பழிச்சொல் – ஒரு பக்க கதை





கணேஷ் தனது அப்பா இறந்த ஏழாவது நாள் விசேஷத்திற்காக பெங்களூரிலிருந்து திசையன்விளை வந்திருந்தான். தங்கை கனியின் சிறிய வீட்டில் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கணேஷ் தனது சித்தப்பா மாரிமுத்துவைப் பார்த்து, “தங்கையின் வீடு சிறியது. பக்கத்தில் உள்ள என் வீடு பெரியதாகவும், வீட்டை ஒட்டி காலிமனை வேறு இருப்பதால் அதில் ஷாமியாணா போட்டு சாப்பாடு வைக்க வசதியாக இருக்கும்’ என்று யோசனை தெரிவித்தான்.
“நீ சொல்றது சரிதான். ஆனால், வயசான உன் அப்பாவை நீ வந்து போய் பார்க்கல. சரியா கவனிக்கல.
“அப்பா உயிரோடு இருக்கும்போது பார்க்காத பையன், அவர் இறந்தபிறகு தடபுடலா சாப்பாடு போட வந்துட்டான்’னு ஊர் உன்னைப் பழிக்கும்’ என்றார் சித்தப்பா மாரிமுத்து.
குற்ற உணர்ச்சியில் தலை கவிழ்ந்தான் கணேஷ்.
– எஸ். முகம்மது யூசுப் (ஜூன் 2011)