பலம்
(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘றக்கை ஒடிஞ்ச பறவைமாதிரி ஆயிட்டோம்’ என்று தோன்றி விட்டது திருமான் ஆள்வார் நாயுண்டு காருவுக்கு. ‘என்ன அநியாயம்டா; எவனும் நம்மை தூக்கிப்போட்டு மிதிச்சாலுங்கூட அவனுக்குக் கொடுக்கிறதுக்கு முக்காத்துட்டு கையிலே இல்லையே’ என்று புழுங்கினார்.
ரூபா பத்துக்குக் குறையாமல் எந்நேரமும் ‘மடியில் கனம்’ இருக்குமே; எப்படி இப்படி ‘வெங்கம் பயலாகிவிட்டோம்’ என்று தவித்துப்போனார் மனுசன்.
ஒரு செலவும் இருக்காது; என்றாலும், வெளியூர் முதலிய இடங்களுக்கு மடிநிறைய கட்டிக்கொண்டுதான் புறப்படுவார்.
ஒரு தலைவலி மாத்திரை வாங்க கடைக்குப் போனால்கூட கொஞ்சம் நோட்டுக்கற்றை, நாணயச் சில்லறை என்று எடுத்துக் கொள்வார். இப்பொ என்னடா என்றால் வட்டியும் முதலுமாகத் திண்டாட்டம் வந்துட்டதே.
வெளியே இதைச் சொல்லமுடியுமா? ஆள்வார் நாயுண்டு வெறுங்கையோடு நடந்து வருகிறார் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?
அய்யோ; இந்நேரம் பார்த்து ஒத்தை ரூபாய் கைமாத்து வேணுமே என்று எவனும் வந்து நின்றுவிட்டால் நம்ம ‘கவுரதை’ என்ன ஆகிறது; கடவுளே.
இந்த நன்கொடை வசூல் பண்ணுகிற பய புள்ளைகளுக்கு எப்படித்தான் மூக்கிலே வேர்க்குமோ. துட்டு இல்லாத நேரமாப் பாத்து தான் வந்து நிப்பானுவ துருப்பிடிச்ச பயலுக.
கையிலெ பசை இருக்கிற சமயத்திலெ வரும் நன்கொடைகாரர் களுக்கு ஒரு ரூபாய் கொடுக்கவேண்டியதுக்கு ரெண்டு ரூபா கூட கொடுத்து அனுப்பியதும் உண்டும்.
இந்த துட்டு இருக்கே அது மனுசனை ரொம்ப வேடிக்கை பண்ணுதப்பா; சை.
உள்ளுக்குள் திரும்பி, “மணி” என்று கூப்பிட்டார் பெண்டாட்டியை,
அந்தக் கூப்பிடுதலில் பழைய கணீர் இல்லை.
சோர்ந்துபோன ஒரு நீர்யானைமாதிரி அந்த அம்மாள் கழுத்துப் பிடிக்காத நகைகள் ஆடி அசைய வந்துநின்று “கூப்பிட்டீங்களா” என்று கரகரத்த குரலில் கேட்டுவிட்டு நாக்கை நீட்டிச் செல்லமாக ஒரு தொரத்தல் (இருமல்) தொரத்தினாள்.
அவளைப் பார்த்ததுமே அந்த விநாடியில் அவருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டது.
“ஆமா.. இந்த விரிசம்பய நேத்தே பாக்கி ரூபா கொண்ணாந்து கொடுக்கிறதா சொல்லீட்டுப் போனானே; கொடுக்கல பாத்தியா”
“அதுக்கென்ன இப்போ; கொண்டாராமலயா போயிருவான்”
நாயுண்டுவுக்கு மேல்க்கொண்டு பேசத் தோணலை.
அவருக்கு இப்போது ஒரு செலவும் இல்லை. சும்மாதான் வெளியே அப்படிக் கொஞ்சம் லாத்தலாய் நடந்து போய்விட்டு வரணும். வீசிக்கொண்டு ஆனால் ஒருநாளும் இப்படி வெறுங்கையை போனதில்லையே!
மேல்த்துண்டு எவ்வளவு அவசியமோ வெளியே போகும்போது அவ்வளவு அவசியம், கொஞ்சம் பணம். அதுவும் ஒரு மேலாடை மாதிரிதான் அவருக்கு.
இவளிடம் கைமாத்தாக ஏதாவது இருக்குமா என்று கேட்கலாந் தான். பால் மோர் என்று விற்கிற பணம் இவள் நிர்வகிக்கும் “ஹோம் டிபார்ட்மெண்ட்”டில் கனத்த வருமானம்.
முதுகிலுள்ள பத்து ஊரல் எடுக்க, முதுகு சொரிந்துவிடும்படி கேட்டுக்கொண்டார் அவளை.
அவள் சொரிந்துவிடுகிற சீர் திருப்தியாக இல்லை.
கையைக் கடவுள் கொஞ்சம் நீளமாக முதுகுக்கு எட்டும்படி வாகாகப் படைத்திருக்கலாம். அவருக்குமாத்திரம் உள்ளது போக அதிகப்படி கைகள் – முதுகுசொரிய(!) – வசதியாக வைத்துக் கொண்டிருக்கிறார் கடவுள்.
முதுகு சொரிவதற்கென்றே பிளாஸ்டிக்கில் செய்த ஐந்து விரல்கள் கொண்ட நீளமான ஒரு பென்சில் வைத்திருக்கிறார். (மனுஷன் தந்திரக்காரன் !)
அந்தப் பென்சிலை எடுத்துக்கொண்டு வரும்படி அவளிடம் சொன்னார்.
அந்த அம்மாள் ஒரு கையில் பத்து சொரிகிற ஐந்து விரல்கள் கொண்டு நீளமான பென்சிலையும் மறுகையில் புத்தம்புதிய ஆரஞ்சுக் கலரில் ஒரு இருபது ரூபாய் நோட்டுமாக ஆடி அசைந்து வந்தாள்.
“ஏது ரூபா?” என்று கணீர்க்குரலில் கேட்டார்.
“விதை உளுந்து வித்தது”
கொண்டா, என்று பிடுங்காத குறையா வாங்கி வைத்துக் கொண்டார் மடியில்.
அவருக்கு முதுகு ஊரல் மறந்துபோய்விட்டது.
நோட்டை மடியில் கட்டிக்கொண்ட வினாடியே ஆரோக்கியமாக லேசாக இருப்பதுபோல் தெரிந்தது. எழுந்துநின்று விஸ்வரூபம் எடுக்கப் போகிற அனுமார்போல் நிமிர்ந்தார். மேல் அங்கவஸ்திரத்தை இழுத்து விட்டுக்கொண்டார்.
புதூப் பலம் கிடைத்தமாதரி இருந்தது.
இருபக்கமும் பார்த்து ஒயிலாக கையை வீசிக்கொண்டு யாரே எனக்கு நிகர் என்பதுபோல் நடந்துபோனார் வெளியெ.
– அலைஓசை, ஜனவரி 1980.
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க... |