பஸ்ஸில் ஒரு குழந்தை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 18, 2025
பார்வையிட்டோர்: 263 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நல்ல பசிவேளை. மூக்கைப் பிடிக்கச் சப்பாத்தியோ அரிசிச் சோறோ உள்ளே தள்ளியிருந்தால், சுருட்டிப் பிடித்க் கொண்டிருந்த வயிறு மலர்ந்திருக்கும். அதற்கு வசதி இல்லை. இன்னும் ஏழு மைல் சாங்கத்தை அடைந்த பிற குதான் சாப்பாடு என்று ராம்குமார்ஜி தெரிவித்து விட்டார். அங்கேதான் பகல் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறதாம்.

பாசன வசதி எப்படி, விளைச்சல் எவ்வளவு, தலைக்கு என்ன வருமானம் வரும்-இது போன்ற சம்பிரதாயக் கேள் விகளை அரைகுறை ஹிந்தியில் அலுப்புடன் கேட்டு விட்டு, பதில்களை மறு காதால் விட்டு விட்டு, மூட்டை போல தலைப்பாகைகளுடன் இருந்த விவசாயிகளிடம் விடைபெற்றுக் கொண்டு, கொண்டு, வரப்புகளைத் தாண்டிச் சாலைக்கு வந்தோம். கண்ணெதிரில் பூச்சி பறக்கிறாற் போல் வெயில் மினுமினுத்தது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்த அந்தப் பழைய மாடல் பஸ்ஸைக் கண்டதும் எங்கள் உற்சாகம் இன்னும் ஒருபடி இறங்கிற்று. ஒரே குண்டும் குழியுமான சாலையில் செம்மண் கண்ணை உறுத்தியது.

ஹுப்ளிக்காரரான ஆச்சாரியா, இருபத்தைந்து முத்திரை களுடன் வடஇந்தியாவின் பலதரப்பட்ட தபால் ஆபீசு களைத் தரிசித்து விட்டு வந்து சேர்ந்திருந்த ஒரு கடிதத் தைப் படிப்பதில் முனைந்திருந்தார். கேரளத்துக் கிருஷ்ண பிள்ளை வழக்கம் போல் சிகரெட் யாசித்துக் கொண்டிருந் தார் ஒவ்வொருவரிடமாக.

பிரம்மச்சாரியும் கர்னூல்காரருமான கங்கய்யா, ‘ராஜஸ் தானத்துப் பெண்கள் என்றால் அப்படி இப்படி என்று கற் பனை பண்ணியிருந்தேன். சாதாரணம், சாதாரணம்” என்று முணுமுணுத்தவாறு பஸ்ஸில் உட்கார்ந்திருந்தார்.

“புறப்படலாமே?” என்றார் இஸ்மாயில். பெங்களூரி லிருந்து வெளியாகும் தினசரி ஒன்றின் ஆசிரியர் இவர்.

பஸ் டிரைவர் அந்தச் சமயம் பார்த்து, கையில் ஒரு சிறு பெட்ரோல் டின்னைக் தூக்கிக் கொண்டு யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் கிராமத்தை நோக்கி நடந்தார். மாபெரும் இந்திய அரசாங்கச் செய்தி இலாகா உதவி யாளரான ராம்குமார்ஜியால் கூட அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. “பெட்ரோல் வாங்கி வரப் போகிறான் போலும்” என்றார்.

“பெட்ரோலா? அட! இந்தியப் பஸ் பெட்ரோலிலா ஓடுகிறது! ஆச்சரியம். காற்றிலே ஓடும் என்றல்லவா நினைத்திருந்தேன்!” என்று கிண்டலுடன் வியந்தார் கிருஷ்ணபிள்ளை.

அந்தச் சமயத்தில் அந்த இனிமையான தேனில் தோய்த்த பலாச் சுளையான குரல் கேட்டது.

“பாபுஜி, இந்த பஸ் தீவாராவுக்குப் போகிறதா?”

பெண் குரல் என்று உணர்ந்ததுமே எல்லா முகங்களும் திரும்பின. ஆனால் பருவப் பெண் அல்ல. எட்டு வயதிருக் கும் அந்தச் சிறுமிக்கு. தமிழ்நாட்டுக் குழந்தை போல, பாவாடை சொக்காய்தான் அணிந்திருந்தாள். கையிலே ஒரு துணிப்பை இருந்தது. காதிலே ஒரு பெரிய வளையம் சிவப் பாய், பூரண சந்திரன் போல இருந்தது. நெற்றியில் பளிச் சென்ற குங்குமம், சுருள் சுருளான தலை மயிரை என்னவோ ஒரு தினுசாய்ப் பின்னிக் கொண்டிருந்தாள்.

எங்கள் குழுவில் இந்தி அறிந்தவர்கள் இரண்டொரு வரே உண்டு. சிறுமியைக் கண்டதும், அவர்கள் மகிழ்ச்சியுடன், “ஆமாம் பாப்பா! தீவாராதான் போகிறோம். என்ன வேணும்?” என்று வினவினார்கள்.

”எனக்கு அங்கே போக வேண்டும். இந்தப் பஸ்ஸிலே ஏறிக்கலாமா? வழக்கமான பஸ் போய் விட்டது. பள்ளிக்கூடம் போகணும் நான். தீவாராவிலேதான் என் பள்ளிக்கூடம் இருக்கிறது” என்றாள் கிடுகிடுவென்று.

”ஒ, ஓ!” என்று உற்சாகமாக அனைவரும் அவளை வரவேற்றோம். ”ஏறு! ஏறு! இப்படி வா பாப்பா! என் பக்கத்துக்கு வா!” என்று பல குரல்கள் கிளம்பின ஒரே சமயத்தில்.

இந்த உற்சாகத்துக்குக் காரணம் சொல்லத் தேவை யில்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாகிறது, நாங்கள் ஊரை விட்டு வந்து. ராஜஸ்தான் அரசின் சுற்றுலாத் துறை அழைப்பில் நாங்கள் வந்திருந்தோம். ஊர் சுற்றலும் ஓட்டல் சாப்பாடும் போதும் போதுமென்றிருந்த நிலையில், எல்லோரும் தங்கள் தங்கள் குடும்பத்தைப் பற்றி ஏக்கத்தில் மூழ்கிக் கிடந்தோம். ஆளில்லாத தீவிலே சிக்கியவனுக்குத் தோழன் கிடைத்தால், எத்தனை ஆனந்தம் ஏற்படுமோ அப்படி இருந்தது எங்களுக்கு. இந்த ராஜஸ்தானத்துச் சின்னக் குழந்தை ஒவ்வொருவருடைய மகளையும் நினைவுபடுத்தி விட்டாள்.

அந்தப் பெண், பையை லாகவமாகத் தோளில் சாத்திக் கொண்டு, புன்சிரிப்புடன் எங்கள் பஸ்ஸில் கால் வைத்தாள்.

“என்ன இது நான்சென்ஸ்!” என்று மரத்தின் மறைவுக்குச் சென்றிருந்த ராம்குமார்ஜி பதறியோடி வந்தார். “ஏ பொண்ணு! இறங்கு, இறங்கு! இது பாசஞ்சர் பஸ் இல்லை! ஸ்பெஷல்” என்று இரைந்தார்.

கங்கய்யா, “மிஸ்டர் ராம்குமார்ஜி, பரவாயில்லை. சின்னக் குழந்தை படிப்புக்காக மெனக்கெட்டு அத்தனை தூரம் நடக்க வேண்டுமா?” என்று வந்தார்.

”ஆமாம். ஆமாம்! சிறுமியை விட்டு விடுங்கள்! நீ வா பாப்பா!” என்று எல்லோரும் கோஷமிட்டோம்.

“நண்பர்களே!” என்று உரத்த குரலில் கையமர்த்தினார் ராம்குமார்ஜி. “பத்திரிகையாளர்களுக்காகச் சர்க்காரால் தரப்பட்ட ஸ்பெஷல் பஸ் இது. இதிலே ஒரு தனிப்பட்ட பிரயாணியை ஏற்றுவது முறையற்ற காரியம் அல்ல. நான் அனுமதிக்க முடியாது.”

கேரளத்துக் கிருஷ்ண பிள்ளைக்குக் கோபம் வந்து விட் டது. அவர் ஒரு கம்யூனிஸ்ட் பத்திரிகையின் பிரதிநிதி கூட. “சரி. இது எங்களுக்காக ஏற்படுத்திய பஸ்தானே! எங்கள் மூட்டை முடிச்சை ஏற்றிக் கொள்ள வேண்டியதுதானே? இந்தப் பெண் எங்கள் மூட்டை முடிச்சு!” என்று வினோதமாக விவாதித்தார்.

“தயவு பண்ணி, சொன்னால் கேளுங்கள்” என்று எளிய பள்ளி ஆசிரியரைப் போல கெஞ்சினார் ராம்குமார்ஜி.

“அச்சா!” என்று திடீரென்று இஸ்மாயில் கூவியதும், எங்கள் கவனம் பின்புறம் திரும்பியது. அந்தச் சிறுமியை உடனே மறந்து விட்டார்கள் எல்லோரும்.

எங்கள் கேள்விகளுக்குப் பொறுமையாக விடை அளித்து வந்த தலைப்பாகை விவசாயிகளில் ஒருவர், ஒரு அகலமான பிரம்புத் தட்டில் பத்துப் பதினைந்து கண்ணாடி டம்ளர்களில் ஏதோ பானம் கொண்டு வந்திருந்தார்.

கருப்பஞ்சாறு!

இந்த வெயில் வேளைக்கு எத்தனை இதமாயிருந்தது அது!

அவரது இன்னொரு கையில், பூ வேலைகள் செய்த பித்தளை ஜாடி நிறையச் சாறு இருக்கவே, வயிறு முட்ட முட்ட வாங்கிக் குடித்தோம். கரும்புத் துண்டுகள் வேறு கொண்டு வந்திருந்தார். பஸ்ஸிலேயே கடித்துத் துப்பினோம்.

டிரைவரும் வந்து சேரவே ஒரு வழியாக பஸ் புறப்பட்டது. கிருஷ்ணபிள்ளை உற்சாகத்துடன் ஒரு மலையாளப் பாட்டை எடுத்து விட்டார். இஸ்மாயில் உருதுக் கவிதையொன்றைப் படிக்கவே ‘முஷைரா’ என்ற நினைப்பில் வாஹ்வா,வாஹ்வா! என்று நாங்கள் தலையாட்டினோம். கங்கய்யா பாடவில்லை – பயமுறுத்தினார்.

இத்தனைக்கு நடுவே திடீரென “ஒரு பாட்டுப் பாடு பாப்பா!” என்றார் ஹூப்ளி ஆச்சாரியா.

“வாட்!” என்று ராம்குமார்ஜி அதிர்ச்சியுற, நாங்கள் திகைக்க, கோணல்மாணலான ஆசனங்களின் இடையிலிருந்து வெளிப்பட்டாள் அந்தச் சிறுமி.

ராம்குமார்ஜியின் இளமீசை சீற்றத்துடன் துடித்தது. ”ஏ பெண்ணே! இதிலே ஏறாதே என்று அவ்வளவு தூரம் சொன்னேனே, எப்படி ஏறினாய்?” என்று கர்ஜித்தார்.

பரிதாபத்துடன் ஆச்சாரியாவின் முகத்தைப் பார்த்தாள்.

“நான்தான் அழைத்துக் கொண்டேன் ராம்குமார்” என்றார் ஆச்சாரியா. ஏனோ அவர் குரல் கம்மியிருந்தது. ”ஊரிலே என் பெண்ணுக்கு உடம்பு சரியில்லை என்று இன்று கடிதம் வந்திருந்தது. இதே வயதுதான் இருக்கும். என்னவோ இந்தப் பெண்ணை என் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. செய்து விட்டேன். என்னை மன்னியுங்கள்” என்றார்.

ராம்குமார்ஜியால் ஒன்றும் பேச முடியவில்லை. அவரும் குடும்பத்தை விட்டுப் பிரிந்து ஒன்றரை மாதம் ஆகிறது.

‘பாப்பா’ பாடவில்லை. ஆனால் நிமிர்ந்து தைரியமாய் உட்கார்ந்து கொண்டாள்.

”உன் பேரென்ன?” என்று இஸ்மாயில் விசாரித்தார்.

“பிரதிமா” என்றாள் குழந்தை.

”உன் அப்பா என்ன பண்ணுகிறார்?” என்று கேட்டவர் கங்கய்யா.

“மாதாபூரில் ஸ்டேஷன் மாஸ்டர்” என்று பதில் கிடைத்தது. மாதாபூர்தான் நாங்கள் கருப்பஞ்சாறு குடித்து விட்டுக் கிளம்பிய ஊர்.

”உங்கள் ஊரிலே பள்ளிக்கூடமே கிடையாதா?”

“ஊஹூம்.”

‘தினம் இவ்வளவு தூரமா வருகிறாய் படிக்க?” இஸ்மாயில் கொதித்தார்.

”ஆமாம்.”

“என்ன அக்கிரமம்! ராஜஸ்தானில் கல்வி மகா மட்டம் என்று சொல்வார்கள்! உண்மைதான்!” என்று இஸ்மாயில் முணுமுணுத்தார். தமது தினசரியில் ஒரு தலையங்கம் எழுதுகிற அளவுக்கு அவரிடம் சினம் ஏற்பட்டிருந்தது.

இப்போது ஆச்சாரியா அந்தக் குழந்தையைத் தன் மடியில் உட்கார வைத்திருந்தார். பஸ்ஸில் மற்ற ஆசனங்களில் உட்கார்ந்திருந்தோரும் நடுப்புறத்துக்கு நகர்ந்து வந்து, சிறுமியைச் சூழ்ந்து கொண்டார்கள்.

”உனக்கு அண்ணன் – தங்கை இருக்கிறார்களா?”

“ஒரு அக்கா மட்டும்தான்”

“எத்தனை வயது?” என்று பிரம்மச்சாரி கங்கையா படக் ஜென்று வினவினார்.

”முப்பது” என்று அவள் பதில் அளித்ததும் அவருடைய ஆர்வம் மடக்கென்று முறிந்துவிட்டது.

கிருஷ்ண பிள்ளை மெதுவாக அவளைத் தன் மடிக்கு மாற்றிக் கொண்டார். பிறகு ஒவ்வொருவரும் சிறிது நேரம் தங்கள் தங்கள் மடியில் அவளை உட்கார வைத்துக் கொண்டு தங்கள் தங்கள் குழந்தைகளை நினைத்துக் கொண்டோம்.

ஆலை முதலாளிகளையும், வயல் விவசாயிகளையும், சுரங்கத் தொழிலாளர்களையும் பேட்டி கண்டு கேள்வி கேட்டு அலுத்திருந்த நாங்கள், அந்த எட்டு வயதுச் சிறுமியிடம் அலுக்காமல் வினா மேல் வினாவாகத் தொடுத்து, அவள் தரும் பதிலைக் கேட்டு இன்புற்றோம்.

மிகக் கருமி, மகா உம்மணாமூஞ்சி என்று பெயர் வாங்கியிருந்த கிருஷ்ணசந்தர் கூட, தனது தோல் பையைத் திறந்து தனக்காக ஒளித்து வைத்திருந்த பிஸ்கெட்டில் பாதியை ஒடித்து அந்தக் குழந்தையிடம் முழு மனதுடன் கொடுத்து ஆனந்தப்பட்டார்.

பன்னிரண்டு மணிக்கு, தீவாராவில் புழுதியை இரைத்துக் கொண்டு பஸ் நின்றது.

“போய் வா, கண்ணு!” என்று ஆளுக்கொரு தட்டு அவள் முதுகில் செல்லமாகத் தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தோம். மனமில்லாமல், அவள் சிட்டாய்ப் பறந்தாள்.

அப்போதுதான், ஆசனத்திலிருந்து இறங்கி வந்த டிரைவர், “அந்தப் பெண் நம் பஸ்ஸிலா வந்தது?” என்று கேட்டார். அவர் தூங்கிக் கொண்டே பஸ் ஓட்டுகிறார் என்று இஸ்மாயில் சுமத்தி வந்த குற்றசாட்டு இப்போது நிரூபண மாகி விட்டது.

”ஆமாம்! பாவம்! மாதாபூரில் பள்ளிக்கூடம் இல்லாமல் இங்கே வந்து படிக்கிறாளாம்” என்று கங்கய்யா கூறினார்.

“மாதாபூரில் பள்ளிக்கூடம் இல்லையா? யார் சொன்னது! பதினைந்து இருக்கிறது” என்றார் டிரைவர்.

நாங்கள் விழித்தோம்.

“அது இங்கே சுரங்கத் தொழிலாளி ஒருவனின் பெண். தினம் சாப்பாடு எடுத்து வரும். உங்களைப் போல யாராவது இரக்கப்பட்டால், பஸ்ஸிலோ வண்டியிலோ ஏற்றிக் கொள்வார்கள். பொய் பிரமாதமாய்ச் சொல்லும். அடே யம்மா!” என்று கூறிவிட்டு டிரைவர் டின்னைத் தூக்கிக் கொண்டு சென்றார்.

“எனக்கு அப்போதே சந்தேகம்தான்” என்றார் கிருஷ்ணபிள்ளை.

“இன்னொரு தரம் அதன் முகத்தைப் பார்த்தால் விடுகிறேன் பாருங்கள் ஒரே குத்து!” என்று முழங்கினார் கங்கய்யா.

ராம்குமார்ஜி கபகபவென்று சிரித்தாரே தவிர எதுவும் சொல்லவில்லை.

சுரங்கத்தைப் பார்க்கப் புறப்பட்டபோது, எங்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்தது. பயணம் அருமையாய் அமைந்து விட்டதில் எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி. பிற்பகல் நாலு மணிக்கு தீவாராவிலிருந்து திரும்பினோம்.

பஸ் புறப்படுகிற சமயம், அந்தப் பெண் ஓடி வந்தாள், ”பாபுஜி! பாபுஜி!” என்று!

பல்லைக் கடிக்க முயன்றோம். பால் வடியும் அந்த முகத்தைப் பார்த்தால் அது முடியவில்லை.

”பள்ளிக்கூடம் விட்டாகி விட்டது. உங்கள் பஸ்ஸிலேயே வருகிறேன்” என்று கூறிவிட்டு, எங்கள் அனுமதிக்காக காத்திராமல் ஏறி உட்கார்ந்து கொண்டாள் எங்கள் நடுவில்.

மௌனம் ஒரு நிமிடம்தான்.

“பள்ளிக்கூடத்திலே இன்றைக்கு என்ன சொல்லிக் கொடுத்தார்கள்” என்று ஹூப்ளி ஆச்சாரியா வினவினார். அவள் பொருத்தமாய்ப் புளுகத் தொடங்கினாள்.

நாங்கள் அடுத்தடுத்துக் கேள்வியுடன் பேச்சுக்களைத் தொடர்ந்தோம். அந்த பொய்யான கனவு எங்களுக்கு போதையாய் இருந்தது.

– குடும்பக் கதைகள், முதற் பதிப்பு: 2007, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *