ப்ரளயம்




(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் என்னை வெறுக்கும் வெறுப்பில், என்னை மறந்த வெறியில், வானை நோக்கிக் கைகளைக் காட்டிப் பழித்து இழைத்த சாபங்களே உருவாயின போலும், இதுவரை தூயதாய்த் துலங்கிய வானில், கருமேகங்கள் திரளத் துவங்கின. அவை எங்கிருந்து, எப்படி, எப்பொழுது, அப்படி வந்தன? எதிரில் ஒரு வரும் இல்லையென்று நான் என்னுடனேயே என்னைப் யற்றிப் பேசிக் கொள்ள ஆரம்பித்ததுமே எண்ணங்கள் பெருக்கெடுத்து விட்டன. அவை போன வழி என்னை என்னைச் இழுத்துச் சென்றதில், நான் செல்வழியும், சுற்றி இருந்தனவும் நேர்ந்தனவும் மறந்தன. நானே என் எண்ணங்களை அடைத்துக் கொண்டிருந்ததில், மற்றவை மறைந்தும் போயின.
அச்சமயம் என்னை என்னிலிருந்து பிரித்து என் னெதிரில் நிறுத்தி வைத்துக் கேள்விகள் கேட்டு என்மேல் என்னை நான் துப்பிக் கொண்டிருந்தேன். தன்மீது தான் வைத்திருக்கும் பாசத்திற்கு மிஞ்சியது இல்லை. அதே போல் தன்னைத் தானே வெறுக்கும் பயங்கரம் போல் எதுவும் இல்லை. தன்னை வெறுக்கையில் தான் வெறுக்காதது எதுவும் இல்லை.
அவளை அவள் ஊருக்கு அழைத்துச் சென்ற ரயிலை வெறுத்தேன். அவளை அழைத்துச் செல்ல வந்திருந்த அவள் வீட்டாரை வெறுத்தேன். பச்சைக் கொடி காட்டி மணியடித்து, வண்டியைத் துரிதப்படுத் திய ரயில் சிப்பந்திகளை வெறுத்தேன். என்னை ஏளனம் செய்த புகை வண்டி ஊதலை வெறுத்தேன். அவள் புன்னகையின் மயக்குக்கே முழுப் பங்கென நான் நினைக்கும் அவள் தத்திப்பல், இப்போது பிரியும் சமயம் அவள் சிரித்த சிரிப்பில் தோன்றியதும் அதையும் வெறுத்தேன். பிரிவு தாங்காது என் முகத்தில் குறு குறுத்துக் குழம்பிய ரத்தச் சிவப்பை வெறுத்தேன். இ பிரிவுக்குக் காரணமாயிருந்த என் வித்தை வெறுத்தேன். இதுபோலவே நான் உண்டான போதும் என் தகப்பன் என்னை வெறுத்திருப்பான் என்று நினைக்கையில், என் தகப்பனை வெறுத்தேன். அவனைப் பார்த்து சிரித்திருந் திருக்கும் தாயை வெறுத்தேன். பிறகு, உலகில் நான் வெறுக்காதது எதுவும் இல்லை.
இம்மாதிரி நேரும் என்று நான் நினைக்கவில்லை. இம்மாதிரித்தான் எல்லோருக்கும் நேருகிறது என்பதை யும் நினைக்கவில்லை. இம்மாதிரி நேராவிடில் நானே நேர்ந்திருக்கமாட்டேன் என்பதையும் நினைக்கவில்லை. என்னைப் பற்றி மாத்திரம்தான் நினைத்தேன். இந்த ‘என் என்’ என்று என்னுள்ளிருந்து என்னை ஆட்டு வித்த எந்த ‘என்னை’ நான் வெறுத்தேன்? மண்டை யெரிச்சலில் எண்ணங்களின் உருக்களும் உருகிச் சவுங்கிக் குழம்பின.
திடீரென ஒன்றும் இரண்டுமாய்த் தூறல்கள். உடனே மடமடவெனக் கொட்டவும் ஆரம்பித்துவிட்டது. கோடை மழை ஒவ்வொரு துளியும் ஒரு வெள்ளத்தின் அம்சம். திக்குமுக்காடி ஒதுங்க இடந் தேடுவதற்குள், கணுக்கால் ஆழத்திற்கு வெள்ளம் காலடியில் மண்ணைப் பறித்துக் கொண்டு ஓடிற்று. வேரோடு பிடுங்கிக் கொண்டு, ஜலத்தில் அடித்துக் கொண்டு வந்த ஒரு கொடி காலைச் சுற்றிப் பின்னிற்று.ஜலம் கோபக் கண்ணின் அடிச் சிவப்புடன் வண்டல் மண்ணைக் கரைத்துக் காலடியில் சுழித்து ப்ரளயமாய் ஓடிற்று வானம் எதிர்த்துச் சீறிற்று. என் கண்கள் இடந்தேடி அலைந்தன. எதிரில் ஏரிக்கரை; இருமருங்கிலும் காற்றில் அலைந்து பிசாசு ஆடும் பனைகள், அப்பால் வயல்களும் கட்டான் கட்டானாய் வயற்பரப்புக்களும்; அந்தண்டை ஊருக்கு மதில்போல் நிற்கும் சவுக்குத் தோப்பு; அதன் மேல் அடிப்பாரம் போட்டுக் கொண்டு கொட்டத் தயா ராகும் இன்னொரு மேகத்திரள்.
இத்தனையும் வட்டமிட்டு மீள்கையில்தான் பார்வை எதிரேயே, கிட்டவே நின்ற பாழ் மண்டபம் மேல் விழுந்தது. இடுப்பின் கீழ்க் கல்லாய்க் கனத்த கால் களை என்னோடு எதிர் வெள்ளத்தில் இழுத்துக் கொண்டு மண்டபத்தை அடைந்தேன். உடலோடு ஒட்டிப்போன சட்டையை உரித்துப் பிழிந்தேன். சாரல் சாட்டை நுனி மாதிரி கொட்டிற்று. பழுக்கக் காய்ச்சிய ஊசிபோல் குளிர் சுறீலென உடலை ஊடுருவிற்று.
“நல்ல மழை”
உருத் தெரியாது. குரல்மாத்திரம் மண்டபத்தில் தேங்கிய இருளின் உள்ளினின்று வெளிப்பட்டதும் தூக்கி வாரிப்போட்டது. கண்கள் இருளைத் துருவ முயன்றன. உதவியாய் குரலுக்குடையோனும் இருளினின்று வெளிப் பட்டான். அவனும் இடுப்புவரை வெறும் உடம்பு
“சமயமும் இதுதான் சரி, இத்தனை காய்ச்சலுக்கப் புறம் இப்படிப் பூமி குளிர்ந்து, ஆடி விதைப்புக்கு, மாசியறுப்பு சுமாராய் இருக்கும். போன வருஷமே பயிர் ய்தராய்ப் போச்சு. இப்போது அரை வயிற்றுக்காவது ஆகுமா?”
அவன் தொடுத்த பேச்சு என் செவி பட்டதே யன்றிக் கவனம், அவன் வலக் கரத்தில் பாய்ந்து அங் கேயே விறைத்தது. அவன் கை, தோள் பூட்டினின்று முழங்கைவரை இரு சுண்டு விரல் பருமனுக்குச் சூம்பிப் போயிருந்தது. அவ்விடத்துத் தோல் சுட்ட பழம்போல் சுருங்கி அருவருப்பையும் சிறு பயத்தையுங்கூடத் தந்தது. கொஞ்சம் சுரண்டினால், அல்ல இசைகேடாய் எங்கே யாவதுபட்டுவிட்டாலும் எலும்பின் முகடு வெளிப்பட்டு விடுமோ என்னவோ?
அவன் புரிந்து கொண்டு விட்டான். “சட்டையைப் பிழிந்து உலர்த்தியிருக்கிறேன்”
நான் வெட்கி வார்த்தைக்குத் தட்டுத் தடுமாறினேன். அவன் புன்னகையுடன் கையமர்த்தினான். “ஒரு விஷயம்: என்னைப் போன்றவர்கள் ஒரு தினுசில் உங்களைப் போன்றவர்களைவிட உயர்ந்தவர்கள்தான். நாங்கள் போனவிடமெல்லாம், கவனம் கவர்ந்து டுவோம். எப்போதுமே அழகைவிட அங்கஹீனத் துக்குத்தான் ஆச்ரயிப்பு.
பதில் சொல்ல முடியாமல் தவித்தேன்.
“ஒரு தினுசில் நாங்கள் துறவிகள் கூட; நாங்கள் ஒட்ட விரும்பினாலும் எவரும் எங்களோடு ஒட்டப் பயப் படுவார்கள். சிதைவு கண்ட அருவருப்பு அப்புறம் என்ன தான் இழைந்தாலும், இடையில் சுவர் விழுந்துவிடுகிறது. இந்தச் சுவர் எங்களுக்குத் தெரியவில்லை என்று நினைக் கிறீர்களா? பழகப்பழக அருவருப்பு மறைந்துவிடுகிறது என்றே சாதிப்பீர்கள். அதையும் உண்மையென்றே வைத்துக் கொள்வோம். சரி, அருவருப்புத் தாண்டி. அல்ல, மாறி உங்களுக்குத் தோன்றுவதென்ன ? இரக்கம், அனுதாபம்! படியேறிக் கைநீட்டும் பிச்சைக்காரனுக்கும், நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு வாலைக் குழைக்கும் நாய்க்கும் காட்டும் மனக்கசிவு ! வேண்டா மையா, உங்கள் இரக்கம்!”
“பின் என்ன வேண்டும் உங்களுக்கு?”
அவன் விரலைச் சொடுக்கினான், “அன்பு.”
“முதலில் இரக்கம் கண்டுதான் அன்பாய் மாறும்.” என்றேன்.
“நீங்கள் சொல்வது கருணை. நான் குறிப்பது அது வல்ல. அன்பு, அன்பு, அன்புகூட இல்லை. உள்ளத்தின் நேர் எழுச்சி. இரு தன்மைகள் திடீரென ஒன்றுடன் ஒன்று இழைந்தோ, மோதியோ விளையும் ரஸாயனம். அது வேண்டுகிறேன்- இப்படி வாருங்கள் உட்கார்ந்து பேசுவோம். மழையோ விட்டபாடில்லையே !”
“இந்த அன்புக்கு நாங்கள் எவ்வளவு ஏங்குகிறோம் உங்களுக்குத் தெரியுமா? உங்களால் அறியவே முடியாது. உங்களைவிட அங்கம் சிதைந்த நாங்கள் நன்கு அறிவோம்.”
“இம் ‘மெய்யெனும் பொய்’ என்று மெய்கண்டார் உடலைப் பழிப்பது ஏனோ எனக்குத் தெரியவில்லை. இம் ‘மெய்யினும் மெய் எது? நான் யார் என்று என்னை நான் எண்ணிப் பார்த்தால் இவ்வுடலைத்தான் ‘நான்’ என்பேன் அழியும் உடல்தானே என்பீர்கள். அழியட்டுமே அதனால் அதன் ‘நான்’ குறைந்துவிடுமா? நீங்கள் சிகரெட் குடிக்கும் பழக்கமுண்டா? இல்லையா? நான் குடிக்கலாமா? Thank you.”
புகையை ஆசையாய் இரண்டு இழுப்பு இழுத்தான். “இந்தக் கை, இது என் பிறவியூனம்.”
“என்னைப் பெற்றவள், இதைப் பார்த்த பயத்தில் சுவர்ப் பக்கம் திரும்பினவள் திரும்பினவளைத் திருப்பி யதும் உயிர் போயிருந்ததாம்.
“கடவுளை ஒன்று கேட்க நியாயம் உண்டு. ஏன் கஷ்டத்தைக் கொடுத்தாய் என்று நான் கேட்கவில்லை. ஆனால் கூடவே ஏன் ரோசத்தைக் கொடுத்தான்? நான் ஏதோ ஒன்றும் இல்லாததைப் பிரமாதம் பண்ணுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்கள் கை நல்ல கை நினைவில் வையுங்கள். ஆகையால் எப்பவும் நீ நானாக மாட்டாய். நானும் நீயாக மாட்டேன். நம்மின் ‘நான் நான்’ தனித்தனி.”
அவன் சட்டென ஒருமையில் நழுவியது மரியாதைக் குறைவாய், பண்புக் குறைவாய் இல்லை. பாந்தமாகவே பட்டது.
“என்னுள் எனக்கு ஒரே கேள்விதான். என்னைச் சமமாய்ப் பாவிப்பவர் யார்? நான் படிக்கும் நாளிலும் என்னுடன் ஒரு பையனும் சண்டைக்கோ, சச்சரவுக்கோ வரமாட்டான். வாத்தியாரே தடுத்து விடுவார்.”பாவம், அவனோடு என்னடா சண்டை?” “பாவம்! பாவம்! பாவம்!’ பாவத்தின் ஸ்மரிப்பு எப்பவும் என்னைச் சூழ்ந்தது. வாழ்நாள் முழுவதும் உலகம் என்னிடம் காட் டும் நடைமுறையே இதுதான். என் கையைக் காட்டிலும் இதுதான் என் குறை. இதையா வேண்டினேன்?
ஆயினும் நான் வேண்டுவதை அடைவது எப்படி? மனத்தை திருப்புதல் எப்படி ? எதனின்று மனத்தைத் திருப்ப முயற்சியுடன் அதனின்று திருப்புகிறோமோ. அத்தனைக்கத்தனை அதிலேயேதான் மனம் திரும்பத் திரும்பத் திரும்புகிறது.
சில சமயங்களில் வாழ்க்கையின் இன்பப் பகுதிகளைப் பலவந்தமாகவே வாழ்க்கையினின்று பிடுங்கி அனும் வித்தல் நலம் என்று தோன்றுகிறது. முதலில் அக்ரம மாகத் தோன்றினாலும் இறுதியில், பயன்பட்டவன் பயன் படுத்துவோன், இருவருக்குமே அதுதான் நன்மையாய் முடியும் கொள்கை. ஆனால் அந்த ஆரம்ப முரட்டுத்தனத் திற்கு அஞ்சுவதில்தான் நாம் அவஸ்தைப்படுகிறோம். அந்த முரட்டுத்தனம்கூட அவ்வளவு அக்ரமம் அன்று. அதை விலக்க நமக்குப் பக்கபலமாய் நாம் கொண்டாடும். தன்மானம், சுய கௌரவம், தன்மதிப்பு, பிறர் மனம் கருதுதல் முதலிய லட்சியங்களெல்லாம் இறுதி எடையில் யலவீனங்களாய்ப் போய்விடுகின்றன.
“உதாரணமாய்ப் பாருங்களேன். முன்னோர்கள் தயவில் எனக்குப் பணம் காசுக்குக் குறைவில்லை. ஒரு மனைவியை நான் விலைக்கு வாங்கிவிடலாம்.இருந்தும் என் கை அந்தத் துணிச்சலுக்குக் குறுக்கே நின்று தடுத்தது. வந்தவள் என் எதிரிலோ, கண் மறைவிலோ என் கையைப் பற்றி வாய்விட்டுப் பேசாவிட்டாலும் மனத் தில்கூடவா அஞ்சாமல் இருப்பாள்? பச்சையாய் வாய் விட்டுச் சொல்கிறேன். ஊனமற்ற ஆர்வத்துடன் என் நல்ல கையால் அவளை நான் இறுகப் புல்லுகையில் என் தோள்மேல் பதிந்த அவள் முகம் என் கண்ணுக்குத் தெரியாமல் என் முதுகுவழி என் கைச் சூம்பலைக் காணாது இருக்குமோ? அப்போது அவள் அருவருப்பின் விதிர்விதிர்ப்பு அவளை ஊடுருவுகையில் அது எவ்வளவு ஸன்னமாய் இருப்பினும் அதை நான் உணராமல் இருப் பேனோ? அதன் கொடும் நிழலைக் குறுக்கே வைத்துக் கொண்டு நாங்கள் வாழ்க்கை நடத்துவது எப்படி என்று நினைக்கையிலேயே என் உள்ளம் பதறிற்று. ஆயினும் உலகில் இதைவிட அநியாயங்கள் நடக்கவில்லையா? சில சமயங்களில் நியாயமாகவே சேரவேண்டிய உரிமைக்குக் கூட சுய கௌரவம் இடம் கொடுக்க மாட்டேனென்கிறது.”
இன்னொரு சிகரெட்டை அவன் பற்ற வைத்தான். ‘சுர்’ ரென்று தீக்குச்சி பற்றிச் சுடர் அவன் முகத்தை ஏற்றி உடனே அவிந்தது. விக்ரஹத்தின் உக்ரஹ விழிகள். பிறகு இருளிலிருந்து அவன் குரல் மாத்திரம் வந்துகொண் டிருந்தது. அவன் இருந்த இடத்தைச் சிகரெட்டின் தணல் நுனிதான் குறித்தது. இருளின் கண்.
வெளியே அடை மழை. இப்போதைக்கு நிற்குமெனத் தோன்றவில்லை.
“சொந்தத்திலேயே ஒரு பெண் இருந்தாள். ஊரும் பேரும் இப்போ எதற்கு? நாமே நமக்குப் புரியவில்லை. பேருக்கும் ஊருக்கும் என்ன முக்கியம் வந்தது? பிரமாத அழகு என்று சொல்வதற்கில்லை. ஆனால் அவள் அவயங்கள் முழுமையாயிருந்தன. எனக்கு அதைவிட உயர்ந்த லக்ஷணம் கிடையாது. ஏழைக் குடும்பந்தான். ஒருவேளை நானே மணம் புரிந்திருக்கலாம். ஆயினும் என் கை…?”
“நான் என் கைக்கு அஞ்சி, அவள் வீட்டாரைக் கேட்க வில்லை. என் பணத்திற்கு அஞ்சி அவர்கள் எனக்கு அவளைப் பேச முன்வரவில்லை. அல்ல அங்கேயும் என் கைதான் பேசிற்றோ என்னவோ? பிள்ளைப் பருவத்தில் சேர்ந்து விளையாடுகையில் அவள் என் கையை எத்த னையோ கேலி பண்ணியிருக்கிறாள்.
“எப்படியிருந்தால் என்ன? அவளுக்குக் கல்யாண மாகாமல் போகிறதா? அந்தப் பையனைக்கூட எனக்குச் சுமாராய்த் தெரியும். நல்ல பையன். ஆனால் அவர்கள் மாதிரியே அவனும் பரம ஏழை. ஏழைதான் ஏழையாகிக் கொண்டு வருகிறான். அவனுக்கும் உற்றார் உறவினர் இல்லை.மணமானதும் அவளை கூடவே தான் பிழைக்கும் இடத்திற்கு அழைத்துப் போய்விட்டான். எப்போதாவது ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அவனிடமிருந்து ஒரு வரி வரும்.
“ஓரொரு சமயம் மனதில் கவியும் இருளை எப்படி அளவிடுவது? மனோவிகாரத்தின் மூட்டத்தில் கண்ணால் காணுவதெல்லாம் கூடச் சுய ஒளி மங்கியழுகின்றன. என் தனிமையில் எத்தனை தடவை உலகம் அம்மாதிரி சோபை இழந்திருக்கிறது தெரியுமா?”
“காட்டிலும் சிறையிலும் உணரும் தனிமை சகிக்கக் கூடியது; தன் இஷ்டமாவோ,பிறராலேயோ பலவந்த மாய் ஏற்படுத்திக் கொள்ளும் அந்தத் தனிமைகளிலிருந்து விடுவித்துக் கொள்ளவோ விடுதலை பெறவோ வேளை யுண்டு. அல்ல வேளைவரும் எனும் நம்பிக்கையேனும் உண்டு. ஆயினும் எத்தனை பேர் என்னைச் சுற்றி யிருந்தும் நான் என்னுள் உணர்ந்த தன்மை சகிக்க முடியவில்லை. இது உள்ளத்தின் தனிமையா? உடலின் தனிமையா?
“ஓரிரவு சரியான தூக்கம் இல்லை. நடுநிசி தாண்டி சற்றுக் கண்ணயர்ந்தேன். ஆயினும் எனக்குத் தூங்கின திரியே உணர்வு இல்லை. விழித்த கண்களுடனேயே நேரே ஒரு கனவுள் புகுந்துவிட்டேன்.”
“நீலக் கண்ணாடியிட்டாற் போல் கண்குளிர என்னைச் சுற்றி நீல இரவு. பார்வையை ஏமாற்றிய சரடுகளிலிருந்து நக்ஷத்ரங்கள் விளக்குகள் போல் தொங்கின. நான் நடு ஜலத்தில் ஒரு ஓடத்தில் துடுப்புக் களை நானே தள்ளிக்கொண்டு போய்க் கொண்டிருந் தேன். எங்கென்று அறியேன். இரு பக்கங்களிலும் அலை மடிந்த நீலக்கரை மேட்டிலிருந்து தென்னை மட்டைகள் ஜலத்தின்மேல் தாழ்ந்து தோளிலும் ஜலத்திலும் இடித்தன. என்ன ஆச்சரியம்! என் தோளில் ஊனம் இல்லை. துடுப்புக்களை முன்னும் பின்னுமாய் குனிந்தும் நிமிர்ந்தும், தள்ளிக் கொண்டு நான் தண்ணீரைக் கிழித்துக் கொண்டே முன்னேறுகையில் நரம்பு முடிச் சுக்கள் புஜங்களில் பந்து பந்தாய் எழும்பி வடிவது கண்டேன்.
“இருந்தாற்போலிருந்து ஓடம் ம் கரை தட்டிற்று. அவள் – என் பால்ய சிநேகிதி — கரைமீது நின்றிருந்தாள். ஏன் தன்னந்தனியாய் அந்நேரத்தில் அங்கே நின்றாள் என்று நான் கேட்கவில்லை; கேட்கத் தோன்றவும் இல்லை. நாங்கள் சந்திக்க முன்னாலேயே ஏற்பாடு பண்ணிக் கொண்டோம் போல் அவள் அங்கே காத் திருந்தாள். நான் கையை நீட்டினேன்.
“என் கையைப் பிடித்துக் கொண்டு அவள் ஓடத்தில் தாவி ஏறினாள். ஓடம் தானே நகர்ந்தது. அவள் நீலப் புடவை உடுத்தியிருந்தாள். அடித்தட்டில் மல்லாந்து படுத்தபடி என்மேல் வைத்த விழி மாறாது என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள், ஓடத்தின் இரு பக்கத்திலும் ஜலம் கிளுகிளுத்தது. நான் அவளை அணைத்தேன்.
“நான் அப்பொழுது நானாய் இல்லை; ஆனால் என் நினைவு என்னைவிட்டு ஓடிவிடவில்லை. ஆனால் நான் அப்போது எப்படி இருந்தேன் என்று உன்னிடம் சொல்ல முயல்கையில் பாஷை தடைப்படுகிறது; தளர்வு அடை கிறது. இருந்தாலும்-
“நான் ஒரு நீலச் சுடரானேன், கர்ப்பூரம் அசை வற்று எரிவதுபோல. அதாவது மனம் ஒன்றில் – அது எதுவாயினும் சரி-ஒன்றில் ஒன்றுபட்டு, அவ்வொன் றன்றி மற்றெல்லாம் மறந்து, அல்லது மற்றவை யினின்று விடுபெற்று அவ்வொன்றின் நினைவும் அடங்கி, நினைவு என்று ஒன்று இருந்தால் ஒன்று என்று நினைவு குறித்த அது, அந்நினைவும் இன்றியதால், அதுவும் அழிந்துவிடின், பிறகு அது என்று எது?
என்னுள் உருவற்று இருந்த அத்தனையும் உருவானதோடல்லாது அவ்வுருக்களின் ஒன்றாயும் ஒருமையாவும் நான் அதுவாகி, அதுவும் தாண்டிய எதுவும் ஆனதனால் என்னுள் குறையாய் இருந்த அத்தனையின் நிவர்த்தியுமானேன்; என்னின் நிவர்த்தியு மானேன்.
“திடீரென ஓடம் எங்கோ ஜலத்தடியில் பாறைமீது மோதியதுபோல் குலுங்கி. அடித்தட்டு திறந்து கொண்டது. அவள் அப்படியே மூழ்கிப் போனாள். என் உடல் குலுங்கியது. நான் விழித்துக் கொண்டேன். ஜன்னலுக்கு வெளியே கருவானில் வெண் மேகங்கள் விரைந்து சென்று கொண்டிருந்தன. என் மனத்தி லிருந்து பிதுங்கிய தோற்றம் மனதிலேயே மறைந்து போயிற்று. ஆயினும் அழிந்து போகவில்லை. அதன் ஒவ்வொரு அங்கமும், என் அங்கத்தின் கதை அல்லவா? ஆழமாய்ப் பதிந்து போயிற்று. இல்லாவிடில் இவ்வளவு பளிச்சாய் இன்னமும் சொல்ல வருமா?
“இரண்டு மாதங்கள் கழிந்தன. ஒரு நாள் மாலை, வெளியிலிருந்து அறைக்குத் திரும்பிக் கதவைத் திறந் ததும் உள்ளே காலடியில் ஒரு கடிதம் இடறிற்று. தபால்காரன் கதவிடுக்கின் வழியே உள்ளே தள்ளியிருந் தான். பிரித்துப் படித்தேன். என் சிநேகிதன் கால வித்தியாசத்தையும், கிரகக் கோளாறுகளையும், அதிருஷ் டத்தையும். வயிற்றுப் பிழைப்பின் கஷ்டங்களையும் பற்றி பக்கம் பக்கமாய் எழுதிவிட்டு, கடைசியில் ஒரு வரி, அவள் இரண்டு மாதங்களாய் ஸ்நானம் பண்ண வில்லை என்று எழுதி இருந்தான்.
எனக்குக் கண்ட அதிர்ச்சியில் நான் அப்படியே உட்கார்ந்து விட்டேன். நான் எக்காரணத்தினால் அப்படி நினைத்தேன் என்று கேளாதேயுங்கள், அல்லது நான் நினைத்தது நடக்கக் கூடியதா என்றும் கேளாதே யுங்கள், அல்லது நான் நினைத்தது பாபமா, புண்ணி யமா என்று கேளாதேயுங்கள். பாபம், புண்ணியம் இரண்டின் வித்தியாசம் திண்ணமாய் எனக்கு இன்னமும் தெரியாது.அவள் வயிற்றில் கண்டிருக்கும் பொறி என்னுடையது என்ற திண்ணம், என் மனத்தில் மின்னலைப் போன்று பளிச்சென்று பாய்ந்த வேகத் திலேயே விழுந்துவிட்டது. அந்த நிமிஷத்திலிருந்து என்னை உறுத்திக் கொண்டிருந்த தனிமையின் ஏக்கமும் தணிய ஆரம்பித்தது. நானும் எல்லோரையும் போலத் தான். இல்லை, ஒரு படி உயர்ந்தவன்.
“அவனுக்குப் பணம் அனுப்பினேன். திருப்பிக் கொடுப்பதைப் பற்றி கவலைப்படவேண்டாம். ஒருவருக் கொருவர் உதவத்தான் பணம் இருக்கிறது என்றும், இன்னும் நான் நம்பியதும், நம்பாததுமான பொது வேதாந்தங்களும் எழுதிவிட்டு, இனித் தாயாகம் போகிறவளின் உடம்பை ஜாக்கிரதையாய்ப் பார்த்துக் கொள்ளும்படியும் எழுதினேன்.
“அப்புறம் நான் நாட்களை எண்ண ஆரம்பித்தேன். என்றேனும் என் குழந்தையை நான் என் மார்மேல் சாத்திக்கொண்டு அதன் கண்ணத்தை நிமிண்டி விளை யாடும் நாள் வரும். அது தன் கனவில் அது மலர் காணுகையில் அதன் வாய் மலர்வதைக் கண்டு களிக் கவும் முடியும். ஏன் ஒரு வேலை அதைப் பெற்றவர் களிடத்துக்கே நான் போனாலும் போய்விடுவேன். இப் பொழுது நான் இருக்கும் இடத்திலேயே இருந்து கொண்டேயிருக்க வேண்டுமென்று எனக்கு என்ன கட்டாயம்? பெண்ணாய்த்தான் பிறக்கும். அதைப்பற்றி நான் ஏன் அவ்வளவு நிச்சயமாயிருந்தேன்? சில சமயங்கள் பாருங்கள், நல்ல அறிவோடு இருக்கை யிலேயே கட்டும் இம் மனக் கோட்டைக்கு ஜூர ஜன்னி யின் வாய்ப்பிதற்றல் எவ்வளவோ தேவலை. ஏதேனும் ஒரு சாக்கை வைத்துக் கொண்டு மாதம் தவறாது அவனுக்குப் பணம் அனுப்பி வந்தேன்.
பிள்ளைப்பேறுக்கு அவள் பிறந்தகம் வந்திருந்தாள். கூட அவள் கணவன் வர முடியவில்லை. அந்தப் பக்கம் வந்த யாரோடேயோ துணைகூட்டி அனுப்பியிருந்தான்; நான் அவளைப் பார்க்கப் போகவில்லை. ஆனால் ஒரு முறை அகஸ்மாத்தாய்க் குளக்கரையில் சந்திக்க நேர்ந் தது. ஸ்நானம் பண்ணிவிட்டு ஈரப்புடவையுடன் படித் துறை ஏறிக் கொண்டிருந்தாள். நான் இறங்கிக் கொண் டிருந்தேன்; மேனி மினுமினுப்பாய்த்தான் இருந்தாள்.
அத்தனை நாள் கழித்து முதன் முதலாய்க் கண்ட உணர்ச்சிதானோ அல்ல அவளுடைய வயிற்று நிலையில் நான் அவளைக் கண்டதால் பிடுங்கிய வெட்கமோ? அல்ல, என்னைக் கண்டதும் அவள் விழிகளில் கண்ணீர் சரசரவென நிறைந்து தளும்பிற்று. இருவருக்கும் ஒரே சமயத்தில் வாய் மூடிமூடித் திறந்ததேயொழிய, வாய டைத்துவிட்டது. அவள் குனிந்தபடி விருக்கென நடந்து சென்றுவிட்டாள். நான் நின்றவிடத்திலேயே நின்று கொண்டிருந்தேன். என். ஊனத்தோள் துடித்தது. அது என்ன பேச முயன்றது ?
அப்புறம் அவளை நான் உயிருடன் பார்க்கவில்லை. வேளை இன்றைக்கோ நாளைக்கோ என்றிருக்கையில் கிணற்றடியில் வழுக்கிவிழுந்துவிட்டாள். படாத இடத்தில் பட்டு அப்புறம் நினைவுகூட இல்லை. ஏக அமர்க்களம். குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டது. அதென்னவோ சம்பிரதாயப்படி வயிற்றைக் கிழித்து எடுத்தார்கள். பிணத்தை எடுத்துச் செல்லுமுன் அதன் உயிரற்ற உடலை ஒரு முறை தொட்டுப் பார்த்தேன். குழந்தையாகவா இருந்தது? கடோத்கஜன் மாதிரி இருந்தது. கருப் பையைக் கூட மீறிய உடல் பருமன் பிள்ளை.
பிணத்தை எடுத்த பிறகுதான் அவள் கணவன் வந்து சேர்ந்தான். அன்று மாலை நாங்கள் இருவரும் குளத்தின் படிக்கட்டில் நெருங்கி உட்கார்ந்து கொண்டு அவளைப் பற்றியும் அத்தனை ஏழ்மையில் அவளுடன் அவன் நடத்திய இன்ப வாழ்க்கையைப் பற்றியும் அவன் பேசு கையில் எங்களை இணைப்பதாக நான்உணர்ந்த உறவே அலாதி.என் குழந்தையைப் பெற்றவள் அவள். என் குழந்தைக்குத் தந்தையாய் இருப்பவன் அவன்…’
அவன் பெருமூச்செறிந்தான்.
இப்பொழுது தோன்றுகிறது. என் அளவு கடந்த ஆசைப்பசியே அவளை விழுங்கிவிட்டது என்று நினைக் கிறேன். இதிலிருந்து எதை நான் உங்களுக்கு நிரூபித்தேன் அல்லது நிரூபிக்க முயன்றேன் என்று எனக் குப் புரியவில்லை. உள்ளத்தின் மூலம் உடலை வெற்றி கொண்டேனா? அல்லது உடலின் மூலமே உள்ளத்தின் தாபத்தைத் தணித்துக் கொண்டேனா? மொத்தத்தில் இந்த வெற்றி தோல்வி என்னும் இரண்டு வார்த்தை களுமே எனக்குப் பிடிக்கவில்லை. இரண்டும் இரண்டு முற்றுப் புள்ளிகள். அம்மாதிரி முற்றுப் புள்ளிகள்தான் வாழ்க்கையா? என்னவோ பேச்சு எங்கேயோ ஆரம்பித்து எப்படியோ முடிந்தது. மழையும் நின்றுவிட்டது. நான் ரயிலடிக்குப் போகிறேன். நீங்கள் ரயிலடியிலிருந்து தான் வருகிறீர்களாக்கும் சரி நமஸ்காரம்-”
எனக்கு என்ன தோன்றிற்றோ தெரியவில்லை. அன்றிரவு அவளுக்கு எழுதினேன்.
“இன்று வரை நான் என்னுடைய ‘நானை’ப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்துவிட்டேன். உனக்கும் ஒரு ‘நான்’ உண்டு என்பதை எண்ணவில்லை. நம்மிருவருக்கும் சேர்ந்த ஒரு ‘நாம்’ உண்டு என்பதையும் எண்ணவில்லை. அந் ‘நாமி’ற்கே ஒரு ‘நான்’ உண்டு, அந் ‘நானி’ லிருந்து இப்பொழுது பிறக்கப் போகும் ‘நானைப்’ பற்றி யும் எண்ணவில்லை. நாமே தான் நான்; நானேதான் நாம்-“
– கங்கா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1962, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.
![]() |
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க... |