கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 18, 2025
பார்வையிட்டோர்: 311 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“செல்லத்தம்பி,நேரம் பதினொண்டரையாச்சு. ‘நேசறி’ விடுகிற நேரம் வந்திட்டுது. ஒருக்கால்ப் போய் திரையனைக் கூட்டிக் கொண்டு வாறியே?”-ஆழ்ந்த நித்திரையிலிருந்து அப்போது தான் பாயை விட்டெழுந்த என்னிடம் அக்கா வந்து கேட்டா. 

“ம்…எனக்கு முதலிலை ஒல்லுப்போலை தேத்தண்ணி போட்டுத் தா.”என் பதில் கேட்டு அடுப்படிக்குள் செல்கிறா அக்கா. 

கொழும்பிலிருந்து நேற்றுக் கருக்கலோடு புறப்பட்டு கொடிகாமம் வந்தடையப் பொழுது மைமலாகி விட்டது. வரணியில் கூட்டாளி ஒருவரது வீட்டில் தங்கிவிட்டு தட்டி வான் எடுத்துப் பின் ஊர் வந்து சேர காலை எட்டு மணியைத் தாண்டிவிட்டது. நெடு நாட்களாக என் ஒரே சொந்தமாக விளங்கும் உடன் பிறந்தவளைக் காணாமலிருந்த சோட்டை, அதிக நேரம் உரையாடிவிட்டு பிரயாண அசதியில் சற்று அயர்ந்து விட்டேன். 

“ஊருக்கு வந்து ஒரு வருடமாச்சு. அக்கா, உங்களை யெல்லாம் காண ஆசையாக இருக்கு. தீபாவளிக்கு வரட்டோ?” என்று சில மாதங்களுக்கு முன்பு அக்காவைக் கேட்டெழுதியிருந்தேன். 

‘என்ரை ராசா.. இப்போதைக்கு உந்த எண்ணம் ஒண்டும் வேண்டாம். நிலவரங்கள் சரியில்லை. பிரயாணங்கள் செய்யிற நேரங்களிலை தான் வலு அவதானமா நடக்கவேணும். தை பிறக்கட்டும் பார்ப்பம்’ என்று அக்கா மறுமொழி போட்டிருந்தா. 

கொழும்பு வாழ்க்கையை நினைக்கும் போது எனக்கு விசராக இருக்கிறது. விடிந்ததும் காரியாலயம். பின் இருண்டதும் அந்த அறையில் போயிருந்து தனிமையான சஞ்சாரம். மன ஆறுதலுக்கோ, அன்றி மனம் விட்டு உரிமையுடன் கதைக்கவோ எவருமே இல்லாத அலுத்துப் போன பிரமச்சாரிய வாழ்க்கை. காசைக் கொடுத்து உடம்பைக் கெடுத்துக் கொள்ளும் கடைச் சாப்பாடு. தாகம் வந்தால் குடிக்கத் தண்ணீரே போதியளவற்ற தலைநகர வாழ்க்கை. இருபது வயதிலிருந்து கடந்த ஏழு வருடங்களாக இதே சுவையற்ற சுழல் சம்பவங்கள். கொழும்பில் குடும்பமாக இருக்கும் என்னையொத்த வாலிபர்களைப் பார்க்கும் போது எனக்குப் பொல்லாத எரிச்சலாகவும், ஏக்கமாகவும் இருக்கும். நான் அப்படியாக ஒன்றும் அனாதையல்ல. பெற்றவராக நின்று என்னை வளர்த்து ஆளாக்கிய அக்காவும், குடும்பமும் இருக்கும் போது, அவர்களுடன் ஒன்றாகக் கூடி வாழ முடியாதபடி எங்களது தொழில் நிலவரங்கள், வரும்படிகள். அடிக்கடி ஊர் வந்து சென்றால் எந்தவித ஏக்கமும் இருக்காது தான். ஆனால், இது பாதுகாப்பாகப் பிரயாணம் கூடச் செய்ய முடியாதபடி நாட்டு நிலவரங்கள், போக்குவரத்து வசதிகள். கிழமைகள் தவறாது அக்காவின் கடிதங்கள் வரும். என் சுகம் விசாரித்து, எனக்காகப் பிரார்த்தித்து, ஆனாலும்? 

“செல்லத்தம்பி, வெள்ளனச் சொல்ல அயத்துப் போனன். ‘மொண்டசொறி’ முன்னை மாதிரி நெசவுசாலைக் கட்டடத்திலை இல்லை. இப்ப சாமியாற்றை மடத்திலை.” தேநீர்க் கோப்பையை நீட்டியவாறே அக்கா சொல்கிறா. 

“ஏன் நெசவுசாலைக்கு என்ன நடந்தது?” 

“கடற்கரை கல்லூரிகளிலை இப்ப ‘ஆமிக் காம்ப்’ இருக்கு. அதனாலை இப்ப ஊர்ப்பள்ளிக்கூடத்தோடை தான் கல்லுாரியையும் சேர்த்திருக்கினம்.கொட்டில்கள், கட்டிடங்கள் போதாதெண்டு நெசவுசாலை, சுருட்டுத் தொழிற்சாலை, பனங்கட்டித் தொழிற்சாலை எல்லாம் இப்ப வகுப்புகள் நடத்துகினம். பத்தாததுக்கு கோயில் தீர்த்த மடத்திலையும், மகிழமரங்களுக்குக் கீழையும் கூட பொடியள் இருந்து படிக்குதுகள்.” 

இது எப்போதோ பத்திரிகையில் பார்த்த செய்தியும் கூட. இப்போதான் எனக்கு ஞாபகத்திற்கும் வந்தது. 

“பிரயாண அலுப்பு. நீயும் பஞ்சிப்படுகிறாய் போலைக் கிடக்கு. கொத்தானும் இண்டைக்குச் சுணங்கித் தான் வருவன் எண்டுட்டுப் போனவர். எனக்கும் ஏலாமல் கிடக்கு… அல்லாட்டி நானே பையப் பையப் போய்…” மிகவும் சங்கடப்பட்டு அக்கா விறாந்தையில் இருக்கின்றா. 

அக்காவை உற்றுப் பார்க்கிறேன். “நாம் இருவர் நமக்கிருவர்” என வியாக்கியானம் சொல்லி வந்த அக்கா, இப்போ மீண்டும் தாய்மை யுற்றிருப்பது எனக்கு வியப்பாக இருந்தது. 

“எனக்கு இரண்டு பிள்ளைகளும் போதும் எண்டு சொல்லி மும்முரமா குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிச்சு வந்தாய். .. இப்ப என்ன நடந்தது?” எனது மனதில் எழுந்த கேள்வியைக் கேட்கு முன்னதாகவே அக்கா சொல்கிறா.. . .”இப்ப நாட்டிலை நடக்கிற முசுப்பாத்திகளைப் பார்க்கைக்குள்ளை குடும்பத்துக்கு இரண்டு பொடியங்களே போதாது போலைக் கிடக்கு. அதனாலை இனிமேல் குடும்பக் கட்டுப்பாடுகளைத் தீவிரமாக ஆதரிக்க வேண்டியதிலை நியாயம் இல்லை. எவ்வளவுக்கெவ்வளவு இனிக் குடும்பம் சடம்பமாக இருக்குதோ அவ்வளவுக்கவ்வளவு அது எங்கடை சந்ததிகளுக்கு நல்லது.” அக்காவின் கருத்து எனக்குப் புதிதாக இருந்தது. அது பிரச்சாரத்திற்குரியது போலவும் இருந்தது. 

சுவர்க் கடிகாரம் பன்னிரண்டு அடித்து, ஓய்ந்தது. 

“சுறுக்காப் போடா தம்பி. இன்னும் கொஞ்ச நேரத்திலை ‘நேசறி’ விட்டுடும். பொடியைக் கவனமாகக் கூட்டிக்கொண்டுவா. சரியான வெய்யிலாகவும் கிடக்கு. இணலான இடங்களாகப் பார்த்து வாருங்கோ.” அக்காவின் அவசரமறிந்து இருக்கையை விட்டெழுந்து செல்கிறேன். 

பதினைந்து மாதங்களுக்குள் ஊர் மாறித்தான் போய் விட்டது. பாழடைந்து போயிருந்த பழைய வீடொன்று புதுப்பொலிவு பெற்று விளங்கியது. அந்த வீட்டினைச் சூழ மண்ணைப் பொட்டழிகளாக்கி மதில் போட்டிருந்தார்கள். உள்ளே சில புது முகங்கள். அந்த இளவட்டங்கள் என்னை வித்தியாசமாகப் பார்த்தார்கள், ‘யார் இது பிறத்தியாள் போலக் கிடக்கு?’ என்பதைப் போல. 

அவ்வப்போது ஊர் வந்து செல்லும் நண்பர்கள் மூலம் இவை பற்றி நான் கேள்விப்பட்டாலும், இப்போதான் நேரில் பார்க்கின்றேன். 

குச்சொழுங்கைகளுக்கால் மிதந்து இப்போ நான் பிள்ளையார் கோவில் வீதிக்கு வந்து விட்டேன். முச்சந்தி மதகிலிருந்த ஓர் கிழவி முகத்தை மூடியிருந்த மூடலை எடுத்து விட்டு என்னைப் பார்த்தாள். 

“என்னணை பெத்தாத்தை. அப்பிடிப் பார்க்கிறியள்?” நான் தான் குரல் கொடுத்தேன். 

“ஆரது. .. கண் வலுவா மங்கிப் போனதிலை ஆளை மட்டுக் கட்டேலாமல் கிடக்கு.” 

“நான் தானணை.” 

என்னை உற்றுப் பார்த்த கிழவி, இனங்கண்ட பூரிப்பில் “எட எங்கடை கொத்திவளவில் உமையாத்தையின்ரை மூத்தவளின்ரை பொடியனே? தாயைத்தின்னி. அண்டைக்கு கொக்கை ராசேசு கறி வேண்ட வந்த இடத்திலே சொன்னவள் தம்பி வாற கிழமையளவிலே வாறானெண்டு. எப்பவடா மோனை வந்தனி?” 

“காத்தாலைதானணை.” 

“என்னடா மோனை வலுவாக் கொட்டுப்பட்டுப் போனாய்? ஆளும் கறுத்து, கருவாடு போல. என்ன சங்கதி? சரியான கேவலமா இருக்கிறாய்?” 

“தெரியாதேயணை கண்காணாத இடத்திலையிருக்கிறது, கடைச் சாப்பாடு திங்கிறது.” 

“காலாகாலத்திலை ஒண்டைப் பார்த்து கொழுவிப் போட்டாயெண்டால். . .. கொக்கை ராசேசுக்கும் அண்டைக்கு இதைப்பற்றி விளம்பரமாகச் சொன்னனான். ம் என்ரை பேரனும் இருந்திருந்தானெண்டால்…இவ்வளவுக்கு.” 

“ஓமணை பெத்தாத்தை நானும் கேள்விப்பட்டு வலுவாக் கவலைப்பட்டனான்.” 

“ஓ! அவனும் உன்னோட்டப் பொடியன்தானே? நாலு பெட்டையளுக்குப் பிறகு அருமை பெருமையாய்ப் பிறந்து, முட்டுப்பட்டு வளர்ந்து, கடைசியிலை இப்படியா வாழ்மானம் வந்திட்டுது.” 

“என்னணை செய்யிறது. எங்கடை பொடியள் சிலருக்கு இது ஒரு நியதியாப் போச்சு.” 

“பனையாலை விழுவாங்கள். பதறுவாங்கள். ஒரு ஈன இரக்கம் பார்க்கிறாங்களே? கடைசியிலை பொடியன்ரை பிரேதத்தைக் கூட…கிழவியின் குரல் அடைத்து விட்டது. 

“நெடுகவும் இப்பிடி அழிவு வருமெண்டில்லை. எதுக்கும் காலம் ஒரு நல்ல மறுமொழி சொல்லுமணை.” தூரத்தே பல பாலகர்கள் மிக வேகமாக வருவது கண்டு என் மருமகனின் ஞாபகம் வந்தவனாக, கிழவியிடமிருந்து விடைபெற்று சாமியார் மடத்தை நோக்கிச் செல்கிறேன். 

கோவிலைத்தாண்டி மடத்தை அடைந்த போது அங்கு ‘ரீச்சரும்’ சில பாலகர்களும் மட்டுமே எஞ்சியிருந்தனர். என்னைக் கண்டதும் எனது மருமகன் “ரீச்சர் போட்டுவாறன்” என்று ‘ரீச்சருக்கு’ கையைக் காட்டிவிட்டு ஓடி வந்து என் கையைப் பற்றுகிறான். 

“மாமா எப்ப வந்தனீ?” 

‘காலமை தான் திரையன்” 

“தம்பிக்கு என்ன கொணந்தனீ?” 

“அப்பனுக்கு அப்பிள், ஜாம், கேக், மள்ளாக் கொட்டை சுவீற், எல்லாங் கொண்டு வந்தனான்.” 

“வேறை…?” 

“வேறை….வேறை… தம்பி எழுதப் பேப்பர், பெஞ்சில், பேனை எல்லாங் கொணந்தனான்.” 

“அதை விட…” 

“அவ்வளவுதான் திரையனுக்கு. இனி அடுத்த முறை நீ கேக்கிறதெல்லாம் வாங்கி வருவன்” 

“நீ அடுத்த முறை வர நான் பெருத்திடுவன், என்ன மாமா?” எனக்குச் சிரிப்பாகி விட்டது. நான் அருமையாக ஊர் வருவது இந்தப் பிஞ்சு உள்ளத்துள் கூட எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

“ஓமப்பன். நான் அடுத்த முறைக்கு வர தம்பி பள்ளிக் குடத்திலை படிப்பான்” என்கிறேன் பதிலுக்கு நான். 

“அப்ப அது கொண்டு வருவியோ?” 

“எது?” 

“ஏ கே போட்டி செவன்” 

எனக்குத் தாக்கிவாரிப் போட்டது. ஒருவாறு சமாளித்தவனாக, “என்னத்துக்கு ராசா உனக்கு அது?”என்றேன். 

“அது எதுக்கெண்டு உனக்குத் தெரியாதே?” 

“தெரியும்…தெரியும் …” 

எப்படி, எதைச் சொல்லி இக்கதையை மாற்றலாம் என்று எண்ணியவனாக, “அது சரி திரையனுக்கு இண்டைக்கு நேசறியிலே என்ன படிப்பிச்சவ ரிச்சர்?” என்று கேட்டேன். 

“குண்டு போடுகிற போது, ‘ஷெல்’ அடிக்கிற போது எப்பிடி நடக்க வேணு மெண்டு ரீச்சர் சொல்லித் தந்தவ” 

“அதைவிட வேறை என்ன படிச்சனீங்கள்?” மருமகனின் கையிலிருந்த புத்தகப் பையையும், தண்ணீர்ப் போத்தலையும் வாங்கி என் தோளில் போட்டவாறே நான் கேட்டுக் கொண்டு நடந்தேன். 

“அதுகளைப் பற்றித் தான் இண்டைக்கு, வேறையும் நாலைஞ்சு பொடியங்கள் வந்து செய்து காட்டினவங்கள்.” 

கோவில் தேர்முட்டியை அண்மித்துக் கொண்டிருந்தோம். தூரத்தே அந்தியேட்டி மடத்தில் சில முதியவர்கள் ஏதோ விளையாட்டில் மூழ்கிப் போயிருந்தார்கள். 

“மாமா அவை என்ன விளையாடியினம் தெரியுமோ?” என் கைகளை உலுப்பியவாறே மருமகன் கேட்டான். 

சற்றே உற்றுப் பார்த்து விட்டு, நான் சொல்கிறேன்… “நாயும் புலியும்.” 

மருமகனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. கைகளால் தன் வாயைப் பொத்தியவாறே அடக்கமுடியாத சிரிப்புடன் அவன் சொல்கிறான். “மாமா உனக்குச் சரியா மூளை கலங்கிப்போச்சு. அது ‘ஆமியும், புலியும்’ விளையாட்டு மாமா.” 

எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. யாரும் வருகிறார்களா என்று திரும்பிப் பார்க்கிறேன். நல்லவேளை எவருமே இல்லை. முருகனிடம் கைகட்டி பாடம் கேட்கும் சிவனின் சிற்பம் கோவில் ராஜகோபுரத்திலிருந்து கம்பீரமாக . . . என் கண்களில் திரையிட்டது. 

தூரத்தே தீர்த்த மடத்திலும், கோவிலைச் சுற்றிய மகிழ மரங்களுக்குக் கீழும் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. ஆசன வசதிகள் இன்றி சிறுவர்கள் புற்றரையில் இருந்தவாறே பாடங்கள் பயின்று கொண்டிருந்தார்கள். இப்போ நாம் கோவிலைத் தாண்டி வீதிக்கு வந்துவிட்டோம். 

மருமகனைத் தமாஷ்படுத்த எண்ணியவனாக, “உனக்குத் தம்பியோ தங்கச்சியோ பிறக்க வேணும்?” என்று கேட்கிறேன். 

“எனக்குத் தம்பி தான் மாமா வேணும்.” 

“என்னடா முந்தித் தங்கச்சி பெத்துத் தா எண்டு அம்மாவை உபத்திரப்படுத்துவாய். இப்ப தம்பி தான் வேணு மெண்டு நாண்டு கொண்டு நிக்கிறாய். ஏன் என்ன சங்கதி?” 

“தம்பி எண்டால் தான் மாமா சண்டை போடுவான்.” 

இனி இவனுடன் பேச்சுப் பறைச்சல் வைத்துக் கொள்வதில்லை எனத் தீர்மானித்துக் கொண்டேன். அப்படி ஏதாவது கதைத்துக் கொண்டால் என் அறியாமையால் நான் தான் நாற வேண்டி நேரிடும் என்ற பயப்பிராந்தியே தவிர, எனது மெளனத்திற்கு வேறு காரணங்கள் ஏதுமில்லை. 

அமைதியாக இருந்த வானத்தில் திடீரென ஒரு விமானம். “தம்பி, அங்கை பாரடா ஒரு பிளேன்.” பூரிப்புடன் வாயெல்லாம் பற்களாக நான் மருமகனுக்கு ஆகாயத்தைக் காட்டுகிறேன். 

“மொக்கு. அது பிளேன் இல்லை. ‘பொம்பர்,’ குண்டு எறிஞ்சு எங்களைப் பச்சடி போடப் போறாங்கள் மாமா. வா கெதியா வீட்டை ஓடுவம்.” மருமகன் முன் சென்று என்னை இழுத்துச் செல்கிறான். 

பாடசாலைகள், கடைகள், வாசிகசாலை யாவும் அமைதியாகின்றன. நாமிருவரும் இப்போ கோவில் வீதியைக் கடந்து கந்தமுருகேசனார் சிலையையும் தாண்டி முச்சந்தி ஊடாகக் குச்சொழுங்கைக்குள் இறங்கி விட்டோம். 

ஒன்று இரண்டாகி இப்போ மூன்று ‘பொம்பர்’கள் மிக அண்மையாக, நாலு பனை உயரத்தில் வானில் வட்டமிடுகின்றன. எனக்கு நடுக்கம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. “தம்பி, இப்ப என்னடா செய்யிறது?” நான் மருமகனை வினவுகிறேன். 

“மாமா, குண்டு போடத் தொடங்கப் போறாங்கள். இஞ்சை வா. ஓடிவா எனக்குப் பின்னாலை.” அவன் முன்னே ஓடுகிறான். பின்னால் நான் செல்கிறேன். 

அப்போது எம்மை விலத்திப் பல இளைஞர்கள் கனத்த ஆயுதங்களுடன் கோவில் வீதிப் பக்கமாக ஓடுகிறார்கள். வரும்போது அந்தப் பழைய வீட்டில் நான் பார்த்த அதே புதுமுகங்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால் அவர்களுக்கு வயது இருபதுக்கு மேல் இருக்காது. 

குச்சொழுங்கையில் உள்ள வீடொன்றின் பின்வளவால் மருமகன் என்னை அழைத்துச் செல்கிறான். வளவின் கோடிப்புறமாக ஒரு அகன்ற ஆழமான அகழி. அங்கே பெண்களும், பிள்ளைகளும், குழந்தைகளுமாகப் பலர். மருமகன் காட்டிய குழிக்குள் இறங்கி நாமும் பதுங்கிக் கொள்கிறோம். சூழ இருந்த சில பெண் பிள்ளைகள் என்னைப் பார்த்து ஏதோ முணு முணுக்கிறார்கள். உடுத்திருந்த வெள்ளை வேட்டி அரையால் வழுகியதைப் போல இருந்தது எனக்கு. முகம் சுத்தமாகச் சிவந்து விட்டதை உணர்ந்து கொண்டேன். 

டும். டும்ம். ‘வானைப் பிளக்கும் சத்தங்கள். “மாமா. சுடத் தொடங்கி விட்டாங்கள், இனிப் பயப்பிடாதை, ‘பொம்பர்’ போய்விடும். மருமகன் என் காதருகில் குசு குசுத்தான். 

இப்போது தான் எனக்குத் தெம்பு வந்தது. எண்பத்தி மூன்றின் ஆடிக் கலவரத்துக்குப் பின்பு இன்று தான் முதற்தடவையாக இப்படி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்திருக்கிறேன். ஆடிக் கலவரம் அந்நிய மண்ணில், ஆனால் இது எமது சொந்த மண்ணில், நாம் பிறந்த மண்ணில். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட. 

“எழும்பு மாமா. ‘பொம்பர்’ போட்டுது, நாங்கள் இனிப் போவம். அம்மா பாவம் பயப்பிடப்போறா.” மருமகன் ஏறி முன்னால் போக, நான் பின்னால் செல்கிறேன். 

உடுத்திருந்த அதே வீட்டுச் சேலையுடன் அக்கா எங்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கிறா.அவவின் இடுப்பிலிருந்தவாறே இளையவன் பெருங்குரல் எழுப்புகிறான். 

“நான் பதறிப்போனன். என்ரை ரண்டு பிள்ளையளுக்கும் என்ன நடந்ததோ எண்டு. நான் சரியாப் பயந்து போனன்.” இளைக்க இளைக்கத் திரையனின் முகத்தை தடவியவாறே அக்கா சொல்கிறா. சேலைத் தலைப்பால் எனது வியர்வையையும் துடைத்து விடுகிறா. 

“மாமா வந்தது நல்லதாப் போச்சு, என்ன திரையன்?” திரையனை அணைத்தவாறே அக்கா கேட்டா. 

“அக்கா, உண்மையிலை திரையன் தான் என்னைப் பவுத் திரமாக் கூட்டிக் கொண்டு வந்து உன்னட்டைச் சேர்த்திருக்கிறான். நான் வெறும் உருப்படிக்குப் போனனே தவிர, எனக்கு எல்லாம் சொல்லித் தந்தது, வழி காட்டினது உன்ரை மகன் தான், அக்கா. உண்மையிலை தம்பியட்டையிருந்து தான் நான் அறிய வேண்டிய சங்கதிகள் நிறைய இருக்கு. இவ்வளவு காலமும் பயணம் வந்து போயிருக்கிறன். ஆனால், இந்தப் பயணம் தான் எனக்கு ஒரு புதிய படிப்பினையைத் தந்திருக்கு அக்கா.” 

அக்காவின் கண்களில் நீர் பனித்தது. 

இப்போ நான் முன்னால் சென்று கொண்டிருக்கிறேன். 

– மல்லிகை

– புதிய பயணம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: வைகாசி 1996, பதிப்புரிமை: திருமதி இ.சாந்த குமாரி, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *