போர் நிறுத்தம்!





அரண்மனையிலிருந்து வந்த போர் அறிவிப்பு ஓலையைப்படித்த வரகனின் புது மனைவி விரதைக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திருமணமாகி மூன்று நாட்களே முழுவதுமாக முடிந்திராத நிலையில் கணவனைப்பிரிய நேருவதை எந்தப்பெண்ணால்தான் ஏற்றுக்கொள்ள முடியும்? அதே சமயம் நாட்டின் போர் தளபதியின் கட்டளையை ஏற்று போருக்கு செல்லும் கடமை வீரனுக்கு உண்டு என்பதையும் நன்கு அறிந்தவளாதலால் கணவனை கட்டித்தழுவி பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தாள்.

போரில் இரண்டு வகை உண்டு. ஒன்று தன் நாட்டின் மீது போர் தொடுக்க வரும் எதிரி நாட்டினரை வெல்ல போர் தொடுப்பது. இரண்டாவது மன்னரின் பேராசையால் அண்டை நாடுகளைப்பிடித்து தனது அரசை விரிவு படுத்திக்கொள்வது. இரண்டாவது வகையில் ஏற்படும் போருக்குத்தான் ஆயத்தமாகிக்கொண்டிருந்தது மகத நாடு.
வளர்ந்து விரிந்த மகத தேசத்து அரசன் மகதன் தன் இளைய மனைவி மகதாவுடன் அந்தப்புரத்தில் மகிழ்ந்திருந்த நேரத்தில் மாறு வேசத்தில் நுழைந்த பெண்ணால் மிகவும் கோபமடைந்தான்.
“யாரங்கே… இந்தப்பெண்ணை இழுத்துச்சென்று சிறையிலடையுங்கள்” என்றதும் வீரர்கள் ஓடி வந்து அவளைப்பிடித்த போது அப்பெண் திமிறினாள்.
“என்னை நாலு வார்த்தை பேச விடுங்கள். அதன் பின் எனது நாக்கை அறுத்தாலும் சரி. கழுத்தை அறுத்தாலும் சரி. சிறையில் அடைத்தாலும் சரி” எனச்சொன்ன போது மன்னரும் “சரி பேசட்டும் விடுங்கள்” என்றார்.
“மன்னா… நான் உன் நாட்டில் வாழும் சாதாரண பிரஜை. காட்டில் விவசாயம் செய்து வாழ்பவள்.
நாங்கள் எங்களது பூமியில் மழை பெய்யாத போது பயிர் விளையாத நிலையிலும் வேலிக்காக பயன்படுத்தும் கத்தாழைக்கு அடியில் இருக்கும் கிழங்கைத்தோண்டி சாப்பிட்டு உயிர் வாழ்கிறோமே தவிர, பக்கத்து வீடுகளுக்குள் புகுந்து திருடி வாழ்வதில்லை. உங்கள் நாட்டில் வாழும் நாங்களே இவ்வாறிருக்க, நீங்கள் மட்டும் எதற்காக பக்கத்து நாடுகளை படையெடுத்து பிடித்து, அங்குள்ள செல்வ வளங்களைக்கொள்ளையடித்து, அங்குள்ள மக்களின் வாழ்வை நாசமாக்கி, இரண்டு பக்கமும் பல வீரர்கள் இறக்கும் நிலையில் கிடைக்கும் செல்வங்களை அரண்மனையில் பதுக்கி சுக போகமாக வாழ்கிறீர்கள்? அந்நிய நாட்டு அரண்மனைப்பெண்களை உங்கள் அந்தப்புறத்துக்கு கொண்டு வந்து அவர்களுக்கு விருப்பமில்லாத போதும் அவர்களை உங்கள் விருப்பத்துக்கு அடி பணிய வைக்கிறீர்கள்?போரின் போது உயிரிழக்கும் பல இளம் வீரர்களின் மனைவிகள் விதவைகளாகி காலம் முழுவதும் கணவனின்றி, காமத்தை வெல்ல வழியின்றி வாழும் துயர் நிலைக்கு நீங்களும், உங்களது பேராசையும் காரணமாகிறதே? இப்போது சொல்லுங்கள் தண்டனைக்குரிய குற்றவாளி நீங்களா? அனுமதியின்றி இங்கே எனது மனக்குமுறளைச்சொல்ல வந்த நானா….?” எனக்கேட்ட போது குற்ற உணர்ச்சியால் மிகவும் குறுகி நின்றவர் திடீரென ஆவேசமாகி, “இத பாரு நான் இந்த நாட்டினுடைய மன்னன். என்னை எதிர்த்து பேசினா மரண தண்டனை. இவளைக்கூட்டிச்செல்லுங்கள்” என உத்தரவிட அப்பெண்ணை வீரர்கள் அழைத்துச்சென்று சிறையிலடைத்தனர்.
அப்பெண் கேட்ட கேள்வியால் மன்னன் மகதனுக்கு அன்று உறக்கம் வரவில்லை. ‘தான் மட்டும் அரண்மனை அந்தப்புறத்தில் விரும்பிய பெண்களுடன் கூடியிருக்க, போரில் பலியாகும் வீரர்களின் மனைவிகள் விதவையாவதா? இது பாவமில்லையா? நம் ஒருவரின் ஆசைக்காக ஓராயிரம் பேர் பாதிப்பதா?’ மிகுந்த யோசனையில் ஆழ்ந்தார். அப்பெண்ணின் கேள்விகள் அவரது அறிவுக்கண்களைத்திறந்தன.
மன்னரின் இளம் மனைவியும் மகாராணியுமான மகதா மன்னரிடம் வந்து அமர்ந்து “மன்னா நேற்று அப்பெண் கூறியதில் நியாயம் உள்ளதாகவே எனக்குப்படுகிறது. போரில் பலர் உயிரிழந்து கிடைக்கும் நாடும், செல்வமும் நமக்குத்தேவையில்லை. நாட்டில் வாழும் அனைவரும் சமம் தானே. மன்னரின் மகிழ்ச்சிக்காக மக்களை வேதனையில், வறுமையில் தள்ளுவது பாவமாகாதா? இதனால் தான் நமக்கு வாரிசு கிடைக்கவில்லையோ என நினைக்கிறேன். இன்றோடு நாடு பிடிக்கும் ஆசையை மனதிலிருந்து அழித்து விடுங்கள். அந்தப்பெண்ணுக்கு வேண்டிய பொருளுதவியை செய்து அவளை உடனே விடுதலை செய்து விடுங்கள். அவள் சாதரண பிரஜை இல்லை. உங்களது அறிவுக்கண்களைத்திறந்த தெய்வம்” என்றாள்.
வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் வந்த கணவன் வரகனை வரவேற்று கட்டியணைத்து மகிழ்ந்தாள் அவனது ஆசை மனைவி விரதை.
“அதிசயம் நடந்து போச்சு. ஒன்னி மேல் அடுத்த நாட்டு மன்னன் போர் தொடுத்தால் மட்டுமே நம் நாட்டைக்காக்க போர் தொடுப்போம். நாடு பிடிக்கும் ஆசையில் போர் இனி கிடையாது என நம் மன்னர் மனம் மாறி அறிவித்ததால் நான் வீட்டிற்கு வர நேர்ந்தது. இனி நமது நிலத்தில் உன்னோடு விவசாயம் செய்ய நானும் வருகிறேன். நான் மட்டுமில்லை ஆயிரக்கணக்கான வீரர்களுக்கு நம் நாட்டில் மட்டுமின்றி நாம் பிடிக்கவிருந்த நாட்டின் வீரர்களுக்கும் உயிர் பிச்சை கிடைத்துள்ளது. எல்லாம் உன்னோட யோகம் தான் என நினைக்கிறேன்” என்றான்.
‘யோகத்தோடு யூகமும் தான். நான் மட்டும் மாறு வேடத்தில் உயிரை பணயம் வைத்து அரண்மனைக்குச்சென்று மன்னரிடம் பேசியதின் விளைவால் வந்த மன மாற்றம் தான் போர் நிறுத்தத்துக்கு முழு காரணம்’ என தனக்குள் பேசிக்கொண்டாள் விரதை.