ எங்கே இருக்கா. .? ”
” ஏன் கொலை பண்ண போறீங்களா. .? ”
” இல்லே மன்னிப்பு கேட்கனும். ..”
” ஏன் பிராயச்சித்தமா. .?”
” அப்படித்தான் ! ”
” அவள் மன்னிக்க மாட்டாள். பெண் மனசு அப்படி உடைந்தால் ஒட்டாது. தயவு செய்து என்னையும் மறந்துடுங்க. ”
அதிர்ச்சியாய்ப் பார்த்தான்.
” நல்லவனை நம்பலாம். கெட்டவனை நம்பலாம். ஆனால்… நல்லவன் போல் நடிக்கிற கெட்டவனை நம்பவே கூடாது. ஆபத்தானவன்.!! ” சொல்லி விடுவிடுவென்று நடந்தாள்.
இனி. …
வெங்கடகிருஷ்ணனுக்கு எதிர்காலம் இருட்டாக இருந்தது.
காயத்ரி உதறி அடித்து போனதில் உடைந்த போனான்.
ராகுலுக்கு அன்றைக்கு நேரம் சரி இல்லை.
பள்ளிக்கூடம் விட்டு , டியூசன் முடித்து, ஆட்டோவில் ஏற வந்தவனுக்கு…..
காலையில் தாய் கொடுத்த காசு கையை அரித்தது.
சாக்லேட் வாங்கித் தின்ன மனசு துடித்தது.
சாலையைத் தாண்டி எதிரிலுள்ள கடக்கி ஓடிப்போய் சாக்லேட் வாங்கினான்.
திரும்ப ஆட்டோவிற்கு வரும்போது தான் விபத்து.
இருசக்கரவாகனம் தட்டி. …. ..
பின்னால் வந்த வெங்கடகிருஷ்ணன். .. பதறி துடித்து அள்ளி எடுத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தான்.
மாலதி வந்து பார்த்தபோது மகன் தலையில் கட்டு. கையில் செலைன் . கண் மூடி இருந்தான்.
” ஐயோ. .! ராகுல் ! ”
சத்தம் கேட்டு ஓடி வந்த நர்ஸ் ..
” பையனுக்குச் சின்ன அடிதான்ம்மா. பயப்படாதீங்க. இரு சக்கரவாகனம் மோதி இருக்கு. பெரிசா ஒன்னும் இல்லே. சார்தான். இங்கே தூக்கி வந்து சேர்த்தார். ” கை காட்டினாள்.
பார்த்தவளுக்கு அதிர்ச்சி.
வெங்கடகிருஷ்ணன் திரும்பி நடந்தான்.
– தொடரும்…
– ஆகஸ்ட் 1, 2001ல் குங்குமச் சிமிழ் இதழில் பிரசுரமான குறுநாவல்.