பரிசு!





“கங்க்ராட்ஸ் புவனா !”
“என்ன விஷயம் ?”
“கை கொடு” மனைவி கைபற்றி வேகமாக குலுக்கினான் ராகவ்.
“எதுக்கு இந்த வாழ்த்து கை குலுக்கலெல்லாம்?”

“கள்ளி..உனக்குள்ள திறமையை எனக்குத் தெரியாம மறைச்சிட்டியே!”
புவனா நெற்றி சுருக்கினாள். புருஷனை விநோதமாகப் பார்த்தாள். “என்னன்ன மோ சொல்றீங்க! எனக்கு ஒரு மண்ணும் விளங்கல்ல.”
“அப்படியா! உன்னோட மொபைலை பார். அல்லி வார இதழ் ஆசிரியரிடமிருந்து ஒரு நல்ல செய்தி வந்திருக்கு!” புருஷன் தந்த மொபைலை வாங்கிப் பார்த்த புவனா அதில் வந்திருந்த குறுஞ்செய்தியைப் படித்தாள்.
படித்து முடித்தவளின் முகம் திடீரென இறுகிப் போய் கண்கள் கலங்கின. ராகவ் திடுக்கிட்டான். “மை காட்! நீ அல்லி வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு கதை அனுப்பி முதல் பரிசு ரூபா 5000 தட்டிச் சென்றிருக்கே..சந்தோஷப்படாம கண் கலங்குறே!”
“இல்லீங்க… அந்தப் பரிசை வாங்க எனக்கு யோக்யதை கிடையாது..ஏன்னா நான் எந்தக் கதையும் எழுதி எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பல்ல…”
“அப்படின்னா உன் மொபைல்ல வந்த எஸ்.எம்.எஸ். தவறுங்கிறயா?”
“இல்லை செய்தி உண்மைதான்..”
“அய்யோ ! எனக்கு மண்டையே வெடிச்சிடும்போல இருக்கு!” இரு கைகளால்
தன் தலையை சிலுப்பிக்கொண்டான் ராகவ்.
“விவரமா உங்களுக்குச் சொல்றேன். போட்டிக்கு கதை அனுப்பினது என்
தம்பி விவேக். ரெண்டு மாசம் முன்னால இங்க வந்திருந்த விவேக் தான் ஒரு
சிறுகதைப்போட்டிக்காக என் பெயரில் ஒரு கதை எழுதி அனுப்பப் போவதாக சொன்னான். நானும் சிரிச்சுக்கிட்டே சரின்னு சொன்னேன். அப்படியே என்னோட மொபைல் நம்பரையும் தந்திருக்கான். அதுதான் நடந்தது. இப்போ உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்!” மீண்டும் புவனா கண்களில் நீர் சுரந்தது.
கேட்ட ராகவுக்கு வேதனை பிடுங்கித் தின்றது..அவன் கண்களிலும் நீர் கசிய
ஆரம்பித்தது.
பதினைந்து நாள் முன்னால் டூ வீலர் விபத்து ஒன்றில் காலமாகிப் போன
விவேக் முகம் இருவர் நெஞ்சிலும் நிழலாடியது.
முகத்தைத் துடைத்துக்கொண்ட ராகவ் தன் தொண்டையைச் செருமிக் கொண்டான்.
“புறப்படு புவனா!”
“எங்கே?”
“அல்லிப் பத்திரிகை ஆஃபிஸூக்குப் போறோம். உண்மையைச் சொல்லிப்
பரிசை வேண்டாமுன்னு சொல்லிட்டு வரலாம்.”
கணவன் அருகில் வந்த புவனா ராகவ் தோளில் சாய்ந்துகொண்டாள்.
“யு ஆர் சிம்ப்ளி கிரேட்!”