கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 13, 2026
பார்வையிட்டோர்: 176 
வாசிப்பு நேரம்: 15 நிமிடங்கள்

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1

தாமிரபரணி தவழ்ந்து வருவதாலும் தமிழ் செய்த தவசி அகத்தியர் ஒரு காலத்தில் வாழ்ந்த தாலும் இயற்கை வளமும் இயற்கைச் சிறப்பும் பெற்ற பொதியமலை, தனக்குச் சரித்திரச் சிறப்பும் கிடைக்க வேண்டுமென்ற அவாவினால், தனது அடர்ந்த காடுகளுக்குள்ளிருந்த புலிகளை விட்டுப் பயங்கர மாக அலறச் செய்து கொண்டிருந்தது. புலிகளின் அலறலுக்குப் பயந்து, காட்டு மரங்களுக்கிடையில் களின் கால்கள் பாவுவதால் சலசலத்த மரச் சருகு பாய்ந்து சென்ற மான் முதலிய சாத்விக மிருகங் களின் ஓசை, அந்த மிருகங்களிடம் பரிதாபம் காட்டியதோ என்னவோ- ரகுவீரன் காதுகளுக்கு அவை கர்ணகடூரமாகவே இருந்தன. புரவி மீது ஏறி மலைப்பகுதியில் செல்லாமல் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு புரவியோடு தானும் நடந்து சென்ற வாலிபனான ரகுவீரன் முகத்தில் ஏதோ ஒரு விவரிக்க இயலாக் கடுப்பு இருந்து கொண்டிருந்தது. ‘பாண்டியமன்னன் இரத்தவெறி இன்னும் போகவில்லை போலிருக்கிறது. போர் முடிந்ததும் தலைநகர் திரும்பாமல் இந்த மலைக் காட்டுச் சாரலில் கூடாரங்களை அடித்துத் தங்குவானேன்? என்னைத்தான் மதுரையிலிருந்து அவசர அவசரமாக அழைப்பானேன்? அப்படி என்ன தலை போகிற காரியம்?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்ளவும் செய்தான். அப்படிக் கேட்டுக் கொண்ட சமயத்தில் அவன் அழகிய முகத்தின் வீர இதழ்கள் சிறிது கடுப்புடன் மடியவும் செய்தன. “எப்படியிருந்தாலும் நாளை மதுரை திரும்பிவிட வேண்டும். என் தந்தையின் கண்டிப் யான உத்தரவு இருக்கிறது. ஆகையால் பயப் படாதே” என்று தனது புரவிக்கு ஆறுதல் சொல்லிச் செல்லமாக அதன் முதுகில் தட்டுத் தட்டினான். தட்டிய வேகத்தில் அவன் இடைக் கச்சையிலிருந்த நீண்ட வானின் உறை ஒரு முறை புரவியின் வயிற்றில் உராயவே, புரவி அவனை நோக்கித் திரும்பி ஒரு முறை கனைத்தது. பற்களைக் காட்டிச் சிரிக்கவும் செய்தது- ‘மதுரைக்குத் திரும்புவது உள்னையும் என்னையும் பொறுத்ததல்ல’ என்று உணர்த்துவது போல. 

“உன் திமிர் வரவர அதிகமாகிக் கொண்டு வருகிறது.” என்று ரகுவீரன் குதிரையுடன் வாய் விட்டே பேசினான். இப்படி எத்தனையோ முறை அவன் அதனுடன் பேசியிருக்கிறான். பேசிய ஒவ்வொரு சமயமும் அவன்தான் தோற்றிருக் கிறானே தவிர, குதிரையின் ஜோசியம் ஒரு நாளும் பொய்த்ததில்லை. ஆகையால், தீவிர சிந்தனை யோடு பொதியமலை மீது ஏறிச் சென்றான் ரகுவீரன், இப்படி சுமார் நான்கு நாழிகை, பயணம் செய்த பிறகு தூரத்தே இருந்த படைகளின் அரவமும் பெரும் பந்தங்களின் வெளிச்சத்தின் வீச்சும் கண்ணுக்குத் தெரியவே, சேர வேண்டிய இடத்தை அடைந்து விட்டோமென்று குதூகலத்தில் புரவி மீது தாவி ஏறி அதைச் சற்று வேகமாகவே செலுத்தினான். அந்த ஜாதிப் புரவியும் மலையின் மேடுகளைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் முகத் தைத் தாழ்த்தியும் நிமிர்த்தியும் அலட்சிய நடை போட்டு ஏறிச் சென்றது. அடுத்த அரை நாழி கையில் படைத் தளத்தின் முகப்பை அடைந்து விட்ட ரகுவீரன் புரவியை தளத்தின் ஊடே செலுத்தினான். தளத்தின் முகப்பிலிருந்த இரு வீரர்கள் அவனை வேல் கொண்டு தடுத்தாலும், பந்தத்தைத் தாங்கியவன் அவன் முகத்தைப் பார்த்ததும் தலை தாழ்த்தி, “தாங்களா! மன்னிக்க வேண்டும்,” என்று அச்சத்துடன் தலைவணங்கி, “செல்லுங்கள், தளத்தின் நடுவிலிருக்கும் கூடாரத்தில் மன்னர் தங்கியிருக்கிறார்” என்று கூற, இரு வீரரும் விலகி நின்றனர். இதற்குமேல் தடங்கல் ஏதுமில்லாமல் பாண்டிய மன்னன் கூடாரத்தை அடைந்த ரகுவீரன் ஆகாயத்தைப் பார்த்து, “நடுநிசி ஆகிவிட்டது. மன்னரை அனாவசியமாக எழுப்ப வேண்டா” என்று வாயிலிலிருந்த காவலரிடம் கூறிவிட்டுத் திரும்ப முயன்றவனை, “மன்னர் உறங்கவில்லை. உள்ளே வரலாம்” என்ற குரல் சட்டென்று நிறுத்தியது. மிகவும் பழகிய குரல் அது. அதைக் கேட்பதிலேயே வீரர்கள் மகிழ்ச்சி கொள் ளும் அந்தக் குரலுக்குடையவன் அடுத்த இரண்டு விநாடிகளில் கூடாரத்து வாயிலில் காட்சியளித் தான். அவனைப் பார்த்தவுடன் புரவியிலிருந்து கீழே குதித்த ரகுவீரன், “மன்னர் மன்னனுக்கு வணக்கம்” என்று கூறி, உறங்க வேண்டிய சமயத்திலும் மன் னன் இடையில் தொங்கி கொண்டிருந்த வாளை உற்று நோக்கினான். 

தன் ஆட்சிக் காலமான முப்பது ஆண்டுகளையும் போர்ப் பாசறைகளிலேயே கழித்து விட்டவனும் சில தினங்களுக்கு முன்பே பொதியமலை மன்னனான ஆய்வேளை மருதூரில் முறியடித்து விட்டவனுமான பாண்டியன் கோச்சடையன் ரணதீரன், மிக்க கம்பீரமாக அந்த நடுநிசியில் வாயிலில் நின்றான். அவன் வதனத்தில் போரை முடித்த பெருமிதமும் இல்லை. இனி ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணச் சாயையும் இல்லை. “ரகுவீரா! உள்ளே வா போகலாம்.” என்றான் ரணதீரன் புன்முறுவல் செய்த வண்ணம். 

ரகுவீரன் முகத்தில் பழைய கடுப்பு அதிக மாயிற்றே யொழிய புன்முறுவல் சிறிதும் வரவில்லை. அந்தக் கடுத்த முகத்துடன் மன்னனைப் பின் தொடர்ந்து கூடாரத்துக்குள் நுழைந்தான். நுழைந்த தும் கூடாரத்தை ஒருமுறை சுற்றிலும் நோக்கினான். மன்னனுக்கான படாடோபங்கள், வசதிகள் எதுவுமே உள்ளே இல்லை. மன்னன் படுக்க ஒரு கயிற்றுக் கட்டில் ஓர் ஓரத்தில் இருந்தது. அதன் மீது புலித்தோல் ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. ஒரு சாதாரணத் தலையணை கட்டிலின் தலைப்பகுதியில் கிடந்தது. ஒரு மூலையில் ஒரு சிறு மதுக்குவளை சிறிய ஆசனத்தின் மீது இருந்தது. அரசன் உடைகள் குறுக்கே கட்டப்பட்ட ஒரு சணற்கொடியில் தொங் கிக் கொண்டிருந்தன. மற்றபடி விசேஷமாக ஆயுதங் களே இருந்தன மன்னன் பாசறைக் கூடாரத்தில். 

ரகுவீரன் கண்கள் சென்ற இடங்களை ரணதீரன் கவனித்ததன் விளைவாக மெல்லச் சிரிக்கவே செய்தான். மன்னன் சிரிப்பொலி கேட்ட பின்பே தன் சுய நிலையை அடைந்த ரகுவீரன், “மன்னர் நகைக்கும்படி நான் ஏதும் செய்யவில்லையே,” என்றான். 

“உன் பார்வை கூடாரத்தைச் சுற்றியதைக் கண்டேன்,” என்றான் பாண்டியன் ரணதீரன், மேலும் சற்றுப் பலமாகவே சிரித்து. 

“அது தவறா?” 

“இல்லை, உனக்கு ஏமாற்றம்!”

“எதில்?” 

“மன்னன் பாசறையில் பஞ்சணைகள் வேண்டும். பொற் கிண்ணங்கள் வேண்டும். மதுவை எடுத்துக் கொடுக்கப் பணிப்பெண்கள் வேண்டும். எதுவு மில்லாமல் வெறும் கயிற்றுக் கட்டிலையும் கொடி யையும் பார்க்கிறாய் பாவம்! நீ நினைக்கும் மன்ன வன் இன்று பாண்டிய நாட்டில் இல்லை,” என்று கோச்சடையன் மீண்டும் நகைத்தான்.

“மன்னவா!” ரகுவீரன் குரலில் ஆத்திரமிருந்தது. ‘ஆத்திரப்படாதே ரகுவீரா! நான் சொன்ன தெல்லாம் படுத்துத் தூங்கும் மன்னனுக்குத் தேவை. போரிடும் மன்னனுக்குத் தேவையானது எளிய வாழ்க்கை. அதுவும் கடுமையான வாழ்க்கை; வேண் டிய வசதியெல்லாம் மதுக்கலங்களல்ல. போர்க் கலங்கள்” என்று ரணதீரன் குறிப்பிட்டுவிட்டுச் சிறிது கூடாரத்துக்குள் உலாவினான். அவன் உலாவ ஆரம்பித்தது விஷயத்தை விளக்குவதற்கு முதற்படி என்பதை உணர்ந்த ரகுவீரன், மௌன மாகவே நின்று கொண்டிருந்தான். 

ரணதீரன் திடீரென்று உலாவுவதை நிறுத்தித் திரும்பி, “ரகுவீரா! உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?” என்று வினவினான் புதிர் போடு பவன் போல். 

“மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம்” என்றான் ரகுவீரன்.

“இல்லை” என்றான் மன்னன். 

“தாங்கள் மன்னர். நான் தங்கள் படையைச் சேர்ந்த சாதாரண வீரன். தவிர ஆய்வேளுடன் நடந்த போரிலும் ஈடுபடாமல் மதுரையில் தங்கி விட்டவன்.” 

“உன்னை மதுரையில் தங்கச் செய்தது நான்,” என்றான் மன்னன். 

“ஆம்.” 

“ஆகையால் போரில் ஈடுபடாதது உன் தவறல்ல.”

இதற்கு ரகுவீரன் பதில் கூறவில்லை. மன்னனே மேலும் சொன்னான், “நம்மிருவருக்கும் அதிக வித்தியாசமில்லை,” என்று. 

“மன்னவா…” என்று ஏதோ சொல்ல முயன்ற வனைக் கையசைப்பினாலே அடக்கிய பாண்டிய மன்னன், ரகுவீரனை அணுகி அவன் தோளில் ஒரு கையை வைத்து, “உனக்கும் எனக்கும் இரண்டு எழுத்துகள்தாம் வித்தியாசம்” என்றான், அன்பு ஒலித்த குரலில். 

மன்னன் சொல்வது புரிந்தாலும் புரியாததுபோல் நடித்த ரகுவீரன், “மன்னன் சொல்வது விளங்க வில்லை,” என்றான். 

“நான் ரணதீரன், நீ ரகுவீரன். இரண்டு எழுத்து கள்தாம் வித்தியாசம். உன்னைவிட எனக்கு வயது அதிகம். ஆனால் ரகுவீரா! உன் வயதிலேயே நான் பெரும் போர்களில் இறங்கிவிட்டேன். இல்லாவிட் டால் பாண்டிய நாடு இத்தனை விரிந்திருக்காது,” என்று கூறிய மன்னன், “ரகுவீரா! இது பேரரசாகத் தென்திசை முழுவதையும் அரசாள ஒரே ஒரு தடை இருக்கிறது,” என்றும் சொன்னான். 

இதைச் சொன்ன கோச்சடையன் இரண்டடி திரும்பி நடந்து கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு தீவிர யோசனையில் இறங்கினான். பிறகு தலை நிமிர்ந்து எதிரே நின்ற ரகுவீரனை நோக்கி, “அந்தத் தடையை நீக்கத்தான் உன்னை அழைத்தேன்” என்றான் சிந்தனையும் ஆவலும் இணைந்து ஒலித்த குரலில், 

“என்னை அழைத்தீர்களா! பாண்டிய நாட்டை விரிவடையச் செய்யவா?”- வியப்புத் தாங்காததால் பிரமித்த குரலில் கேட்டான் ரகுவீரன். 

“இருவர்தாம் அதைச் சாதிக்க முடியும். ஒன்று நீ! இன்னொருவன் நான்! நான் இப்பொழுது பகிரங்கமாகக் கிளம்புவதற்கில்லை. ஆகையால் நீதான் போக வேண்டும்,” என்றான் ரணதீரன் தீர்மானத்துடன். 

ரகுவீரன் உடனடியாக அதற்குப் பதில் சொல்ல வில்லை. தீவிர சிந்தனையில் இறங்கினான். பிறகு கேட்டான், “நமக்கு இப்பொழுது தடையாயிருப்பது எது?” என்று. 

“கொங்கு நாடு. அது வசப்பட்டு விட்டால் தென் திசை முழுவதும் பாண்டிய சாம்ராஜ்யம் நிறுவப் பட்ட தாகும்,” என்றான் ரணதீரன். 

புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்த ரணவீரன், “அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று வினவினான். 

“மங்கலாபுரம் செல்ல வேண்டும்,” என்றான் ரணதீரன். 

“சென்று?”

“ஒரு தந்திரசாலியைத் தந்திரத்தால் வளைக்க வேண்டும்.” 

“யாரது?” 

“மங்கலதேவி.” 

“ஆம்.” 

ரகுவீரன் முகத்தில் சினம் ஏறியது. “பெண்ணை வளைக்கத்தான் நான் தகுதி என்று நினைக்கிறீர்களா?” என்று சீற்றம் குரலில் மிதமிஞ்சி ஒலிக்கக் கேட்கவும் செய்தான். 

2 

பல போர்களைக் கண்டவனும், செங்கோல் தென்னன், செம்பிய வானவன், மதுர கருநாடகன் என்ற விருதுகளைப் பெற்றவனும் எதற்கும் அஞ்சாத நெஞ்சுரமுள்ளவனும் கலக்கம் என்பதை அணுவள வும் அறியாதவனுமான ரணதீரன், தனது எதிரே நின்ற ரகுவீரனை அந்தச் சமயத்தில் சிறிது கலக்கத் துடனேயே பார்த்தான். ‘பெண்ணை வளைக்கத் தான் நான் தகுதியா?” என்று கேட்ட அந்த வாலிபனின் சினம் நியாயமானதென்றே மன்ன னுக்குப் பட்டதால், அவன் சில விநாடிகள் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்தான். பிறகு சமாளித்துக் கொண்டு ரகுவீரனை நோக்கிப் புன்முறுவல் செய்து, “ரகுவீரா! ஆயிரம் படைகளை வளைத்துவிடலாம். ஒரு பெண்ணை வளைப்பது சுலபமல்ல,” என்று பதிலும் சொன்னான். “அது மட்டுமன்று, மங்கலதேவியைப் பெண்ணென்று சொல்வது சரி அன்று,” என்று விளக்கினான் மெதுவாக. 

மன்னனின் விளக்கம் வீரன் சினத்தைச் சற்று அதிகப்படுத்தவே, “அப்படியானால் அவள் ஆணா?” என்று வினவினான். 

“பிறப்பில் பெண்தான்…” என்று இழுத்தான் மன்னவன். 

“செயலில்?” 

“பல ஆண்களுக்குச் சமானமானவள். சென்ற எட்டு ஆண்டுகளாக அவள்தான் மங்கலபுரக் கோட்டையைப் பாதுகாத்து வருகிறாள்!” 

“ஏன்?” 

“அவள் தந்தை பிரதாபருத்திரன் நோய்வாய்ப் பட்டுக் கிடக்கிறான்.” 

“ஆம்…” 

“கோட்டையைக் காக்க வேறு படைத் தலைவர் இல்லையா?” 

இதற்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை ரணதீரன். ஏதோ யோசனையில் இறங்கினான் பல விநாடிகள். கடைசியாகப் பேசியபோது அவன் குரலில் அதிகத் திடமுமில்லை. சந்தேகத்தின் ஒலி இருந்தது. “கொங்குநாட்டு அரசன் அதற்கு வேறு தலைவனை நியமிக்காததிலிருந்து இந்தப் பெண் ணின் சக்தியில், போர்ப் பயிற்சியில், திறனில், அவனுக்கு அதிக நம்பிக்கை இருக்க வேண்டும். நான் அறிந்த வரையில் சென்ற எட்டு ஆண்டுகளில் கோட்டை மிகவும் பலப்பட்டிருக்கிறது,” என்று சொன்னான் ரணதீரன் சிறிது தயக்கத்துடன். 

பாண்டிய மன்னன் பேச்சும், பேச்சில் தொனித்த சந்தேக ஒலியும் அந்த வாலிப வீரனுக்குப் பெரு வியப்பைத் தரவே, “நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இந்தப் பெண் பெரிய அல்லி ராணியாயிருக்க வேண்டும்,” என்று கூறியதன்றி மந்தகாசமும் செய்தான். 

“அல்லிராணி ஆண்களை அருகே அனுமதித்த தில்லை. இவள் தினம் நான்கு மகாரதர்களுடன் வாள் பயிற்சி, விற்பயிற்சி செய்கிறாளாம். ஒவ்வொரு முறையும் மகாரதர் தோற்றதாகத்தான் வதந்தி உலாவுகிறது,” என்றான் ரணதீரன், 

ரகுவீரன் முகத்திலும் சந்தேகச் சாயை படர்ந்தது. “நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இவள் ராட்சஸியாக யிருப்பாள் போல் தெரிகிறது,” என்றான். 

“அப்படித்தான் தோன்றுகிறது” என்ற மன்னன், “ரகுவீரா! ஒன்று கேள்விப்படுகிறேன். மங்கலாபுரக் கோட்டை மலைச்சரிவிலிருக்கிறதாம். கோட்டைக் குள்ளிருப்பவர்களை வெற்றி கொள்வது அசாத்திய மாம். கோட்டையை அணுகக்கூட முடியாதாம். ஆகையால் கோட்டையை விட்டு மங்கலதேவியின் படையை வெளியில் இழுத்தாலொழிய அதை நாம் வெற்றி கொள்ள முடியாது. ஆகையால் படையை வெளியே இழுக்க வேண்டுமானால் மங்கலதேவியை கோட்டைக்கு வெளியே இழுக்க வேண்டும். வேறு வழியில்லை,” என்று கூறினான். 

“அந்தப் பணி என்னுடையதாகும்?”- ரகுவீரன் குரலில் இகழ்ச்சி நிரம்பி நின்றது. 

“ஆம், ஆனால் இகழ்ச்சிக்கு அதில் இடமில்லை. மங்கலதேவி தந்திரத்திலும் போரிலும் நூறு வீரர்களுக்கு இணையானவள். இந்த முயற்சியில் நீ உயிரை இழந்தாலும் இழக்கலாம்,” என்றான் பாண்டிய மன்னன். 

மன்னன் என்ன சொல்லியும் ஒரு பெண்ணை வஞ்சிக்கச் செல்ல, வீரனான ரகுவீரன் மனம் ஒப்ப வில்லை. ஆகவே முகத்தில் கசப்பையே காட்டி னான். மன்னன் அதைக் கவனிக்காதது போலவே சொன்னான்: “ரகுவீரா, நாம் நினைப்பதுபோல கொங்கர் கோன் இந்தப் பெண்ணை நினைக்க வில்லை. அவன் கோட்டையைக் காக்கப் போதிய படைத்தலைவர்கள் இல்லாமலும் இல்லை. ஆனால் இவளைவிடச் சிறந்தவர் கிடையாதென்று கொங்கு மன்னன் நினைக்கிறான்,” என்றும் மன்னன் சுட்டிக் காட்டி, “ரகுவீரா! இங்கிருந்து மலைவழியே மங்கல புரம் செல். நான் உன் பின்னால் சிறிது தள்ளியே படைகளை நடத்தி வருகிறேன். நீ அங்கு சென்ற பத்தாவது நாள் கோட்டைக்கு எதிரில் என் படை நிற்கும். அதற்குள் நிலைமையைச் சரிகட்டி விடு,” என்று உத்தரவிட்டான். 

அதிகார தோரணையில் அரசனால் சொல்லப் பட்ட அந்த வார்த்தைகளைக் கேட்டதும், அது முடிவான உத்தரவென்பதைப் புரிந்து கொண்ட ரகுவீரன், “வருகிறேன் மன்னவா” என்று விடை பெற்றுக் கொண்டான். 

“ஏன்? நாளைக் காலையில் புறப்பட்டேன்,” என்றான் ரணதீரன், 

“ஒரு நள்ளிரவு நிலையை மாற்றிவிடப் போவ தில்லை. பெண் வேட்டைக்கு இரவே நல்லது,” என்று சலிப்புடன் கூறிவிட்டுக் கிளம்பினான் ரகுவீரன். 

பொதிய மலையிலிருந்து கிளம்பிய அந்தப் பாண்டிய நாட்டு வீரன், ஒரு பெண்ணை ஏமாற்ற வேண்டிய பணியில் மன்னன் தன்னை இறக்கி விட்டானே என்ற மனத்தாங்கலுடன், மலை வழியிலே இரண்டு நாள் பயணம் செய்தான். 

இடையே இரண்டு நாட்கள் சேர நாட்டுக் கடற்கரை மூலமாகப் புரவியை நடத்தி, மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலைமீது ஏறிக் காட்டுப் பாதையில் பயணத்தை நடத்தினான். சுமார் ஒரு வாரப் பயணத்துக்குப் பிறகு மங்கலபுரத்தின் எல்லைக் காட்டை அடைந்ததும் மலைச் சரிவில் தெரிந்த பிரும்மாண்டமான கோட்டையைக் கவனித்தான். பார்த்த அளவிலேயே அதை வெற்றி கொள்வது குதிரைக் கொம்புதான் என்பதை உணர்ந்து கொண்டான். 

மலைத் தொடரின் பெரும் சரிவின் உச்சியில் திடீரென சாய்ந்துவிடும் போல் நின்று கொண் டிருந்த மங்கலபுரக் கோட்டைக்கு மூன்று கதவுகள் இருப்பதையும், எதிரேயிருந்த அரபிக்கடலை நோக்கிக் கொண்டிருந்த பெரும் கதவின் வலு எந்தத் தாக்குதலையும் தாங்கவல்ல தென்பதையும் புரிந்து கொண்டான் ரகுவீரன். இதை ஒரு பெண் நிர்வகிக்கிறாளென்பதை நினைக்கவே பெரு வியப்பாயிருந்தது அந்த வாலிப வீரனுக்கு. ஆகவே அந்தக் கோட்டையின் அழகைக் கண்கொட்டாது பார்த்துக் கொண்டு அசைவற்றுப் புரவியில் அமர்ந்து கொண்டிருந்தான் பல நிமிடங்கள். பிறகு கீழே இறங்கிப் புரவிக்கருகில் நின்று கொண்டான். 

அப்பொழுது காலை நேரம். கதிரவன் உதித்து நான்கு நாழிகைகளே ஆகியிருந்ததால் கடலும் மலையும் சேர்ந்த காட்சி கண்ணைப் பறித்தது. அவன் நின்றிருந்த தோப்பில் பழந்தரும் தருக்கள் காற்றில் கிளைகளைத் தாக்கி, அவன் உண்ணக் கனிகளைத் தங்கள் கிளைக் கரங்களால் நீட்டின. அவை எதையும் அவன் தொடவில்லை. கோட் டையே அவன் கவனத்தைக் கவர்ந்திருந்தது. அந்தப் பிரமிப்பிலிருந்து அவனை இழுக்கக் குரலொன்று ஒலித்தது, “நீங்கள் இந்த ஊருக்குப் புதிதா?” என்று, 

குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினான் ரகுவீரன். அங்கு ஒரு பருவப் பெண்- கைக் கெட்டிய மாங்கனிகளைப் பறித்துத் தனது மடியில் போட்டுக் கொண்டிருந்தாள். இன்னொரு கை மற்றொரு கனியைப் பறிக்க இருந்தது. ஆனால் பறிக்காமல் நின்று விட்டது, அந்த வாலிபனைப் பார்த்த காரணத்தால், அவளைக் கண்ட ரகுவீரன், பிரமித்துப் போனான். அவளுக்கு இருபது இருபத்திரண்டு வயதுக்கு மேலிராது என்று தீர்மானித்தான். அவளைச் சுற்றிலும் மாங்கனிகள் தாழ்ந்த மரக்கிளைகளில் தொங்கின. கொடிகளில் பூங் கொத்துகள் தொங்கின. மரத்திலிருந்த பழங்களைப் பார்க்கவில்லை. ரகுவீரன் – வேறு கனிகள் கண்ணைக் கவர்ந்ததால்! மலர்களைப் பார்க்க வில்லை பாண்டிய நாட்டு வீரன்- இரு அரவிந் தங்கள் அவனை உற்று நோக்கிய காணத்தால்! அது மட்டுமா? சற்று எட்ட இருந்த கொடியிலிருந்த முல்லைகளும் மலர்ந்து கிடந்தன. அதை ஏன் அவன் பார்க்க வேண்டும்? அவள் உதடுகள் விரிந்து அவற்றுக்குள்ளிருந்த முல்லைகள் மலர்ந் திருக்கும் போது! 

இப்படிப் பார்த்து மயங்கி நின்ற ரகுவீரனைப் பார்த்த அந்தப் பெண் சிரித்தாள் மீண்டும். 

“ஏன் சிரிக்கிறாய் …” ஆத்திரத்துடன் கேட்டான் ரகுவீரன். 

“உங்கள் ஊரில் கோட்டை கிடையாதா?” என்று அவள் கேட்டாள். 

“நிறைய இருக்கின்றன.”

“பெண்கள்?” 

“இருக்கிறார்கள்.” 

“அப்படியிருக்க இரண்டையும் பார்த்து ஏன் மலைத்து நிற்கிறீர்கள்?” என்று கேட்ட அவள் கலகல வென நகைத்தாள். 

“கோட்டை பலமாயிருந்தது…” என்றான் ரகுவீரன். 

“பெண்?” அவள் கேட்டாள்.

“அழகாயிருக்கிறாள்!”- எரிச்சலுடன் பதில் சொன்னான் ரகுவீரன். 

அதற்கு அவள் கோபிக்கவில்லை. “உங்கள் பெயர் என்ன?” என்று மட்டும் கேட்டாள், 

“ரகு” என்று பாதிப் பெயரை மட்டும் சொன் னாள். அத்துடன் கேட்டான், “நீ யார்?” என்று. 

“கோட்டையில் ஒரு பணிப்பெண்,” என்றாள் அவள். 

“கோட்டைக்குள் விடுவார்களா என்னை?”

“யாரையும் விடுவார்கள்… நண்பர்களாயிருந்தால்.” 

“நண்பர் என்பதை எப்படி நிரூபிப்பது?” 

“அது கொஞ்சம் கஷ்டந்தான். சரி; நீங்கள் இங்கு எதற்கு வந்தீர்கள்?” 

“வேலை தேடி வந்தேன். அத்துடன் இந்தக் கோட்டையின் தலைவியையும் பார்க்க வந்தேன்.” 

“மங்கலதேவியையா?” 

“ஆம்.”

“எதற்கு?” 

“அவர்கள் போரில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் களாம். பெண்ணுக்கு அப்படி என்ன தேர்ச்சி என்றான் ரகுவீரன். இருக்க முடியும் என்று பார்க்கலாமென்று ஆசை,” 

“அப்படியானால் என்னுடன் வாருங்கள்,” என்று அந்தப் பெண் அவனை அழைத்துச் சென்றாள் கோட்டையை நோக்கி, கோட்டையின் பிரதான வாசல் வழியாக நுழையாமல் பணியாளர் செல்லும் திட்டி வாசல் வழியாக அழைத்துப் போனாள். கோட்டைக் குள்ளிருந்த மூன்று மதில்களைத் தாண்டியதும் நடுவிலிருந்த பெரிய அரண்மனை யைச் சுட்டிக் காட்டி, “அதுதான் மங்கலதேவியின் அரண்மனை. போய் நீங்கள் வந்திருக்கும் கார ணத்தை அங்குள்ள ஸ்தானிகரிடம் சொல்லுங்கள்,” என்று கூறிவிட்டுப் பக்கத்து இல்லமொன்றில் புகுந்துவிட்டாள் அந்தப் பணிப்பெண். 

“அந்தப் பணிப்பெண்ணைப் பற்றிய யோசனை யுடன் ஸ்தானிகரை அணுகிய ரகுவீரன், தான் வேலை தேடி வந்திருப்பதாகவும், தேவியைப் பார்க்க வேண்டுமென்றும் கூறினான். ஸ்தானிகர் அவனை நீராடி உணவருந்துமாறும், தேவியிடம் அறிவித்து விட்டு அவள் இஷ்டப்பட்டால் அழைத்துச் செல்வதாகவும் கூறி, ரகுவீரனை உபசரிக்க ஒரு வீரனையும் ஏவினார். ரகுவீரன் அந்த அரண்மனையின் பக்கத்து இல்லத்தில் தங்க வைக்கப்பட்டான். அவனுக்கும் அவன் புரவிக்கும் உபசாரம் பலமாக நடந்தது. 

அன்று பதினாறு நாழிகைக்கு மேல் ரகுவீரன் மங்கலதேவியின் சன்னிதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான். மாளிகையின் ஆஸ்தான மண்ட பத்தின் நடுவில் பெரும் சிம்மாசனத்தில் உட்கார்ந் திருந்தாள் மங்கலதேவி. அவள் தலையின் குழலை வைர மாலையொன்று வளைத்துக் கிடந்தது. வேலி னும் கூரிய கண்கள் அவன் நெஞ்சை ஊடுருவிப் பார்த்தன. இதழ்களில் ஓர் இகழ்ச்சி இருந்தது. “உங்களுக்கு வேலை தேவையா?” என்ற அவள் கேள்வியிலும் இகழ்ச்சி ஒலித்தது. 

பதில் சொல்ல மாட்டாமல் வாயடைத்து நின்றான் ரகுவீரன். தான் காலையில் பார்த்த பணிப்பெண்தான் மங்கலதேவியென்று அவனால் நம்ப முடியவில்லை. அவன் நிலை பெரும் சங்கடத் திலிருந்தது. அவள் அவனிடமிருந்து பதில் எதையும் எதிர்பார்க்கவில்லை. தனது ஆசனத்திலிருந்து எழுந்து ஒரு சாளரத்தண்டை சென்றாள். அவனை யும் வரும்படி சைகை செய்தாள். கனவில் நடப்பவன் போல் நடந்து சென்ற ரகுவீரன் அருகே வந்ததும் சாளரத்தின் அருகிலிருந்த ஒரு வில்லை எடுத்துக் கொள்ளும்படி அவனுக்கு உத்தரவிட்ட மங்கலதேவி, ஓர் அம்பையும் அவன் கையில் கொடுத்து சாளரத்தின் வெளியே தூரத்திலிருந்த ஒரு மாமரத்தைச் சுட்டிக்காட்டி, “அதிலுள்ள ஒரு பழத்தை அம்பால் அறுத்துத் தள்ளுங்கள்,” என்று உத்தரவிட்டாள். 

அந்தப் பரீட்சை எதற்கு என்று தெரியாது போனாலும், ரகுவீரன் வில்லை எடுத்து, அம்பை ஏற்றி, நாணை இழுத்து அம்பை விடுத்தான். ‘விர்’ ரென்று சென்ற அம்பு மாங்குலையிலிருந்து ஒரு கனியை அறுக்கவே, மாங்கனி மேலே பறந்து வெகு தூரத்தில் போய் விழுந்தது. 

“நன்று நன்று,” என்று ஆர்ப்பரித்தாள் மங்கலதேவி. பிறகு வில்லைத் தான் வாங்கிக் கொண்டு மூன்று அம்புகளை எடுத்துக் கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று அம்புகளையும் ஒன்றன்பின் ஒன்றாக அதே மாங்குலையைப் பார்த்து எய்தாள், மூன்று மாங்கனிகள் மந்திரத்தால் கொய்யப் பட்டவை போல் மூன்று திக்குகளில் சிதறிச் சென்றன. அந்தக் கைவண்ணத்தைப் பார்த்துத் திகைத்த ரகுவீரனைப் பார்த்து நகைத்த மங்கலதேவி, ‘உங்களை என் படையில் சேர்த்துக் கொண்டு விட்டேன்,” என்றாள். 

“என்னை உங்களுக்கு முன்பே தெரியாதே,” என்றான் ரகுவீரன். 

“தெரியும்,” என்றாள் மங்கலதேவி. “யார்?” என்று கேட்டான் ரகுவீரன்.

“ரணதீரனின் ஒற்றன்,” என்று அறிவித்தாள் மங்கலதேவி. 

3 

அதிர்ச்சி என்ற சொல்லுக்கு ஓர் உருவம் சமைக்க முடியுமானால், அந்த உருவமாக விளங்கினான் ரகுவீரன், மங்கலதேவியின் பதிலைக் கேட்ட மாத்திரத்தில். இருப்பினும் அந்த அதிர்ச் சியை அடக்கிக் கொண்டு அவளைக் கேட்டான், “அப்படியானால் என் பெயரும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்” என்று, குரலில் சிறிது போலீ ஏளனத்தை ஒலிக்க விட்டு. 

மங்கலதேவி தன் விஷமம் சொட்டும் அதிகாரக கண்களை அந்த வாலிபன்மீது பதியவிட்டாள் சில விநாடிகள், பிறகு சொன்னாள்: வயது வந்த பெண் கள் வாலிபர்களின் பெயரை உச்சரிப்பது தவறு தான். இருந்தாலும் சில சமயங்களில் பெண்களின் பலவீனம் தனது சுபாவத்தைக் காட்டுகிறது; பெயரின் அழகில்கூட மயங்குகிறது. ரகுவீரன் என்ற பெயர் அழகான பெயரல்லவா?” 

இதைக் கேட்டதும் ரகுவீரன் பிரமை முன்னை விடப் பன்மடங்கு உயர்ந்தது. “அப்படியானால் என்னைப் பற்றிச் சகலமும் தெரியும் என்று சொல்லுங்கள்,” என்றான் ரகுவீரன். 

“எது தெரிந்தாலும் நீங்கள் ஒற்றனாக வந்திருக்கிறீர்களே தவிர, வேவு பார்க்கும் உத்தேசம் உங் களுக்கில்லை என்பது எனக்குத் தெரியும்?” என்றாள் மங்கலதேவி. 

“வேறெதற்கு வந்திருக்கிறேன்?”- ரகுவீரன் குரலில் பிரமை மிதமிஞ்சிக் கிடந்தது. 

“அந்தக் காவிய ரகுவீரன் எதற்கு மிதிலைக்கு?” என்று கேட்டு முறுவல் மங்கலதேவி. 

“என்ன சொல்கிறீர்கள் தேவி?” 

“அந்த ரகுவீரன் மிதிலைக்கு வில்லை உடைக்க வந்தான்.” 

“ஆம்.” 

“நீங்கள் இங்கு கோட்டையை உடைக்க வந்திருக் கிறீர்கள். வில்லையாவது ஒரு பெண்ணுக்குப் 
பணயமாக வைத்திருந்தார்கள். ஆனால் இங்கு கோட்டை பணயமில்லையே, உடைத்தால் பெண்ணும் கிடைக்க மாட்டாளே,” என்று கூறிய மங்கலதேவி, “பாண்டிய வீரரே! இதைப் பாரும்,” என்று மடியிலிருந்த ஓர் ஓலையைக் கொடுத்தாள். 

அதைப் பிரித்துப் படித்த ரகுவீரன் இதயம் திக்திக்கென்று அடித்துக் கொண்டது. “ரகுவீரன் என்ற படைவீரன் பாண்டியன் உத்தரவுக்கிணங்கி இரகசியமாக மதுரையிலிருந்து பொதிய மலைக்குப் புறப்பட்டு விட்டான்” என்று ஓலையில் கண்டிருந்தது. அதை இருமுறை படித்து ஓலையைத் திருப்பிக் கொடுத்த ரகுவீரன், “எங்கும் ஒற்றர்களை வைத்திருக்கிறீர்கள்,” என்று சொன்னான் வறண்ட உணர்ச்சியற்ற குரலில். 

“பாண்டிய மன்னன் சோழனையும், சேரனையும், மலைமன்னனான ஆய்வேளையும் வெற்றி கொண்ட பிறகு, தென் திசை ஆதிக்கத்துக்கு அவனுக்குக் குறுக்கே நிற்பது கொங்கு நாடு. அதன் வாயில் மங்கலாபுரம். இது கைவசப்பட்டால் கொங்கு விழுந்தது போலத்தான். ஆகவே பாண்டிய மன்னர் கண்ணோட்டம் இங்குதானிருக்குமென்று சொன்னார் என் தந்தை. அப்படிப் பாண்டிய மன்னர் வந்தால் அவரை எதிர்கொள்ளத் தயாரானோம். ஆகவே அவரது அசைவு ஒவ்வொன்றையும் கவனிக்க வேண்டியதாயிற்று,” என்று அறிவித்த மங்கலதேவி, “வாருங்கள் கோட்டையைச் சுற்றிப் பார்ப்போம்,” என்றாள். 

கனவில் நடப்பவன் போல் ரகுவீரன் அவளைத் தொடர்ந்தான். கோட்டை மங்கலதேவி அவனுக்குச் சுற்றிக் காட்டினாள். முழுவதையும் மதில்கள் மீதிருந்த வேலெறியும் பொறிகளையும் வில்லவரை யும் காட்டினாள். பலமான கதவுகளையும் காட்டினாள். அவ்விருவரும் கோட்டையைச் சுற்றி வருவ தற்குள் இரவு நெருங்கி விட்டது. மாளிகை திரும்பி மங்கலதேவி அவனைப் பார்த்துப் புன்முறுவல் செய்து, “இனி உங்கள் இருப்பிடம் செல்லலாம்” என்று கூறிக் கைதட்டி ரு காவலரை அழைத் தாள். அதன் காரணத்தை உணர்ந்த ரகுவீரன் காவலரைப் பின்பற்றிச் சென்றான். 

மங்கலதேவியிருந்த அரண்மனைக்குப் பக்கத்து மாளிகையிலேயே ரகுவீரன் தங்க வைக்கப் பட்டான். அடுத்த இரண்டு மூன்று நாட்கள் எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை கோட்டையில் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் செல்லவும் எதை வேண்டுமானாலும் பார்க்கவும் அவன் அனுமதிக்கப்பட்டான். இத்தனையிருந்தும், தான் சுதந்திர புருஷன் அல்ல னென்பதை ரகுவீரன் சந்தேகமற உணர்ந்து கொண்டான் செல்லு மிடங்களிலெல்லாம் யாராவது ஒரு வீரன் அவனைத் தொடர்ந்து, “இந்த இடம் இப்படி, இங்கே தான் ஆயுதக்கூடம்; கோட்டை மீது ஏற இது வழி” என்று எல்லாவற்றையும் காட்டுவதுபோல் பாசாங்கு செய்தாலும், அவன் உண்மையில் தன்னைக் காவல் புரிய ஏவப்பட்டவன் என்பதை ரகுவீரன் உணரவே செய்தான். மற்றபடி அவனுக்கு மாளிகையில் ராஜ மரியாதை அளிக்கப்பட்டது. 

மூன்றாவது நாள் மங்கலதேவியிடமிருந்து அவனுக்குத் திடீரென அழைப்பு வந்தது. அவனை மாளிகையில் சந்தித்த வீரன், “கோட்டைத் தலைவி அழைத்து வரச் சொன்னார்கள். வேட்டைக்குப் போகிறார்கள், காட்டுப் பகுதிக்கு,” என்றான். 

ரகுவீரனுக்கு இது பெரும் புதுமையாயிருந்தது. எதிரி ஒற்றனை வேட்டைக்கு அழைக்கும் பழக்கம் கிடையாதாகையால், “நான் ஆயுதம் தரித்து வரலாமா?” என்று விசாரித்தான். 

“பூரண ஆயுதம் தரித்துவர உத்தரவு. இதையும் கொடுக்கச் சொன்னார்கள்,” என்று கையிலிருந்த வில்லையும் அம்பறாத் தூணியையும் நீட்டினான் அந்த வீரன். 

ரகுவீரன் பதிலேதும் சொல்லாமல் உடை அணிந் தான். கத்தியை இடையில் கட்டினான். வில்லையும் அம்பறாத் தூணியையும் தோளில் மாட்டிக் கொண்டு வாயிலுக்கு வந்தான். அங்கு அவன் புரவியை இரு வீரர்கள் பிடித்துக் கொண்டு நிற்கவே அதன் மீது தாவி ஏறி, “தேவி எங்கிருக்கிறார்கள்?” என்று கேட்டான். 

“கோட்டைக்கு வெளியே,” என்றான் முதலில் வந்த வீரன். 

பிரதான வாயில் வழியாக வெளியே வந்த ரகுவீரன், புரவியை வேகமாகச் செலுத்திக் கோட்டையின் மலைச்சரிவில் காட்டு முகப்பில் மங்கலதேவி தன் புரவியில் சாய்ந்து எதிரே அலைமோதிக் கொண் டிருந்த கடலைப் பார்த்தவண்ணம் நின்றிருப்பதைக் கண்டு, சட்டென்று புரவியை நிறுத்தி அவளைக் கண் கொட்டாமல் நோக்கினான். 

காலை வேளையில் மங்கலதேவி புரவிமீது ஒரு கையைப் போட்டுக் கொண்டு கடலை நோக்கி நின்ற காட்சி, அவனை அப்படியே மயக்கத்திற் குள்ளாக்கியது. அவள் கூரிய விழிகளிலிருந்து வீரசக்தி, நுதலைத் தடவிய இரு தலைக்குழல் பிரிவுகள், சிறுத்த இடை, நிமிர்ந்த மார்பு இத்தனை யையும் பார்த்துப் பார்த்து மலைத்தான் ரகுவீரன். 

அவன் பார்வையையும் மலைப்பையும் அவள் கவனிக்கவும் செய்தாள். அதைப்பற்றி அவள் லட்சியம் செய்தாகத் தெரியவில்லை; புரவி மீது ஏறி அவளைத் தொடரும்படி சைகை செய்து, காட்டுக்குள் வெகு வேகமாய் புரவியைச் செலுத்தி னாள். உள்ளே செல்லச் செல்ல காடு மிகுந்த அடர்த்தியாயிற்று. சட்டென்று புரவியை நிறுத்தி இறங்கிய மங்கலதேவி, ரகுவீரனிடமிருந்த வில்லை வாங்கிக் கொண்டாள். அவனைச் சற்று பின்னடை யும்படி செய்து, காட்டின் அடர்ந்த பெரும் புதரொன்றைக் கவனித்தாள். அதிலிருந்து பெரும் உறுமல் ஒன்று கேட்கவே, வில்லை வளைத்து வாளியொன்றை அந்தப் புதரை நோக்கிப் பறக்க விட்டாள். அடுத்த விநாடி பயங்கர இரைச்சலுடன் பெரும் புலியொன்று புதரிலிருந்து பாய்ந்த வேகத்தில் கீழே விழுந்தது. ரகுவீரன் குறுவாள் அதன் கழுத்தில் ஆழப்பதிந்து கிடந்தது. 

அவன் குறுவாளை எடுத்ததையும் மங்கலதேவி பார்க்கவில்லை. வீசியதையும் பார்க்கவில்லை. எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தது. ஆகவே அவனை நன்றிக் கண்களுடன் நோக்கி னாள். ஆனால் ரகுவீரன் அவளை இரண்டு எட் டில் அணுகி இறுக அணைத்தான். “பயப்படாதே தேவி,” என்று தைரியமும் சொன்னான். 

மங்கலதேவியின் நிலை விவரிக்க இயலாதிருந்தது. சட்டென்று சீற்றத்துடன் அவனைத் தள்ளினாள், தன்னிடமிருந்து. “இந்தப் புலி இரண்டு நாட்களாகக் கோட்டையைச் சுற்றுகிறது. மேய்ச்சலுக்கு வரும் ஆடுகளையும் மாடுகளையும் அடித்து விடுகிற தென்று சொன்னார்கள். அதைக் கொன்றதற்கு நன்றி,” எனக் கூறிவிட்டுப் புரவி ஏறி வேகமாகச் சென்று விட்டாள் மங்கலதேவி, கோட்டையை நோக்கி. மங்கலதேவி புலியைக் கண்டு பயந்திருப்பா ளென்று அச்சப்பட்ட தன் முட்டாள் தனத்தை நினைத்து ரகுவீரனும் தன்னை நொந்து கொண்டு கோட்டைக்குச் சென்றான். ஆனால் மாளிகையை அடைந்த பின்பும் அவன் மனம் ஒரு நிலையில் இல்லை. மங்கலதேவியை அணைத்த இன்பத்தை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தான். அடுத்த மூன்று நாட்கள் மங்கலதேவி அவனைப் பார்க்க வில்லை. நான்காவது நாள் கோட்டையில் பரபரப்பு அதிகமா யிருந்தது. அதைக் கண்ட ரகுவீரன் காரணத்தை உணரவே செய்தான். அந்த உணர்வை வலுப்படுத்த ஒரு செய்தியும் வந்தது அவனுக்கு. மங்கலதேவியிட மிருந்தன்று, பிரதாபருத்திரனிடமிருந்து வந்தது. 

நோய்வாய்ப்பட்டு மிக பலவீனமான நிலையி லிருந்த பிரதாபருத்திரன் தீனமான குரலில் சொன் னான், “பாண்டிய வீரரே! என் உயிர் இன்னும் இரண்டு நாட்கள் தாம் உடலில் நிற்கும். இந்த தறுவாயில் நீங்கள் ஒரு வரம் தரவேண்டும்,” என்று. 

ரகுவீரன் அவரைப் பரிதாபமாகப் பார்த்தான். “சொல்லுங்கள்” என்றான். 

“செய்வதாகச் சத்தியம் செய்யுங்கள்- வாள் மீது,” என்றார் பிரதாபருத்திரன். 

மரணப் படுக்கையிலிருப்பவன் கோரிக்கையை மறுக்காதிருக்க, அவன் கேட்டபடி ஆணையிட் டான் ரகுவீரன். பிறகு, “என்ன செய்ய வேண்டும்,” என்று வினவினான். 

“என் மகளை நீ மணக்க வேண்டும், இந்தக் கோட்டையைக் காக்க வேண்டும்,” என்று பிரதாப ருத்திரன் சொன்னான். 

“இரண்டையும் நான் எதற்காகச் செய்ய வேண்டும்?” என்று எரிச்சலுடன் அனுதாபமும் கலந்த குரலில் கேட்டான் ரகுவீரன். 

“என் மகள் மீது இதுவரை யார் கையும் பட்டது கிடையாது. நீ அவளை அணைத்ததாக அவள் சொன்னாள். ஆகையால் அவளை மணக்கும் கடமையிருக்கிறது உனக்கு. மணந்தபின் அவள் கடமையை நீ ஏற்பதும் தர்மசாஸ்திரம்,” என்றான் பிரதாபருத்திரன். 

ரகுவீரன் பதிலேதும் சொல்லவில்லை, சிறு விநாடிகள். “இந்தக் கோட்டை ரணதீரன் தாக்கு தலைச் சமாளிக்க முடியுமா?” என்று வினவினான் முடிவில். 

பதிலுக்கு பிரதாபருத்திரன், “உன் மனைவியைக் கேள், என்றான். அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. தலையணையில் சாய்ந்து விட்டான். 

மயக்கமுற்றுச் சாய்ந்து விட்ட மங்கலபுரத் தலை வனை, மேலும் கஷ்டப்படுத்த இஷ்டப்படாமல் தனது இருப்பிடம் சேர்ந்த ரகுவீரன் மனத்தில் ஏதேதோ எண்ணங்கள் எழுந்து போராடிக் கொண்டிருந்ததால், அவன் அன்று இரவு முழுவதும் உறங்கவில்லை, பிரதாபருத்திரன் கோரிக்கை கள் அவனுக்கு மிக விசித்திரமாயிருந்தன. திடீரென வேவு பார்க்க வந்தவனை, பெண்ணை மணக்கும் படியும் கோட்டைக் காவலை ஏற்கும்படியும் பிரதா பருத்திரன் ஏன் கேட்டார் என்பது விளங்கவில்லை அந்த வாலிப வீரனுக்கு. ஆனால் மங்கலதேவியின் இணையிலா அழகை, அணைப்பு அளித்த ன்பத்தை நினைத்த போது, உள்ளே எழுந்த. கேள்விகள் எங்கோ பறந்து சென்றன. பிரதாபருத் திரன் புத்தியைப் போல் மயங்காவிட்டாலும் தனது புத்தியும் வேறு விதத்தில் மயங்கிக் கிடப்பதை உணர்ந்து கொண்டான் ரகுவீரன். ‘உணர்ச்சி வேகத்தில் மங்கலதேவியை அணைத்து விட்டாலும் அணைத்தது தவறுதானே,” என்று தன்னைக் கேட்டுக் கொண்டான். அணைத்த பின்பு வீரன் கடமை, பெண்ணை அனாதரவாக விட்டுச் செல்வதன்று என்றும் அவனுக்குப் புரிந்திருந்தால் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அன்றிரவு முழுவதும் இப்படி மயங்கிய நிலையி லிருந்த ரகுவீரன், மறுநாள் காலை ஒரு முடிவுக்கு வந்தான். வந்ததும் நீராடி புத்துடையணிந்து மங்கலதேவியைப் பார்க்கச் சென்றான். 

மங்கலதேவி அவனை பழையபடி ஆஸ்தான மண்டபத்திலேயே சந்தித்தாளானாலும் ஆசனத்தில் அமரவில்லை. தலையை நிலத்தில் தாழ்த்திய வண்ணம் நின்று கொண்டிருந்தாள். பேச்சை அவள் துவக்காததால் ரகுவீரனே துவக்கினான், “தங்கள் தந்தை எனக்கு இரண்டு கட்டளைகள் இட்டிருக்கிறார்.” என்று. 

“தெரியும்” என்பதை தேவி வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் தலையை மட்டும் அசைத்தாள்.

“உங்களை மணக்க வேண்டுமென்பது ஒரு கட்டளை,” என்று திடமாகவே சொன்னான் ரகுவீரன். 

அதற்கும் பதிலில்லை அவளிடமிருந்து. இம்முறை தலையசைப்பும் இல்லை. ரகுவீரனே சொன்னான், “கோட்டையைக் காக்க வேண்டுமென்பது இரண் டாவது கட்டளை,” என்று. 

அவள் மெல்லத் தன் கண்களை உயர்த்தி அவனை நோக்கினாள். “என்ன செய்ய உத்தேசம்?” என்று வினவவும் செய்தாள் திடமான குரலில், 

“முதல் கட்டளை உன் விருப்பப்படி நடக்கும். இரண்டாவது கட்டளையை நிறைவேற்றுவது என் கடமையாகிறது,” என்று சந்தேகத்துக்கு இடமின்றிக் கூறினான் ரகுவீரன். 

“அப்படியானால் கோட்டையைக் காக்கப் போகிறீர்கள்?” என்று வினவினாள் மங்கலதேவி. 

“ஆம். ஒரு பெண்ணை அவள் இஷ்டவிரோத மாகத் தீண்டியது தவறு. அவளை வஞ்சித்துக் கோட்டையை எதிரியிடம் ஒப்படைக்க வந்தது அதை விடத் தவறு. இரண்டுக்கும் வீரனுக்குள்ள ஒரே பிராயச்சித்தத்தை நிறைவேற்றத் தீர்மானித்து விட்டேன்.” 

“அப்படியானால் உங்கள் மன்னனுக்கு விரோதமாகத் திரும்பப் போகிறீர்களா?” 

“இல்லை.” 

“கோட்டையைப் பாதுகாத்து- உங்கள் மன்னனுக் கும் துரோகம் செய்யாதிருக்க எப்படி முடியும்? இரண்டும் நேர்முரண்பாடான விஷயமாயிற்றே?” 

“அறிவு எந்தச் சிக்கலையும் அவிழ்க்கும்” என்ற ரகுவீரன், “இன்று பகல் இந்தக் கோட்டையின் மூன்று வாயில்களையும் காவல்புரியும் மகாரதர் களைக் கூட்டுங்கள். என்னைப் படைத்தலைவனாக அறிமுகம் செய்யுங்கள்,” என்றும் சொல்லிவிட்டுச் சென்ற வேகத்தை பார்த்த மங்கலதேவி புன்முறுவல் செய்தாள். 

அன்று பிற்பகலில் மந்திராலோசனைக் கூட்டத் தில் மகாரதர்களுக்கு ரகுவீரனை தேவி அறிமுகப் படுத்தினாள். “படைத்தலைவர்களே! இதோ இருக் கும் ரகுவீரனை என் தந்தை இந்தக் கோட்டைத் தலைவராக நியமித்திருக்கிறார். ஆகவே இன்று முதல் நீங்கள் இவர் சொல்படி நடக்க வேண்டும்.” என்று சுருக்கமாக விஷயத்தைத் தெரிவித்தாள். 

மகாரதர்கள் வாயைப் பிளந்தார்கள். ரகுவீரனை அவர்கள் மூன்று நாட்களாகப் பார்த்துக் கொண்டு தானிருந்தார்கள். அவன் பாண்டிய ஒற்றனென் பதும் அவர்களுக்குத் தலைவனாகிறான் என்பதைக் கேட்டதும் படைத்தலைவர்கள் வியப்பும் திகைப்பும் அடைந்தார்கள். “இவரை எப்படி நாம் நம்ப முடியும்?” என்றும் ஒரு படைத்தலைவன் வினவினான். 

ரகுவீரன் மங்கலதேவிக்கு அருகில் போடப் பட்டிருந்த தனது ஆசனத்திலிருந்து எழுந்து மகார தர்களை உற்று நோக்கினான். பிறகு சொன்னான்: “பிரதாபருத்திரர் மரணத் தருவாயிலிருக்கிறார், அவருக்கு என் வாளின்மீது ஆணையிட்டு வாக்குக் கொடுத்திருக்கிறேன்,” என்று. 

“அனுதாபத்தாலா?” -வினாவினான் இன்னொரு படைத்தலைவன். 

“அல்ல. அனுதாபத்தை மரணப் படுக்கையிலிருந்தாலும் எந்த வீரனும் விரும்ப மாட்டான்,” என்றான் ரகுவீரன். 

“வேறு என்ன காரணம்? என்று கேட்டான் இன்னொருவன். 

“காரணம் என்பதைவிடக் கடமை என்ற சொல் பொருந்தும்,” என்று சொல்லித் தனது பார்வையை மங்கலதேவியின் பக்கம் ஒரு முறை திருப்பிய ரகுவீரன், “இத்துடன் கேள்விகள் நிற்கட்டும்; செயலில்’ இறங்குவோம். இன்று பகல் நாம் கோட்டைப் பாதுகாப்பையும், படைப்பிரிவுகளையும் பார்வையிடுவோம்,” என்று கூறி அவர்களுக்குப் போக விடை கொடுத்தான். 

அவர்கள் சென்றதும் தனித்து விடப்பட்ட மங்கலதேவியும் ரகுவீரனும் ஒருவரையொருவர் நோக்கிக் கொண்டு நின்றார்கள் நீண்ட நேரம். கடைசியாக மங்கலதேவியே அவனை அணுகி, “உங்கள் பெயரை நாசம் செய்து கொள்ளாதீர்கள். போய்விடுங்கள் இக்கோட்டையை விட்டு,” என்றாள் மெதுவாக. அவள் கண்களில் விவரிக்க இயலாத துன்பம் மேலோங்கி நின்றது. 

“அதற்குரிய சமயம் போய்விட்டது மங்கலதேவி,” என்றான் தீனமான குரலில். 

“ஏன்?” மங்கலதேவியின் குரல் அவன் குரலைவிடப் பலவீனமாயிருந்தது. 

ரகுவீரன் அவள் தோள்களைப் பற்றினான் இரு கைகளாலும், “நான் இங்கு வந்ததே தவறு உன்னைக் கண்டது அதைவிடத் தவறு. கண்டபின் உலகை மறந்து உணர்ச்சிக்கு இடங் கொடுத்தது அதைவிடத் தவறு. எல்லாவற்றுக்கும் மேலாக…” சொற்களை முடிக்கவில்லை ரகுவீரன். 

“எல்லாவற்றுக்கும் மேலாக.” மிக மெதுவாகக் கேட்டாள் மங்கலதேவி. 

“உன்னிடம் மனத்தைப் பறிகொடுத்ததும் பெரும் தவறு,” என்றான் வாலிபன். 

“தவறா?” என்றாள் யுவதி. 

இருவர் கண்களும் சந்தித்தன. இருவரும் பேச வில்லை. ஒருவரையொருவர் புரிந்து கொண்ட காரணத்தால், அன்றைக்குப் பிறகு மங்கலதேவியை ரகுவீரன் பார்க்கவில்லை. படைகளைப் பார்வை யிடுவதிலும், அணி வகுப்பதிலும் காலங்கழித்தான். அவன் அங்கு வந்த தினத்திலிருந்து சரியாக எட்டா வது நாள் ரணதீரனின் பெரும் படை மங்கலபுரத்து மலைச் சரிவில் அணி வகுத்து நின்றது. 

பாண்டிய மன்னன் பெரும் படையை எதிர்க்க ரகுவீரனும் சித்தமானான். போர் தொடுப்பதற்கு முதல் நாளிரவு வந்த பாண்டிய தூதனை, மங்கலதேவியுடன் ரகுவீரனே சந்தித்தான். ஆஸ்தான மண்டபத்தில். 

பாண்டிய தூதன், மங்கலதேவிக்கு பக்கத்தில் சரி சமானமாக அமர்ந்திருந்த ரகுவீரனைக் கண்டதும் முகத்தில் ஒரு விநாடி வியப்பைக் காட்டினாலும் அதைச் சட்டென்று மறைத்துக் கொண்டு, தூதுச் செய்தியைச் சொன்னான். “பாண்டிய பூபதி, செங்கோல்தென்னவன், செம்பியன், மதுர கருநாடகன் கோட்டைய உடனடியாகத் தன்னிடம் ஒப்படைத்து வீணான படைச் சேதத்தைத் தவிர்க்கும்படி மங்கலதேவிக்கு உத்தரவிடுகிறார். இல்லையேல் நாளைக்கே கடும்போர் தொடங்கப்படும் என்று அறிவிக்கிறார். அது தவிர, அவரது ஒற்றரும், சிறந்த வீரருமான ரகுவீரனை என்னுடன் அனுப்பி வைக்குமாறு கட்டளையிடுகிறார். வாழி பாண்டிய மன்னன்,” என்று அறிவித்தான் தூதன் திடமான குரலில். 

இதற்கு பதில் சொல்ல வாயைத் திறந்த மங்கலதேவியை கை சைகையால் அடக்கிய ரகுவீரன் தூதனை நோக்கி, “தூதுவனே ரகுவீரனை ஒற்றனாக நினைத்தது தவறு என்று பாண்டிய மன்னனிடம் சொல். மங்கலாபுரக் கோட்டையை ரகுவீரன் காக்கும் வரையில் அதை வசப்படுத்துவது பத்துப் பாண்டிய மன்னர்கள் வந்தாலும் முடியாதென்று சொல். கோட்டைத் தலைவன் ரகுவீரன் நாளைக் காலையில் பாண்டியர் படைகளைக் கோட்டைக்கு வெளியே சந்திப்பதாக சொல்,” என்றான் வீரம் ததும்பும் குரலில். 

தூதுவனுக்கு வியப்பு அதிகமானதால் புன் முறுவல் மட்டும் செய்தான். “ரகுவீரருக்கு உயிரின் மேல் ஆசையில்லை போலிருக்கிறது?” என்றும் சொன்னான். 

“உயிரைவிட உயர்ந்த விஷயங்கள் உலகத்திலிருக்கின்றன,” என்றான் ரகுவீரன். 

“என்னவோ?” 

“மானம், கடமை” என்ற ரகுவீரன், “இதையும் பாண்டிய மன்னரிடம் சொல். என்னை இங்கு அனுப்பு முன்பு அவர் பொதிய மலையிலிருந்த அனுப்பிய ஓலையையும் நான் பார்த்ததாகச் சொல் மன்னன் கையெழுத்து நான் அறியாததன்று என்றும் சொல்,” என்று கூறித் தூதன் போகலாமென்பதற்கு அறிகுறியாகக் கையைக் காட்டினான். இந்தத் தூதை அப்படியே போய்ச் சொன்னான் பாண்டிய மன்னனிடம் தூதன். அதைக் கேட்ட ரணதீரனில் முகத்தில் பெரும் திருப்தி உலாவியது. 

மறுநாள் காலை கோட்டைக் கதவுகளைத் திறந்த கொண்டு வெளியே வந்த கொங்கு நாட்டு படைகளின் முன்னிலையில் மகாரதர்களுக்கும் முன்பாக ரகுவீரன் வாளை உயர்த்திக் கொண்டு புரவியில் வெகு வேகமாக மலைச் சரிவில் வந்தான். படைகள் கை கலந்தன. கடுமையான போர் மூண்டது. ஒரு பகுதியிலிருந்து மலைக் காட்டுக் கருகே புரவியில் நின்று போரிட சன்னத்தமாயிருந்த ரணதீரனை வெகுவேகமாக நெருங்கினான் ரகுவீரன். 

மலைச்சரிவில் போர் மிகக் கடுமையாக நடந்தது. மகாரதர்களில் மூவர் படுகாயமுற்றனர். பாண்டியப் படையும் அதிகச் சேதப்பட்டுக் கொண்டிருந்தது. ரகுவீரன் தேவியின் படையை அணிவகுத்திருந்த காரணத்தால், சேதத்தை அதற்கு மேல் போகவிட இஷ்டப்படாத ரணதீரன், தன் புரவியை ரகு வீரனை நோக்கிச் செலுத்தி வாளையும் பாய்ச்ச ஓங்கினான். இருவர் வாள்களும் பயங்கரமான ஒலியுடன் உராய்ந்தன. 

5 

மங்கலபுரத்தில் மலைச்சரிவில் காட்டுப் பகுதி யின் ஓரத்தில் புரவி மீதிருந்து கொண்டே போரிட்ட மதுரை மன்னனையும் ரகுவீரனையும் சுற்றிலும் எட்டவும் கடுமையான போர் நடந்து கொண்டிருந்தாலும் அந்த இருவரும் அனைத்தையும் மறந்து ஒருவரையொருவர் மும்முரமாகத் தாக்கிப் போரிட் டார்கள். இருவர் புரவிகளும் சுழன்றன, இடித்தன, தாக்கின. மேலிருந்த வீரர்களின் இச்சைப்படி வீரர் இருவரும் கத்திகளை மாறி மாறி வீசியும் குறுக்கே பாய்ச்சியும் போரிட்டனர். அப்படிப் பொருத்திக் கொண்டிருந்த சமயத்தில் மற்ற இடங்களில் மங்கலபுர மகாரதர்கள் வீழ்ந்துவிட்டதால் கோட் டைப் படைகள் சிறிது பின்வாங்க ஆரம்பித்தன. பல போர்களில் கலந்து கொண்டதால் சாணை பிடிக்கப்பட்ட கத்தியைப் போலிருந்த கோச்சடை யன் படை, எதிரிகளை வளைத்து அழிக்க முயன்று கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் யாரோ ஒருவன் பயங்கரக் கூச்சலிட்டதால், காட்டுப் பக்கமிருந்த மன்னன் படை சட்டென்று போரை நிறுத்தியது. தன் புரவி மீது எங்கிருந்தோ வந்த ஒரு வேல் பாய்ந்துவிட்டதால் தரையில் குதித்தான் ரணதீரன்.

புரவியிலிருந்த ரகுவீரனும் புரவியை விட்டு தரையில் குதித்து மன்னனுடன் போரில் இறங்கினான். இருவர் வாட்களும் பயங்கரமாக மீண்டும் மீண்டும் இணைந்தன. உராய்ந்தன, கணீர் கணீ ரென சப்தித்தன. ரணதீரன் வயதில் பெரியவனா னாலும் வாலிபனான ரகுவீரன் மிக அநாயாச மாகச் சமாளித்தான். ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ரகுவீரன் வாள் சரேலென அவன் கையிலிருந்து பறந்துவிட, ரணதீரன் வாள் அவனை நோக்கி இறங்க முற்பட்டது. அந்தச் சமயத்தில், “மன்னவா! கை அப்படியே நிற்கட்டும்” என்று சற்று எட்ட இருந்த மரத்தின் மறைவிலிருந்து மங்கலதேவியின் குரல் ஒலித்தது. 

அதைக்கேட்ட மன்னன் சிறிது தயங்கினான். “என் அம்பு உங்கள் மார்புக்குக் குறி வைக்கப் பட்டிருக்கிறது. தாங்கள் சிறிது அசைந்தாலும் பாண்டிய நாடு மன்னனை இழந்துவிடும். உங்கள் சாம்ராஜ்யமும் கனவாகிவிடும்,” என்று மங்கலதேவி மீண்டும் எச்சரித்தாள். 

அச்சமென்பதை ஆயுளில் அறியாத, மரணத்தை எப்பொழுதும் வரவேற்கும் குணமுள்ள ரணதீரன் இதழ்களில் புன்முறுவல் அரும்பியது. அவன் வாள் உயர்ந்து ஒரு முறை அசைந்தது. பிறகு உறையில் சென்று நுழைந்தது! கணை தொடுத்த வில்லுடன் மங்கலதேவி காட்டின் மறைவிலிருந்து வெளிவந் தாள்: வியப்புடன் போர்க்களத்தை நோக்கினாள். எங்கும் போர் சட்டென்று நின்றிருந்தது. ரணதீரன் வாளின் ஓர் அசைவுக்கு இருந்த சக்தியை நினைத்து வியந்த மங்கலதேவி, வில்லையும் வாளையும் மன்னன் பாதங்களில் வைத்துவிட்டு, ரகுவீரன் பக்கத்தில் நின்று கொண்டாள், “எங்களிருவரையும் சேர்த்தே சிறை செய்யுங்கள்,” என்று வேண்டிக் கொண்டாள். 

கோச்சடையன் கண்கள் சிரித்தன. “தேவி! இவனுடன் நீ சேராதே. இவன் உன்னைக் காட்டிக் கொடுத்தவன்,” என்றான், ரகுவீரனைச் சுட்டிக் காட்டி. 

“அதற்கு என்ன தண்டனை?” என்று கேட்டாள் மங்கலதேவி. 

“இன்னும் தீர்மானிக்கவில்லை.” 

“உங்கள் தண்டனையைத் தீர்மானித்துக் கொண்டீர்களா?” 

“எனக்கு எதற்கு தண்டனை?” 

“அவரை என்னிடம் காட்டிக் கொடுத்ததற்கு, அவர் வரப்போவதாக எனக்குக் கிடைத்த ஓலை நீங்கள் எழுதியது,” என்று மங்கலதேவி மிக இகழ்ச்சியுடன் ரணதீரனைப் பார்த்தாள். 

பாண்டிய மன்னன் விழிகள் வியப்பால் மலர்ந்தன. “இது இவனுக்கும் தெரியுமா?” என்று ரகுவீரனைச் சுட்டிக்காட்டிக் கேட்டான்.

“உங்கள் கையெழுத்து எனக்கே தெரியும்போது, உங்கள் அந்தரங்க வீரருக்கா தெரியாமல் போகும், என்று வினவினாள் மங்கலதேவி. அத்துடன் மேலும் சொன்னாள்: “மன்னவா! மனோதத்துவம் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. கோட்டைக்கு வெளியே என் படை வராவிட்டால் கோட்டையைப் பிடிக்க முடியாதென்று உங்களுக்குத் தெரியும். ஆகவே என்னை வளைக்க இவரை அனுப்பினீர்கள். ஆனால் இவர் ஒரு பெண்ணைப் போருக்கு அனுப்ப இஷ்டப்படாமல் தானே படைகளை நடத்தி வந்தார். அதனால் உங்கள் இஷ்டத்தையும் நிறைவேற்றினார். தானும் மடியப் பார்த்தார்…” என்று. 

மீதிச் சொற்களை மன்னவனே முடித்தான். “முடியவில்லை மங்கலதேவி வில்லேந்தியதால்” என்ற மன்னன், “மங்கலதேவி! இன்று போரை என் படை வென்று விட்டது. கொங்கர்கோன் இனி தலை எடுக்க முடியாது. ஆனால் இது பாண்டியன் தோல்வி,” என்றும் கூறினான். 

“எப்படி மன்னவா ?” – முதன் முதலாக மெளனத் தைக் கலைத்தான் ரகுவீரன். 

“ஒரு பெண்ணுக்கு- அஞ்சி ரணதீரன் வாளை உறைக்குள் போட்டான் என்பதே தனிச் சரித்திரம்,” என்ற பாண்டிய மன்னன், “தேவி! வா கோட் டைக்குப் போவோம்,” என்று கூறி மலை மீது ஏறி நடந்தான்; தேவியும் ரகுவீரனும் அவனைத் தொடர்ந்தனர். 

அன்றிரவு ஆஸ்தான மண்டபத்தில் தன் வீரர் புடைசூழ அமர்ந்திருந்த மன்னன், தனது படைத் தளபதிகளை நோக்கி, “படைத்தலைவர்களே! இன்று பாண்டிய சாம்ராஜ்யக் கனவு பூர்த்தியாகிறது. மகாரதர்கள் வெல்லப்பட்டார்கள். மங்கலபுரக் கோட்டையும் நமது வீரத்துக்கு அடிபணிந்தது. இனி நம்மிடம் சிக்கியுள்ள மங்கலதேவிக்குத் தண்டனை யளிக்க வேண்டும். என்ன தண்டனை அளிக்கலாம்?” என்று வினவினான். இதைச் சொன்ன அரசன் குரல் கடுமையாக இருந்தது.

“சிறையிலடைக்கலாம்,” என்றான் ஒரு படைத்தலைவன். 

“ரகுவீரனை என்ன செய்யலாம்?” என்றான் மன்னவன். 

“நமக்கெதிராகப் போரிட்டிருக்கிறார். அதற்கு மரண தண்டனைதான்,” என்றான் இன்னொரு படைத் தலைவன். 

“ராஜத் துரோகத்துக்கு மரணம் மிக எளிய தண்டனை” என்றான் ரணதீரன்.

அதைக்கேட்ட படைத்தலைவர்கள் திகைத்தனர். மன்னன் ஆசனத்தை விட்டு எழுந்திருந்தான். தனது படைத் தலைவனை அழைத்து, “அவளுடன் இவனையும் ஒரே அறையில் தள்ளிப் பூட்டி வையுங்கள். நாளைக் காலையில் தண்டனை கொடுக்கிறேன்,” என்று கூறிவிட்டு மன்னவன் ஆஸ்தான மண்டபத்தை விட்டு விலகினான். 

மறுநாட் காலை அவர்களிருந்த கதவு திறக்கப் பட்டது. மெல்ல உள்ளே தலையை நீட்டிய காவ லன் சட்டென்று தலையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு, “தேவி! தேவி!” என்று கூவினான். 

தேவி சில விநாடிகளுக்குப் பிறகு, சிற்றிடை துவள வெளியே வந்து, “என்ன?” என்று விசாரித்தாள். 

“விடியற்காலையில் பாண்டிய மன்னன் படையுடன் புறப்பட்டுப் போய்விட்டார்” என்றாள் காவலன். 

“போய் விட்டாரா!” – வியப்புத் தாங்கவில்லை மங்கலதேவிக்கு. 

“ஆம்.” 

“படைகள்?” 

“அவருடன் போய்விட்டன.” 

“உத்தரவு எதுவும் இடவில்லையா?”

“இல்லை. இந்த ஓலையைக் கொடுக்கச் சொன்னார்,” என்று காவலன் ஓர் ஓலையை நீட்டினான்.

“தேவி! மங்கலாபுரத்தை என் சார்பில் காத்து வா. ரகுவீரனைப் படைத்தலைவனாக வைத்துக் கொள். அவனை நம்பி வெளியே விடாதே – ரணதீரன்” என்று இருந்தது ஓலையில். 

தேவியின் முகத்தில் மந்தகாசம் விரிந்தது. திரும்பி உள்ளே பார்த்தாள். வெட்கம் அவள் முகத்தில் வழிந்தோடியது. “சரி போ” என்று காவலனை அனுப்பி விட்டு மீண்டும் கதவைத் தாழிட்டாள்.

– மங்கலதேவி (சரித்திரக் கதைகள்), முதற் பதிப்பு: பெப்ரவரி 1979, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *