புயலில் சிக்கிய பூக்கள்..!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 15, 2026
பார்வையிட்டோர்: 205 
வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் – 13

சுலைமான் பக்கிரி இடத்தைவிட்டு அகன்றதும் அதுவரை மௌனமாக இருந்த சிம்ரன், “எங்கேயோ என் மனசுல தப்பு படுது சார்!” – என்றாள்.

ஏகாம்பரம் அவளை ஆச்சரியமாகப் பார்த்தார்.

“புலி பதுங்குறது பாயறதுக்குன்னு நெனைக்கிறேன்!” – மாலா சொன்னாள்.

“….”

“உங்க ஆதரவுல எங்களை ஒன்னும் செய்ய முடியாது, ஆகையினால சமாதானம் போல நடிச்சி எங்களை உங்ககிட்டேயிருந்து விலக்கி ஏதாவது செய்யலாம்ங்கிறது சுலைமான் திட்டமா இருக்கலாம்.” – ஜோதிகா சொன்னாள்.

“ஆமாம்!” – ஏகாம்பரம் ஒத்துக் கொண்டதற்கடையாளமாய்த் தலையசைத்தார்.

“தெரிஞ்சும் ஏன் இந்த நாடகம்?” – மீனா கேட்டே விட்டாள்.

“ராஜதந்திரம்!” – ஏகாம்பரம் அமைதியாக சொன்னார். பெண்கள் புரியாமல் பார்த்தார்கள்.

“சுலைமான் என்கிட்ட இருந்தவன். அவன் புத்தி எனக்கு நல்லா தெரியும். நேத்தி வரை பகையாளி இந்தநேரம் நண்பனாய் வர்றான்னா மனசுக்குள்ள ஏதோ திட்டம்ன்னு சின்ன புள்ளைக்குக் கூட தெரியும். தெரிஞ்சும் ஏன் இந்த நாடகம்? அவன் வழியிலேயே விட்டு மடக்கனும்ங்குறதுதான் என் திட்டம். அவன் நெனைச்சப்படி தப்பா செயல்பட்டான்னா புடிச்சி செருப்பால அடிக்கலாம்ன்னு பார்க்கிறேன். நீங்க யாரும் கவலைப் பட வேணாம். இப்போ நடந்தது வெறும் கண் துடைப்பு. இதன்படி என் ஆளுங்க அவன் கண்ணிலேர்ந்து மறைஞ்சிடுவாங்க. அதாவது உங்களுக்குக் கொடுக்கிற பாதுகாப்பை நான் விலக்கிடுவேன். ஆனா என் ஆளுங்க யார் கண்ணுக்கும் தெரியாம உங்களுக்குப் பாதுகாப்பா இருப்பாங்க. சின்ன ஆபத்தும் உங்களை நெருங்காது, இருபது வருசமா இது எனக்குத் தொழில் எதை எப்புடி செய்யனும் யாரை எப்புடி மடக்கனும்ங்குறதெல்லாம் எனக்கு அத்துப்படி. நீங்க தைரியமா படிப்பை வீணாக்காம கல்லுாரிக்குப் போங்க. பழையபடி சுதந்திரமா இருங்க. எப்போதும் போல ஜாக்கிரதையா இருங்க. முதுகுக்குப் பின்னால கண்ணிருக்கட்டும். உங்களுக்கு ஆபத்து போல சின்ன அசைவு தெரிஞ்சாலும் எனக்கு செல்போன்ல தகவல் தெரிவிங்க. நான் பறந்து வர்றேன். பேச்சுப்படி சுலைமான் ஒதுங்கிப் போனான்னா அவனுக்கு நல்லது. கெட்ட காலம்ன்னா கெட்டது நெனைப்பான்.” – முடித்தார்.

கேட்ட பெண்கள் முகத்தில் திருப்தி வந்தது. வாத்தியார் நல்லவர்களுக்கு நல்லவர் கெட்டவர்களுக்குக் கெட்டவர் புரிந்தது.

“நன்றி சார்! வர்றோம்!” – மாலா சொல்ல மலர்ச்சியாக எழுந்தார்கள்.

“ஒரு நிமிசம்!” – ஏகாம்பரம் அவர்களை நிறுத்தினார்.

“சிம்ரன்! உன்கிட்ட வாலாட்டின பையன் பேர் என்னம்மா?” – கேட்டார்.

“ரமேஷ்!” – சொன்னாள்.

“விலாசம் சொல்லு?” – என்றார்.

“போலிஸ் கமிஷ்னர் பூவராகவன் பையன் சார். விலாசம் தெரியாது” – கையைப் பிசைந்தாள்.

“இது போதும். போய் வாங்க” – விடை கொடுத்தார்.

அவர்கள் அகன்றார்கள்.

அவர்கள் தலை மறையும்வரை பொறுமையாய் இருந்த ஏகாம்பரம், “ஏழுமலை!” குரல் கொடுத்தார்.

வெளியே நின்ற அவன் உள்ளே வந்தான்.

“நீ போய் பொண்ணுங்க வீட்டான்ட இருக்கிற நம்ம ஆளுங்களையெல்லாம் இனி காவல் வேணாம்ன்னு சொல்லி இங்கே அழைச்சி வந்துடு” – உத்தரவிட்டார்.

“சரி வாத்தியாரே!” – அவன் அகன்றான்.

அவன் தலை மறைந்த அடுத்த நொடி ஏகாம்பரம் செல்லை எடுத்தார்.


“உங்க திட்டம் எனக்குப் பாதி புரியுது தலைவரே!” – தங்கள் இருப்பிடத்திற்கு வந்ததும் பக்கிரி சொன்னான்.

“புரியறதைச் சொல்லு?” – சுலைமான் அவன் அருகில் அமர்ந்தான்.

“வாத்தியாரைச் சாமார்த்தியமா ஓரம் கட்டிட்டு பொண்ணுங்களைப் போட்டுத் தள்ளனும் அவ்வளவுதானே?”

“ஆமாம்”

“அவளுங்ககிட்ட ஏன் மன்னிப்பு அதுதான் தெரியலை?” – தலையைச் சொரிந்தான்.

“சொல்றேன். ஒருத்தியைத் தெரியும் மத்தவளுங்களைத் தெரியாது, மன்னிப்புங்குற பேர் எல்லாரையம் பார்த்து வைச்சோம்ன்னா சமயம் தோது படுறபோது ஒன்னு ஒன்னா தட்டிடலாம்.”

“பார்த்துட்டீங்களா?”

“பார்த்தாச்சு. அதுல எல்லா குட்டிங்களும் ஷோக்காத்தானிருக்கா. ஒருத்தி படா ஷோக்கு!” – சொல்லும் போதே அவனுக்கு நாக்கில் எச்சில் ஊறியது.

“யாரு தலைவா?”

“அவதான் மாலா.”

“நானும் கவனிச்சேன் தலைவா. நல்லாத்தானிருக்கா. வாத்தியார் ஆளுங்க விலகினதும் மொதல்ல எவ கண்ணுல பட்டாலும் ஒரே போடா போட்டுத் தீர்த்துடனும்.”

“தப்பு! தப்பு!” – சுலைமான் அவசரமாக சொன்னான்.

“ஏன் தலைவா?” – பக்கிரிக்கு ஆச்சரியம்.

“வாத்தியார் புத்திசாலி. எதிரிங்களுக்கெல்லாம் எமகாதன். நம்ம குரு. அவர் புத்தி எனக்கு நல்லாத்தெரியும். நாமதான்னு சட்டுன்னு புடிச்சிடுவார் போலிஸ்ல மாட்டிப்போம். கொஞ்ச நாள் ஆறப் போட்டு காரியம் முடிக்கனும்.”

“எப்புடியும் பழி நம்ம மேலதான் வரும். போலிஸ் நம்மைத்தான் தொரத்துவாங்க.”

“பழி நம்ம மேல வராம சமார்த்தியமா அவர் மேல திருப்பனும்.”

“எப்புடி தலைவா?” – குழப்பமாகப் பார்த்தான்.

“வழி நமக்கு சாதகமா இருக்கு. இந்த பொண்ணுங்களுக்கும் வாத்தியாருக்கும் ஏதோ ஒரு வகையில தொடுப்பு தொடர்பு கொடுக்கல் வாங்கல்ல தகராறு. தீர்த்துட்டாருங்குற மாதிரி முடிக்கனும்.”

“முடியுமா தலைவா?!”

“நடக்கும்! நடக்கனும்! நடக்க வைக்கனும்!” – என்று அழுத்தம் திருத்தமாக சொன்ன சுலைமான் தன் பாக்கெட்டிருந்து செல்போனை எடுத்து பக்கிரியிடம் நீட்டி,

“கமிஷ்னர் வீட்டுக்குப் போன் போடு” – கொடுத்தான்.

“ஏன் தலைவா?” – இவன் அவனைப் புரியாமல் பார்த்தான்.

“விசயம் இருக்கு. அவர் பையன் ரமேஷ் இப்போ தேவை” – என்றான்.

“எதுக்குத் தலைவா?”

“அவனை இங்கே வரவழைச்சி செவிட்டுல நாலு அறை விட்டு உன்னாலதான் எனக்கு இந்த அவமானம். இதை தீர்க்க நான் அவளைத் தீர்க்கனும்ன்னு சொல்லி பணம் கறக்கனும். அவன் கிட்டேயே பேசி கமிஷ்னர் பலம் சேர்க்கனும். புள்ளை உசுருக்குப் பயந்து அப்பன் நமக்கு உதவுவான்.”

“பயங்கர ஐடியாவா இருக்கே?!” – பக்கிரி ஆச்சரியப்பட்டவனாய் கமிஷ்னர் வீட்டு எண்களை அழுத்தினான்.

“நல்லவனா இருக்கிறதுக்குப் புத்தி தேலை இல்லே பக்கிரி. கெட்டவனா இருக்கிறதுக்குத்தான் தேவை. கெட்டவன்தான் நல்லவனைவிட புத்திசாலித்தனமா இருப்பான்.” – என்று சுலைமான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

“மணி அடிக்குது தலைவா” – கூவி பக்கிரி செல்லை அவனிடம் நீட்டினான்.

அங்கே யாரோ எடுத்தார்கள்.

“ஹலோ! கமிஷ்னர் வீடுங்களா?” – சுலைமான் கேட்டான்.

“ஆமாம்!” – பெண்ணின் குரல்.

“நீங்க வேலைக்காரிங்களா?”

“இல்லை அவர் மனைவி”

“மன்னிச்சுக்கோங்க மேடம். உங்க பையன் ரமேஷ் இருக்காருங்களா?”

“இல்லை வெளியில போயிருக்கான்.”

“கல்லுாரிக்கா?”

“இல்லே. இப்போதான் யாரோ ஏகாம்பரம்ங்கிறவர் போன் பண்ணி வரச் சொன்னார். அவசர அவசரமா கிளம்பி ஓடியிருக்கான”.

“எந்த ஏகாம்பரம்ங்க? ஏட்டா?”

“தாபர்கான் பேட்டைன்னு சொல்லி ஓட்டமா ஓடறான்!”

சுலைமான் முகம் அப்படியே கறுத்துப் போனது.

“நீங்க யார்?” – அவள் கேள்வி கேட்டாள்.

“பையன் தோஸ்த்!” – சொல்லி செல்லை அணைத்தவன் அடுத்து எந்த அசைவுமில்லாமல் இருந்தான்.

“என்ன தலைவா திடீர்ன்னு மூட் அவுட்டாகிப்போய்ட்டீங்க?” – பக்கிரி விபரம் தெரியாமல் கேட்டான்.

“வாத்தியாருக்கும் ரமேஷுக்கும் சம்பந்தமே இல்லே. அவனை எப்புடி இவனுக்குத் தெரியும்ன்னும் தெரியலை. இப்போ ஏன் அந்த ஆளு இவனை அழைக்கனும். அழைச்சி என்ன பண்ணப் போறான்?” – கேள்வி மேல் கேள்வி கேட்டு குழம்பினான்.

“அவனைத் தெரிஞ்சிக்க வாய்ப்பு இருக்கு தலைவா. பொட்டச்சிங்ககிட்ட அந்த ஆள் கேட்டிருப்பான். ஆனா ஏன் அழைச்சான் எதுக்கு அழைச்சான்ங்குறதுதான் புரியாத புதிர்.” சொல்லி பக்கிரியும் யோசனையிலிறங்கினான்.


“நான் தாபர்கான் பேட்டை தாதா தம்பி. அப்புடித்தான் சொல்றாங்க கமிஷ்னர் பையனான உனக்கு என்னைத் தெரிய வாய்ப்பு இருக்கு. போலிஸ் குடும்பமில்லியா என்னால உங்களுக்கு ஆபத்து இருக்கும்ன்னு நெனைச்சி என் பேரெல்லாம் அப்பா பொண்டாட்டி புள்ளைங்க கிட்ட சொல்லி இருப்பாரு, சொல்லலைன்னாலும் பாதகமில்லே. சுலைமானைப் புடிக்கிற அளவுக்குப் பழக்கம் உள்ள உங்களுக்கு என்னைத் தெரியவும் வாய்ப்பு உண்டு. தெரியலைன்னாலும் சொல்லிட்டேன். போனை வைச்சதும் வெளியில சொல்லாம உடனே வாங்க. வரலைன்னா என்னால உங்களுக்கு ஆபத்து. உசுருக்கு உத்திரவாமில்லே!” – ஹீரோ ஹோண்டாவை விரட்டிக் கொண்டிருந்த கொண்டிருந்த ஏகாம்பரம் சொன்னதெல்லாம காதில் ரீங்காரித்துக் கொண்டே வந்தது.

ஏகாம்பரத்தைத் தெரியாதா? பேரைக் கேட்டாலே எவருக்கும் நடுக்கம். அதிலும் அவர் குரலைக் கேட்டதும் உடலே ஆட்டம். நடுக்கத்துடன் வண்டியை ஓட்டினான்.

‘நாம பொண்ணுங்க கிட்ட விளையாடுற விளையாட்டெல்லாம். இவருக்குத் தெரிஞ்சு போச்சா? ‘- மூளை வேலை செய்தது.

நாலு பெண்களைக் கற்பழித்த ஆளை நடு ரோட்டில் மடக்கிப் பிடித்து நந்தா பட பாணியில் அறுத்துவிட்ட கதை பத்திரிக்கைகளில் பிரபலம். அதை இவனே படித்திருக்கிறான்.

தன் நிலையும் அப்படி ஆகிவிடக் கூடாதென்பதற்காக சுலைமான் கோஷ்டி சேர்த்துக் கொண்டு பிரிந்ததையும் நாள் வார ஏடுகள் கிழி கிழி என்று கிழித்தன.

‘இவனுக்கு நம் லீலை தெரிந்து தனக்கும் அப்படி ஒரு நிலை? ‘- அவனையும் அறியாமல் இதயம் படபடவென்று அடித்தது,

அப்பா கமிஷ்னர் என்றுதான் பேர். பிரயோசனமில்லை.

“அவனையெல்லாம் தொட முடியாதுங்க. ஒரு பக்கம் மக்கள். இன்னொரு பக்கம் அரசியல்ன்னு ஏகப்பட்ட நெருக்கடி. ஒரு முறை அப்படியும் என் கான்ஸ்டபுள் ஒருத்தன் அவனைத் துணிச்சலாத் தொட்டான். தொட்ட கையை வீச்சரிவாளால் உடனே எடுத்துட்டான். ஆயுதம் வைச்சிருக்கிறவனை நீ ஏன் தொட்டே பதக்கம் ஆசையான்னு எங்களுக்குப் பெரியவர் டோஸ் விட்டார். நமக்கு வேணாம் வம்பு. ஆளை விடுங்க.” – என்று யாரிடமோ சொல்லி கழலும் அளவிற்குப் அவர் பலசாலி. அப்படி இருக்கும் போது ஓடாமல் என்ன செய்வான்?! எவருக்குத்தான் உயிர் மேல் ஆசையில்லை?

ரமேஷ் ஏகாம்பரம் வீட்டிற்கு முன் வண்டியை நிறுத்தி இறங்கினான்.

குடிசை வாசலில் வாசலில் எப்போதும் போல் அவர் ஆட்கள் நின்றார்கள்.

“ரமேசா?” – வாசலில் நின்ற ஏழுமலை விசாரித்தான்.

“ஆமாம்!“ – இவனுக்கு அவனைப் பார்க்கவே கூண்டுக்குள் வந்த நடுக்கம்.

“உனக்காகத்தான் வாத்தியார் காத்துகிட்டிருக்கார். உள்ளே போ!” -வழி விட்டான்.

ரமேசுக்கு உள்ளே நுழையவே பிரக்கனை இல்லை. அவர் முன் நின்றான்.

“உட்கார்.”

அமர்ந்தான்.

“கமிஷ்னர் பையனா?”

“ஆ…..ஆமாம் சார்!”

“நீதான் சிம்ரன்கிட்ட செருப்படி வாங்கின ஆளா?”

‘இன்றைக்குத் தலை தப்பாது‘ – தலைகுனிந்தான்.

“ஏன் தம்பி படிக்கிற வயசுல காதல் கத்தரிக்காய்ன்னு இப்புடி ?!….காதலிக்கிறவளைத்தான் நாம விரும்பனும். தொடனும் காதலிக்காதவளைக் கனவிலேயும் காணக் கூடாது. வற்புருத்தி வர்றது காதலில்லே. என் மனைவி சரசு ரொம்ப படிச்சவள். என்னவோ என் மேல அவளுக்கு ஆசை. பணக்காரி எல்லாத்தையும் விட்டு வந்தாள். கட்டுறதைத் தவிர வேற வழி இல்லே. காதல் அப்புடி தானா வரனும். விரும்பலைன்னா விட்டுடனும். விரும்பாதவள் மேல் கோபம் மடத்தனம். அவளைக் கெடுக்க ஆளை ஏவினது அதை விட பெரிய தப்பு மடத்தனம். இதைக் கேள்விப் பட்டதும் எனக்கு ரத்தம் கொதிச்சுது, எவனுக்காவது காசு குடுத்து நீ ஏவினது போல உன் அம்மா மேல ஏவலாமான்னு எனக்கு ஆத்திரம். எனக்குப் பொம்பளைங்களை அப்புடி கேவலப் படுத்தி பழக்கமில்லே. மேலும் நான் இருந்ததும் ஒரு பொண்ணாய் இருந்த தாய் வயிறு. அதைக் கேவலம் அவமானம் படுத்தலாமா? பொறுத்தேன் ஏன்? நீ வாழ வேண்டிய பையன்.”

“தம்பி! நல்லவங்களோட சேருங்க. நல்ல பழக்கவழக்கத்தைக் கத்துக்குங்க. கெட்டவங்களோட சேராதீங்க. வீண் விவகாரம் வேணாம். பொண்ணுங்க விசயத்துல நீங்க ரொம்ப அத்து மீறி இருக்கீங்க. கமிஷ்னர் பையன்னு சொல்லி நிறைய பொண்ணுங்களைக் கெடுத்திருக்கிங்க. எனக்கு நிறைய புகார் வந்திருக்கு. எல்லாத்தையும் இந்த நிமிசத்தோட மறந்துடுங்க விட்டுடுங்க. விடலைன்னா நாலு பசங்க அலையிற கதை தெரியும் அஞ்சாவது ஆளாய் நீங்க ஆக வேணாம். இதைச் சொல்லத்தான் அழைச்சேன் போய் வாங்க” – தலையசைத்தார்.

புத்தி மிரட்டல்! ரமேஷ் குப்பென்று வியர்க்க வெளியே வந்தான்.

‘ஆள் இவனைக் கவுத்துட்டான்டா!’ – துாரத்திலிருந்து பார்த்த சுலைமான் பக்கிரியை ஆத்திரத்துடன் முதுகில் அறைந்தான்.

அத்தியாயம் – 14

வழியில் ரமேஷ் கொலை செய்யப் பட்டு பிணமாக கிடந்தான். காவல் நிலையத்திற்குப் புகார் வந்து தகவல் தெரிந்த அடுத்த வினாடியே…

“என் பையன் ஏகாம்பரம் கூப்பிட்டான்னுதான் போனான். அவன்தான் கொன்னான்!” – தாய் கதறி மயக்கமடைந்தாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் போலிஸ் படை அங்கு குவிக்கப் பட்டு தாபர்கான் பேட்டை கலவரமானது. போலிஸ்காரர்கள் ஒரு ஆள் கூட விடாமல் ஓடி ஒளிந்தவர்களையெல்லாம் துரத்திப் பிடித்து அடித்து உதைத்து துவைத்து ஏகாம்பரம் கோஷ்டி மொத்தத்தையுமே கூண்டோடு ஸ்டேசனுக்குக் கொண்டு வந்தார்கள். ‘கமிஷ்னர் மகனே கொலை!‘ அவர்களுக்கு ஆத்திரம். அறையிலிருந்த சுலைமானுக்கு மகிழ்ச்சி.

“எப்புடி நம்ப ஐடியா?” விஸ்கியை விழுங்கி பக்கிரியைப் பார்த்து சிரித்தான்.

“ரமேசை நீயும் நானும்தான் கொன்னோம். ஆனா பழி ?… வாத்தியார் மேல. இதுதான் சுலைமான் மூளை.” – மீண்டும் சத்தம் போடாமல் சிரித்தான்.

“அடுத்து என்ன என்ன தலைவா?” – பக்கிரி போதையில் கேட்டான்.

“இப்போ சிம்ரன் மாலா ….எல்லா குட்டிங்களும் அனாதை. ஆதரவு குடுத்த அத்தனைப் பேரும் ஜெயில்ல. எதிரியே கெடையாது நம்ம இஷ்டத்துக்கு அவளுங்களை இழுத்து வந்து அனுபவிச்சு ம்ம்….” உற்சாகமாக தலையை உலுக்கினான்.

“மாட்டிப்போம் தலைவா!” – பக்கிரிக்கு விருப்பமில்லை.வெறும் பிளேடு மட்டும் போட்டு காசு பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு இந்த கொலை பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தியிருந்தது, நடுங்கினான்.

“மாட்டிப்போம் உண்மை. ஆனா ஒரு கொலைக்கும் தூக்கு பத்துக் கொலைக்கும் துாக்கு. எல்லாரையும் முடிச்சிட்டு நிம்மதியா தொங்கலாம்.”

பக்கிரிக்கு முகத்தில் மரண பயம் வந்து சவக்களை தோன்றியது,

“என்னை விட்டுடு தலைவா?” – நடுங்கினான்.

“நான் உன்னைவிடறது ரொம்ப கஷ்டம். ஏன்னா சிம்ரன் கற்பழிப்புக்கும் நீ எனக்குக் கூட்டாளி. அனுபவிச்சே. ரமேசு கொலைக்கும் நீ உதவி. எப்புடி விட முடியும்?”

சுலைமானின் பேச்சு வித்தியாசமாகப் போக பக்கிரிக்கு ஏறிய போதை தடாலென்று இறங்கியது. அடிவயிற்றில் அமிலம் சுரந்து பயம் வந்தது.

“நான் புள்ளைக்குட்டிக்காரன் என்னை விட்டுடு தலைவா?” – அழும் குரலில் கூறினான்.

“அப்புடி போடு அரிவாளை! இந்த மனைவி புள்ளைங்களெல்லாம் இப்பத்தான் மனசுல வர்றாங்களாக்கும்?! ஏன் பக்கிரி குடும்பத்துல உள்ளவனெல்லாம் கொலையே செய்யிறதில்லியா?“ – கேட்டான்.

“எனக்குப் பயமா இருக்குத் தலைவா!“ – அழுதான்.

“பயத்தை விடு. இன்னம் சுதியை ஏத்து பயம் தானா ஓடும்!” – என்று பாட்டிலை அவன் பக்கம் நகர்த்திய சுலைமான், “வெறும் பிளேடு போட்டே காலத்தைக் கழிச்சா எவன் மதிப்பான்? பொண்டாட்டியே மதிக்க மாட்டாள். கொலை உனக்குப் பதவி உயர்வு ஜமாய்!” – என்று அவன் முதுகில் உற்சாகமாய்த் தட்டினான்.

“எனக்கு அது வேணாம் தலைவா?” – பக்கிரி பாட்டிலைத் தொடவில்லை.

“நீ இப்புடி தொடை நடுங்குறதைப் பார்த்தா என்னையே காட்டிக்குடுத்துடுவே போலிருக்கே?!” – சுலைமான் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

“என்ன தலைவா சொல்றீங்க?” – அதிர்ந்து அலறினான்.

“போலிசுக்குக் கையாளாய் மாறி எனகடகு ஆப்பு வைச்சிவேன்னு சொல்றேன்!” – விளக்கினான்.

“அப்புடியெல்லாம் இல்லே!” – பதறினான்.

“அப்புடித்தான் நெனைச்சேன். ஆனா உன்னை இப்போ ஊசுரோட விட்டு வைக்கிறது என் மனசுக்குச் சரியாப் படலை.” இடுப்பிலிருந்த கத்தியை எடுத்தான்.

அடுத்து பக்கிரி யோசிக்கவே இல்லை.

“தலைவா! என்னை மன்னிச்சிடு தெரியாம சொல்லிட்டேன்” – தடாலென்று அவன் காலில் விழுந்து இரண்டையும் பற்றினான்.

சுலைமானுக்கு இப்போது திருப்தி வந்தது. “அதானே பார்த்தேன். கத்தி இப்பதான் ரத்தம் குடிச்சுது. அதுக்குள்ள என்ன தாகம்ன்னு யோசிச்சேன். தப்பிச்சுட்டே!” – எடுத்த கத்தியை இடுப்பில் சொருகினான்.

பக்கிரிக்கு நிம்மதி மூச்சு வந்தது.

“இப்போ என்ன செய்யனும் தலைவா?” – நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு துணிச்சலாய்க் கேட்டான்.

“கொலை! கொலை!! கொலை!!!…”- சுலைமான் வெறி பிடித்தவன் போல கூவினான்.


ஏகாம்பரம் கோஷ்டியே சிறையில் அடைக்கப்பட்ட சேதி கேட்டு சிம்ரன் குடும்பம் உறைந்தது.

மாலா, மீனா, ஜோதிகா, சுபாஷிணி கதி கலங்கினர்.

“இப்போ என்னடி பண்றது?” – ஆளாளுக்குப் போன் பண்ணி சிம்ரனைக் கேட்டார்கள்.

“உடனே எல்லாரும் வாங்க யோசிக்கலாம்!” – பதில் கொடுத்தாள்.

அவர்கள் நால்வரும் அரை மணி நேரத்தில் வந்தார்கள். “இப்போ எல்லாரும் முதலமைச்சரைப் பார்த்து பாதுகாப்பு கேட்கலாமா?” – தர்மலிங்கம் தன் யோசனையைக் சொன்னார்.

“இதுங்களை என்ன கேட்கிறது? நீங்க முயற்சி செய்யுங்க” – சொல்லிக் கொண்டே வந்த தனவள்ளி தரையில் ஏதோ வழுக்க வழுக்கி விழுந்தாள். தலையில் அடி மயக்கம்.

“ஐயோ!” – சிம்ரன் தாயைத் தாங்கி கதறினாள். தர்மலிங்கம் அவள் நாடியைப் பிடித்துப் பார்த்து போன் செய்து டாக்டா சந்திரசேகரனை வரவழைத்தார்.

ஐந்து நிமிடத்தில் வந்து பரிசோதித்த அவர். முதலுதவி செய்து “நிலைமை மோசம் உடனே மருத்துவமனைக்குப் போகனும்” – துரிதப் படுத்தினார்.

தர்மலிங்கம் டாக்சி பிடித்துவர ஒட்டு மொத்த பேர்களும் தனவள்ளியை அள்ளி காரில் போட்டுக் கொண்டு விரைந்தார்கள்.

அடுத்து அரைமணி நேரத்தில் யமஹாவில் பக்கிரியுடன் வந்த சுலைமான் தர்மலிங்கம் காம்பௌன்ட் கேட்டருகில் வண்டியை நிறுத்தினான். கேட்டில் பூட்டு தொங்குவதைப் பார்த்து “என்ன பூட்டி இருக்கு?”-குழப்பமாய் முணுமுணுத்தான்.

வீட்டில் யாரும் இல்லாததால் கேட்டைப் பூட்டி படுத்திருந்த தோட்டக்கார முனியனுக்கு மருத்துவமனையி லிருந்துதான் ஆள் வந்திருப்பதாய் சந்தேகம்.

படுத்திருந்த இடத்தைவிட்டு எழாமல், “யார் நீங்க?” கேட்டான். வயசு ஐம்பது. கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தான்.

“நா….நான் சிம்ரன் கல்லுாரி நண்பன். என்ற சுலைமான் இவர் என்னோட படிக்கிறவர்.” – என்று பக்கிரியையும் அறிமுகப்படுத்தினான்.

கிழவனுக்கு இவர்கள் யாரென்று தெரியவில்லை.

“உங்களுக்கு என்ன வேணும்?”

“சிம்ரனைப் பார்க்கனும்”

“அவுங்க இல்லீங்களே.”

“எங்கே?”

“பெரியம்மாவுக்குத் திடீர்ன்னு உடம்பு முடியாம போச்சு. அவுங்களைக் கார்ல ஏத்திக்கிட்டு இப்பதான் ஆஸ்பத்திரிக்கு எல்லாரும் போயிருக்காங்க.

“எல்லாரும்ன்னா?”

“சிம்ரன் அது தோழிங்க எல்லாரும்”

சுலைமான் முகத்தில் சட்டென்று பிரகாசம் தொற்றியது

“எந்த ஆஸ்பத்திரி?” – பரபரத்தான்

“எப்பவும் வழக்கமா ரமா ஆஸ்பத்திரிக்குத்தான் போவாங்க.”

சுலைமான் மறுபோச்சு இல்லாமல் வண்டியை மருத்துவமனையை நோக்கி விட்டான்.

“நாம் அங்கே போய் பிரயோசனமில்லே தலைவா?” பக்கிரி சுலைமான் காதில் சொன்னான்.

“ஏன்?” – வண்டியை வேகம் குறைக்காமல் கேட்டான்.

“நீங்க நெனைச்சுப் போற காரியம் அங்கே நடக்காது.”

“காரணம்?”

“நாம தேடிபோற அத்தனை பேரும் ஒட்டு மொத்தமா ஆஸ்பத்திரியில இருந்தாலும் வெளியில வரமாட்டாங்க. நோயாளியைச் சுத்தி இருப்பாங்க. அடுத்தது நம்ம பயம். வெளியே தலைகாட்ட மாட்டாங்க. நாமும் ஆஸ்பத்திரியில பூந்து ஒன்னும் பண்ணமுடியாது.”

சுலைமானுக்கு அவன் சொல்வது புரிந்தது.

“நிசம்தான். ஆனா… யாராவது தப்பித் தவறி ஒருத்தி வாசலுக்கு வந்தா நமக்கு லாபம். அவளைத் துருப்புச் சீட்டா வைச்சி மத்தவங்களை இழுத்துடலாம். அதிர்ஷ்டம் இப்போ நம்ம பக்கம் வீசுது பக்கிரி. ஒவ்வொருத்தியாய்த் தேடி போற வேலை மிச்சம். இதுதான் நம்ம அதிர்ஷ்டம்”. என்றான்

“உங்க நம்பிக்கையை நான் கெடுக்கலை. விடுங்க வண்டியை” – நிமிர்ந்து அமர்ந்தான்.

அத்தியாயம் – 15

மருத்துவமனையில் தனவள்ளியின் நிலைமை மோசமாய் இருந்தது. டாக்டருக்கே கவலை அருகிலேயே இருந்து பார்த்தார். தர்மலிங்கம் சிம்ரன் ஆளாளுக்குக் கையைப் பிசைந்து கொண்டிருந்தார்கள்.

ஜோதிகா, மீனா, மாலா, சுபாஷிணி அறையை விட்டு வெளியே வராந்தா பெஞ்சில் வரிசையாக அமர்ந்திருந்தாலும் முகத்தில் கவலை.

“இப்போதைக்கு நமக்கு இந்த இடம் ரொம்ப வசதி பாதுகாப்பு!” – என்றாள் மீனா.

“எப்புடி?”

“இந்த ஆஸ்பத்திரியில வந்து நம்மை எவனும் எதுவும் செய்ய முடியாது.” – திருப்தியாக சொன்னாள்.

“ஆமாம்டி. உங்க தலைக்கு மேல் கத்தி. உயிர் பிழைச்சுக்கோங்கன்னு ஆண்டவனாய்ப் பார்த்து நம்மையெல்லாம் ஒன்னு சேர்த்து இங்கே அனுப்பியிருக்கார்.” – மாலா விளக்கினாள்.

“ஆமா“- சுபாஷிணி தலையசைத்தாள்.

“தர்மலிங்கம்!” – அழைத்துக்கொண்டே டாக்டர் அறையைவிட்டு வெளியே வந்தார்.

“சார்!” -அவரும் நாய்க் குட்டி மாதிரி அவர் பின்னால் வந்தார்.

“நோயாளி நிலைமை கொஞ்சம் பரவாயில்லே. ஆனாலும் இப்போ அவசியம் ஒரு ஊசி போட்டாகனும். அது இப்போ இங்கே கைவசம் இல்லே. வெளியிலதான் வாங்கனும். நீங்க எங்கேயும் அலையாம கொஞ்ச தூரத்துல உள்ள நேஷனல் மெடிக்கல்ல போய் வாங்கி வாங்க” – சொல்லி தன் அறைக்குள் புகுந்து தாளில் எழுதி நீட்டினார்.

தர்மலிங்கத்திற்கு மனைவியைப் பற்றி கவலை. மனசு சரி இல்லை. வாங்கும்போதே கை நடுங்கியது.

வெளியே வந்தார்.

சிம்ரன் எதிரில் வந்து, “அப்பா! நான் போய் வாங்கி வர்றேன்” – கையை நீட்டினாள்.

“வேணாம்மா. நீ அம்மாவுக்குத் துணையாய் இரு. நான் போறேன்.” – சொல்லி மருத்துவமனையைவிட்டு வெளியே வந்தார். இருட்டு தெரு விளக்குகள் எரிந்தது.

எதிர்புற சந்தில் இருட்டோடு இருட்டாக நின்ற சுலைமானுக்கு தர்மலிங்கம் தெரிந்தார்.

“பார்த்தியா அதிர்ஷ்டத்தை இவரை வைச்சி அவளுங்களை மடக்கலாம்.” சுலைமான் வெற்றிச் சிரிப்பாய் பக்கிரி காதில் குசுகுசுத்தான்.

பக்கிரி மனகு சரி இல்லை.

“வேணாம் தலைவா. பொண்டாட்டி நிலைமை மோசமா இருக்கு போலிருக்கு ஆள் தளர்ந்து போறார். இந்த நேரத்துல நாம எதுவும் அவரைச் செய்யவேணாம். இப்போ நீங்க அவரை எது செய்தாலும் வீணா அந்த அம்மா உசுர் போகும். பாவம். நம்ம காரியத்தை இன்னைக்கு விட்டுட்டு இன்னொரு நாளைக்கு வைச்சிக்கலாம்” – கெஞ்சலாக சொன்னான்.

“பக்கிரி வாய்ப்பைப் பயன்படுத்திக்கனும். இந்த நேரத்துல பரிதாபப்பட்டு ஆளை விட்டோம்ன்னா அடுத்து புடிக்கிறது கஷ்டம். ஆண்டவன் அதிர்ஷ்டத்தை ஒரு தரம்தான் குடுப்பார். பயன்படுத்திக்கனும். ஆளைப் பிணைக்கைதியாய் புடிச்சி அவளுங்களை மடக்கலாம்ன்னு நெனைச்சேன். வேணாம் போட்டேத் தள்ளிடலாம். அனாதைப் பொண்ணை சுலபமா மடக்கலாம். வா” – முன்னே நடந்தான்.

பக்கிரிக்கு அதற்கு மேல் மனசு பொறுக்க வில்லை.


சிறிது நேரத்தில் மருத்துவமனைக் கட்டிலில் குற்றுயிரும் குலையுயிருமாக இருந்தான் பக்கிரி.

சப்-இன்ஸ்பெக்டர் சடகோபன் இரண்டு கான்ஸ்டபுள்கள் துணையுடன் அருகில் வாக்குமூலத்திற்காக நின்றார்.

பக்கிரி வாயைத் திறந்தான்.

“சா..சார்! நா..நான் எவ்வளவோ அநியாயமெல்லாம் செய்ஞ்சிருக்கேன். ஆனாலும் எதிரி கஷ்டத்தைப் பார்த்து கொஞ்சம் விலகுவேன். தர்மலிங்கம் தளர்ந்த நடை முகத்தைப் பார்த்ததும் அவர் வேதனை எனக்குத் தெரிஞ்சுது எனக்குத் தெரிஞ்சுது. சுலைமானை எதுவும் செய்யவேணாம்ன்னு தடுத்தேன். அவன் கேட்கலை. அப்போதான் இவன் மனுசனே இல்லேங்குற முடிவுக்கு வந்தேன். அவன் இடுப்புல உள்ள கத்தியை உருவி அவனைக் குத்திக் கொன்னேன். இருந்தாலும் அவனும் என்னைத் திருப்பித் தாக்கிட்டான். அந்த பொண்ணு சிம்ரனைக் கற்பழிச்சது நானும் சுலைமானும். ரமேஷைக் கொலை செய்ததும் நாங்க. வாத்தியார் நல்லவர் சார். அவரை விட்டுடுங்க.” – கண்களை மூடினான்.

சப்-இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபுள்கள் அவன் இறப்பிற்கு இரங்கல் தெரிவிப்பது போல் தலைகவிழ்ந்தார்கள்.

வெளியே சிம்ரன், ஜோதிகா, மாலா, மீனா, தர்மலிங்கம் நிம்மதி மூச்சு விட்டார்கள். தனவள்ளியும் கண்விழித்தாள்.

(முற்றும்)

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *