படித்தால் தான் புத்தகமா
கதையாசிரியர்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: May 16, 2026
பார்வையிட்டோர்: 77

நேற்று இரவு நல்ல தூக்கத்தில் ஒரு கெட்ட கனவு. கனவு எதுவாக இருந்தாலும் நல்ல தூக்கத்தில் வந்ததாகச் சொல்லித் தானே பழக்கம்.அத்துடன் நல்லது கெட் டது எல்லாம் ஒரே இடத்தில் தானே இருக்கும். தூக்கம் கலைந்த போது, கலைந்த தலையோடு, புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஒருவர் கனவில் சற்று முன் புலம்பிக் கொண்டிருந்தது மட்டும் நினைவில் இருக்கிறது. (இந்த வாக்கியத்தில், எழுவாய் எங்கு இருந்தால் சரியாக இருக்கும், யாரும் உள் அர்த்தம் கண்டுபிடிக்காமல் இருப்பார்கள் என்று யோசித்து பார்க்கிறேன்.ஏன் வம்பு? எதற்கும் “புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர் என் கனவில்…” என்று ஆரம்பிப்பதே என் இலக்கிய பயணத்துக்குப் பாதுகாப்பானது என்று என் தமிழறிவு நினைவூட்டுகிறது.இல்லை என்றால், “கனவில் புகழ்பெற்ற எழுத்தாளர் வந்தார்” அல்லது “புகழ்பெற்ற எழுத்தாளர் கனவில்” என்று நான் எழுதக்கூடும்.கதையை வாசிப்பவர் எப்போதுமே சராசரி உயிரியாக, அப்பாவியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அந்த வாசகர், தான் ஒரு அசல் எழுத்தாளர் என்ற அபார நம்பிக்கை அல்லது மூட நம்பிக்கை உடையவராக இருக்கலாம். அப்படியான விபரீத வாசகர் கண்ணில் இது பட்டால் போதும். உடனே, அதில் உள்ள “எழுத்தாளர்” என்று குறிப்பிடப்படும் நபர் தன்னைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்னும் தீர்க்கமான முடிவுக்கு வருவார் அல்லது தள்ளப்படுவார். தன்னைத்தான் அச்சொல் மறைமுகமாகக் குறிப்பதாகவும் அதன் விளைவாக மிஞ்சியிருந்த தனது மானம் துறைமுகத்தில் காத்திருக்கிறது என்றும் துடித்துப்போவார். இப்படி யாராவது முத்திய எழுத்தாளர் ஒருவரின் குற்றச்சாட்டை இந்த வாக்கியம் சம்பாதிக்க நேரும் அபாயம் உள்ளது).
அப்போது, தவளை ஒன்று தண்ணீரில் குதிக்கும் சத்தம் கேட்டது. விழித்துக்கொண்டிருந்த நான், படுக்கையை விட்டு எழுந்தேன். அனிச்சை செயலாய் கைப்பேசியை எடுத்துப் பார்த்தேன். குறுஞ்செய்தி வந்திருப்பதை, குறிப்பால் உணர்த்தியது கைப்பேசிக்குள் இருந்து சைகைசெய்த ஒலித்தவளை. யாரோ ஒரு நண்பர், என்னைப் போலவே அந்த அர்த்த ராத்திரியில் தூக்கம் தடைபட, எதிர்வருகாலையை முந்தி வரவேற்றிருந்தார். இதற்குப் பதில் வாழ்த்து அனுப்ப, கோப்புக் கிடங்கில் இருந்து ஏற்கெனவே தேக்கிவைத்திருந்த வாசக அட்டை ஒன்றை என் ஆள்காட்டி விரல் வருடித் தெரிவு செய்தது.மீதமிருந்த தூக்கம், ஒரு பக்கம் தன் கணக்கை முடிக்கவேண்டி மீண்டும் கண்களை மூட தன்னாலான முயற்சியைச் செய்துகொண்டிருந்தது.
அந்த நேரம், புத்தக அலமாரியில் சிறு சலசலப்பு. அதிகாலை என்பதால் சத்தம் துல்லியமாக கேட்டது. எலி,கிளி உள்ளே போயிருக்குமோ என்று கண்களால் துழாவிப்பார்த்தேன். கிளி நிச்சயமாக போயிருக்காது.எலிக்கும் இதைவிட முக்கிய வேலை இருந்திருக்கவேண்டும். எனவே, அசையும் உயிர் எதுவும் அதில் இல்லை என்ற நிம்மதியுடன் திரும்ப வந்து நாற்காலியில் உட்கார்ந்தேன். உள்ளே இருந்து கசியும் சத்தம் மட்டும் நிற்கவில்லை. கொஞ்சம் கூர்ந்து கவனித்தேன். புத்தகங்களின் மத்தியில் இருந்துதான் அது வந்துகொண்டிருந்தது. யாரோ முணுமுணுப்பது தெரிந்தது.புத்தகங்களைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை.”வருங்காலத்தில் இந்தப் புத்தகம் நின்று பேசும்” என்று ஒருவர் நூல் வெளியீட்டின் போது வாழ்த்திய ஆரூட வாசகம் நினைவுக்கு வந்தது. அலமாரியில் நிற்க போகும் இந்தப் புத்தகம் பேச, அருகில் இருக்கும் புத்தகங்கள் கேட்கும் என்ற தொலைநோக்கு சிந்தனையில் அப்படிச் சொல்லி இருப்பாரோ!
“நம்ம ஆள் இன்னைக்கு காலையில யாருக்கிட்டயோ பேசிக்கிட்டிருந்ததக் கேட்டியா?”
“நல்ல சேதி தான? கேட்டுட்டு தான் இருந்தேன்.கொரோனாவால தள்ளிப்போன நம்ம திருவிழா அடுத்த வாரம் ஆரம்பிக்கப்போவுதாம்.நம்மோட துணைக்கு இன்னும் கொஞ்சம் பேர் வந்து சேருவாங்க. அதான சொல்ல வர?”
“எல்லாம் சரி.இப்ப வரப் போறது, நான் இங்க வாக்கப்பட்டு, நாலாவது கண்காட்சி. என்னையே எடுத்துக்க, நான் இங்க வந்து, 1000ஆவது நாள்லையாவது தொறந்து படிச்சிடுவான்னு நானும் நம்பிக்கையோட இருந்தேன். அதுக்கான அறிகுறியே இல்ல.இது வரைக்கும் இங்க வந்து சேந்திருக்கிற நமக்கே ஒரு வழியும் தெரியல. மூச்சு முட்ட முட்ட மூலையில தவம் கெடக்கிறோம். இதுல அடுத்தடுத்து வாங்கி அடுக்கறதல மட்டும் குறைச்சலில்ல”. அக்குரல்,
அந்த ஒற்றைப் புத்தகப்பிரதியின் புலம்பலாகப் படவில்லை. அங்கிருந்த அத்தனைப் பிரதிகளின் பிரதிநிதியாய் அது பேசியது. அது வைக்கும் வாதத்தில் ஏக்கம் மட்டுமல்லாது அதில் ஒரு சிட்டிகை நியாயமும் சேர்ந்து இருந்ததால் என் தூக்கத்தை முழுமையாகத் துரத்தி அடித்தது அந்தப்பேச்சு.
“சரி விடு. இவன் மட்டுமில்ல, இப்படி நிறைய பேர் இங்க இருக்கறாங்க”
பரவாயில்லையே, நமக்கும் பரிந்து பேச ஒரு வாயில்லா தாள்வாய் இருக்கிறதே என்று மனம் சமாதானமானது.
“அப்படியா? வாங்கனத தொடக் க்கூட நேரம் தான் இல்லையே? அப்புறம் எதுக்குத் தான் இவனப்போல ஆளுங்கல்லாம் நம்மக் காசுப் போட்டு வாங்கறாங்களோ?”
“அத ஏன் கேக்கற? அது ஒரு மாதிரியான நோய். ஆனா ஒன்னு, இதனால அவங்க குடும்பத்த தவிர வேற யாருக்கும் கஷ்டம் எதுவுமில்ல”
“அது என்ன நோய்? விபரமா சொல்லு”
“அதுவா? கோயிலுக்குப் போனதுக்கு அடையாளமா விபூதி, குங்குமம் இட்டுக்கற மாதிரி, எந்தப் புத்தகக் கண்காட்சிக்குப் போனாலும், ஏதாவது புத்தகத்த வாங்கிட வேண்டியது.”
“நீ சொல்றது சரி தான்.என்ன வாங்கின போது, ஏதோ உடனே படிச்சுடற மாதிரிதான், தூசுபடாமல் இருக்க மேலே சுத்தியிருந்த கண்ணாடித் தாள கிழிச்சான். எதுக்கு தான் என்ன வாங்குனான்னு புரியல.”
“அதான் சொன்னேனே.நோயின்னு. யாராவது கேட்டா சொல்லவும், இல்லன்னா கேக்கறதுக்கு முன்னமே பெருமை பேசவும் தான்.
நான் ஏற்கெனவே இந்தந்த புத்தகமெல்லாம் வாங்கிட்டேன்னு தம்பட்டம் அடிக்கத்தான். என்னை வாங்கன புதுசுல யார் போன் எடுத்தாலும் சரி, உடனே இவன் சொல்றது, இன்னன்ன புஸ்தகத்தல்லாம் வாங்கிட்டேன்னு பெருமை தான்.”
“இப்படி புஸ்தகம் வாங்கிறவன் கடைசிவரைக்கும் படிக்கவே மாட்டானா?”
“பின்ன என்ன? இவன்லாம் அலமாரி வாங்கி வீணா போவுதேன்னு புஸ்தகத்த வாங்கறவன். அத விட வேடிக்க ஒன்னு இருக்கு தெரியுமா?”
“அது என்ன?”
“ஏற்கெனவே வாங்குனது தெரியாம, அதே புத்தகத்த, இன்னொன்னு வாங்குவான்”
“வருஷத்துக்கு ஒருவாட்டியாவது எடுத்து தொடச்சி வச்சா தானே ஞாபகம் இருக்க?”
“அதுக்கெல்லாம் இவனுக்கு எங்க நேரம் இருக்கு?”
“எல்லாம் நம்ம நேரம்.இங்க வந்து சேந்தோம் பார்.மனைவி அமைவதெல்லாம்னு பாட்டு எழுதறானுவ, புத்தகம் வாங்கறவன் அமைவதெல்லாம் அப்படீன்னு எவனும் எழுத மாட்டான்.ஏன்னா, அவனும் அதே மாதிரியான ஆளா இருப்பான்.”
“சரியா சொன்ன. இவன் படிக்கலன்னா, படிக்க முடியலன்னா, ஆசப்பட்டு கேக்கறவனுக்காவது கொடுக்கலாமில்லையா? அதுவும் செய்யமாட்டாங்க”
“அப்படி கேட்டு வாங்கிட்டுப் போறவன் மட்டும் படிச்சிட்டுவான்னு என்ன உத்தரவாதம்?”
“அதுவும் சரிதான். இவனுக்கு தெரிஞ்ச கவிஞர் ஒருத்தர், சரியாத்தான் சொன்னாரு: வாசகனா இருந்த நான் நூலகனானேன்”. தோ நிக்க முடியாம நிக்கறானே, 700 சொச்சம் பக்கத்துக்கு மேல! கனம் இருக்கிறதால பாரம் தூக்கமுடியாம நிக்கறான். இவன் காசுப் போட்டும் வாங்கனது இல்லயாம். கடன் வாங்கித்தான் வச்சிருக்கான்.நிக்கறவன் கிட்டக்
கேட்டன்.வாங்கனவாவது படிச்சுட்டுக் குடுத்தானான்னு. இல்லயாம். அங்கயும் தெண்டத்துக்குத் தான் நின்னிருக்கான்”
“அப்ப நம்ம ராசிதான்னு சொல்லு”
“சரி.இப்படிப் புலம்பிப் புலம்பியே போய்சேர வேண்டியது தானா?”
“என்ன செய்யலாம்னு நீயே சொல்லன்.”
“இவன் இப்படி கவனிக்காம விடறதால தான் பூச்சி, கரையான் அப்படீன்னு பல ஜீவராசிங்க நம்மள அழிக்க வருதுங்க.”
“அது மட்டுமா, அன்னைக்கு அப்படித்தான், இவன் சரியா அலமாரிய சாத்தாம போயிட்டான்.ஈட்டி வாயோட எலி ஒன்னு உள்ள நொழஞ்சிது. அது தொட்டது யாரத் தெரியுமா. எவ்வளவோ பாடுபட்டு பரிசு வாங்கன எழுத்தாளரோட புள்ளையத்தான். போத்தியிருந்த தோல ஒரே மூச்சுல உரிச்சிட்டுது. அது சப்புக் கொட்டிச் சாப்ட்டத பாத்த போது அந்த முதுகு அவ்வளவு ருசியா இருந்திருக்கனும். எனக்கு உடம்பெல்லாம் நடுங்கிடுச்சி.நல்ல வேலயா அந்த நேரம் பாத்து ஏதோ சத்தம் கேட்டுது. எலிக் கண்டத்துல இருந்து நான் தப்பிச்சேன்.”
“இதுக்கெல்லாம் விமோசனமே இல்லையா? இப்படியே, நாம எத்தன நாளைக்கு தான் செத்து செத்து பொழைக்கிறது?”
“அதுக்கு என்ன செய்யலாம், நானே ஜோசியப் புத்தகம் தான். என் தலைவிதி எப்படி முடியுமுன்னு என்னப் படைச்சவன் எழுதிவச்சிருக்கானான்னு பாக்கறன், கெடைக்கல?”
“நான் ஒரு திட்டம் வெச்சிருக்கன்.கவனமாக் கேளு.”
“சொல்லு, நீ சொன்னா சரியாத்தான் இருக்கும், ஏன்னா உன்ன உற்பத்தி செஞ்சவன் நாலு ஜெயில் பாத்த நாடறிஞ்ச மக்கள் சேவகன்.
உனக்கா தில்லுமுல்லப் பத்தி சொல்லித் தரணும் ? “
“ரொம்பப் புகழாத! எனக்கு அது பிடிக்காது”
“பாத்தியா, ஒன்னோடப் புத்திய காட்டறயே. சரி, சீக்கிரம் உன்னோட திட்டத்த சொல்லு”
“அந்த சுவத்து மூலையப் பாத்தியா? அந்தப் பக்கச் சுவர் முழுக்க ஓதம் காக்குது. அவன் எப்பவும் ஆசையா அடிக்கடி தொறந்து பாப்பானே ஒரு புஸ்தகம். அதையும் இப்பல்லாம் அவன் எப்பவாவது தான் தொடறான்”
“அத தள்ளி வெச்சிட்டானோ”
“சரியா சொன்ன. அதத் தான் நாம இப்ப வேற மாதிரி செய்யப் போறோம். அவன் என்னத் தள்ளி வெக்கறது. நாம அத அந்த ஓரமாத் தள்ளி வெச்சுடுவோம்.ஈரப் பசையில ஒன்னோட ஒன்னு தாள் அத்தனையும் ஒட்டிக்கும்”
“நல்ல திட்டம் தான்”
“ஆமா.அடுத்த தடவ அத ஆசையா எடுக்கும் போது, பிரிக்க முடியாம அந்த புஸ்தகம் முரண்டு புடிக்கும்.சிலது கிழியும். பாக்கி இருக்கற புஸ்தகத்துக்கும் இதே கதி தான்னு நினைக்க வைப்போம். அப்பவாவது புத்தி வருதான்னு பாப்போம்”
” இவன் கிட்ட இவ்வளவு நாளா இருந்ததுக்கு, புஸ்தகத்த திறக்கலன்னாலும், நாங்க சிலத நின்ன இடத்தில இருந்தே சொல்லிக் கொடுப்போம் அப்படிங்கறத காட்டுவோம். நம்மள அவங்க வாசிக்கலன்னாலும், வாங்கனதுக்காவது,
நம்மால முடிஞ்ச புத்திய கொடுப்போம், அதாவது, நாம ஆறறிவு படச்சவங்க இல்ல அதனால கொஞ்சம் கடமை உணர்வு உடயவங்க அப்படீங்கறத புரிய வைப்போம்”
“அதல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்.இப்ப நம்மள தேடி வர ஆபத்த தவிர்த்தாகனும். அங்கப் பார், நான் சொன்ன மாதிரியே எலி ஒன்னு ஓடி வருது. இப்ப செய்ய வேண்டியது, எல்லாரும் சேந்து அது மேல விழணும்.”
‘தொப்…’ ஏதோ புத்தகம் ஒன்று கீழே விழ, தூக்கம் மீண்டும் கலைந்தது.
இந்த முறையாவது முழுமையாக விழித்து கொண்டாகவேண்டும்.
– புதுவை பரணி (ஜனவரி-பிப்ரவரி 2026).
தொடர்புள்ள சிறுகதைகள்
Zomoto வில் வேலை செய்யும் பேய்
தேவதர்ஷினி செல்வராஜ்
May 13, 2026
கக்கத்துச் செய்தித்தாள்
சு.அப்துல் கரீம்
May 4, 2026
நிலவில் நெருப்பு
வாஷிங்டன் ஶ்ரீதர்
April 18, 2026