பம்பாயிலிருந்து வந்த பாப்பா




(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“ஸ்… அம்மா, மெதுவாய்! வலிக்கிறது, ஐயையோ! அழுத்தித் தேய்க்காதேயேன்!” என்று முரண்டினாள் வனஜா.

“சும்மா இரு, சரிதான்!” என்று மகளைக் கடிந்து கொண்டாள் கோமளம். ரவிக்கையை வலது தோள் பட்டை யருகே சிறிது இறக்கி, இரண்டு கையாலும் அழுத்தி உருவி விட்டுக் கொண்டிருந்தாள் அவள். அந்தப் பத்துக்கு எட்டு அறையெங்கும் யூகலிப்டஸ் தைலத்தின் நெடி நாசியைத் துளைத்துக் கொண்டிருந்தது. தையல் மெஷினுக்கு அருகே, வெட்டப்பட்டிருந்தவை, தைக்கப்பட்டிருந்தவை, மடிக்கப் பட்டிருந்தவை, பிரிக்கப்பட்டிருந்தவை, பொட்டலத்துக்குள் ளேயே இருந்தவை என்று கால் வைக்க இடமில்லாமல், நைலானும் வாயிலும் சீட்டியும் சில்க்கும் இறைபட்டுக் கிடந்தன.
“வேண்டாம் வேண்டாம் என்று பத்து நாளாய் முட்டிக் கொள்கிறேனே கேட்டாயா? இப்படியா ராத்திரி இரண்டரை மணி வரையில் கையை ஒடித்துக் கொள்வாள் ஒரு பெண்!” என்று கோமளம் தைலப் புட்டியை மூடித் திருகினாள். மக ளின் ரவிக்கையைப் பழையபடி மாட்டி, பொத்தானை அழுத்தி விட்டாள்.
வனஜா எழுந்து தையல் மெஷினை நோக்கி அடியெ டுத்து வைத்தாள்.
பாய்ந்து சென்று மகளின் வழியை மறித்தாள் கோமளம். கதவின் மூலையில் சாத்தியிருந்த துணி உலர்த்தும் கம்பையும் கையிலெடுத்துக் கொண்டாள். “இவ்வளவு சொல்கிறேன், மறுபடியும் மெஷினுக்கா போகிறாய்? வளர்ந்த பெண்ணாயிற்றே என்று பார்க்காமல் நிஜமாகவே இந்தக் கம்பாலே போட்டு விடுவேன் போட்டு!”
“ஐயய்யய்ய! என்னம்மா நீ! தூ!” கையிலெடுத்த துணி யைச் சலிப்புடன் சுருட்டியெறிந்தாள் வனஜா. ”இந்த மெஷின், துணி, நூல் கண்டு எல்லாவற்றையும் தூக்கி வாச லில் எறிந்து விட்டு வந்து விடுகிறேன். உன் அண்ணன் மகன் நம் இரண்டு பேருக்கும் விருந்து பண்ணிப் போடுவார்! சாப்பிடலாம்!”
கோமளம் பின்னடைந்து போனாள் பெண்ணின் குத்த லான பேச்சைக் கேட்டு. வெகு நேரமாய்க் கண் முனையில் பயமுறுத்திக் கொண்டிருந்த நீர்த் துளி உருண்டு வெளியே வந்து கன்னத்தில் வழிந்தது.
கீழே கிடந்த துணிகளையெல்லாம் அடுக்கி ஓரத்தில் வைத் துவிட்டு மணைப் பலகையைத் தலைக்கு வைத்துக் கொண்டு பாயில் படுத்தாள் வனஜா.
இருட்டின் நடுவே, அம்மா மூக்கை உறிஞ்சும் சத்தம் கேட்டது.
அம்மா மீது என்ன தப்பு? நல்லெண்ணத்துடன் தான் எட்டு வருடத்துக்கு முன்னால் வனஜாவுக்குக் கல்யாணத்தைச் செய்து வைத்தாள். ஊர் ஊராய்ச் சுற்றிக் கொண்டிருக்கும் அண்ணன் மகனுக்கு ஒரு கால்கட்டுப் போட்டு உட்கார்த்தி வைக்க வேண்டுமென்று நினைத்தது ஒரு தப்பா? ஆண்பிள்ளை இல்லாத ஏழைக் குடும்பத்தில், வனஜாவுக்குச் சீக்கிரமாகவே ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுத்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டதுதான் தப்பா? வனஜா எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடிக்கவும், வட இந்தியாவில் எங்கேயோ சுற்றிக் கொண்டிருந்த வேணு சென்னைக்கு வரவும் சரியாயிருந்தது. இரண் டொரு குடும்பப் பெரியவர்களை வைத்துக் கொண்டு கல்யா ணத்தை நடத்தி முடித்து விட்டாள் கோமளம். ஆனால் அவன் குடும்பத்தையே கவனிப்பதில்லை.
ஒருநாள் கோமளம் பொறுக்க மாட்டாமல், “ஏண்டா வேணு…” என்று புத்தி கூற ஆரம்பித்தாள்.
இதோ பார், இந்த டா டூ போடுகிறதெல்லாம் கல்யாணத்துக்கு முந்தி. இப்போது நான் இந்த வீட்டுக்கு மாப்பிள்ளை. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு!” என்று பிடித்துக் கொண்டானே பார்க்க வேண்டும். வறுமை யைக் கண்டிருந்தாலும் ஒரு கடுஞ்சொல்லைக் கேட்டிராத தாயும் மகளும் வெலவெலத்துப் போனார்கள்.
அன்றைக்குச் சாயந்தரம் எங்கோ கிளம்பியவன்தான். திரும்பி வரவேயில்லை. பம்பாயில் நிலையாய் ‘ஸெட்டில்’ ஆகிவிட்டான் என்று காதில் விழுந்தது. வேறு யாரோ ஒரு பெண்ணை மணந்து கொண்டான் என்று கூடச் சொன்னார்கள்…
காலை ஏழு மணி இருக்கும்.
வாசல் ஜன்னலின் மறுபுறத்தில் இரண்டு பெரிய குறு குறுப்பான கறுத்த விழிகளைக் கண்டாள் வனஜா. எவ்வளவு அழகான சுருட்டை முடி!
அந்தக் குழந்தைக்கு ஆறு அல்லது ஏழு வய திருக்கும். சிறுமி.
‘என்ன பாப்பா, என்ன பார்க்கிறே?” என்று கேட்டாள் வனஜா.
”கடைத் தெருவுக்குப் போறேன். தையல் மெஷின் சத் தம் கேட்டுது. அதுதான் பார்த்தேன்” என்றாள் அந்தச் சிறுமி.
”உள்ளே வாயேன்” என்று அழைத்தவள், “அம்மா, கதவைத் திறந்துவிடேன்” என்றாள் அருகிலே காஜா எடுத்துக் கொண்டிருந்த தாயிடம்.
இடுப்பில் ஒரு பெரிய ஸெலுலாயிட் பொம்மை யுடன் அந்தச் சிறுமி உள்ளே வரும்போதே, பணத்திலும் செழிப்பிலும் வளர்கிற செல்வக் குழந்தை என்பது புலப் பட்டது. நடையில் ஒரு கம்பீரம், பேச்சிலே ஒரு நிமிர்வு, பார்வையிலே ஓர் அதிகாரம், ராஜா வீட்டு இளவரசிதான்.
“பாப்பான்னுதானே கூப்பிட்டீங்க? என் பேர் பாலா. இவள் பேர்தான் பாப்பா” என்று பொம்மையை அறிமுகம் செய்து வைத்தாள் அந்தச் சிறுமி.
“ஹலோ! ஹவ் டு யூ டூ!” என்று அந்தப் பொம்மை யின் கையைப் பிடித்துக் குலுக்கிய வனஜா, “உன் பாப்பா என்னவோ உர்ரென்று இருக்கிறதே, ஏன்?” என்று விசாரித் தாள்.
“நாளண்ணிக்குத் தீபாவளி. இன்னும் இவளுக்கு ஒரு ஃப்ராக் வாங்கலை. கோபம் வருமா வராதா? நீங்களே சொல்லுங்க! பாம்பேயிலே கிளம்பறப்பவே அப்பாகிட்டே சொன்னேன்! திருச்சிக்குப் போய் வாங்கிக்க லாம்னு சொல்லிட்டாங்க அம்மா! எனக்கு அதுதான் ஒரே கோபம். நானே ரெடிமேட் டிரஸ் விற்கிற கடைக்குப் போய் ஒரு ஃப்ராக் வாங்கலாம்னு. கிளம்பிட்டேன்.”
பம்பாய் என்றதும் தாயும் மகளும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள். “பம்பாயிலிருந்தா வரு கிறாய் நீ?” என்றாள் வனஜா, அச்சம் நிறைந்த குரலில். குழந் தையின் மூக்கும் விழிகளும் நெற்றியும் அவளுக்கு எதையோ நினைவூட்டின. அவள் மனம் பதைபதைக்கத் தொடங்கியிருந்தது.
”பம்பாயிலேருந்து காரிலேயே வந்திருக்கிறோம். சௌத் இண்டியா பூரா போகப் போகிறோம். திருச்சி, மதுரை, கன்யாகுமரி எல்லா இடத்துக்கும். போன வருஷம் நார்த் இண்டியா பூரா போனோம்.’
“யார் யார்?”
“நான், எங்கப்பா, எங்கம்மா.”
“எங்கே தங்கியிருக்கிறீங்க நீங்க…?” என்று முதல் தட வையாய் வாயைத் திறந்து கேட்டாள் கோமளம்.
“இந்தத் தெருக் கோடியிலே ஒரு பெரிய ஓட்டல் இல்லை, அங்கேதான்” என்றாள் பாலா.
”பொம்மையை வைத்து விட்டுப் போ. நான் தைச்சு வைக்கிறேன்” என்றாள் வனஜா.
”துணி? நான் வாங்கிட்டு வரலியே?” என்று பாலா கேட்டாள்.
“இங்கே நிறைய இருக்கிறது. துண்டு மீறும். போட்டுக் கொள்கிறேன்” என்று வனஜா சொல்லவும், பைத்தியம் தான் பிடித்திருக்கிறது உனக்கு” என்று அவள் அம்மா பல்லைக் கடித்தாள்.
“ரொம்பத் தாங்க்ஸ்” என்று பாலா எழுந்து கொண் டாள். “நாளைக் காலையிலே நான் வரேன். ரெடியாய் வைச் சிருக்கீங்களா?”
அவள் வாசற்படியிலே இறங்கியதும் வனஜாவின் அம்மா விருட்டென்று எழுந்து கொண்டாள். “ஒரு நிமிஷத் திலே திரும்பி வருகிறேன். ஒரு காரியம் இருக்கிறது.”
“எங்கேம்மா போகிறாய்?”
“இரு.”
வனஜா தையல் வேலையில் முழுகினாள். இருந் தாலும் அந்தச் சிறுமியின் முகம் திரும்பித் திரும்பித் தோன் றிக் கொண்டேயிருந்தது மனக் கண்ணில். ‘ஏனிப்படி இனம் விளங்காத சங்கடமொன்று ஏற்படுகிறது எனக்கு?’ என்று தன்னையே கேட்டுக் கொண்டிருந்த தருணத்தில்…
“அந்தப் பாவிதான்! அவனேதான்!” என்று கத்திக் கொண்டே பைத்தியக்காரி போல் உள்ளே ஓடி வந்தாள் கோமளம். “எனக்கு அப்போதே சந்தேகம் வந்தது. அதனாலே தான் அந்தப் பெண் பின்னாலேயே போய்ப் பார்த்தேன்.அவன் நன்னாயிருப்பானா? அவள் வாழ்வாளா?”
”அம்மா! அம்மா! எதற்கு இப்படிக் கத்துகிறாய்? நிறுத்து!” என்று கூவினாள் வனஜா. அம்மா என்ன தெரிந்து கொள்ளச் சென்றாள் என்பது எப்படி அப்போதே புரிந் ததோ, அதேபோல் என்ன தெரிந்து கொண்டு திரும்பியிருக் கிறாள் என்பதும் இப்போது புரிந்தது. கால் முதல் தலை வரை திகுதிகுவென்று அந்த உணர்வு அவளை எரித்தது.
”உனக்குத் தெரியவில்லையா? சத்தியமாய்ச் சொல்லு! அந் தப் படுவெட்டு வந்ததே அதன் முகரையைப் பார்த்த உட னேயே உனக்குத் தோன்றவில்லை? பம்பாய் என்று அது சொன்னதும் என்னை ஒரு பார்வை பார்த்தாயே, உனக்கும் அந்த எண்ணம் தோன்றியதால்தானே?” என்று மகளை உலுக்கினாள் கோமளம். “நான் பின்னாலேயே போய்ப் பார்த்தேன். அந்தப் பாழாய்ப் போகிறவன், ஓட்டல் வாசலில் நிற்கிறான். தளுக்கும் மினுக்குமாய் ஒரு குடிகேடி….எவளோ ஒரு….”
“அம்மா!” வெறியுடன் அம்மாவின் வாயை அடைத்தாள் வனஜா. “கன்னாபின்னாவென்று பேசாதே.”
“கன்னாபின்னாவாமே, கன்னாபின்னா? இந்தப் பெண் ணைப் பார்த்தீர்களா?” என்று மோவாயைத் தோளில் இடித் துக் கொண்டு, இல்லாத ஒருவரிடம் சொல்லி அதிசயப்பட்டாள் கோமளம். ‘உனக்கு வயிற்றைப் பற்றிக் கொண்டு வரவில்லை? அப்படியே பாய்ந்து, இரண்டு பேரையும் நார் நாராய்க் கிழித்துப் போடலாம் போல இருந்தது எனக்கு. அவன் என்னைப் பார்க்கவில்லை. உன் னைக் கையும் கட்டுமாய் அங்கே அழைத்துக் கொண்டு போய், ஓட்டலிலே அத்தனை பேர் மத்தியிலேயும் மானத்தை வாங்க வேண்டும் என்றுதான் ஓடோடி வந்தேன். அந்தத் துணியை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வா இப்பொழுதே! ஊம்! புறப்படு.”
வனஜா அமைதியாகத் தையல் மெஷினை ஓட்டிக் கொண்டிருந்தாள். கடகடவென்ற தையல் யந்திரத்தின் ஓசை யைத் தவிர வேறு எவ்வித சத்தமும் அங்கே எழவில்லை.
”வனஜா, நான் கத்துகிறேனே, காதிலே விழவில்லை? ப்போது என்னோடு வரப் போகிறாயா, மாட்டாயா?”
“மாட்டேன்.”
”சரி. வர வேண்டாம். ஆனால் நான் உன் மாதிரி பயந் தாங்கொள்ளி இல்லை. எனக்கென்ன தாட்சண்ணியம் அந்த நாசகாரன்கிட்டே? நான் போய் உண்டு இல்லையென்று பார்த்து விடுகிறேன்.”
மெஷினை ஓட்டிக் கொண்டே வனஜா பேசினாள். ”நேற்று எனக்கு எடுத்துக் காட்டினாயே, அந்தக் கம்பு இன் றும் அதோ அந்தக் கதவு மூலையில்தான் இருக்கிறது. ஒரே போடிலே உன் காலை முறித்து விடுவேன், இந்த வீட்டை விட்டு நீ ஓர் அடி எடுத்து வைத்தாயானால்!’
“கா… கா… காலை…” ஓவென்று அழ ஆரம்பித்தாள் கோமளம். “பெற்றவளிடம் ஒரு பெண் பேசுகிற பேச்சா இது? இப்படியே, இங்கேயே, இந்தத் தையல் மெஷினோ யே என்னை வைத்துக் கொளுத்தி விட்டு, வயிறு குளிர்ந்து இரு என்று சொல்கிறாயா? உனக்கு ஒரு வாழ்க்கை, வீடு, புருஷன் எதுவுமே என்றைக்குமே ஏற்பட வேண்டாமா?”
“வேண்டாம்!”
”செத்து ஒழி!” அடக்க முடியாத சினம் கோமளத்தின் கண்ணை மறைத்தது. பைத்தியம் போல் சுற்றும் முற்றும் பார்த்தாள்.
அந்தப் பொம்மை கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு ஜன்னலில் உட்கார்ந்திருந்தது.
வெடுக்கென்று அதை எடுத்தாள். காலைப் பிடித்துக் கொண்டு படீரென்று தரையில் அடித்தாள் – ஓங்கி, ஓங்கி, ஓங்கி!
“அம்மா!”‘
சுரீலென்று கோமளத்தின் கன்னத்தில் விழுந்த அறை தான் அவள் வெறியை நிறுத்தியது.
குனிந்து ஒவ்வொரு துண்டாய்ப் பொறுக்கினாள் வனஜா. கண்ணீர்த் துளிகள், நாங்களும் தேடுகிறோம் என்பது போல், உருண்டு உருண்டு தரையில் உதிர்ந்து கொண்டிருந் தன. இறுதியில் பணம் எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
புதுப் பொம்மைக்காக டவுன் பூரா அலைகிற மாதிரிதான் நேரிட்டது வனஜாவுக்கு. பம்பாயில் வாங்கப் பட்ட பொம்மையைப் போல அதே நிறம், அதே வடிவம், அதே உயரம், பருமன் கொண்ட பொம்மை கிடைக்க வில்லை. கடைசியில் ஒரு கடையில், பன்னிரண்டு ரூபாய் எழுபத்தைந்து பைசாவுக்கு வாங்கினாள்.
வீடு திரும்புகையில் இருட்டி வெகுநேரமாகி விட்டது. அம்மா தரையில் படுத்திருந்தாள்.
அறையை ஏதோ சந்தேகத்துடன் நோக்கினாள் வனஜா. என்ன மாறுதல் ஏற்பட்டிருக்கிறது? யோசித்தாள். திடீரெ னப் புலப்பட்டது. “அம்மா! இங்கேயிருந்த துணி களெல்லாம் எங்கே?”
எழுந்திருக்காமலே கசப்புடன் சிரித்தாள் கோமளம். “கொடுத்தவர்கள் வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள். ‘நாளை மறுநாள் தீபாவளி. இனிமேல் உங்கள் பெண் எப் போது தைத்துத் தரப் போகிறாள்? வேறே எங்கேயாவது கொடுத்துக் கொள்கிறோம்’ என்று எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள்.
மெஷினடியில் உட்கார்ந்தாள் வனஜா.
“இந்த பொம்மைக்குப் பிட்டுத் துணிகள் மீறுமென்று நினைத்திருந்தேன். பரவாயில்லை.”
அலமாரியைத் திறந்தாள்.
“ஐயையோ! அது உனக்காகத் தீபாவளிக்கு வாங்கி வைத்திருக்கிறேன்!” என்ற அம்மாவின் கூக்குரலைப் பொருட்படுத்தாமல் வெட்டத் தொடங்கினாள்.
பொழுது விடிந்தது. பாலா வந்தாள்.
“ஹை! பாப்பா சட்டை ஜோரா தச்சிருக்கீங்களே!” என்று பொம்மையை மார்புடன் அணைத்துக் கொண்டாள், “இந்தாங்க” என்று ஒரு பத்து ரூபாய் நோட்டைக் கொடுத் தாள்
திடுக்கிட்டாள் வனஜா. “ஏது இது?”
“என்னுது!” என்றாள் பாலா ரோஷத்துடன். “என் பாக் கெட் மணியெல்லாம் பர்ஸிலேயே சேர்த்து வைச் சிருப்பேன்.என் அம்மாகிட்டேயும் சொல்லிட்டேன், நீங்க ஈட்டை தைச்சுத் தரப் போறீங்கன்னு… உங்க பேர் என்ன? என் அம்மாகிட்டே சொல்றேன்.”
“வ… வந்து… சாவித்திரி.”
மகளைப் பார்த்துப் பல்லைக் கடித்துக் கொண்டிருந் தாள் கோமளம்.
“சரியாப் பத்து மணிக்கு நாங்க புறப்பட்டுடறோம். கார் இந்த வழியாத்தான் போகும். என் அப்பாவையும் இங்கே அழைச்சிட்டு வரட்டுமா?”
“வேண்டாம், வேண்டாம். எனக்கு ஏகப்பட்ட வேலை. வீட்டிலேகூட அனேகமாய் இருக்க மாட்டேன்.”
”சரி, நான் வர்ரேன். பாப்பா! இவர்களுக்குத் தாங்க்ஸும் டாட்டாவும் சொல்லு!” என்று பொம்மையின் கையை ஆட்டினாள் பாலா.
“டாடா!” என்று விடைகொடுத்தாள் வனஜா.
கதவைச் சாத்தித் தாளிட்டு விட்டு, வெறுமையாய்க் கிடந்த மெஷினில் வந்து உட்கார்ந்தாள்.
“நீ செய்வது நன்றாயிருக்கிறதா வனஜா?” என்று பொரு மினாள் கோமளம்.
“இதுதான் நன்றாயிருக்கிறது” என்றாள் வனஜா தீர்மானமாக. . “எனக்குச் செய்யச் சாமர்த்தியம் இல்லாததை, என்னால் செய்யக் கையாலாகாததை, ஒரு பெண் ஏழு வரு டமாய்ச் செய்து வந்திருக்கிறாள். அவரை நல்லவராய்த் திருத்தி, வாழ்க்கையில் முன்னேற வைத்து, குடியும் குடித்தனமுமாய் இருக்கும்படி பண்ணியிருக் கிறாள். அந்தக் குழந்தையிடம் இருவரும் பிரியமாக இருக் கிறார்கள். அவர்கள் குடும்பம் சந்தோஷமாயிருக்கிறது. என் னையும் உன்னையும் பற்றி ஒரு செய்தியும் சொல் லாமல் அவளை மணந்திருப்பார் போலிருக்கிறது. அவள் நல்ல பெண், கெட்டிக்காரி, என்னைக் காட்டிலும் அறிவும் அழகும் உள்ளவள், சீராகக் குடித்தனம் நடத்துகிறாள். அதைக் கலைக்க எனக்கென்ன உரிமை? அவளும் என்னைப் போலவே அமைதியிழந்து தவிப்பதில் நமக்கென்ன சந்தோஷம்?”
கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீருடன் அவள் அம்மா தெருப்புறத்து ஜன்னலை இம்மியளவு திறந்து பார்த்தபடி நின்றிருந்தாள். மகளுக்கு எவ்வித பதிலும் சொல்லவில்லை. கடியாரத்தின் மீது அவள் பார்வை சென்று கொண்டிருந்தது. மணி பத்தடித்தது.
தூரத்தில் ஒரு காரின் ஹாரன் ஒலித்தது.
“வனஜா! வனஜா!” என்று கிசுகிசுத்தாள் கோமளம்.
வனஜா அசையவில்லை, இடத்தை விட்டு.
காரின் ஹாரன் வாசலில் கேட்டது. பிறகு தெருக் கோடி யில் மறுபடி ஒலித்து விட்டுத் தேய்ந்தது.
வனஜா தையல் மெஷினின் மீது கவிழ்ந்து கொண்டாள்.
– குடும்பக் கதைகள், முதற் பதிப்பு: 2007, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.