பிறந்த போதினிலே…





(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாராயணிக்கு உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் இன்பத்துள்ளல். தலை கால் புரியாத சந்தோஷம். மனசுக்குள் ஆனந்த மலர்கள் பூத்துச் சொரிந்து வண்ணமாய்ச் சிரித்தன.
கூரை வீட்டின் முன் பக்கத்தில், இன்று காலையில் திடுமென உதித்தெழுந்த சின்னஞ்சிறு ஓலைத் தாழ்வாரத்தின் நிழலில், கறுப்புக் குன்றாக நின்ற எருமை மாட்டைப் பார்க்கப் பார்க்க, அந்தச் சிறுமிக்கு நெஞ்செல்லாம் நிறைந்து ததும்பியது.
“ஹைய்…எங்க மாடு…எங்க மாடு” என்று எல்லையற்ற பெருமையுடன் பூரித்தாள்.
ஓர் உயிரைச் சுமந்து கொண்டிருக்கும் பெருமிதம், அந்த எருமையின் முகத்தில் ஒளியாகவும், உடம்பின் கருமையான மினுமினுப்பாகவும் ஒளிர்ந்தது. அதன் உப்பிய வயிறும், பால் நிறைந்து தடித்த மடுவும் கண்ணையும், நெஞ்சையும் நிறைத்துச் சந்தோஷமளித்தது.
நேற்றுதான் வீட்டுக்கு வந்து சேர்ந்த இந்த மாட்டின் மீது… நாராயணிக்கு இனம் புரியாத பிரியம். கறுப்பு வைரமாக ஜொலித்த அதன் கண்கள், அங்குமிங்குமாக நகரும்போது… நாராயணியின் இதயத்தில் சந்தோஷம் பொங்கிப் பீறிட்டது.
“ஹைய்… எங்க மாடு என்னையே பார்க்குது… வாலை ஆட்டுது….” என்று குதூகலிப்புடன் கைகொட்டிக் குதித்தாள்; சிரித்தாள். பூவாகச் சிதறும் சிரிப்பு. சங்கீதமாக இனிக்கும் வெள்ளைச் சிரிப்பு.
‘அடியே… நாராயணி… காதுலே வுழலே? எங்க போய்த் தொலைஞ்சே-? உஸ்ஸ்ஸ்……. ”
வீட்டுக்குள்ளிருந்து வந்த வீரம்மாவின் அழைப்பில், அசதி தெரிந்தது. ஏதோ அவஸ்தையைச் சகித்துக் கொண்டிருக்கும் வேதனை இருந்தது.
”என்னம்மா, கூப்டீயாம்மா?” துள்ளிக்கொண்டே உள்ளே பாய்ந்தாள் நாராயணி. நேராக அமரமுடியாமல், சுவரில் சாய்ந்த நிலையில் திண்ணை மீது உட்கார்ந்திருந்தாள் வீரம்மா. இடுப்புச் சேலையை நெகிழ்த்துவிட்டிருந்தாள். அதையும் மீறி வயிறு முன்பக்கமாகத் தள்ளிக்கொண்டு தெரிந்தது. ஒரு புதிய ஜீவனை ஏந்திக் கொண்டிருக்கும் பெருமிதத்தைவிட… சலிப்பும், சோர்வுமே… அவளிடம் அதிகமாகக் காணப்பட்டது.
“உங்கய்யா எங்கே போயிருக்கார்?”
“எங்கயோ… எனக்குத் தெரியாதும்மா.”
“எங்க போய் தொலைஞ்சாரோ; பொறுப்பத்த மனுஷன். ‘வாயும் வவுறுமா நா இருக்கேன். இப்ப மாடு பிடிக்க வேண்டாம், புல்லுப் பிடுங்கிப் போடக்கூட முடியாது’ன்னு படிச்சுப் படிச்சுச் சொன்னேன். காதுலேயே போட்டுக்கலே. ‘சினைமாடு ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்குது’ன்னு பிடிச்சுக் கொண்ணாந்து கட்டிப் போட்டு… உடம்பு புல்லரிக்காமெ தெருவுலே அலைஞ்சா என்ன அர்த்தம்? பாவம் வாயில்லா சீவன்… அதுவும் வாயும் வயிறுமாயிருக்கிற சீவன்…குலைபட்டினியாகிடக்குதே… நான் என்ன செய்றது?”
வீரம்மாவின் அங்கலாய்பு நீண்டது. உஸ்ஸென்று களைப்பான பெருமூச்சுடன் முடிந்தது.
மாடு வந்த சந்தோஷத்தில் திளைத்த நாராயணிக்கு, அம்மாவின் அங்கலாய்ப்பு பிடிக்கவில்லை. எரிச்சலாக இருந்தது. இருந்தாலும், வாயும் வயிறுமாக இருக்கும் அம்மாவைச் சங்கடப்படுத்தக்கூடாது என்கிற நினைப்பில் மௌனமாக இருந்தாள்.
இதேபோல்… போன வருஷம் அம்மா வயிற்றைத் தள்ளிக் கொண்டு அங்கலாய்ப்பும் எரிச்சலுமாக இருந்தாள். ஒரு முன் காலைப் பொழுது…
கனவா… நினைவா என்று இனம் பிரித்துப் பார்க்க முடியாத தூக்க மயக்கத்தில் கிடந்த நாராயணி, ஏதோ அரவம் கேட்டு விழித்தாள். சுற்றிலும் மனித அரவம். ஒரு சில பெண்களின் கசாகசா சப்தம். காடா விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் உலவும் அவர்கள்…ஏதோ வேற்று உலக மனிதர்களின் நிழல்களைப்போலத் தோற்றமளித்தனர்.
நாராயணி எழுந்தாள். அம்மா திண்ணையில் படுத்திருப்பதைப் பார்த்தாள். அடிப்பட்ட புழுவைப்போல அம்மா நெளிந்தாள்.
என்னவோ ஏதோ என்று பதைத்த நாராயணி, நெஞ்சுள் பொங்கிப்பீறிட்ட அழுகையை அடக்கிக்கொண்டு, கூட்டத்தினூடே நுழைந்து பார்த்தாள்.
அம்மா வலி பொறுக்காமல் துடித்தாள். ரத்தம் கசிய உதட்டை அழுந்தக் கடித்துக் கொண்டு… உடம்பின் சகல நரம்புகளும் வேதனை தாங்காமல் விறைத்து விம்ம… தவித்துக் கொண்டிருந்தாள். கைகள் விரிப்புத் துணிகளை வெறியுடன் கவ்வி, நசுக்கின. பெண்கள் சுற்றிலும் துரிதமாக இயங்கினர்.
சில நிமிஷங்கள். பதைப்பும் பயமும் நெஞ்சையழுத்தும் கனத்த நிமிஷங்கள். ஒரு புதிய குரல் அழுகையாக ஒலித்தது. பூமிக்கே புதிய குரல்.
“…ஆம்பளைப் புள்ளை…ஆம்பளைச் சிங்கம், பட்டத்து ராஜா பெறந்துருக்கார்..” சுற்றிலும் ஆனந்தக் கூச்சல், எல்லாப் பெண்களும் குலவையிட்டனர். ஆழ்ந்த நித்திரையில் மூழ்கிக்கிடந்த தெருவையே உசுப்பிவிடும் குதூகலக் குலவை. சாம்ராஜ்யம் கட்டி, சக்கரவர்த்தியாக இருந்து ஆளப்போகும் ஆண்சிங்கத்தை ஈன்ற தாய்க்குப் பாராட்டு வழங்கும் குலவை. வாழ்க்கை முழுதும் ஒளியும் உல்லாசமும் நிறைந்திருக்கட்டுமெனப் பிறந்த புதிய ஜீவனை வாழ்த்தும் குலவை.
மூன்று குலவைகள், ஆனந்த கீதமாக எழும்பி, காலை நேரத்து அமைதியை உல்லாசமாக்கிவிட்டு அடங்கியது…..
“என்னடி, இப்படி நிக்கிறே?” பழைய இனிய நினைவுகளில் மிதந்த நாராயணி, அம்மாவின் அதட்டும் குரலால் பிரக்ஞையுற்றாள். “போய், உங்கய்யாவைக் கூட்டிட்டுவா…” என்று வீரம்மா விரட்டினாள்.
வெளியே வந்த நாராயணியை, எருமைமாடு காதுகளைத் தூக்கி நிமிர்த்துக்கொண்டு பார்த்தது. ஓர் எதிர்பார்ப்புடன் கனத்து வாயைத் திறந்து “ம் ம்மே ஏ-க் க்க்’ என்றது. அதன் தலையை அன்புடன் தடவினாள். ஈரமும், மினுமினுப்பும் இருந்த வாயின் மிருதுவான பாகத்தைத் தடவினாள்.
“என்னடீ… போகலீயா?” அம்மாவின் அதட்டல் முதுகில் அறைந்து விரட்ட, மனசில்லாமல் நகன்றாள்.
எதிரே ராமசாமி வந்தான். வழக்கம்போல பீடியைக் குடித்துக்கொண்டு வந்தான். உடம்பின் உறுப்புகள் ஒவ்வொன்றும் பிணங்கிக் கொண்டதுபோல முறையற்றிருந்தன.
நடக்கும்போது கால்கள் ஏதோ ஒரு வித்யாசமான முறையில் வளைந்தது. கைவீசும்போது… முழுங்கையின் வளைவு நிரந்தர வளைசலாகத் தெரிந்தது. சற்றுக் கூனல்.
“என்னம்மா நாராயணி?’ காந்தலான எச்சிலை, ‘புளிச்’ சிட்டான். “அம்மா கூப்பிட்டாள்.
நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியின் அழைப்பு என்றதும், மனது ஜில்லிட்டது. ஏதோ ஓர் பதைப்பு. “ஏன்? எதுக்கு?” ஆவலும், அவசரமும், கேள்வியில் எதிரொலித்தது.
அந்த ஆவலும், அவசரமும், நாராயணிக்குப் பொருத்தமற்றதாக சலிப்பாக இருந்தது.
“சும்மாதான்” என்றாள். ராமசாமியின் வேகம் அடங்கி…சமனமாகி “சரி சரி,வா…” என்றான். வீடு நெருங்கியது.
அய்யாவைக் கண்டதும் அம்மா புலம்ப ஆரம்பித்தாள். நோக்கின்றி எங்கெங்கோ நீண்டது. கடைசியில் “இப்ப எதுக்கு மாட்டைப் பிடிச்சுக் கட்டணும்? நல்லபடியா பெத்தெடுத்து -நா எந்திச்ச பிறகு மாடு பிடிக்கலாமில்லே? இப்ப மாட்டைப் பிடிச்சாச்சு. புல்லுக்கு யார் போறதாம்?”
ராமசாமி, நீண்ட மௌனத்தை உடைத்துக்கொண்டு நிதானமாக சமாதானம் கூறினான்.
“சும்மாயிரம்மா…ஆயிரம் ரூபாய்க்கு இப்படிப்பட்ட சினைமாடு எப்பவும் கிடைக்குமாக்கும்? ஏதோ பெத்த பொண்ணைக் கரையேத்தணும்கிற அவசரத்தாலே பொன்னையா… இந்த மாட்டை இந்த விலைக்குக் கொடுத்தாரு. நல்ல ஜாதி. பொட்டைக்கன்னு போடுற மாடு. பாலும் நாலு லிட்டருக்குக் குறையாது. இப்பேர்ப்பட்ட ஜாதி மாடு கிடைக்கும்போது விட்டுட்டா… நினைச்ச நேரத்துல மடியிலே ரூபாயைக் கட்டிக்கிட்டு அலைஞ்சாலும் கிடைக்குமாக்கும்?”
தன் பக்க நியாயத்தை விளக்குவதில் வேகமாக இருந்த அய்யாவின் பேச்சு, நாராயணிக்கு இனித்தது. குதூகலமாக இருந்தது.
“அதெல்லாம் சரித்தான்… புல்லுக்கு எங்க போறது?” வீரம்மா தனது ‘பிடி’யை விடாமல் கேட்டாள்.
“போம்மா… புல்லுக்கு மலைக்கா போவாக? இதோ நா போறேன். அஞ்சு நிமிஷத்துலே புல்லுக்கட்டோடு வாரேன். நாராயணி, அய்யாவுக்குக் கஞ்சி ஊத்து.”
அலட்சியமாகப் பேசித் தைரியம் கூறிய ராமாசாமி, தலையில் சுற்றியிருந்த துண்டை உருவி உதறித் தோளில் போட்டுக்கொண்டு, கைகால் கழுவிக் கொள்ள ‘வெளிப்பானை’க்குப் போனான். சிறுமி நாராயணி வட்டிலைக் கழுவினாள்.
நாராயணி ஊற்றிவைத்த கஞ்சியின் முன் அமர்ந்து, மனைவியை ஏறிட்டுப் பார்த்தான் ராமசாமி.
“நா சாயங்காலம் திருவேங்கடம் போறேன்.”
“எதுக்கு, சினிமாவுக்கா?” கேள்வியில் கண்டனமும், குத்தலும் வெளிப்பட்டன.
“உனக்கு எப்பவும் இதே நினைப்பு. நாந்தான் கேக்கிறேன், சினிமா பாக்கிறது தப்பா?”
“ம்ஹ்ம்…”அம்மாவின் உறுமல் நாராயணிக்கு எரிச்சலாக இருந்தது. ராமசாமி சமாதானம் கூறினான்.
“இல்லே, வீரம்மா… திருவேங்கடம் போய் உனக்குப் பிள்ளைப்பேறு சாமான் வாங்கணும். எருமைக்குக் கொஞ்சம் பருத்தி விதையும், புண்ணாக்கு தவிடும் வாங்கிட்டு வரணும்.”
“இன்னிக்குத்தான் போகணுமா? நாளைக்குப் போனா ஆகாதா?”
“நாளை என்னென்ன ஜோலி இருக்குமோ? இன்னிக்கே போய்ட்டு வந்தால்தான் நல்லது…”
அம்மா, சமாதானப்பட்ட அடையாளத்தில் மௌனமானாள். இவ்வளவு பேசியதில் ஏற்பட்ட களைப்புடன், உஸ்ஸென்ற நீண்ட பெருமூச்சுடன் கண்ணை மூடிச் சுவரில் சாய்ந்தாள்.
அய்யா, வயிற்றைக் கஞ்சியும் நீருமாக நிரப்பிக் கொண்டு, பீடியில் நெருப்பை ஏற்றிக்கொண்டு அரிவாளும் கையுமாக வெளியேறிய பிறகு
”நானும் வயிற்றைத் தள்ளிக்கிட்டு உக்காந்துட்டேன். பூதம் மாதிரி ஒரு மாட்டையும் பிடிச்சுக் கட்டிப் போட்டாச்சு. பாவம், இந்த மனுஷன். எல்லா வேலைகளையும் ஒத்தையாளாக இருந்து சுமந்து தவிக்கிறாரு. ம் ஹும்… அவருக்குத்தான் எம்புட்டுக் கஷ்டம்!”
கனிவும் அன்பும் அடர்ந்த அம்மாவின் இந்த முணுமுணுப்பு, நாராயணிக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
எரிச்சலும் கோபமுமாக இந்நேரம்வரை கனல் பறத்திய அம்மாவுக்கும், இந்தக் கனிந்த அம்மாவுக்கும் எத்தனை வித்தியாசம்! கனிந்த இந்த அம்மாவைப் பார்க்க அவளுக்குப் பிடித்தது. அவளைச் சேர்த்துக் கட்டிக்கொண்டு சிரிக்கணும்போல மனதும் உடம்பும் துடித்தன.
“அம்மா…”
“என்ன நாராயணி?’ மனசின் கனிவு மேலும் குழைந்திருப்பதை உணர்ந்தாள். நீண்ட நேரமாக நெஞ்சுள் உறுத்திக்கொண்டிருந்த சந்தேகத்தைக் கேள்வியாக்கினாள்.
“ஏம்மா…மாடு பொட்டைக் கண்ணு போட்டாத்தான் நல்லதா?”
“ஆமாம்.. எருமை பொட்டைக் கண்ணு போட்டா வளர்க்கலாம். அதுவும் சினையாகி கண்ணு போடும். வாழையடி வாழையா வம்சம் தழைக்கும். நமக்கும் வளர்த்ததுக்குப் பலனாக ஆயிரம் ரெண்டாயிரம் கெடைக்கும். கெடாக்கன்னு போட்டா எதுக்காகும்? மாடு பால் தர வரைக்கும் ஏனோதானோன்னு வளர்த்துட்டு, அடிமாடா சக்கிலியனுக்கு அஞ்சோ பத்துக்கோ விக்க வேண்டியதுதான். ஏதோ… முத்துக்காளை பாண்டியன் சாமி புண்ணியத்திலே, நம்ம மாடு பொட்டைக்கன்னு போட்டா… உங்கய்யா படுற பாட்டுக்குப் பலன் கெடைக்கும்… ம்ஹும்… எப்படி விட்டிருக்கானோ…சாமி”.
நாராயணிக்குப் புரிவது போலவும், புரியாதது போலவும் ஜாலம் காட்டியது. ஆனால் அதற்கும் மேலாகக் கேள்வி கேட்டால், அம்மாவுக்கு எரிச்சல் வந்தாலும் வந்துவிடும். பாவம்… அவளுக்கு வயிற்றில் சுமை…! இவ்வளவு பெரிய சுமை… அவளாலே எப்படித் தாங்க முடியுது?
சிவப்பை உதிர்த்துவிட்டு, சூரியன் வெளுப்பாக்கிக் கொண்டு மேலேறினான். உஷ்ணத்தை அறிமுகப்படுத்த ஆரம்பித்துவிட்டான்.
எருமை, கட்டுத்தரையில் இருப்புக் கொள்ளாமல் அலை பாய்ந்தது. வயிறும்,பின்புறமும் விம்மிவிம்மித் தணிந்தது. வலி பொறுக்க முடியாமல் தலையை வெறியுடன் ஆட்டியது. கட்டுத்தரையில் கொம்புகள் மோதின. ‘சட்டேர் சட்டேர்’ என்ற ஓசை, கொடூரமாய் ஒலித்தது.
‘ம்ம்மேஏக்க்க்… ம்ம் மேஏக்க் க்’ மாடு வேதனை தாங்காமல் தொடர்ச்சியாகக் கதறியது. அதன் கரகரப்பான குரலில், அளவில்லாத துன்பமும் சோகமும் தெரிந்தது.
வீரம்மா, ‘அய்யாவை அழைத்து வரும்படி’ நாராயணியைத் துரிதப்படுத்தினாள்.
”மாடு கதறுது…கன்னு போடப்போகுது… அய்யாவைக் கூட்டிட்டு வா…ஒரு ஒடு,சீக்கிரம்!”
குதூகலம், நாராயணியின் இதயத்தைக் கவ்விக் கொண்டது. அவள் மனம் சிறகு முளைத்து, வானத்தில் உல்லாசமாகப் பறந்தது. ‘கன்னு போடப் போகுது… கன்னு போடப் போகுது…’ என்ற நினைப்பு, உற்சாக வேகத்தில் உதட்டில் நிரந்தர முணுமுணுப்பாகத் தங்கிவிட்டது.
சதையிலும் ரத்தத்திலுமிருந்து உதயமாகி, சதையும் ரத்தமுமான ஓர் உருவமாக புதிய உயிராக வெளிவரப் போகும் கன்றைப் பற்றிய அவளது கற்பனை எண்ணங்கள்… ஆவலைத் தூண்டியது.
அந்தக் கன்றைப் பார்க்கணும்ங்கிற விருப்பம், ஒரு பேயாக அவளைப் பிடித்து ஆட்டியது.
ராமசாமி வந்தான். மாடு, வேதனை தாங்க மூடியாமல் கதறியது. கால்களை மாற்றி மாற்றி வைத்து அலைபாய்ந்தது. அதன் இரண்டு பெரிய கண்களிலும் கரிய நீர்க்கோடு… அதன் உடல், வேதனைச் சோகமாக வழிந்தது. சற்று நேரத்தில்,
ஒரு புதிய ஜீவன், இதுவரை பார்த்தறியாத சூரியப் பிரகாசத்தையும், காற்றையும் உணர்ந்தது.
“பொட்டைக்கன்னு போட்டிருக்கு.”
ராமசாமியின் ஆனந்த அறிவிப்பு, நாராயணியின் மனதில் உற்சாகப் பிரவாகத்தை மடை திறந்துவிட்டது.
“பொட்டைக் கன்னுதான் போட்டிருக்கு…” என்பதை உடைந்த இசைத்தட்டுப் போல, நாராயணி ஓயாமல் உல்லாசக் குரலில் கத்தினாள். அம்மாவின் முகத்தில்கூட சந்தோஷ வெளிச்சம் படர்ந்திருப்பதைப் பார்த்தாள். அய்யாவிடம் அந்தச் சந்தோஷம் சுடர்விட்டுப் பிரகாசித்தது. வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒளி துலங்கி, சுற்றுப்புறமே ஆனந்தக் களியாட்டம் போடுவது போலிருந்தது.
நாராயணிக்கு…அம்மா, ஆண் பிள்ளை பெற்ற தினத்தில் வீட்டில் கேட்ட மகிழ்ச்சி நாதம், நினைவில் கேட்டது.
இருபது நாட்கள் ஓடியிருக்கும். ஒரு மாலைப்பொழுது. சூரியன் சிவந்து, பெரியதாகி மறையத் தயாராகிவிட்டான். தெருவில் சிறுமிகளுடன் விளையாடிப் பொழுதைக் கழித்து விட்டுப் பசியுடன் வீட்டுக்கு வந்தாள்.
வீட்டுக்குள்ளிருந்து சில பெண்கள் வந்து- போய்க் கொண்டிருந்தனர். அவளுக்குத் திகீரென்றது.
இதே போலத்தான்… நாலைந்து மாதங்களுக்கு முன்பு ஆறு மாத வயதுள்ள தம்பி இறந்தபோது… கனத்த துக்கத்துடன் பெண்கள் வந்து போய்க்கொண்டிருந்தனர்.
அன்று அம்மா அழுத அழுகை, அதைப்பார்த்துத் தான் அழுதது, அய்யாவின் முகத்தில் மண்டியிருந்த சோக இருள், வீடு முழுக்க நிரம்பித் திணறடித்த துக்க வெள்ளம்.
எல்லாம் ஒரு கணத்தில் ஒரு மின்னலாக ஓடி, நாராயணியைப் பயமுறுத்தியது. அச்சத்தில் ஒளிர்ந்து ஜில்லிட்ட நெஞ்சுடன், உள்ளே நுழைந்தாள்.
அம்மா திண்ணையில் படுத்திருந்தாள். பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டிருந்தாள். பெண்கள் அங்கும் இங்குமாக துரிதகதியில் இயங்கிக் கொண்டிருந்தனர். நல்ல வேளை பயமில்லை.
பயம் தணிந்து போனாலும்… வேறுவிதமான பதைப்புடன், திகைப்புடன் நின்றாள் நாராயணி.
ஒரு குழந்தையின் அழுகை-கீச்சுக் குரலாகக் கேட்டது. பூமிக்கே புதிய குரல் அவள் செவியை ஸ்பரிசித்து, நெஞ்சில் இனிப்பாகப் பரவிய இனிய குரல்.
இதோ குலவைச் சப்தம் கேட்கப்போகிறது… குழந்தையை வாழ்த்தி… குழந்தை பெற்ற பாக்யவதியைப் பாராட்டி… ஆனந்த கீதமாகக் குலவை ஒலிக்கப்போகிறது… தெருவின் கதவையே ஈர்த்து விடக்கூடிய குலவை கேட்கப்போகிறது.
கனத்த எதிர்பார்ப்புடன் ஆவலில் நெஞ்சு துடிக்கக் காத்திருந்த நாராயணி, சில நிமிஷங்களைச் சிரமப்பட்டுப் பொறுத்துக் கொண்டாள். ஆனால்…ஏனோ… எந்தப் பெண்ணும் குலவை போடும் ஞாபகமே இருந்ததாகத் தெரியவில்லை. நாராயணியின் பிஞ்சு இருதயம், ஏமாற்றத்தை ஜீரணிக்க முடியாமல் திணறியது. முகம் கறுத்து, மனசு குழம்பிக் கிடந்த நாராயணியிடம் ஒரு கிழவி சொன்னாள்.
“அடியே நாராயணி, உனக்குத் தங்கச்சி பொறந்திருக்கு.”
“தங்கச்சியா?” நெஞ்சின் ஒவ்வோர் பகுதியிலும் முட்டிமோதிய மகிழ்ச்சி. மடை உடைத்துக்கொண்டது. முகமெல்லாம் ஒளிதுலங்க, வாய்மலர்ந்தாள்.
ஆனால், கிழவி சலிப்புடன் எதிரொலித்தாள்.
“ஆமாடி,பொட்டச்சிதான் பொறந்திருக்கு…பாவம், ராமசாமி! அவனுக்கு இன்னொரு பத்தாயிர ரூபாய் சுமை…ம் ஹும். இந்தப் பொம்பளைப் புள்ளை…இந்தப் பூமியிலே எப்படிக் கஷ்டப்படப் போகுதோ…?”
நாராயணி துணுக்குற்றாள். இதில் கவலைப்படவும், சலித்துக் கொள்ளவும் என்ன இருக்கு?
அய்யாவைப் பார்த்தாள். அவன் முகத்திலும் இருள். கண்களில் சோகம் நிழலாகப் படிந்திருந்தது. அம்மாவின் மூகத்தில்கூட, அன்று தம்பியைப் பெற்றெடுத்த சமயத்தில் இருந்த பெருமிதத்தையும்,சந்தோஷத்தையும் காணவில்லை. ஒரு கசப்பை விழுங்கும் பாவனை தெரிந்தது.
தம்பி இறந்த நாள் நினைவுக்கு வந்தது. அன்றைய துக்க நிழல், இன்னும் வீடு முழுக்க நிரம்பியிருப்பது போலிருந்தது. நாராயணி திணறினாள். தூக்கக் கலக்கத்தில் எதிலோ முட்டிக் கொண்டது போன்றதோர் திகைப்பு. இது என்ன? ஏன்? புரியவில்லை. குழப்பம், மனசை ஒரு இருட்டாகச் சூழ்ந்தது.
இது என்ன? ஏன்?
எருமை மாடு பொட்டைக்கன்னு போட்டா, வீடெல்லாம் சந்தோஷ ஆரவாரம். அம்மா பொட்டை பிள்ளை பெத்தா…வீடெல்லாம் துக்கமா? இதுஎன்ன? பொம்பளைப் பிள்ளைன்னா…அத்தனை மட்டமா?
கண்ணில் நீர் முட்டியது. ஏதோ ஒரு சிறுமி தன்னை மானக்கேடாக வைத்துவிட்டாற் போன்ற அவமான உணர்ச்சி அவளைக் குத்தியது.
மனம் விம்மியது. நெஞ்சுக்குள் எங்கோ ஒரு பகுதி நொறுங்கிச் சரிந்தது.
வெளியே வந்தாள். எருமை மாட்டைப் பார்த்தாள். கனத்த செவிகளைத் தூக்கிக் கொண்டு, தனது கன்றைப் பாசத்துடன் நுகர்ந்து கொண்டிருந்த எருமையின் முகத்தில் ததும்பிய பெருமிதத்தைப் பார்த்தாள்.
அவள் மனதில், இனம் புரியாத பொறாமை தலைகாட்டியது.
– செம்மலர், 1985.
– மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் (பாகம்-2), முதற் பதிப்பு: 2002, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |