பெத்த மனம் பித்து

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 23, 2026
பார்வையிட்டோர்: 7,876 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

வாசல் படியைத் தாண்டும்போதே வலது கால் பலமாக இடித்து இடறியது. சகுந்தலா நிலைகுலைந்து சுவரைப் பிடித்துக் கொண்டாள். மனதிற்க்குள் ஏதோ ஒரு கலக்கம்.

சகுந்தலா, ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை. ஐந்து வருடங்களுக்கு முன் தன் கணவன் இறந்ததிலிருந்து, அவளுக்கு உலகமே அந்த வீடும், செவ்வாய் வெள்ளி செல்லும் கோயிலும்தான். மனிதர்களிடம் பேசுவதை விட அவளுக்குக் கடவுளிடம் பேசுவதுதான் நிம்மதி. அன்றைக்கு வெள்ளிக்கிழமை விடியற்காலை, ஏதோ விபரீதம் நடக்கப் போவதைப் போல ஒரு கனத்த அமைதி அவள் மனதிற்குள். சுதாரித்துக்கொண்டு உள்ளே சென்று கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு, மறுபடியும் கிளம்பப் போனாள். அப்போது, நிலைப்படியிலிருந்து ஒரு பல்லி ‘சட்’டென அவள் தோளில் விழுந்து தரையில் ஓடியது. “ஐயோ கௌளி நம்மேல் விழுந்துவிட்டதே… ஏதோ விபரீதம் நடக்கப் போகிறதோ?” என்று நினைத்தவள், பயத்தோடு பஞ்சாங்கத்தைப் பார்த்தாள். அன்றைக்கு அவள் ராசிபலன் கட்டத்தில் “தடங்கல்” என்ற ஒற்றைச் சொல் அவளைப் பார்த்து சிரித்தது.

அந்தப் பயம் நீங்குவதற்குள், அவளது கைப்பேசி ஒலித்தது. மறுமுனையில் நித்யா. அவள் பெற்றெடுத்த ஒரே மகள்.

“அம்மா… அம்மா… சீக்கிரம் வாம்மா… எனக்கு உயிரே போற மாதிரி பயமா இருக்குமா !” என்று அவள் குரலில் இருந்த நடுக்கம் சகுந்தலாவை என்னவோ செய்தது. சாமி, சகுனம் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, அவசர அவசரமாக மகளின் வீட்டுக்கு ஓடினாள் அந்தத் தாய்.

டாமன்சாராவில் உள்ள நித்யாவின் வீட்டை நெருங்கியபோது, நுழைவாயில் கதவு திறந்துகிடந்தது. உள்ளே சென்று பார்த்தவளுக்கு நெஞ்சே நின்றுவிடும் போல இருந்தது. வெள்ளை உடையில் ரத்தக் கறையோடு தரையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள் நித்யா.

“என்ன நித்யா ஆச்சு? என் எட்டு மாச பேத்தி எங்கடி ?” என்று சகுந்தலாவின் குரல் வறண்டு போனது.

“பாப்பா உள்ள தூங்குறாம்மா..” என்று விம்மினாள் நித்யா.

“அர்ஜுன் எங்கே மா ?” என்று சகுந்தலா கேட்க, நித்யா கை காட்டிய படுக்கையறைக்கு ஓடினாள்.

அங்கே தரையில் ரத்த வெள்ளத்தில், மண்டை உடைந்து பிணமாய்க் கிடந்தான் மருமகன் அர்ஜுன். சகுந்தலா மூச்சடைத்து நின்றாள். “என்னடி பண்ணித் தொலைச்ச? ஏன்டி அர்ஜுன் இப்படி கிடக்குறாரு ?” என்று கத்தினாள்.

நித்யா கண்ணீர் விட்டு அழுதாள். “நேத்து ராத்திரி நல்லா குடிச்சுட்டு வந்தான்மா. என்னைக் கண்டபடி சந்தேகப்பட்டு அடி வெளுத்துட்டான். திடீர்னு பாப்பா மேல கோவப்பட்டு அவளைக் கொல்லப் போனான். என் புள்ளைய காப்பாத்த வேற வழியே இல்லாம அவனைப் புடிச்சுத் தள்ளுனேன்… அவன் தலை பின்னாடி இருந்த பூஜாடியில் பலமா அடிபட்டு உயிரு போயிருச்சுமா…” என்று கதறினாள்.

ஒரு தாயின் மனம் தவித்தது. தன் குழந்தையைக் காப்பாற்றப் போராடிய மகளை எப்படிச் சிறைக்கு அனுப்புவது?

“அழாத மா நித்யா. இரு… எனக்கு என்ன பண்றதுன்னே புரியல…” என்று யோசித்தவள், ஒரு முடிவுக்கு வந்தாள். “உன் பிள்ளைக்காக நீ வாழணும். என் பிள்ளைக்காக இந்தப் பழியை நான் ஏத்துக்குறேன்” என்று நினைத்த சகுந்தலா, அந்த நிமிடத்தில் ஒரு தியாகியாக மாறினாள். எல்லா தடயங்களையும் தனக்கு சாதகமாக மாற்றி, தன்னை ஒரு கொலையாளியாகத் தயார் செய்துகொண்டாள். தன் மகளையும், பேத்தியையும் பின்வாசல் வழியாகத் தப்பிக்க வைத்து விட்டு காவல் துறைக்கு கைப்பேசியில் தகவல் தெரிவித்தாள். எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்து, அர்ஜுனின் சடலத்திற்குப் பக்கத்தில் ஒரு தியாகியைப் போல அமரச்சென்றாள் சகுந்தலா. அப்போது காலில் ஏதோ தட்டுப்பட்டது. குனிந்து பார்த்தால், அர்ஜுனின் கைப்பேசி . அதில் ஒரு குரல்பதிவு ஆறு மணி நேரமாக ஓடிக்கொண்டிருந்தது.

இக்குரல் பதிவு மூலம் நித்யாதான் கொலையாளி என்று காவல் துறைக்குத் தெரிந்துவிடுமோ என்று பயந்து, அதை உடனே அழிக்க நினைத்தாள். அர்ஜுனின் கைரேகையை வைத்து கைப்பேசியைத் திறந்தாள். திரையில் ஒரு கடிதம் தெரிந்தது. ஆனால் அவள் கவனம் முழுவதும் குரல்பதிவின் மீதுதான். அதை அழிப்பதற்கு முன், அதில் என்னதான் இருக்கிறது என்று ஒருமுறை கேட்டுவிடத் தோன்றியது .

அந்த ஒரு நிமிடம், அவள் தலையெழுத்தையே மாற்றிப் போட்டது. கைப்பேசியிலிருந்து அர்ஜுன் குரல் கோபமாக ஒலித்தது. “எனக்குத் தெரியும்டி… அவ என் பொண்ணு இல்லைன்னு! இந்த டி.என்.ஏ ரிப்போர்ட்டைப் பாரு! நீ என்னை ஏமாத்துறன்னு எனக்கு எப்பவோ தெரியும். எங்கேடி அவன்? எங்கே ஒளிஞ்சிருக்கான் ? டேய் தேவா, வெளிய வாடா! எப்படி நித்யா? எப்புடி உன்னால முடிஞ்சுது? என் சொந்த பெஸ்ட் ஃப்ரெண்ட்கூடவே இப்படி ஒரு துரோகத்தைச் செய்ய உனக்கு எப்புடிடி மனசு வந்துச்சு?”.

தொடர்ந்து , நித்யாவின் குரல் கோபத்தோடு , “உன்கிட்டக் காசு இருக்குன்னு தாண்டா உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா ஒன்றரை வருஷமா உன் கம்பெனி நஷ்டத்துல போகுது. உன்னை மாதிரி ஒரு பிச்சைக்காரன்கூட நான் எப்புடிடா வாழ முடியும்? அப்போதான் தேவா எனக்குப் பணமும் அன்பும் கொடுத்தான். ஆமாடா, பூரணி அவனோட பொண்ணுதான். அதுக்கு இப்போ என்ன பண்ண போரே ?”

நித்யாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சகுந்தலாவின் நெஞ்சில் ஈட்டியாக இறங்கின.

தொடர்ந்து அர்ஜுன் குரல் “அந்த அஞ்சு வருஷக் காதல் உனக்கு ஒண்ணுமே இல்லையாடி நித்யா? உன்னால எப்புடி இவ்வளவு கொடூரமா மாற முடிஞ்சுது? தேவா வெளிய வாடா!”

சண்டை போடும் சத்தம். பலமான அடிதடி. தேவாவைக் காப்பாற்ற, நித்யா அர்ஜுனின் பின்மண்டையில் பெரிய பூஜாடியால் ஓங்கி அடித்தாள். அர்ஜுன் கீழே விழும் சத்தமும், உயிர் போகும் சத்தமும் கேட்டது.

அடுத்து கேட்ட வார்த்தைகள்தான் சகுந்தலாவின் முகத்தில் ஓங்கி அறைந்தன. தேவா பதறினான்.”அய்யோ! அர்ஜுன் செத்துட்டான் நித்யா! நாம இப்ப என்ன பண்றது? நான்லாம் ஜெயிலுக்குப் போக முடியாது!”. அதற்கு நித்யா சாதாரணமாகச் சொன்னாள் “பயப்படாத தங்கம், என்கிட்ட ஒரு ப்ளான் இருக்கு. இந்தப் பழியை அப்படியே எங்க அம்மா தலையில கட்டிடுவோம். அவளுக்கு எப்படியும் வயசாகிடுச்சு, அதுமட்டுமில்லாம அவங்களுக்கு அர்ஜுனை அவ்ளோவா பிடிக்காது. நான் அவங்களுக்கு போன் பண்ணி கொஞ்சம் பொய்யா நாலு நீலி கண்ணீர் வடிச்சா, எனக்காக எதை வேணாலும் செஞ்சுட்டு ஜெயிலுக்குப் போவாங்க . நீ பின்வாசல் வழியா எஸ்கேப் ஆயிடு. நான் நாடகத்தை ஆரம்பிக்கிறேன். சாயங்காலம் 5 மணிக்கு நாம இந்த ஊர விட்டு போயி புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்!”

இதற்கு மேல் அதைக் கேட்க முடியாமல், குரல்பதிவை நிறுத்தினாள் சகுந்தலா. அவளின் உலகமே இருண்டது. பெரிய தியாகம் செய்துவிட்டோம் என்று நினைத்த அவள் தாய்மை, இப்போது அவமானப்பட்டு நின்றது.வெளியே காவல் துறை வாகனத்தின் சத்தம் உக்கிரமாகக் கேட்டது. சகுந்தலா தரையில் கிடக்கும் அர்ஜுனையும், கையில் இருக்கும் கைப்பேசியையும் மாறி மாறிப் கண்ணீருடன் பார்த்தாள். ஜீப்பிலிருந்து இறங்கிய போலீஸ்காரர்கள் வாசல் கதவைப் பலமாகத் தட்டும் ஓசை கேட்டது. கதவைத் திறக்கப் போகும் சகுந்தலா , பழியைச் சுமந்து ஒரு தாயாகப் போகிறாளா? இல்லை, உண்மையைச் சொல்லி மனுஷியாகப் போகிறாளா?.

– யுக்தா த/பெ கோபிநாத், பேராசிரியர்: முனைவர் முனீஸ்வரன் குமார், சுலுத்தான் இதுரீசு பல்கலைக்கழகம், மலேஷியா.

1 thought on “பெத்த மனம் பித்து

  1. Very nice story, the plot twist was something really unexpected.
    We don’t see such stories daily, hats off to the write for thinking in such a creative way.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *