பூசைக்குள் வரும் பூக்கள்
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 29, 2026
பார்வையிட்டோர்: 135
அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-13
அத்தியாயம் – 9

ரகு அங்கு செல்லவும். செல்வராசு வீட்டை விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.
“எங்கே புறப்பட்டுட்டே!” படிப்பு காலத்தில் பால்ய சினேகிதன். ரகு அவன் அருகில் சென்றான்.
“பொழைப்பு விசயமா வெளியில போறேன்!”
புரியாமல் பார்த்தான்.
“உங்க குப்பத்திலேர்ந்து ரெண்டு பொம்னாட்டிங்க வந்து வேலை தந்தாங்க. அது விசயமா ஆசாரி கொளுத்துக்காரெல்லாம் பார்த்து கூட்டிப் போகனும். பார்க்கப் போறேன்.”
“வந்தவங்க பேரு?”
“பே…மறந்து போச்சு. ஆங்….பாலு பொண்டாட்டின்னு சொன்னாங்க?”
“அவுங்களைத் தெரியுமா?”
“தெரியாது. நாட்டுல யாரைப் பத்தியும் எனக்கு அக்கரை கெடையாது, நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன்”.
ஆள் பிடிக்க வந்தவர்கள் என்று நினைத்தது தவறு. ரகுவிற்குள் இப்போது மனதில் தெம்பு வந்தது .
“என்ன விசயம் சொன்னாங்க?”
சொன்னான்.
“எப்போ ஆரம்பிக்கப் போறீங்க?” என்று கேட்ட ரகுவிற்குள்,
‘இவர்களை வைத்து அவர்களுக்குச் சங்கடம் கொடுத்தாலென்ன?’ மனசுக்குள் பளீரென்று பட்டது. மடமடவென்று திட்டம் விரிவானது.
“இன்னைக்கு மூணு பேரும் போய் இடத்தைப் பார்த்து என்ன செலவாகும்ன்னு பேசி முடிச்சு சாமானெல்லாம் வாங்கி அப்புறம்தான் வேலை. அது நடக்க பத்து நாளாகும். ஏன் என்ன விசயம்?”.
“அவுங்களை நான்தான் அனுப்பிவிட்டேன்!” என்று தடாலடி அடித்து “எப்போ போறீங்க?” கேட்டான்.
“சாயந்தரம் மதியம் ரெண்டு மணிக்கு.”
ரகு கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி பன்னிரண்டு.
‘நம் திட்டப்படி முடிக்கவேண்டுமென்றால் இந்த ஆளைப் பிடித்து அந்த ஆளைப் பிடிக்க வேண்டும். கண்டிப்பாக முடியாது. எவர் இல்லாமல் போனாலும் காரியம் நடக்காது .’அது சரி வராதுப்பா’ ஒருத்தர் ஒதுங்கினாலும். முடியாது. முரண்டு பிடிப்பவர்களைச் சம்மதிக்க வைப்பதற்குள் இவர்கள் மாலா வீட்டிற்குச் சென்று திரும்பி விடுவார்கள். இது சரி வராது.’ மனதுக்குள் படம் விரிய…
“நீங்க இன்னைக்குப் போகாம நாளைக்குப் போகலாம்!” என்றான்.
“ஏன்?”
“இன்னைக்கு நாள் சரி இல்லே. அஷ்டமி நவமி. ரெண்டு மூனரை ராவு காலம், எமகண்டமெல்லாம் இருக்கு. வீடு விவகாரம் நல்ல நாள்ல ஆரம்பிச்சா உங்களுக்கும் நல்லது. அவுங்களுக்கும் நல்லது.” அவர்கள் திட்டத்தைச் சாமார்த்தியமாக வளைத்தான்.
அதற்கு நல்ல பலன் இருந்தது,
“நல்ல நேரத்துல நல்லது சொன்னே ரகு. நானும் இது தெரியாம அவங்ககிட்ட இன்னைக்கு வர்றேன்னு சொல்லிட்டேன்!” செல்வராசு மலர்ந்து கையைப் பிசைந்தான்.
“அதைப் பத்தி பிரச்சனை இல்லே. மத்தவங்களை அழைச்சுப் போகாம நீயே போய் அவுங்ககிட்ட விசயத்தைச் சொல்லி நாளைக்குப் பத்து மணிக்கு வர்றோம்ன்னு சொல்லு.” அதற்கும் வழியைச் சொன்னான்.
“இதுவும் நல்ல யோசனை!” விபரம் புரியாமல் செல்வராசு இதற்கு உடனே சம்மதித்தான்.
‘இவர்கள் அங்கு இருக்கும் நேரத்தில் தான் காரியம் முடிக்க முடியும் முடித்து விட வேண்டும்!’ நினைத்தவனுக்குள் அடுத்து இன்னொரு யோசனை.
‘இவனிடம் பேசிய விபரத்தை செல்வராசு, மாலா சாருவிடம் சொன்னால் ஆபத்து. மூன்றாவது மனிதன் சம்பந்தா சம்பந்தமில்லாமல் மூக்கை நுழைக்கிறானென்றால் இதில் ஏதோ வில்லங்கம் என்று உஷாராகி இல்லேப்பா அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்கள் நாட்களைத் தள்ளி வைத்துவிடுவார்கள். திட்டம் பாழ். உழைப்பு வீண்!’ உதித்தது.
“அப்புறம் இன்னொரு முக்கியமான சமாச்சாரம். நாளைக்குப் பத்து மணிக்குச் சரியான நேரத்துக்குப் போங்க. ஆற அமர கூரையெல்லாம் நல்லா ஆராய்ந்து செலவு அதிகம் போகாம சரியா எஸ்டிமேட் போட்டு சிக்கனமா காரியம் முடிங்க. நான் இங்கே வந்து உன்கிட்ட பேசின விசயம் அவுங்களுக்குத் தயவு செய்து தெரிய வேணாம். எனக்கு ரொம்ப அக்கரை, வீண் சிரமம். நினைச்சு வருத்தப்படுவாங்க. எனக்குப் பிடிக்காது. தெரிஞ்சவங்க முறையில நான் உங்க ரெண்டு இடத்துக்கும் உதவறேன். இதுக்கு ஏன் அவுங்களுக்கு அநாவசிய வருத்தம் வேணாம்!”
செல்வராசுக்கு நண்பனைப் பார்க்கப் பெருமையாய் இருந்தது, “கைவசம் வேலை இல்லாம இருந்தேன். தெரிஞ்சவங்களுக்கு இவ்வளவு பெருந்தன்மையா உதவுறதுக்கு ரொம்ப நன்றிப்பா” நண்பன் கைகளைப் பிடித்துக் கொண்டு தழுதழுத்தான்.
“பெரிய வார்த்தையெல்லாம் வேணாம். ஒரு மணி நேரத்துக்கு மேல இருந்து வேலையை முடிச்சுட்டு வாங்க. வர்றேன்!”. சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு விடுவிடுவென்று நடந்தான் ரகு.
செல்வராசு நெஞ்சு விம்ம… செல்லும் நண்பனையே வைத்தகண் வாங்காமல் பார்த்தான்.
ரகு சின்னப்பனைத் தேடி போனான். அவர் நொடித்து மெலிந்து ரொம்ப சோகமாய் இருந்தார்.
“வாத்தியாரே!“ அழைத்தான்.
திடுக்கிட்டுத் திரும்பிய அவர் கொடுத்து காசைக் கேட்டுவிடுவானோ என்கிற பயத்தில் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.
“ஒரு நல்ல சேதி!” பக்கத்தில் அமர்ந்தான்.
“என்ன?”
“சாரு மாலா பொட்டச்சிங்களைப் புடிச்சிப் போட ஒரு நல்ல வாய்ப்பு!”
புரியாமல் பார்த்தார்.
“அதுக்கு நீங்களும் நானும் மனசு வைச்சா மட்டும் போதாது. சப்-இன்ஸ்பெக்டர் சாரதியும் மனசு வைக்கனும்!”
“என்னப்பா சொல்றே?!”
“இப்புடி உங்க காதைக் காட்டுங்க சொல்றேன்.”
அவர் அவன் பக்கம் சாய்ந்தார். ரகு பக்கம் சாய்ந்தார். ரகு அவர் காதில் தன் திட்டத்தைச் சொன்னான். கேட்ட அவருக்கு முகம் மலர்ந்தது.
“அருமையான யோசனை!” துள்ளாத குறையாய்ச் சொன்னார்.
“மொதல்ல ஐயாவை கை போன்ல புடிங்க.”
“வேணாம் போன்ல பேசினா சரிவராது. நேரடியாப் பேசலாம்.!”
“சரி” ரகு தலையாட்ட இருவரும் முதலில் காவல் நிலையம் சென்றார்கள்.
அங்கே இல்லை வீட்டிலிருக்கிறார் என்றதும் அங்கு சென்றார்கள்.
“வாங்கப்பா!” வரவேற்றார்.
“தம்பி ரகு. நமக்கு வேண்டியப்பட்ட பையன். ஒரு விசயம் சொல்றார் அது சரியா இருக்கு.”
“என்ன தம்பி?“
“சாரு….!”
“‘அவளைப் பத்திப் பேசாதே. அவளை உள்ளேத் தள்ளி முட்டிக்கு முட்டித்தட்டனும்ன்னு நான் முடிவுல இருக்கேன்.” கோபப்பட்டார்.
“அதுக்குத்தான் தம்பி ஐடியா சொல்லுது?”
“என்ன?“ உறுமலாய் ரகுவைப் பார்த்தார்.
“ந….நாளை காலை பத்து மணிக்கு அவ வீட்டுக்கு வீடு கட்டுறது சம்பந்தமா மூணு ஆம்பளைங்க வர்றாங்க சார். அவுங்க உள்ளாற இருக்கிற சமயம். தொழில் பண்றீங்களான்னு புடிச்சு துாக்கிக்கிட்டு வந்துடலாம் சார்!” சொன்னான்.
“அப்படியா சொல்றே?!” அவர் அவனை ஆச்சரியமாகப் பார்த்தார்.
“ஆமாம். அவளுங்க புருசன் சப்பாணி வேலைக்குப் போயிடுவான் சார். இந்த ரெண்டு பொம்மனாட்டிங்க மட்டும் தனியா இருப்பாங்க. தூக்கி வந்துடலாம்!” என்றான்.
சாரதி நெற்றியை மேலே ஏற்றிக் கொண்டு சிந்தனையிலாழ்ந்தார்.
“இதுல சிக்கல் ஏதும் வராது சார். அவளுங்க புருசன்காரனே வந்தாலும் நொண்டிபடவா! உனக்கு எப்படி ரெண்டு பொண்டாட்டி தொழில் பண்ண வசதியாய் அவளுங்களுக்குத் தாலியைக் கட்டி வைச்சிருக்குறீயான்னு அவனையும் நாலு போட்டு உள்ளாற போடலாம் சார். இல்லேன்னா அவன் வர்றதுக்குள்ள கேசெழுதி கோர்ட்டுல ஒப்படைச்சா பிரச்சனைத் தீர்ந்திடும். இல்லே…சரி வர்றீயா இல்லே கேசெழுதி உள்ளே தள்ளவான்னு மிரட்டியும் நம்ம வழிக்குக் கொண்டு வரலாம் சார். நமக்குப் பயன்படாததை வழிக்குக் கொண்டு வரனும். இல்லே துாக்கி எறியனும் அழிக்கனும் சார்.” முடித்தான்.
அவர் இன்னும் மௌனமாய் இருப்பதைப் பார்த்து குழம்பிப் போன சின்னப்பன் “இதுக்கப்புறமும் சாரு வழிக்கு வருவாள்ன்னு யோசிக்கறீங்களா?” கேட்டார்.
“அதைப் பத்தி யோசனை இல்லே. வேற….” என்ற சாரதி மனசுக்குள் அப்படி இப்படி கோலம் போட்டார். கணக்கு சரியாய் வரும் போல் தோன்றியது.
“சரி செய்யலாம்!” திருப்தி பட்டவராய்த் தலையாட்டிய சாரதி, “அந்த ஆளுங்க எப்போ வருவானுங்கன்னு சொன்னே?” ரகுவைக் கேட்டார்.
“சரியா பத்து மணி ஐயா!”
“அவனுங்க முன்னே பின்னே வந்தா எனக்கு சரி வராது. ஒண்ணு செய்யுங்க. அவனுங்க அங்கே வந்ததும் எனக்குப் போன் செய்யுங்க. நான் உடனே வந்து வேலையை முடிக்கிறேன்!” என்றார்.
“இதுவும் நல்ல நல்ல யோசனை!” – “சரிய்யா” சின்னப்பன் தலையாட்டினார்.
“இதுக்கு ரெண்டு பேர் தேவை இல்லே. இந்த பையனே போதும். ரகு நீங்க எங்கே இருக்கீங்க?” கேட்டார்.
“வீடு கோவிந்தன் குப்பம்தான்ய்யா.”
“எந்த இடம்?”
“குப்பம் நடுவால.”
“இவ வீடு எங்கே இருக்கு?”
“ஊர் தென்னண்ட பக்கம். பக்கத்துல இட்லி கடை, ஆப்பக்கடையெல்லாம் உண்டு, வாசல்லேயே வண்டியை நிறுத்தி ஏத்தலாம் வசதி!”
“சரி. முடிச்சுடுறேன்! இந்த விசயத்துல உனக்கென்ன இவ்வளவு அக்கரை?” ரகுவை நிமிர்ந்து அமர்ந்து பார்த்தார். அவன் சங்கடமாய் சின்னப்பனைப் பார்த்தான்.
“எல்லாம் சாரு. வயசு கோளாறு!” சின்னப்பன் சூசகமாய்ச் சொல்லி அவனைத் தப்பிக்க வைத்தார்.
அத்தியாயம் – 10
சப்-இன்ஸ்பெக்டர் சாரதி பதினோரு மணிக்கெல்லாம் தன் வேலையைக் கச்சிதமாய் முடித்தார். நல்லவேளையாக மாலா கடைத்தெருவரை போனதால் தப்பித்தாள்.
பொறுக்க மாட்டாத முத்தம்மாள் அவளைத் தேடிக் கொண்டு கடைத்தெருவிற்கேச் சென்றாள்.
எதிரில் வந்தவளை நிறுத்தி “உன்னைத்தான்டிம்மா தேடிவர்றேன்!” வேர்த்து விறுவிறுத்தாள்.
“ஏன் பாட்டி?!”
“போலீஸ் வந்து உன் வீட்டுல இருந்த கொளுத்துக்காரன், ஆசாரி, சாருவையெல்லாம் துாக்கிப் போயிருச்சு!”
ஆட்கள் வருவதற்குள் கடைத்தெரு போய் காய்கறி வாங்கி திரும்புதற்குள் அசம்பாவிதம்! மாலாவிற்கு நடுக்கியது. அதிர்ச்சியாய் இருந்தது.
“பசங்க என்ன குத்தம் செய்து மாட்டிக்கிட்டானுங்களோத் தெரியலை. நானும் ஆப்பக்காரியும் கடையை முடிச்சிட்டு அப்போதான் வீட்டுல சாய்ஞ்சோம். உன் வீட்டு வாசல்ல ஒரு ஜீப் வந்து நின்னது. தொப்பு தொப்புன்னு ஒரு இன்ஸ்பெக்டர் நாலு போலீசுகாரங்க குதிச்சு உள்ளே போனாங்க. அப்புறம் எல்லாரையும் அள்ளிக்கிட்டு வந்து ஏத்தினாங்க. எல்லாம் சினிமாவுல நடக்குறாப் போல நடந்துது. நாங்க பதறி அடிச்சிக்கிட்டு வெளியே வந்து சுதாரிக்கிறதுக்குள்ளே ஜீப் விர்ன்னு போயிடுச்சு. என் கண்ணுல படாம நீ வீட்டுக்குப் போனா சேதி சொல்ல ஆப்பக்காரியை உன் வீட்டு வாசல்லேயே உட்கார வைச்சிட்டு உன்னைத் தேடி வந்தேன்” முடித்தாள்.
பயந்தது நடந்து விட்டது. சாரதி வேலை! மாலாவிற்குத் தெளிவாகத் தெரிந்தது. இது எப்படி சரி? கோபம் வந்தது. முன் பின் யோசிக்காமல் போலீஸ்காரர்கள் புத்தி தெரியாமல் “வர்றேன் பாட்டி!” யாருக்கும் எந்த வித தகவலும் கொடுக்காமல் ஒரு ஆட்டோ பிடித்து ஸ்டேசனை நோக்கி விரைந்தாள்.
புயலைப் போல் நுழைந்தாள். சாருவும் ஆண்களும் பக்கத்து சிறைகளில் இருந்தார்கள். சப்-இன்ஸ்பெக்டர் இருக்கை காலியாக இருந்தது. நேராக அடைபட்டிருந்தவர்களை நோக்கி சென்றாள்.
“இங்கே வாம்மா!” எத்திராசு அழைத்தான்.
சென்றாள்.
‘ஸ்டேசன்னா உங்க அப்பன் வீடுன்னு நெனப்பா? இங்கே குத்துக்கல் போல இத்தினி போலீசு இருக்கும் போது நேரா அவுங்ககிட்ட எதுக்குப் போனே?” காய்ந்தான்.
அப்போதுதான் மாலாவிற்குத் தன் தவறு தெரிந்தது.
“மன்னிக்கனும் சார். அவுங்களைப் பார்க்கப் போனேன்!”
“நீ யாரு?”
“நீங்க அடைச்சு வைச்சிருக்கிறவளோட அக்கா. அவள் புருசனுக்கு நான் முதல்தாரம்!”
“நீதான் மாலாவா?”
“ஆமா. இவுங்க என்ன தப்பு சார் செய்ஞ்சாங்க?”
“சப்-இன்ஸ்பெக்டர் வருவார். அவரைக் கேளு.”
“அவர் எங்கே சார்?”
“ஒரு கொலை கேசு சம்பந்தமா சுடுகாட்டுல பொதைச்ச பொணத்தை வெளியே எடுத்து போஸ்ட்மார்ட்டம் செய்யப் போயிருக்கார்.”
“எப்போ சார் திரும்புவார்?”
“தெரியலை!”
மரியாதை இல்லை. பேச்சு சரி இல்லை. இப்போதுதான் மாலாவிற்குத் தான் தனித்து வந்ததின் தவறு தெரிந்தது, வாசுகி, கணவனுக்குத் தகவல் சொல்லி அழைத்துவர திரும்பினாள்.
“எங்கே போறே?” எத்திராசு அதட்டினான்.
“கணவருக்குத் தகவல் சொல்ல.”
“எங்கேயும் போகக்சுடாது. அப்புடி மூலையில உட்காரு.”
“ஏன்ன்?”
“அந்த கேள்வியெல்லாம் என்கிட்ட வேணாம். சொல்றதைச் செய்.”
திகைத்தாள். தயங்கினாள்.
“உட்காருடின்னே…!” எத்திராசு ஆத்திரப்பட்டவன் போல் எழுந்து இடியாய் முழங்கினான்.
‘இது இவர்கள் கோட்டை. உள்ளே நுழைந்தால் இருப்பவர்கள் சாம்ராஜ்யம். அவர்கள் வைத்தது சட்டம். மீறி நடந்தால் அடி, உதை, ரகளை, அசம்பாவிதம், பொய்க் கேசு!’ புரிய மாலாவிற்குக் கை கால் நடுங்கியது. எத்திராசு கை காட்டிய இடத்தில் போய் அமர்ந்தாள்.
சாருவுக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. அக்கா என்று அழைத்துப் பேச வாய்ப்பில்லாமல் துாரத்தில் இருந்தாள்.
சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்த சாரதி நேராக சென்று இருக்கையில் அமர்ந்தார்.
எத்திராசு போய் அவரிடம் மாலா வந்த விசயத்தை அவர் காதில் போட்டு திரும்பினான். அரை மணி நேரம் கழித்து அழைக்கப்பட்டாள். போய் எதிரில் நின்றாள்.
“இன்னும் எத்தினி பேர் அங்கே விபச்சாரம் பண்றீங்க?”
எதுவும் விசாரிக்காமல் முதல் அடியே மரண அடியாக தாக்க… “சார்ர்!” மாலா அலறினாள்.
“இது அபாண்டம்!” கூவினாள்.
“இதோ பார். இந்த கூவுறது இல்லேன்னு நடிக்கிற வேலையெல்லாம் இங்கே வேணாம். யார் எப்படின்னு எங்களுக்குத் தெரியும். தகவல் வந்துதான் நாங்க போய் கையும் மெய்யுமாய் புடிச்சு வந்தோம். நீ தப்பிச்சுக்கிட்டே. இப்போ தானா வந்து மாட்டிக்கிட்டே!” என்றவர் “ஏட்டு!“ அழைத்தார்.
எத்திராசு உள்ளே வந்தான்.
“அவளோட இவளையும் உள்ளாற தள்ளி எல்லார் மேலேயும் கேசெழுது.” உத்தரவிட்டார்.
மாலாவிற்கு மயக்கம் வரும் போலிருந்தது,
“வாம்மா!” ஏட்டு அழைக்க…. “சார்! நாங்க எந்த தப்பும் செய்யலை!“ துணிவு கழல அழுதாள்.
“அதெல்லாம் கோர்ட்டுல சொல்லு. இப்போ நகரு” சொன்ன சாரதி அடுத்து பேசப்பிடிக்காதவர் போல் பைல் பிரித்தார்.
“வாம்மா!”
“சா….சார்…” விசும்பினாள்.
“மரியாதையாப் போறீயா. உதைச்சு உள்ளாற தள்ளச் சொல்லவா?!” சாரதி முகம் சிவந்தது.
மாலா மௌனமாக எத்திராசு பின்னால் நடந்தாள். அவன் சாருவோடு அவளைச் சிறையிலடைத்து பூட்டி அமர்ந்தான்.
சாருவிற்குத் தன்னுடன் வந்து சேர்ந்த மாலாவைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. புத்திசாலி, போலீஸ் முறை தெரியாமல் வந்து சிக்கிக்கொண்டாள்! நினைக்க துக்கம் தொண்டையை அடைத்தது.
“அ…க்கா!” விசும்பினாள். இவளும் அழுதாள்.
தன் அறையை விட்டு வெளியே வந்த சப்-இன்ஸ்பெக்டர் சாரதிக்கு.. சாரு, மாலா விசும்பலைப் பார்க்க கடுப்பு.
“பொம்பளைங்களாச்சேன்னு ரெண்டு பேரையும் ஒண்ணா போடச் சொன்னால்….என்ன ஒப்பாரி? கண்ணைத் தொடைச்சிக்கிட்டு அழுது கலாட்டா செய்யாம இருந்தா ஒழுங்கா கோர்ட்டுக்குப் போவீங்க. இல்லே… ஒருத்தியைத் துாக்கி ஆம்பளைங்களோட போட்டு இங்கேயே கற்பழிக்கச் சொல்வேன். ஜாக்கிரதை! ஏட்டு! நான் திரும்பி வர்றவரை எந்த பெரிய மனுசன் யார் வந்து இவளுங்களை ஜாமீன்ல விடச் சொன்னாலும் விடாதீங்க.” உத்தரவிட்டுவிட்டு வேகமாக வெளியேறினார்.
‘என்ன அராஜகம்!’ மாலா, சாரு அரண்டு போனார்கள்.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
பாரத்தை சுமப்பது சுகமா! பாரமாக இருப்பது சுகமா!
உரு.வளவன்
July 29, 2026
நீ என் மகனல்ல
என்.ஸ்ரீதரன்
July 29, 2026
நோன்பு
ஜே.எம்.சாலி
July 29, 2026
