ராப்பிச்சை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 12, 2026
பார்வையிட்டோர்: 94 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“முதல்லே மனுஷனை மனுஷனா மதிக்கக் கத்துக்கடி வரது! பிறப்பாலே அவன் ஏதோ பிச்சைக்காரனா பிறந்துட்டான்! அவன் செய்த தப்பு அது ஒண்ணு தான்! ஒலகத்துல பசிக்கு அடுத்தது தான் எல்லாமே! அவனோட பசி அவன் அம்மா தாயீனுட்டான்! அதனாலே அவனை வாய்க்கு வந்தபடி திட்டி அனுப்புனியே… அது நியாயமா? நாம செத்தா நம்மோட வர்றது நாம செய்த பாவபுண்ணியங்கள் மட்டுந்தாண்டி வரது!” என்று… சிதம்பரம் பிள்ளை அழுத்தமாகக் கண்டித்தார் தன் மனைவி வரதாம்பாளை.

“இதப்பாருங்க! உங்க இரக்கப் புத்திய உங்களோட வெச்சிக்கங்க வேண்டாத விஷயத்திலேயெல்லாம் தலையிட்டு என்னைக் கத்த விடாதீங்க! எனக்கு ஏற்கனவே ஒடம்பு. சரியில்லே! அந்தப் பிச்சைக்காரனைத் திட்டினா ஒங்களுக்கேன் அவ்வளவு கோபம் வருது! அவன் என்ன ஒங்களுக்கு மாமனா? மச்சானா? ஒட்டா? உறவா?”

“கூடப் பொறந்தா தான் பொறப்புங்கறது இல்லேடீ! இந்த மண்ணின் உயிர்கள் எல்லாமே ஒண்ணுக்கு ஒண்ணு சம்பந்தப்பட்டவை! பிறவி ஒண்ணே ஒண்னுன்னு இருந்தா… நீ பேசுறது சரி! எண்ணவோ எழுதவோ முடியாத பிறவிகள் நமக்கு உண்டு!’

“போதும் உங்க வேதாந்தம்! பூட்டுங்க வாய… அந்த ராப்பிச்சையைப் பேசினா இவருக்குப் பொத்துக்குட்டு வருது!” “எனக்கென்ன உன் மேலே கோபம்! அதெல்லாம் ஒண்ணுமில்லே! மனித நேயம் காக்கப்பட வேண்டிய ஒண்ணு! யாரையும் திட்டவோ தண்டிக்கவோ நமக்கு அதிகாரம் இல்லே! இயற்கையோட நியதி, எல்லாத்தியுமே கவனமாய் பார்த்துக்கிது! நாம கர்வதத்தாலே, எல்லாத்துக்கும் நாம தான் காரணமின்னு நெனச்சி, நம்மை நாமே கெடுத்துக்கிடறோம்! சரி! சரி!

உங்கிட்டே இப்போ எதைப் பேசினாலும் அது வீண்தான் நான் ஆபீஸ் புறப்படணும்! டிபன் ரெடியா?”

“எல்லாம் ரெடி! சுவாமி விளக்கை ஏத்தீட்டு வந்து டிபன் பண்ணீட்டுப் புறப்படுங்க!”

“சுவாமிக்கா…? விளக்கா…! அது இங்கே இருக்கா! இரக்கம் உள்ள இடத்திலே தானே தெய்வம் வாசம் செய்யும்பாங்க! என்னமோ சொல்றா… செய்யலேன்னா கத்துவா!” இப்படி எண்ணியபடியே சுவாமி அறைக்குச் சென்றார் சிதம்பரம்பிள்ளை. ஆபீஸ் செல்ல சிறிது தூரம் நடந்தார் சிதம்பரம் பிள்ளை.

“ஐயா!”

“அடேடே… யாரு மாணிக்கமா! என்னப்பா என்ன விஷயம்?”

அந்த மாணிக்கம் வேறு யாரும் அல்ல. ராப்பிச்சை என்று எல்லோராலும் அழைக்கப்படும், வரதாம்பாளால் அர்ச்சிக்கப்பட்ட ராப்பிச்சையே தான்.

“காலையிலே நான் பிச்சை கேட்டு வந்தப்போ அம்மா கொஞ்சம் சூடா இருந்தாங்க! நீங்க அவுங்களைக் கண்டிச்சீங்க! அவுங்க ஆயிரம் இருந்தாலும் அவுங்க உங்க அந்த வீட்டுக்கு மஹாலட்சுமி ஐயா! அவுங்களை எதுவும் சொல்லாதீங்க! உலகப் போக்கிலே அவுங்கப் பேசுறது சரிதான்!”

”மாணிக்கம்! உன்னை இந்த உலகமே பிச்சைக்கார்னா சொன்னாலும் நான் அதை என் வாயாலே உச்சரிக்க மாட்டேன்! உன் வார்த்தைகள்லே நான் பார்க்கிற பெருந்தன்மைகளும், உன் பார்வையும் எனக்குள்ளே ஒரு மரியாதையைத் தான் ஏற்படுத்துது”

“என்னய்யா பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க! கடவுளோட அமைப்பிலே இவன் கோடீஸ்வரான இருக்கணும். இவன் பிச்சைக்காரனா இரக்கனும்ங்கிறது விதி! அந்த விதிப்படி உலகம் நடக்குது! அவ்வளவுதான்!”

“மாணிக்கம்! வரது அப்படி இருக்கக் காரணம் இருக்கு! அவளுக்குப் பிள்ளையே இல்லே! எனக்குத் தெரிஞ்ச வரையிலும் பிள்ளை குட்டி இல்லாத யாருமே கல் நெஞ்சக்காரவுங்களாத்தான் இருக்காங்க! அது ஒண்ணுதான் புரியலே!”

“எசமான்! அங்கதான் யோசிக்க வேண்டியதே இருக்கு! ஒருவிதமான விரக்தி! ஒருவிதமான வெறுப்பு! தன்னை மட்டும் ஆண்டவன் இப்படி வெறுமையா விட்டுட்டானேங்கிற ஆதங்கம்! அந்த வெறுப்பு எல்லார் மேலேயும் பரவி வெடிக்கும்! அது தன் தப்பில்லே! ஆண்டவனோடதுங்கிறது அவுங்க அபிப்பிராயம்! ஆனா உண்மை என்னான்னா அவுங்க அவுங்க செய்த முன்வினை! அதுக்குத் தக்கபடி தான் மறு ஜென்மமே அமையுதுங்கிறதை உணர நேரம் ஒதுக்காதே ஐயா!”

“மாணிக்கம்! படிக்காத உனக்குள்ளே எவ்வளவோ உலக ஞானம் பளிச்சென்று தெரியுது! படிச்சவுங்களுக்கு ஏன் இது மாதிரியான விஷயங்கள் தெரியலே?”

“படிக்கிறவுங்களுக்கு அறிவு மேம்பட மேம்படத்தான் அவுங்க ஒவ்வொன்னுக்கும் அறிவுப்பூர்வம் பேசு வாங்க சாமீ! அறிவு கேள்விகளை உண்டு பண்ணும்போது, ஞானம் வெளிப்படாது! ஞானம் வெளிப்படற இடத்திலே, அறிவுக்கு வேலை இல்லே! வெறும் கேள்வி ஞானத்தாலே எதையும் சாதிக்க முடியாது! அதனாலேதான் படிக்கிறவுங்க எதையும் முழுசா உணர்றதில்லே ஐயா!”

“சரி நான் வர்றேன் மாணிக்கம்! ஆபீஸீக்கு டைமாச்சு! உன்னோட பேசுற கொஞ்ச நேரத்திலே தான் எனக்கு நிம்மதிங்கிறதே கிடைக்குது, வரட்டுமா?”

“நல்லது சாமி!”

“அட உலகமே! இந்த மாணிக்கம் வார்த்தைகளில் உள்ளது மட்டுமே உண்மையாக என் மனத்தில் படுகிறது! இது ஏன் பிறருக்குத் தெரியவில்லை?” இப்படி எண்ணியபடியே சென்றார் சிதம்பரம்பிள்ளை.

அலுவலக வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார் சிதம்பரம்பிள்ளை. அந்த நேரத்தில் தான் அவருக்கு அந்த தொலைபேசி செய்தி வந்தது. ‘ஹலோ… வைத்தியநாதன் கம்பெனியா?”

”எஸ்… நீங்க யாரு பேசறது…?” சிதம்பரம்பிள்ளை கம்பீரமாகக் கேட்டார்.

“நான் பி.ஆர்.மருத்துவமனை ரிசப்சனிஸ்ட் கஜேந்திரன் பேசுறேன் சார்! உங்க மனைவி பேரு தானே வரதாம்பாள்…?’ இதனைக் கேட்டதும் சற்றுப் படபடத்தார்.

சிதம்பரம்பிள்ளை… ஒரு சில வினாடிகளுக்குப் பின், தன் நிலைப்படுத்திக் கொண்டவராகப் பேசினார் சிதம்பரம்பிள்ளை

“எஸ்… அவளுக்கு என்ன?”

”சார்! யூ டோன்ட் வொர்றீ… எதுவும் சீரியஸ் இல்லே… பட் தலையிலே தான் பலமான அடி! ரோடை கிராஸ் பண்ணும்போது ஒரு லாரி அவுங்க மேலே மோதீட்டுது! மயங்கிய நிலையிலே அவுங்களை வணங்கப்பட வேண்டிய ஒரு பிச்சைக்காரர் தான் ஆட்டோவிலே போட்டுக் கொண்டு வந்து சேர்த்தார். நீங்க இப்போ உடனே வர முடியுமா…?” என்று கேட்டார் கஜேந்திரன்.

“இன்னும் ஒரு நிமிஷத்திலே நான் அங்கே வந்துடறேன் சார்!” என்று கூறிய சிதம்பரம்பிள்ளை தொலை பேசியை வைத்துவிட்டு மானேஜரைப் பார்க்க ஓடினார்.

பி.ஆர்.மருத்துவமனையின் வாசலில் சீறிக் கொண்டு ஓர் ஆட்டோ வந்து நன்றது. அதிலிருந்து வேகமாக இறங்கினார் சிதம்பரம்பிள்ளை. பதறியபடி ரிஷப்சனுக்கு வந்தார்.

“சார்…. நீங்க தானே மிஸ்டர் சிதம்பரம்பிள்ளை?” ரிஸப்சனிஸ்ட் கஜேந்திரன் கேட்டார்.

“எஸ்… நான் வரதுவைப் பார்க்கனும் சார்… உடனே பார்க்கனும்!”

”சார்! அவுங்க இன்னும் பத்து நிமிஷத்திலே சுயநினைவுக்கு வந்திடுவாங்க…இப்பத்தான் ரத்தம் ஏத்தியிருக்கு!”

”ரத்தமா?”

“எஸ்… அது கூடப்பாருங்க… அந்த நேரத்திலே அவுங்களுக்குத் தேவையான ஏ.பாஸிட்டிவ் பிளட் இங்கே இல்லே. நாலு மருத்துவமனைக்கு போன் பண்ணியும் பயனில்லை! பிளட்டை இங்கேயே வெச்சிக்கிட்டு ஊரு பூராப் போன் பண்ணினோம்! கடைசியிலே உங்க மனைவிய எந்தப் பிச்சைக்காரர் கொண்டு வந்து சேர்த்தாரோ அவருக்கும் ஏ.பாஸிட்டிவ் பிளட் தான் அதை அவரு சொல்லேலேன்னா தெரியாது. டாக்டர் டெஸ்ட் பண்ணிப்பார்த்தா அதே குரூப்! அவருதான் உங்க மனைவிக்கு ரத்தம் கொடுத்த்ரு!”

“இப்ப அவரு எங்கே சார்?”

“அவரு பிளட் கொடுத்ததுமே போயிட்டாரு சார்… அதைவிட என்ன ஆச்சரியம்னா, அவரே பில்லுக்குண்டான மூவாயிரத்தையும் கட்டிட்டுப் போயிட்டாரு சார்!”

“பேரென்ன சொன்னாரு”

“யாரோ…ம்…ஞாபகம் வந்துட்டது சார் மாணிக்கமாம்!” “நிச்சயமா அந்தப் புண்ணியவானாத்தான் இருக்கனும்!”

“சார்! ஒரு விஷயம்! நான் அவரு பேரைச் சொல்லத் தயங்கினதுக்குக் காரணமே அவரு என் பேரை அந்த அம்மாகிட்டே சொல்லிடாதீங்கன்னு கெஞ்சிக் கேட்டுக்கிட்டாரு! அதோட பிளட் கொடுத்த விஷயம் அவங்களுக்கு அறவே தெரிய வேண்டாம்னும் சொன்னாரு! நீங்க வாங்க சார். உங்க மனைவியை இப்போ பார்க்கலாம்…!” கஜேந்திரன் அவரை அழைத்துக் கொண்டு லிப்ட்டில் ஏறி மாடிக்குச் சென்றார்.

“வரது…!” சிதம்பரம்பிள்ளைக்குக் கண்கள் கலங்கின.

“என்னங்க… நான் தான் பிழைச்சிக்கிட்டேனே…!” வரதாம்பாள் மெல்லிய குரலில் பேசினாள்

“நிச்சயமா வரது! நாம யாருக்கும் எந்தக் கொடுதலும் செய்யலியே! செய்தாதானே…?”

ஒரு வார காலத்திற்குப் பின் தலையில் ஆறாத காயக் கட்டுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள் வரதாம்பாள்.

“அம்மா… தாயீ… ஏதாச்சும் பிச்சை போடுங்கம்மா…! வெளியே ராப்பிச்சையின் குரல் கேட்டது. தொடர்ந்து அந்தக் குரல் வரதாம்பாளை வெறுப்பேற்ற வாசலுக்கு வந்தாள். வழக்கமாக வரும் மாணிக்கம் நின்றான். அவனைப் பார்த்ததும் பேயாக மாறினாள் வரதாம்பாள்.

“ஏண்டா… நீ மனுஷனா? அன்னிக்கி மார்க்கெட்டுக்குப் போகும்போதே எதிர்ல வந்தே! உன்னைப் பார்த்த துரதிருஷ்டம் நான் ஒரு வாரமா மண்டை உடைஞ்சி ஆஸ்பத்திரியிலே கெடந்துட்டு வந்தேன்! டெய்லி உன்னைத் திட்டுறேன்! உனக்குச் சூடு சொரணை இல்லாமே நீயும் வந்துடறே! என்னைக் கொல்லனும்னு முடிவு பண்ணீட்டியா?”

குளித்துக் கொண்டிருந்த சிதம்பரம்பிள்ளை குளித்து முடித்துவிட்டுக் குளியலறையிலிருந்து வெளியே வந்தார். வரதாம்பாள் யாரையோ திட்டுவது துல்லியமாகக் கேட்டு வாசலுக்கு ஓடி வந்தார்.

“பிச்சைக்கார நாயே… போடா இங்கிருந்து மொதல்ல…!” என்றாள் வரதாம்பாள்.

”நிறுத்துடி உன் பேச்சை! அந்தப் புண்ணியவான் மருத்துவமனையிலே உன்னைக் கொண்டு போய்ச் சேர்த்து, அவரோட ரத்தத்தையும் கொடுக்கலேன்னா, நீ இப்போ அவரை இவ்வளவு தெம்பாய் பேச முடியாதுடீ!”

”சாமீ…”

“நீ பேசாம இரு மாணிக்கம்! உன்னைத் திட்டின இவள…!”

”சாமீ…” ஆக்கரோஷமாகக் கத்தினான் மாணிக்கம்அப்படியே ஊமையாகிவிட்டனர், சிதம்பரம்பிள்ளையும் வரதாம்பாளும்.

“சாமீ… போன ஜென்மத்திலே நான் ஒரு ஐதீக பிராமணன்! என்னோட தங்கைதான் இந்த ஜென்மத்திலே உங்களுக்கு மனைவியா ஆகி இருக்கிற இந்த அம்மா! இவங்கள நான் போன ஜென்மத்திலே தலையிலே அடிச்சி நான் கொன்னுட்டேன்! எதார்த்தமா நான் அடிச்சதிலே, இயற்கையோட விதி அவுங்களைக் கொன்னுட்டது! இந்த ஜென்மத்திலே நான் ஒரு துறவியா வாழ்ந்து என் பாவங்களைப் போக்கி ஆகணும்ங்கிறது தான் விதி! இந்த மாதிரி இப்ப நான் இதை வேறே எங்கேயும் சொன்னா, என்னைப் பைத்தியம்னு சொல்லுவாங்க! துறவியாகுற ஆசையாலே நான் சுருளி மலைக்குப் போனேன்! அங்கே எனக்கொரு குருநாதர் கிடைச்சாரு! அவரோட சீடனா சேர என் அபிப்பிராயத்தைச் சொன்னேன். அவரு கண்களை மூடித் திறந்து என்னைப் பார்த்தாரு!

”குழந்தே! நீ போன ஜென்மத்திலே ஒரு தவறு இழைச்சிட்டே! அந்தப் பாவத்தைப் போக்குற இடம் உனக்குச் சென்னைப்பட்டினம்! அங்கே தான் உன் சகோதரி, வரதாம்பாள்னு பேரோட பிறந்திருக்கா! அவ கையால ஒரு நாள் ஒரு தடவையாவது நீ பிச்சை வாங்கிச் சாப்பிட வேண்டும்! அதோட அவ உயிரைக் காப்பாத்துறதுக்கு ஒரு சந்தர்ப்பம் வரும். அதை உன் உயிரைக் கொடுத்தாவது காப்பாத்தனும்னார! அவங்க உயிரைக் காப்பத்த வேண்டிய ஒரு சூழ்நிலையை எனக்கு ஆண்டவன் கொடுத்தான்! என் ரத்தத்தை அவுங்களுக்குக் கொடுத்துட்டேன்! இன்றைக்கு ஒரே ஒரு பிடி சாதம் மட்டும் என் ஆத்மா கரையேற அவுங்க போட்டுட்டா, நான் உடனே என் குருநாதனை நோக்கிச் சுருளி மலைக்குப் போயிடுவேன்…!” மாணிக்கம் சொன்னவற்றைக் கேட்டு மனம் ஸ்தம்பித்தே போனார்கள் இருவரும். சில சில நிமிடங்களுக்குப் பின் சிதம்பரம்பிள்ளை பேசினார்.

வரது! உனக்கு மாணிக்கம் கொடுத்த ரத்தம் தாண்டீ உன் உயிரையே காப்பாற்றி இருக்கு. இந்த உலகத்திலே மாணிக்கத்தை ராப்பிச்சையா நினைக்கிறாங்க! ஆனா அவரை என் மனசு ஒரு பெரிய ஸ்தானத்திலேதான் வெச்சி பார்த்திருக்கு. அது எவ்வளவு பெரிய உண்மை பார்த்தியா. அவருக்கு உன் கையாலே இன்னிக்கு ஒரு வேளை பிச்சை மறுக்காம போடு” அவள் அந்தப் பிச்சையினை மாணிக்கத்திற்கு இட்டதும், அதனை வாங்கி ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு நடந்தான்.

ஆம்! அவன் உலகத்திற்கு ராப்பிச்சை தான். ஆனால் சிதம்பரம்பிள்ளைக்கும் வரதாம்பாளுக்கும் அவன் ஒரு ஞானி. அந்த ஞானி சென்று மறையும் வரை வணங்கி நின்றனர்.

(1986-ஆம் ஆண்டு)

– விண்ணில் ஒரு மணல் வீடு (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: பிப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

ஆசிரியரின் பிற நூல்கள் கதைத் தொகுதிகள் மரபுத்தொடர்க் கதைகள் (1990) ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு (1995) மனதில் உறுதி வேண்டும் (1995) தியாகப் பிறவி (1995) கட்டுரைத் தொகுதிகள் ஊன்றுகோல் (1989) கட்டுரை மலர்கள் (1990) என்னுரை - விண்ணில் ஒரு மணல் வீடு - பிப்ரவரி 2011 சிறுகதை எழுதுவது என்பது ஒரு கலை. அத்தகைய கலையை ஆர்வத்தோடு படைப்பவனும் படிப்பவனும் கலைஞன். இத்தகைய சிறுகதைகளை ஆர்வத்தோடு வாசகர்கள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *