பாதிப்பு..!




மனோன்மணிக்கு மனதில் சுமை. காரை விட்டு இறங்கி வலி தாங்க முடியாமல் துவண்டு வந்து சோபாவில் சரிந்தாள்.
பாதிப்பு…!!
இருபது வயது ரமேஷ். இவள் சுமந்து பெற்றப் பிள்ளை. தாடியும், மீசையுமாய் ஒரு பிச்சைக்காரனை விடக் கேவலமாய், ஒரு மனநோயாளியைவிட மோசமானவனாய்… போதையில் தள்ளாடி சாலையோரம் நடந்து சென்றது இவள் மனதைப் பிசைந்தது.
காரை நிறுத்தி….’ மகனே! ‘ என்று கதறி அள்ளிக்கொள்ள இவளுக்குள் இதயம் முழுக்கத் துடிப்பு. அரிப்பு.
ஆனால் முடியாது.!
ஏன்..?….
இவள் கைகள் கட்டப்பட்டக் கடன்காரி. பெற்றப்பிள்ளையைத் தொடமுடியாதத் துரோகக்காரி.
எல்லாம் இவள் செய்த தவறு. கணவனை விட்டு மாற்றானை நினைத்தது மாபெரும் குற்றம்.
கணவனும் மனைவியும் அரசாங்க வேலைக்காரர்கள். வேறு வேறு அலுவலங்கங்களில் வேலை செய்பவர்கள். தினம் ஆளுக்கொரு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள். அந்த இருவருக்குமான இடைவெளியில்… அவள் பழகிய பழக்கத்தில் கொஞ்சம் பாதிப்பு.
கடற்கரை மணலில் ராகவ் இவள் அருகில் அமர்ந்து இவள் கைப்பிடித்துக்கொண்டு சத்தியம் செய்வது போல் சொன்னான்.
“மனோன்! நான் உன்னைத்தான் காதலிக்கிறேன். உன்னை மட்டுமேக் காதலிக்கிறேன். உன் மகனை விட்டு ‘ வா ‘ ன்னு சொல்ல எனக்கு அதிகாரமில்லை. உன் விருப்பம் அவன் நீ அவனை அழைச்சு வந்தாலும் எனக்கு ஆட்சேபணை இல்லே. என்னைக்கு உன்னை விரும்பினேனோ அன்னையிலிருந்து அவனும் என் பிள்ளை. உன் சந்தோசம் என் சந்தோசம். நமக்கு இன்னொரு குழந்தை தேவை இல்லாமல் கடைசி வரைக்கும் இவனே நமக்கு மகனாய் இருக்கலாம். “எவ்விதத் தட்டுத்தடங்கலுமின்றி தெளிவாய் சொன்னான்.
ஆனால் சங்கர்..! இவளுக்குத் தாலி கட்டியவன்.
“நீ, உனக்கும் வேறொருத்தனுக்கும் காதலன்னு சொல்றது எனக்கு வெட்கமா இருக்கு. வாய் கூசுது. மணமான ஒருத்தி இன்னொருத்தன் மேல ஆசைப்படுறேன்னு சொல்றான்னா…அவளுக்குத் தன் கணவனிடம் தாம்பத்தியப் பற்றாக்குறை இருக்கனும். இல்லே…. அவளுக்கு உடல் தேவை அதிகமாய் இருக்கனும். இது இரண்டைத் தவிர அவள் மாற்றான் மேல மையல் கொள்றதுக்குக் காரணமே இல்லே.!
என்னிடம் அந்தக் குறை இருக்கிறதா எனக்குத் தெரியல. அதுக்கும் வாய்ப்பும் இல்லே. நமக்கு ஒரு மகன் இருக்கான். அது இல்லாமல் நமக்குள் தாம்பத்தியத் தட்டுப்பாடு என்பது கிடையாது.
அதனால் குறை உன்னிடம்தான் இருக்கு. உனக்கு உடல் தேவை அதிகமாய் இருக்கு. அதனால்தான் இந்த மாற்றம்.
மனோ! நீ காதலிக்கிறவனைக் கைப்பிடிக்கிறதுல எந்தவித மறுப்பும் இல்லே. அதையும் என்னிடம் மனம் விட்டுச் சொன்னதால வருத்தம், கோபதாபமில்லே சந்தோசம். உன் விருப்பத்துக்கு மாறாய் நான் இருக்க விரும்பல. உங்களுக்கு வழி விட்டு நான் விலகறேன், விவாகரத்துத் தர்றேன்.
ஆனா…. நீ என் குழந்தையோட போறதுல எனக்கு விருப்பமில்லே. ஒரு மகனுக்குத் தாயான நீ என்னைக்கு சொந்த புருசனை விட்டு இன்னொருத்தன் மேல ஆசைப்பட்டீயோ… அன்னைக்கே நீ எனக்கு மனைவியுமில்லே. என் குழந்தைக்குத் தாயுமில்லே. அவன் முழுக்க முழுக்க என் சொத்து, வாரிசு, என் மொத்த சொந்தம். நீ…. எனக்கு வாடகை மனைவி. அவனுக்கு வாடகைத் தாய். அவ்வளவுதானேயொழிய வேறு சொந்தம் கிடையாது.
அப்புறம்… நீ இன்னைக்கு அவனைப் பாசத்துல எடுத்துப் போக நினைக்கலாம், துடிக்கலாம். ஆனா…. மோகம் அடிச்சிடும். நீ காதலிக்கிறவன் எப்படிப்பட்டவன்னு எனக்குத் தெரியாது. இன்னைக்கு உனக்காக ஏத்துக்கிறவன்… நாளைக்கு மனசு மாறி… அவனை வேண்டாம்னு ஒதுக்கலாம். இல்லே… உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் இவன் மாற்றானாகி விடுவான். என் மகன் அப்படி ஏங்கி, கொடுமைப்படுறதுல எனக்கு விருப்பமில்லே. அதனால்… உனக்கு விவாகரத்து உண்டு. குழந்தைக் கிடையாது. “திட்டவட்டமாகச் சொன்னான்.
இவளுக்கு மனசு ஆடியது. இரு தலைக்கொள்ளி எறும்பாய் தவித்தாள்.
‘எதற்கு ராகவைக் காதலித்தோம். ஏன் வந்தான்…?’ – அல்லாடினாள்.
அவன் சொந்தக்கதை சோகக் கதை.
அவன் மனைவி மாற்றானுடன் படுத்து… கணவன் கண்டு கொள்ள…வெட்கம், மான, அவமானங்களுக்குப் பயந்து அடுத்த நிமிடமே தற்கொலை செய்து கொண்டு விட்டாள்.
அந்த சுமைதான் இவளை அடித்தது.
அவன் மேல் கழிவிரக்கம் கொள்ளச் செய்து…. சக ஊழியனான அவனுக்கு ஆறுதல் சொல்ல வைத்தது.
பின் அன்பு கொள்ள வைத்தது. அரவணைக்கச் சொன்னது. அது கனிந்து உள்ளப் பரிமாற்றம் ஏற்பட்டு…பின் காதலாக மாறியது.
மகனுக்குப் பெற்றவன் துணை இருக்கிறான். அவனின் அன்பு, பாசம், ஆஸ்தி, சொத்து எல்லாம் நிச்சயமாக அவனுக்கு உண்டு. ஆனால் ராகவ்…?
அம்மா, அப்பா, மனைவி….. எல்லாம் இழந்த அநாதை. துணை, பாசம், நேசம் இல்லாமல் இருப்பவன் , துடிப்பவன். இவனுக்குத்தான் அன்பு காட்ட த் துணை தேவை. பாசம் காட்ட ஆள் தேவை. நேசம் கொள்ள நெஞ்சம் தேவை.!
– இப்படித்தான் துணிந்தாள், மனசு மாறினாள். வேலி தாண்டினாள். குற்றவாளியானாள்.
பெற்ற பிள்ளையை வஞ்சித்து, தவிக்க விட்டுவிட்டு வந்த குற்றத்திற்குத் தெய்வம் தண்டித்து விட்டது. வாழ்க்கை எந்தவித குறையுமில்லாமல் இருந்ததே ஒழிய கொஞ்சி மகிழ மழலை இல்லை.
ராகவ் குறை. மருத்துவ ரீதியில் சரி செய்ய முடிந்தும் இன்னும் முடியாத தோல்வி.
வெட்டித் தாம்பத்தியம் எத்தனை நாட்களுக்கு இனிக்கும்..? அவனுக்கேக் கசப்பு.
“என்னம்மா..? குழந்தை ஒன்னைத் தத்தெடுத்துக்கலாமா…? “அவனே கேட்டான். பிள்ளையார் சுழி போட்டான்.
“ஏற்கனவே ஒருத்தன் இருக்கானே…? “இவள் சொன்னாள்.
“எனக்கு ஒன்னும் ஆட்சேபணை. அன்னைக்குச் சொன்னதைத்தான் இன்னைக்கும் சொல்றேன். நீ கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் அவனும் கடைசிவரை எனக்குப் பிள்ளை. உன்னிடம் முதலிலேயே விடாத புருஷன் இப்ப மட்டும் நீ கேட்டு கொடுப்பார் என்கிற நம்பிக்கை எனக்கில்லே. இருந்தாலும் நான் உன் ஆசைக்கும், யோசனைக்கு, இப்படியாவது தன் மாகன் கிடைப்பானா என்கிற நம்பிக்கைக்கும் குறுக்கே நிற்க விரும்பல. அங்கே போய் தோல்வி, அவமானம் என்கிற மன உலைச்சல் வேணாம். எது நடந்தாலும் தங்கிக்கோ. நல்லது நடந்தா சந்தோசப்படு. கெட்டது நடந்தா மறந்துடு. “சொன்னான்.
துணிந்து முன்னால் வாழ்ந்த வீட்டுப் படியேறினாள்.
“யார் நீ..? என்ன வேணும்…? “பார்த்ததுமே சங்கர் கேட்டான்.
அதுவே இவளுக்கு முகத்தில் அறை விழுந்தது போலிருந்தது.
“குழந்தை…?”
“மன்னிச்சுக்கோ மனோன்மணி. நீ…அவனைப் பார்க்கக்கூடாது, நினைக்கக்கூடாது.!”
“வந்து…..”
“எந்தப் பேச்சும் பேசாமல் வெளியே போ…? “வெளிய கை காட்டினான்.
அதற்கு மேல் எப்படி முடியும்..? – திரும்பினாள்.
ஓர் தனி இடம் வந்து நின்று வலியை அழுது கரைத்து வீட்டிற்கு வந்தாள்.
அதன் பிறகு… இவளும் ராகவ்வும் கலந்து பேசி ஒரு அநாதை ஆசிரமத்திலிருந்து ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்து வந்தார்கள்.
அவன்தான் ராகுல். இவள் சொந்த மகன் ரமேசை விட மூன்று வயது இளங்காளை.
என்னதான் கோபம் தாபமில்லாமல் மனைவியை வழியனுப்பி வைத்து விவாகரத்துக் கொடுத்தாலும்….
சங்கருக்கு மனைவி சென்ற துக்கம். மாற்றானுடன் குடும்பம் நடத்தும் அவமானம், குமைச்சல், குமுறல்…..கொஞ்சம், கொஞ்சமாக செத்து…. சமீபத்தில் சாவு.
அப்பா இறந்த துக்கம் என்று தனி ஆளாய் ரமேஷ் குடியில் விழுந்து….அதற்கு அடிமையாகி….பிச்சைக் காரனை விட மோசமாய்….
பெற்றத்தாய்க்கு வலிக்காமல், வயிறு எரியாமல் என்ன செய்யும்…?
காரை நிறுத்தி இறங்கி… “மகனே! “என்று வாரினால் எட்டி உதைப்பான். அவனுக்கு அப்பா இழப்பைவிட… அம்மா அவமானம் அதிகமானது.
அம்மா பிரியும்போது அவனுக்கு எட்டு வயது. இப்போது இருபது. விபரம் தெரியாதா என்ன..?! இல்லையென்றால் அவனெப்படி இவ்வளவு சீக்கிரம் கெட்டுப் போவான்..? குடிக்கு அடிமையாகி சீரழிவான்….?
மனோன்மணி நினைவுகளைத் துறந்து…. நிமிர்ந்தாள். கடந்த காலங்களைத் துடைத்தாள்.
இவனுக்கு வழி….? யோசித்தாள்.
“ராகுல்! “அழைத்தாள்.
நல்லவன், அன்பான பிள்ளை. இவள் வளர்ப்பு. ராகவ் தேர்ந்தெடுப்பு.
“என்னம்மா…? “பணிவாய் வந்து நின்றான்.
“உனக்கு ரமேசைத் தெரியுமா…?”
புரியாமல் பார்த்தான்.
“என் பையன். உன் அண்ணன்…”
“தெரியும். தினமும் பார்க்கிறேன். கஷ்டமா இருக்கு..”
“அவனை இங்கு அழைச்சு வர்றீயா…?..”
”……………………………”
“பாவம்ப்பா…! அனாதையாகிட்டான்….”சொல்லும்போதே அவளுக்குத் தொண்டை கரகரத்தது.
“சேர்ந்து வாழலாம்…! “கண்களின் ஓரம் கசிந்த நீரைத் துடைத்தாள்.
அவனுக்கு….
‘ தான் சென்றால் சரி வருமா…?’ தோன்றியது.
“அம்மா! அப்பாவை அனுப்பலாமா…? “கேட்டான்.
“அவன் மனசு என்னன்னு தெரியலை ராகுல். ரொம்ப ரோசக்காரனாய் இருக்கான். நம்பளைத் திரும்பி பார்க்குறதில்லே. அப்பாவை அனுப்பினால்…ஏதாவது பேசி அவமானப்படுத்தி விட்டால் அவருக்கும் கஷ்டம். எனக்கும் கஷ்டம்.”
“ஆளைத் தொட வேணாம்மா. கஷ்டம்! விதி விட்டுடலாம்.”
“ராகுல்…! “தாங்கமுடியாமல் கமறினாள்.
அவனுக்குள் இளகியது.
“சரிம்மா. நான் போறேன்…”
“சந்தோசம்!”
“அம்மா! அப்பா சம்மதம்…?”
“அவன் என்னைக்கும் அவனும் ஒரு பிள்ளை. வந்தால், சேர்ந்தால்… சந்தோஷப்படுவார்.”
“சரிம்மா. கிளம்பறேன்.”
“திட்டினாலும் பேசினாலும் கைகலப்பு வேணாம். அவன் என் சொந்தப்பிள்ளை.”
“அடிச்சாலும் பட்டு வருவேன். அவர் என் அண்ணன்..!”
“ராகுல்…!” நெகிழ்ந்தாள்.
“வர்றேன்.! “நகர்ந்தான்.
ரமேஷ் வீட்டு வாசலில் குப்புறப்படுத்துக் கிடந்தான்.
“அ… அண்ணா….!” ராகுல் தொட்டு அழைத்தான்.
திரும்பினான். குப்பென்று சாராய வாடை.
“நா….நான் ராகுல்..!”
“தத்துப்பயலா…?”
“ஆமாம். உன் தம்பி.”
“த்தூ..! அவள் அம்மான்னு சொல்லவே அருகதை இல்லாதவள்.அவள் அம்மாவே இல்லே. அப்புறம் எப்படி நீ தம்பி ….? அந்த நெனப்புதான் அப்பாவையும் கொன்னுது. என்னையும் கொல்லுது. போ. வெளியில போ. “தட்டுத்தடுமாறி எழுந்தவன் மல்லாந்து விழுந்தான். பின் மண்டையில் அடி.
ராகுலுக்கு பதறியது. சதை ஆடியது.
தொட்டுத் தூக்கினான். ரத்தம்.
“இப்போ நான் யார் பிள்ளையும் இல்லே. கஷ்டப்படுறவனுக்கு உதவும் மனிதன். வா… மருத்துவமனைக்கு..”அள்ளினான்.
ரமேஷ் மெல்ல கண் விழித்தான்.
”த… தம்பி….! ” புன்னகைத்தான்!!