பிஞ்சு மனம்!




வழக்கம்போல் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று தன் குடும்பத்துடன் வெளியே கிளம்பினான் ரமணன். மாலுக்கு விஜயம். ஒரு தியேட்டரில் படம். இன்டர்வெல் லில் ஸ்நாக்ஸ். பிறகு மாலையில் ஒரு ஹோட்டலிம் டிஃபன்.

கிளம்பும்பொழுது ரமணனின் தம்பி மகள் ஜெயந்தி தானும் வருவேன் என அடம் பிடித்தாள். என்றைக்கும் இல்லாத திரு நாளாக அவள் இப்படி நடந்து கொள்வது விசித்திரமாக இருந்தது ரமணனுக்கு.
அண்ணனிடம் ஜெயந்தியையும் கூட்டிச் செல்லமாறு கேட்டுக்கொண்டான் தம்பி. தர்மசங்கடமான நிலைமை! காரணம் தன் பெண் பிஸ்கட் சாப்பிடக்கூடாது. சாக்லேட்டும் சாப்பிடக் கூடாது.. ஏன் வெளியே எந்தத் தின்பண்டமும் தன் மகள் தொட்டுக்கூடப் பார்க்கக்கூடாது என்று பொத்தி பொத்தி வளர்க்கிறான் அப்பன்காரன். இதை ரமணனும் அறிவான். தம் குடும்பம் பிட்ஸாவும் கோக்கும் சாப்பிடுவது வழக்கம். மாதத்தில் ஒருநாள்தான். இன்று ஜெயந்தி வருவதால் அனைத்தையும் கைவிட வேண்டும்; வேறு வழியில்லை எனப் பட்டது. இதனால் ஒரே மகன் கவுதம் முகம் சுண்டிப் போனது. காரணம் ஜெயந்தி வருவதால் தான் விரும்பும் ஸ்நாக்ஸ் கட்டாகும் என்ற நினைப்பால்.
இன்டர்வெல்லில் பாப்கார்ன் மட்டும் ரமணன் வாங்கிக் கொடுத்தான். ஜெயந்திக்குப் பிடிக்காத ஐட்டம் பாப்கார்ன். பெரியப்பா சமூசா வாங்கிக் கொடுப்பார் என எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது ! இருந்தாலும் வேண்டா வெறுப்பாக கொஞ்சமாக பாப்கார்ன் வாங்கிச் சாப்பிட்டாள் ஜெயந்தி.
படம் முடிந்து வெளிப்பட்டனர். கவுதம் கையைப் பிடித்தபடி ஜெயந்தி நடந்தாள்.
ரங்கராட்டினம் , பேட்டரி கார் , கேரம்போர்டு இவற்றிலெல்லாம் விளையாடும் சிறுவர்களையும் பெரியவர்களையும் கண்டு களித்தபடி நடந்தாள் ஜெயந்தி.
கொஞ்சதூரம் சென்றதும்தான் கவனித்தான் கவுதம். தன் கைப்பற்றியபடி வந்து கொண்டிருந்த ஜெயந்தியைக் காணவில்லை. துணுக்குற்ற கவுதம் , “டாடி… ஜெயந்தியைக் காணோம்.” என அலறினான். முன்னால் மனைவி ஷாலினியுடன் சென்றுகொண்டிருந்த ரமணன் அதிர்ச்சியுற்று திரும்பினான்.
“டேய்..உன் கையைப் பிடிச்சிக்கிட்டுத்தானே வந்தா…எப்படிடா தொலைஞ்சு போனா?” ஆத்திரத்தில் கத்தினான்.
“என் கையைப் பிடிச்சிக்கிட்டுதான் வந்தா. ஆனால் திடீர்னு காணாமல் போயிட்டா டாடி!” கண்கள் கலங்க கூறினான் .
“நீங்க டென்ஷனாகாதீங்க. இங்கதான் பக்கத்திலே எங்காவது போயிருப்பா..வாங்க தேடலாம்!” மனைவியின் வார்த்தைகளில் சற்று அமைதியானான் ரமணன். கொஞ்சதூரம் நடந்து சென்றவள் கண்ணில் அந்தக் காட்சி தென்பட அதிர்ச்சியுற்றாள் ஷாலினி. வயிற்றை கலக்கியது. “என்னங்க அங்கப் பாருங்க!” ஷாலினி சுட்டிக்காட்டிய திசையில் ரமணன் பார்வையைச் செலுத்தினான். ஒரு கப்புள் எதிரும் புதிருமாக அமர்ந்துகொண்டு டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் அவர்கள் அருகில் நின்றபடி அவர்கள் உண்ணும் தட்டுகளையே வெறித்துப் பார்த்தபடி ஜெயந்தி இருந்தது கண்ணாடித் தடுப்பின் வழியாகத் தெரிந்தது.
ரமணனுக்கு மூளையில் இரத்தம் சூடாகப் பாய்ந்தது. ஆவேசத்துடன் ஹோட்டலுக்கள் நுழைந்தவன் ஜெயந்தி கையைப்பற்றி தர தரவென்று இழுத்துக்கொண்டு வெளியே வந்து அவள் முதுகில் பளாரென்று ஒரு அறை விட்டான். ஜெயந்தி அழத் தொடங்கினாள். அடுத்த அறை கொடுக்கும் முன்னால் பாய்ந்து சென்று தடுத்தாள் ஷாலினி.
“சே..என்ன ஒரு கேவலம்! இப்படிக்கூடவா ஒண்ணு இருக்கும்…” என்றவன், “ஏண்டி இப்படி செய்தே?” கோபத்தில் முறைத்தான்.
“ப்ளீஸ் அமைதியா இருங்க..பாருங்க எல்லாரும் நம்மளையேப் பார்க்கறாங்க” என சமாதானம் செய்தாள்.
ரமணனுக்கு நெஞ்சே ஆறவில்லை. அந்தக் காட்சியை நினைத்து நினைத்து பொருமியவனுக்கு தம்பியின் மீது ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. இப்படிப் பொத்திப் பொத்தி வளர்ப்பதால்தான் இவள் இப்படி நடந்து கொள்கிறாள்! பாவம் சிறுமிதானே! பசியெடுக்கும்பொழுது எதார்த்தமாக நடந்துகொள்கிறாள். தான் செய்வது தவறு என்று அறியாமல் இப்படி நடந்து கொள்கிறாள் என்ற ஆதங்கமும் எழுந்தது.
காரை ஒரு ரெஸ்டாரண்ட் வாசலில் நிறுத்தியவன் திரும்பிப் பார்த்து,”ஜெயந்தி சாரிம்மா..உன்னை பெரியப்பா அடிச்சிட்டேன். வலிக்கிறதா டியர்?” என்று அவள் மோவாக் கட்டையைப் பிடித்தபடி கேட்டான் .
மிரண்டு போயிருந்த ஜெயந்தி, ரமணனின் அனுசுரணையான பேச்சால் கொசஞ்சம் மனம் தெளிந்தாள்.
“பெரிப்பா! எனக்கு ரொம்ப பசிச்சுது. அதனால அந்த ஆண்டிக்கிட்ட சாப்பிட ஏதாவது வாங்கிக் கொடுக்கும்படி கேட்கப்போனேன். அதுக்குள்ள நீங்க வெளியே அழைச்சிக்கிட்டு போய் என்னை அடிச்சுட்டீங்க. அப்போதான் தெரிஞ்சது நான் செஞ்சது தப்புன்னு. இனிமே இப்படி செய்யமாட்டேன் பெரிப்பா! எங்கப்பாக்கிட்ட சொல்லாதீங்க பெரிப்பா. ப்ளீஸ்!” கண்களில் நீரோடு ஜெயந்தி கெஞ்ச, சட்டென்று நெகிழ்ந்து போய் கார் கதவைத் திறந்து கீழிறங்கினான் ரமணன்.
பின்னால் உட்கார்ந்திருந்த ஜெயந்தியை இரண்டு கைகளால் தூக்கி தன்னோடு அணைத்துக்கொண்டான்.ஷாலினியும் நெகிழ்ச்சியில் கண்கள் பனிக்க ஜெயந்தி கன்னத்தில் முத்தமிட்டாள்.
பிறகு அனைவரையும் அழைத்துக்கொண்டு ரெஸ்டாரெண்டுக்குள் நுழைந்தான் ரமணன்.
…..