பொய்முகம்




(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மழை இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது. மின் விளக்கு ஒளியில் அந்தத் துமியல் பொட்டுப் பொட்டாய் சிதறினாற் போல் கண்கள் உணர்ந்தன. வாகனப் பரபரப்பு இன்னமும் தணியவில்லை . எதிரே வரும் வாகனங்களின் ஒளித்தெளிப் பையே பார்த்துக் கொண்டு நின்றான் சாந்த குமாரன். மனம் பரபரத்து அமைதியை இழந்து இனந்தெரி யாத அச்சத்தை அவனுள்ளே விதைகளாய்த் தூவிக் கொண்டிருந்தது.

ஒரு சின்ன மடைத்தனத்தால் இந்த நிலைமை வந்தது எனச் சலித்துக் கொண்டது மனம். ‘ஒமார் முக்தார்’ திரைப் படத்தைப் பற்றி ஏற்கனவே படித்திருந்தான். அதைப் பார்க்க விரும்பிய – பல சந்தர்ப்பங்கள் சின்னக் காரணங்களினாலே தவறிப் போய்விட்டன. பொரளை யிலுள்ள தியேட்டரில் ‘ஒமார் முக்தார்’ நடப்பதாகப் பத்திரிகையில் பார்த்ததும் சனிக்கிழமை ஆறரை மணிக்குத் தவறால் பார்ப்பதென்று முடிவு செய்துவிட்டான். சென்றான்.
திரையரங்கில் சில பேரே இருந்தனர். படம் தொடங்கி சில நிமிஷங்களிலேயே அந்த அற்புதமான திரைப்படம் அவனை மிகவும் வசீகரித்தது. ஒரு விடுதலைப் போராட்ட வீரனின் உண்மையான கதை. நடிகர் அந்தனி குயின், ஒமார் முக்தாராகவே திரையில் வாழ்ந்தார். படம் முடிந்ததும் அவனையறியாமலேயே மனம் – கனத்தது. – அந்த உணர்விலிருந்து உடனேயே விடுபட முடியவில்லை. வெளியே வந்தான். மணியைப் பார்த்தான். எட்டு இருபது. வானம் தெளிந்து கிடந்தது.
முன்னர் வந்திறங்கிய இடத்திற்கே பஸ்ஸிற்காக வந்தான். மழை சோனாவாரியாகப் பெய்திருக்க வேண்டும். நிலமெல்லாம் சேறாய்க் கசகசத்தது. வேகமாகப் போன பஸ்கள் குண்டு குழிகளில் நிறைந்திருந்த கலங்கல் நீரை அள்ளித் தெளித்தன. ஒதுங்கிக் கொண்டவன் அருகே வந்த பஸ்ஸைப் பார்த்தான். 154. சட்டென்று தொற்றி ஏறினான்.
வீதி குழிகள் தோண்டி புதிய அமைப்பாய்க் கட்டப்பட்டுக் கொண்டிருந்ததால் பொரளைச் சந்தியின் அமைப்பே தலைகீழாய் மாறிப்போயிருந்தது. பஸ் குலுங்கிக் குலுங்கி, எகிறிப் போய்க் கொண்டிருந்தது. சாந்தகுமாரனுக்கு ஒரு வயதான பெண்ணின் அருகே இருக்கை கிடைத்துவிட்டது. நிம்மதியாக உட்கார்ந்தவன் வெளியே பார்க்காமல் பஸ்ஸினுள் பார்வையினைத் தரித்திருந்தான். அவ்வளவு சனமில்லை.
பஸ் நடத்துநர் அருகே வந்து மௌனமாகக் கையை நீட்ட, இவன் ‘கல்கிஸ்ஸை ‘ என்றான். அவன் இவனை ஏற இறங்கப் பார்த்தான்.
அருகிலிருந்த கிழவி “தெய்யனே பவ்” என்றாள் பரிவான குரலிலே.
பஸ் நடத்துநர் இவன் கையிலிருந்த இரண்டு ரூபாய் நாணயமொன்றை எட்டி எடுத்துக்கொண்டு, இது கல்கிஸ்ஸையிலிருந்து வருகிற பஸ். இறங்கி எதிரே போய் பொரளைக்குப் போகும் பஸ்ஸில் ஏறி அங்கிருந்து கல்கிஸ்ஸைக்குப் போகும்படி களைத்த குரலிலே எரிச்சலுடன் கூறினான்.
சாந்தகுமாரன் இருளான அந்த இடத்தில் இறங்கினான். கொஞ்சத்தூரம் எதிர்ப்பக்கமாக நடந்து போனான். மின் விளக்கின் பெயர்ப்பலகைகளைப் பார்த்தான். அது தெமட்டக்கொடை. மனம் சலித்தது. தெமட்டக்கொடை யிலிருந்து அரை மணி நேரத்தின் பின் பஸ் பிடித்து பொரளைக்கு வந்தபோது மணி ஒன்பது, கல்கிஸ்ஸைக்குப் பஸ் புறப்பட்டுப் போகும் இடத்திலேயே நின்றான். சில ஓட்டோக்களும், கொஞ்ச ஆட்களுமே அங்கே நின்றனர்.
சாந்தகுமாரனுக்கு தன் மேலேயே எரிச்சல் உண்டாயிற்று. பஸ் வராவிட்டால் என்ன செய்வது? வீதியில் நின்றால் வரும் சிக்கல் அப்படி இப்படியானதல்ல. அதை நினைக்கவே மனதுள் அச்சம் ஊர்ந்தது. இருபத்தியெட்டு வயதான தமிழ் இளைஞன் அகால நேரத்தில் வீதியில் நிற்பதென்றால் அதில் யாருக்குத்தான் சந்தேகம் வராது. சட்டைப் பைக்குள் கையை விட்டுப் பார்த்தான். திரைப்படம் பார்த்ததற்கான டிக்கட்டையும் காணவில்லை. தலையில் அடித்துக்கொள்ள வேண்டும் போலத் தோன்றியது.
வானத்தைப் பார்த்தான். நிர்மலமான வானத்திலே தூவிவிட்ட நட்சத்திரங்கள். ஒற்றையாய் வெள்ளை வெளேரென்று முகிற்சேலை, ஆடாமல் அசையாமல், எதிரே வாட்டசாட்டமான நடுத்தர வயதான ஆளொருவர் சிகரட் பிடித்தபடி அமைதியற்றவராய் பஸ் வரும் திக்கையே பார்த்துக்கொண்டு நின்றார்.
சாந்தகுமாரன் அவரின் அருகே சென்றான். வழுவழுவென்ற முகம். இன அடையாளம் தெரியாதது. ஆங்கிலத்திலேயே கேட்டான்: “சேர், 154 வருமா?” –
அவர் அவனை உற்றுப் பார்த்தார்.
“8.30 க்குத்தான் கடைசி பஸ். அதுவும் வரவில்லை . சிலவேளை அதுவும் வரலாம். ஆனால் நம்பிக்கையில்லை…”
ஏமாற்றமும் வெறுப்பும் அவரது குரலில் கனத்தன. மணியைப் பார்த்தவாறே, “நேரம் ஒன்பதரை மணி” என்றார்.
மீண்டும் ஒரு பஸ், நாரேஹேன்பிட்டி.
அவர்கள் இருவரும் நின்ற இடத்திற்கு ஓட்டோக்காரன் ஒருவன் வந்தான். கரகரத்த குரலில், சிங்களத்திலே, “எங்கே போக வேண்டும்?’ என்று கேட்டான். அவன் பின்னாலே இன்னொருவன் சிவந்த கண்களோடு,
நடுத்தர வயதுக்காரர் சிங்களத்தில், ஒற்றை வார்த்தையில் “வேண்டாம்” என்றவாறு இன்னொரு சிகரட்டைப் பற்ற வைத்தார். புகையாய் ஊதினார்.
மீண்டும் ஜனச் சுமைத் திணறலோடு இன்னொரு பஸ். அதுவும் நாரேஹேன்பிட்டி பஸ். சாந்தகுமாரன் மனக் குழப்பத்தோடு அவரைப் பார்த்தான். “நீங்கள் எங்கே போக வேண்டும்?”
“வெள்ளவத்தை”.
சாந்தகுமாரனின் மனம் லேசாயிற்று. அவரை உற்றுப் பார்த்தபடி கேட்டான்: “அப்படியானால் இரண்டு பேரும் ஓட்டோவில் போய்விடலாமே… நான் என் தூரத்திற்கு வரக்கூடிய தொகையைக் கொடுக்கிறேன்…”
அவர் சிகரெட்டை நிலத்தில் போட்டுக் காலால் மிதித்தவாறே, “பணம் ஒரு விஷயமாயில்லை . மணி பத்து. ஓட்டோவில் போனால் சிக்கல் வரலாம்…” என்றார். சட்டென்று நிறுத்திவிட்டுப் பின்னர், “உங்கள் கூட வந்தால்…” என்றார்.
சாந்தகுமாரன் திகைத்துப் போனான். மனதுள் கவலை ரேகையிட்டது. பேசாமலே எதிரே வரும் பஸ்ஸைப் பார்த்தான். அதுவும் நாரேஹேன்பிட்டி. முஷ்டியைப் பிசைந்தான் வெறுப்போடு. அவர் அவனைப் பரிவோடு பார்த்தார்.
“நான் இப்பொழுதுள்ள இயல்பான நிலைமையைத்தான் சொன்னேன். பாதுகாப்பு நிலையைக் கருதி நிறைய இடங்களில் ‘செக்கிங்’ இருக்கும். எனக்கும் உங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அதனால்தான் சொன்னேன். நமக்கு வரும் சிக்கல்களைப் புத்தியோடு எதிர்கொள்ள வேண்டும்…”
சாந்தகுமாரன் மௌனமாக நின்றான். மனம் தளர்வுற்றது. எல்லாமே குழப்பம், என்ன செய்வது? இந்த ஆள் சிங்களவராயிருந்தும் தன்னோடு வரத் தயங்குவது அவனுக்குக் கவலையோடு இனந்தெரியாத அச்சத்தையும் உண்டாயிற்று. வயதான தாயையும் சகோதரியையும் எண்ணிய போதிலே இன்னமும் மனம் நடுங்கிற்று. வேர்த்தது.
அவர் சட்டெனக் கேட்டார்:
“நாரேஹேன்பிட்டியில்… உங்களுக்குத் தெரிந்த யாராவது இருக்கிறார்களா?’
“இல்லை …”
“என்ன செய்கிறீர்கள்?”
“கொம்ப்யூட்டர் எஞ்சினியர்”
அவர் சாந்தகுமாரனை தன்னையறியாத ஆச்சரியத்தோடு பார்த்தார். மறுகணமே முகபாவத்தை மாற்றியவாறே, “நான் தனியார் நிறுவனமொன்றில் உள்ளேன். பம்பலப்பிட்டியில் அது உள்ளது” என்றார். பிறகு நெற்றியைச் சுரண்டியவாறு கூறினார்:
“பத்து நாற்பத்துக்கு பாமன்கடை வழியாகப் போகிற ஒரு பஸ் வரும். அதில் நாம் போகலாம். பாமன்கடையில் இறங்கி குறுக்கு வழியால் போனால் காலி வீதி. அங்கு உங்களுக்கு நிறையவே பஸ் வரும். இதுதான் கடைசி நம்பிக்கை …”
அவ்விடமெல்லாம் மெல்லிய தென்றல் வீசுகின்றாற் போல உணர்ந்தான் சாந்தகுமாரன். மனதின் அழுத்தம் மெல்லவே கரையத் தொடங்கிற்று.
அவரின் அருகே நின்ற இன்னொருவர் சிங்களத்தில் என்னவோ கேட்க இவரும் பொறுமையாகப் பதிலளித்தார். “மாத்தையா பொஹமஸ்துதி” என்றார். மற்றவர் மரியாதையாக
முகம் மலர சாந்தகுமாரைப் பார்த்தவாறே.
“அதோ பஸ்” என்றார் ஆங்கிலத்தில்.
பஸ்ஸில் ஏறிக் கொண்டனர்.
இருவரும் அருகருகே இருக்கையில் அமர்ந்தனர். சாந்தகுமாரன் உடனேயே “நீங்கள் இன்றைக்குச் செய்த உதவியை நான் என்றைக்குமே மறக்க மாட்டேன்…” என்றான்.
அவர், “அடுத்த பஸ் தரிப்பில் இறங்க வேண்டும்” என்றபடியே எழுந்தார்.
பஸ்ஸிலிருந்து இறங்கி, அரைகுறையாய் ஒளியுமிழும் வீதி வழியாக அவனோடு அவர் நடந்தார். முன்னும் பின்னுமாகப் பார்த்தார். யாருமே இல்லை.
ஆங்கிலத்திலேயே “யாழ்ப்பாணத்தில் எந்த இடம்?” என்றார் மெல்லிய குரலில்.
அவன் சொன்னான்.
“நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அருகேயா?” அவர் கேட்டார்.
ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தான் அவன்.
“நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறீர்களா?”
இப்போது அவரின் முகத்தில் வெளிச்சம். தமிழிலே சொன்னார்:
“நான் உம்முடைய இடத்திற்கு அருகிலைதான் இருக்கிறனான். கோப்பாய். பேர் சந்திரசேகரம். நீர் நேர போம். ஒரு ஆஸ்பத்திரி வரும். அப்படியே இந்த றோட்டு காலி றோட்டில் போய் ஏறும்…. நான் வாறன்… இந்த ஒழுங்கைக்குள்ளதான் நான் இருக்கிறனான்…. அப்ப வரட்டோ ?”
சட்டென்று அவர் ஒழுங்கைப் பக்கம் திரும்பினார்.
“மாத்தையா எங்க போக நிக்கிறீங்க?’ என்று சிங்களக் கிழவர் ஒருவர் சாந்தகுமாரனைக் கேட்கும் வரை அங்கேயே திடுக்கிட்டுப் போய் நின்றான் அவன்.
– விநோதினி (பதினொரு சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2000, விண்மீன் பப்ளிகேஷன், கொழும்பு.