புதுப் பாதை..!
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 5,852
வாசலில் வாழை மரங்கள். மாலையும் கழுத்துமாக கூப்பிய கரங்களுடன் மணமக்கள் சிரித்தப்படி ஜோடியாக பெரிய டிஜிட்டல் பேனரில் வருகிறவர்களை வரவேற்பதுபோல் நின்றார்கள்.
முகப்பில்…சந்தனம், ரோஜாப்பூ, கற்கண்டு தட்டுகளுடன் அழகு வரவேற்பு மங்கைகள் என்று அந்த திருமண மண்டபம் வழக்கமான களைகட்டுதல்களுடன் இயங்கிக் கொண்டிருந்தது.
முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதால்….உள்ளே எல்லா இருக்கைகளும் நிறைந்து இருந்தது.
மணமேடை வெகுசிரத்தையுடன் நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. நடுவில் ஆடம்பரமான மணமக்கள் அமரும் நாற்காலி. அதன் கீழ் புரோகிதர் வழக்கமான கர்ம சிரத்தையுடன் புகையும் அக்னி குண்டத்திற்கு நெய் வார்த்து எரியவிட்டு அவர்க்கு உறிய அடுத்தடுத்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். அவருக்கு அருகில் அரசாணைக் கால், பானைகள், குத்துவிளக்குகள் என்று திருமண ஏற்பாட்டிற்கான சகல அம்சங்களுடன் அந்த இடம் நிறைந்து இருந்தது.
மேடையில் வல, இடது புறங்களில் மணமகன், மணமகள் அறைகள். அவைகளுக்கு அருகில் அவர்களைப் பெற்றவர்கள் நின்றிருந்தார்கள்.
எதிரே… சுற்றம், நட்பு என்று அமர்ந்திருந்த பார்வையாளர்களுக்கு முதுகுகளைக் காட்டிக் கொண்டு….. நிகழ்ச்சிகளைப் படம் எடுக்கவும், பிடிக்கவும்…கையில் கேமராக்களுடன் இரு இளைஞர்கள் தங்கள் வேலையில் கவனமாக இருந்தார்கள்.
பார்வையாளர்களின் வலது ஓரத்தில் தவில், நாதஸ்வர வித்வான்கள் தங்கள் வேலையை மெல்லிய ஒலியில் ஒலிபரப்பு செய்து கொண்டிருந்தார்கள்.
எத்தனையோ பேர்கள் நின்றுகொண்டிருக்க…எனக்காக ஒதுக்கப்பட்டதுபோல் காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தேன்.
முகூர்த்த நேரம் தொடங்கிவிட்டபடியால்…மேடையிலும் வேலைகள் தொடங்கி விட்டன.
புரோகிகதர்…. முதலில் மணமக்களின் பெற்றோர்களை தனக்கு அருகே அமர வைத்து அவர்களுக்கு மாலைகள் போட்டு சம்பிரதாய சடங்குகள் செய்வித்து எழுப்பினார்.
அடுத்து மணமகன் மட்டும் அழைக்கப்பட்டு….அவன் பெற்றவர்களுக்குப் பாதை பூசை செய்தான்.
பிறகு.. அவனைத் தனியே இருக்கையில் அமர….. சுற்றம், நட்பு, பெரியோர்கள் எல்லாரும் அவனுக்கு மாலைகள் மாற்றி, மரியாதை செய்து, ஆசிகள் வழங்கி விலகினார்கள்.
இதே நடைமுறை…. மணமகளும் அப்படியே சடங்குகள் செய்தாள்.
கடைசி நிகழ்ச்சியின் தொடக்கத்திற்கு அறிகுறியாய்….ஆண், பெண் இருவர் தாம்பாளத்தில் அட்சதைகளை எடுத்து வந்து…பார்வையாளர்கள் பகுதியில் சுற்றம், நட்புகளுக்கு…விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்.
கடைசி வரிசையில் முதலாவதாக அமர்ந்திருந்த நானும் அட்சதை எடுத்துக் கொண்டேன்.
மணமக்கள்… பட்டுவேட்டி, சட்டை, புடவைகளில் கழுத்தில் மாலையுடன் வந்து மணமேடை இருக்கையில் அமர்ந்தார்கள்.
புரோகிதர்….மந்திரம் ஓதி..தேங்காய், பழங்கள் நிறைந்த மங்கள தாம்பாளத்தை மணமக்கள் முன் உயர்த்திப் பிடித்தார்.
மணமகன் அதைத் தொடாமல் மணமகளின் கழுத்திற்கு இரு கரங்களையும் கொண்டு சென்றான்.
புரோகிதர்…வாத்தியப்பக்கம்..கையை உயர்த்தி, ” கெட்டி மேளம், கெட்டி மேளம்…!” குரல் கொடுத்தார்.
கெட்டி மேளம் முழங்க… சுற்றம், நட்புகள்.. அட்சதையைத் தூவ….மணமகன் மணமகள் கழுத்திலிருந்த தாலியை அவிழ்த்து புரோகிதர் நீட்டிய தட்டில் வைத்தான்.
மணமகன், மணமகள் பக்கமிருந்த இளசுகள்…” டப் ! டப் ! ” உற்சாக வெடிகள் வெடித்து… வண்ணத்தாள் பொடிகளைப் பறக்க விட்டார்கள்.
அடுத்தாக மணமக்கள் எழுந்து….கைகூப்பினார்கள்.
கூட்டம் கலைந்து…. சாப்பாடு முடித்து தாம்பாளப் பையுடன் வெளியே வரும்போது என்னருகில் வந்த ஒருவர்…” என்ன சார் இது கலிகாலம்..! ” என்றார் வருத்தமான குரலில்.
” இது கலிகாலம் இல்லே சார். நல்ல காலம் ! ” என்றேன்.
” என்ன சார் சொல்றீங்க…? ” அதிர்ச்சியாகப் பார்த்தார்.
” கூடும்போது கூட்டத்தைக் கூட்டுறதும்… பிரியும்போது யாருக்கும் தெரியாம கமுக்கமா பிரியறதும் சரி இல்லே சார்.”
புரியாமல் பார்த்தார்.
” இவுங்க ரெண்டு பேரும் கணவன் மனைவி. சேர்ந்து வாழ்ந்த அஞ்சு வருசத்துல மனமுறிவு. சட்டப்படி சென்ற மாதம் விவாகரத்து…பிரிவு. சேர்க்க சந்தோசமா ஒன்று கூடிய சுற்றம் நட்புகளுக்கெல்லாம்…தங்கள் பிரிவையும் அப்படியே தெரிவிக்க ஆசை. கலந்து பேசி… இப்படி ஒரு விழாவை ஏற்பாடு பண்ணினாங்க. இதுதான் சார் நல்லது. மனுசத்தன்மைக்கு அழகு.” நிறுத்த….
” வந்து…. ” அவர் ஏதொ சொல்ல வாயெடுத்தார்.
அதற்குள் நான் முந்தி….
” நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு தெரியுது. சந்தோசமா பிரிஞ்சா இப்படி செய்யலாம்… வலி, வருத்தமாய் பிரிஞ்சா இப்படியெல்லாம் செய்ய முடியுமான்னு நீங்க கேட்க நினைக்கிறீங்க. கூடும்போது சொல்லும்போது பிரியும்போதும் சொல்லனும் சார். இதுதான் சரியான நியாயம். இந்த சடங்கு, சம்பிரதாயமெல்லாம் சரியான்னும் நீங்க நினைக்கலாம். கணவன் சாவுல கூட இந்த மாதிரி சில சடங்கு, சம்பிரதாயங்கள் இருக்கு. இந்த விழாவிற்குப் பிறகு தம்பதிகள் மணமக்கள். அதனால இதுவும் மங்களவிழா. வழக்கமான சடங்கு, சம்பிரதாயங்கள் தாராளமாய் இருக்கலாம். இந்த விழாவால யாருக்கும் வீண் மனக்கஷ்டம், வருத்தம் இருக்க வாய்ப்பில்லே. எந்தவித குற்றம், குறையுணர்வு இல்லாமல் பிரிந்தவர்களும் மறுமணத்திற்கு வரன்கள் தேடுறதும் சுலபம். மஞ்சள் நீராட்டு, காது குத்து, அது இதுன்னு கண்டதுக்கு விழா எடுக்கும் போது இதுக்கு விழா எடுக்கிறதுல தப்பே இல்லே. நல்ல மாற்றங்களை வரவேற்போம், வாழ்த்துவோம் சார். ” சொல்லி மண்டப வாசலுக்கு வந்தேன்.
எனக்குப் பின்…. ‘ திருமண முறிவு விழா…! ‘ டிஜிட்டல் பேனரில் கணவனும் மனைவியும் மாலையும் கழுத்துமாக கூப்பிய கரங்களுடன் சிரித்துக் கொண்டு நின்றார்கள்.
இதற்கு.. ‘பிரிமண விழா’, ‘ விவாகரத்து விழா’ என்றும் பெயர் இருக்கலாம்! எனக்குள் தோன்றியது.