பய புள்ள….!
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 11, 2019
பார்வையிட்டோர்: 5,748
‘அட்டையாய் ஒட்டி படுத்தி எடுக்கிற மனைவி அஞ்சு நிமிசம் பிரிஞ்சாலே அமிர்தம் ! அதுவே அஞ்சு நாள்ன்னா…..?!!’ எனக்குத் தலைகால் புரியவில்லை.
மாட்டாதவரை நானும் என் பொஞ்சாதியும்…ரெண்டு புள்ளைங்க பெத்தும் ரொம்ப அன்னியோன்யம். எசகுபிசகாய் ஒருநாள் வீட்ல அடுத்தத் தெரு நிர்மலாவோட இருக்கும்போது கையும் களவுமாய் என் மகராசிகிட்டே மாட்டினேன். அன்னையிலேர்ந்து எனக்கு அடுத்தத் தெரு வாசனையே அடிக்காத அளவுக்குக் கிடுக்கிப்பிடி, கெடுபிடி. ஒரு நாள் ரெண்டு நாளில்லே. ஒன்பது மாசம்;!
”எதுக்கு இப்போ புள்ளைங்களை அழைச்சிக்கிட்டு அண்ணன் வீட்டுக்கு அஞ்சு நாள் திடீர் பயணம் ? ” உள்ளுக்குள் எழும்பிய சந்தோசத்தை அடக்கி, முகத்தைச் சுருக்கி, ரொம்ப யோக்கியப் புருசனாய் அருகில் அமர்ந்து சேதி சொன்னவளைப் பார்த்தேன்.
”பார்த்து மாசக்கணக்காய் ஆச்சு. சேதி சொல்லிட்டேன். கிளம்பறேன்!” படக்கென்று எழுந்தாள்.
‘கிளம்பின பயணத்தைத் தடை போட முடியாது ! போடுறதும் தப்பு. எந்த பொண்டாட்டி புருசன் சொல் கேட்டாள்.!? அவளுங்க நெனைச்சது, வைச்சதுதான் சட்டம்.! அதிலும் இவள் கிளம்பிப் போறது எனக்கு ரொம்ப சவுகரியம்.!’ அதை வெளியில காட்டிக்காம….
”நீ இப்படி திடீர்ன்னு கிளம்பிப் போனா… நான் சோத்துக்கு என்ன செய்ய ? ” ரொம்ப அக்கரையாய் அனுசரணையாய் வார்த்தைகளை விட்டேன்.
”ஓட்டல்ல சாப்பிடுங்க.” கைகள் சூட்கேசில் துணிமணிகளை அடுக்க ஒருமாதிரிப் பார்வை பார்த்துச் சொன்னாள்.
”ரொம்ப நல்லது. நானும் வெளியில சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு.” எனக்கும் கிறுவித்தனம். அவளுக்குப் புரியாது நினைப்பில் என்று முணுமுணுத்தேன்.
”அந்த ஆசை வேணாம். நான் ஒன்னும் ஏமாளி இல்லே. அவ நேத்திக்கே கிளம்பி ஊருக்குப் போயிட்டாள். திரும்ப ரெண்டு வாரமாகும். அந்த சேதி தெரிஞ்சுதான் நானே புறப்படுறேன். ஒழுங்கு மரியாதையாய் வீட்டுல ஆக்கி சாப்பிடுங்க. தன் கையே தனக்கு உதவி. ஜாக்கிரதை!” கண்டிப்பு கறாராய்ச் சொல்லி, எச்சரிப்பு பார்வை விட்டு என் பிடறியில் அடிப்பதைப்போல் பொட்;டென்று அடித்து சூட்கேசை அழுத்திப் பூட்டினாள்.
‘பாவி! படுபாவி !’ எனக்குத் தலை கிர்ரடித்தது.