பெரிய வீடு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 28, 2023
பார்வையிட்டோர்: 3,219 
 
 

சிறு வயதில் குடிசையில் பெற்றோர் வாழ்ந்த நிலையில் பிறந்த பரந்தாமனுக்கு பெரிய அரண்மனை போன்ற வீட்டைக்கட்டி விட வேண்டுமென்கிற எண்ணம் ஆல விருட்சம் போல் மனதில் படர்ந்து, வளர்ந்து விட்டது.

கூலி வேலை செய்து விட்டு முதலாளி வீட்டில் மீதமுள்ள உணவை காத்திருந்து பாத்திரத்தில் வாங்கி வந்து இரவு உண்டு, அதன் மீதத்தை பாதையில் இருபுறமும் வளர்ந்து நிற்கும் புளியமரத்தில் காய்களை உதிர்த்தி, அதில் உள்ள புளியை ஊற வைத்து, அந்தக்கரைசலை கெடாமல் இருக்க உணவில் சேர்த்து, காலையில் வாணலியில் தாளித்து உண்டு, மதியம் அரசு பள்ளியில் சத்துணவு என குழந்தையை வளர்த்து, கூலிப்பணத்தை முழுவதும் சேமித்து பரந்தாமனுக்கு பத்து வயது இருக்கும் போது சொந்த ஊரில் பழைய ஓட்டு வீடு சொந்தமாக வாங்கிய பெற்றோர், தங்கள் மகன் படிப்பதற்க்காக அதில் மின்சார விளக்கும், மின் விசிரியும் அமைத்துக்கொடுத்தபோது மனம் ஆனந்தம் கொண்டது.

படிப்பை முடித்து பெரிய தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்க, பெற்றோர் சிக்கனமாக இருந்து கூலி வேலை செய்த பணத்தில் ஓட்டு வீடு வாங்கியது போல தானும் வாங்கும் சம்பளத்தில் சிக்கனமாக இருந்து பெரிய பங்களா வீடு வாங்கி விட வேண்டும் என்கிற ஆசை விதையை தன் மனமெனும் மண்ணில் போட்டதின் விளைவு, இன்று ஐம்பத்து நான்காவது வயதில் பத்தாயிரம் சதுர அடியில், பத்து கோடி முதலீட்டில் பெரிய நிறுவனங்களின் முதலாளிகள் வசிக்கும் பகுதியில் அரண்மனை போன்ற வீட்டைக்கட்டி முடித்து, நினைத்தது நினைவேறிய மனநிலையில் குடும்பத்துடன் குதூலகமாக வசிக்கத்துவங்கினார் பரந்தாமன்.

நகரத்தில் வாடகை வீட்டில் வசித்த போது திருமணமாகி ஒரே பெண் குழந்தை பிறக்க, அக்குழந்தையை அதிக கட்டணம் கட்டும் பள்ளியானாலும் தான் தலைமை அதிகாரியாக வேலை பார்க்கும் நிறுவனம் நடத்தும் பள்ளியென்பதால் பத்து ரூபாய் கூட செலவு செய்யாமல் பள்ளிப்படிப்பை முடித்ததால் சம்பாதிப்பதை பெரும்பங்கு சேமித்து வீடு கட்டி முடித்ததோடு, மகளை மேற்படிப்புக்கு வெளிநாட்டிற்கு அனுப்பும் வாய்ப்பும் அமைந்தது.

மகளை வெளிநாட்டில் படிக்க வைத்ததின் விளைவு அங்கேயே வேலை செய்யும் மாப்பிள்ளை தான் தனக்கு வேண்டுமென மகள் கரினி அடம்பிடிக்க, அங்கேயே குடும்பத்துடன் செட்டிலாகி விட்ட பழைய உறவில் மாப்பிள்ளை அமைந்து விட, வெளிநாட்டில் மகள் வீட்டில் ஆறு மாதம், உள் நாட்டில் தன் வீட்டில் ஆறுமாதம் என வேலையை விருப்ப ஓய்வில் விட்டுவிட்டு காலத்தைக் கழித்தவர் மனைவி மாலினியின் திடீர் மரணத்தால் திக்குமுக்காடிப்போனார்.

அரண்மணை போன்ற வீட்டில் ஆளரவமற்ற நிலையில் வாழ்வது பெரிய கொடுமை. பெரிய வீடு கட்டியதால் பொறாமையினாலோ, தயக்கத்தினாலோ உறவுகள் முன்பு போல் அவரைப்பார்க்க யாரும் வருவதில்லை. மனைவி இறப்பு நிகழ்வுக்கு வந்து போனதோடு சரி. உறவுகளின் விசேச நிகழ்வுகளுக்கு அழைப்பின் பேரில் போனாலும், மற்றவர்களுக்கு கொடுப்பதை விட அதிக மரியாதை கொடுத்தாலும், யாரும் நெருக்கமாக அமர்ந்து பேச முன்வருவதில்லை என்பது பரந்தாமனுக்கு வருத்தத்தை உண்டு பண்ணியது.

சாதாரண வாழ்வில் கிடைக்கும் சௌகரியங்கள், சுதந்திரம், நட்புகளும், உறவுகளும் நேசிக்கும் நிலையைத்தாண்டி தனித்து விடப்பட்ட தீவாகத்தன்னை நினைத்த போது மனம் தீயாக தகித்தது.

விடுமுறையில் ஊருக்கு வந்த மகள் தந்தையின் நிலைமையைப்பார்த்து விசனப்பட்டதோடு போகும்போது தன்னுடனேயே அழைத்துச்சென்று விட்டாள்.

ஒரு வருடம் பின் வந்து வீட்டைப்பார்த்த போது லட்சியக்கனவால் கட்டிய கோட்டை லட்சணமின்றி, வீடே அனாதையாக, ஆவிகள் வாழும் இடமெனத்தோன்றும் மனநிலையைக்கொடுக்க, வாடகைக்கு விட எண்ணி உள்ளூர் தரகரை அழைத்தார்.

“ஐயா இவ்வளவு பெரிய வீட்டுக்கு யாரும் குடி வர பயப்படுவாங்க. வந்தாலும் மாசம் ஒரு லட்சமெல்லாம் வாடகை கொடுக்க மாட்டாங்க. மாசம் ஒரு லட்சம் மாதத்தவணைல நிறைய வீடுகள் விற்பனைக்கே இருக்கறப்ப இங்கே வரமாட்டாங்க. வீட்டைப்பராமறிக்க, பாதுகாக்கன்னு ஆட்களைப்போட்டோம்னா அவங்களுக்கே மாதம் ஒரு லட்சம் வீண் செலவாகும். வீட்டை வேண்டாம்னா வித்திடலாம்” என்று தரகர் சொன்னதைக்கேட்டு மனம் அதிர்ச்சியடைய கண்களில் கண்ணீர் வெளிப்பட்டது பரந்தாமனுக்கு.

“இப்பெல்லாம் யாரும் உங்களை மாதிரி இவ்வளவு பெரிய வீடு கட்டறதில்லை. பெரிய பங்களா வீடு‌ வாடகைக்கும் விட முடியாது. விற்கவும் முடியாது. நீங்க பத்து கோடி பட்ஜெட்ல அன்னைக்கு கட்டிருப்பீங்க. இன்னைக்கு இதனோட மதிப்பு முப்பது கோடி. முப்பது கோடி கொடுத்து வீடு வாங்க இப்போ யாரும் தயாரா இல்லை. ரியல் எஸ்டேட் விற்பனை இந்த வருசம் நின்னு போனதுனால மார்க்கெட் நிலவரத்த விட பாதி குறைஞ்ச விலைக்கு கொடுக்க பத்து பங்களா இந்த ஏரியாவுலயே தயாரா இருக்கு. ஆனாலும் விலை போகலை” என்று தரகர் சொன்னது அதிர்ச்சியளித்தது.

“ஆசப்பட்டத வாங்கி சாப்பிடாம, சொந்த பந்தங்களுக்கு உயிரு போற நிலைல மருத்துவச்செலவுக்கு கூட கொடுத்து உதவாம ஆடம்பரத்துக்காக கட்டற வீட்டு மேல பணத்தக்கொட்டி வாழற வாழ்க்கைய விட, நாம வாழறதோட, நம்மைச்சார்ந்தவங்க கஷ்டத்துக்கு உதவி செஞ்சு ஒரு தேவையான அளவு வீடு கட்டி வாழ்ந்தோம்னா அந்த வீட்டை வாடகைக்கும் விடலாம், உடனே விற்கவும் செய்யலாம். இப்படித்தான் கேரளாவுல பல பேரு வாரிசுகள் வெளிநாட்டுல செட்டிலானதுனால ஐம்பது சதவீத வீடுகள் மக்களும் வசிக்காம, விற்கவும் முடியாம பாழடைஞ்சு போயிட்டிருக்கறதா சொல்லறாங்க” என்று தரகர் சொன்னதைக்கேட்ட போது தமது பேராசை பெருநஷ்டமாகிவிட்டதை உணர்ந்தார்.

‘அரண்மனை போன்ற ஒரு வீட்டைக்கட்டும் பணத்துக்கு ஐம்பது வீடுகளை கிராமத்தில் கட்டி குறைந்த வாடகைக்கு விட்டு பல குடும்பத்தோட பாராட்டையும் வாங்கியிருக்கலாம், அல்லது ஒரு தொழிற்ச்சாலை அமைத்து பல பேருக்கு வேலை கொடுத்திருக்கலாம். ஊரே நம்மைக்கொண்டாடியிருக்கும்’ என எண்ணியவர் வெளி நாட்டில் பெரிய வீடு கட்ட ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் மகளுக்கு போன் போட்டு தேவைக்கு மட்டும் வீடு கட்டுமாறும், பாக்கி பணத்தை நிலமாக வாங்கி விடுமாறும், அல்லது சேமிப்பாக வைக்குமாறும் ஆலோசனை கூறியவர், பலர் பயன்பெறும் வகையில் அரசு பொது நூலகத்துக்கு தன் கனவு இல்லத்தை வாடகையின்றிக் கொடுத்ததோடு, ‘சிறுகக்கட்டி பெருக வாழ்’ எனும் அனுபவமிக்க நமது முன்னோர்களின் பழமொழியை வீட்டின் முகப்பில் எழுத்துக்களால் பதித்து விட்டு, தன் மகளுடன் வசிக்க வெளிநாடு புறப்பட்டுச்சென்றார் பரந்தாமன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *