பாட்டு






(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோவை எக்ஸ்பிரஸ் காற்றைக் கிழித்தபடி சீறிக்கொண்டிருந்தது. அதையும் மீறி காற்றில் மிதந்து வந்த பாட்டை எல்லோரும் ரசிக்காமலில்லை. இளைஞன் ஒருவன் மிக அழகாகப் பாடியபடியே பிச்சை கேட்டு வந்து கொண்டிருந்தான்.
“ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே” பாட்டு சரனைத் தாளம் போட வைத்தது.
‘நல்லாத்தானே இருக்கான்… ஒழைச்சு பொழைச்சா என்ன?’ என்று சிலர் முணுமுணுக்க, சிலர் நாணயங்களைப் போட்டுவிட்டு ஒதுங்க, அவன் சரனை நெருங்கினான்.
எதுவுமே பேசாமல் தன் பையிருந்து நூறு ரூபாய் நோட்டை இளைஞன் கைகளில் திணிக்க, அவன் இவனை ஆச்சரியமாகப் பார்த்தான்.
மற்றவர்களோ இவனை ஏதோ பயித்தியக்காரனைப் போல் பார்த்தார்கள்.
சரன் மனசுக்குள் நினைத்துக் கொண்டான்.
‘பிரபலமாகாததால் எல்லாரும் என்னைப் பயித்தியக்காரனைப் போல் பார்க்கிறார்கள். ஒரு மாதம் முன்பு நானும் இப்படித்தான் வேறு ரயிலில் பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன். என் குரலை ரசித்த அந்த இசையமைப்பாளர், எனக்கு பின்னணி பாட வாய்ப்புக் கொடுத்தார். இன்று வயிறார சாப்பிடுகிறேன். இவனுக்கு என்னால் வாய்ப்புக் கொடுக்க முடியாவிட்டாலும், ஒரு நாள் சாப்பாட்டுக்கு வழி பண்ண முடிந்ததே என்ற திருப்தி போதும்!’ என்று நினைத்துக் கொண்டான்.
– குமுதம், 26-10-2011.