பழக்க தோஷம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 30, 2025
பார்வையிட்டோர்: 1,711 
 
 

பக்கத்து வீட்டிற்கு புதிதாக குடிவந்து ஒரு மாதமாக தோழி போல் பழகிய ரமாவின் மகள் திருமணத்திற்கு திருச்சிக்கு நேரில் சென்று பரிசு கொடுத்து வாழ்த்த வேண்டுமென கணவனிடம் பிடிவாதமாகக் கூறினாள் உமா.

“பக்கத்து வீட்டுக்கு பல பேர் குடி வருவாங்க, போவாங்க. ஒரு மாதப் பழக்கத்துக்கெல்லாம் கோயம்புத்தூரிலிருந்து திருச்சிக்கு செலவு பண்ணிட்டு போறது சாத்தியமில்லை. ஒரு நாள் ஆபீஸ்ல நான் லீவு கேட்கனம். குழந்தைங்களை உன்னோட அம்மா வீட்டிலியோ, என்னோட அம்மா வீட்டிலியோ விடோணும். இல்லேன்னா வயசானவங்களை சிரமப்பட்டு நம் வீட்டுக்கு கூட்டிகிட்டு வரோணும். குறைஞ்சது அஞ்சாயிரமாவது செலவாயிடும். அவங்க நமக்காக இந்த ஊர்ல கல்யாணத்த நடத்துவாங்களா? இங்க வந்ததுக்கப்புறம் வர முடியாததுக்கு  ஒரு பொய்யை காரணமா சொல்லிட்டு போக்கு வரத்துக்கு செலவாகிற பணத்துக்கு ஒரு கிப்ட் வாங்கி குடுத்து வாழ்த்திட்டாப்போச்சு. அடுத்தவங்கள கெடுக்கிறதுக்கு பொய் சொல்லக்கூடாது. நம்மள காப்பாத்திக்கிறதுக்கு ஒரு பொய் சொல்லறதுல தப்பில்லைன்னு நெனைக்கிறேன். நல்லா யோசன பண்ணிப்பார்” கணவனது பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாதவளாக கவலையில் ஆழ்ந்தாள் உமா.

“உங்களைக் கல்யாணம் பண்ணி நான் என்ன சொகத்தக் கண்டேன். ஆபீஸ் வேலை, வீட்டு வேலை, குழந்தைகளை பெத்துக்கிறது, சொந்த பந்தத்துக்கு லீவு நாள்ல சமைச்சுப்போடறது. இதத்தவிர என்னோட விருப்பத்துக்கு எங்காவது போயிருக்கிறேனா…? ஒரு வாரம் தொடர்ந்து லீவு எடுத்திருக்கிறேனா…? என்னோட பாட்டி போனதுக்கே மூணு நாள் தான் லீவு போட்டேன்…. நீங்க மட்டும் பிரண்ட்ஸோட சேர்ந்துட்டு எங்காவது போயி கூத்தடிச்சிட்டு வர்றீங்க…” சொன்னவள் பெட்டில் போய் படுத்து கண்ணீர் வடித்தாள்.

“நான் போனது ஆபீஸ் பிரண்ஸோட மட்டும் தான். அவங்க என் கூட வேலை செய்யறவங்க. அவங்களோட நல்ல பாண்டிங்ல இருந்தாத்தான் எனக்கு வொர்க் அதிகமா வரும்போது ஹெல்ப் பண்ணுவாங்க. பக்கத்து வீட்ல இன்னைக்கு வாடகைக்கு இருக்கிறவங்க, அதுவும் வெளியூர் காரங்க இன்னைக்கு இருப்பாங்க, நாளைக்கு போயிருவாங்க….” அருகிலமர்ந்து அணுசரணையாகப் பேசினான் உமாவின் கணவன் கௌதமன்.

“ரமா எப்புடி கூப்பிட்டா தெரியுமா…? உங்க தங்கச்சி கூட அப்படி கூப்பிடலை…. ‘உமா நீதான் என்னோட பெஸ்ட் ஃபிரண்ட். இந்த உலகத்துலயே நீதான் நம்பிக்கைக்கு உரியவள். என்னோட சொந்தக்காரங்கள கூட என்னால நம்ப முடியல உன்னோட அளவுக்கு. அதனால மூணு நாள் முன்னாடியே வந்திடு. கல்யாணத்துக்கப்புறம் மூணு நாள் இருந்து விருந்து சாப்பிடறதோட மணப்பொண்ணோட ரூம் சாவியே உன் கிட்டக் கொடுக்கப் போறேன்’ னு சொல்லிட்டாளுங்க” என கூறி “ஓ…. “வென அழ ஆரம்பித்து விட கௌதமனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பதிலாக கோபமாக வந்தது.

“ஏண்டி வயசு வளர்ந்த அளவுக்கு உனக்கு அறிவு வளர்ந்திருக்கா….? அவ உன்ன பெஸ்ட் பிரண்டா நெனைக்கல. பெஸ்ட் சர்வண்டா நெனைச்சிருக்கா. கல்யாணத்துல யாரும் அவங்க பொருள எடுக்காம பார்த்துக்கிற செக்யூரிட்டியா உன்ன மாத்தப்போறா…?”

“அப்படியா….?” வெகுளியாகக்கேட்டாள்.

“அப்புறம் என்னவாம். கல்யாணத்துக்கு முன்ன மூணு நாளு, பின்ன மூணு நாளு இந்தக் காலத்துல யாரு இருப்பா? உன்னோட நகையக்கூட கேட்டிருப்பாளே….?”

“ஆமாங்க. நீ ரொம்ப ராசியானவ. அதே மாதிரி உன்னோட நகையும் ராசி. உன்னோட நகையோட எம் பொண்ணுக்கு கல்யாணம் நடந்தா அவ தீர்க்க சுமங்கலியா இருப்பான்னு சொன்னாங்க. அப்புறம் ஒரு வாரத்துக்கு நம்ம காரக்கொடுத்தா பெட்ரோல் அவங்களே போட்டுக்கிறாங்களாமா. டிரைவர் சம்பளமும் அவங்களே கொடுத்து என்னை கூட்டிட்டு போறாங்களாமா? நீங்க ரிசப்ஷனுக்கு மட்டும் வந்திட்டு போகட்டும்னு சொன்னா…”

“சூப்பர். அப்படியே நம்ம காருக்கு இன்சூன்ஸூம், டியூவும் கட்டிடடச்சொல்லிடு. இப்பத்த கண்டிசன்ல பத்து லட்சத்துக்கு போகும் அதையும் கொடுத்திடச் சொல்லிடு….”

“என்னங்க இப்படிச்சொல்லறீங்க…? பிரண்டுன்னு கூப்பிட்டா இப்படியா பேசுவாங்க? நீங்க வர, வர ரொம்பம்மே மோசமாயிட்டு வர்றீங்க” திரும்பவும் அழுதாள்.

மனைவியை புரிய வைக்க முடியாமல் அவளது விருப்பத்துக்கு ஒத்துக்கொண்டு காரோடு, நகையோடு, சற்று உள் மன பயத்தோடு திருமணத்துக்கு அனுப்பி வைத்தான்.

ரிசப்சனுக்கு பேருந்தில் பயணம் செய்து சென்ற போது திருமண மண்டபத்தில் தனது மனைவி ஓடியாடி வேலைகளை செய்வதும், பலரும் அவளுடன் பல நாட்கள் பழக்கப்பட்டவர்களைப்போல சிரித்துப்பேசுவதும் கௌதமனுக்கு பிடிக்கவில்லை. மனைவி உமா மற்றவர்களுடன் பேசும் அளவிற்கு கூட தன்னுடன் பேச நேரம் ஒதுக்காதது கண்டு அதிர்ச்சியடைந்தான். 

‘நம்முடனான குடும்ப வாழ்க்கையை விட இங்கே குதூலகமாக இருக்கிறாள். இங்கு வந்ததிலிருந்து தானாக போன் செய்து பேசவில்லை. நாம் அழைத்தால் மட்டும் சில வார்த்தைகளில் கட் பண்ணி விடுகிறாள். சரி ஒரு வாரம் தானே இருந்து விட்டுப்போகட்டும். வேறு வகையான பிரச்சினைகள் வராமல் இருந்தால் சரி’ என நினைத்தவாறு ஊர் திரும்பினான்.

இரண்டு நாட்களுக்கு பின் திருச்சியிலிருந்து மனைவி காரில் திரும்பும் போது கரூர் ஃபைபாஸில் விபத்து ஏற்பட்டதாகவும், அடிபட்டதால் உமா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் போன் வர பதறியடித்து வாடகை டாக்ஸி எடுத்துக் கொண்டு சென்றவனைப் பார்த்ததும், ஒரு கால் முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்த நிலையில்’ என்னை மன்னிச்சிடுங்க’ என கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.

கோபத்தை அடக்கிக்கொண்டு மனைவிக்கு ஆறுதல் சொன்ன கௌதமன் “காரு வேலைக்கு ஆகாது. காயிலான் கடைக்குத்தான் போடோணும். நீ தப்பிச்சது அதிசயம். ஆமா ரமாவுக்கு விபத்து நடந்தது தெரியாதா….?” எனக்கேட்டான்.

“ஆக்ஸிடென்ட் நடந்ததும் அவளுக்குத்தாங்க முதல்ல போன் போட்டேன். சுவிட்ச் ஆப்னு வந்துச்சு. அப்புறம் மயக்கமாயிட்டேன். டிரைவர் தான் உங்களுக்கு சொல்லியிருக்கான்” என்றாள்.

யோசித்த கௌதமன் உடன் வந்திருந்த நண்பணின் போனிலிருந்து போன் செய்ய ரமா பேசினாள்.

“ஏங்க உமா விபத்துல சிக்கிட்டா தெரியுமா…?”

“ஐயோ…. அப்படியா? தெரியலையே… அவ தப்பிச்சிட்டாளா….?” ரமா பதட்டமில்லாமல் தெரிந்தும் தெரியாதது போல் பொய் பேசினாள்.

“ஒரு கால் அடிபட்டதுல எலும்பு ஒடைஞ்சதால இப்ப ஆபரேஷன் பண்ணியிருக்கு. உசுருக்கு ஆபத்தில்லை…”

“நாங்குப்பிட்ட கடவுள் தான் காப்பாத்தி இருக்கும்.”

“அது சரி. உமா கொடுத்த ஐம்பது பவுன் நகைய நீங்க இப்ப கொண்டு வந்து கொடுக்க முடியுமா?”

“என்னங்க சொல்லறீங்க….? நகைய உமாகிட்ட அப்பவே கொடுத்து விட்டுட்டேனே….” லௌடு ஸ்பீக்கரில் கேட்ட உமாவுக்கு மயக்கமே வரும் போல் இருந்தது. கோபமும் தலைக்கேறியது.

“ஏய்… நீ எங்கடி கொடுத்தே…? அடுத்த வாரம் ஊருக்கு வரும் போது கொண்டு வந்து கொடுக்கறேன்னு நீதானடி சொன்னே….?” கோபமாகப் பேசினாள் உமா.

“விபத்துல நீ மயங்கியிருப்பே. அதப்பார்க்க கூடின கூட்டத்துல யாராவது நகை இருந்த பேக்க எடுத்துட்டு ஓடியிருப்பாங்க. டிரைவர் பையன் என்னோட சொந்தக்காரன். அவன் எடுத்திருக்க மாட்டான். தலைய ஸ்கேன் பண்ணச் சொல்லு. தலைல உனக்கு அடி பட்டிருக்கும். அதுதான் நகைய வாங்கீட்டு இப்ப வாங்கலேன்னு சொல்லறே. நீ கண்டிப்பா பொய் சொல்ல மாட்டே..‌. ஏன்னா ஒரு மாசமா பக்கத்துல இருந்து உன்கூட பழகியிருக்கேனே….” இதைக்கேட்ட உமாவுக்கு தலையே வெடித்து விடும் போல் இருந்தது.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *