புதிர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 2, 2024
பார்வையிட்டோர்: 197 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அடாடா!…” 

“என்ன?” 

“காபிதான்.” 

நண்பன் ‘காபிதான்’ என்று சொன்ன போதிலும், காபியைப்பற்றி அபிப்பிராயம் தெரிவித்ததாக என்னால் நினைக்க முடியவில்லை. 

“காபியைப் பற்றிச் சொல்லுகிறாயா அல்லது…?” வாக்கியத்தை முடிக்க நண்பன் விடவில்லை. 

“இல்லை, அதுவுந்தான்.” 

ரகு ஏன் தோழன். நான்கு வருஷத்திய பிரிவுக்குப் பிறகு நேற்றுத்தான் கல்கத்தாவிலிருந்து திரும்பி வந்திருந் தான். கடிதப் போக்குவரத்து மட்டும் உண்டு. காலை பத்து மணிக்கு வந்தவன் குளித்தான். சாப்பிட்டான், தூங்கினான், அரட்டை அடித்தான். பிறகு டிபன், பிறகு இராச் சாப்பாடு; அதுவும் முடிந்துவிட்டது. 

தெருத் திண்ணையில் வம்பு பேசிக்கொண் டிருந்தோம். சந்திரகிரகணம் பிடித்த இரவைப்போல் எங்கும் மங்கிக் கிடந்தது.நிலவும் இல்லை; இருட்டும் இல்லை. ஓர் இலைகூட ஆடவில்லை. 

“காலத்தைப் போன்ற இரு தலைப் பாம்பு கிடையவே கிடையாது” என்று ஆரம்பித்தான். 

நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். “வேலை செய்தாலும் ஆளைக்கொல்லும்; சும்மா இருந்தாலும் ஆளைக் கொல்லும்; அதுதான் காலத்தின் தன்மை.” 

நண்பன் மனநிலை ஒரு மாதிரி இல்லாத வரையில் அதற்கு மாறான வேதாந்தப்பேச்சு அவனிடமிருந்து புறப் படும் வழக்கம் இல்லை. அவன் மனம் ஒரு புதிர் அதனா லேயே அவனை அருணகிரிநாதர் என்று நாங்கள் கூப்பிடு வது உண்டு. இப்பொழுது அந்தப் போக்கில் இறங்கி விட்டான். 

“அதற்கு நாம் என்ன செய்யலாம்?” என்றதும் அவன் சீறி விழுந்தான். 

“காலத்தை நிறுத்திவிடலாம்; நிறுத்தவும் வேண்டும்; அது எனக்கு வழக்கமாகிவிட்டது.” 

“என்னால் முடியாத காரியம். முடியாத காரியத்தில் தோழமை பாராட்ட முடியுமா?” 

அவன் எழுந்திருந்து குறுக்கும் நெடுக்குமாக ஆளோ டியில் உலாவினான். அந்தக் குறி எனக்குத் தெரியாமலா போகும்? 

“நீ போய் வா. ஆனால் ஒன்று; அந்தத் தெரு பதினா றாம் நம்பர் வீட்டுக்குப் போ” என்றேன். 

குளிப்பதற்குத் தண்ணீரில் இறங்கும் லாகவத்துடன் அவன் தெருவில் நழுவி விட்டான். நிழலைப்போல் செல்ப வனைத் தெருக்கோடி வரையில் பார்த்துக்கொண் டிருந் தேன். அவன் திருவிளையாடல்களைப் பற்றிய நினைப்பு அலையலையாக எழுந்தது. கண்ணுக்கு மறைந்ததும் கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே போய்விட்டேன். 

பிறகு காலையில் காபி குடிக்கும் நேரத்தில்தான் அவனைக் கண்டேன். அப்பொழுது அவன் புகழ்ந்தது காபியைத்தான் என்று நிச்சயமாகக் கருத முடியவில்லை. பதினாறாம் நம்பர் வீட்டைக் குறித்ததாகப் பட்டது. 

“உண்மையாக, காபியைப் பற்றி நினைத்தா பேசினாய்?” என்று வக்கீல் அதட்டிக் குறுக்கு விசாரணை செய்வதுபோல் கேட்டேன். 

”நீ நினைப்பது சரிதான்” என்று சிரித்தான். 

“அந்தப் பதுமையிடத்தில் என்ன புதிதாகக் கண்டு விட்டாய், அப்படி வசமிழந்து போக?” 

“சரியான வார்த்தை! அதை ஒரு பதுமை என்றுதான் சொல்லவேண்டும். அந்தத் தெருவிற்கு லாயக்கில்லை.’ 

” ஏன்?….. பின் எதற்குத்தான் தகுதி?” 

“குடும்பத்திற்கு.” 

“சரி. அவள் குடும்பத்திற்குத் தகுதியாயிருந்தால், குடும்பம் அவளுக்குத் தகுதியாய் இருக்கவேண்டாமா?”

“நீ சொல்வது எனக்குப் புரிகிறது. கணவனை ஏமாற்றக் கூடாதா?” 

“அது இருக்கட்டும். எதைக் கொண்டு அவள் அந்தத் தெருவிற்கு லாயக்கில்லை என்று முடிவு கட்டினாய்?” 

“நல்ல கேள்விதான்….சாதாரணமாக அந்த மாதிரி வீடுகளில் காணப்படும் நாகரிக அலங்காரம் ஒன்றையுமே அங்கே காணோம். மருந்துக்குக்கூடச் சுவரில் ஒரு படம் இல்லை. நாற்பது ஐம்பது வயசில்கூடப் புஷ்பங்களை வைத்துக்கொண்டு வண்டுகளை வருந்தி அழைக்கும் கூட்டத்தில் இருபத்தைந்து வயசுள்ள ஒருத்தி புஷ்பம் வைத்துக்கொள்ளவில்லை என்றால் என்ன நினைப்பது? தவிர வெற்றிலைத் தட்டை வைத்தபோது முகத்தை நெருக்கத்தில் பார்த்தேன். அதில் மாறாத சோகம் தோய்ந் திருந்தது. அதை என் கற்பனை என்று நினைப்பதற்கில்லை. ஏனெனில் அவள் நீண்ட பெருமூச்சு விட்டாள். தட்டு என்ன அரிசி மூட்டையா, பளுவினால் களைத்துவிட்டாள் என்பதற்கு. ‘தினம் இந்தக் கதைதானா?’ என்பதுபோல் இருந்தது அந்த நெடுமூச்சு. ஒரு சமயம் வீட்டைவிட்டு வெளியேறிவிடலாமா என்றுகூட யோசித்தேன். ஆனால் வேறு ஏதோ கவர்ச்சி பிடித்திழுத்தது. இன்னதென்று உணர முடியவில்லை. வெற்றிலை பாக்குப் போட்டுக்கொண் டேன். உன் நினைப்பு, திடீரென்று வந்தது. 

‘அவர் இங்கு வருவது உண்டா?’ என்று உன்னைக் குறிப்பிட்டுக் கேட்டேன். 

‘இல்லை’ என்றாள். 

“ஆனால் அவரைத் தெரிந்துகொண்டது எப்படி?” என்று கேட்டபொழுது, அவர் இந்த வட்டத்து நகர சபை அங்கத்தினர்’ என்றாள். வேறு எதுவும் சொல்ல வில்லை. அவள் சொன்ன மாதிரியிலிருந்து எதையும் மறைத்துப் பேசுவதாக நினைக்க முடியவில்லை. அதனால் அந்த விஷயத்தை நானும் தொடரவில்லை. 

‘இது உன் குலத் தொழிலல்லவே?’ என்று பளிச் சென்று அடுத்தபடி கேட்டதும் அவள் கேட்டதும் அவள் வேர்த்துப் போனாள். 

‘உங்களைப் பார்த்தால் உலக அநுபவம் முதிர்ந்தவர் போல் தோன்றுகிறது. ஆம், இது என் குலத் தொழில் அல்ல, விதிவசம்’ என்று கண் கலங்கினாள். 

‘விதியை நான் நம்புவதில்லை’ என்றதும் தன் கொடுமையைச் சொல்ல ஆரம்பித்தாள். “ஆனால் உனக் குத்தான் அந்த விவரமெல்லாம் தெரிந்திருக்குமே?” 

“எனக்கு முழுவதும் தெரியாது.’ 

“உண்மையாகவா?” என்று நண்பன் தயங்கினான். “ஆம், உண்மையாக” என்றதும் அவன் ஆரம்பித்தாள்? 

“அவள் நல்ல குலத்தில் பிறந்தவள். ஆனால் ஏழை. தகப்பனார் மளிகைக் கடையில் சொற்பச் சம்பளத்திற்கு அமர்ந்திருந்தார். பிள்ளையும் பெண்ணுமாக நாலைந்து குழந்தைகள். ஏழைக் குடும்பமென்றால், நாளோட்டுவதே கஷ்டமாக இருக்கிறது. பெண்ணுக்குக் கல்யாணம் செய்யவேண்டுமென்றால் கேட்பானேன்? 

“தகப்பனார் தவித்துக்கொண் டிருந்தார். ஓர் அதிர்ஷ் டம் அடித்தது. அடுத்த தாலூகாவைச் சேர்ந்த ஒரு வரனைப்பற்றி ஒருவர் அவரிடம் பிரஸ்தாபித்தார். கடிதப் போக்குவரத்து நடந்தது. பிதகு பையன் பெண்ணைப் பார்க்கவந்தான். 

பார்வைக்கு அவன் அழகாகத்தான் இருந்தான். கண்ணாடி போன்ற வழவழப்பான முகமும் பெரிய கண்களும் சிவப்பான நிறமும் இவர்களை வசீகரித்தன. தவிர அவன் பணக்காரன் என்றும் தெரிந்தது. வேறு என்ன வேண்டும்? 

கல்யாணம் நடந்தது. 

பெண் கணவன் வீட்டுக்குச் சென்ற முதல் தினம் இரவு. மேளமும் தாளமும் விருந்தும் சந்தனமும் வாச னையும் சங்கீதமுமாக இருந்தன. 

இந்த ஆடம்பரத்திற்கிடையே பள்ளியறைக் கோலம்! பையனும் பெண்ணும் தனிமையில் இருந் தார்கள். மல்லிகைப் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டில்கள் ஒருபுறம், பெரிய நிலைக்கண்ணாடி பதித்த அலமாரிகள் ஒரு புறம், சோபாக்கள் ஒரு புறம். நடுவில் கருங்காலி மேஜை. அதில் பலவிதப் பழக் குவியல்கள் நிறைந்த தட்டுகள். அவைகளுக்கு நடுவிலிருந்து அம்பர் ஊதுவத்தியின் வாசம் எழுந்துகொண் டிருந்தது. மூலையில் ஒரு குத்துவிளக்கு. பெண் வெட்கி ஒதுங்கி நின்றுகொண் டிருந்தாள். பையன் எவ்விதப் புதுமையையும் உணர வில்லை. அவனாகவே வெற்றிலை போட்டுக்கொண்டுவிட்டுக் கட்டிலில் போய்ப் படுத்தான். படுத்த ஐந்து ஆறு நிமி ஷத்திற்குள் குறட்டைவிடும் சத்தம் பெண்ணின் காதில் விழுந்தது. பெண்ணுக்கு எப்படி இருக்கும்? கற்பனை செய்து பாரேன்! அந்தக் குறட்டைதான் பெண்ணுக்கும் பையனுக்கும் இடையே ஏற்பட்ட வேற்றுமையின் பிள்ளை யார் சுழி. 

பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தால் காரியம் வெற்றி என்பார்கள். அதே மாதிரி அந்த வேற்றுமை வெற்றியே பெற்றது. பொறுமையாக ஆறுமாதம் வரையில் அவள் இருந்தாள். அவள் வதனத்தில் தோன்றிய சந்தேகம் தெளிந்துவிட்டது. தன் கணவன் கல்யாணமே செய்துகொள்ள லாயக்கில்லாதவன் என்பதைத் தெளி வாக உணர்ந்தாள்.ஆனால் சிந்திய பாலை என்ன செய்ய முடியும்? 

ஒன்றும் செய்ய முடியாதுதான். ஆனாலும் கோபத்தில் பாத்திரத்தை உடைத்துவிடலாம் அல்லவா? அதைத்தான் அவளும் செய்தாள். பார்த்தால் பசுப் போலத்தான் இருந்தாள். இருந்தாலும் கணவன் தன்னை ஏமாற்றிய குற்றத்தை மறக்கவில்லை. அதற்கு மாறாகத் தன் மனத்தைத் திரையிட்டு மறைத்துவிட்டாள். 

எதிர்வீட்டில் ஒரு நாடோடி வைத்தியன் இருந்தான்; அழகிய இளைஞன். அவளுக்குத் திடீரென்று நோய் தோன்றிற்று.இந்த வைத்தியன்தான் மருந்து கொடுக்க அகப்பட்டான். நோய் குணமாகிவிட்டது. 

மண வாழ்க்கையில் தேக சம்பந்தத்திற்கு எவ்வளவு முக்கியமான பங்கு உண்டென்பதைச் சில பெரியோர்கள் உணர்வதே இல்லை. இந்தக் குறையினால் அவனுடன் நட்பு முளைத்தது. அந்த இளைஞனுடன் எங்கோ போய் விட்டாள். 

அதற்குப் பிறகு, கணவன் போக்குத்தான் எனக்குப் புரியவில்லை. வண்ணானுக்குச் சட்டையைப் போட்டு விட்டால், அடுத்த சட்டையைத் தேடுவது போல, மறு தாரத்திற்கு அலைந்தான். அங்கே இங்கே தேடினான். ஓர் ஏழைப் பெண்ணைப் புள்ளி வைத்தான். முகூர்த்தமும் குறித்தாகிவிட்டது. 

இந்த விஷயம் இவள் காதிற்கு எப்படியோ எட்டி விட்டது. புருஷனை விட்டு வந்தவளுக்கு இதைப் பற்றிய கவலை தேவை இல்லை. ஆனால் அவள் வெதும்பி னாள். கணவனுக்காக அல்ல; பெண்ணுக்காகத்தான். கணவனைப் பற்றிய உண்மை அவர்களுக்குத் தெரிந் திருக்க முடியாது. மற்றொரு பெண்ணையும் மோசம் செய்யப் போகிறான். அதைச் சகித்துக்கொண் டிருப்பது நியாயமா என்ற யோசனையில் ஆழ்ந்து தீர்மான மாக ஒரு முடிவுக்கு வந்தாள். 

முகூர்த்த தினத்து இரவு நிச்சய தாம்பூலத்திற்குப் பிள்ளை வீட்டார் பெண் வீட்டுக்கு வந்திருந்த சமயம். வாசலில் மேளம் முழங்கிக்கொண் டிருந்தது. ஸைகிளில் ஒரு சேவகன் வந்து பெண்ணின் தகப்பனாரிடம் ஒரு தந்தியைக் கொடுத்துச் சென்றான். கை நடுங்கத் தந்தியைப் பிரித்துப் படித்தார். 

”நீங்கள் செய்வது கல்யாணமல்ல, மரக்கட்டைக்குப் பெண்ணைக் கோடுக்கிறீர்கள், எச்சரிப்பது என் கடமை. ராஜலக்ஷ்மி.” 

அவர் தலை சுழன்றது. வாய் திறக்கவில்லை. என்ன என்னவென்று பக்கத்தில் இருந்தவர்கள் கை நீட்டினார்கள். மௌனமாகத் தந்தியை மாப்பிள்ளையிடத்தில் நீட்டினார். அவன் படித்து விட்டுத் திருடனைப்போல் விழித்தான். அவனுடைய மாமா அந்தத் தந்தியைப் பிடித்து இழுத்து வாசித்தார். அவர் முகம் ரௌத்திராகாரமாகப் பொங்கிற்று. 

“அது யார் ராஜலக்ஷ்மி:’ என்று பெண்ணின் தகப்பனார் மெதுவாகக் கேட்டார். 

“அந்தக் கழிசறைதான்” என்றார் மாமா. 

பெண்ணின் தகப்பனாருக்குப் புரிந்துவிட்டது. “இந்த மாதிரிப் பெண்களைச் சுட்டுக் கொளுத்த வேண்டும்!” என்றார் மாமா. 

பெண்ணின் தகப்பனார் மாப்பிள்ளையின் காதில் ஏதோ சொன்னார். மாப்பிள்ளை மாமாவிடம் சொன்னார். மாமா சாஸ்திரிகளிடம் சொன்னார். அவ்வளவுதான். திடீரென்று மேளம் நின்றுவிட்டது. கல்விழுந்த காக்கைக் கூட்டம்போல ஒரு நிமிஷத்திற்குள் வீடு காலியாகி விட்டது. 

அதற்குப் பிறகு நடந்ததுதான் இன்னும் ஆச்சரியம். தந்தி அடித்தால் இன்ன ஊரிலிருந்து வருகிறதென்று தெரியும் அல்லவா? அதைக் கொண்டோ என்னவோ அவன் இவள் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவிட்டான். 

ஒரு நாள் இரவு. மணி ஒன்பது இருக்கும். நாடோடி வைத்தியன் வீட்டில் இல்லை; கதவு சாத்தியிருந்தது. இவள் மட்டும் வெற்றிலை போட்டுக்கொண்டு வீட்டில் இருந்தாள். யாரோ வாசல் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. 

“யார்?” என்றாள். 

”நான்தான்” என்று பதில் வந்தது. 

அந்த ‘நான்’ யாரென்று புரியவில்லை. விளக்கெடுத்து வந்து கதவைத் திறந்தாள். தன் மாஜி கணவன்! அவ ளுக்கு இன்னது செய்வதென்றே புரியவில்லை. திகைப் படைந்து நின்றுகொண் டிருக்கும்பொழுதே, ரொம்பப் பழகிய வீடுபோல் அவன் உள்ளே போய் ஒரு நாற்காலி யில் உட்கார்ந்தான். அவளும் திகிலடைந்து உள்ளே சென்றாள்.கூடத்தில் ஒரு தூண். அதன் நிழலில் மௌன மாய் ஒண்டி நின்றாள். 

மண்டபத்திலிருந்து ஜலத்தில் குதிப்பவர்போல் அவன் ஆரம்பித்தாள். 

“நான் சண்டை போடுவதற்காக வரவில்லை.நீ என் வீட்டை விட்டுப் போய்விட்டாய்; அது வரையில் சரி. நான் மற்றொரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொள் வதில் உனக்கு என்ன நஷ்டம் என்றுதான் கேட்க வந்தேன்” என்றான். 

அவள் பதில் சொல்லவே இல்லை. 

“வீடு வாசல் நிலபுலம் இருக்கிறது. கெளரவமாய் இருந்தோம். நீ வந்து விட்டுப் போனபோது ஒரு தடவை மானம் அழித்தாய். ஒரு தரம் மானம் அழித்தால் போதாதா? எங்கள் குடும்பக் கௌரவம் போய்விட்டது. ஸ்திரீ இல்லாத குடும்பத்திற்குச் சமூகத்தில் கௌரவம் ஏது?’ என்று உணர்ச்சி யற்ற குரலில் பேசினான். 

அப்பொழுதும் பதில் இல்லை. 

“ஏதேனும் சொல்லேன், பார்ப்போம்” என்று வற்புறுத்தினான். 

புகையில் அமுங்கிய தீ எழுவதுபோல் ஒரே வாக்கியம் சீறிக்கொண்டு வந்தது. 

“உன் லச்சனத்துக்கு ஒரு பெண் பாழாவது போதாதா?” என்றாள். 

அவன் பதில் பேசவில்லை. வாசற் கதவைத் திறந்து விட்டு ஒரு நிமிஷம் தயங்கினான். 

மறுபடி கூடத்திற்குள் நுழைந்தான். 

“அப்படி யென்றால் வீட்டிற்கு வந்துவிடேன். ஸ்திரீ இல்லாத வீடென்று எல்லோரும் அலக்ஷ்யம் செய்கிறார்கள்” என்று குழையும் குரலில் கோரினான். 

“நீ ஒரு அசடு. போ’ என்றதும் போய்விட்டான். 

அவன் வந்ததன் நாட்டம் அவளுக்கு விளங்கவே இல்லை. சோர்ந்து கூடத்தில் உட்கார்ந்திருந்தாள். மணி பத்து அடித்தது. பன்னிரண்டு அடித்தது. இவர்கள் பேசிக்கொண் டிருந்தபொழுது அவன் வீட்டிற் குள் நுழைந்து பார்த்துவிட்டு ரகசிமாய் வெளியேறியது அவளுக்கு எப்படித் தெரியமுடியும்? இளைஞன் ஏன் வரவில்லை? வைத்தியத்திற்காகத் திடீரென்று வெளியூர் போய்விட்டதாக நினைத்துத் தூங்கினாள். 

மறுநாள் விடிந்தது, அஸ்தமித்தது. ஆனால் அவனைக் காணவில்லை. சஞ்சலமடைந்து அன்று இரவை எப்படியோ கழித்தாள். மறுநாளும் வரவில்லை. அடுத்த நாளும் வரவில்லை. அவள் மனம் எப்படி இருந்திருக்கும்? மாஜி கணவன் வீட்டுக்குப் போய்விடலாமா என்ற அவல ஆசைகூடத் தோன்றிற்றாம். ஆனால் மனம் வருமா? 

விதியை நினைத்துக்கொண்டாள். வேசையாகி விட்டாள். “வேறு வழி?” 

ரகு பெருமூச்சுடன் நிறுத்தினான். 

“ஆமாம். நீ எப்பொழுது நகரசபை அங்கத்தினன் ஆனாய்? 

“மூன்று மாதத்திற்கு முன்.” 

“நகரசபை அங்கத்தினர் பதவிக்கும் இந்தப் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்?” 

”ஒன்றுமில்லை, வோட்டுத்தான் சம்பந்தம்.’ 

“அவள் உனக்கு வோட்டுத் தந்தாள். அவ்வளவு தானே?” 

“அவ்வளவுதான்.” 

“அப்படியென்றால் நீ வீட்டைக் குறிப்பிட்டு என்னை அனுப்பியதில் மர்மம் ஏதோ இருக்கிறது. அதை மறைக்கிறாய்.” 

“மர்மமும் இல்லை. வெட்கப்பட வேண்டியதும் இல்லை. வோட்டுக் கேட்பதற்காக ஒவ்வொரு வீடாக ஏறி இறங்குவதென்று தெர்தல் சம்பிரதாயம் ஒன்று உண்டு. அந்த மாதிரி இவள் வீட்டுக்கும் போயிருந்தேன். என்னுடன் சில தேர்தல் புலிகள் வந்திருந்தனர். நாங்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் இந்தப் பெண் எங்களை வரவேற்றாள். வெற்றிலைத் தட்டைக் கொணர்ந்து வைத்தாள். எங்களில் ஒருவர் ஒரு மாதிரியான ஆள். வெற்றிலைத் தட்டை எடுத்து வைத்துக்கொண்டு அங்கே இருந்த கட்டிலில் உட்கார்ந்து மெள்ள வெற்றிலைபோட ஆரம்பித்தார். என்னைத் தவிரப் பாக்கி எல்லோரும் அதேமாதிரி செய்தார்கள்.நான் மட்டும் நின்று கொண்டிருந்தேன். 

“அப்படி உட்காருங்கள்; நிற்பானேன்?’ என்று பெண் வற்புறுத்தினாள். 

எனக்கு உட்காரப் பிடிக்கவில்லை. நின்றுகொண்டே இருந்தேன். பல தரம் சொல்லியும் நான் கேட்கவில்லை. அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். 

என்னுடைய தயக்கம் எப்படியோ எனக்குப் பெரிய மதிப்பைச் சம்பாதித்துக் கொடுத்தது. ஏனெனில் தேர்தல் விஷயத்தைப் பேசி முடித்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறுகையில் வழியில் ஒரு துணி கிடந்தது. மற்ற வர்கள் அதை மிதிக்காமல் போகும்பொழுதுதான் அதை அவள் கவனித்தாள். கவனித்தவுடன் நான் அந்த இடத்திற்கு வருமுன்பே அதை அப்புறப்படுத்தினாள்.ஒரு மகானுடைய காலை ஓர் அடி அதிகமாக எடுத்துவைக் கும்படி செய்யக்கூடாது என்ற எண்ணமோ என்னவோ! 

பிறகு அவளைப்பற்றி நான் நினைக்கவே இல்லை. 

ஒரு நாள் இரவு வீட்டில் உட்கார்ந்திருந்தேன். எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி அவள் அங்கு வந்ததும் நான் ஓரளவு வெட்கிப்போனேன். பிறகு என்னையே தேற்றிக்கொண்டு, எங்கே இந்த வேளையில்?’ என்றேன். 

‘உங்களிடந்தான்.’ 

என்னால் நம்பமுடியவில்லை. எனக்கும் மற்ற ஸ்திரீ களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று என் மனைவியே உறுதி கூறக் கூடிய நிலையில் அவளுக்கு என் னிடம் என்ன வேலை இருக்கலாம் என்று நினைத்தேன். 

“நகரசபை சம்பந்தமாக வந்தீர்களா?” என்று ஊகித்துக் கேட்டேன். 

‘இல்லை’ என்று மயங்கினாள். 

‘பின்?’ 

அவள் பதில் சொல்லவில்லை. 

‘பின்?’ 

அவள் திடீரென்று எனக்கு நமஸ்காரம் செய்தாள். ‘என்னைக் காப்பாற்றவேண்டும்’ எனறு தேம்பினாள். 

”விஷயத்தைச் சொன்னால் பார்ப்போம்.” 

‘ஏதோ சட்டம் ஒன்று வந்திருக்கிறதாம். யாரேனும் ஒருவருக்குச் சொந்தமென்று போலீஸில் பதிவாகாமல் எதுவும் முடியாதாம். எனக்குப் பிழைக்க வழி இல்லை. நீங்கள் தாம் காப்பாற்றவேண்டும்’ என்று தன் முழு வரலாற்றையும் சொல்லி முடித்தாள். 

நான் யோசிக்கவே இல்லை. ‘என் பேரைப் போலீஸில் பதிவு செய்’ என்றேன். 

‘உங்கள் பெயரையா?’ என்று விம்மினாள். 

‘சும்மா செய்’ என்று வற்புறுத்தியதும் என்னை வணங்கிவிட்டுப் போய்விட்டாள். 

அவ்வப்பொழுது அவளைப்பற்றி விசாரித்து வரு நிறேன், வெகு கண்ணியமான முறையில் தோழில் நடத்துவதாகக் கேள்வி. போதுமான பணம் சேர்ந்திருக் கிறதென்றும் இனிச் சும்மா இருக்கத் தீர்மானித்திருப்ப தாகவும் இன்று காலையில்தான் ஒருகுறிப்பு அனுப்பினாள். 

“அதெல்லாம் சரி. அவள் வரலாறு தெரியாது என்றது இப்பொழுது பொய் என்று விளங்கிவிட்டது. என்னை அங்கு அனுப்பிய மர்மந்தான் விளங்கவில்லை.”

“எனக்குந்தான் ஒரு மர்மம் விளங்கவில்லை. கதை கேட்கவா ஒருவன் இப்படி இரவில் போவான்?” 

”அதற்கா போனேன்? கதை கேட்க நேர்ந்தது. கேட்ட பிறகு, போகும்பொழுது இருந்த மனநிலையைக் காணவில்லை. என் மனசு ஒரு புதிராக இருக்கிறது. வேதாந்தமாக நான் பேசும்பொழுது மனசு சகதியில் புரண்டுகொண் டிருக்கும். மறு கணத்திற்குள் ஞானியைப் போன்ற உடலுணர்ச்சி உண்டாகிவிடுகிறது. இந்த விசித்திரத்தையும் அந்த வரலாற்றையும் மாறி மாறி எண்ணிக்கொண்டே அயர்ந்துவிட்டேன். அவ்வளவு தான்.” 

“உன் கேள்விக்கு விடை நீ சொன்னதிலேயே இருக்கிறது. உன்னை முழு அருணகிரி ஆக்க வேண்டு மென்றுதான் அங்கே அனுப்பினேன்.’ 

“அது பலித்துவிட்டது; ஒரு நாளைக்கேனும். ஆனால் உன்னையும் அருணகிரியில் பாதி என்றுதானே இந்த ஊர்ப் பொலீஸ்காரர்கள் நினைப்பார்கள்?” 

“அதுதான் இல்லை. நான் அந்தப் பக்கம் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் இவர்களுக் கெல்லாம் நான் ஒரு புதிர்.” 

“எனக்கு மட்டும் உன் மனநிலை புரிகிறது” என்று ரகு தம்ளரில் கொஞ்சம் காபியை ஊற்றிக்கொண்டான்; 

– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *