பட்டுப் புடவை – ஒரு பக்க கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,645
நந்திதாவின் கல்யாணத்திற்காக ஸ்பெஷலாக நெய்யப்பட்டிருந்த அந்த பட்டுப்புடவையை நூறாவது தடவையாக எடுத்து அழகு பார்த்தாள் நந்திதா.
கிட்டத்தட்ட அந்தப் புடவையின் விலை மட்டும் ஐம்பது லட்சம் என அவளது அப்பா சொன்னார். புடவையை டிசைன் செய்தது. நந்திதாவுக்கு கணவனாக வரப்போகும்
விஷ்ணு. இதுவரை எந்த மணமகளும் அணியாத வகையில் நந்திதாவின் புடவை இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நந்திதாவின் மீது விஷ்ணு வைத்துள்ள
காதல் அவளுக்குப் புரியும் என்பதால், செலவைப்பற்றி கவலைப் படாமல், காசை வாரி இறைத்து அந்தப் புடவையை நெய்யச் சொல்லியிருந்தான்.
அன்றும் புடவையை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்த போது, அவளது அப்பா சந்தானத்தின் சத்தம் கேட்டது.
“அம்மா நந்திதா… விஷ்ணு சார் வந்திருக்கார்… அந்தப் புடவையை எடுத்துட்டு வாம்மா…’ என்று சொல்லவும், கையில் எடுத்த புடவையை அதற்கென்று இருந்த அட்டைப்பெட்டியில் வைத்து, அப்பாவிடம் கொண்டு வந்து கொடுத்தாள்.
புடவையை விரித்துப் பார்த்த விஷ்ணு அசந்து விட்டான்.
“சார் நான் நினைச்சதை விட அருமையா நெய்திருக்கீங்க…எங்க கல்யாணத்திற்கு வர்ற எல்லாரும் புடவையைப் பார்த்து மூக்கில் விரலை வைக்கப் போறாங்க பாருங்க… எல்லா பத்திரிகையிலும் இந்தப் புடவையைப் பத்தின நியூஸ்தான் ஹைலைட்டா இருக்கப்போகுது பாருங்க… இந்தாங்க சார், இந்தப் புடவை நெய்ய நீங்க கேட்ட பணம்’ என்று புடவை நெய்ததற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு, புடவையுடன் கிளம்பிய விஷ்ணுவையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஏழை நந்திதா!
– எஸ்.செல்வசுந்தரி (பிப்ரவரி 2014)