பசு




ஒன்பது மணிக்குப் பள்ளிக்கூடத்திலிருந்து மணி சப்தம் கேட்கவே. வெறும் கட்டிலில் படுத்திருந்த தாத்தா மெல்லத் தலையைத் தூக்கி… ‘ஏய்… பாலு! “ ஏய்… பாலு! மொத மணி அடிச்சிட்டான் போலிருக்கே… போகலியா நீ..?” என்று எழ முயன்றார்.
அது நைந்த கட்டில். கயிறுகள் ஆங்கங்கே முடிச்சுப் போடப்பட்டு ஊஞ்சல் போல் தொங்கிற்று. மூங்கிலின் விரிசலில் மூட்டைகளின் குடியிருப்பு!
அவர் இடுப்பைப் பிடித்துக் கொண்டு எழுந்து. என்னவோ அதையே அசுர சாதனை செய்து விட்டது போல களைப்பில் மூச்சு வாங்கி. “பாலு! அங்கே என்ன பண்ணிட்டிருக்கே?” என்றார் தொழுவம் பக்கம் திரும்பி.
“பசுவுக்கு தவிடு! ” நான்காம் கிளாஸ் பாலு சொல்லிவிட்டுத் தொட்டியில் தவிடு கொட்டி முழங்கைவரை உள்ளே செலுத்திக் கலக்கினான்.
“ம். தின்னு! “
பாலு கை கழுவிக் கொண்டு திரும்பிப் பார்க்க, பசு தவிடு தின்னாமலே நின்றிருந்தது.
“ஏய்… தின்னு! ” என்று அதன் வாயைத் தொட்டியில் அழுத்தினான். அது திமிறிற்று. தலையை உதறிற்று.
“அம்மா” என்று குரல் கம்ம, அலறிற்று. அப்படி அலறும்போது அதன்அடி வயிறு எக்கிற்று. வாலைத் தூக்கி, சடசடசென மூத்திரம் போயிற்று. அந்த அலறல் சாதாரணமானதில்லை. அதில் ஏதோ ஒரு வித்தியாசமிருந்தது.
தெருவில் மாடுகள் மேய்ச்சலுக்கு மணியாட்டிக் கொண்டு போய்க் கொண்டிருக்க. பசு மறுபடியும் “அம்மா…!”
“ஏய்… உனக்கு என்னாயிற்று? ஏன் இப்படி கத்துகிறாய்?” என்று அதன் கழுத்தைக் கட்டிக் கொண்டு கேட்டான். அதன் உடலெல்லாம் சுடுகிற மாதிரி இருந்தது. கண்களில் ஒரு விதப் பரிதவிப்பு.
உடம்பு சரியில்லையோ!
“பாலு! ரெண்டாம் மணி அடிக்கப் போறான். நீ இன்னும் போகலியா…?”
“தாத்தா! அம்மாவுக்குக் காய்ச்சல் போலிருக்கு டாக்டர்ட்ட சொல்லி மருந்து வாங்கி வரட்டா..”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீ கிளம்பு!”
“தவிடு திங்கல. வைக்கோல் தொடலை. மேய்ச்சலுக்கு இன்னைக்கு அனுப்ப வேணாம்!”
அப்போது பசு. “அம்மா” என விகற்பமாய்க் கத்த. “பார்த்தியா தாத்தா.. இப்படித்தான் நாலைஞ்சு நாளாய் கத்திகிட்டிருக்கு! என்னென்னே தெரியலை.”
“அமாவாசை வருதில்லே.. அப்படித்தான் கத்தும! நீ கிளம்பு!”
“அமாவாசைக்கும் பசு கத்தறதுக்கும் என்ன தாத்தா சம்மந்தம்…? எனக்கு புரியலே.”
“உனக்குப் புரியாது. நீ புறப்படு!”
‘அம்மாவைத் தனியா விட்டுட்டுப் போக எனக்கு மனசே இல்லை தாத்தா! இது கத்தறதைப் பார்த்தா எனக்கு அழுகை அழுகையாய் வருது!”
“எல்லாம் நான் பார்த்துக்கறேன். பள்ளிக்கூடம் விட்டு வரும் போது பாரு… வ கத்தாமல் சந்தோஷமாயிருப்பாள். சாந்தமாயிருவா”
பாலுவிற்கு வகுப்பில் கவனம் செல்லவில்லை. பசுவின் அந்த ஓலமே காதில் ரீங்கரித்துக் கொண்டிருந்தது.
டீச்சர். தாயின் பெருமை பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
“இந்த உலகத்தில் தாய்க்கு இ ணையாக ஒப்பிட வேறு எதுவுமே இல்லை ஒரு தாய் என்பவள் மெழுகுவர்த்தி போன்றவல். தன்னை உருக்கி குடும்பத்திற்கு வெளிச்சமேற்றிக் கொண்டிருப்பவள். கணவன். குழந்தை என்று வேணிப் பாதுகாப்பவள். ‘ஏய் பாலு! அங்கே தலைகுனிஞ்சுகிட்டு என்ன பண்ணுகிறாயாம். தூங்குகிறாயா…?”
அவன் நிமிர. “என்னாச்சு உனக்கு… ஏன் அழுகிறாய்?”
“எனக்கு அம்மா நினைப்பு எடுக்குது டீச்சர்! நான் அனாதை!
“சேச்சே! இப்படிவா!” என்று அவனை அரவணைத்துக் கொண்டு, “இந்த உலகில் யாருமே அனாதை இல்லை. உனக்குத்தான் தாத்தா இருக்காரே!
“அன்பு செலுத்த ஆளில்லை டீச்சர். “
“ஏண்டா அப்படி நினைக்கிறாய். உங்க வீட்டில் பசு இருக்கிறது. அதைவிட வேறு யாரால் அன்பு செலுத்திவிட முடியும்? அதுவும் உன் தாய் போலத் தான்! தாயைப் போலவே பசுவும் பிறருக்காக வாழ்கிற ஜீவன்தான்! அதை நீ நேசி. அதை உன் தாயாக நினைத்து சமாதானப்படு. என்ன தெரிஞ்சுதா? அதற்கு எந்தத் துன்பமும் வராமல் பார்த்துக்கொள்! “
டீச்சரின் வார்த்தைகள் அவனது மனதைத் தைத்தன. ‘சே! அம்மா பசுவுக்கு உடல் நிலை சரியில்லாத போது அவளை, கவனிக்காமல் நான் இங்க உட்கார்ந்திருக்கிறேனே. நான் மடையன்! புதிதியில்லாதவன்! அம்மா உயிருடன் இருந்திருந்தால் இப்படி அலட்சியமாட்ய இருப்பாளா…? உடன் வீட்டுக்குப் போகணும். பசுவை டாக்டரிடம்…
அப்போது இன்ர்வெல் பெல்!
பிள்ளைகள் இரைந்து கொண்டு புளியமரத்தை நனைக்க ஓட, அவன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். சீக்கிரம்… சீக்கிரம்!
மூச்சிறைக்க நடந்து தொழுவத்துக கதவைத் திறந்தவனுக்கு ஏமாற்றம். அங்கே பசுவைக் காணவில்லை!
‘எங்கே போயிற்று? மேய்ச்சலுக்கு ஓட்டிப் போயிருப்பார்களோ? இந்தக் கடுமையான வெயிலில் அது எப்படி நடந்து போகும்! அவனுக்குத் தாத்தாவின் மேல் கோபம் கோபமாய் வந்தது. வயசாகிவிட்டதே தவிர பெரிசுக்குப் புத்தியில்லை. எத்தனை தரம் எடுத்துச் சொன்னேன். நான் பார்த்துக கொள்கிறேன் என்று இப்போது…
“தாத்தா….! என்று அலறினான்.
தோட்டத்தில் கவமுள்ளை அடுப்பிற்கு வேண்டி சின்னச் சின்னதாய் வெட்டிக் கொண்டிருந்தவர். “என்னடா.. பள்ளிக்கூடம் அதுக்குள்ளே விட்டிருச்சா…?” என்றார்.
“இல்லை. இன்டர்வெல். பசு எங்கே?”
“வெளியே ஓட்டிப் போயிருக்காங்க.”
“எதுக்கு?”
“அதெல்லாம் உனக்கு ஏன்? நீ பாட்டிற்கு உன் ஜோலியைப் போய் பார்!”
இல்லை எதுக்குன்னு தெரிஞ்சாகணும். சொல்லு தாத்தா. எதுக்காக ஒட்டிப் போனாங்க?”
“காளைக்கு”
“அப்படின்னா?
“பசு சினைப்படத் தான்”
“எதுக்கு சினைபடனும்?”
“இவன் பெரிய கலெக்டர்! கேள்வி மேல் கேள்வியாய் கேட்கிறான்! மணியடிச்சுட்டான். போடா- ஸ்கூலை பார்த்து. பல்லு பேந்துரும்!
‘எங்கே ஒட்டிப் போனாங்கன்னாவது சொல்லு தாத்தா! ”
“புளியந்தோப்பு. போதுமா ஆளை விடு! “
பாலு உடனே புளியந்தோப்பை நோக்கி ஓட ஆரம்பித்தான்.
புளியங்தோப்பிள் ஆட்கள் வேப்பங்குச்சியால் பல் தேய்த்துக் கொண்டு பரவலாய் நின்றிருந்தனர். வெற்று மாப்பு: எண்ணெய் வழியும் முகம், ஒவ்வொருவரும் தங்கள் கையில் ஒரு பசுவைப் பிடித்திருந்தனர். பெரிய புளிய மரத்தின் வேரில் காளை ஒன்று மொழுக் மொழுக் சதையுடன் கட்டப்பட்டிருந்தது. அதன் உடல் முழுக்க சதைதொங்கிற்று.
அதற்கு வாட்டமான கொம்புகள்! காரியக்காரன் மூக்கணாங்க கயிற்றுடன் தாம்புக் கயிறு மாதிரி மொத்தமான கதம்ப கயிற்றைச் சேர்த்துக கட்டி தன் கையில் பிடித்திருந்தான்.
“காரியக்காரரே… பார்த்தால் சின்னக் காளையாய்த் தெரியறதே! பசு பலப்படுமா..?”
“பலப்படுமாவா? இளங்காளை! முரட்டுக்காளை! “ என்று தட்டிக் கொடுத்தான்.
“நிச்சயம் தப்பாது! பசுவுக்குக் கப்புன்னு பிடிச்சுக்கும்!” என்று அவன் தன் மீசையைத் தடவிவிட்டுக் கொண்டான். அவன் அந்த காளையைவிட துடிப்பாயிருந்தான்.
“என்னடா ராஜா… நீ தயார் தானே!” என்று அதன் அடிவயிற்றுக்குக் கீழ் தட்ட, அது ஜிவ்வென உடலை முறுக்கிற்று. திமிறிக் கொண்டு நின்று தலையை உதறிற்று. ரோஷம்!
“ம்.ஒவ்வொன்னா வரட்டும்! என்ன யோசனை….? டாக்டர் ஊசி போட்டுப் பலம் பிடிக்காமல் போனாலும் போகலாம். என் ராஜாவிடம் தப்பவே தப்பாது ! கொண்டு
வாங்கய்யா பசுவை!”
பாலு வியர்த்து விறுவிறுத்து புளியந்தோப்பை அடைந்தபோது ஏறக்குறைய ஊர்ப் பசுவெல்லாம் போய்விட்டிருந்தது. அவனது பசு மட்டும்தான் பாக்கி.
முண்டாசு கட்டின பக்கத்து வீட்டுக்காரர் பசுவை “தா… தா…அப்படிப் போய் நில்லு” என்று காளைக்கு முன்னால் நிறுத்தினார். பசு மிரட்சியுடன் நிற்க. “இப்படி திரும்புன்னா…” என்று அதைப் பிடித்துத் திருப்பினார்.
“காரியக்காரரே… ம்! ஆகட்டும்!”
“ராஜா!” என்று அவன் காளையின் உடலை நீவிவிட-
அது பிளிறிக் கொண்டு முன்னேறிற்று. பசுவின் வாலை ஒதுக்கி முகர்ந்து பார்த்தது. பசு மிரண்டு மூத்திரம் போக, அதை ருசித்து பற்களை பலிப்புகளை காட்டிற்று.
“டேய்! என்ன பண்ணச் சொன்னால், நீ என்ன பண்ணிகிட்டிருக்காய்!” காரியக்காரன் தன் சட்டையால் விசிற அது செயல்பட ஆரம்பித்தது.
அந்தப் பாரம் தாங்காமலோ என்னவோ பசு துள்ளி, “ம்மா!” என்று அலறிற்று. அது அசையாமல் பக்கத்து வீட்டுப பெரியவர் அழுத்தி பிடித்திருந்தார். இரண்டு பக்கமும் பலகை கட்டி அதனைக் கட்டியிருந்தார்கள்.
பசு அலறவும், பாலு அங்கு போய்ச் சேரவும் சரியாயிருந்தது. அங்கே என்ன நடக்கிறதென்று அவனுக்கு எதுவும் விளங்கவில்லை. ‘ஏன் என் தாயை இப்படிக் கட்டிப் போட்டிருககிறார்கள்? காளை என்ன செய்கிறது?’ அவனுக்குப் பசுவை நினைக்க நினைக்கப் பாவமாயிருந்தது.
“அதுக்கே நான்கைந்து நாட்களாய் உடம்பு சரியில்லை. டாக்டரிடம் ஓட்டிப் போகாமல்… இது என்ன கொடுமை!”
பாலு பக்கத்துவீட்டு நபரின் கையைப் பற்றிக் கொண்டு, “மாமா வேணாம் ! வேணாம் விட்டிருங்க!” என்று கெஞ்சினான்.
“ஏய்…! போடாதள்ளி! இவன் வேற நேரங்கெட்ட நேரத்தில்!“
“இல்லை. நான் விட மாட்டேன்! இது என் தாய்! என் தாயை அலங்கோலப்படுத்த நான் சம்மதிக்கமாட்டேன்!’
அதற்குள் அந்தக் காளைக்கு மூடவுட் ஆகீயிருக்கவேண்டும் மூச்சிறைத்துக கொண்டு பின் வாங்கிற்று.
“சை! இவனைப் பிடிச்ச தூர ஏறிங்க!” என்று காரியஸ்தன் கடுப்படித்தான். “காளையை ஒரு வழியாய் தயார் பண்ணும்போது…நாசம்!“
“ஏய்…பொடியா! மரியாதையாய்ப் போயிரு!” என்று அவனைப் பிடித்துத் தள்ள. பாலு சிராய்த்துக கொண்டு விழுந்தான். அதற்குள் ஆட்கள் அவனது கையில் துண்டு கட்டி லாடம் அடிக்கும் மாடு போல அமர்த்தி பிடித்துக கொள்ள காளை திருமபத் தயாராயிற்று.
அன்று இரவு.
பாலுவிற்குத் தூக்கமில்லை. கண்களை மூடினால் அந்தக் காளையின் செயல்தான் நிழலடித்தது. ‘பாவிகள்! எல்லோரும் சேர்ந்து என் தாயை… ‘
அவனால் அந்தக் காட்சியை ஜீரணிக்க முடியவில்லை. ‘சினைப்படணுமாம். அப்போதுதான் அது கன்று போடுமாம்! பால் தருமாம்! என்ன பிதற்றல் இது!’
‘அது பசு இல்லை – என் தாய்!’
‘தாயைக் கட்டிப் போட்டு… அவலம்! அநாகரிகம்! அநியாயம்! கூடாது அவர்களைச் சும்மா விட்டுவைக்கக் கூடாது! என்ன செய்யலாம்? அவர்களை வெட்டிப் பொலி போட வேண்டும்.என்னால் முடியுமா? அவர்களின் முன்னால் நான் எம்மாத்திரம்?’
சட்டென எழுந்தான்.
பரணிலிருந்து தேங்காய் வெட்டும கொடுவாள் எடுத்தான். என்னால் அவர்களைத்தான் எதுவும் செய்ய முடியாது. ஆனால்….
பாலு கொடுவாளுடன் புளியந்தோப்பை நோக்கி ஓட ஆரம்பித்தான்.
புளியங்தோப்பில் அப்போது அமைதி. மர இலைகளுக்கிடையே ஊடுருவி ஒளி நீலம் பூத்திருந்தது.
அந்தக் காளை இன்னமும் அதே மரத்தடியில் கட்டப்பட்டு, தரையில் கபத்தை நீட்டிப் படுத்திருந்தது. அதற்கு அலுப்பாயிருக்க வேண்டும். என்னதான் தின்று கொழுத்திருந்தாலும் ஒரே நாளில் எத்தனை முறைதான் அதனால் செயல்பட முடியுமாம்!.
எழுக்கூட முடியாமல் அது அடித்துப் போட்ட மாதிரி கிடக்க
‘காளை இருந்தால் தானே ஆட்கள் ஏவுவார்கள்… ‘என்று பாலு அதை நெருங்கினான்.
பசு நான்கு நாட்களாய் ஏன் கத்திற்று. காத்தா எதற்காக அதைக் காளையிடம் அனுப்பினார். காளையை அவர்கள் ஏன் ஏவினார்கள் என்பதை அறியாமல். அறிய விரும்பாமல் தன் தாயை எல்லோரும் சேர்ந்து துன்புறுத்துகிறார்கள் என்கி ஆவேசத்துடன் அந்தப் பொடியன் கொடுவாளை அதன் கழுத்திற்கு நேராய் ஓங்கினான். விபரீதம் அறியாக காளை அப்போதும் மெய் மறந்து தூங்கிக் கொண்டிருந்தது.
– வானத்ததை தொட்டவன் (மினனூல் வெளியீடு: http://www.freetamilebooks.com)